World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Indian industrialist to build $1 billion "home" amidst Mumbai's multimillion slum-dwellers மும்பையில் வாழும் பல மில்லியன் சேரிமக்களுக்கு இடையே இந்திய தொழிலதிபர் 1.2 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய "வீட்டை" கட்டுகிறார் By Parwini Zora இந்தியாவிலேயே பணக்காரரான முகேஷ் அம்பானி, நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையின் (பம்பாயின்) மையத்தானத்தில் 27 மாடிகள் உடைய உயரடுக்கு மாளிகையை கட்டி வருகிறார் என்று அறிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்; அதாவது 1.5 மில்லியன் இந்தியர்களுடைய சராசரி ஆண்டு வருமானத்திற்கு நிகராகும். இவருடைய பகட்டான "வீட்டை" 7 மில்லியன் சேரிவாழ் மக்கள் இருக்கும் ஒரு நகரத்தில் அம்பானி கட்டுகிறார். மும்பையின் 12 மில்லியனுக்கும் அதிகமான மொத்த மக்கட்தொகையில், இன்னும் பல மில்லியன் மக்கள் குறைந்த வசதியுடைய வீடுகளில்தான் வாழ்கின்றனர். மும்பையின் நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ள நிலை நல்ல ஊதியம் பெறும் மத்தியதர வர்க்க சிறப்புப் பயிற்சி வேலையில் இருப்பவர்கள் கூட ஒரு கெளரவமான வீட்டை கட்டிக் கொள்ள முடியாது என்று இருக்கிறது. ஒரு எதிர்பாராத விந்தையாக அம்பானி தன்னுடைய மாளிகைக்கு ஒரு கற்பனைத் தீவின் பெயரான "அந்தீலியா" எனப் பெயரிட்டுள்ளார். மும்பையில் தொடர்ச்சியாக நிலத்தின் மதிப்புக் குமிழ் பெருகிய நிலையில், இன்னும் கட்டிமுடிக்கப்படாத அம்பானியின் வீடும், அது எழுப்பப்பட்டுள்ள 4,532 சதுர மீட்டர் நிலமும் ஏற்கனவே US$ 1.2 பில்லியன் டாலருக்கும் மேலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான இவருடைய மறைந்த தந்தையின் வணிகக் குழுவான ரிலையன்ஸ் குரூப் என்னும் அமைப்பிற்கு முகேஷ் அம்பானியும் அவருடைய சகோதரர் அனிலும்தான் வாரிசுகள். ரிலையன்ஸ் குழுவில் முகேஷின் பங்கில் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் பிரிவும், ஜவுளி உற்பத்தி ஆலைகளும் அடங்கியுள்ளன. 2007ம் ஆண்டு போர்பஸின் உலகப் பணக்காரர்கள் பட்டியலின்படி, 50 வயது முகேஷ் அம்பானி உலகின் 14வது பெரும் பணக்காரர் ஆவார்; இவருடைய சொத்தின் நிகர மதிப்பு US $20.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அம்பானியின் கட்டிடக் கலை வல்லுனர் உயரடுக்குக் கட்டிடத்தின் முதல் 6 தளங்கள் வாகன நிறுத்ததிற்காக அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு உடனடி மேல் தளங்களில் 600 பணியாட்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கான உறைவிடங்கள் அமைக்கப்படும். எட்டு மாடிகள் அல்லது தளங்கள் "கேளிக்கை, களிப்பிற்காக" ஒரு சிறு அரங்கும், நிறைய நீச்சல் குளங்களும் உட்பட அமைக்கப்படும்; இன்னும் பல மாடிகள் சுகாதார கிளப் ஒன்றையும், விருந்தினர்களுக்கான அறைகளையும் கொண்டிருக்கும். முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் தாயார் மேல் நான்கு