World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India's prime minister warns big business of threat of social unrest சமூக அமைதியின்மையின் அச்சுறுத்தல் பற்றி பெருவணிகத்திற்கு இந்தியாவின் பிரதம மந்திரி எச்சரிக்கை By Arun Kumar and Kranti Kumara காங்கிரஸ் கட்சித் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசாங்கம் அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவான நிலையில், இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் இந்திய வணிக உயரடுக்கிற்கு விடுத்த முக்கிய உரை ஒன்றில், சமூக அமைதியின்மை ஆபத்து பற்றி, எச்சரிக்கை விடுத்தார். இந்திய தொழில்களின் கூட்டமைப்பின் (Confederation of Indian Industries -CII) ஆண்டு மாநாட்டிற்கான தன்னுடைய மே 24ம் தேதி உரையை சிங் பயன்படுத்தி, "[பொருளாதார] வளர்ச்சி நேர்மையை கொண்டு எமது குடிமக்களில் மிகவும் இழப்பிற்குட்பட்டவர்களுக்கும் சட்ட உரிமை அளிக்கும் வகையில்" இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கு 10 அம்ச "சமூக பட்டயத்தை" (Social Charter) ஏற்க வேண்டும் என்று கூறினார். தொழில் அதிபர்கள் உயர் நிர்வாகிகளின் ஊதியம், படிகள் ஆகியவற்றை குறைத்தல் நலம் என்றும் தங்களுடைய செல்வத் திரட்சியை பகட்டான முறையில், இழிவாகக் காட்டுவதை விட்டுவிட வேண்டும் என்றும் இல்லாவிடில் சமூக அமைதியின்மைக்கு அவர்கள் காரணமாகிவிடுவர் என்றும் அவர் குறிப்பாக எச்சரித்தார். UPA "நியாயமான வகையில் நடந்துள்ளது எனக் கூறிக் கொள்ளலாம்" என்ற சிங், "இருப்பினும் எமது சமூகத்தின், குறிப்பாக நம்மிடையே மிக வறிய பிரிவுகளில் இருப்பவர்களுடைய தேவைகளையும் அக்கறைகளையும் கவனிப்பதில் நீண்டதூரம் பயணிக்க வேண்டும்" என்று ஒப்புக் கொண்டார். இன்னும் குறிப்பாக வணிகத்துடன் கீழ்க்கண்ட புள்ளிகள் பற்றி அவர் வாதிட்டார்: -- சுகாதாரம், நலம், தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வது, மற்றும் "ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்புநிதி நலன்களையும் அவர்களுக்கு அளிப்பது." --தங்களுடைய பெருநிருவனங்களின் அமைப்பு வரிச் சுமையை குறைப்பதில் மட்டும் குவிப்புக் காட்டாமல், "சமூகத்தின் தேவைகளுக்கு இன்றியமையாத கூறுபாடுகள் பற்றிய "சமூகப் பொறுப்பு" உடைய ஒரு பெருநிறுவனத் தத்துவத்தையும் ஏற்க வேண்டும். -- "வேலைகளைப் பெறுவதற்கான குறிக்கோளின் அனைத்து மட்டங்களிலும், சலுகைகள் குறைவாக உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் ஆர்வத்துடன் இருத்தல், இதற்கு அவர்கள் தாங்களே முன்வந்து 'இட ஒதுக்கீடு" கொடுத்தல் அதாவது உடன்பாட்டு நடவடிக்கை - தலித்துக்கள் (தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்களின் பின்தோன்றல்கள்), பட்டியலில் உள்ள பழங்குடி மக்கள், மற்ற பின்தங்கிய வகுப்பினர் (Other Backward Castes)" ஆகியோருக்கு திட்டங்கள் தீட்டுவது. -- "ஊக்கமளிப்பவர், மூத்த நிர்வாகிகள் ஆகியோருக்கு மிக அதிக ஊதியம் கொடுத்தலை தவிர்த்தல், மற்றும் ஆடம்பர நுகர்வை