World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பாSix months after entering the EU Political crises deepen in Romania and Bulgaria ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்து ஆறு மாதங்களுக்கு பின் ருமேனியா, பல்கேரியாவில் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கின்றன By Marcus Salzmann ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா மற்றும் பல்கேரியா இணைந்து ஆறு மாதங்களில், இரு நாடுகளிலும் அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் கூறும் கணிப்புக்களுக்கு எதிரிடையாக அங்கு அரசியல் நிலைமை உறுதியாகவில்லை என்று தெளிவாகிறது. உண்மையில் தங்கள் அரசியல் உயரடுக்கின் பொது ஒருமித்த கருத்தின் ஆதரவினால் இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்தது அவற்றில் அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. ருமேனியாவில், பாராளுமன்றம் ஜனாதிபதி Traian Basescuயை பதவி நீக்கியபின், மே 23ம் தேதி அவரின் நிலைபற்றி முடிவு செய்வதற்கு ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெற்றது. நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட இழிந்த பூசல்களின் உச்சக்கட்டமாகத்தான் பாராளுமன்ற நடவடிக்கை இருந்தது. பல மாதங்களாக நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தொடர்ந்திருந்த இகழ்வுகள், சேற்றை வாரிவீசலின் பின்னர் புக்காரஸ்ட்டில் அது ஒரு அரசியல் நெருக்கடியாக முற்றி தலைநகரில் ஜனநாயகம் என்பது ஒரு அந்நிய சொல் என்பதை வெளிப்படுத்தியது. Basescu வாக்கெடுப்பில் வெற்றி அடைந்து தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொண்டார் என்பதற்கும் அவருடைய செல்வாக்கிற்கும் தொடர்பு இல்லை; அவருடைய அரசியல் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு என்பது பற்றி பேச்சுக்கே இடமில்லை என்பது ஒருபுறம் இருக்க, இவருடைய அரசியல் விரோதிகள் இவரைவிடக் கூடுதலாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதே அதற்குக் காரணமாகும். வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களில் 44 சதவிகிதத்தினர் வாக்குப் பதிவு செய்த நிலையில், கிட்டத்தட்ட முக்கால்வாசி வாக்காளர்கள் ருமேனிய பாராளுமன்றத்தின் விருப்பத்திற்கு எதிராக பேசஸ்கு (Basescu) பதவியில் இருக்க வேண்டும் என்று வாக்களித்தனர்.பேசஸ்கு (Basescu) விற்கும் பிரதம மந்திரி Calin Popescu-Tariceanu இற்கும் இடையே நீண்ட காலமாக இருக்கும் பூசலே வாக்கெடுப்பிற்கு காரணமாயிற்று. Calin Popescu-Tariceanu இன் தேசிய தாராளவாத கட்சி (PNL) ஜனாதிபதி பதவியில் இருத்து அகற்றப்பட வேண்டும் என்று சமூக ஜனநாயக கட்சியால் (PSD) கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தது. இதற்கான ஆரம்ப முயற்சி PSD தலைவர் Mircea Geoana விடம் இருந்தும், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Ion Iliescu விடம் இருந்தும் வந்திருந்ததாக தெரிகிறது. இத்தீர்மானம் பாராளுமன்றத்தில் 322 வாக்குகளுடன் மிக அதிகப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. PNL, PSD இவற்றுடன்கூட, பாரிய ருமேனிய கட்சி (Greater Romania Party) என்னும் தீவிர தேசியவாதிகள் மற்றும் UDMR எனப்படும் ருமேனியாவிலுள்ள ஹங்கேரியர்களுக்கான ஜனநாயக யூனியன் (Democratic Union of Hungarians in Romania) ஆகியவையும் வாக்கெடுப்பில் ஆதரவைத் தெரிவித்தன. இக்கட்சிகள் ஒன்றாக வாக்கெடுப்பிற்காக 20 மில்லியன் யூரோக்களை செலவழித்தன.