World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Former US President Jimmy Carter blasts Bush and Blair over Iraq

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஈராக் பற்றியதில் புஷ்ஷையும், பிளேயரையும் கடுமையாகச் சாடுகிறார்

By Bill Van Auken
21 May 2007

Back to screen version

உடனுக்குடன் கொடுக்கப்பட்ட இரு பேட்டிகளில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் பற்றி --அவருடைய நிர்வாகம் வரலாற்றிலேயே மோசமானது என்று அறிவித்ததுடன்- மிகக் கடுமையாய் விமர்சனம் செய்து, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கான பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் ஆதரவை "இழிவானது" என்று விவரித்து டோனி பிளேயரையும் சாடியுள்ளார்.

முக்கியமான அமெரிக்க கூட்டாளி பற்றிக் கூறத் தேவையில்லை, பின்னால் அடுத்து பதவிக்கு வந்தவரின் செயல்திறம் பற்றிய விமர்சனத்தின் கடுமையானது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை பொறுத்த அளவில் இது உண்மையில் முன்னோடியில்லாத ஒரு நிகழ்வாகும். இன்னும் கூடுதலான வகையில் பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதிக்கு எதிராக கூறப்பட்டுள்ளதும் வழக்கத்திற்கு மாறானது ஆகும்.

அர்கன்சாஸ் Democrat-Gazette யில் வெளிவந்துள்ள பேட்டி ஒன்றில், கார்ட்டர் அறிவித்தார்: "உலகம் முழுவதிலும் நம் நாடு பற்றிய மோசமான பாதிப்பை பொறுத்தவரையில், இந்த நிர்வாகம் வரலாற்றிலேயே மிக மோசமானது என்று நான் நினைக்கிறேன். ஜோர்ஜ் எச்.டபுள்யூ புஷ் மற்றும் ரோனால்ட் றேகன் மற்றும் ரிச்சார்ட் நிக்சன் மற்றவர்கள் உட்பட முந்தைய நிர்வாகங்கள் வெளிப்படுத்தியிருந்த அமெரிக்காவின் அடிப்படை மதிப்புக்களை வெளிப்படையாக மாற்றியிருப்பது எனக்கு மிகவும் உளைச்சலை கொடுத்துள்ளது."

புஷ் நிர்வாகம் "முன்னரே தாக்கித் தனதாக்கும் போர்க் கொள்கை" என்பதை ஏற்றதை குறிப்பாக கார்ட்டர் கண்டித்துள்ளார். அவர் கூறியதாவது: "இப்பொழுது போர் பற்றி நாம் ஒரு புதிய கொள்கையை கொண்டிருக்கிறோம். எமது பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை என்றாலும், அங்குள்ள ஆட்சியை மாற்ற நாம் விரும்பினாலோ அல்லது வருங்காலத்தில் எமது பாதுகாப்பு ஆபத்திற்கு உட்படலாம் என்றாலோ, இன்னொரு நாட்டு இராணுவத்துடன் போருக்கு செல்லுமிடத்து முன்னரே தாக்கி தனதாக்கிக்கொள்ளும் போர் என்ற கருத்தாய்விற்கு நாம் இப்பொழுது ஒப்புதல் கொடுத்துள்ளோம்." இது "அனைத்து முந்தைய நிர்வாகக் கொள்கைகளில் இருந்தும் தீவிர வழிவிலகலாகும்" என்று அவர் விளக்கினார்.

நிர்வாகத்தின் மத்திய கிழக்கு கொள்கையையும் கார்ட்டர் கண்டனத்திற்கு உள்ளாக்கியுள்ளார். எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே Camp David உடன்படிக்கை பெரும்பாலும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்பட உதவியதில் --இது பாலஸ்தீனிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை தனிமைப்படுத்த உதவிய உடன்பாடு ஆகும்-- முன்னாள் ஜனாதிபதிக்கு நோபல் சமாதானப் பரிசு கொடுக்கப்பட்டது.

"இஸ்ரேல் நிறுவப்பட்டதில் இருந்து முதல்தடவையாக, மத்திய கிழக்கில் வேறுபாடுகளை களைவதற்காக நாம் எவ்வித சமாதானப் பேச்சுக்களையும் நடத்தவில்லை. அது கடந்த காலத்தில் இருந்து தீவிர வழிவிலகல் ஆகும்" என்று அவர் கூறினார்.

நிர்வாகத்தின் அணுவாயுத கொள்கையும் "ஒரு தீவிர வழிவிலகல்" என்று அவர் குறிப்பிட்டார். "இது வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்ந்த ஒவ்வொரு அணுவாயுதக் கட்டுப்பாட்டு உடன்பாட்டையும் கைவிட்டது அல்லது நேரடியாக மறுத்துள்ளது" என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்நாட்டுக் கொள்கை பற்றிக் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் வெள்ளை மாளிகை "சுற்றுச் சூழல் கொள்கையில் முந்தைய நிர்வாகத்தின் கிட்டத்தட்ட அனைத்துக் கொள்கைகளையும் தகர்த்துவிட்டது" என்றார். இதில் குடியரசக் கட்சி ஜனாதிபதியான ரிச்சார்ட் நிக்சன் போன்றோரின் கொள்கைகளும் அடங்கும் என்றார் அவர்.

ஒரு விசுவாசமான ஞான ஸ்நானம் செய்பவரான கார்ட்டர், அரசாங்க நிதியளிக்கும் "நம்பிக்கை அடிப்படையிலான" திட்டங்களை வளர்க்கும், புஷ் நிர்வாகத்தின் மத உரிமைகளுடனான தொடர்புகளின் பிணைப்பை, குறிப்பாக கண்டனத்திற்கு உட்படுத்தினார்; இந்த வழக்கம் "மிகவும் கவலையளிக்கிறது" என்று அவர் கூறினார்.

வரிசெலுத்துபவர்களின் பணம் முற்றிலும் தங்கள் உறுப்பினர்களுக்காக திருச்சபைகள் செலவழிப்பதை அனுமதிக்கும் திட்டங்களை மேற்கோளிட்ட கார்ட்டர் நிர்வாகம் திருச்சபையும் அரசாங்கமும் தனித்துத்தான் செயல்பட வேண்டும் என்று இருக்கும் அரசியலமைப்புக் கோட்பாட்டை நிர்வாகம் மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தான் பதவியில் இருந்தபோது இக்கொள்கையை நிலைநிறுத்தியதாக அறிவித்த அவர், "இவரைத் தவிர, மற்ற ஜனாதிபதிகளும் அவ்வாறே செய்துள்ளனர் என்றும் நான் கூறலாம்." என்றார்.

விடைபெற்றுக் கொள்ளும் வகையில் புஷ்ஷின் வெள்ளை மாளிகைக்கு வந்து சென்றவுடன் பிரிட்டஷ் பிரதம மந்திரி அப்பொழுது பாக்தாத்திற்கு சென்றிருக்கையில், பிளேயர் தொடர்பாக, கார்ட்டர் BBC க்கு சனிக்கிழமையன்று ஒரு பேட்டி கொடுத்தார். புஷ்ஷிற்கு பிளேயர் கொடுத்த ஆதரவை விளக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு, முன்னாள் ஜனாதிபதி பதில் கூறியது: "இழிவானது. விசுவாசமானது. குருட்டுத்தனமானது. அடிபணிதல் என்பது பார்த்தவுடனேயே தெரியும்."

பின் அவர், "ஈராக்கில் ஜனாதிபதி புஷ்ஷின் தவறான கொள்கைகள் அனைத்திற்கும் சிறிதும் பிறழாத வகையில் பெரிய பிரித்தானியா கொடுத்த ஆதரவு உலகிற்கு பெரும் சோகமாக இருந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று சேர்த்துக் கொண்டார்.

ஈராக் போரில் வாஷிங்டனுடன் பிளேயர் அரசாங்கம் இணைத்துக் கொண்டிராமல், அதற்கு பதிலாக படையெடுப்பை எதிர்த்திருந்தால், போர் தவிர்க்கப்பட்டிருக்கலாம், ஆக்கிரமிப்பு முடிவுற்றிருக்கலாம் என்று கார்ட்டர் கருத்துத் தெரிவித்தார்.

"அது ஒரு திட்டவட்டமான வேறுபாட்டை கொண்டுவந்திருக்கும் என்று நான் கூறமுடியாது; ஆனால் பின்னர் எழுந்த பல பிரச்சினைகளின் தன்மையையும் நிச்சயமாக குறைத்திருக்கும். அமெரிக்க மக்களிடையேயும் உலக அளவிலும் புஷ் நிர்வாகத்தின் தற்காப்பு பேச்சுக்களில் ஒன்று- என்னுடைய கருத்தில் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை- சரி, கிரேட் பிரிட்டன் நமக்கு ஆதரவு கொடுப்பதனால் உலகம் நினைப்பதைவிட நம்முடைய செயலில் நாம் மிகச்சரியாகத்தான் இருந்தாக வேண்டும் என இருந்தது."

கார்ட்டருடைய அசாதரணமான அறிக்கைகளை தேசிய ஊடகங்கள் தகவல் கொடுக்காமல் முற்றிலும் புதைத்துவிட்டன. முதல் பக்க தரம் கொடுக்கம் வகையில், ஒரு முன்னாள் ஜனாதிபதி வெளிப்படையாக ஈராக் போரைக் கண்டித்தது, தற்போதைய ஜனாதிபதியின் வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கையை கண்டித்தது என்பவை இரண்டாம் தர தகவல்போல் கருதப்பட்டு வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூ யோர்க் டைம்சில் உட்பக்கங்களுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

"சமவெளிகளில் ஞாயிற்றுக் கிழமை காலைகள்" (Sunday Mornings in Plains) என்ற தலைப்பில் ஒரு புதிய ஆடியோ நூல் தொடருக்காக, அவர் விற்பனை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அதன் ஒரு பகுதியாக கார்ட்டருடைய பேட்டிகள் வெளிவந்துள்ளன; இந்த நூலில் ஜோர்ஜியாவில் உள்ள Maranatha Baptist Church சமவெளியில் அவர் ஆற்றிய வாராந்திர விவிலியப் பாடங்களின் பேச்சுப்பதிவுகள் உள்ளன. ஈராக்மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்திய நேரத்தில் இந்த பிரசங்கங்கள் கொடுக்கப்பட்டன என்றும், "அவை இந்தத் தேவையற்ற படையெடுப்பு பற்றி என்னுடைய கண்டனமும் விமர்சனமும் சமாதான இளவரசரான ஏசுபிரானின் பணிகளுடன் இடைத்தொடர்பு பெற்றிருந்தன" என்று அர்கன்சாஸ் Democrat-Gazette இடம் கார்ட்டர் கூறினார்.

அவருடைய மத நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும், ஜனாதிபதியாக கார்ட்டர் ஒன்றும் சமாதானவாதியாக இருந்ததில்லை; 1977-1981ல் அவர் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் தற்பொழுது நடக்கும் போர்களுக்கான பல தயாரிப்புக்கள் பற்றிய கொள்கைகளில் தொடர்பு கொண்டிருந்தார். சோவியத் ஆதரவை பெற்றிருந்த ஆப்கானிஸ்தானிற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாத கெரில்லாக்களுக்கு மறைமுக CIA ஆதரவையும் இவை உள்ளடக்கி இருந்தன; இறுதியில் வாஷிங்டன் கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் பணத்திலும் ஆயுதத்திலும் செலவழித்த அம்முயற்சி -- சில ஓசாமா பின் லேடன் மூலம் செலவழிக்கப்பட்டது-- கிட்டத்தட்ட 1.5 மில்லியன் உயிர்களை பறித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், வெறுக்கப்பட்டிருந்த ஷாவின் சர்வாதிகாரத்திற்கு அவருடைய ஆதரவு 1979 ஈரானிய புரட்சியில் ஷா அகற்றப்படுவதை தடுக்க முடியாமல் போனதும், கார்ட்டர் ஒரு புதிய அமெரிக்க இராணுவக் கொள்கையை அப்பகுதியில் அறிவித்தார்; அதன் நோக்கம் அமெரிக்க மேலாதிக்கம் ஈரானின் பரந்த எண்ணெய் வளத்தின் மீது தக்க வைக்கும்படி இருக்கும் என்பதாகும்.

கார்ட்டர் கோட்பாடு என்று அழைக்கப்பட்டிருந்த இக்கொள்கை பாரசீக வளைகுடாப் பகுதியிலுள்ள எண்ணெய் ஆதாரங்களின்மீது வேறு எந்த சக்தியும் மேலாதிக்கம் கொள்ள முயன்றால், "அது அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மீதான தாக்குதல் என்று கருதப்படும்" என்று கூறியது; மேலும், "தேவையானால் இராணுவ சக்தி உட்பட எவ்விதத்திலும்" அத்தகைய போக்கை அமெரிக்கா எதிர்க்கும் என்றும் கூறப்பட்டது. இந்த அச்சுறுத்தலை உறுதி செய்யும் வகையில், அவருடைய நிர்வாகம் Rapid Deployment Joint Task Force (RDJTF), விரைவில் செயலாற்றும் திறனுடைய கூட்டு நடவடிக்கை படை ஒன்றையும் நிறுவியது. இதில் கிட்டத்தட்ட 200,000 அமெரிக்க இராணுவ துருப்புக்கள் பாரசீகவளைகுடாவில் தலையிடுவதற்கு தயார் நிலையில் இருந்தனர்.

இத்தயாரிப்புகளும் கார்ட்டர் கோட்பாடும்தான் இன்னும் கூடுதலான, ஆக்கிரோஷம் மற்றும் வன்முறையிலான வகையில் 2003ல் ஈராக் மீது அமெரிக்க படையெடுத்து, ஆக்கிரமிப்பு செய்ய வழிவகுத்தது; தற்போதைய ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுத்தது.

இறுதிப்பகுப்பாய்வில், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் பற்றிய கார்ட்டரின் கண்டனங்கள் சமவெளியில் ஞாயிறுப் பிரசங்கங்கள் என்பதில் இருந்து வெளிவரவில்லை; மாறாக, அவை ஈராக்கில் அமெரிக்க கொள்கையால் ஏற்பட்டுள்ள கசப்புக்கள் மற்றும் சங்கடங்களின் விளைவாக அமெரிக்க ஆளும் அமைப்பில் எழுந்துள்ள எதிர்க்குற்றச்சாட்டு, தீவிர பதட்டங்கள் ஆகியறவற்றைத்தான் பிரதிபலிக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved