:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan court case exposes police investigation into missing SEP
member
சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான பொலிஸ் விசாரணையை
இலங்கை நீதிமன்ற வழக்கு அம்பலப்படுத்துகிறது
By our correspondent
28 May 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர்
சிவநாதன் மதிவதனனும் காணாமல் போய் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. சோ.ச.க. கோரிக்கை விடுத்த
போதிலும் மற்றும் இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் கண்டனக்
கடிதங்களை அனுப்பிய போதிலும் அவர்களைக் கண்டுபிடித்து அந்த இருவரதும் விடுதலையை உறுதிப்படுத்த எந்தவொரு
தக்க விசாரணையையும் பொலிசார் மேற்கொள்ளத் தவறியுள்ளனர்.
சோ.ச.க. சேகரித்துக்கொண்டுள்ள அனைத்து தடயங்களும் பாதுகாப்புப் படையினர்
இதில் சம்பந்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றன. மார்ச் 22 அன்று விமலேஸ்வரனும் மதிவதனனும் தாம் வசிக்கும்
ஊர்காவற்துறை தீவை நோக்கி புங்குடு தீவில் இருந்து நீண்ட கடல் பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில்
மாலை 6.30 மணிக்கு கடைசியாக பயணித்துக்கொண்டிருந்தனர். ஊர்காவற்துறை தீவுக்குள் நுழைய இந்த இருவரும்
கடற்படை சோதனை நிலையமொன்றை கடக்க வேண்டும். ஆயினும், இந்த சோதனை நிலையத்திற்குப் பொறுப்பான
வேலனை கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி காணாமல் போனவர்கள் தொடர்பாக எதுவும் தெரியாது என
மறுக்கின்றார்.
மே 18 ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில்,
காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளூர் பொலிசார் இன்னமும் கடற்படை சிப்பாய்களிடம் விசாரணை நடத்தவில்லை
என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீதிமன்றுக்கு வருகை தருமாறு மே 10 அன்று நீதவான் கட்டளை பிறப்பித்த பின்னர்
ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர மற்றும் வேலனையில் உள்ள கஞ்சதேவ
கடற்படை முகாமின் அலுவலரான டி.எம்.எஸ். தஸநாயக்கவும் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தனர். காணாமல்
போனவர்களது மனைவிமார் செய்த உத்தியோகபூர்வ முறைப்பாட்டிலேயே அன்றைய தினம் நீதிமன்றம் கவனம்
செலுத்தியது.
தாம் விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் தொடர்பாக இராணுவ முகாம்களில்
கேட்டதோடு இலங்கை பூராவும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்த போதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை
என பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர நீதிமன்றில் தெரிவித்தார். எவ்வாறெனினும், இந்த இருவரதும் மனைவிமார்களின்
சட்டத்தரணியான எஸ்.இ. ஏகநாதன் கேள்வியெழுப்பிய போது, எந்தவொரு உண்மையான விசாரணைக்குமான தெளிவான
ஆரம்பப் புள்ளியான வேலனை மற்றும் புங்குடு தீவு கடற்படை முகாம்களில் உள்ள சிப்பாய்களிடம் விசாரணை நடத்தவில்லை
என்பதை பொலிசார் ஏற்றுக்கொண்டனர்.
மார்ச் 22 புங்குடு தீவுக்குள் நுழையும் போதும் மற்றும் அங்கிருந்து வெளியேறும்
போதும் அங்குள்ள கடற்படை சோதனை நிலையத்தில் காணாமல் போன இருவரதும் பெயர்கள் பதியப்பட்டுள்ளன
என்பதை சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். புங்குடு தீவு கடற்படை முகாமில் உள்ள எவரிடமாவது பேசினீர்களா என
கேட்டபோது, குணசேகர மீண்டும் "இல்லை" என பதிலளித்தார்.
இந்த இருவரதும் நடமாட்டங்கள் பற்றி தம்மிடம் எந்தவொரு தகவலும் இல்லை எனக்
கூறுவதன் மூலம் தமது பொறுப்பில் இருந்து தப்பிக்கொள்ள குணசேகர முயற்சித்தார். காணாமல் போனவர்களது
மனைவிமார் செய்துள்ள முறைப்பாட்டில் இந்தத் தகவல்களை சேர்க்கவில்லை என அவர் முறைப்பாடு செய்தார்.
ஆயினும், இந்த உண்மைகள் உள்ளடக்கப்பட்டு நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதியொன்றை ஏகநாதன்
காட்டினார். இருவரதும் மனைவிமார்களிடம் புதிய வாக்குமூலங்களைப் பெறுமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்த
நீதவான் முழு நாள் விசாரணைக்காக ஜூன் 15 திகதி குறித்தார். வேலனை கஞ்சதேவ கடற்படை முகாமில்
இருந்து வந்திருந்த அலுவலரையும் அன்றைய தினம் சமூகமளிக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.
விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போன உடனேயே சோ.ச.க. இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு
செய்திருந்தது. மனித உரிமைகளை ஆணைக்குழு, பதிலளிப்பதற்காக கடற்படையினருக்கு மே 18 வரை கால
அவகாசம் கொடுத்துள்ளது. ஊர்காவற்துறையிலும் மற்றும் புங்குடு தீவிலும் உள்ள கடற்படை முகாம்களின் கட்டளை
அதிகாரிகள் இந்த இருவரையும் தாம் கைதுசெய்யவில்லை என ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.ஜி. புன்சிஹேவா சோ.ச.க. யிற்குத் தெரிவித்த போதிலும் மேலதிகத் தகவல்கள்
எதையும் அவர் வழங்கவில்லை. இந்த ஆணைக்குழு ஜூன் 14 அன்று விசாரணை ஒன்றை தொடங்கும் என புன்சிஹேவா
தெரிவித்தார் --இருவரும் காணாமல் போய் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகும்.
இந்த விவகாரம் தொடர்பாக அவசர விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரி
ஏப்பிரல் 27 அன்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய இராஜபக்ஷவிற்கு சோ.ச.க. பொதுச் செயலாளர்
விஜே டயஸ் மேலும் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்தார். டயஸ் மீண்டும் மீண்டும் இராஜபக்ஷவுடன் இதுபற்றி உரையாட
முயற்சித்த போதிலும் அவர் இல்லை என மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது. சுமார் 200 முறைப்பாடுகள் தினமும்
அமைச்சுக்கு பெருக்கெடுப்பதாக அவரது செயலாளர் டயஸிடம் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளரின் சகோதரரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நாட்டை
மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளிய கடந்த 18 மாதங்கள் பூராவும் காணாமல் போன அல்லது கொல்லப்பட்ட
நூற்றுக்கணக்கானவர்களில், பிரதானமாக தமிழர்களில் விமலேஸ்வரனும் மதிவதனனும் அடங்குவர். பாதுகாப்பு படைகளின்
உதவியுடன், இல்லையேல் அவர்களது தலையீட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்ட கொலைப் படைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன
என்பதையே ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஏறத்தாழ இத்தகைய எந்தவொரு பிரச்சினையிலும் எவரும் கைது செய்யப்படாமல்
சம்பவங்கள் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.
விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் உயிர் பாதுகாப்பையிட்டு சோ.ச.க. மிகவும்
அக்கறை கொண்டுள்ளது. இந்த இருவரையும் கண்டுபிடித்து விடுதலை செய்ய அவசர விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு
கோரி இலங்கை அதிகாரிகளுக்கு எழுதுமாறு நாம் எமது ஆதரவாளர்களையும் மற்றும் உலக சோசலிச வலைத்
தள வாசகர்களையும் மீண்டும் கோருகிறோம்.
கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Gotabhaya Rajapakse, Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
Email: secretary@defence.lk
N. G. Punchihewa Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924
சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும்
பிரதிகளை அனுப்பி வையுங்கள்.
Socialist Equality Party,
P.O. Box 1270, Colombo,
Sri Lanka Email: wswscmb@sltnet.lk
உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து
இந்த
online
படிவத்தை பயன்படுத்துங்கள்.
புதிதாக கிடைத்த கடிதங்களின் ஒரு தொகுப்பை இங்கு பிரசுரிக்கின்றோம்.
* * *
அன்பின் ஐயா,
நடராஜா விமலேஸ்வரன் மற்றும் சிவநாதன் மதிவதனனின் விடுதலைக்காக.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு அருகில் உள்ள ஊர்காவற்துறை தீவை வசிப்பிடமாகக்
கொண்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன்
மதிவதனனும் மார்ச் 22, 2007 காணமல் போயுள்ளனர்.
அவர்கள் கடைசியாக ஊர்காவற்துறையில் இருந்து புங்குடுதீவுக்கு மோட்டார்
சைக்கிளில் சென்றதாகவும் மற்றும் அவர்களை அந்தப் பிரதேசத்தில் உள்ள கடற்படை சோதனை நிலையத்தை கடந்து
திரும்பிக்கொண்டிருந்ததற்கான ஆதாரங்கள் பதியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசினதும் மற்றும்
இராணுவத்தினதும் கட்டுப்பாட்டிலான பிரதேசத்தில் இந்த இருவரும் காணாமல் போயுள்ளமைக்கு அரசினதும் மற்றும்
ஆயுதப் படைகளதும் அதிகாரிகள் பொறுப்பு சொல்ல வேண்டும் என நாம் நம்புகிறோம்.
இத்தகைய காணாமல் போகும் சம்பவங்களுக்கு புலிகளைக் குற்றஞ்சாட்டுதல் அல்லது
பாதிக்கப்பட்டவர்களை புலிகள் என முத்திரை குத்துதல் போன்று இத்தகைய சம்பவங்களை மறுதலிக்க பிரதேசத்தில்
உள்ள இராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அருவருப்புடன் நிராகரிக்க வேண்டும்.
ஆகவே, யுத்தத்தை எதிர்ப்பதில் உறுதியான அடிப்படைக் கொள்கையை பின்பற்றும்
கட்சியான சோ.ச.க.யின் உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் மதிவதனனையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என உங்களையும் உங்களது அரசாங்கத்தையும் கோருகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
சிறிதுங்க ஜயசூரிய,
பொதுச் செயலாளர், ஐக்கிய சோசலிச கட்சி.
* * *
சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன்
மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விசாரணை
செய்வதற்கான கோரிக்கை.
சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது
நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் மார்ச் 22 அன்று ஊர்காவற்துறை தீவில் காணாமல் போயுள்ளதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சியானது குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான அரசுக்காகப்
போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், அதே போல், தெற்கில் சிங்கள இனவாதத்திற்கு எதிராகவும் அடிப்படையான
சோசலிச முன்நோக்கிற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இந்தப் போராட்டம்
அனைத்து நெருக்கடிகளின் மத்தியிலும் வடக்கிலும் மற்றும் தெற்கிலும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ஆகவே விமலேஸ்வரனும்
அவரது நண்பரும் காணாமல் போயுள்ளமை குறுக்கீடானதாகும். இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக
உடனடியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
டபிள்யு.டி.ஐ. யசலால்,
செயலாளர், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள் சங்கம், இலங்கை
* * *
பின்வரும் கடிதம் பாரிசில் உள்ள பதினொரு உலக சோசலிச வலைத் தள
வாசகர்களால் கையொப்பமிடப்பட்டது.
நாம் மார்ச் 22 யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடு தீவில் காணாமல் போயுள்ள
சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன்
தொடர்பாக உடனடியான தக்க விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோருகிறோம்.
விமலேஸ்வரனும் மற்றும் மதிவதனனும் மார்ச் 22 மாலை வடக்கில் யாழ்ப்பாணத்தை
அண்டிய தீவுகளில் காணமல் போயுள்ளனர். அவர்கள் கடைசியாக சுமார் 6.30 மணிக்கு புங்குடு தீவில் காணப்பட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் ஊர்காவற்துறை தீவை இணைக்கும் நீண்ட கடல் பாலத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில்
பயணித்துக்கொண்டிந்தனர். ஊர்காவற்துறை தீவு பூராவும் கடற்படை இறுக்கமாக நிலைகொண்டுள்ள நிலையில் கடற்படைக்குத்
தெரியாமல் ஒருவர் காணாமல் போவது சாத்தியமற்றதாகும்.
எனவே, இந்த காணாமல் போன சம்பவத்தில் கடற்படை மற்றும் ஈழமக்கள் ஜனநாயக
கட்சியும் (ஈ.பி.டி.பி.) சம்பந்தப்பட்டுள்ளது என்ற சோ.ச.க. யின் சந்தேகத்திற்கு மிகப் பலமான ஆதாரங்கள்
உள்ளன.
மனித நாகரீகத்திற்கு வெட்கக்கேடான முறையில் கடத்தல்களும் கொலைகளும் இடம்பெறும்
ஒரு ஆட்சியின் கீழ் உங்களால் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க முடியுமா?
யுத்தத்திற்கும் தேசியவாத முன்நோக்கிற்கும் எதிராகப் போராடிய நடராஜா விமலேஸ்வரன்
ஒரு நாகரீகமான மனிதராவார். சோசலிச முன்நோக்கால் மட்டுமே வெகுஜனங்களின் தேவைகளை இட்டு நிரப்ப
முடியும் என அவர் நம்பினார்.
இந்த முற்போக்கான மற்றும் சாதாரண மனிதர்கள் கடத்தப்படுவதை, சித்திரவதை
செய்யப்படுவதை அல்லது கொல்லப்படுவதை நாகரீகமான உலகம் ஒருபோதும் மன்னிக்காது. நடராஜா விமலேஸ்வரனும்
அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அரசாங்கம் உடனடியாக முழு விசாரணையை
முன்னெடுக்க வேண்டும். மற்றும் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
பிரான்சில் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் |