World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government celebrates "victory" after army seizes the East

இராணுவம் கிழக்கைக் கைப்பற்றியதை அடுத்து இலங்கை அரசாங்கம் "வெற்றியைக்" கொண்டாடுகிறது

By Nanda Wickremasinghe
23 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடைசியாக எஞ்சியிருந்த பிரதேசமான தொப்பிகல ஜூலை 11 அன்று அரசாங்கப் படையினாரால் கைப்பற்றப்பட்டமை, இலங்கை அரசாங்கத்திற்கு நாட்டுப் பற்று உணர்வை கிளறுவதற்காக கடந்த வியாழக்கிழமை வேடிக்கையான "வெற்றி" கொண்டாட்டத்தை அரங்கேற்ற ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆயினும், இந்தக் கொண்டாட்டம் வெகுஜன ஆதரவை பெறுவதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆயுதப் படைகளில் தங்கியிருப்பது அதிகரித்துவருவதையும் மற்றும் சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் இராணுவமயமாக்கப்படுவது வளர்ச்சிகாணுவதையுமே அம்பலப்படுத்தியுள்ளது.

"ஆயுதப் படைகளுக்கு மரியாதை செலுத்தும்" "கிழக்கின் வீழ்ச்சி" கொண்டாட்டமானது கடுமையான பாதுகாப்பின் கீழ் நடந்தது. தலைநகரின் பிரதான உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் இடம்பெறும் சுதந்திர சதுக்கத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் பொலிசாரும் படையினரும் இறுக்கி அடைத்தனர். கொழும்பில் உள்ள வழமையான வீதித் தடைகள் மற்றும் சோதனை நிலையங்களில் மேலதிகப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததோடு ஒவ்வொரு வீதியிலும் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் தோற்றம், முடியாட்சியால் நடத்தப்படும் நிலபிரபுத்துவ கொண்டாட்டத்தின் பண்பை கொண்டிருந்தது. ஆயுதப் படைகள் மற்றும் பொலிசின் தளபதிகள் அனைவரும் "கட்டளை நிறைவேற்றப்ட்டதை" பறைசாற்றி ஜனாதிபதிக்கு வெற்றிப்பட்டயத்தை கையளித்தனர். இந்த வெற்றிக்கொண்டாட்டமானது கடந்த ஆண்டு பூராவும் நடந்த இராணுவத் தாக்குதல்கள் "தற்காப்புக்கானவை" மற்றும் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கீழ்பட்டவை என்ற அரசாங்கத்தின் இத்துப்போன பாசாங்கை கிழிந்தெறிந்துள்ளது.

இராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன் ஆட்டிலறி தாங்கிகள் மற்றும் பல்குழல் ஏவுகணை லோஞ்சர்களும் இராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றிருந்ததோடு யுத்த விமானங்களின் வேடிக்கைகளும் இடம்பெற்றன. இராணுவத்தை புகழ்ந்த ஜனாதிபதி, இராணுவம் "கிழக்கு மக்களுக்கு விடுதலையை" கொண்டுவந்துள்ளதை அடுத்து "பெருமைக்குரிய அத்தியாயம்" ஒன்று தொடங்கியுள்ளது எனப் பிரகடனம் செய்தார். யுத்த நிறுத்தத்தை தாக்கிப் பேசிய அவர், "உடன்படிக்கை ஒன்றின் ஊடாக பயங்கரவாதிகளின் சட்டப்பூர்வ கட்டுப்பாட்டை அமுல்படுத்த உடன்படும் குற்றவியல் நடவடிக்கை இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் இடம்பெறவில்லை," என்றார்.

இராணுவ நடவடிக்கை "மக்களுக்கு மிகக் குறைந்தபட்ச பாதிப்புடனும் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு சிறிய பாதிப்புடனும்" முடிவுக்கு வந்துள்ளது என இராஜபக்ஷ கேலிக்கூத்தான முறையில் மிகைப்படுத்தினார். இந்த இராணுவ நடவடிக்கை கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்கள் மூலமே நிறைவேற்றப்பட்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட மோதலில் பல பொதுமக்கள் உட்பட குறைந்தபட்சம் 4,500 பேர் உயிரிழந்துள்ளதோடு கிட்டத்தட்ட 300,000 பேர் இருப்பிடம் இழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான காணாமல் போன சம்பவங்கள், படுகொலைகள் மற்றும் "புலி சந்தேகநபர்கள்" என பலபேரை எதேச்சதிகாரமான முறையில் விசாரணையின்றி தடுத்துவைத்திருத்தல் போன்றவை இந்த இராணுவப் பிரச்சாரத்தின் மறுபக்கமாகும். அரசாங்கம் நடப்பில் ஊடக தணிக்கையொன்றை அமுல்படுத்தியதோடு அரசியல் எதிரிகளையும் தேசத் துரோகிகள் என அநாகரீகமான முறையில் தாக்கியது. தொப்பிகலை காட்டுப் பகுதியைக் கைப்பற்றுவது என்பது வெறும் மாயை என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததை இராஜபக்ஷ கடுப்புடன் எதிர்த்தார். ஆயுதப் படைகளையும் மற்றும் "எமது தாயகத்திற்கு இத்தகைய வெற்றிகளை கொண்டுவர அவர்கள் செய்துள்ள அர்ப்பணிப்பையும்" "குறைத்து மதிப்பிடவோ" அல்லது "இழிவுபடுத்தவோ" கூடாது என அவர் பிரகடனம் செய்தார்.

அரசாங்கம் பெரும்பாலான பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்ட போதும், யுத்த வெற்றி ஆர்வத்தை உருவாக்கும் அதன் முயற்சிகள் முற்றிலும் தோல்வியடைந்தன. வீடுகளிலும் வியாபார நிலையங்களிலும் தேசிய கொடிகளை ஏற்றுமாறு விடுத்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேறவில்லை. உழைக்கும் மக்களின் பொருளாதாரச் சுமைகளை குவித்துள்ள மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு குழிபறித்துள்ள யுத்தத்திற்கு புகழ்பாடும் நடவடிக்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதை கொழும்பு ஊடகங்கள் கூட சுட்டிக்காட்டியிருந்தன.

கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டதாவது: "இந்த நிகழ்வுடன் நாட்டுப்பற்று ஆர்வத்தை கிளறும் முயற்சியாக பல நாட்களாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த உணர்வு காணாமல் போயுள்ளது தெளிவு. ஆகையால், அரசாங்கம் சுதந்திரதின கொண்டாட்டங்களுக்கு சமமாக உயர்த்த விரும்பிய, தொப்பிகல இராணுவ வெற்றி கொண்டாட்டமான வியாழக்கிழமை கேளிக்கைகள், அந்த இலக்கை அடைய நிச்சயமாக தவறிவிட்டன. போதுமான வெகுஜன ஆர்வம் இருக்கவேயில்லை."

"பிரசித்திபெற்ற அரசியல்வாதியாக வரலாற்றில் இடம்பெறும் ஆசை எனக்கு இல்லை" அல்லது தேர்தல்களில் தங்கியிருக்கும் அரசியல்வாதியாக இருக்கும் ஆசை எனக்கு இல்லை, என இராஜபக்ஷ விழாவில் அறிவித்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஜனாதிபதி எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் கொடூரமான முறையில் கடந்து செல்லவும், தேவை ஏற்படின் அடிப்படை அரசியல் யாப்பு மற்றும் சட்ட விதிமுறைகளை நிராகரிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கின்றார் --இது பொலிஸ் அரசை ஸ்தாபிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும்.

அரசாங்கம் "விடுவிக்கப்பட்ட கிழக்கை" முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடவும் பிரமாண்டமான, கடும் பாதுகாப்புடனான விசேட பொருளாதார வலயம் ஒன்றை ஸ்தாபிக்கவும் திட்டமிட்டுள்ளது. "தயவுசெய்து கிழக்கிற்கு வாருங்கள்" என இராஜபக்ஷ வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் மன்றாடுகின்றார். கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பானது 9 பெரும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் 42 பொலிஸ் அரண்களால் விரிவுபடுத்தப்படவுள்ளது.

ஜூலை 14 ஐலண்ட் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, "புலி பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களையும் மூலோபாய கோட்டைகளையும் ஊடுருவல் இன்றி பாதுகாப்பாக வைத்திருப்பதே ஆயுதப் படைகளின் பணி," என்றார். மேலும் 50,000 சிப்பாய்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆயுதப் படைகளின் முழு பலத்தை மேலும் அதிகரிக்கும் திட்டங்கள் உள்ளன. ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஹரி குணதிலகே, மேலதிக ஊதியங்களுக்கு மாத்திரம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி இராஜபக்ஷ, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவதைவிட குறைந்த எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த புதன் கிழமை அவர் அரசுக்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு தெரிவித்ததாவது: "யுத்தம் அல்லது சமாதானம், நாங்கள் தயார்... இப்போது அடியெடுத்து வைக்கவேண்டியது எந்தப் பாதையில் என்பதை தீர்மாணிக்க வேண்டியது புலிகளே."

பரந்த வெகுஜன எதிர்ப்பு தொடர்பாக விழிப்புடன் உள்ள பிரதான எதிர்க் கட்சிகள், யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை அரசாங்கத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களில் இருந்து தூர விலகி இருந்தன. தொப்பிகலையை கைப்பற்றியதை மத வழிபாடுகளின் மூலம் கொண்டாடி இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) பிரகடனம் செய்துள்ளது. எதிர்க் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, 800 புலி போராளிகளை தப்பியோட அனுமதித்துவிட்டதாக அரசாங்கத்தை விமர்சித்ததோடு கிழக்கில் எதிர்காலத்தில் கெரில்லாக்கள் ஊடுருவலாம் எனவும் எச்சரித்தார்.

ஜே.வி.பி. அனுசரணையிலான தேசப்பற்று தேசிய இயக்கம் கடந்த புதன் கிழமை ஆயுதப் படைகளுக்கு மரியாதை செலுத்தும் முகமாக சொந்தமாக ஒரு கூட்டத்தை நடத்தியது. வடக்கிலும் கடைசிவரை புலிகள் தோற்கடிக்கப்படும் வரை தேசிய கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என அது வலியுறுத்தியது. போதுமான வலிமையுடன் புலிகள் மீது யுத்தத்தை முன்னெடுக்கவில்லை என ஜே.வி.பி. அரசாங்கத்தை விமர்சித்தது.

ஆளும் கூட்டணியின் பங்காளியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் (ஸ்ரீ.ல.மு.கா) கூட, இந்தக் கொண்டாட்டத்தை பற்றி ஐயப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் நிகழ்விற்கு சமூகமளித்த அதேவேளை, "கொஞ்சம் தயக்கத்துடனேயே" அதில் பங்குபற்றியதாக வியாழன் மாலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "அத்தகைய கொண்டாட்டங்களில் யுத்த ஆரவாரம் அமைதியை நிலைநாட்டப் போவதில்லை. உண்மையில் தாம் வெற்றிகண்டவர்கள் என்ற எண்ணத்தை கொடுப்பதன் மூலம் தமிழர்களின் புண்ணுக்கு மேலும் வேதனையளிப்பதை மட்டுமே செய்தனர்," என அவர் எச்சரித்தார். கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதற்கு தலைமை தாங்கும் பெரும் வல்லரசுகள் கட்டுக்குள் அகப்பட்டுப் போயின. பாரபட்சமில்லாதவர்களாக காட்டிக்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கு மத்தியிலும், நிதிவழங்கும் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வேயும், இராஜபக்ஷ அரசாங்கம் 2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறியதை குருட்டுக் கண்ணால் பார்த்தன. அந்த நாடுகளின் தூதர்கள் விழாவுக்கு சமூகமளித்தால் யுத்தத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதாக ஆகிவிடும் என்பதால் அவர்கள் அங்கு வருவதை இராஜதந்திர ரீதியில் தவிர்த்துக் கொண்டனர். இந்த வெற்றிக் கொண்டாட்டம் தொடர்பாக பெரும் வல்லரசுகள் கடைப்பிடிக்கும் இத்தகைய திட்டமிட்ட அமைதியானது புலிகளின் கட்டுப்பாட்டிலான வடக்குக்கு எதிராக இலங்கை இராணுவம் தாக்குதல்களை தொடுக்குமானால் அதை பெரும் வல்லரசுகள் எதிர்க்கமாட்டா என்பதை சாதாரணமாக உறுதிப்படுத்துகிறது.

இராணுவம் ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. ஜூலை 16, மன்னார் மாவட்ட்ததில் பாலமோடையில் விசேட அதிரடிப்படையினர் நால்வரை கொன்றதாக புலிகள் தெரிவித்த அதேவேளை, புலிகளின் கட்டுப்பாட்டிலான புளியங்குளத்தில் ஒரு ஆஸ்பத்திரி மீது இராணுவம் ஆட்டிலறித் தாக்குதல் நடத்தியதாகவும் செய்தி வெளியாகியிருந்தது. கடந்த வியாழக்கிழமை, வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தின் பிரதான நுழைவாயிலான புளியங்குளத்தின் மீது மேலுமொரு ஆட்டிலறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக புலிகள் அறிவித்தனர். கடந்த வெள்ளியன்று, மன்னார் மாவட்டத்தில் புலிகளின் தாக்குதலை எதிர்கொண்ட மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். நீலாச்சேனையில் உள்ள சிறிய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் அறிவித்தனர். தமது துருப்புக்கள் ஒன்பது புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் பெருந்தொகையானவர்களை காயப்படுத்தியதாகவும் இராணுவம் வலியுறுத்தியது.

கிழக்கை "துப்புரவு செய்துவிட்டதாக" அரசாங்கம் கூறிக்கொள்ளும் அதேவேளை, ஜூலை 16 கிழக்கின் பிரதம செயலாளர் ஹேரத் அபேவீர படுகொலை செய்யப்பட்டமை நிலைமை ஸ்திரமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. இந்தக் கொலைக்கு உடனடியாக அரசாங்கம் புலிகளைக் குற்றஞ்சாட்டியது --இந்தக் குற்றச்சாட்டை புலிகள் நிராகரித்துள்ளனர். இந்தக் கொலைக்கு புலிகள் பொறுப்பாளிகளாக இருக்கலாம், ஆயினும், இந்தக் கொலையை செய்திருக்கக் கூடிய அரசாங்க சார்பு துணைப்படைகள் உட்பட கிழக்கில் ஏனைய பல ஆயுதக் குழுக்களும் உள்ளன. குறிப்பாக, 2004ல் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழு, "விடுவிக்கப்பட்ட" கிழக்கில் அதன் அரசியல் மேலாதிக்கத்தை பெற முனைகின்றது.

அரசாங்கத்தின் பெருமிதக் கொண்டாட்டத்தை போலவே கிழக்கில் அதன் வெற்றியும் வெறுமையானதாகும். 2005 நவம்பரில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இனவாத பதட்டத்தை கிளறி, தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ள இராஜபக்ஷ எடுத்த முடிவானது, உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் மற்றும் வாழ்க்கை நிலைமை சீரழிவது மீதான கவனத்தை திசை திருப்பவும் எடுத்த அவநம்பிக்கையான முயற்சியாகும். இராணுவத்தால் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஏற்படுத்த முடியாமல் இருந்த ஒரு குறிப்பிடத்தக்க தோல்வியை இப்போது புலிகளுக்கு ஏற்படுத்த முடிந்துள்ள போதிலும், அது சாதாரணமாக மேலும் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்புக்கு களம் அமைக்கும்.