World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Young Sri Lankan maid faces execution in Saudi Arabia

இளம் இலங்கை பணிப்பெண் சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்கொள்கின்றார்

By Vilani Peiris
13 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 16 சவுதி அரேபியாவின் தவாதாமி மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவால் 19 வயதுடைய இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நஃபீக்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நஃபீக்கின் வழக்கானது மத்திய கிழக்கில் உள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் காட்டுமிராண்டித்தனமான நிலைமைகளுக்கும் மற்றும் அவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சுரணையற்ற அலட்சியப் போக்குக்கும் இன்னுமொரு உதாரணமாகும்.

நஃபீக்கின் பொறுப்பில் விடப்பட்டிருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவர் 2005 மே மாதம் ரியாத்திற்கு வந்தார். நயிஃப் ஜிஸியன் கால்ஃப் அல் ஒடாய்பி என்ற தொழில் வழங்குபவரால் தவாதாமியில் உள்ள அவரது குடும்ப வீட்டுக்கு நஃபீக் அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பின்னர் நஃபீக்குக்கு பிள்ளையை பராமரிப்பதில் அனுபவம் அல்லது பயிற்சி இல்லாதிருந்தபோதிலும், அவருக்கு குழந்தையை பராமரிக்கும் வேலை வழங்கப்பட்டது.

மே 22, 2005 அன்று அவர் தனியே இருந்தவாறு குழந்தைக்கு போத்தலில் பால் ஊட்டிக்கொண்டிருந்தார். சுமார் பிற்பகல் 12.30 மணிக்கு அந்த ஆண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பீதியடைந்த நஃபீக் நெஞ்சு, கழுத்து மற்றும் முகத்திலும் தடவி தட்டிக்கொடுத்து குழந்தையை ஒருநிலைப்படுத்த முயற்சித்ததோடு உதவி கேட்டும் குரலெழுப்பினார். குழந்தையின் தாயார் வந்து சேர்ந்த போது குழந்தை சுயநினைவிழந்து இருந்தது அல்லது இறந்துவிட்டது. நடந்தது என்ன என்பதை கண்டுபிடிக்காமல் ஒடாய்பி குடும்பம், குழந்தையின் குரல்வளையை நெரித்ததாக குற்றஞ்சாட்டி நஃபீக்கை தாவாதாமி பொலிசில் ஒப்படைத்தது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் நடத்தப்படும் வழமையான முறையின்படி, சவுதி பொலிஸ் எஜமானின் பக்கம் நின்றதோடு என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு நஃபீக்குக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரைக்கூட வழங்கவில்லை. அவர் குரல்வளையை நெரித்துக் கொன்றதற்காக குற்றஞ்சாட்டப்பட்டதோடு ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றிலும் கைச்சாத்திட நெருக்கப்பட்டார். அவர் பொலிசாரின் வெளிப்படையான வலுக்கட்டாயத்தின் பேரில் நீதிமன்ற விசாரணைகளிலும் இதே ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினார்.

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் இருந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் மட்டுமே தனது உண்மையான கதையை விளக்க நஃபீக்கால் முடிந்தது. பெப்பிரவரி 3 நடந்த நீதிமன்ற விசாரணையின் போது, தனது வாக்குமூலத்தை மறுதலித்த அவர் தான் பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். பொலிஸ் அச்சுறுத்தல் பற்றிய குற்றச்சாட்டை நிராகரித்த தவாதாமி நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனக் கண்டு அவரைச் சிரச்சேதம் செய்யத் தீர்ப்பளித்தது.

மேன்முறையீடு செய்ய நஃபீக்குக்கு ஜூலை 16 வரை அவகாசம் இருந்த போதிலும் அவராலும் அவரது குடும்பத்தாலும் சட்ட நடவடிக்கைகளுக்கு செலவிட பணம் இருக்கவில்லை. ஒரு சவுதி சட்ட நிறுவனம் இந்த வழக்கைப் பொறுப்பேற்க 250,000 ரியால்களை (67,000 அமெரிக்க டொலர்கள்) கோருகின்றது. இது இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களுக்கு வானுயர்ந்த தொகையாகும். நஃபீக்கின் அப்பா இந்த சட்ட நடவடிக்கைக்கான செலவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்ட போதிலும் இது வரையும் அது மறுக்கப்பட்டு வந்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின் படி, "ரியாத்தில் உள்ள சட்ட நிறுவனத்தால் கோரப்பட்ட தொகையை குறைத்துக்கொள்வதற்காக" அங்குள்ள இலங்கை தூதரகம் சுறுசுறுப்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்பதாகும்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் துணை பொது முகாமையாளரான எல்.கே. ருஹுனுகே, நஃபீக்குக்கு எதிரான வழக்கு பலமாக இருப்பதால் இந்த வேண்டுகோள் தேவையற்றது என லக்பிம பத்திரிகைக்குத் தெரிவித்தார். பணியகத்துடன் உலக சோசலிச வலைத் தளம் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, ருஹுனுகே அங்கு இல்லாவிட்டாலும், தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள மறுத்த இன்னுமொரு அதிகாரியும் ருஹுனுகேயின் கூற்றை ஆதரித்தார். "சவுதி அரேபியாவில் உள்ள சட்ட நிறுவனம் நஃபீக்கை விடுதலை செய்ய முழுமையாக வாக்குறுதியளிக்காத காரணத்தால் அந்தளவு தொகையை செலவிடுவது பெறுமதியற்றதாக" உள்ளது என அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அரசாங்கம் நஃபீக்கை அவரது தலைவிதிப்படி கைவிட்டுவிட்டது. சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் இந்த வழக்கு பற்றி தாம் அறிந்திருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தவாதாமியில் உள்ள சவுதி அதிகாரிகளுடன் உரையாடியுள்ளதோடு நீதிமன்ற விசாரணைகளுக்கும் கூட சமூகமளித்துள்ளனர். ஆனால் அவருக்கு உதவி வழங்கவில்லை. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த பின்னர், ஜூலை 9 வெளியான டெயிலி நியூஸ் பத்திரிகை, அரசாங்கத்தால் மேன் முறையீடு செய்வதற்கான சட்ட ஆவனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது என்ற தூதரகத்தின் சாக்குப் போக்கை அறிவித்தது.

இங்கு யதார்த்தம் என்னவெனில், மத்திய கிழக்கிற்கு இலங்கையின் மலிவு உழைப்பை விற்கும் இலாபகரமான வர்த்தகத்தை குழப்பக்கூடிய எதையும் செய்வதற்கு கொழும்பு அரசாங்கம் விரும்புவதில்லை. பத்தாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் அங்கு கீழ்த்தரமாக சுரண்டப்படுவதை தடுக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமைக்கு, அது நஃபீக்கை பாதுகாக்க மறுக்கின்றமை சாதாரணமான ஒரு குறிப்பிடத்தக்க தெளிவான உதாரணமாகும்.

எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில், 24 மில்லியன் மொத்த ஜனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர்களாவர். அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆசியவில் இருந்து வந்து வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்பவர்களாவர். சவுதி சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஒரு சில உரிமைகள் உள்ளன. அவர்கள் எப்போதும் தமது ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்ற பீதியில் வாழ்ந்துகொண்டிருப்பதோடு அடிக்கடி மோசமாகவும் நடத்தப்படுகின்றனர் அல்லது அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்படுகின்றது. குறிப்பாக இளம் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்வதோடு, கிட்டத்தட்ட அவர்கள் அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர்.

நஃபீக்கின் வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். கிழக்கில் மூதூர் நகரில் வசித்த இளம் முஸ்லிம் யுவதியான அவரால் தொழில் பெற்றுக்கொள்ளவும் முடியவில்லை, அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறவும் முடியவில்லை. அவர் சவுதி அரேபியாவிற்கு சென்று அங்கு நீதிமன்றத்தில் நிற்கும் போது அவருக்கு 17 வயது மட்டுமே. அவரை பணிப்பெண்ணாக அழைத்துச் சென்ற முகவர், அவரது ஆவனங்களை மோசடி செய்து அவரது வயதை ஆறு வருடங்கள் கூட்டி கடவுச் சீட்டைப் பெற்றுள்ளார். சவுதி அரேபியாவிற்கு சென்றவுடன் 24 மணி நேரமும் அவரது எஜமானின் அழைப்புக்கு தலையசைத்து அவர் சேவையாற்றத் தள்ளப்பட்டார். துப்புரவு செய்தல், சமைத்தல், கழுவுதல் மற்றும் ஆடைகளை மினுக்குதல் உட்பட பிரமாண்டமான அன்றாட வேலைப் பளுவுக்கு மத்தியில் அவர் குழந்தையையும் பராமரிக்கத் தள்ளப்பட்டார்.

அவரது குடும்ப உறுப்பினர் ஃபரினா நசிக் பி.பி.சி. க்குத் தெரிவித்ததாவது: "ரிஸான நஃபீக் இலங்கையை விட்டு சென்று 28 நாட்களின் பின்னர் அவர் அனுப்பியிருந்த கடிதத்தில் தான் பத்து பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்... அவர் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அவர் தனது வேலை செய்யும் இடத்தை மாற்றிக்கொள்ள விரும்பினார்." அவர் விடியற் காலை மூன்று மணிக்கு எழும்பி பின்னிரவு வரை வேலை செய்ய வேண்டும். அவர் அந்த ஒரு கடிதத்தை மட்டுமே எழுதியிருந்தார்.

நஃபீக்கின் அப்பாவித்தனத்தை ஃபரீனா வலியுறுத்தினார்: "எங்களால் இதை நம்ப முடியாது. எங்களிடம் காசு இல்லாததால் நாங்கள் அவரை வேலைக்கு அனுப்பினோம். அவள் குற்றவாளி அல்ல, அவள் அப்பாவி." மூதூர் வாசியான தஸ்லிம் முகமட் நஷ்பிர் பி.பி.சி க்கு கருத்துத் தெரிவிக்கையில், "இது தொடர்பாக அரசாங்கம் குருட்டுப் பார்வை பார்ப்பதை நிறுத்தவேண்டும். அவர்கள் இத்தகைய அவதூறுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின்படி, இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் சவுதி அரேபியாவில் மூன்று பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அரைவாசிப் பேர் பெருமளவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற வறிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களாவர்.

கடந்த பெப்பிரவரியில் விக்டர் கொரேயா, ரன்சித் டி சில்வா, சந்தோஷ் குமார், ஷர்மிலா சன்கீத் குமார் ஆகிய நான்கு இலங்கையர்கள் களவு மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிரச்சேதம் செய்யப்பட்டனர். ஏனைய வெளிநாட்டு தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அசிங்கமான முயற்சியாக, சவுதி அதிகாரிகள் சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் சடலங்களை பொதுமக்கள் பார்வைக்கு விட்டனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையானது நான்காவது நபருக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையில், இந்த மூன்று மரண தண்டனைகளுக்கும் எதிராக முறையீடு செய்திருந்தது. இவர்களைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. இந்தக் கொலைகளை ஆதரித்த இலங்கை நலன்புரி அமைச்சர் கேஹேலியே ரம்புவெல்ல, சவுதி அரேபிய உள்ளூர் சட்டத்தை மீறாமல் இருப்பதற்கு இது முக்கியமானது என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக இலங்கையில் வளர்ச்சி கண்ட எதிர்ப்புக்கு மத்தியில், அரசாங்கம் கடைசி நிமிடத்தில் நஃபீக்கின் பெற்றோர்களை வெளி விவகார பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா மற்றும் ஒரு சட்ட வல்லுனருடன் சவுதி அரேபியாவிற்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது. இந்தப் பயணத்தின் இலக்கு நஃபீக்குக்காக சட்டப் பாதுகாப்பை வழங்குவதல்ல, மாறாக, சவுதி அதிகாரிகளையும் மற்றும் இறந்த குழந்தையின் குடும்பத்தாரையும் கருணை காட்டுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாகும். அரசாங்கத்தின் பேச்சாளர் ரம்புக்வெல்ல ஏசியன் ரிபியூனுக்கு விளக்கியவாறு: "இந்த வேண்டுகோள் சம்பிரதாயப்பூர்வமானது மட்டுமே. அது விவாத வடிவத்திலானது அல்ல, ஒரு வேண்டுகோள் மட்டுமே."

இந்த ஒப்பந்த உழைப்பு வர்த்தகத்தில் எந்தவொரு உடைவும் ஏற்படுவதை தடுப்பதிலேயே அரசாங்கம் பிரதானமாக அக்கறை காட்டுகின்றது. கடந்த ஆண்டு வெளிநாட்டில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்கள் 2.3 பில்லியன் டொலர்களை அனுப்பியிருந்தார்கள். அது இலங்கையின் பிரதான அந்நிய செலாவணியாக உயர்ந்திருந்தது.