பூசலின் பின்னணியானது பணம், அதிகாரம், செல்வாக்கு ஆகியவை பற்றி ஆளும் உயரடுக்கினுள் இருக்கும் கடுமையான அதிகாரப் போராட்டத்தின் விளைவு ஆகும். பேசஸ்கு (Basescu) தன்னை ஊழலுக்கு எதிராகப் போராடுபவர் என்று வெளிப்படுத்திக் கொண்டவராவர். அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளான நாட்டின் ஊழல்களும், தகாத சலுகைகளும் நிறைந்திருந்த பொருளாதார, அரசியல், நீதி முறைகளை சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். தற்பொழுது கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியில் இருந்தும் பல அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பேசஸ்குவின் ஊழல், ஜனநாயகம் பற்றிய சொந்த அணுகுமுறையே அவர் கடைபிடிக்கும் அரசியல் நடைமுறையை மேலெழுந்தவாரியாக பார்த்தாலே தெளிவாகும். 1992ல் அவர் ஊழல்கள் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தன்னுடைய மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்தார். பல ஆண்டுகள் முன்னாள் ஸ்ராலினிச இரகசிய போலீஸான Securitate உடன் ஒத்துழைத்ததாகவும் அவர்மீது சந்தேகங்கள் உண்டு. வாக்கெடுப்பன்று இவருடைய உண்மையான குணநலன் நிரூபணமாயிற்று. வாக்கெடுப்பின் விளைவு பற்றி ஒரு நிருபர் இவரை வினவியபோது, தொலைக்காட்சி காமெராக்கள் முன்பே பேசஸ்கு அப்பெண்மணியை "துர்நாற்றம் பிடித்த நாடோடி" என்று அவமதித்தார். "அரசியல் வர்க்கங்களை சீர்திருத்துதல்" என்ற மறைப்பிற்கு பின், பேசஸ்கு போட்டி அரசியல் சக்திகளின் வலிமையை குறைக்க முயன்று வருகிறார். பேசஸ்குவிற்கும் பிரதம மந்திரிக்கும் இடையே உள்ள பூசல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது; இது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஆளும் குழுக்களை சூழ்ந்துள்ள பூசல்களின் அடையாளமாகும். Tariceanu வின் PNL மற்றும் பேசஸ்குவின் ஜனநாயக கட்சிக்கும் (PD) இடையே உள்ள பூசலுக்கு முன்னதாகவே 2004 கடைசிக் கூட்டாட்சி தேர்தலுக்கு பின் அமைக்கப்பட்டிருந்த வலதுசாரி கூட்டணி அரசாங்கம் உடைந்துவிடும் தன்மையில் இருந்தது. 2006ம் ஆண்டு இறுதியில், கூட்டணி அரசாங்கம், செய்தி ஊடக அதிபர் Dan Voiculescu தலைமையில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி (PC) வெளியேறியதால் அதன் பெரும்பான்மையை இழந்தது. PD இல்லாத நிலையில், PNL, UDMR கூட்டணி பாராளுமன்றத்தில் இருபது சதவிகித வாக்குகளை மட்டுமே கொண்டு ஒரு ஜனநாயக நெறிப்படியிலான அரசாங்கம் என்ற நிலைப்பாட்டை கூறமுடியாமல் போயிற்று.பழைய உள்வகை உறவுகளை எவ்விலை கொடுத்தும் அழித்துவிட பாடுபடும் மற்றும் ருமேனியாவிற்குள் "தடையற்ற சந்தை" வேண்டும் என்று வாதிடும் முன்னாள் ஸ்ராலினிச ருமேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் கூடுதலான அளவிற்கு தமது மூலங்களை கொண்டிருபவர்களை பேசஸ்கு பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இதையொட்டி உறுதியான வணிக நலன்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டிற்கு வழங்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கணிசமான உதவித் தொகைகள் மறைந்துவிடுவதுடன் அவற்றிற்கு கணக்குக் கூறப்படுவதில்லை. இத்தகைய ஊழலின் பொருளாதார விளைவுகள் கணக்கிலிட்டுக் கூறுமுடியாதது ஆகும். இன்னும் முக்கியமான விதத்தில், ருமேனியா கருங்கடலை எல்லையாக கொண்டிருப்பதால், மகத்தான மூலோபாய, பொருளாதார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அண்மையில், ருமேனியா, சேர்பியா, குரோசியா, ஸ்லோவேனியா மற்றும் இத்தாலியில் இருந்து பிரதிநிதிகள் "ஐரோப்பிய இணைப்பு குழாய் திட்டத்திற்கு" ஒப்புக் கொண்டனர்; இது காஸ்பியன் கடலில் இருந்து ருமேனிய கருங்கடல் துறைமுகமான Konstanza மூலம் தெற்கு ஐரோப்பாவிற்கு மசகு எண்ணெயை விநியோகிக்கும். இந்நாட்டில் பல ஐரோப்பிய எரிபொருள் நிறுவனங்கள் பெரும் அக்கறை கொண்டிருப்பது ருமேனியாவிற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Eon பெருநிறுவனம் ருமேனியாவின் எரிபொருள் சந்தையில் பாதிக்கும் மேலாக தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. நாட்டின் ஆளும் உயரடுக்கை பொறுத்தவரையில், அரசியல் அதிகாரம் என்றால் இந்த இருப்புக்கள்மீது கட்டுப்பாடு கொள்ளுவது என்ற பொருள் ஆகும். வெளியுறவுக் கொள்கை, பூசலுக்கு வழிவகுக்கும் மற்றொரு கருத்தாகும். "விருப்பமுடையோர் கூட்டணி" யின் ஒரு பகுதியாக ருமேனியப் படைகள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ள ஈராக்கில் இருப்பதுபற்றி இங்கு மாபெரும் வேறுபாடுகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு, Tariceanu வின் அரசாங்கம் மேலும் ஒரு 3,000 அமெரிக்க துருப்புக்கள் ருமேனியாவில் நிறுத்திவைக்கப்பட ஒப்புதல் கொடுத்தது. அடுத்த 10 ஆண்டுகள் அமெரிக்க துருப்புக்கள் கருங்கடல் கடலோரப் பகுதியில் உள்ள பாபடாக், டானூப் ஆற்றங்கரையில் உள்ள ஸ்மிர்டன் மற்றும் கார்பாத்திய மலைப் பகுதிகளில் இருக்கும் சிங்கு ஆகியவற்றில் நிறுத்தப்பட நடவடிக்கைகள் உள்ளன. பாபடாக்கில் இருக்கும் விமானப் படைத் தளம் ஏற்கனவே ஒரு சில ஆண்டுகளாக ஈராக்கில் நடவடிக்கைகளை தொடக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஈராக் போர் கூடுதலான சங்கடத்தில் ஆழ்ந்துள்ளபோது, நாட்டைக் கொள்ளையடிப்பதில் வெகுமதி கிடைக்கும் என்ற ருமேனிய ஆளும் உயரடுக்கின் எதிர்ப்பார்ப்புக்கள் கூடுதலான வகையில் நிறைவேறாமல் இருக்கும்போது, இந்த மூலோபாயம் கூடுதலான முறையில் கேள்விக்குரியதாகின்றது. ஈராக்கில் இருக்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பேசஸ்கு திட்டமிட்டுள்ளார்; இது முழுமையாக திரும்ப பெற்றுக் கொள்ளுவதற்கு ஒரு நடவடிக்கையாக பரந்த அளவில் காணப்படுகிறது. அத்தகைய திட்டத்தை Tariceanu எதிர்க்கிறார். பேசஸ்கு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது Tariceanuவை தவிர்க்க முடியாமல் வெளியேற்றுவதற்கு வகை செய்யும். தற்போதைக்கு வலுவற்ற அரசாங்கம் புதிய தேர்தல்கள் பற்றிய பயத்தினால்தான் பேசாமல் இருக்கிறது; அதில் PNL பெரும் இழப்புக்களை சந்திக்கக் கூடும். வாக்காளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற உண்மை மக்கள் ருமேனிய அரசியல் தன்னலச் சிறுகுழுவிடம் வைத்துள்ள அவநம்பிக்கை, பொது எதிர்ப்பு ஆகியவற்றின் ஆழ்ந்த தன்மையை நிரூபிக்கிறது. பல்கேரியா : மக்களுக்கும் உத்தியோகபூர்வ அரசியலுக்கும் இடையே ஆழ்ந்த பிளவுகள் உத்தியோகபூர்வ அரசியல் உயரடுக்கு மற்றும் பெரும்பாலான மக்கள் ஆகியோருக்கு இடையே இருக்கும் ஆழ்ந்த பிளவு அண்டை நாடாக இருக்கும் பல்கேரியாவிலும் நன்கு தெரியவந்துள்ளது. மே 