மாடிகளில் இருப்பார்கள்; மும்பையின் அரபிக் கடல் கரையோரத்தின் பரந்த காட்சியும், நகரத்தின் அமைப்புச் சிறப்புக் காட்சியும் இவர்களுக்குக் கிடைக்கும்; இதைத்தவிர கட்டிடத்தின் கூரையில் இருக்கும் மூன்று ஹெலிகாப்டர் தளங்களுக்கு எளிதில் இவர்கள் செல்ல முடியும். அம்பானியும் அவருடைய பல உதவியாளர்களும் அவருக்கு முகஸ்துதி செய்பவர்களும் திட்டமிடப்பட்டுள்ள மாளிகை கடந்த ஆண்டு லண்டனில் மிக அதிக விலை கொண்ட வீட்டை 60 மில்லியன் பணத்திற்கு வாங்கிய இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்திய எஃகு தொழிலதிபரான "இவருடைய நண்பர் லக்ஷ்மி மித்தல் போன்றோருடைய இல்லங்களுக்கு ஒப்பாக இருக்கும்" என்ற கருத்தை கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. டைம்ஸ் ஆன்லைனிடம் (இந்தியா) பேசிய ஒரு மும்பையை தளமாக கொண்ட கட்டிடக் கலை வல்லுனர் கூறியதாவது: "எமது பெருஞ்செல்வந்தர்கள் முன்பு தங்களுடைய பணத்தை மறைத்து வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்... அவர்கள் மெர்சிடஸில் கூடச் செல்ல மாட்டார்கள்; சிறிய அடுக்கு வீட்டில் வசித்து வந்தனர். மிஸ்டர் அம்பானியின் தந்தை கூட ஒரு சிறிய அடுக்கு வீடுகள் நிறைந்த பகுதியில்தான் வாழ்ந்து வந்தார். அவர்கள் வரி போடுபவர்களை கண்டு அஞ்சினர். இப்பொழுது அந்த அணுகுமுறை மறைந்துவிட்டது; முகேஷ் பணம் சம்பாதித்துள்ளார்; அதை டாம்பீகமாக காட்ட முற்பட்டால், அது அவருடைய விருப்பம்." இந்தியாவின் செல்வந்தர்கள் இப்பொழுது வெட்கமின்றி தங்களுடைய செல்வத்தைப் பறைசாற்றுகின்றனர்; இந்தியாவின் மக்கட்தொகையான 1.1 பில்லியனில் 75 சதவிகித்தினர் சொல்லொணா வறுமையில் வாழ்கின்றனர்; பல மில்லியன் மக்கள் ஊட்டமற்ற உணவைத்தான் வாடிக்கையாக உண்கின்றனர். உத்தியோகபூர்வ அரசாங்க மதிப்பீடுகளின்படி, குறைந்த தர, சேரி போன்ற வீடுகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை கடந்த இரு தசாப்தங்களில் இரு மடங்காக, 1981ல் 27.9 மில்லியனில் இருந்து 2001ல் 61.8 மில்லியனாக உயர்ந்து விட்டது. சமூக வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை பெரும்பாலான நகர்ப்புற, கிராமப்புற இந்தியர்களிடம் காணப்படுவது 1991ல் இருந்து குறிப்பாக தீவிரமாகியுள்ளது; அப்பொழுது இந்திய உயரடுக்கு ஒரு தேசியப் பொருளாதார வளர்ச்சி மூலோபாயத்தை கைவிட்டு இந்தியாவை உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் முழுமையாக இணைத்து, இந்தியாவை ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பைக் கொண்டு உலக சந்தைக்கு உற்பத்தி செய்யும் நாடாக மாற்ற முற்பட்டுவிட்டனர். நாட்டின் பொருளாதாரம் வியத்தகு அளவில் வளர்ச்சியுற்றாலும், பல நூறாயிரக்கணக்கான கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் இன்னும் கூடுதலான வறியவர்களாக மாறியுள்ளனர். அனைத்து இந்தியர்களிலும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயத்துறையானது, விவசாயத்துறையில் இருந்து இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்திற்கு