World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Tensions between NATO and Russia escalate

நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதட்டங்கள் வெடிக்கின்றன

By Peter Schwarz
18 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

CFE (Treaty for Conventional Armed Forces in Europe) எனப்படும் ஐரோப்பிய மரபார்ந்த ஆயுதப் படைகள் உடன்பாட்டில் இருந்து ரஷ்யா ஒருதலைப் பட்சமாக விலகியதை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் நாடுகளுக்கும் நேட்டோவிற்கும் இடைய பதட்டங்கள் கடந்த வார இறுதியில் புதிய உச்சக் கட்டத்தை அடைந்தன.

சனிக்கிழமையன்று, உடன்பாட்டை இரத்து செய்யும் வகையில் ஒரு ஜனாதிபதி ஆணையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் பிறப்பித்தார். புதிய முடிவு ஏதும் நேட்டோவுடன் ஏற்படவில்லை என்றால், இவருடைய முடிவு 150 நாட்களில் நடைமுறைக்கு வந்துவிடும். பேச்சுவார்த்தைகளில் பங்கு பெறுவதாக தன்னுடைய விருப்பத்தை மாஸ்கோ அடையாளம் காட்டியுள்ளது; பிரச்சினைகள் பலவற்றையும் பற்றிய பேச்சுவார்த்தைகளில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

1990 ல் பேச்சுவார்த்தைகள் நடத்தி இறுதியாக 1992ல் 22 நாடுகளின் ஒப்புதலைப் பெற்ற CFE உடன்பாடு, ஒருபுறத்தில் வாஷிங்டனுக்கும் அதன் நட்பு நாடுகளும், மறுபுறத்தில் ஸ்ராலினிச ஆட்சிக்கு உட்பட்டிருந்த சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு முகாம் நட்பு நாடுகள் இவற்றிற்கு இடையே போருக்கு பின் நிலவிய பிளவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மரபார்ந்த ஆயுதங்கள் (டாங்குகள், பீரங்கிப்படை, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்) எந்த அளவிற்கு ஐரோப்பிய மண்ணில் நிறுத்தப்படலாம் என்பதற்கு அது உயரிலக்கை நிர்ணயித்திருந்தது. இதன் விளைவு முந்தைய இரும்புத் திரையில் இருபுறத்திலும் பாதுகாப்புப் படைகள் குவித்திருந்த துருப்புக்களில் குறைவு ஏற்பட்டு, அவற்றிற்குப் பதிலாக சிறிய, நவீன தாக்கும் படைகள் உலகத்தில் எங்கும் தலையிடும் வகையில் நிறுவப்பட்டது.

வார்சோ ஒப்பந்தம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும், அத்துடன் நேட்டாவில் முன்னாள் கிழக்கு முகாம் நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்த நிலைமையும், CFE உடன்பாட்டின் பழைய வடிவிலான அதன் அடிப்படையை, கீழறுத்துவிட்டது. 1999ல் இஸ்தான்புலில் ஒரு திருத்தப்பட்ட CFE உடன்பாடு (ACFE) 30 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது, ஆனால் ரஷ்யா, பைலோரஷ்யா, கஜக்ஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகியவற்றால் மட்டுமே ஒப்புதலளித்து உறுதி செய்யப்பட்டது.

ஜோர்ஜியா மற்றும் மோல்டாவியாவின் கலகம் செய்யும் மாநிலங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படைகளை முதலில் ரஷ்யா திரும்பப் பெறவேண்டும் என்று வாதிட்டு ஒப்பந்தத்திற்கான இசைவை நேட்டோ நாடுகள் தாமதப்படுத்தின. ஆனால் ACFE உடன்பாட்டில் ஜோர்ஜியா மற்றும் மோல்டாவியாவில் நிறுத்தப்பட்ட படைகள் திரும்ப பெறவேண்டும் என்று உறுதியாக ஒருபோதும் கூறப்படவில்லை என்று மாஸ்கோ மறுக்கிறது.

ACFE உடன்பாட்டிற்கு நேட்டோ நாடுகள் ஒப்புதல் தர மறுத்துள்ளமையானது CFE உடன்பாட்டில் இருந்து விலகுவதற்கான தன்னுடைய முடிவை நியாயப்படுத்துவதற்கு ரஷ்யாவால் இப்பொழுது பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஏப்ரல் மாதமே அத்தகைய நடவடிக்கை வரக்கூடும் என்று ஏற்கனவே புட்டின் அச்சுறுத்தியிருந்தார். சனிக்கிழமை அன்று அவர் "அசாதாரண சூழ்நிலையை" பற்றி பொதுவாகப் பேசினார்; இது அவரை இம்முடிவு எடுக்க ஊக்குவித்தாக அவர் கூறினார். CFE உடன்பாடு நிறுத்திவைக்கப்படுவது என்பது மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே பெருகிய முறையில் மோதல் அதிகரிப்பதில் ஒரு புதிய கட்டத்தை பிரதிபலிக்கிறது என்பது தெளிவாகும்.

மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் வாஷிங்டனின் ஆக்கிரோஷமான தலையீட்டு நடவடிக்கைகளால் ரஷ்யா அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது; தன்னுடைய பிராந்திய, மற்றும் உலக சக்தி பங்கை அது மீட்டுக்கொள்ள முயல்கிறது. உயரும் எண்ணெய், எரிபொருள் வருமானங்கள் மூலம் இதன் கரங்கள் வலுப்படுத்தப்படுவதுடன், ஈராக்கில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள சங்கடமும் இதற்கு வலிமை தந்துள்ளது.

போலந்து மற்றும் செக் குடியரசில் அமெரிக்க ஏவுகணை-எதிர்த்தாக்குதல் முறையின் கூறுபாடுகளை நிறுவும் திட்டத்திற்கு மாஸ்கோ தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், ருமேனியா மற்றும் பல்கேரியாவில் அமெரிக்க இராணுவத் தளங்களை நிறுவுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு அந்தஸ்தையும் கிரெம்ளின் ஏற்கத்தயாராக இல்லை. மத்திய ஆசியாவின் வழியே செல்லும் அனைத்து முக்கியமான எண்ணெய் குழாய் திட்டங்களுக்கும் இதயத்தான பகுதியில் ஜோர்ஜியா உள்ளது; நேட்டோவில் உக்ரைனை அனுமதிப்பது என்பது மேற்கு கூட்டணியால் எடுக்கப்படும் மாஸ்கோவை நோக்கிய பெரும் முன்னேற்றம் என்பதை பிரதிநிதித்துவப்படுத்தும்; இப்பகுதி ரஷ்யாவின் பிரத்தியேக செல்வாக்கிடமாக பல நூற்றாண்டுகள் கருதப்பட்டுள்ளவை ஆகும்.

பல மோதல்களை கொடுக்கக்கூடிய சர்வதேசப் பிரச்சினைகளும் உள்ளன. கோசோவோவிற்கு சுதந்திரம் என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் இசைவு பெறுள்ள திட்டத்தை ரஷ்யா நிராகரிக்கிறது. ஈரானுடன் மோதும் போக்கை அமெரிக்கா கொண்டிருப்பதையும் ரஷ்யா எதிர்க்கிறது; அமெரிக்க ஆயுதங்கள் மிகப் பெரிய அளவு லெபனானுக்கு அனுப்பப்படுவதையும் அது எதிர்க்கிறது.

இப்பொழுது நேட்டோ வட்டங்களுள் சென்று கொண்டிருக்கும் விவாதம் ரஷ்யா CFE உடன்பாட்டை இரத்து செய்துள்ளமையானது வெறுமனே நேட்டோவை ACEF ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுத்து மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறையா அல்லது இது ஒரு புதிய ஆயுதப் போட்டியின் தொடக்கத்திற்கான முன்அறிகுறியா என்பது ஆகும். இவ்வாண்டு இறுதிக்குள் உடன்பாடு செயலற்றது என ஆக்கப்பட்டால், ரஷ்யா அதன் மேற்கு எல்லையில் ஏராளமான ஆயுதக் கிடங்குகளை உருவாக்கும் மற்றும் அதனை நேட்டோவின் ஆய்விற்கும் உட்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இனி அதற்கில்லை.

ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி பாராளுமன்ற பிரதிநிதியான Hans-Peter Bartels புட்டினின் முயற்சிகளுக்கு அமைதியாக விடையிறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்; "ரஷ்யர்களின் ஒரு தந்திர உத்திதான் இது" என்று அதைச் சுட்டிக் காட்டி, இது மீண்டும் ஆயுதப் போட்டிக்கு வழிவகுப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார். "மிகப் பெரிய முறையில் மகத்தான ஆயுதப் பெருக்கம் நம்மை சூழ்ந்துவிடாது." அவருடைய பசுமைக் கட்சி சக ஊழியரான Winfried Nachtwei வேறு கருத்தைக் கொண்டு, "ஐரோப்பாவில் ஆயுதக் களைவு மற்றும் ஒத்துழைப்பான பாதுகாப்பிற்கு இது ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்" என்று எச்சரித்துள்ளார்.

உண்மையில், சோவியத் ஒன்றியத்துடன் ஏற்பட்டிருந்த ஆயுதக் களைவு உடன்படிக்கைகள் சில காலத்திற்கு முன்பே குறைமதிப்பிற்கு உட்படத் தொடங்கின. 2001ல் அமெரிக்கா 30 ஆண்டு கால ABM (ஏவுகணை எதிர்த்தாக்குதல் முறை) உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக கைவிட்டு முதல் கட்டத்தை தொடக்கியது. அது ஏவுகணை எதிர்ப்பு தற்காப்பு முறைகள் நிறுத்தப்படும் இடங்களை கட்டுப்படுத்தியிருந்தது. அமெரிக்க நலன்களுக்கு பழைய ஒப்பந்தங்கள் பயன்படவில்லை என்ற வாதத்தைக் கூறி வாஷிங்டன் தன்னுடைய முடிவை நியாயப்படுத்தியது.

CFE ஐப் பொறுத்தவரையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்றால், மற்ற உடன்பாடுகளும் அச்சுறுத்தலுக்கு உட்படும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. புட்டினின் சமீபத்திய நடவடிக்கை பற்றி கிரெம்ளின் ஆலோசகர் Gleb Pawlowski கூறினார்: "இன்றைய எச்சரிக்கையும் புறக்கணிக்கப்பட்டால், Intermediate-Range Nuclear Froces Treaty, இடைத்தூர அணுசக்தி ஏவுகணை முறைகள், அடுத்த இலக்காகிவிடும்."

1987ல் பேச்சுவார்த்தைகளுக்கு பின் கையெழுத்தான INF (இடைத் தூர அணுசக்திகள்) உடன்படிக்கை, அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் 500ல் இருந்து 5,500 கி.மீ. செல்லக்கூடிய நடுத்தர, குறுகிய தூர ஏவுகணைகள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்று விதித்திருந்தது. இதன் விளைவாக அமெரிக்க 846 ஏவுகளைகளையும் சோவியத் ஒன்றியம் 1,846 ஏவுகணைகளையும் அழித்தன. இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு அமெரிக்க Pershing II மற்றும் ரஷ்ய SS-20 ஏவுகணைகள் ஐரோப்பாவில் நிறுத்தப்படுவதற்கு எதிராக பெரும் எதிர்ப்புக்கள் தோன்றியிருந்தன. ஜேர்மனியில் மட்டும் நூறாயிரக்கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இப்பொழுது, 1980 களில் இருந்து முதல் தடவையாக, ஐரோப்பா பலவந்தமான திருகுப்புரி வடிவிலான மீளஆயுதமாக்கப்படலை எதிர்கொள்ளுகிறது, மற்றும் சில வர்ணனையாளர்கள் ஏற்கனவே ஒரு இரண்டாம் குளிர்யுத்தம் பற்றி பேசத் தொடங்கிவிட்டனர். இது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அகப்பட்டுக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளை பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வைத்துள்ளது.

ஒரு புறத்தில் இவை அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக ரஷ்யாவுடன் நல்ல உறவைக் கொள்ள வேண்டியுள்ளது; பலவற்றுள் ஐரோப்பிய எரிபொருள் சக்திக்கு அது முக்கிய ஆதரமாக இருப்பதும் ஒரு முக்கிய அம்சாமாகும். வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரையில், உதாரணத்திற்கு ஈரான் தொடர்பான பிரச்சினையில் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பது என்பது சர்வதேச அரங்கில் ஐரோப்பிய நெம்புகோலுக்கு அதிக சக்தி கொடுக்கும்.

ஐரோப்பாவில் ஒரு புதிய ஆயுத போட்டி என்பது ஐரோப்பிய நாடுகளையும் மிகப் பெரிய நிதிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வைக்கும். 1990களில், துருப்புக்களின் அளவுகளை குறைத்தல், மரபுவழி ஆயுதங்களை களைத்தல் ஆகியவற்றின் மூலம் இவை தங்களுடைய இராணுவச் செலவினங்களில் பெரும் வெட்டுக்களை செய்யக் கூடியதாக இருந்தது -- அப்பணம்தான் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை சர்வதேச தலையீட்டிற்காக தயாரிக்க பின்னர் உதவியது.

அதே நேரத்தில் ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் பகிரங்கமான மோதலை தவிர்த்தன; இரண்டாம் உலகப் போரின் இறுதியில், அமெரிக்கா இவற்றின் முக்கிய நட்பு நாடாகவும் வணிகப் பங்காளியாகவும் ஆனது. ஈராக் போர் பற்றி ஐரோப்பிய விமர்சனங்கள் இருந்தாலும், ஐரோப்பிய அரசாங்கங்கள் ஈராக்கில் அமெரிக்கத் தோல்வி பற்றி பயப்படுகின்றன; ஏனெனில் மத்திய கிழக்கில் அவற்றின் ஏகாதிபத்திய நலன்களும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

வாஷிங்டன் பலமுறை இந்த சங்கடத்தை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பிளவை ஏற்படுத்தி ஐரோப்பாவை பிரிக்க முற்பட்டுள்ளது. இம்முயற்சியில் அது மிகப் பெரிய அளவில் ரஷ்யாவிடம் விரோதப் போக்கை காட்டும் ஆளும் தட்டுக்களை உடைய புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அரசாங்கங்களை நம்பியுள்ளது; மற்றும் ஒரு பிரெஞ்சு ஜேர்மனிய கூட்டு, ஐரோப்பாவில் கட்டளைகளை செயல்படுத்தும் என்றும் கூட அஞ்சுகின்றது.

இது, ஈராக்கிய போரின்போது, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட் "பழைய", "புதிய" ஐரோப்பா இவற்றிற்கு இடையே என்ற தன்னுடைய இழிந்த வேறுபாட்டை விளக்கியபோது தெளிவாயிற்று. அதன் பின்னர் ஒரு புதிய அமெரிக்க ஏவுகணை முறை நிறுத்தப்படும் இடம் பற்றிய முடிவில் அண்மையில் மீண்டும் வெளிப்பட்டது; இதைத் தொடர்ந்து வாஷிங்டனுக்கும் போலந்திற்கும் செக் குடியரசு அரசாங்கங்களுக்கும் இடையே, நேட்டோ குழுக்களை கடந்து இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடந்தன; அது பற்றி குறிப்பாக ஜேர்மனி தன்னுடைய தயக்கங்களை வெளியிட்டது. புதிய ஏவுகணைத் திட்டம் தொழில்நுட்ப ரீதியாக இயங்குமா என்பது ஊகம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், ஏற்கனவே ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதட்டங்களை அதிகப்படுத்தும் ஒரு நோக்கத்தை அது நிறைவேற்றிவிட்டது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski இன் கருத்தாய்வின் அடிப்படையில் ஐரோப்பாவிற்குள் பிளவுகளை ஊக்குவிக்க முற்படுகிறது; அவர் "பூகோள முதன்மைப்பீடத்தை நடத்துவதற்கான அமெரிக்காவின் திறன்" வாஷிங்டன் "மேலாதிக்கம் நிறைந்த விரோதப் போக்கு உடைய யூரேசிய சக்தி வெளிப்படுவதை" தடுக்குமா என்பதைப் பொறுத்தே உள்ளது என்று அறிவித்தார். அந்த நோக்கம் ஏற்கனவே ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையே இருக்கும் பிளவுகளால் எளிதாகிறது; அவை பெருகிய முறையில் பெருவணிக, வங்கிகள் நலன்களைத்தான் காக்கின்றன; அதன் மூலம் தங்களுடைய தேசிய நலன்களை வலியுறுத்துகின்றன மற்றும் அதிகரித்த வகையில் ஐரோப்பிய மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக வெற்றிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றன.