20 அன்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற முதல் தேர்தல்கள் நிறுவனமயமான கட்சிகள் அவற்றின் அரசியல் திட்டங்கள் ஆகியவற்றிற்கு எதிரான வாக்குகளைத்தான் ஏராளமாகப் பெற்றன. அதே நேரத்தில் மொத்த வாக்காளர்களில் 28 சதவிகிதத்தினர்தான் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். இத்தேர்தல்கள் பல்கேரியாவின் ஐரோப்பிய அபிவிருத்திக்கான மக்கள் (Citizens for European Development of Bulgaria -GerB) க்கு வெற்றியைக் கண்டன; ஆறு மாதங்களுக்கு முன்புதான் இவ்வமைப்பு தோன்றியது என்றாலும், பதிவான வாக்குகளில் 21.7 சதவிகிதத்தை இது பெற்றது. பிரதம மந்திரி Sergej Stanischew தலைமையிலான பல்கேரிய சோசலிஸ்ட் கட்சி (BSP) அதை நெருக்கமாக 21.41 சதவிகித வாக்குகளை பெற்று பின் தொடர்ந்தது. BSP யின் கூட்டணிப் பங்காளி மூன்றாம் இடத்திற்கு வந்தது. DPS எனப்படும் துருக்கிய சிறுபான்மை கட்சி 20.26 சதவிகிதத்தை பெற்றது; முன்னாள் பிரதம மந்திரி Simeon Sakskoburggotski உடைய NDSW கட்சி பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற போதுமான 6 சதவிகித வாக்குகளைத்தான் பெற முடிந்தது. முழு வலதுசாரி முகாமும் சிதைக்கப்பட்டது. பலமான பல்கேரியாவிற்கான ஜனநாயகவாதிகள் (The Democrats for a Strong Bulgaria- DSE) என்னும் முன்னாள் பிரதமர் ஐவன் கோஸ்டோவின் கட்சி, பல்கேரிய மக்கள் ஒன்றிப்பு (BNS) மற்றும் ஐக்கிய ஜனநாயக சக்திகள் (United Democratic Forces- ODS) ஆகியவை பிரதிநிதித்துவம் பெறத் தேவையான 6 சதவிகிதத்தை கூட பெறாமல் இப்பொழுது தப்பிப் பிழைப்பதற்கே போராடுகின்றன. இத்தேர்தலின் மையப் பிரச்சினை மீண்டும் தொடர்ச்சியான ஊழல்கள்தான்; இவற்றில் பல அரசாங்க உறுப்பினர்கள் சிக்கியுள்ளனர். ஊழல் பற்றிய நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் மிரட்டும்வகையிலான குற்றச்சாட்டுக்கள் BSP இன் பொருளாதார, எரிபொருள் மந்திரி ரூமென் ஓட்ஷாரோவிற்கும் மற்ற இரு அரசாங்க செயலர்களுக்கு எதிராகவும் தொடக்கப்பட்டுள்ளன. BSP, முன்னாள் அரசர் Simeon II மற்றும் பல கன்சர்வேடிவ் "ஜனநாயகவாதிகள்" என்று கடந்த 17 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்தியவர்களுக்கு எதிரான கசப்பு உணர்வு இன்னும் ஆழ்ந்த நெருக்கடியை தோற்றுவித்துள்ளது; இதை தலைநகரான சோபியா (Sofia) வின் முன்னாள் மேயரான Bojko Borissow யால் நிறுவப்பட்ட GerB என்ற கட்சி நன்கு பயன்படுத்திக்கொள்ளுகிறது.2005ல் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியான Borissow சோபியா (Sofia) நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இதற்குக் காரணம் மற்ற வலதுசாரிக் கட்சிகள் மற்றும் BSP மீதான பெருகிய எதிர்ப்பு உணர்வு ஆகும். Sakskoburggotski முகாமில் இருந்து தன்னுடைய வாக்குகளில் பெரும்பாலானவற்றை அவர் வெற்றிகொள்ள முடிந்தது. போரிசோ தன்னை ஒரு நேர்மையான, நடைமுறை பிறழாத அரசியல்வாதி என்று வளர்த்துக் கொண்டதோடு, வாக்காளர்களுடைய பார்வையில் பல்கேரிய அரசியல் என்னும் புதைகுழியில் இருந்து ஓரளவு ஒதுக்கி வைத்துக்கொள்ளவும் முடிந்தது. ஊழல் மற்றும் மிகப் பெரிய அளவில் இருக்கும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிரான ஜனரஞ்சக இயக்கம் ஒன்றை GerB தலைமை தாங்கி நடத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவதற்கு எதிராக முறையான எதிர்ப்பை போரிசோ தெரிவிக்கவில்லை என்றாலும், கூடுதலான கவனம் பல்கேரிய நாட்டு நலன்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று பல முறையும் கோரினார். ஆனால், முன்னாள் போலீஸ் அதிகாரியின் கட்சி தற்பொழுது இருக்கும் அரசியல் அமைப்புக்களுக்கு மாற்றீடாக எவ்விதத்திலும் இல்லை. 