ஒதுக்குதல்" கடைசிக் கருத்து பற்றி அவர் கூறியதாவது: "பெரும் வறுமை உள்ள நாட்டில், தொழில்துறை அது ஏற்கும் ஊதியத் தரங்களில் நிதானமாக இருக்க வேண்டும். உயர் வருமானம் மற்றும் செல்வச் சமத்துவமின்மை பெருக்கம் ஆகியவை நாடு முழுவதும் ஒத்த வகையில் வருமானங்களின் உயர்வோடு இணைந்திராவிட்டால், சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும். மின்னணு ஊடகம் செல்வந்தர்கள் மற்றும் புகழ் பெற்றவர்கள் வாழும் முறையை நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும், சேரிக்கும் எடுத்துச் செல்கிறது. இவர்கள் இழிந்த முறையில் பணப்பகட்டுச் செலவினம் செய்வதை ஊடகம் பல நேரமும் உயர்த்திக் காட்டுகிறது. திருமணங்கள் மற்ற குடும்ப நிகழ்வுகளில் பகட்டுத்தனமான செலவினங்களின் தரம் ஒரு கவலையளிக்கும் பகுதியாகும். இத்தகைய இழிவான பகட்டுச் செலவுகள் குறைந்த சலுகைகள் பெற்றுள்ள வறிய நிலையை அவமதிப்பதாகும் இது சமுதாய அளவிலும் வீணான செலவாகும்; வசதி இல்லாதவர்களுடைய உள்ளங்களில் விரோதப் போக்கை ஏற்படுத்தும்." இந்திய பொருளாதார உயரடுக்கு ஆங்கிலப் பொருளாதார வல்லுனர் John Maynard Kyenes 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய முதலாளித்துவ வகுப்பு பற்றி கூறிய கருத்துக்களை மனதில் கொள்ளுமாறு சிங் வலியுறுத்தினார். கீன்ஸை மேற்கோளிட்டு, சிங், "செல்வம் பங்கிடப்படுவது சமத்துவமற்ற முறையில் துல்லியமாக இருந்ததுதான், மிகப் பரந்த அளவில் நிலையான சொத்துக் குவிப்புக்களுக்கு இடமளித்து பின்னர் மூலதன முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது; இது மற்றய காலங்களில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டியது." ஆனால் 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் சொத்துக்களை முதலீடு செய்வதை ஒரு பெரும் நலனாகக் கொண்டார்களே அன்றி உடனடி நுகர்வை அல்ல. அதன்படி, "சேமிப்பு' என்பது சிறந்த நல்லொழுக்கத்தில் பத்தில் ஒன்பது பகுதியாகும்; அதன் பலாபலனின் வளர்ச்சி உண்மையான மதத்தின் குறிக்கோள் ஆகும் " இந்திய முதலாளித்துவ வர்க்கம் "பல மில்லியன் உடையவர்கள், பில்லியன் உடையவர்களின் எண்ணிக்கையில் பெருகிவருகிறது" இது 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தை போல் தங்களுடைய ஆற்றலை மூலதனக் குவிப்பில் காட்ட வேண்டும் என்று சிங் வலியுறுத்தினார். சிங்கின் கருத்துக்கள் இரு நிலைப்பாடுகளில் இருந்து குறிப்பிடத்தக்கவை ஆகும். முதலில் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையாக உள்ள இழிந்த சமூக சமத்துவத்தை அவர் போற்றுகிறார். உண்மையில் அவருடைய அரசாங்கம் இரக்கமின்றி முதலீட்டிற்கு ஆதரவு என்ற கொள்கைகளை தொடர்ந்துள்ளது: இவைதான் பெருகிய முறையில் வறுமைக்கும் இந்தியாவின் உழைக்கும் மக்களுடைய பொருளாதார பாதுகாப்பின்மைக்கும் நேரடிப் பொறுப்பு ஆகும். இரண்டாவதாக, நல்லொழுக்கமுடையவராகக் கூறப்படும் ஐரோப்பிய முதலாளிகளினால் ஆக்கப்பட்ட சமூக அழிப்புக்களை அசட்டை செய்கிறார் -- குழந்தை தொழிலாளர் உள்பட தொழிலாள வர்க்கம் காட்டுமிராண்டித்தனமாக