WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Sarkozy selects Socialist Party's Bernard Kouchner as foreign
minister
பிரான்ஸ்: சோசலிஸ்ட் கட்சியின் பேர்னார்ட் குஷ்நெரை வெளியுறவு மந்திரியாக
சார்க்கோசி தேர்வு
By Antoine Lerougetel
25 May 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
சோசலிஸ்ட் கட்சி போட்டி வேட்பாளர் செகோலென் ரோயலுக்கு எதிராக மே
6ம் தேதி இரண்டாம் சுற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரான்சின் புதிய வலதுசாரி கோலிச ஜனாதிபதி
நிக்கோலா சார்க்கோசி, ரோயாலின் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த
பேர்னார்ட் குஷ்நெரை தன்னுடைய முதல் அரசாங்கத்தின் வெளியுறவு மந்திரியாக தேர்ந்தெடுத்துள்ளார்.
குஷ்நெருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பும், அதை அவர் ஏற்றுள்ளதும் புதிய ஆட்சி மற்றும் உத்தியோகபூர்வ "இடது"
முகாம் பற்றியும் அதிகமாக அம்பலப்படுத்துகிறது.
மே 16ம் தேதி எலீசே அரண்மனையில் நடைபெற்ற ஒரு விரிவான "முடிசூட்டுவிழா"
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஜாக் சிராக்கிடம் இருந்து சார்க்கோசி உத்தியோகபூர்வமாக பதவியை எடுத்துக்
கொண்டார். ஆளும் UMP
யில் இருக்கும் இவருடைய நெருக்கமான ஒத்துழைப்பாளர் பிரான்சுவா பிய்யோனை இவர் பிரதம மந்திரியாக நியமித்துள்ளார்.
அனைத்துப் புறமும் ஏற்கும் வகையில் சார்க்கோசி செயல்பட்டுள்ளார். பிரான்சில் முன்னோடி இல்லாத வகையில்
தன்னுடைய 15 பேர் கொண்ட சிறு மந்திரிசபைக் குழுவில் ஏழு மகளிரை குறிப்பிடத்தக்கவகையில் நியமித்துள்ளார்;
இதில் மைய வலது UDF
என்னும் பிரான்சுவா பேய்ரூவின் முன்னாள் கட்சியில் இருந்த ஒருவரும் அடங்குவார். ரோயாலின் பிரச்சாரக் குழுவில்
மற்றொரு உறுப்பினரான எரிக் பெசோன், மற்றும் காலஞ்சென்ற
Abbé Pierre
இன் அறக்கட்டளையான Emmaus
ன் தலைவரான "இடது" எனப்படும் Martin Hirsch,
ஆகியோர் மந்திரியாக இல்லாத அரசாங்க செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஷ்நெர் தாவியுள்ளது --ஜூன் 10, 17 பிரான்சில் பாராளுமன்ற தேர்தல்களின்
இருசுற்றுக்களுக்கு சில வாரங்களுக்கு முன்புதான்-- சோசலிஸ்ட் கட்சி (PS)
முகாமில் இருந்து
UMP க்கு என்பது,
அதுவும் பெசோன் கட்சி மாறியதை அடுத்து விரைவில் என்பது, நாட்டின் இரு முக்கிய அரசியல் கட்சிகளில் உள்ள
வேலைத்திட்டம் மற்றும் கண்ணோட்டத்தில் இருக்கும் நெருக்கமான ஒரேமாதிரித் தன்மையை வெளிப்படுத்துகின்றது.
சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான பிரான்சுவா ஹொலந்த் இப்பொழுது "கட்சியை விட்டு ஓடியவர்களைப் பற்றி"
கடுமையாக கண்டித்துப் பேசலாம்; ஆனால் சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் தடையற்ற சந்தை ஆதரவாளர்
UDF ன்
பழமைவாத பேய்ரூவிடம் பெரும் நெருக்கம் காட்டிய மற்றும் நலன்புரி அரசு-எதிர்ப்புக்கு பலவந்தமாக அணுகிய
செகோலென் ரோயால் உட்பட சோசலிஸ்ட் கட்சியில் மற்ற முக்கிய தலைவர்களுக்கும் அவருக்கும் எதிராக
இல்லை. பேய்ரு தற்போதைய பாராளுமன்ற பதவிக்காலம் உள்பட அரசாங்கத்தில் சார்க்கோசியுடனும்
கோலிசவாதிகளுடனும் பல நேரங்களில் கூட்டுச் சேர்ந்து இருந்திருந்தவராவார்.