1989ல் ஸ்ராலினிச ஆட்சியின் சரிவின்போது போரிசோ உள்துறை அமைச்சரகத்தில் ஒரு மேஜராக இருந்தார்; ஆட்சியின் உண்மையான பற்றாளர் என்று கருதப்பட்டிருந்தார். இறுதியில் தன்னுடைய தொடர்புகளை பயன்படுத்தி அவர் தன் சொந்த பாதுகாப்பு நிறுவனத்தை உருவாக்கி முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் Todor Schiwkow ஐயும் தனக்குகீழ் வேலைக்கு அமர்த்தினார். 2001TM Simeon II பிரதம மந்திரியாக பதவி ஏற்றபின், அவர் உள்துறை அமைச்சரகத்தில் போலீஸ் தலைவர் என்ற பதவிக்கு போரிசோவை நியமித்தார். இருவரும் பல ஆண்டுகள் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். தன்னை ஒரு "வலதுசாரி மையவாதி" என்று போரிசோவ் அழைத்துக் கொள்ளுகிறார்; போலீஸ், முன்னாள் ஸ்ராலினிச இரகசியப் போலீஸ் மற்றும் பல சிதைந்த வலதுசாரிக் கட்சிகளில் இருந்து பலரையும் தன்னுடைய அமைப்பிற்கு இழுத்துக் கொண்டுள்ளார். சோபியாவில் ஒரு பெரிய செல்வாக்கு தளத்தை போரிசோ கொண்டிருந்தாலும், இவருடைய முக்கிய பழைமைவாத திட்டம் கிராமப்புறத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. கடுமையான சட்டம் மற்றும் ஒழுங்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்னும் இவருடைய உறுதிமொழி, பல்கேரியத் தலைநகரின் பொருளாதாரச் சூழலை முன்னேற்றுவிப்பதாக கூறியிருப்பது போன்றவை மற்ற கட்சிகளுடன் கூட்டணிப் பங்காளியாக கூடிய ஒன்றாக இவருடைய கட்சியை ஆக்கியுள்ளது; ஆனால் அவை அனைத்தும் இதுகாறும் பகிரங்கமாக GerB ஐ அவநம்பிக்கையுடன்தான் பார்க்கின்றன. National Union Attack (Attaka) என்னும் தீவிர தேசியவாதக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மூன்று பிரதிநிதிகளை கொள்ளுவதற்கு போதுமான வாக்குகளை பெற்றது. கட்சியின் தலைவரான Volen Siderow போதுமான வாக்குகளை பெற்று கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாம் சுற்றுக்கு வந்தார்; ஆனால் அதில் BSP வேட்பாளரான Georgi Parwanow வால் தோற்கடிக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தல்களில் புதிய பாசிஸ்ட்டுக்கள் 14 சதவிகித வாக்குகளை பெற்றனர்."சோசலிஸ்ட்டுக்கள்" மற்றும் கன்சர்வேடிவ்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்ததை மிகச் சிறப்பாக வர்ணித்தாலும், ஏற்கனவே மக்களின் பரந்த அடுக்குகளிடையே ஏமாற்றத்திகைப்பு வந்துவிட்டது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களில் எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை; கடுமையான வரவுசெலவுத்திட்ட கட்டுப்பாடு, "சீர்திருத்தங்கள்" செயல்படுத்தப்படவேண்டும் என்று பிரஸ்ஸல்ஸ் கொடுத்துள்ள எச்சரிக்கைகளை அம்மக்கள் ஓர் அச்சுறுத்தல் போல்தான் காண்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வெளிப்படையாக குறைகூறும் நிலைப்பாட்டை எடுத்த ஒரே கட்சி Attaka தான்; எனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருக்கும் பரந்த எதிர்ப்புணர்வை அது ஒரு பிற்போக்குத்தன, தேசிய, நவ-பாசிச திசையில் திருப்ப முடிந்தது. |