சுரண்டப்பட்டது, உலக முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு புவி முழுவதையும் ஏகாதிபத்தியம் மூலம் இணையுமாறு கட்டாயப்படுத்தல் நிகழ்ச்சிப்போக்கில், இந்தியாவும் காலனித்துவ முறையில் அடிமைப்படுத்தப்பட்டது, இந்திய துணைக் கண்டம் கிழக்கு இந்திய கம்பெனியால் சூறையாடப்பட்டது, இந்தியாவின் மரபார்ந்த தொழில்கள் மான்செஸ்டரின் உற்பத்தியாளர்களால் தகர்க்கப்பட்டது ஆகியவற்றை சிங் அலட்சியம் செய்துள்ளார். மேலும் பரந்த அளவில் தனியார் மூலதனத்தின் குவிப்பும் அதையொட்டிய சந்தைகள் இருப்புக்களுக்கான 19ம் நூற்றாண்டு போராட்டங்களும் ஐரோப்பிய சக்திகளின் வல்லரசுப் போட்டியில் இருந்து பிரிக்க முடியாத தன்மையைக் கொண்டு முதல் உலகப் போரில் உச்சக் கட்டத்தை அடைந்தது. தன்னுடைய உரையை சிங் நடத்திய சில நாட்களில் BBC வலைத்தளம் இந்தியாவின் பெரும் செல்வக் கொழிப்பு உடைய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, பரந்த ரிலையன்ஸ் தொழிற்கூடப் பேரரசின் வாரிசு ஒரு 27 மாடி அடுக்குக் "கனவு மாளிகை" ஒன்றை மும்பையில் கட்டிக் கொண்டிருப்பதாகவும், அதில் ஒரு சிறு திரையரங்கம், 600 வேலையாட்களுக்கான இடம், பல நீச்சல் குளங்கள் ஆகியவை வரவுள்ளன என்றும் இதன் மொத்த மதிப்பு $1 பில்லியன் டாலராக இருக்கக்கூடும் என்று தகவல் கொடுத்துள்ளது. அம்பானி தன்னுடைய "கனவு இல்லத்தை" ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்ததால் வந்த அதிருஷ்டத்தால் துய்க்கையில், பெரும் இழிவான வாழ்க்கை நிலைமைகளில் சேரிகளில் வாழும், நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள், அம்பானி போன்றவர்கள் இன்னும் நேரடியாக செல்வக் கொழிப்பு பெற வைக்கும் பெரும் அங்காடிக் கூடங்கள் மற்றும் அலுவலக வளாகங்கள் இவற்றுக்காக நிலத்தைக் காலி செய்யவைப்பதற்கு தங்களுடைய இல்லங்கள் நள்ளிரவில் மும்பை அரசாங்கத்தின் புல்டோசர்களால் தகர்க்கப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளனர். (பார்க்க, "மும்பையில் வாழும் பல மில்லியன் சேரிமக்களுக்கு இடையே இந்திய தொழிலதிபர் 1.2 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய "வீட்டை" கட்டுகிறார்") இந்த அளவில்தான் இந்தியப் பிரதமரின் உபதேசம் உள்ளது ஆயினும்கூட, சிங்கின் CII உரை முக்கியத்துவம் வாய்ந்தது; இந்திய முதலாளித்துவத்தின் கூடுதலான நனவு கொண்ட பிரதிநிதிகள் எத்தகைய கவலையை கொண்டுள்ளார்கள் என்பது பற்றியும் UPA ன் எச்சரிக்கையுடன் கூடிய அரசியல் சமநிலை பற்றியும் இது நன்கு வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைமை உட்பட, முழு அரசியல் அமைப்பும், அதிர்ச்சி அடையும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு UPA பாரதீய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தினுடைய புதிய தாராளக் கொள்கைகளினால் ஏற்பட்ட கடுமையான வாக்காளர் எதிர்தாக்குதலினால் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்து மேலாதிக்க BJP க்கு முற்போக்கான மாற்றீடு காங்கிரஸ் என்று உயர்த்திக் கூறும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி ஆதரவை கொடுத்தது. இன்றளவும், UPA அதிகாரத்தில் தப்பிப் பிழைப்பது, வெளிவேடத்திற்கு சோசலிஸ்ட்டுகளான இடது முன்னணியின் பாராளுமன்ற ஆதரவின் காரத்தினால் மட்டுமே ஆகும். ஒரு "மனித முகத்துடன்" பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்வதாகக் கூறி, "சாதாரண மனிதனின்" நலன்களை நிலைநிறுத்துவதாக கூறும் UPA சில்லறை வணிகப் பிரிவையும் வெளிநாட்டு மூலதனத்திற்கு திறந்துவிட்டுள்ளது; சீனப் பாணியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதிக் கொள்கையை ஏற்றுள்ளது; பெருவணிக வரிகளை பெரிதும் குறைத்துள்ளது; அமெரிக்காவுடன் "மூலோபாய பங்காண்மை" என்பதையும் உருவாக்கியுள்ளது. CII க்கு கொடுத்த உரையில் சிங், "எங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டும் கொள்கை பொருளாதார வளர்ச்சியில் உயர்விகிதங்களை உறுதிப்படுத்துகையில், பொருளாதாரம் முன்னேற்றமாக செயல்படுவது என்பது வேலைவாய்ப்பு உற்பத்தி, வறுமைக் குறைப்பு, மனித வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பங்களிக்க வேண்டும் என்பதுதான்" என்று கூறினார். உண்மையில் ஆண்டுக்கு 8 மற்றும் 9 சதவிகித வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாக சமூகநலன்களுக்காக ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவாகத்தான் அதிகரித்துள்ளது; பல முதலாளித்துவ பகுப்பாய்வாளர்கள் இந்தியாவின் பொதுத் துறைகளுடைய வருந்தத் தக்க நிலை இதன் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியை பெருகிய முறையில் அச்சுறுத்துகிறது என்பதை ஒப்புக் கொள்ள வைத்துள்ளது. இந்திய அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமாகத்தான் கல்விக்குச் செலவிடுகிறது; இதிலும் பெரும்பகுதி மூன்றாம் நிலைக் கல்விக்காக போகிறது; மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஒரு சதவிகதம்தான் சுகாதாரப் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்படுகிறது. அனைத்து இந்தியர்களிலும் 60 சதவிகிதத்தினருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயத்தை பொறுத்தவரையில், இத்துறை நெருக்கடி என்னும் சதுப்புநிலத்தில் சிக்கியுள்ளது. உண்மையில், இந்தியாவின் உற்பத்தி, இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், முக்கிய தானியத்தின் தலைவீத நுகர்வு சரிவைக் கண்டுவருகிறது. இதற்கிடையில் UPA அரசாங்கம் இராணுவத்திற்கு பெரும் நிதியை ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் UPA யினால் வெளியிடப்பட்ட 2007 பட்ஜெட், இராணுவச் செலவை 7 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. 