மரபார்ந்த வலதுசாரி அரசியல் என்னும் குறுகிய வட்டங்களுக்கு வெளியே உள்ள
கூறுபாடுகளைக் கொண்டுவந்து தான் அரசாங்கத்தை அமைக்கிறேன் என்ற உண்மையைப் பற்றி சார்க்கோசி பெரிதும்
கூறிவருகிறார். தன்னுடைய மந்திரிசபையில் மகளிருக்கு சமவிகிதம் கொடுத்துள்ளதை தவிர --இதில் வட ஆபிரிக்க
இனவழி வழக்கறிஞரான ரஷீடா டாற்ரி உள்பட- - இவர் மையவாத மற்றும் இடது கூறுபாடுகளையும் சேர்த்துக்
கொண்டுள்ளது அனைத்து பிரெஞ்சு மக்களின் பிரதிநிதி, கட்சிகளுக்கு இடையே இருக்கும் பூசல்கள், சமூக வர்க்கங்கள்
இவற்றிற்கு அப்பால் தான் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
பிரான்சின் மிக உயர்ந்த பதவிக்கு நீண்ட, இரக்கமற்ற முறையில் உயர்ந்துள்ள
சார்க்கோசியின் மிக விசுவாசமான உதவியாளர்கள் பலர் இப்பொழுது தவிர்க்கப்பட்டு விட்டனர்.
UMP க்குள்
"பற்களை நறநற என" பலர் நெரித்துக் கொண்டாகவும் கூறப்படுகிறது.
புதிய ஜனாதிபதி வெற்றிபெற்றபின் செய்த முதல் நடவடிக்கைகளுள் ஒன்று, ஐந்து
முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் (CGT,
CFDT, FO, CFTC, CFE-CGC) தலைவர்களை,
உத்தியோகபூர்வமாக பதவி ஏற்பதற்கு முன்னரே தன்னை தனியே சந்திக்கச் செய்ததாகும். தொழிற்சங்க
தலைவர்களும் இதற்குப் பெரிதும் உவப்புக் காட்டி சார்க்கோசியின் பிற்போக்குத்தன சமூக கொள்கைகள் பற்றி
செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஆலோசனைகளில் தங்களையும் சேர்த்திருப்பது பற்றி திருப்தியை
தெரிவித்துள்ளனர். சிராக்கின் பிரதம மந்திரி டொமினிக் வில்ப்பனுக்கு எதிராக சார்க்கோசியின் முகாம்
தொழிலாளர் சங்கங்களுடன் CPE (Contrat
première embauche) க்கு எதிராக சேர்ந்து கொண்டது
இத்தகைய ஐக்கியத்திற்கு வழிவகுத்துள்ளது. தன்னுடைய ஆட்சிக்கு ஒரு தேசிய ஐக்கியத்துடன் கூடிய அரசாங்கத்
தன்மை, அல்லது ஜேர்மனியில் அங்கேலா மேர்க்கெல் போல் "பெரும் கூட்டணியின்" தன்மை ஆகியவற்றை
கொடுப்பதற்கு சார்க்கோசி முயல்கிறார்.
தேசிய சட்ட மன்றத்தில் பெரும்பான்மை பிரதிநிதிகளை வெல்ல வேண்டும் என்பதுதான்
சார்க்கோசியின் உடனடியான பணியாகும்; குஷ்நெர் போன்ற பெரும் பிரமுகர்களை "தன்புறம் எடுத்துக்
கொள்ளுதல்" என்பது சோசலிஸ்ட் கட்சியின் சோர்வடைந்துள்ள தொண்டர்களிடையே நெருக்கடியை ஆழ்த்தியுள்ளது.
கருத்துக் கணிப்புக்கள் பாராளுமன்ற போட்டிகளில் UMP
க்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று கூறுகின்றன.
Ipos/Dell மே 24 அன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பு
41.5 சதவிகித வாக்காளர்கள் UMP,
அதன் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று இருப்பதாகவும், சோசலிஸ்ட் கட்சிக்கு 29 சதவிகிதத்தினர் ஆதரவு
கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் கூறுகிறது.
இன்னும் அடிப்படையாக, வெளிப்படையாக கலவையாக இருக்கும் சார்க்கோசியின்
மந்திரிசபை (மூன்று எதிர்முனைகளான வலது, மையம், "இடது" அனைத்தையும் உள்ளடக்கியது), இவருடைய சமூகத்
தளத்தை விரிவாக்கும் நோக்கத்தையும், நலன்புரி அரசு, பொதுக் கல்வி, தொழிற்சங்க உரிமைகள்மீதான
இவருடைய தாக்குதல்களுக்கு கூடுதலான அரசியல் சட்டரீதியான தன்மையை தரும் என்ற கருத்தையும் கொண்டுள்ளது.
இந்த பிற்போக்கு நடவடிக்கைகள் "அனைத்து பிரெஞ்சு மக்களாலும்" விரும்பப்படுகின்றன என்று கூறப்படும்; அது
உண்மையாய் அரிதாகவே இருக்க முடியும்.
மேலும், தன்னுடைய புதிய, ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கைகளுக்கு
"மனிதாபிமான பூச்சு" ஒன்றையும் சார்க்கோசி கொடுக்க வேண்டியுள்ளது. இங்கு குஷ்நெரின் பங்கு சிறப்பானது
ஆகும்.
பதவி ஏற்றவுடன் சார்க்கோசி ஆற்றிய உரை, வெளியுறவு மந்திரியாக குஷ்நெர்
செய்யக்கூடிய பங்கைப் பற்றி இவர் என்ன கருதுகிறார் என்பதை பற்றி தெரிவிக்கிறது: அரேபிய உலகிலும்,
ஆபிரிக்காவில் சகாரா துணைப் பகுதியிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை ஊக்கத்துடன் அவர் பாதுகாக்க வேண்டும்
என்று சார்க்கோசி விரும்புகிறார்; இவ்விடங்களில் பிரான்ஸ் பல இராணுவ படைப்பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது
(லெபனான், காபோன் 1,000 துருப்புக்கள்,
Djibouti 3,000, செனேகல் 1,200,
Chad 1,100, Togo
300); மேலும் தன்னுடைய போட்டியாளர்களுக்கு எதிராக, குறிப்பாக அமெரிக்காவிற்கும், செல்வாக்கை
விரைவாக பெருக்கிக் கொண்டிருக்கும் சீனா, இந்தியாவிற்கும் எதிராக பிரெஞ்சு நிலைமையை வலுப்படுத்தவும் அவர்
விரும்புகிறார்.
இதுதான் சார்க்கோசியின் "உலகெங்கிலும் பிரான்சின் அனைவருக்கும் பொருந்தும்
மதிப்புக்களை" பரப்புவோம் என்று முழக்கும் முறையீட்டின் உண்மையான, மற்றும் "மத்தியதரைக் கடற்பகுதியின்
ஐக்கியம் மற்றும் ஆபிரிக்காவின் வளர்ச்சிக்காக" போராடுவோம் என்று உறுதிமொழி கொடுக்கும் பின்னணியில் உள்ள
இழிந்த காலனித்துவ யதார்த்தமாகும். அவர் தொடர்ந்தார்: "மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பூகோள
வெப்பநிலைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை உலகில் பிரான்சின் தூதரக நடவடிக்கையின் முன்னுரிமைகள்
பெற்றதாக்குவேன்".
பூகோளவெப்பமயமாதல் பற்றிய அவருடைய குறிப்பு பசுமைக் கட்சி பிரமுகர்களிடம்
இருந்து கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது.
ஒரு வெளியுறவு மந்திரி என்னும் முறையில், பிரான்சிலும் ஒல்லாந்திலும் மக்களால்
வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு ஒத்த மாற்று ஒன்றைத் திணிக்கும் பணியையும்
குஷ்நெர் மேற்கொள்ள வேண்டும்.
"சமுதாய விருப்பம்" என்பதற்கு மற்றொரு வெளிப்பாடான, "ஐரோப்பா
பாதுகாக்கும்" என்ற கருத்திற்கு சார்க்கோசி அழைப்பு விடுத்துள்ளார்; இச்சொற்றொடர்கள் ஜேர்மனியிலும்
ஏனைய தலைநகர்களிலும் பிரான்சின் வணிக நலன்களை ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு எதிராக
ஆக்கிரோஷத்துடன் காத்திட வேண்டும் என்று விளக்கம் காணப்பட்டுள்ளது.
குஷ்நெரின் வரலாறு
குஷ்நெரின் அரசியல் வாழ்க்கை வரலாறு ஒரு முழு சமூக அடுக்கின் வளர்ச்சி பற்றிப்
பேசுகிறது மற்றும் வெளிப்படுத்துகிறது. 1939ம் ஆண்டு ஒரு யூதத் தந்தைக்கும், புராடெஸ்டான்ட் தாய்க்கும்
பிறந்த இவர் தன்னுடைய அரசியல் வாழ்வை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தொடங்கினார்; இதில்
இருந்து அவர் 1966ல் விலக்கப்பட்டர். 1968ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தம் ஒன்றை தலைமை
தாங்கி நடத்தினார். அதே ஆண்டு அவர் பிரான்சின் அக்காலத்திய அரசியல் சூழலை விட்டு ஒதுங்கி பியாபிரா (Biafra)
வில் (மிருகத்தனமான நைஜீரிய உள்நாட்டுப் போர்க்காலத்தில்) செஞ்சிலுவைச் சங்கத்தில் மருத்துவராக பணிபுரிய
சென்றார்.
பியாபிராவில் ஏற்பட்ட பெரும் ஏமாற்றத்தினால், பலருடன் இணைந்து இவர்
"பிரெஞ்சு டாக்டர்கள்" என்று கூறப்பட்ட அரசு சாரா அமைப்பு தொடக்கப்படுவதற்கு உதவினார்; இவை
மனிதாபிமான உதவிகளைப் புரிந்தன; அவற்றுள் எல்லைகள் அற்ற டாக்டர்கள் (Médecins
sans frontières) என்று 1971ல் நிறுவப்பட்ட
அமைப்பும், உலக டாக்டர்கள் (Médecins
du monde) என்ற அமைப்பும் அடங்கும்.
1968 மே-ஜூன் மாதங்களில் நடந்த மாபெரும் பிரெஞ்சு வேலைநிறுத்தத்தை
தொடர்ந்து திசை தெரியாமல் தடுமாறிய முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள், முன்னாள் மாவோயிஸ்ட்டுக்கள் மற்ற
தீவிரவாதிகளில் குஷ்நெரும் ஒருவர் ஆவார். காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சிகர சந்தர்ப்பத்திலிருந்து எழுந்த
பிரதான பிரச்சினை, தொழிலாள வர்க்கத்திடம் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை அரசியல் அளவில்
தகர்ப்பது ஆகும். இந்த தனிநபர்கள் பெரும்பாலும் அந்தப் பணியினால் திணறினர் அல்லது அதற்கு விரோதப்
போக்கை காட்டினர். அவர்கள் "மாற்றீட்டுப் பணியை" பெற முயன்றனர்.
1971 ம் ஆண்டில், எல்லைகள்
அற்ற டாக்டர்கள் என்ற அமைப்பு தவிர
Libération என்னும் முன்னாள் மாவோயிஸ்ட்டுக்களால்
நிறுவப்பட்ட நாளேடும், பிரான்சின் முதல் சுற்றுசூழல் கட்சியும் வெளிவந்தன.
அத்தகைய பலருள் குஷ்நெரும் ஒருவராவார். பொலிவிய கெரில்லா சாகசத்தில்
Che Guevara
உடன் Régis Debray
சேர்ந்திருந்து பின்னர் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனுக்கு நெருங்கிய
ஆலோசகராக இருந்தார். 1968ல் "Dany le
Rouge" (அவரது அரசியல் மற்றும் தலைமயிரின் காரணமாக)
என அழைக்கப்பட்ட டானியல் கோன் பென்டிற்,
மதிப்புக்குரிய ஜேர்மனியின் முதலாளித்துவ பசுமை அரசியலாளரும் மையவாத
UDF உடன்
கூட்டுக்கள் வைத்துக்கொள்ள ஊக்கம் கொடுத்ததில் செகோலென் ரோயாலுக்கு முக்கிய ஆலோசகராக இருந்து
வருபவருமாவார், UDF-ன்
பல பிரதிநிதிகள் இப்பொழுது சார்க்கோசியுடன் இணைந்துள்ளனர்.
செல்வம் பெருத்து பரந்த மக்கள் பிரிவிடம் இருந்து மனமுறிவு கொண்ட முன்னாள்
இடதுகளில் பலர், சார்க்கோசியின் அதிகாரச் செருக்குடன் தங்களை அடையாளம் கண்டுள்ளனர். வரலாற்றாளரும்,
நாவலாசிரியருமான மக்ஸ் கலோ (Max Gallo)
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து, பின்னர் மித்திரோன் மற்றும் ஹொலந்துடன்
ஒத்துழைப்பாளரானார். கலோ இப்பொழுது சார்க்கோசியின் அதிகார செருக்கை வெளிப்படையாக
அரவணைக்கிறார். புரட்சியையும், நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்தையும் ஒதுக்கியதற்காகவும், "சுத்தமான
தேசியத்தன்மை" பெற்றிருந்ததற்காகவும், நெப்போலியனை இவர் பெரிதும் மதிக்கிறார். கலோ கூறுவதாவது:
"இதுதான் போனபார்ட்டிசத்தின் ஆதாரம், இது இன்னமும் அரசியல் நீரோட்டம் என்னும் முறையில்,
வற்றிப்போய்விடவில்லை; சார்க்கோசி அதன் வாரிசு போல் தோன்றுகிறார்."
கடந்த தசாப்தத்தில் தொடர்ச்சியாக இடது, வலது அரசாங்கங்களின் சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிராக எழுச்சி செய்துள்ள பிரெஞ்சு மக்களை முன்னாள் இடதுகள் ஆழ்ந்த எதிர்ப்புடன்
கருதுகின்றனர். சார்க்கோசியின் ஆட்சி, இருக்கும் நடைமுறை தூண்டியுள்ள இந்த சமூக எழுச்சிகளை நசுக்கிவிடும்
என்று உறுதியாக நம்புகின்றனர். இருக்கும் நிலைக்கு தாங்கள் மாறிவிட்டதை நியாப்படுத்துவதற்கு இற்றுப்போன
கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைகூறி, "மனித உரிமைகள்" பெயரால் உலகம் முழுவதும் தலையிட
ஏகாதிபத்தியத்திற்கு முறையீடு செய்கின்றனர்.
பிந்தைய அரங்கில் குறிப்பிடத்தக்க வல்லுனராக குஷ்நெர் உள்ளார். 1980 களில்
மனிதாபிமான நடவடிக்கைக்கான அரசாங்க செயலர் என்னும் முறையில் இவரை "வெறுப்பும் சீற்றமும் காட்டும்
மந்திரி" என்று சிறப்புப் பெயர் சூட்டப்பட்டார்.
"பிரெஞ்சு டாக்டர்கள்" அமைப்புக்களுடன் 1970கள் மற்றும் 1980களில்
பணியாற்றிய காலத்தில்தான், குஷ்நெர் "மனிதாபிமான தலையீடு"
(ingérence humanitaire)
என்ற கருத்தாய்வை அபிவிருத்தி செய்தார்.
இக்கருத்து தற்போதைய அமைப்பு பற்றிய வர்க்க பகுப்பாய்வை நிராகரித்த
அறிவுஜீவிகள் அடுக்கினால் ஏற்கப்பட்டிருந்தது. அவர்கள் கூறியவாறு சில சமூக நெருக்கடிகள் மிகக் கடுமையாக
இருந்த வகையில், அவை தேசிய இறைமைக்கான மற்றும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கும் நாடுகளுக்கு இடையே
உள்ள உறவுகளுக்கான எந்தவித அக்கறைகளுக்காவும் துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டன. அவற்றின் வரலாற்று
மற்றும் சமூகப் பின்னணியில் இருந்து நிகழ்வுகளைப் பிரித்து எடுத்துக் கொண்டு --பொதுவாக இதன் பொருள்
காலனித்துவ வாதத்தின் கொடூரமான மரபை அசட்டை செய்துவிடும்-- குஷ்நெரும் அவரைப் போன்ற
மற்றவர்களும், ஒரு புதிய, பின்நவீனத்துவ "வெள்ளை மனிதனின் சுமை" (Fardeau
de l'homme blanc)
என்ற கோணத்தில், பூகோளத்தின் பல்வேறு பகுதிகளில் தலையீடு செய்ய
மாபெரும் சக்திகளுக்கு அழைப்பு விடுகின்றனர்.
அத்தகைய தலையீடுகள் பொதுவாக சற்றே குறைந்த தன்மையுடைய தன்னலமற்ற
திட்டங்களுடன் இணைந்தன; குறிப்பாக மதிப்புடைய இயற்கை ஆதாரங்களை தேடுதல் அல்லது மூலோபாயத்தில்
முக்கியமான இடங்களில் இராணுவ நிலைகளை ஏற்படுத்துதல் போன்றவை புதிய மனிதாபிமானிகளால் அதிக கவனம்
காட்டப்படவில்லை.
1990களில் முன்னாள் யூகோஸ்லாவியாவில் உள்நாட்டுப் போர்கள் நடந்தது பல
முன்னாள் தீவிரப் போக்கினருக்கு ஏகாதிபத்திய முகாமில் சேரும் வாய்ப்பைக் கொடுத்தது. தேசியவாத
மிலோசெவிக் ஆட்சியின் இனவழிச் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை பயன்படுத்தி, மேலை
சக்திகள் இப்பகுதியில் பிரிவினை இயக்கங்கள் வளர்வதற்கும் ஊக்கம் கொடுத்தனர்; அதையொட்டி இராணுவத்
தலையீடு நியாயப்படுத்தப்படலாம், NATO
வின் "மனிதாபிமான குண்டுவீச்சுக்கள்" பால்கன் பகுதிக்குள் ஏகாதிபத்திய
மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் நியாயப்படுத்தவும் உதவும்.
குஷ்நெர் ஐ.நா.வின் சிறப்புத் தூதராகவும், கொசோவோவில் ஐ.நா.வின்
இடைக்கால நிர்வாகத்தின் தலைவராகவும் ஜூலை 1999ல் இருந்து ஜனவரி 2001 வரை பணியாற்றினார்;
கொசோவோவிற்கு தன்னாட்சி வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் பொதுவாக பெரும் சக்திகளின் நலன்களுக்கு
சேவை செய்தார்.
இதற்கிடையில் அவர் "மனிதாபிமான முறையில் முன்னரே கைப்பற்றித் தனதாக்கிக்
கொள்ளும் தாக்குதல்" (Humanitarian
Preemptive Strike) என்ற புதிய கருத்தையும்
வளர்த்தார். Los Angeles Times
அக்டோபர் 1999ல் வந்த கட்டுரை ஒன்றில் (Perspective
on World Politics: Establish a Right to Intervene against War),
இவர் வலியுறுத்தியதாவது: "இப்பொழுது இன்னும் ஒரு படி மேலே சென்று போர்கள் தொடங்குவதற்கு முன்
அவற்றை நிறுத்தி, கொல்லுவதற்கு முன்பு கொலைகாரர்களையும் தடுத்து நிறுத்தவேண்டும்.... சோமாலியா,
பொஸ்னியா-ஹெர்சகோவினா மற்றும் கொசோவோவில் போர் வெடித்து வருவதற்கு முன் என்ன நடக்கக்கூடும்
என்பதை அறிந்திருந்தோம். ஆனால் நாம் செயல்படவில்லை. இந்த அனுபவங்கள் எதையேனும் நமக்குக் கற்றுக்
கொடுத்துள்ளன என்றால், சர்வதேச நனவின் தீர்க்கமான பரிணாமத்திற்கான காலம் வந்துவிட்டது என்பதுதான்."
இத்தகைய காரண ஆய்வு, அவரை புஷ்ஷின் 2003ல் ஈராக்கிற்கு எதிராக, அங்கு
இல்லாத பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்கும் "ஈராக்கிய மக்களை அடக்கு முறையில் இருந்து விடுவிப்பதற்கும்"
முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் தாக்குதலுக்கு ஆதரவு கொடுக்கச் செய்தது. இதையொட்டி
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் பிரான்ஸ் உட்பட, இவற்றால் கொண்டுவரப்பட்ட
ஈராக்கிய பேரழிவிலும் மற்றும் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளிலும் மத்திய
கிழக்கை மீள காலனியமயமாக்கலை நோக்கிய அடிவைப்பிலும், இவர் உடந்தையாக உள்ளார்.
அவர் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நலன்களுக்கு ஆதரவாக புதிய தாராளக்
கொள்கைகளுக்கு வெளிப்படையான ஒப்புதலும் ஆதரவையும் கொடுத்தார் 1995ம் ஆண்டு முன்னாள்
SP பிரதம மந்திரி
மிசேல் றொக்கா உடன் அவர் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த அலன் யூப்பேயின் திட்டமான ஓய்வூதியம்
மற்றும் பல சமூக பாதுகாப்பு உரிமைகளை குறைப்பதற்கு ஆதரவு கொடுத்தார்; இது மக்களிடையே மிகப் பெரிய
வேலைநிறுத்தங்களை தூண்டிவிட்டது. டொமினிக் டு வில்ப்பனுடைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய 2006 வசந்த
காலத்தில் இதேபோல் பெரும் எதிர்ப்பு புயலை தோற்றுவித்த முதல் வேலை ஒப்பந்தத்திற்கும் (CPE)
அவர் ஆதரவு கொடுத்திருந்தார்.
சார்க்கோசியுடன் இணைந்து கொள்வது என்னும் குஷ்நெரின் முடிவு அவருடைய வலதுபுற
நெறிபிறழ்வின் தர்க்கரீதியான தொடர்ச்சிதான் மற்றும் முழு சோசலிஸ்ட் கட்சித் தலைமை மற்றும் உத்தியோகபூர்வ
பிரெஞ்சு இடதின் வலதுமாற்றமும் ஆகும். சமீபத்தில் முன்னாள்
PS
முக்கியஸ்தர்களான குஷ்னெர் போன்றவர்களுடன் சார்க்கோசி தொடர்பு கொள்ளுவது பற்றி பிரான்சுவா ஹொலந்த்
புகார் கூறியுள்ளார்; "இடதிற்கும் வலதிற்கும் வேறுபாடு ஏதும் இப்பொழுது இல்லை" என்று மக்களை
நம்பவைப்பதற்கு புதிய ஜனாதிபதி இத்தகைய வழிவகைகளை கையாள்கிறார் என்றும் அவர் கூறினார்! உண்மையில்
கொள்கையளவிலான வேறுபாடுகள் UMP
க்கும் PS
க்கும் இடையே இல்லைத்தான்; ஆனால் குஷ்நெருடைய நடவடிக்கையை அனைவரும் பின்பற்றினால் முழு விவரமும்
வெளிந்துவிடும்.
அதே நேரத்தில் குஷ்நெரை மந்திரிசபையில் வெளியுறவு மந்திரியாக சார்க்கோசி
கொண்டுவருவது புதிய ஆட்சியின் உறுதியற்ற தன்மையை குறிக்கிறது. சார்க்கோசியின் தேர்தல் பிரச்சாரத்தில்
அனைத்து மக்களுக்கும் அனைத்தையும் இவர் உறுதிமொழியாக கூறினார்: உயர் ஊதியங்கள், அதே நேரத்தில்
"சீர்திருத்தப்பட்ட" தொழிலாளர் உரிமைகள்; வேலைப் பாதுகாப்பு, அதே நேரத்தில் வேலைப் பணிகள் வளைந்து
கொடுக்கும் தன்மையை கொண்டிருக்கும், ஆளும் உயரடுக்கினர் கொழிப்பதற்கு சிறந்த நிலைமைகள்
கொடுக்கப்படும்; கூடுதலான சமூக நலன்கள்; ஆனால் குறைந்த வரிகள், அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை
குறைத்தல்; சிறந்த பள்ளிகள், ஆனால் கல்விச் செலவினங்களில் வெட்டுக்கள். இப்படி சமரசப்படுத்த முடியாத
உறுதிமொழிகள் விரைவில் தங்களை வெளிக் கொண்டுவந்துவிடும்.
தன்னுடைய சமூகத் தளம் குறுகியது என்பதை சார்க்கோசி அறிந்துள்ளது அவரை அதிகாரத்தை
தன்னுடைய கரங்களில் குவிக்க வைத்து UMP
இன் பங்கினை வலுவிழக்கச் செய்துள்ளது; UMP
ஐ இவர் பயன்படுத்தி, பின்னர் சிராக்கை ஒதுக்கிவிட்டார். குஷ்னெர் மற்றும்
UDF ன் மைய
வலதாக இருக்கும்
ஏர்வே மோறன்
இருவரும் தங்களின் மந்திரி பதவிகளுக்காக ஜனாதிபதியை நம்பி
இருப்பது UMP
யின் குறைந்துவரும் செல்வாக்கைத்தான் காட்டுகிறது. இதே போல்தான் தன்னுடைய சொந்தக் கட்சியையும் தளைகளுக்குள்
இவர் வைத்திருப்பது காணப்பட வேண்டும்.
Libération குறிப்பிடுவதாவது: "மே 6 வெற்றியின்
பெரும் களிப்பில், UMP
யின் முன்னாள் தலைவர் வாரத் தொடக்கத்தில் கீழ்க்கண்ட வியப்பான சாதனையை பெற்றார்! உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் UMP
க்கு இருக்காது; ஆனால் கூடுதலான அதிகாரங்களை கொண்டுள்ள பொதுச் செயலாளரின் கீழ் ஒரு கூட்டுத்
தலைமை, நிக்கோலா சார்க்கோசிக்கு விசுவாசமாக இருக்கும் குழு அமைக்கப்படும்."
MEDEF அமைப்பின் முதலாளிகளை
கொண்ட உயர்மட்ட மிகச் சிறிய மில்லியனர் வட்டத்தின் ஆதரவிற்கு உட்பட்டு, பூகோளமயமாக்கப்பட்ட போட்டி
கண்டு அஞ்சியிருக்கும் சிறு வணிக அடுக்குகளையும் ஈர்த்து, பெரும் தேர்தல் வெற்றிகளும் மிகப் பெரும்பான்மையான
நிலை பாராளுமன்றத்திலும் என்பது சமூக வெடிப்பிற்கு எதிரான உத்தரவாதம் அல்ல என்று சார்க்கோசிக்கு நன்கு
தெரியும். இவருடைய புதிய அரசாங்கத்தின் இரண்டாம் பெரிய தலைவரான யூப்பேயும் ஓய்வூதிய உரிமைகள்,
சமூகப் பாதுகாப்புக் குறைப்புக்கள் ஆகியவற்றை செயல்படுத்த முனைந்தபோது தன்னுடைய இழப்பில் இதனை அறிந்தார்.
1955 ல் பிரதம மந்திரியாக பதவியேற்ற சில மாதங்களில் ஒரு பெரும் பழமைவாத பெரும்பான்மையில் அவர்
இருந்தார். மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு கொடுத்த பெரும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள்
ஆகியவற்றை எதிர்கொண்டார்; தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துணையுடன்தான் அவற்றைக் கஷ்டத்துடன் கட்டுப்படுத்த
முடிந்தது;. அவருடைய அரசாங்கத்தின் முடிவின் துவக்கமாக அது இருந்தது; பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள் அது சரிந்தது.
சார்க்கோசி நிர்வாகத்தின் ஆபத்துக்கள் குறைத்து காட்டப்பட்டுவிடக்கூடாது. ஐரோப்பா
முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களை அழிக்கும் நோக்கத்தை கொண்ட தாக்குதலின் ஒரு பகுதியாவார்
இவர், அதை அடைவதற்கு சர்வாதிகார ஆட்சியையும் அவர் திணிப்பார். தொழிலாளர்கள், இளைஞர்கள் மீது நடத்தப்படவுள்ள
தாக்குதல்களில் உத்தியோகபூர்வ இடது கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பெரும் ஆதரவை அரசாங்கத்திற்கு
கொடுக்கும். முதலாளித்துவ ஆட்சியின் இந்த முகவாண்மைகளில் இருந்து நனவுடன் தொழிலாள வர்க்கம் முறித்துக்
கொண்டு, ஒரு உண்மையான சர்வதேச சோசலிச இயக்கத்தில் தன்னுடைய அரசியல் சுயாதீனத்தை நிறுவும்வரை,
அது இந்த ஆபத்துக்களை தடுத்து விலக்கிவிட முடியாது; தன்னுடைய நலன்களுக்காவும், பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காவும்
தாக்குதலில் ஈடுபடவும் முடியாது. |