:
ஆசியா
:
இலங்கை
War economy weighs heavily on Sri Lankan
workers
யுத்த பொருளாதாரம் இலங்கை தொழிலாளர்கள் மீது பெரும் சுமையை ஏற்றுகிறது
By Saman Gunadasa
20 July 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இலங்கை அரசாங்கம் அண்மைய வாரங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை
அதிகரித்துள்ளமை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மேலும் சுமைகளைத் திணித்துள்ளது. உலக எண்ணெய் விலை
அதிகரிப்பு ஒரு காரணியாக உள்ள அதே வேளை, அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அது முன்னெடுக்கும்
யுத்தத்தின் பொருளாதார சுமைகளை நேரடியாக வெகுஜனங்களின் தோள்களில் கட்டியடிக்கின்றது.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவு 139 பில்லியன் ரூபாய்களாக
(1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை பார்க்கிலும் 45 வீத
அதிகரிப்பாகும். எவ்வாறெனினும், இராணுவ நடவடிக்கைகள் உக்கிரமாக்கப்படுகின்ற நிலையில், பாதுகாப்புச் செலவுகள்
மேலும் 50 வீதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண உழைக்கும் மக்கள் நிச்சயமாக இந்த செலவைத் தாங்கத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
* இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடைசியாக எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்ட
பின்னர், ஜூன் 29 மீண்டும் எண்ணெய் விலை சுமார் 5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரை இந்த ஆண்டு
எண்ணெய் விலை ஆறு முறை அதிகரித்துள்ள நிலையில், பெற்றோல் விலை 20 வீதத்தாலும் மற்றும் டீசல் விலை 18
வீதத்தாலும் அதிகரித்துள்ளன. நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்கள் வெளிச்சத்திற்கும் மற்றும் சமைக்கவும்
பயன்படுத்தும் மண்ணெண்ணை, ஒரு லீட்டர் 67 ரூபா வரை 31 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* ஜூலை 4, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்றவாறு மலிவான போக்குவரத்து
சேவையாக உள்ள தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் போக்குவரத்து கட்டணங்களை
அதிகரித்துள்ளன. இது 16 மற்றும் 33 வீதத்திற்கு இடைப்பட்ட அதிகரிப்பாகும். செப்டெம்பர் மாதமளவில்
புகையிரத கட்டணங்களும் அதிகரிக்கப்பட உள்ளன.
* ஜூலை 9, இந்த ஆண்டு இரண்டாவது தடவையாக 12.5 கிலோகிராம் சமையல்
வாயு சிலின்டரின் விலை 9 வீதத்தால் அல்லது 87 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.
* குறைந்த விலை பால் மா வகைகள் உட்பட பால் மாவின் விலை கடந்த மாதம்
25 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் கோதுமை மாவின் விலை 16 வீதத்தாலும் மற்றும் பாணின்
விலை 12 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனால், பரந்தளவில் அதிகரித்துவரும் வெகுஜன ஆத்திரத்தின் காரணமாக,
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவொன்றுக்கு தலைமை தாங்கும் பிரதமர் ரட்னசிறி
விக்கிரமநாயக்க ஜூன் 29 அன்று எண்ணெய் விலை அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்காக ஊடகவியலாளர் மாநாடு
ஒன்றுக்கு அழைப்புவிடுத்தார். அனைத்து பொறுப்பையும் உலக எண்ணெய் விலை ஏற்றத்தின் மீது சுமத்திய அவர்,
"வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்கும் மற்றும் நாட்டில் அபிவிருத்தி திட்டங்களுக்கும்"
ஊறுவிளைவிக்க அரசாங்கம் விரும்பவில்லை என பிரகடனம் செய்தார்.
விக்கிரமநாயக்க உழைக்கும் மக்களை சாந்தப் படுத்தும் முயற்சியில், சீனி, பருப்பு,
கருவாடு மற்றும் காய்ந்த மிளகாய் உட்பட 10 அடிப்படைப் பொருட்களின் பெறுமதி சேர் வரியை அரசாங்கம்
அகற்றிவிடும் என தெரிவித்தார். எவ்வாறெனினும், ஜூலை 10, புதிய சுங்க வரிகளின் காரணமாக பெறுமதி சேர்
வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறைப்பதும் கூட சாத்தியமற்றது என
இறக்குமதியாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
"அர்ப்பணிப்பு செய்வதற்கான" அரசாங்கத்தின் சொந்த விருப்பத்தை நிரூபிக்கும்
அவநம்பிக்கையான முயற்சியில், அமைச்சர்களின் 10 வீத சம்பள வெட்டுக்கு முடிவெடுத்துள்ளதாக ஜூலை 4 உப
குழு அறிவித்தது. அரசாங்கத்துடன் இசைந்துபோகும் கொழும்பு ஊடகம் கூட இந்த முடிவை ஒரு "கேலிக்கூத்தாக"
விபரித்தது. கடந்த ஜனவரியில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் மற்றும் அவரது அமைச்சரவையும் பாராளுமன்ற
உறுப்பினர்களதும் அமைச்சர்களதும் சம்பளத்தை 120 வீதத்தால் அதிகரித்துக்கொண்ட அதே வேளை, அரசாங்க
ஊழியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை நிராகரித்தனர்.
எண்ணெய் கொடுப்பனவுகள், செயலாளர்கள் மற்றும் மாளிகைகள் உட்பட தமது பல
வசதி வாய்ப்புகளை அமைச்சர்கள் விட்டுக்கொடுப்பதற்கான யோசனைகள் எதுவும் கிடையாது. ஆட்டங்கண்டுப்
போயுள்ள தமது ஆளும் கூட்டணியைப் பேணிக்கொள்வதற்காக, இராஜபக்ஷ ஏறத்தாழ எல்லா அரசாங்க
பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஏதாவது ஒரு அமைச்சர் பதவியை கொடுத்து வைத்துள்ளார். 108 அமைச்சர்களதும்
ஆண்டு செலவு குறைந்த பட்சம் 2 பில்லியன் ரூபாய்களை எட்டும் --ஒவ்வொருவருக்கும் சராசரியாக 19.5
மில்லியன் ரூபாய்கள் அல்லது 165,000 அமெரிக்க டொலர்கள்-- இது பெரும்பாலான இலங்கையர்களால்
நெருங்க முடியாத செல்வமாகும்.
யுத்தமானது பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன், பொருளாதார
சமபலமின்மையை உருவாக்குவதோடு பாதுகாப்பு தவிர்ந்த அனைத்து அரசாங்க செலவுகளிலும் நிதி வெட்டுக்களுக்கு
வழிவகுத்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர திறைசேரியில் பணம் இல்லை என தேசிய
பாதுகாப்பு சபைக்கு தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பக்க எழுத்தாளர் இக்பால்
அத்தாஸ் ஜூன் 24 வெளியீட்டில் எழுதியுள்ளார். "அதிகம் அர்ப்பணிப்புகளைச் செய்வதன் மூலம் வயிற்றுப் பட்டியை
இன்னும் அதிகமாக இறுக்கிக்கொள்ளுமாறு அழைப்புவிடுப்பது மட்டுமே எஞ்சியுள்ளது" என அத்தாஸ்
கருத்துரைத்துள்ளார்.
ஜூன் 24 நடந்த மாகாண சபை முதலமைச்சர்களுக்கான ஆண்டுக் கூட்டத்தில், இந்த
ஆண்டு மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் 60 வீதம் வரை வெட்டிக்குறைக்கப்பட்டுள்ள காரணத்தால்
அபிவிருத்தித் திட்டங்களை வெட்டித்தள்ள வேண்டியுள்ளதாக அவர்கள் உளறிக்கொட்டியுள்ளனர். வீதி, நீர்பாசனத்
திட்டம், சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள்
ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டம் சபைகளைப் பராமரிப்பதற்காக புதிய வரிகளைத் திணிக்க
முடிவெடுத்துள்ளது. இது உழைக்கும் மக்கள் மீதும் மேலும் சுமைகளை ஏற்றும்.
ஜூன் 27, நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நிதி அமைச்சராக உள்ள
இராஜபக்ஷ, திறைசேரியில் பணம் ஏதும் உள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது என கூறியவாறு, வரவு செலவுத்
திட்ட ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறு பல அமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.
வர்த்தக வட்டாரங்களின் கவலையை வெளிப்படுத்தி சண்டே டைம்ஸ்
பத்திரிகையின் பெருளாதார பக்க எழுத்தாளர் எழுதியதாவது: "பிரமாண்டமான மற்றும் வளர்ச்சி கண்டுவரும் வரவு
செலவுத் திட்டப் பற்றாக்குறையானது, பெருமளவில் கடந்த தசாப்தத்தில் ஒரு மாபெரும் அரச கடனைக்
கட்டெழுப்பியுள்ள கடந்த காலத்தின் ஒன்று சேர்க்கப்பட்ட வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகளே
காரணமாகும்... குறிப்பிடத்தக்க வகையில், அண்மையில் பொதுஜனக் கடன் அதிகரித்துள்ளதற்கான காரணம்
அபிவிருத்தி செலவுகள் அல்ல, மாறாக யுத்த செலவே ஆகும்... தற்போது யுத்த செலவு பெருமளவில்
அதிகரிக்கப்படுவதானது தற்போதைய பண வீக்கத்தை மட்டுமன்றி, எதிர்வரும் ஆண்டுகளின் பணவீக்கத்திற்கும் எண்ணெய்
வார்க்கின்றது."
ஜூன் மாதம் வரையான ஆண்டு பணவீக்க வீதம் ஆறு மாதங்களுக்கு 17
சதவீதமாகும். கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், மே மாதம் 5,166 புள்ளிகளில் இருந்து ஜூன்
மாதத்தில் 5,334 வரை 168 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. வட்டி வீதங்களை கூட்டியுள்ள மத்திய வங்கி, வங்கி
வீதங்களை 17 வீதம் வரை முன்தள்ளியுள்ளது --இது இந்த தசாப்தத்திலேயே ஆக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
உயர்ந்த பண வீக்கமானது ரூபாயை மதிப்பிழக்கச் செய்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாய்
இந்த ஆண்டு சுமார் 8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அரசாங்கம் அதிகளவில் இடைக்கால இடநிரப்பு வழிமுறையை நாடுகிறது. கடந்த
ஆண்டு பூராவும், 38.4 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அதே சமயம், அது உள்ளூரிலும்
வெளிநாட்டிலும் 406 பில்லியன் ரூபாய்களை (4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஜூன் மாதம் வரை கடனாகப்
பெற்றுள்ளது.
ஜூலை 1 வெளியான சண்டே ஐலன்ட் பத்திரிகையில், பொருளியலாளர்
ஹர்ஷ டி சில்வா, "நாங்கள் ஒரு பிரமாண்டமான கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றோம்" என
எச்சரித்தார். தற்போதுள்ள கடன்களை செலுத்துவதற்காக இலங்கை இப்போது குறுகிய கால கடன்களை
வாங்குகிறது. ஒரு கடனை செலுத்தி முடிக்கும் போது இன்னும் ஒரு கடன் வாங்கப்பட்டுள்ளது. கடன் மீள
செலுத்துதல் அதிகரிப்பதானது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை அதிகரிப்பதற்கு ஏதுவாக உள்ள குறிப்பிடத் தக்க
காரணிகளில் ஒன்றாகும். கடந்தாண்டு துண்டுவிழும் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் 8.4 ஆக இருந்ததோடு
இந்த ஆண்டு 9.2 ஆக அதிகரிக்கவுள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிலைமைகள் தொடர்பாக சாதாரண உழைக்கும் மக்களுடன்
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் உரையாடினர்.
ஹட்டனுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டமான பன்மூரைச் சேர்ந்த முனியாண்டி
சிவனு தெரிவித்ததாவது: "வறிய மக்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்துவதாக வாக்குறுதியளித்தே இராஜபக்ஷ
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது. அரசாங்கம் இப்போது மாவின்
விலையை கூட்டியுள்ளதோடு பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்படும் மண் எண்ணெயின்
விலையை மேலும் கூட்டியுள்ளது.
"ஒரு சில மாதங்களுக்கு முன்னர், நான் ஒரு கிலோ கோதுமை மாவை 32
ரூபாய்களுக்கு வாங்கினேன்; இப்போது அது 49 முதல் 55 ரூபா வரை அதிகரித்துள்ளது. நாங்கள் எப்படி
வாழ்வது? எமது உணவுத் தேவைக்கு ஒவ்வொரு மாதமும் 15 கிலோ அரிசி மற்றும் 15 கிலோ கோதுமை மாவும்
அவசியம். விலை அதிகரிப்பால் எமது உணவை நாங்கள் குறைத்துக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளோம். எனக்கு இரண்டு
பிள்ளைகள் உள்ளனர். ஒரு பிள்ளைக்கு 5 வயது மற்றைய பிள்ளைக்கு 1 வயது. ஒவ்வொரு மாதமும் நாங்கள்
சாதாரணமாக மூன்று 400 கிராம் பால் மா பக்கட்டுகளை வாங்குவோம். இப்போது அதன் விலை 180
ரூபாயில் இருந்து 210 வரை அதிகரித்துள்ளது.
"நான் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர். இந்த சங்கத்தின் தலைவர் பெ.
சந்திரசேகரன் இந்த அரசாங்கத்தில் ஒரு அமைச்சர். ஆனால் அவர் இந்த விலை அதிகரிப்பு பற்றி எதுவும்
பேசாமல் அமைதியாக உள்ளார். தேவையற்ற யுத்தத்திற்காக அரசாங்கம் பெருந்தொகையான பணத்தை
செலவிடுகின்றது. யுத்தம் தொடருமானால் எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமை அதிகரிக்கும். எங்களது
நிலைமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்."
ஹட்டனைச் சேர்ந்த இன்னுமொரு தோட்டத் தொழிலாளி உமா
தெரிவித்ததாவது: "இந்த அரசாங்கம் எங்களது 300 நாள் சம்பளக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
நாங்கள் 15 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்து 170 ரூபா மட்டுமே பெற்றோம். அன்றாடம்
விலைவாசி அதிகரிக்கும் போது இந்த அதிகரிப்பு அர்த்தமற்றது. இந்த வேலை நிறுத்தத்தின் பின்னர், பலவித
வழிமுறைகளைப் பயன்படுத்தி நிர்வாகம் அதன் இலாபத்தை அதிகரித்துக்கொண்டது. ஆனால் எங்களது வாழ்க்கைத்
தரம் சீரழிந்துவிட்டது.
"அவர்கள் இப்போது காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு புதிய வேலை
காலத்தை அறிமுகம் செய்துள்ளனர். கைகாசு அடிப்படையில் அவர்கள் ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கு 10
ரூபா கொடுக்கின்றனர். அதன் பின்னர் நாங்கள் வழமை போல் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை
கொழுந்து பறிக்க வேண்டும். எனக்கு இரண்டு சிறு பிள்ளைகள் உள்ளனர், அதனால் மேலதிக வேலை நேரத்தில்
வேலை செய்வது மிகவும் சிரமமானது. ஆனால் எங்களது சம்பளம் சாப்பாட்டுக்குக் கூட போதாமையினால் நான்
அதை செய்யத் தள்ளப்பட்டுள்ளேன்.
மூன்று ஆண்டுகளாக மொரட்டுவையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தையல் இயந்திரத்தில்
வேலை செய்கிறார் ஞானசீலி. அவரது அடிப்படை மாத சம்பளம் 6,500 ரூபா. மாதம் அவர்
விடுமுறை எடுக்காவிட்டால் வருகைக்கான கொடுப்பனவு 1,000 ரூபா கிடைக்கும். மாதம் உணவுக்கு மட்டும்
குறைந்தபட்சம் 10,000 ரூபா தேவை என அவர் விளக்கினார்.
"பெரும்பாலான தொழிலாளர்கள் ஒரு அறையை பங்கிட்டுக்கொண்டு வாழ்க்கை நடத்துவதோடு
அவர்களது உணவை கூட்டாக தயாரித்துக்கொள்கிறார்கள். தொழிலாளர்கள் தமது பிரதான உணவாக சோறும் ஒரு
கறியையும் சமைத்துகொள்ள முடியும். மிகப் பெரும்பாலான தொழிலாளர்கள் போசாக்கின்மையால் ஏற்படும் சுகயீனத்தால்
துன்பப்படுகின்றனர். ஓய்வின்றி செயற்படுவதாலும் தக்க உணவு கிடைக்காததாலும் தமது கைகளில் வலி ஏற்படுவதாக
அவர்கள் முறைப்பாடு செய்கின்றனர்.
"நாங்கள் சமைப்பதற்கு மண் எண்ணெயை பயன்படுத்துகிறோம். தாங்க முடியாத
மட்டத்திற்கு விலைவாசி பல தடவைகள் அதிகரித்த போதிலும், எங்களுக்கு ஒரு சதமேனும் சம்பள அதிகரிப்பு
வழங்கப்படவில்லை. இங்குள்ள தொழிலாளர்களில் திருமணமாகாத பெண்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களில்
பெரும்பாலானவர்கள் தமது எதிர்காலத்திற்காக பணம் சேகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆயினும், எங்களுக்கு
கிடைக்கும் அற்ப சம்பளத்தில் இது யதார்த்தமாகாத கனவாகும். இத்தகைய நிலைமைகளின் கீழ் சில தொழிலாளர்கள்
தொழிலில் இருந்து விலகி தமது கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் திரும்பிவிட்டனர்.
"யுத்தம் மிகவும் மோசமான நிலைமையை உருவாக்கி விட்டுள்ளது. ஒரு பக்கத்தில்
யுத்தத்தால் மக்கள் உயிரிழக்கின்றனர். மறு பக்கம் அரசாங்கம் நாட்டின் அனைத்து வருமானங்களையும் அதற்கு செலவிடுகின்றது.
இதனால், தொழிலாளர்களே அனைத்து சுமைகளையும் தாங்க வேண்டியுள்ளது. அரசாங்கம் தொழிலாளர்களின்
வாழ்க்கை நிலைமையை நாசமாக்குவதோடு மக்களின் பணத்தையும் வீணாக்குகின்றது" என்று அவர் குறிப்பிட்டார். |