விருப்பமான உள்கட்டுமான திட்டத்திற்கு நிதி திருப்பப்பட்ட நிலையிலும், விவசாயப் பொருட்கள் விலை ஆதரவில் ஏற்பட்ட குறைப்பும் ஏனைய முதலீட்டாளர் ஆதரவு கொள்கைகளினாலும், பேரழிவிற்கு உள்ளாகிவருகிறது. மும்பையை தலைநகராகக் கொண்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் ஒரு புதிய வெறுக்கத்தக்க சமூக நிகழ்வின் வெளிப்பாட்டைக் கண்டுவருகிறது -- அதாவது கடன் சுமையினால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைக் காண்கிறது. இந்த ஆண்டு மட்டும் பருத்தி உற்பத்தி செய்யும் மாநிலத்தின் விதர்ப்பாப் பகுதியில் வாழ்ந்து வந்த 416 கடன்சுமை மிகுந்துவிட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கிடையில், மில்லியன் கணக்கான சிறு விவசாயிகளும், நிலமற்ற விவசாயத்துறை தொழிலாளர்களும் வேலையை நாடி நகரங்களுக்கு குடிபெயரும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது; இது நகரங்களில் இருக்கும் சேரிகளை பெரிதும் அதிகரித்து விட்டது. "அரசாங்கம் இயலக்கூடிய வீடுகளை அளிக்காததால்தான் சேரிகள் பெருகி வருகின்றன." என்று மும்பையின் நகர்ப்புற ஏழைகளுடன் இயங்கும் யுவ அர்பன் என்னும், அரசாங்கம் சாரா அமைப்பின், பிரதிநிதியான மஜு வர்கீஸ் தெரிவித்தார். "வீடுகள் பகுதி முழுவதையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுவிட்டது, மக்கள் தக்க வீடுகளைக் கட்டிக் கொள்ள இயலாத வகையில் நிலத்தின் விலைகள் அந்த மட்டத்திற்கு உயர்ந்துவிட்டன. இங்கு சேரிகள் நீடித்துத்தான் இருக்கும். அரசாங்கம் இந்தப் பிரச்சினையை முற்றிலும் புறக்கணித்து விட்டது." இந்தியாவில் மிக அதிகமாக சேரி வாழ் மக்களை கொண்டுள்ள மும்பை, ஆசியாவில் ஒற்றை மிகப் பெரிய சேரியான தாராவியை கொண்டுள்ளது என்ற இழிபெருமையைக் கொண்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் வாழும் இச்சேரி, மும்பையின் அரசியல், பொருளாதார உயரடுக்கினரால் நகரத்தின் இழிவாகக் கருதப்படுகிறது. இந்த இழிவை "சேரி ஒழிப்பு" திட்டத்தின் மூலம் - அதாவது குடிசை வாழ் மக்களையும் வீடிழக்கச் செய்வதின் மூலம் இந்தியாவின் பல நகரங்களிலும் செய்திருப்பது போல் அகற்ற விரும்புகிறது. அண்மையில் அரசாங்கம் 223 ஹெக்டேர் சேரியை சர்வதேச நில, கட்டிட வளர்ச்சியாளர்களுக்கு விற்பதற்காக ஏற்ப்பாடு செய்தது; இதற்கான விளம்பரங்கள் உலகம் முழுவதிலும் இருக்கும் செய்தித்தாட்களில் வெளியிடப்பட்டன; வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் பைனான்சியல் டைம்சிலும் விளம்பரங்கள் வந்தன. "ஆயிரம் ஆண்டிற்கு ஒரு முறை வரும் வாய்ப்பு" என்று இதை விளம்பரங்கள் பறையறிவித்தன; இதன் மூலம் வெற்றிகரமாக ஏலம் எடுப்பவர்களுக்கு "நிரந்தரமான வருமான ஆதாரம்" கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. அரசாங்க மற்றும் முனிசிபல் பிரிவுகளின் திட்டமான மும்பையை "உலகத் தரம் வாய்ந்த நகரம்" என்று மாற்றும் வகையில், தாராவியின் சேரி வீடுகள் ஏழு மாடி அடுக்கு மாளிகைத் தொகுப்புக்களாக, மருத்துவமனைகள், பள்ளிகள், பூங்காக்கள், மென்னடை