World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

After seven months

Sri Lankan authorities fail to investigate murder of SEP supporter

ஏழு மாதங்களின் பின்னர்

இலங்கை அதிகாரிகள் சோ.ச.க. ஆதரவாளர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை செய்யத் தவறியுள்ளனர்

By our reporter
29 March 2007

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்கள் ஆகியும், இலங்கை பொலிசார் கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய தக்க விசாரணைகள் எதையும் முன்னெடுக்கவில்லை.

இந்த நிலைமை தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. கடந்த ஆண்டு பூராவும் தீவின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பிலும் உள்ள பெருந்தொகையானவர்கள், பிரதானமாக தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள். இராணுவத்தின் அனுசரணையிலான கொலைப் படைகளின் நடவடிக்கையாக இருக்கக்கூடிய இத்தகைய சம்பவங்களில் எதனையும் இதுவரை பொலிசார் தீர்க்கவில்லை.

இந்த சூழ்நிலையில், வடக்குத் தீவான ஊர்காவற்துறையில் கடந்த வியாழக்கிழமை மாலை தனது நண்பருடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது காணாமல் போன சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனின் பாதுகாப்பு தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சி பெரும் கவலைகொண்டுள்ளது. ஊர்காவற்துறையும் அதைச் சூழவுள்ள தீவுகளும் இலங்கை கடற்படையின் கடுமையான பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசங்களாகும். ஆயினும் கடற்படை இந்த இருவரும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எந்தவொரு தக்க விளக்கத்தையும் கொடுக்கவில்லை. (பார்க்க: "கட்சி உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக உடனடி விசாரணை நடத்துமாறு இலங்கை சோ.ச.க. கோருகிறது" )

மரியதாஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று கிழக்கில் முல்லிப்பொத்தானையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுமார் இரவு 9.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் வீட்டு வாசலுக்கு அழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் போது அவருடன் அவரது மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தியும் மற்றும் அவரது மூன்று வயது மகனும் இருந்தனர். துப்பாக்கிதாரி அவரை பல தடவைகள் சுட்டுவிட்டு காத்திருந்த மோட்டார் சைக்கிள்காரனுடன் தப்பிச்சென்றுவிட்டான்.

அருகிலுள்ள முதூர் மற்றும் மாவிலாறு ஆகிய பிரதேசங்களில் உக்கிரமான சமர் நடந்துகொண்டிருந்த போது இந்தக் கொலை நடந்துள்ளது. இந்த சமரின் காரணமாக முல்லிப்பொத்தானையிலும் பாதுகாப்புப் படையினர் உயர் கண்காணிப்பு நிலையில் இருந்தனர். இந்தக் கொலையின் கைத்தேர்ந்த தன்மை, இராணுவ ரோந்து மற்றும் சோதனைச் சாவடிகளையும் தாண்டி கொலையாளி தப்பிச்செல்ல முடிந்தமை, மற்றும் மரியதாஸின் பெயரையும், இருக்கும் இடத்தையும் அவன் தெரிந்துவைத்திருந்தமை போன்றவைகள் இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினரின் தொடர்பை சுட்டிக்காட்டுகின்றன.

மரியதாசுக்கு முல்லிப்பொத்தானையில் தனிப்பட்ட எதிரிகள் கிடையாது. அங்கு அவர் ஒரு ஸ்டூடியோவையும் தொலைத்தொடர்பு நிலையமொன்றையும் நடத்தி வந்தார். ஆனால், ஏப்பிரல் 11 அன்று உள்ளூர் ஊர்காவற்படை சிப்பாய் ஒருவர் மரியதாஸை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என குற்றஞ்சாட்டியதோடு அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்தார். ஒரு துணைக் காவல்படையான ஊர்காவற்படை இராணுவத்துடன் பொலிசுடன் நெருக்கமாக செயற்படும் பிரிவாகும்.

அவர் கொலை செய்யப்பட்ட உடனேயே, இராணுவமும் மற்றும் உள்ளூர் ஊர்காவற்படை உறுப்பினர்களும் மரியதாஸ் புலி உறுப்பினர் என்ற வதந்தியை பரப்பிவிட்டனர். மரியதாஸ் ஐந்து ஆண்டுகளாக சோ.ச.க. ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். அவர் சோ.ச.க. யின் அரசியல் நடவடிக்கைகளில் வெளிப்படையாக ஈடுபட்டிருக்காவிட்டாலும், அவர் கட்சியின் வேலைத் திட்டத்தை ஆதரித்ததோடு அரசாங்கத்தையும் மற்றும் அதன் இனவாத யுத்தத்தையும், அதே போல் புலிகளையும் எதிர்ப்பதில் பிரசித்திபெற்றிருந்தார்.

மரியதாஸைக் கொலைசெய்தவர்களை இலங்கை பொலிசார் கண்டுபிடித்து வழக்குத் தொடர வேண்டும் எனக் கோரி சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் இலங்கையிலும் மற்றும் அனைத்துலக ரீதியிலும் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதுவரையிலான பொலிஸ் விசாரணைகள், நடவடிக்கையின்மை, நொண்டிச் சாட்டுகள், இழுத்தடிப்பு மற்றும் தட்டிக்கழிப்பு போன்றவற்றால் பண்புமயப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களுக்குள் இந்த பொலிஸ் விசாரணைகள் மூன்று வேறுபட்ட நகரங்களில் உள்ள நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக முழுமையான பொலிஸ் விசாரசணையைக் கோரி கடந்த செப்டெம்பரில் சோ.ச.க. பொதுச் செயாலளர் விஜே டயஸ் சட்டமா அதிபர் கே.சி. கமலசபேசனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். (பார்க்க "கட்சியின் ஆதரவாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணையைக் கோரி சோ.ச.க. இலங்கை சட்டமா அதிபருக்கு கடிதம்) சட்டமா அதிபர் திணைக்களம் இந்தக் கடிதத்தை ஜனவரியிலேயே ஏற்றுக்கொண்டது. கடைசியாக திணைக்களத்தின் சிரேஷ்ட அரச வழக்குரைஞர் பி. குமாரரட்னத்திடம் இருந்து பெப்பிரவரி 5 அன்று டயஸுக்கு ஒரு பதில் கிடைத்தது.

டயஸ் இந்த விசாரணையில் பல அடிப்படை நடைமுறை மீறல்களை சுட்டிக்காட்டியிருந்தார். அவற்றில் 1. பொலிஸ் அதிகாரியால் சம்பவ இடத்தில் இருந்து மரியதாஸின் சடலம் அப்புறப்படுத்தப்பட்டது. 2. குற்றம் நடந்த இடத்திற்கு நீதவான் சமூகமளித்திருக்கவில்லை. 3. கண்கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதியப்பட்டிருக்கவில்லை. 4. இந்த சம்பவத்தை அறிவித்த ஊர்காவற்படை உறுப்பினரின் சாட்சியமும் பதியப்பட்டிருக்கவில்லை.

குமாரரட்னம் தனது பதிலில் இதில் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அந்த சிறிய துண்டு வெறுமனே பிரகடனம் செய்ததாவது: "தற்போது கந்தளாய் பொலிசார் விசாரணைகளை முடித்துக்கொண்டு கோப்பை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலணாய்வுப் பிரிவுக்கு கையளித்துள்ளது."

தக்க விசாரணை நடத்தப்படாமை தொடர்பாக தமது ஆட்சேபனைகளை வெளியிட்டு உலக சோசலிச வலைத் தள வாசகர்களும் சோ.ச.க. ஆதரவாளர்களும் டசின்கணக்கான கடிதங்களை அனுப்பிய பின்னரே சட்டமா அதிபர் திணைக்களம் இந்த பதிலை அனுப்பியிருந்தது. மரியதாஸ் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும் எனக் கோரி மேலும் கண்டனக் கடிதங்களை அனுப்புமாறு நாம் மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுக்கின்றோம். இத்தகைய நடவடிக்கை தற்போது தண்டனையில் இருந்து விலக்கீட்டுரிமையுடன் செயற்படும் கொலைப் படைகளுக்கு ஒரு அடியாக இருக்கும்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்:

Inspector General of Police Victor Perera,
Police Headquarters,
Colombo 1, Sri Lanka.
Fax: 0094 11 2446174
Email: igp@police.lk

Attorney General K.C. Kamalasabeyson,
Attorney General's Department,
Colombo 12, Sri Lanka.
Fax: 0094 11 2436 421

பிரதிகளை (இலங்கை) சோசலிச சமத்துவக் கட்சிக்கும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பிவையுங்கள்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த online படிவத்தை பயன்படுத்தவும்.

இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் ஒரு தொகுப்பை இங்கு பிரசுரிக்கின்றோம்.

* * *

பின்வருவருது பிரான்சில் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்களால் கையொப்பமிடப்பட்ட மனுவாகும்.

1. பொலிஸ் மா அதிபர் விக்டர் பெராரா, பொலிஸ் தலைமையகம், கொழும்பு 1.

2. சட்ட மா அதிபர் கே.சி. கமலசபேசன், சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு 12.

சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யபபட்டமை தொடர்பாக உடனடியான தக்க விசாரணையைக் கோரியே நாம் இதை தங்களுக்கு எழுதுகிறோம். சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ், ஆகஸ்ட் 7 அன்று திருகோணமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முல்லிப்பொத்தானையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இரவு 9.30 மணியளவில் தனது வீட்டு வாசலில் யாரோ பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு கதவுக்கு அருகில் சென்றபோது கொலையாளி மரியாதாசின் நெற்றியிலும் கழுத்திலும் சுட்டு ஸ்தலத்திலேயே அவரைக் கொலை செய்துள்ளான். கட்டை காற்சட்டையும், டீ சேர்ட்டும் மற்றும் ஹெல்மெட்டும் அணிந்திருந்த கொலையாளி வீட்டு மதிலின் மீது ஏறி குதித்து ஓடுவதை மரியதாஸின் மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தி கண்டுள்ளார்.

அரை மணித்தியாலம் கடந்து சம்பவ இடத்திற்கு வந்த தம்பலகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், கிருஷாந்தியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு மரியதாசின் பூதவுடலை அந்த இடத்தில் இருந்து கந்தளாய் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அடுத்தநாள் ஆஸ்பத்திரியில் நீதவானுடைய விசாரணை நடந்ததோடு வழமையான தீர்ப்பு வழங்கப்பட்டது: அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரி சுட்டதில் கொலை நடந்துள்ளது என்பதாகும்.

செப்டெம்பர் 4, தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவைச் சேர்ந்த பதில் பொறுப்பாளர் சார்ஜன்ட் பெரேரா, விசாரணைகளில் எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை மற்றும் டிசம்பர் 7 அன்று --மூன்று மாதங்கள் கடந்தபின்னர்-- உள்ளூர் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எமக்கு அறிவித்துள்ளார்.

இந்தக் கொலையின் சூழ்நிலைமைகள் கைதேர்ந்த இலக்கு வைக்கப்பட்ட கொலை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் கொலை பாதுகாப்புப் படையினர்கள், பொலிஸ் அல்லது துணைப்படைக் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது என சந்தேகிப்பதற்கு காரணங்கள் உள்ளன. இந்தப் பிரதேசம் முழுவதும் யுத்த பிராந்தியத்தின் மத்தியில் இருப்பதோடு துருப்புக்கள், பொலிஸ் மற்றும் ஊர்காவற் படையினரும் ரோந்துசெய்யும் பிரதேசமாகும். இங்கு இரவில் நடமாடும் எவரும் வழமைபோல் வீதித் தடைகளில் சோதனைக்குட்படுத்தப்படுவர்.