2005-06ல் 7.8 சதவிகித உயர்வு மற்றும் 2004ல் மகத்தான 17.9 சதவிகித உயர்வு என்பதற்கு அடுத்தாற்போல் இவ்வாண்டு உயர்வு வந்துள்ளது. சமூக சமத்துவமின்மை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை பற்றிய சீற்றம் இதுவரை பெருகிய முறையில் எப்பொழுதாவது, முதலாளித்துவ தேர்தல் முடிவுகள் என்ற சிதைந்த முப்பட்டகக் கண்ணாடி மூலம்தான் வெளிப்பட்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி, தொழிலாள வர்க்கத்தை UPA க்கு அரசியல் ரீதியாய் அடிபணிய வைத்துள்ளது. UPA க்கு தான் ஆதரவு கொடுப்பது இந்து மேலாதிக்க BJP மீண்டும் பதவிக்கு வரவிடாமற் தடுப்பதற்கான் ஒரே வழி என்ற ஸ்ராலினிஸ்டுகளின் கூற்று, எப்படிப் பார்த்தாலும் நடைமுறையில் உலக மூலதனத்திற்கான மலிவான கூலி உழைப்பு சொர்க்கமாக இந்தியாவை "தொழில்மயமாக்கும்" முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கைக்கு மாற்றீடு இல்லை என்பதாகும். சிங்கின் கருத்துக்கள் வந்த நேரம் ஒன்றும் தற்செயல் இணைவு நிகழ்வு அல்ல. இந்தியாவில் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் உட்பட, சமீபத்திய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் பேரழிவு தரக்கூடிய தோல்விகளைக் கண்டது; உத்தரப்பிரதேசத்தில் அது மொத்தத்தில் பத்து சதவிகித வாக்குகளை கூடப் பெற முடியவில்லை. 2009ல் நடக்கவிருக்கும் அடுத்த அனைத்திந்திய சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி எப்படி சாதிக்கும் என்பதைப் பற்றி காங்கிரஸ் ஐயத்திற்கு இடமின்றிக் கவலை கொண்டுள்ளது. ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் நிலச்சீர்திருத்த போராட்டங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார பகுதிகளுக்காக நிலங்களை பறிமுதல் செய்வதற்கு எதிராக, குறிப்பாக இடது முன்னணியின் ஆட்சியிலுள்ள மேற்கு வங்கத்தில், பரந்த எதிர்ப்புக்கள் உள்பட பெருகிவரும் சமூக அமைதியின்மைக்கான அடையாளமும் தெரிகின்றன. தொழிற்துறை தலைவர்கள் மக்களுடைய சீற்றம், எதிர்ப்பு அமைதியின்மை ஆகியவற்றை தூண்டாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிங் எச்சரித்தாலும், அவரும் UPA அரசாங்கமும் பலமுறை அறிவித்துள்ள இந்தியாவின் உழைப்பாளிகளின் நிலையை முன்னேற்றுவிப்பதற்கான திறவுகோல் முதலாளித்துவ இலாப வேட்கைக்கு சிறந்த சூழ்நிலையை காக்கும் வகையில் முதலாளித்துவ மூலதனத்தை ஈர்ப்பது என்ற பகட்டுப பேச்சுக்களில் முழு உறுதியாக உள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். இவ்விதத்தில் தங்களுடைய வருமானத்தில் சற்று கூடுதலான சிறுபங்கை உவந்து தங்கள் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய தொழிலதிபர்களுக்கு சிங் விடுத்துள்ள வேண்டுகோளின் பின்னணியில் கூறப்படாத முறையீடு, ஒரு வலதுசாரி செயற்பட்டியல் சிறப்பாக பின்பற்றப்படுவதற்கு, மிகக் குறைவாக அதிகரிக்கப்பட்டுள்ள சமூகச்செலவினங்கள் பற்றி தங்களுடைய எதிர்ப்புக்களை அவர்கள் நிதானத்துடன் கூற வேண்டும் என்பதாகும். சிங் அறிவித்தார்: "ஒரு அரசாங்கம் என்னும் முறையில் எமது பொருளாதார, சமூக நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொழிற்துறையுடன் விரோதப் போக்கான உறவில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது; உண்மையான பங்காளித்தனத்தில்தான் நம்பிக்கை உள்ளது. வணிகத்திற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்; அந்தச் சூழ்நிலைதான் விரைவான வளர்ச்சிக்கு உதவும்." |