World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்France: Sarkozy prepares shock therapy பிரான்ஸ் : அதிர்ச்சி வைத்தியம் அளிக்க சார்க்கோசி தயாராகிறார் By Peter Schwarz தன்னுடைய தேர்தல் வெற்றியின் இயங்குவிசையை பயன்படுத்தி, இந்த கோடையில் பல பிற்போக்கு நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதற்கு புதிய பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தயாராகிறார். இச் செய்தியானது, தொலைக்காட்சி சேவையான Europe 1 க்கு சார்க்கோசியின் புதிய பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனால் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. பிய்யோன் ஒன்றும் சுற்றி வளைத்து பேசவில்லை. (சார்க்கோசியின் தேர்தல் முழக்கமான) பிரான்சிற்கு ஒரு "முறிவு" (Rupture) மட்டும் அல்ல, மாறாக ஒரு "மின் அதிர்ச்சி தேவை" என்று அவர் கூறினார். நாட்டை பார்முலா 1 பந்தய காருடன் அவர் ஒப்பிட்டு, "ஒருவர் சர்வதேச போட்டியில் முதலிடத்தை பெறுவதற்கு காரை அதன் வரம்பில் மிக அதிக திறனில் செலுத்த வேண்டி இருக்கும்" என்றார் அவர். சார்க்கோசிக்கு முன் பதவியில் இருந்த ஜாக் சிராக்கை பற்றி குறிப்பிட்டு பிய்யோன் விளக்கினார்: "சிறப்பு அக்கறைகள் கொண்ட குழுவிடம் இருந்து எதிர்ப்புகளை பெற்றதன் காரணமாக தேர்தல்களில் பல செயற்திட்டங்களில் வெற்றி பெற்று பின்னர் அவற்றை செயல்படுத்த முடியாத அளவிற்கதிகமான அரசியல்வாதிகள் பலரை பிரான்ஸ் கண்டிருக்கிறது." இப்பொழுது, நிதியச் சந்தைகள் கோரும் வகையில் "சீர்திருத்தங்களை" செயல்படுத்தும் பிரத்தியேக வாய்ப்பு வந்துள்ளதாக பிய்யோன் காண்கிறார் --இந்த நடவடிக்கைகள் மகத்தான வெகுஜன எதிர்ப்பை அடுத்து கடந்த காலத்தில் பலமுறையும் தோல்வியுற்றிருக்கின்றன. "84 சதவிகித வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்துள்ள நிலையில், 53 சதவிகிதத்திற்கு மேற்பட்ட வெற்றி வாக்குகள் இருக்கும் நிலையில், நிக்கோலா சார்க்கோசியின் வெற்றி பிரான்சை அடிப்படையில் மாற்றுவதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பத்தை தோற்றுவித்துள்ளது" என்று பிய்யோன் கூறினார். அடுத்த ஆறுமாதங்களுக்கான சார்க்கோசியின் திட்டத்தை சுருக்கிக் கூறும் வகையில் தாராளவாத செய்தித்தாள் Liberation கூறியதாவது: இழிபுகழ்பெற்ற 'பிரெஞ்சு சமூக முன்மாதிரி' யை முற்றிலும் மாற்றியமைக்க அவர் முற்படுவார். அவருடைய ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல்பகுதி சமத்துவம் பெறுவதற்கான உத்திரவாத உரிமை என்ற அதன் அடித்தளக் கொள்கைக்கு எதிராக செலுத்தப்படும்..." ஜூன் 10, 17 தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் புதிய பிரெஞ்சு பாராளுமன்றம், அரசாங்கத்தால் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ள சட்டவரைவுகளை ஏற்க வேண்டி, ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 10 வரை சிறப்புக் கூட்டத்தொடருக்காக கூட்டப்பட இருக்கிறது. அதில் பாதுகாப்பான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று பிய்யோன் நம்புகிறார். தேர்தல்களில் தோல்விக்கு பின்னர் பெரும் மனச்சோர்விற்கும் பிளவிற்கும் உட்பட்டுள்ள பிரான்சின் "இடதுகள்" என அழைக்கப்படுவனவற்றின் திவால்தன்மை, தொழிற்சங்கங்கள் சார்க்கோசியுடனும் பிய்யோனுடனும் ஒத்துழைக்க தயாராக இருப்பதுடன் இணைந்து, புதிய ஜனாதிபதியின் முகாமுள் முன்னாள் "இடதுகள்", சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் நுழைந்துள்ளது அனைத்தும் சார்க்கோசியின் மக்கள் இயக்கத்திற்கான ஐக்கியத்திற்கு (UMP) பாராளுமன்ற தேர்தல்களில் பெரும் வெற்றி கிடைக்கக்கூடும் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக, அரசாங்கத்திற்குள் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் முக்கிய புள்ளிகள் புதிய வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் போன்றோர் இடம் பெற்றுள்ளமை, ஓர் அரசியல் வெற்றியென பிய்யோன் கருதுகிறார். இது "ஓர் உடனடியான அரசியல் அதிர்ச்சியை" ஏற்படுத்தியுள்ளது என்று Europe 1 இடம் அவர் கூறினார். "அனைத்து கட்சி தடைகளையும் நாங்கள் உடைத்து, அனைத்து தப்பெண்ணங்கள், முன்னரே கற்பனை செய்யப்பட்டிருந்த சூழ்நிலை அனைத்தையும் தகர்த்துவிட்டோம்." என்று அவர் அறிவித்தார். ஜனாதிபதி பதவி ஏற்கத் தயார் செய்துகொண்டிருக்கையில், சார்க்கோசி தொழிற்சங்கங்களுடன் ஊடாடினார்; அவையும், புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க தாங்கள் தயாராக இருப்பதை அறிவித்தன. இதன் பின் மே 21ம் தேதி சார்க்கோசியும் அவருடைய துணைப் பிரதமரும் சுற்றுச் சூழல் செயலாளருமான அலன் யூப்பேயும் ஒன்பது சுற்றுச் சூழல் கூட்டமைப்புக்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தனர். விவாதங்களில் சுற்றுச் சூழலியர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். பறவைகள் பாதுகாப்பாளரான Allain Bougrain Dubourg இன் கருத்தின்படி, "இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். முதல் முறையாக நாம் அடிப்படைவாதிகள் என்று நடத்தப்படாமல் பல உயிரினங்களையும் காப்பது பற்றிப் பேச்சு வார்த்தை நடத்த முடிந்தது." புகழ்பெற்ற சுற்றுச் சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான Nicolas Hulot பரபரப்புடன் கூறினார்: "அவர்கள் எந்த முன்கருத்தும் இன்றி எங்களோடு பேசினர். அதன் குறுகிய வட்டத்தில் இருந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு வெளிப்பட்டு வந்துள்ளது." பசுமைச் சமாதானவாதியான Yannick Jadot கூட "மனம் திறந்த பேச்சுக்களுக்கான அடையாளம் வந்துள்ளது" என்று கூறினார். அதன் பின்னர் மற்றொரு கூட்டம் சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள், வல்லுனர்களுடன் Hulot மற்றும் 85 வயது தத்துவவாதியும் முன்னொரு காலத்தில் எதிர்ப்புப் போராளியுமான எட்கார் மோறன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களும் சார்க்கோசி, யூப்பேயுடனான பேச்சுக்கள் பற்றி நல்ல அபிப்பிராயங்களையே கூறினர். "எட்கார் மோறன் வருகை புரிந்ததே விவாதத்தை மனிதாபிமான பிரச்சினைகள், பூகோளந்தழுவிய தலைப்புக்கள் பற்றிய விவாதத்திற்கு இட்டுச் செல்லப் போதுமானதாக இருந்தது" என்று உயிரின வகைகள் வல்லுனர் Yvon Le Maho கூறினார். "அரசியல் பல வகை தத்துவங்களையும் சிறப்புக் கவனத்துடன் மற்றும் எந்த வகையில் சோதனை செய்ய முடியும் என்பது விவாதத்தின் மையத்தானமாக இருந்தது." இலையுதிர்காலத்தில் ஒரு சுற்றுச் சூழல் "Grenelle" ä --அரசாங்கப் பிரதிநிதிகள், சுற்றுச் சூழல் குழுக்கள், தொழிற்சங்கங்கள், வணிகக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான தக்க நடவடிக்கைகள் பற்றிப் பேசுவதற்கான மாநாட்டை-- நடத்த இருப்பதாக சார்க்கோசி உறுதிமொழி கொடுத்துள்ளார். "Grenelle" என்னும் சொல் மே 1968ல் பாரிசின் Rue de Grenelle ல் தொழில் மந்திரியால் கொண்டுவரப்பட்ட உடன்பாட்டை குறிக்கும்; அது தொழிற்சங்கங்கள், வணிக அமைப்புக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே அவ்வாண்டு நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தை நெரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. வலதுசாரி சார்க்கோசி அரசாங்கத்தை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், விலங்குகள் உரிமைகள் குழுக்கள், மனித உரிமை நடவடிக்கையாளர்கள் ஆகியோர் தழுவி நிற்பது என்பது கூர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். இத்தகைய மனிதர்கள் மிக அதிக அளவில் மத்தியதர வர்க்கத்தின் செழுமையான பிரிவுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் தங்களுடைய சொந்த அக்கறை மண்டலத்தை பரந்த மக்களின் சமூகப் பிரச்சினைகளில் இருந்து பிரித்துப் பார்க்கும் போக்கை உடையவர்கள். இந்நிகழ்வில், இவர்கள் சமூக நிலைமைகள் மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான சார்க்கோசியின் தாக்குதலுக்கு ஒரு "முற்போக்கான" மூடுதிரையை வழங்க தங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளனர். புதிய அரசாங்கம் மனிதாபிமான மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை பயன்படுத்தி தன்னுடைய சொந்த செயற்பட்டியலை முன்னெடுக்க நினைக்கிறது. யூப்பேயின் அமைச்சரகத்தில் முக்கியமான பங்கை கொண்டுள்ள தட்பவெப்ப மாறுதல் என்ற தலைப்பு இப்பொழுது அமெரிக்கா மீது தூதரக அழுத்தம் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்படலாம்; இதுவரை அமெரிக்கா சர்வதேச தட்பவெப்ப உடன்பாடுகளுக்கு ஒப்புதல் கொடுக்க மறுத்து வருகிறது. இதேபோல், புதிய வெளியுறவு மந்திரியான குஷ்நெர், முன்பு சோசலிஸ்ட் கட்சியில் இருந்தவர், எல்லைகளற்ற டாக்டர்கள் என்ற அமைப்பை நிறுவ உதவியவர், பொஸ்னியா மற்றும் கொசோவோவில் "மனிதாபிமான" போர்கள் என அழைக்கப்பட்டதற்கு உரத்த குரல் கொடுத்து வாதிட்டவர், இப்பொழுது இன்னும் கூடுதலான இராணுவவாதம், குறுக்கீடுகள் நிறைந்த வெளியுறவுக் கொள்கைகளுக்கு "மனித உரிமைகள்" வண்ணம் அளிப்பதற்கு பயன்படுவார். யூப்பேயும் சார்க்கோசியும் பிரெஞ்சு பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடைய நலன்கள் தொடக்கமாகும் இடத்தில் அவர்களுடைய சுற்றுச் சூழல் வினாக்கள் பற்றிய பிரச்சினை அக்கறைகள் முடிந்துவிடும் என்பதை தெளிவாக்கியுள்ளனர். இது குறிப்பாக மரபியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி மற்றும் EPR அணுசக்தி உலை போன்ற புதிய வகை கட்டமைப்பு வரும்போது நன்கு தெளிவாகும். ஏற்கனவே சார்க்கோசி பதவியேற்று ஒரு சில தினங்களுள், புதிய ஜனாதிபதிக்கும் அவருடைய அரசாங்க தலைவரான பிய்யோனுக்கும் இடையே வேலைப்பகுப்பு முறை ஒன்று வெளிவந்துள்ளது. முந்தையவர் தன்னுடைய தொழிலாளர் வர்க்க எதிர்ப்பு கொள்கைகளுக்கு ஒரு பரந்த ஆதரவுத் தளத்தை நிறுவ முயல்கிறார்; பிந்தையவர் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரும் கடினப் பணிக்குப் பொறுப்பு ஆவார். இக்கோடையில் இயற்றப்பட உள்ள சட்டங்களுள், திரும்பவும் குற்றம் செய்பவர்களுக்கு குறைந்த அளவு சிறைத் தண்டனையை நிர்ணயித்தல் என்பதும் உள்ளது. அத்தகைய சட்டம் பிரெஞ்சு அரசியலமைப்பிற்கும் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய மாநாட்டின் முடிவுகளுக்கும் எதிரானது ஆகும்; இவை இரண்டும் தண்டனைகள் தனிப்பட்ட குற்றத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றன. இதைத்தவிர, அரசாங்கம் இளம் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. இதன் பொருள் 16 வயதினரும் வயது வந்தவர்களை போல நடத்தப்படுவர். வல்லுனர்கள், இந்த நடவடிக்கையானது இளங்குற்றவாளி கைதிகளின் எண்ணிக்கையை மிக அதிக அளவிற்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கின்றனர். பிய்யோனுடைய சட்டமியற்றும் பட்டியலில் இருக்கும் மற்ற முன்னுரிமை பெற்ற நடவடிக்கைகள் வேலைநிறுத்த உரிமைகளின் மீதான தடைகள் மற்றும் தொழிலாளர் நெகிழ்ச்சித்தன்மையை பெருக்குவது என்பதை கொண்டுள்ளன. பொது போக்குவரத்து வேலைநிறுத்தங்களின்போது குறைந்த அளவு பணியேனும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு நடவடிக்கை சட்டபூர்வமாக கோரும். அத்தகைய திட்டங்களில் அவர்களுடைய கருத்துக்களை தெரிந்து கொள்ளுவதற்காக கோடை இறுதிக்குள் தொழிற்சங்கங்களுடன் தான் விவாதிக்க இருப்பதாக பிய்யோன் கூறியுள்ளார். ஆனால் அவர் மேலும் சேர்த்துக் கொண்டதாவது: "கோடை முடிவிற்குள் அவர்கள் அதுபற்றி முடிவெடுக்கவில்லை என்றால், நாங்கள் செப்டம்பர் தொடக்கத்தில் எங்களுடைய சொந்த வரைவுச் சட்டத்தை அளிப்போம்." தேசிய வரவு-செலவு திட்டம் ஒருங்கிணைக்கப்படுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவில்லை. பிரான்சின் கடன் தரம் ஐரோப்பிய ஒன்றியம் வரைந்துள்ள Masstricht அளவுகோல்களை மீறியுள்ளது என்றாலும், பிரெஞ்சு வரவு-செலவு திட்ட மந்திரியான Eric Woerth வரவு-செலவு திட்டத்ததை வலுப்படுத்துவதில் "ஒரு இடைவெளியை" அறிவித்துள்ளார். கடன் குறைப்புக்கு வரவிருக்கும் சட்டமன்ற கூட்டக் காலம்வரை காத்திருக்க வேண்டும்: தேர்தல் பிரச்சாரத்தில் உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கும் வரிவெட்டுக்கள் முன்னுரிமை பெறும். இவ்விதத்தில், சார்க்கோசி மற்றும் பிய்யோனின் ஆட்சி ஏனைய வலதுசாரி அரசாங்கங்களின் (இத்தாலியில் பெர்லுஸ்கோனி, அமெரிக்காவில் புஷ்) அடிச்சுவட்டை பின்பற்றுகின்றது, அங்கு முக்கிய வரவு-செலவு திட்ட முன்னுரிமை செல்வந்தர்களுக்கு மகத்தான வரி வெட்டுக்கள், அத்துடன் இணைந்த பெருகிய இராணுவச் செலவினங்கள் இருந்து வருகின்றன. "இடது" அரசாங்கங்கள் என்று அழைக்கப்படுபவை (ஜேர்மனியின் ஷ்ரோடர், இத்தாலியின் பிரோடி) அவர்களை பதவியில் இருத்த உதவிய, பெரும்பான்மை வாக்குகளை அளித்த தொழிலாள வர்க்க வாக்காளர்களின் இழப்பில், பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்கும் பணியை கொள்ளவிருக்கின்றன. தன்னுடைய வலதுசாரித் தாக்குதலை தொடங்குவதற்கு சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் இடது துணைக் கருவிகளுடைய வலதுசாரி கொள்கைகளினால் தொழிலாள வர்க்கத்திடையே ஏற்பட்டுள்ள நோக்குநிலை தவறலை சார்க்கோசி சுரண்டுவதற்கு முயல்கிறார். இவைதான் அவருடைய தேர்தல் வெற்றியை சாத்தியமாக்கியவை. மிகப் பரந்த எதிர்ப்பை தவிர்க்கமுடியாமல் தூண்டும் ஆதரவற்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அவரிடம் குறைந்த கால அவகாசம்தான் உள்ளது என்பதை சார்க்கோசி நன்கு அறிவார். இதற்கிடையில், சோசலிஸ்ட் கட்சி உட்கட்சி கணக்குளை தீர்ப்பதற்கு தயாராகிவிட்டது. ஏற்கனவே கத்திகள் தீட்டப்பட்டுவிட்டன; பாராளுமன்ற தேர்தலினால்தான் தவிர்க்க முடியாத மோதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரான பிரான்சுவா ஹொலாந் தான் மீண்டும் அடுத்த கட்சி மாநாட்டில் அப்பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்; ஆனால் அம்மாநாடு எப்பொழுது நடத்தப்படும் என்று கூறவும் மறுத்துவிட்டார். அவருடைய பதவியை எடுத்துக் கொள்ள போட்டியாளர்கள் பலர் வரிசையில் நிற்கின்றனர்; ஆனால் இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் மேலும் வலது திருப்பம் எடுக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற செகோலென் ரோயால் உள்ளார்; இவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரான்சுவா பேய்ரூவின் தலைமையிலான வலதுசாரி முதலாளித்துவ UDF உடைய ஆதரவைப் பெற இவர் விழைந்திருந்தார். பின்னர் முன்னாள் நிதி மந்திரியான டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான் உள்ளார்; அவர் சோசலிஸ்ட் கட்சி தோல்வி அடைந்ததற்கு காரணமே அதன் பிரச்சாரம் போதுமான வகையில் வலதுசாரி தனத்தை கொண்டிராததுதான் என்கிறார். மற்றும் நீண்ட காலம் கட்சியில் வலதுசாரியாக கருதப்பட்ட Laurent Fabius இப்பொழுது "இடது" என்று காட்டப்படுகிறார். தொழிலாள வர்க்கமானது சோசலிஸ்ட் கட்சி, அதன் "தீவிர இடது" இழுபடுபவர்கள், மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் உடைத்துக் கொள்ளாமல், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியமைக்காமல், சார்க்கோசிக்கு எதிராக ஒரு அடி கூட முன்னேற முடியாது. |