இந்த விசாரணையை துரிதப்படுத்தவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

* * *

அன்பின் ஐயா,

மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில், நான் செப்டெம்பர் 11, 2006 அனுப்பிய கடிதத்தை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஆகஸ்ட் 7, 2006 முல்லிப்பொத்தானையில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ், அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முழு விசாரணை நடத்துமாறு அந்தக் கடிதத்தில் தங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இருப்பினும், கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் தாங்கள் எனது கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை. அது தொடர்பாக எனது பலமான எதிர்ப்பை வெளிப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

இதுவரை மரியதாசின் கொலை தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணையானது ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பொலிஸ் அதிகாரிகளிடம் கைமாற்றப்பட்டுள்ளதோடு அவர்கள் இதுவரையும் கொலையாளிகள் தொடர்பாக எந்தவொரு தடயத்தையும் கண்டுபிடிக்கத் தவறியுள்ளதை நான் அறிந்துகொண்டேன். ஒரு கடுமையான விசாரணையை நடத்தும் தமது பொறுப்பில் இருந்து பொலிசார் விலகியிருக்கும் நடைமுறையையே இது சுட்டிக்காட்டுகிறது. பொலிசாரின் இத்தகைய நடவடிக்கையையிட்டு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்.

இது இந்தக் கொலை நடந்த சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இந்தக் கொலையில் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் அல்லது அவர்களோடு சேர்ந்து செயற்படும் துணைப்படைக் குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன என சோ.ச.க. யும் உலக சோசலிச வலைத் தளமும் எழுப்பிய சந்தேகத்தை மேலும் பலப்படுத்துகிறது.

இத்தகைய சந்தேகம் மரியதாஸ் கொலை தொடர்பாக மட்டும் எழவில்லை. அண்மையில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் பலாத்காரமாக காணமால் ஆக்கும் நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றில் அரச படைகளும் மற்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களும் குற்றஞ்சாட்டுவது ஒரு வெளிப்படையான விடயமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தகைய குற்றவாளிகள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கீட்டுரிமையை அனுபவிக்கின்றனர் என்றே தோன்றுகிறது. மனிதர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் எவராலும் இந்த நிலைமையை பொறுத்துக்கொள்ள முடியாது.

ஆகவே தாங்கள் உடனடியாக மரியதாஸ் கொலையாளிகளைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீண்டும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,

கே.பி. மாவிகும்புர,

தலைவர்,

மத்திய வங்கி ஊழியர் சங்கம்.

* * *

அன்பின் ஐயா,

பொலசார் சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக காலதாமதமற்ற அக்கறையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் அம்பலப்படுத்தியுள்ள விடயங்களையிட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்.

இந்தக் படுகொலையின் பின்னணியைப் பார்க்கும் போது, இந்த முழுப் பிரதேசமும் யுத்தப் பிராந்தியத்திற்குள் அமைந்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் இராணுவம், பொலிஸ் மற்றும் ஊர்காவற்படையினரும் ரோந்து செல்கின்றனர். மற்றும் இந்தப் பிரதேசத்தில் நடமாடுபவர்களும் வாகனங்களும் வீதித் தடைகள் மற்றும் சோதனை நிலையங்களில் பரிசோதிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையின் கீழ், கொலையாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளான் என்ற உண்மை, இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் அல்லது துணைப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகிப்பதற்கு பொருத்தமான தடயமாகும்.

அவரது மரணச் சடங்கு நடைபெற்ற அன்று, மரியதாஸ் ஒரு புலி ஆதரவாளர் என்ற வதந்தியை இராணுவத்தினர்கள் பரப்பிவிட்டமை இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, குற்றம் நடந்த இடத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டிய மரண விசாரணை இடம்பெறுவதற்கு முன்னதாக மரியதாஸின் பூதவுடலை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதன் மூலம் பொலிசார் இட்டுநிரப்பிய பாத்திரமானது (கொலையாளிகளுக்கு) இன்றியமையாத உதவியாகும்.

படுகொலை நடந்து இப்போது ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கான பொறுப்பை ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு கைமாற்றியமையானது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காலதாமதமற்ற தக்க விசாரணையை நடத்தும் தமது பொறுப்பில் இருந்து பொலிசார் விலகியிருக்கின்றனர் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

ஜனநாயக உரிமைகள் மதிக்கும் நாங்கள் இந்தக் குற்றம் தொடர்பாக காலதாமதமற்ற பொருத்தமான விசாரணையை மேற்கொள்ளுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அவ்வாறு செய்யத் தவறுவதானது இந்த இனவாத அரசின் பண்பை சுட்டிக்காட்டுகிறது. ஆகவே சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற தக்க விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

உண்மையுள்ள,

(எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்)

டி. ஜயவீர

* * *

சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்துமாறு முன்வைக்கும் கோரிக்கை.

நான் சிவப்பிரகாசம் மரியதாஸ் முல்லிப்பொத்தானையில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதை கண்டனம் செய்கின்றேன்.

சோ.ச.க. ஆதரவாளரான மரியதாஸ் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தையும் மற்றும் எல்லாவிதமான இனவாதத்தையும் எதிர்த்துப் போராடியவராவார்.

இந்தப் படுகொலையானது பாதுகாப்புப் படையினர் 24 மணிநேரமும் கடுமையாக ரோந்து செல்லும் மற்றும் அனைத்து வாகனங்களும் மனிதர்களும் பரிசோதிக்கப்படும் ஒரு பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த நிலைமை இந்தக் கொலைக்கு இராணுவமோ அல்லது அதனுடன் சேர்ந்து செயற்படும் குழுவோ பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அதே சமயம், மரியதாசின் பூதவுடலை பொலிசார் அந்த இடத்தில் இருந்து அகற்றியமை சட்ட நடைமுறையை மீறும் செயலாகும். அவர்கள் கண்கண்ட சாட்சிகளை விசாரிக்கத் தவறியுள்ளதோடு விசாரணையை மூன்று வேறுபட்ட நகரங்களின் பிரதான விசாரணையாளர்களிடம் கைமாற்றியுள்ளனர். இதுவும் கூட தக்க விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

நான் இலங்கை துறைமுக அதிகார சபையின் கடல் அலுவலர்கள் சங்கத்தின் முன்நாள் செயலாளர் என்ற வகையிலும் ஒரு தொழிலாளி என்ற வகையிலும் மரியதாஸ் கொலை தொடர்பாக முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன்.

டி. எ. ஜோதிபால, உலக சோசலிச வலைத் தள வாசகர்.

* * *

சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடு.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் ஆறு மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீங்களும் இலங்கை அதிகாரிகளும் இந்தக் கொலைக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வழக்குத் தொடர வேண்டும் எனக்கோரி தொடர்ந்தும் சோ.ச.க. யும் அதன் ஆதரவாளர்களும், பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சோ.ச.க. தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் போராடி வருவது எனக்குத் தெரியும். சோ.ச.க. ஆதரவாளர் கொலைசெய்யப்பட்டுள்ளமையானது உழைக்கும் மக்களதும் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களதும் உரிமைகளை மீறும் செயலாகும்.

அரச படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்களை நோக்கி சுட்டுவிரல் நீட்டப்பட்டுள்ள நிலையில் இந்தக் கொலை தொடர்பான ஒரு விசாரணை மிகவும் முக்கியமானதாகும். யுத்தத்தை மக்கள் எதிர்த்த போதிலும் கொலைகளும், கடத்தல்களும் நாட்டின் சகல பாகங்களிலும் இடம்பெறுகின்றன. இந்தக் கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக மக்களின் வெறுப்பும் எதிர்ப்பும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. மக்களின் ஜனநாயக உரிமைகளில் அக்கறை கொண்ட ஒருவர் என்ற விதத்தில், இந்தக் கொலைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக தாமதமின்றி வழக்குத் தொடரப்பட வேண்டும் எனக் கோருகிறேன்.

எ. ஜயரட்ன

(இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved