World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government cracks down on protesting farmers

இலங்கை அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கின்றது

On-the-spot report by Nihal Fernando and W.A. Sunil
28 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் வட மேல் மாகாணத்தில் நீர் வழங்கல் திட்டம் ஒன்றுக்கு வசதி ஏற்படுத்துவதற்காக தாம் பலாத்காரமாக வெளியேற்றப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்ததை அடுத்து, அவர்களில் பெருந்தொகையானவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜூன் 11 அன்று வாரியபொலைக்கு அருகில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த ஆத்திரமடைந்த விவசாயிகள், நீர்ப்பாசன, துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் இராஜபக்ஷவுடன் மோதிக்கொண்டதை அடுத்தே பொலிசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரான இந்த அமைச்சர், திட்டத்தை மேற்பார்வை செய்ய அந்தப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தார். இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் ஒரு பாகமாக, அரசாங்கம் மாகாணத்தின் ஊடாக செல்லும் பிரதான ஆறான தெதுரு ஓயாவிற்கு குறுக்காக ஒரு அணையை நிர்மானித்துக்கொண்டிருக்கின்றது. இதனால், வேரஹேரயாகம, கோனகம மற்றும் பொடுவெவ உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உடனடியாக தமது வீடுகளை இழக்கவுள்ளதோடு தற்போது அவர்கள் இடம்மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் உள்ள வசதி குறைபாடுகள் பற்றி ஆத்திரமடைந்துள்ளனர்.

சுமார் 2,000 விவசாயிகளும், அவர்களது மனைவிமாரும் மற்றும் பிள்ளைகளும் வேரஹேரயாகமவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். சுமார் நண்பகல் அளவில் சுய தொழில் அமைச்சர் சரத் நாவின்ன மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் டி.பி. ஏகநாயக்கவுடன் இராஜபக்ஷ அங்கு வந்த போது, அவர்களை எதிர்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கள் வெளியேற்றப்படுவது தொடர்பாக நிச்சயமான உத்தரவாதம் கொடுக்குமாறு கோரினர். எதையும் கொடுக்க முடியாத இராஜபக்ஷ, "நீங்கள் சொல்வதை எங்களால் செய்ய முடியாது. எங்களால் உங்களுக்கு மாளிகைகள் கட்டிக்கொடுக்க முடியாது. என்ன எதிர்ப்பு வந்தாலும் நாங்கள் இந்தத் திட்டத்தை தொடருவோம்," என இறுமாப்புடன் தெரிவித்தார்.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் இதனை எதிர்த்து வாதாடினார்: "நீங்கள் உங்களுடைய மாளிகைகளில் வசதியை அனுபவிக்கின்றீர்கள் நாங்கள் இங்கு துன்பப்படுகின்றோம். எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்." இராஜபக்ஷ அந்த இடத்தை விட்டு நகர முயன்ற போது அவரது வாகனத்தை சூழ்ந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துமூலம் வாக்குறுதியளிக்குமாறு கோரினர். பொலிசாரும் அமைச்சுப் பாதுகாவலர்களும் ஒன்றுசேர்ந்து அமைச்சர்களை உடனடியாக அங்கிருந்து நகர்த்தினர்.

"அமைச்சர் வருகின்றார் என நாங்கள் கேள்விபட்ட உடன், நியாயமான தீர்வை எதிர்பார்த்து எங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறச் சென்றோம். ஏனெனில் நீர்பாசனத் திட்ட ஆணையாளர் எங்களை ஏமாற்றிவிட்டார். (நவம்பர் 2005) ஜனாதிபதித் தேர்தலில் இந்தப் பிரதேசத்தில் உள்ள 90 வீதமான மக்கள் ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கே வாக்களித்தனர்," என ஒரு விவசாயி உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார்.

தெதுரு ஓய திட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அமைப்பின் தலைவர் எஸ்.பி. லூயிஸ் சிங்ஹோ, விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னால் "கண்ணுக்குத் தெரியாத அரசியல் தலையீடு" உள்ளது என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டை நிராகரித்தார். "எங்களை ஊக்கமிழக்கச் செய்து எங்களது இயக்கத்தை குழப்புவதே அவர்களது தேவை" என அவர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். அனைத்து பிரதானக் கட்சிகளையும் விமர்சித்த அவர் மேலும் தெரிவித்ததாவது: "இந்த அரசியல்வாதிகள் திருடர்கள். யுத்தம் மீண்டும் தொடங்கியதில் இருத்து மக்கள் இடம்பெயர்கின்றார்கள் மற்றும் உயிரிழக்கின்றார்கள் (வடக்கிலும் கிழக்கிலும்). இங்கு நாங்களும் இடம்பெயர்ந்துள்ளோம். எங்களது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

இந்த சம்பவத்தின் பின்னர், அமைச்சரின் ஊடகப் பிரிவினரால் எடுக்கப்பட்ட வீடியோ படங்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் பொலிசார் விவசாயிகளை கைதுசெய்யத் தொடங்கினர். இரண்டு நாட்களுக்குள் இருபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, அமைச்சரின் கூட்டத்தை குழப்பியமை, அரசுக்கு சொந்தமான வாகனங்களை சேதப்படுத்தியமை மற்றும் இரு பொலிசாரை காயப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

ஜூன் 19, கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு தமது ஆதரவை காட்ட ஆயிரக்கணக்கானவர்கள் நீதிமன்றுக்கு வெளியில் கூடினர். அந்த கிராமத்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் பொலிஸ் அடக்குமுறைக்கு முடிவு வேண்டும் என்றும் கோரினர். ஆயுதம் தரித்த பொலிசார் சட்டத்தரணிகளைத் தவிர வேறு யாரையும் நீதிமன்றுக்குள் நுழைய விடவில்லை. கூட்டத்தினருடன் கலந்து சாதாரண உடையில் நின்றிருந்த பொலிசாரால் மேலும் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ஜூலை 3 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தேசிக்கப்பட்டுள்ள தெதுரு ஓய நீர்பாசனத் திட்டத்தின் கீழ், வாரியபொல, யாப்பஹுவ, ஹிரியால மற்றும் குருணாகல் தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட உள்ளன. மார்ச் மாதம் தொடங்கிய இந்தத் திட்டத்தில், 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நீர் வழிந்தோடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொருத்தமான நிலம், நட்ட ஈடு, தண்ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்த போதும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை.

மார்ச் மாதம் நடந்த முதலாவது இடமாற்றத்தில், புத்தளத்தில் கருவலகஸ்வெவவில் இருந்து நெலும்கமவுக்கு 72 குடும்பங்கள் இடம்மாற்றப்பட்டுள்ளன. இங்குள்ள வசதிப் பற்றாக்குறையான நிலைமை பற்றி உடனடியாக ஏனைய விவசாயிகளுக்கும் தெரியவந்தது. யானைகள், காட்டுப் பன்றிகள் மற்றும் கரடி உட்பட காட்டு மிருகங்களுக்கு பயந்து பல பெண்களும் பிள்ளைகளும் புதிய பிரதேசத்திற்கு இடம்மாறவில்லை.

இடம்மாற்றப்பட்ட விவசாயி ஒருவரின் மனைவியான இ.எம். கருணாவதி உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், "அவர்கள் எங்களுக்கு ஒரு ஏக்கர் உயர் நிலத்தையும் ஒரு ஏக்கர் ஈர நிலத்தையும் தந்தனர். எங்களுக்கு தற்காலிக குடிசை ஒன்றை கட்டிக்கொள்ள 16,000 ரூபாய்கள் (150 அமெரிக்க டொலர்கள்) மட்டுமே கொடுக்கப்பட்டது. மக்களால் மண்சுவர் வைத்து தென்னை ஓலையில் கூரை அமைத்துக்கொள்ள நேர்ந்தது. அவர்கள் நிலத்தை துப்புறவு செய்ய மட்டுமே உதவி செய்தனர். நிலத்தை விவசாயத்திற்காக தயார்படுத்த செய்யவேண்டிய அனைத்து செலவுகளையும் நாங்களே செய்ய வேண்டும். வாக்குறுதியளிக்கப்பட்டது போல் விவசாய உபகரணங்களோ அல்லது விதைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இன்னமும் எங்களது நிலங்களுக்கான நட்ட ஈடு வழங்கப்படவில்லை. அதை அவர்கள் எப்போது கொடுப்பார்கள் என்பது நிச்சயமில்லை.

"தற்போது எங்களுக்கு 6,000 ரூபா மாதக் கொடுப்பனவு கிடைக்கின்றது. இதை அவர்கள் 18 மாதங்களுக்கு தொடர்ந்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். நடப்பதைப் பொறுத்தளவில் அதை நம்ப முடியாது. எங்களுக்கு குடிக்கவும் கழுவவும் போதுமானளவு தண்ணீர் கிடையாது. கருவலகஸ்வெவவில் இருந்து அருகில் உள்ள நகரான ஆனமடுவைக்கு 20 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இங்கு பொது போக்குவரத்து சேவை இல்லாததால் முச்சக்கர வண்டிகளுக்கு செலவிட வேண்டும். ஆஸ்பத்திரியும் ஆனமடுவையிலேயே உள்ளது. இங்கு இரண்டு சிறிய பாடசாலைகள் உள்ளன. அதற்கும் பிள்ளைகள் 3 முதல் 4 கிலோமீட்டர்கள் வரை நடக்க வேண்டும்," என கூறினார்.

விவசாயியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான எச்.எம். தர்மசேன, 51, தாம் இடம் மாற்றப்பட்டதையிட்டு கசப்படைந்துள்ளார். போடுவெவ கிராமத்தில் அவருக்கு நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவரது குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்காக அவருக்கு பல வருடங்கள் கடந்தன. அவர் இடம்மாற்றப்படப் போவது எந்தவகையான நிலமாக இருக்கும் என்பது பற்றி அவருக்கு தெரியாது. "நிச்சயமின்மை மற்றும் சிரமங்களின் காரணத்தால் நெலும்கமவுக்கு அனுப்பப்பட்ட பலர் மீண்டும் திரும்பியுள்ளனர்," என அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தர்மசேன விளக்கினார். "எல்லாப் பொருட்களினதும் விலைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருக்கும் போது போதுமான வருமானம் இன்றி மக்களால் எப்படி வாழ முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிர்செய்ய குறைந்தபட்சம் 20,000 ரூபாய்கள் தேவை. எங்களுக்கு பாசன முறை தண்ணீர் கிடையாது. மழைவீழ்ச்சி இல்லாவிட்டால் தெதுறு ஓயவில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும். உரம் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் செலவிட வேண்டும். அறுவடை போதாவிட்டால் எங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்காது.

"அவர்கள் எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி அடிப்படை வசதிகளற்ற இடத்தில் குடியமர்த்தினால் அது சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுவதாகும். அரசாங்கம் முடிவற்ற யுத்தமொன்றை நடத்திக்கொண்டிருப்பதோடு அதன் சுமைகளை எங்கள் மீது சுமத்துகின்றது. ஆளும் வர்க்கம் வடக்கு கிழக்கில் (யுத்தப் பிராந்தியம்) உள்ள மக்களை நடத்துவது போன்றே இங்கு விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நடத்துகின்றது.

"ஒவ்வொரு அரசாங்கமும் வாக்குறுதிகளை வழங்குகின்றன. ஆனால் அவைகள் மக்களைப் புறக்கனிக்கின்றன. (எதிர்க் கட்சி) ஐ.தே.க. வும் (ஆளும்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எங்களை ஏமாற்றியதை அடுத்து, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அதன் பெயரைப் போல் மக்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தோம். அவர்கள் (முன்னைய) அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது கிராமத்தில் உள்ள தண்ணீர் அணைக்கட்டுகளை புணரமைப்பதாகத் தெரிவித்த போதிலும், இந்தப் பகுதிக்கே அவர்கள் வரவில்லை."

உள்ளூர் விவசாயிகள் நிலைமையை சீர்படுத்தும் நோக்கில் குருணாகலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு சென்று முறையிட்ட போதும், அது பயனளிக்கவில்லை என தர்மசேன விளக்கினார். "அங்கிருந்த அதிகாரிகள் எங்களது முறைப்பாட்டைப் பற்றி விசாரிக்காமலேயே நாங்கள் பொய்சொல்வதாக எங்கள் மீது குற்றஞ்சாட்டினர். இத்தகைய அரசியல் கட்சிகள் மற்றும் இந்த அமைப்புமுறை தொடர்பாக நான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளேன்," என அவர் தெரிவித்தார்.

மீண்டும் குடியமர்த்தப்படும் மூன்று கிராமங்களிலும் வசதி பற்றாக்குறையும் வறுமையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. முழு பிரதேசத்திற்கும் ஆரம்பநிலை பாடசாலைகள் இரண்டும் இரண்டாம் நிலை பாடசாலை ஒன்றும் மட்டுமே உள்ளன. அவற்றுக்கு மாணவர்கள் நடந்து செல்ல வேண்டும் அல்லது நீண்டதூரம் பயணிக்க வேண்டும். பேரூந்து சேவை அடிக்கடி இல்லை. வாரியபொலையில் ஒரு ஆஸ்பத்திரி இருந்த போதிலும் கடுமையான சுகயீனத்திற்கு 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருணாகலைக்கே பயணிக்க வேண்டும்.

வேரஹேரயாகம 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட குடியிருப்பாகும். ஆனால் அந்தக் கிராமத்திற்கு இன்னமும் மின்சாரம் கிடையாது. பெரும்பாலான வீடுகள் வரிச்சல் மிலாருகளால் பின்னப்பட்டு களிமண்ணால் பூசப்பட்டவையாகும். தண்ணீர் கிணற்றில் இருந்து இழுக்க வேண்டும். பிரதேசம் பூராவும் வேலையின்மை உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. இளம் யுவதிகள் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் தேடிச் செல்லத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் மத்திய கிழக்கில் அடிமைப் பாங்கான நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர். வேறு மாற்றீடுகள் இல்லாததால் இளைஞர்கள் அடிக்கடி இராணுவத்தில் இணைந்துகொள்கின்றனர். ஏனையோர் உள்ளூர் செங்கல் தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்கின்றனர்.

பல தசாப்தங்களாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அலட்சியத்தினதும் மற்றும் விவசாயத்திற்கான மாணியங்களை வெட்டித் தள்ளிய சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சி நிரல் அமுல்படுத்தப்பட்டமையினதும் உற்பத்தியே இன்று இந்தக் கிராமங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையாகும். எவ்வாறெனினும், இராஜபக்ஷ அரசாங்கம் தீவின் உள்நாட்டு யுத்தத்தை உக்கிரப்படுத்துகின்ற நிலையில், அது யுத்தத்தின் சுமைகளை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தோள்களில் ஏற்றுகின்றது. கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவை மற்றும் தெதுறு ஓய நீர்பாசனத் திட்டம் போன்றவற்றுக்கான நிதி வெட்டிக் குறைக்கப்பட்டு அவை யுத்த செலவுகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

எதிர்ப்புக் காட்டும் விவசாயிகள் மீதான அமைச்சர் சமல் இராஜபக்ஷவின் இறுமாப்பான வெறுப்புணர்ச்சியானது, எந்தவொரு விவகாரம் தொடர்பாகவும் எழும் எதிர்ப்பிற்கு அரசாங்கம் பதிலளிக்க உள்ள முறையின் அறிகுறியாகும். யுத்தம், தொழிலாளர்களின் சம்பளம் அல்லது விவசாயிகள் முகங்கொடுக்கும் நிலைமைகளாகட்டும், அரசாங்கம் அதை விமர்சிப்பவர்களை துரோகிகள் அல்லது வேறு ஒருவரின் சார்பில் செயற்படுபவர்கள் என கண்டனம் செய்த வண்ணமே பதிலளிக்கின்றது. ஆகவே, அரசாங்கம் எதிர்ப்பை அடக்குவதில் தோல்விகாணும் போது, அது ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் மற்றும் பொலிஸ் அரச அடக்குமுறைகளை நாடவும் ஒருபோதும் தயங்கப் போவதில்லை.