பயிலும் தடங்கள், கோல்ப் விளையாட்டிற்கான வசதி உட்பட பலவும் இங்கு வரும் என்றும் இதற்கான மதிப்பீடு US $ 2.3 பில்லியன் என்றும் கூறப்படுகிறது. National Slum Dwellers Federation என்னும் தேசிய சேரிவாழ்வோர் கூட்டமைப்பின் தலைவரான அற்புதம் ஜோக்கின் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்: இந்த நிலத்தை உலக அங்காடியில் விற்று, வணிகப் பயன்பாட்டிற்கு கொடுப்பது என்பது, எமது வாழ்வை எப்படி முன்னேற்றுவிக்கும்? இங்குள்ளவர்களில் 90 சதவிகிதத்தினர் தங்கள் வருங்காலம் பற்றிய கவலை கொண்டுள்ளனர்; இவ்விடம் எப்படி மாற்றப்பட வேண்டும் எனக் கூறும் உரிமையை அவர்கள் பெற்றுள்ளனர். கீழிருந்துதான் முன்னேற்றங்கள் தொடக்கப்பட வேண்டும். மேலிருந்து கீழாக அல்ல." இரக்கமற்ற முறையில் நிலப் பறிப்புத் திட்டம் மாநில அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டால் அது "குருதிக்குளியலுக்கு" வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.குடிசைகள் தகர்ப்பின் எதிர்ப்பாளர்கள் ஏற்கனவே தங்கள் வீடுகள் மீது கறுப்புக் கொடிகளை கட்டியுள்ளனர். "வேறு இடத்தில் குடி அமர்த்தப்பட உள்ளவர்கள்" வீடுகள் இல்லாத நிலைக்கு தள்ளப்படும் அச்சுறுத்தலை காண்பதுடன் அவர்கள் வாழ்க்கை பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ளனர். உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகளின்படி, ஆண்டு ஒன்றுக்கு 1 பில்லியன் டாலர் பொருளாதார நடவடிக்கைகள் இங்கு இருப்பதாகவும், பானைகள் செய்தல், தோல் பதனிடுதல், ரொட்டி தயாரிப்பு, உலோக தயாரிப்புக் கூடங்கள், குப்பை மாற்றுச் சுழற்சி செயற்பாடுகள் ஆகிய பல குடிசைத் தொழில்கள் அதற்கான உந்துதலை கொடுக்கின்றன. மும்பையில் வீடுகள் கிடைப்பது அரிதாகவும், மிக அதிக விலையுடைதாகவும் மாறிவிட்ட நிலையில், ஒரு சிறிய 8 x 10 அடி குடிசைவீடு தாராவியில் 150,000 ல் இருந்து 300,000 ரூபாய்க்குள் (அமெரிக்க $3,600 - $7,200) மதிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக மும்பையின் சேரிவாழ் மக்களில் 42 சதவிகிதத்தினர் பத்து சதுர மீட்டருக்கும் (108 சதுர அடிக்கும்) குறைந்த இடத்தில் வசிக்கும் கட்டாயத்தில் உள்ளனர்; கிட்டத்தட்ட 800 பேர் ஒரே கழிப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. தாராவியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்துவரும் 60 வயதான ரஜ்மான் BBC நிருபர்களுக்கு தன்னுடைய "வீட்டை" காட்டுகையில் தன்னுடைய விரிந்த கைகளைக் கொண்டு அதன் சுவரை அளந்தார். இந்தச்சிறிய இடம்தான் அவருடைய இரு சிறு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினர் வசிக்கும் இடம். "நாங்கள் மாறுதலை விரும்புகிறோம்; இங்கு வசிக்கும் மக்களுடைய நிலைமை முன்னேற்றுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். என்னுடைய பேரக் குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிதும் இடமில்லை; ஆனால் இங்கிருந்து வேறு இடத்திற்கும் என்னால் செல்ல இயலாது." |