World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: Sarkozy names Socialist Party's Strauss-Kahn to head IMF பிரான்ஸ்: சோசலிஸ்ட் கட்சியின் ஸ்ட்ரவுஸ்-கானை சர்வதேச நாணய நிதிய தலைமைப் பதவிக்கு சார்க்கோசி பெயரிடுகிறார் By Alex Lantier அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பழமைவாத பிரெஞ்சு ஜனாதிபதியான நிக்கோலா சார்க்கோசி சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவருக்கான வேட்பாளராக சோசலிஸ்ட் கட்சியின் டொமினிக் ஸ்ட்ரவுஸ் கானை குறிப்பிட்டு அதற்கான ஐரோப்பிய ஆதரவையும் பெற்றுள்ளார். தன்னுடைய அரசாங்கத்திற்கு "இடது" அரசியல்வாதிகளை நியமிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இது சமீபத்தியதாகும்; மற்றும் பிரான்சின் அதிகாரத்தை பல சர்வதேச பொருளாதார அமைப்புக்களிலும் பெருக்குவதை இலக்காகவும் கொண்டுள்ளது. பெருமந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நட்பு முதலாளித்துவ சக்திகளால் 1944 பிரெட்டன் உட்ஸ் மாநாட்டில், உலக வங்கியுடன் சர்வதேச நாணய நிதியமும் நிறுவப்பட்டது. இன்று இது உலக நாணய புழக்கங்களை கண்காணிப்பதுடன், கடன் உதவி நிவாரணத்திற்காக ஏழை நாடுகளின் பொதுச் சேவைகளை வெட்டவும், அரசு செலவினங்களை குறைக்கவும் கட்டாயப்படுத்துகிறது. மரபார்ந்த வகையில், ஐரோப்பியர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரை நியமிப்பர்; வாஷிங்டன் உலக வங்கியின் தலைவரை நியமிக்கும். பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சியின் (PS) முக்கிய உறுப்பினரான ஸ்ட்ரவுஸ்-கான் மாசற்ற பெருநிறுவனச் சான்றுகளை கொண்டுள்ளவர். ஒரு பொருளாதார வல்லுனரான இவர், 1991-93ல் தொழிற்துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தக மந்திரியாக இருந்தார்; பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் கார் உற்பத்தியாளர் Renault, மற்றும் வங்கியாளரான Vincent Bollore க்கு ஆதரவு திரட்டுபவராகவும் இருந்தார். 1997ல் இருந்து சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரியான லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தில் நிதி மந்திரியாக இருந்தார்; France Télécom, Crédit Lyonnais வங்கி, பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி நிறுவனம் Thomson-CSF, Air France இன்னும் பலவற்றை தயனியார் மயமாக்கினார். யூரோ அறிமுகப்படுத்தப்படுவதில் அவர் பெரும் பங்கை கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. ஓர் ஊழல் அவதூறை அடுத்து 1999ல் அவர் இராஜிநாமா செய்தார்; அதன் பின்னர் சோசலிச கட்சியில் முக்கிய தலைவராக தொடர்ந்து செயலாற்றினார், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கினார். சார்க்கோசியின் திட்டத்தை ஏற்கையில், ஸ்ட்ரவுஸ்-கான், சார்க்கோசி அரசாங்கத்தில் பதவிகளை பெறத் தயாராகும் அல்லது ஏற்கனவே பதவிகளை பெற்றுவிட்ட நிறைய சோசலிஸ்ட் கட்சி அரசியல் வாதிகளின் பட்டியலில் இடம்பெறுகிறார். முன்னாள் கலாச்சார மந்திரி Jack Lang, "நிறுவனங்கள் சார்ந்த சீர்திருத்தக் குழுவில்" சேருமாறு சார்க்கோசி விடுத்த அழைப்பை ஏற்றால் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று சோசலிஸ்ட் கட்சி தலைமையிடத்தால் கூறப்பட்டபோது, கட்சியின் "அற்பத்தனமான கட்டுப்பாட்டை" கண்டித்தார். சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் வெளியுறவு மந்திரியான Hubert Védrine இப்பொழுது சார்க்கோசியினால் திட்டமிடப்பட்டுள்ள பூகோளமயமாக்கலின் விளைவுகள் பற்றி ஆராயும் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். சார்க்கோசியின் மந்திரிசபையில் முதலில் பதவி ஏற்ற சமூக ஜனநாயக அரசியல்வாதிகளின் குழுவினரைவிட தற்போது புதிதாக சோசலிஸ்ட் கட்சியில் இருந்து மாறியுள்ளவர்களும் அவர்களை சேர்ந்தவர்களும் பொதுவாக சோசலிஸ்ட் கட்சி எந்திரத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களாவர். இவர்களில் முக்கியமாக முன்னாள் "மனிதாபிமானி" பேர்னார்ட் குஷ்நெரும் அடங்குவார்; இவர் இப்பொழுது சார்க்கோசியின் வெளியுறவு மந்திரியாக உள்ளார்; அதேபோல் முன்னாள் பெண்ணிலைவாதி படேலா அமராவும் உள்ளார்; இவர் இப்பொழுது நகர்ப்புற கொள்கைக்கான அரசாங்கத்தின் புதிய செயலாளராக உள்ளார். சோசலிஸ்ட் கட்சியின் அரசியல்வாதிகள் ஒரு மோசமான வலதுசாரி நிர்வாகத்தில் பெரும் அவசரத்துடன், இடறிவிழுந்து கொண்டு சேர்வது பற்றி அதிகமே கூறமுடியும்; (நவ-பாசிச தேசிய முன்னணித் தலைவரான ஜோன் மரி லூ பென் ஐ ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கு அழைத்த முதல் பிரெஞ்சு ஜனாதிபதி என்ற ஐயத்திற்குரிய பெருமையை சார்க்கோசி சமீபத்தில் பெற்றார்.) மேம்போக்காக பார்த்தால், இது சோசலிஸ்ட் கட்சியின் "சோசலிஸ்ட்டுக்களுக்கும்" சார்க்கோசி சக்திகளுக்கும் இடையே கணிசமான கருத்துவேறுபாடுகள் இல்லை என்பதற்கு உறுதியான சாட்சியத்தை வழங்கும். சோசலிஸ்ட் கட்சியின் தலைமையும் தீவிர வலதும் ஒன்றாக எளிதில் செயல்படும்; அவை தந்திரோபாய வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளன. இப்பின்னணியில் உண்மையில் பிரான்சின் முழு "அதி இடதும்" இவ்வாண்டில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரின என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும். மைய-இடது பிரெஞ்சு செய்தி ஊடகம், தன்னுடைய நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளை அக்கட்சியின் தலைவர்களுக்கு கொடுப்பதன் மூலம், அவ்வமைப்பை தனக்கு கீழ் இருத்தி, சோசலிஸ்ட் கட்சியை "மூச்சுத் திணறடிக்க" தான் முயல்வதாக சார்க்கோசி கூறிய கருத்தை மேற்கோளிட பெரும் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளது. இது ஐயத்திற்கு இடமின்றி அத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் வெறும் குறுகிய கால அரசியல் அல்லது தேர்தல் கருதிப்பார்த்தல்களைவிடக் கூடுதலான விஷயங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. சார்க்கோசியின் நடவடிக்கையில் உள்ள தர்க்கம் --சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் இவர் கொடுத்துள்ள பணிகளை ஏற்பதும்கூட-- அவருடைய ஜனாதிபதி பதவியின் அடிப்படை வேகமாய் உட்செல்லலை கவனித்தால் ஓரளவு தெளிவாகும். தன்னுடைய பிரச்சாரத்தின்போது சார்க்கோசி பறைசாற்றியதுபோல், அவருடைய இலக்கு தற்போதைய பிரான்சின் சமூக அமைப்புக்களுடன் ஒரு "உடைவை" ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்; அதாவது, "நலன்புரி அரசு மனோபாவத்துடன்" கணக்குகளை முற்றிலும் முறித்துக் கொள்ள வேண்டும், அதற்கு அப்பால் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் வாழ்க்கைத்தரங்களுடனும் கணக்கை தீர்க்க வேண்டும் என்பதாகும். தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் முன்மொழிந்து ஆனால் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் மகத்தான எதிர்ப்பினால் முழுமையாக செயல்படுத்த முடியாமல் போன "சீர்திருத்தங்களை" (1995ல் அலன் யூப்பேயின் சமூக சீர்திருத்த திட்டங்கள், 2003ல் Jean-Pierre Raffarin இன் ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2005ல் டொமினிக் டு வில்ப்பனுடைய முதல் வேலை ஒப்பந்தத்திற்கு எதிரானவை) செயல்படுத்த இவர் இலக்கு கொண்டுள்ளார். IMF பதவிக்கு ஸ்ட்ரவுஸ்-கானை ஏன் நியமித்தார் என்று கேட்கப்பட்டதற்கு, சார்க்கோசியே சற்று வெளிப்படையாக காட்டும் கருத்தைக் கூறினார்; அது வலதுசாரி வேட்பாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. "ஸ்ட்ரவுஸ்-கானும் நானும் IMF பற்றி ஒரே மாதிரியான கருத்தைத்தான் கொண்டிருக்கிறோம். அவர் ஒரு சோசலிஸ்ட் என்பதால் பிரான்சிற்கான அவருடைய வேட்பாளர் நிலையை நான் பறித்து விடலாமா? அப்படி நினைத்தால், நான் அனைத்து பிரெஞ்சு மக்களுக்கும் ஜனாதிபதி என்று எப்படிக் கூறிக் கொள்ள முடியும்?"சுருங்கக் கூறின், தேசிய ஐக்கியம் என்னும் போலித்தனமான தோற்றத்தை காட்டுவதற்கு சார்க்கோசிக்கு சோசலிஸ்ட் கட்சியினர் தேவைப்படுகின்றனர்; அதே நேரத்தில் பிரெஞ்சு முதலாளித்துவத்தை செல்வம் கொழிக்க வைக்கவும், பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு ஏழ்மையை கொடுக்கவும் வெட்டுத் திட்டங்களை கொண்டுவந்து "உடைவுக்கும்" தயாரித்து வருவதுடன், உலகம் முழுவதும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னேற்றவும் விரும்புகிறார். இந்த "இடது" முகத்தை அளிப்பதற்கு சோசலிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு களிப்புத்தான்; ஏனெனில் உண்மையில் அவர்கள் அவருடைய திட்டத்தின் சாராம்சத்துடன் உடன்பட்டுள்ளனர். தற்போதைக்கேனும், சார்க்கோசியின் ஆக்கிரோஷத்தன்மை மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஆளும் உயரடுக்குகளை ஐயத்திற்கு இடமின்றி பாராட்ட வைக்கிறது; அவையும் இதே போல் சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களை செயல்படுத்த தீவிரமாக உள்ளன. ஐரோப்பிய நிதியமைச்சர்களின் யூரோ குழு கூட்டத்திற்கு தன்னைத்தானே அழைத்துக் கொண்ட சார்க்கோசி, IMF பதவிக்கு ஸ்ட்ரவுஸ்-கானின் வேட்பாளர் நிலைமைக்கு அவர்களுடைய ஆதரவை எளிதில் பெற்றார். ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட ஐரோப்பிய உடன்பாட்டை மீறி, பிரெஞ்சு பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டி, பிரான்சின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நீக்கும் இலக்கு கொண்ட தேதியை 2010ல் இருந்து 2012க்கு ஒத்திப்போடும் உடன்பாட்டிலும் அவர்களுடைய சம்மதத்தை சார்க்கோசி பெற்றார். ஒரு வலுவான பொருளாதாரத்தில் ஒப்புமையில் உயர் வேலைவாய்ப்பு என்பது சமூகச் செலவின வெட்டுக்களின் பாதிப்பை தற்காலிகமாக மறைக்கும் என்பதால் அத்தகைய கொள்கை சீர்திருத்தங்களை நிறைவேற்ற தனக்கு உதவும் என்று சார்க்கோசி ஐயத்திற்கு இடமில்லாமல் நம்புகிறார். மற்ற நிதி மந்திரிகள் இயன்றளவு இதை நல்ல முறையில் எடுத்துக் கொண்டனர்; சமூகச் செலவினங்களில் சார்க்கோசி நல்ல வெட்டுக்களை செயல்படுத்தும் வகையில் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக இருக்காது என்பது அவர்களுடைய நினைப்பு. "பிரான்ஸ் ஒரு ஆழ்ந்த சீர்திருத்த கட்டத்தில் நுழைவது பற்றி பெரும் மகிழ்ச்சி அடைவதாக" லுக்சம்பேர்க்கின் Jean-Claude Juncker கூறினார்; மேலும் "பட்ஜெட் ஒருங்கிணைப்பு தத்துவத்தில் ஆழ்ந்து நிலைத்திருக்கப் போவதாக" சார்க்கோசி உறுதி கூறியுள்ளார் என்றும் அவர் கூறினார். டச்சு நிதி மந்திரி Wouter Bos: "என்னுடைய நல்லெண்ணம் மிகப் பெரிது. என்னை இன்னும் நம்ப வைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறினார். ஆனால் முதலாளித்துவ வட்டங்களில் சார்க்கோசி கொண்டுள்ள செல்வாக்கு ஒன்றும் வரம்பற்றது அல்ல; ஆயினும் உறுதியான வரம்புகளுக்கு எதிராக அது வருகிறது. யூரோ குழுவில் அவர் கொடுத்த மற்ற முன்மொழிவு, நிதி மந்திரிகளுக்கு ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகித நிர்ணயிப்பில் கூடுதலான அதிகாரம், ஐரோப்பிய பணக்கொள்கையின் அரசியல் திசைகாட்டலுக்குகாக ஆனுமதிப்பது என்பது கணிசமான எதிர்ப்பை எதிர்கொண்டது. ஓரளவுக்கு குறைந்த வட்டிவிகிதங்கள் பெறுவது ஐரோப்பிய பொருளாரதாரத்திற்கு ஏற்றம் கொடுக்கும் மற்றும் யூரோவின் மதிப்பை குறைப்பதன் மூலம் ஐரோப்பாவின் ஏற்றுமதிகள் அதிகரிக்கும் என்று சார்க்கோசி ஐயத்திற்கு இடமின்றிக் கருதினார். ஆனால் அந்த நடவடிக்கை பரந்த பொருளாதார, புவி அரசியல் உட்குறிப்புக்களை கொண்டுள்ளன; பொருளாதார வல்லுனர் Jean Pisani-Ferry ஜூலை 9 Le Monde தலையங்கத்தில் விளக்கிக் கூறியதாவது: "ஒரு வெளி அடையாளத்தை பெறுவது மற்றும் அதையொட்டி ஐரோப்பிய பகுதி சர்வதேச பணத் தொகுப்பு, நிதியக் கட்டுப்பாடுகளில் ஒரு பாத்திரத்தை ஆற்ற அனுமதிக்கப்படுவது என்பது இலக்கு ஆகும். பிரெஞ்சு முன்முயற்சிகளில் இருந்து தொடங்கும் இந்த விருப்பம், சர்வதேச சக்தி உறவுகளில் விரைவான மாறுதல்களின் பின்னணியால் கவரப்படுகிறது. யூரோமண்டல நாடுகள் ... நிதிப் பேச்சு வார்த்தைகளில் அதிகமும் செல்வாக்கை கொண்டிருக்கவில்லை. சீனாவுடனான மாற்றுவிகிதம் பற்றிய விவாதம் இதைக் காட்டுகிறது: இவ்விஷயம் அமெரிக்காவை போன்றே, ஐரோப்பாவிற்கு முக்கியமானது என்றாலும், விவாதம் அடிப்படையில் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையேதான் நடைபெறுகிறது." சார்க்கோசியின் முன்மொழிவு சக்திவாய்ந்த ஐரோப்பிய முதலாளித்துவ பிரிவுகளுடன் அவரை மோதலுக்கு இட்டுச் செல்லுகிறது. அவர்கள் இதன் உள் பொருளாதார விளைவுகள் பற்றியும், சர்வதேச வணிகம் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகளில், உறுதியை சீர்குலைக்கும் உள்ளார்ந்த திறன் பற்றியும் கவலைப்படுகின்றனர். அட்லாண்டிக்கின் இருபுறமும் பரந்த அளவில் மேற்கோளிடப்படும் சார்க்கோசியின் "அமெரிக்க ஆதரவு" நிலைப்பாடு, ஐரோப்பிய ஒன்றியம் வாஷிங்டனிடம் இருந்து தனித்து, அதற்கு எதிர்ப்புத் திறன் இருக்கக்கூடியதாக வகைசெய்ய இவர் இங்கு முன்மொழிகின்றார் என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. மாநாடு முடிந்தவுடன், ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் பணவீக்கத்தின் ஆபத்துக்களை மேற்கோளிட்டு, "இக்காரணத்தினால், ஜேர்மனி தன்னுடைய நிலைப்பாட்டில் [அதாவது ECB பற்றிய சார்க்கோசியின் திட்டத்திற்கு எதிர்ப்பில்] இருந்து மாற்றிக் கொள்ள முடியாது என்று முடிவாகக் கூறினார். சர்வதேச அரங்கில் பிரான்சை ஒரு பெரும் சக்தி என்று காட்ட முற்படும் சார்க்கோசியின் முயற்சிகளில் உண்மையில் ஒரு நயமற்ற இறுமாப்பு உள்ளது; அதேபோல்தான் சமூகச் செலவினங்களில் ஆழ்ந்த குறைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டே, அதே நேரத்தில் போர்க்குணமும் சோசலிச மரபுகளும் கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்துடன் சமரசம் காண வேண்டும் என்னும் அவருடைய முயற்சியிலும் ஒரு நயமற்ற இறுமாப்பு உள்ளது. அனைத்துவித பிரமைகளுக்கும் ஊக்கம் கொடுக்கும் அதன் சக்தி எதுவாயினும், தேர்தல் நேரத்தில் சார்க்கோசியை சுற்றியிருந்த செய்தி ஊடகத்தின் பரபரப்பு உலகையோ அல்லது பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் உள் தன்மையையோ புறநிலையாக மாற்றவில்லை. வட ஆபிரிக்காவிற்கு சமீபத்தில் சார்க்கோசி சென்றிருந்ததும், "மத்தியதரை ஒன்றியம்" நிறுவுவதற்கான அவருடைய திட்டமும் இந்த வரம்புகள் சிலவற்றை காட்டின. ஜூலை 10-11ம் தேதிகளில் சார்க்கோசி குறுகிய நேரம் அல்ஜீரியா மற்றும் துனிசியாவில் இறங்கி "மத்தியதரை ஒன்றியம்" பற்றிய திட்டங்களை விவாதித்தார்; இதில் பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், அல்ஜீரியா, துனிசியா மற்றும் மொரோக்கோ ஆகியவை அடங்குவதுடன் இதல் மத்தியதிரைக்கடல் கடலோரப் பகுதிகளில் இருக்கும் மற்ற நாடுகளும் எதிர்காலத்தில் சேரும். சார்க்கோசியின் பயணத்தின்போது உண்மையில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் வாடிக்கையான ஏகாதிபத்திய தூதரக குப்பையே ஆகும்: அதாவது அல்ஜீரிய சக்தி நிறுவனம் Sonatrach மற்றும் நிணீக்ஷ்-பீமீ-திக்ஷீணீஸீநீமீக் க்கும் இடையேயான ஒத்துழைப்பு (அல்ஜீரியாவில் அமெரிக்க எண்ணெய், எரிவாயுத் தொடர்பினால் அங்கு அமெரிக்க முதலீட்டைவிட பிரெஞ்சு முதலீடு பெரிதும் குறைந்துள்ளது); பிரெஞ்சு அணுசக்தி கருவிகள் விற்பனை, பாரிஸ், அல்ஜீரியா மற்றும் துனீஸிற்கு இடையே "இராணுவத்திற்கு இராணுவம்" தொடர்பு உடன்பாடுகள் ஆகியனவாகும். வட ஆபிரிக்கர்களுக்கு பிரான்சில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்கு விசா வழங்குவது பற்றிய பிரச்சினையில், சார்க்கோசி அது ஐரோப்பிய அளவில்தான் விவாதிக்கப்பட முடியும் என்று கூறிவிட்டார். தன்னுடைய மத்தியதரை ஒன்றிய கருத்து பற்றி சார்க்கோசி அதன் திறனை மகத்தானதாக உயர்த்திக் காட்டிய அளவில் கொடுத்தார்; ஆனால் இது ஒரு தகரக் காதைத்தான் சென்று அடைந்தது. இவருடைய ஆலோசகர்களில் ஒருவர் "மக்களை ஒன்று திரட்டும் கற்பனையுலகு" (!) எனக் கூறிய இவருடைய பயனற்ற திட்டங்கள் -- அடிப்படையில் இருந்த இனவெறிப் பார்வையையோ, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பற்றிய தீவிர வெட்கங்கெட்ட ஆதரவையோ மறைக்கவில்லை. பிரான்சின் முன்னாள் காலனியான அல்ஜீரியாவுடன் கொண்ட உறவுகளை அவர் "ஒரு காதல் கதை" என்று அழைத்தார்; அல்ஜீரிய சுதந்திரத்திற்கு எதிரான பிரான்சின் மிருகத்தனமான போருக்கு அவர் மன்னிப்புக் கோரலாம் என்ற கருத்தை ஏளனம் செய்தார்; "நடந்ததற்கு வருத்தப்படுதல் என்ற கருத்தே" ஒரு "மத கருத்து" என்று கூறிய சார்க்கோசி "அரசுகளுக்கு இடையேயான உறவுகளில் இதற்கு இடமில்லை" என்றார். |