World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: Socialist Party feminist joins Sarkozy's cabinet பிரான்ஸ்: சோசலிஸ்ட் கட்சியின் பெண்ணிலைவாதி சார்க்கோசியின் மந்திரிசபையில் சேருகிறார் By Pierre Mabut and Antoine Lerougetel வலதுசாரி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வெளியே இராணுவ வாதம், உள்நாட்டில் வணிக சார்புடைய கொள்கை ஆகியவற்றை நோக்கிய அரசாங்கத்தின் உந்துதலுக்கான "மனிதாபிமான தலையீட்டுமுறைக்கு" ஒரு வெளிப்பகட்டான தோற்றத்தை கொடுக்கும் வகையில் தன்னுடைய அரசாங்கத்தில் புலம்பெயர்வு பின்னணியை கொண்ட சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களையும், மகளிரையும் சேர்த்துக் கொண்டுள்ளார். சோசலிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறிய மிக முக்கியமான நபர் வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் ஆவார்; இவர் "எல்லைகள் அற்ற டாக்டர்கள்" என்ற அமைப்பை நிறுவியதில் பிரபலமானவர் ஆவார். ஆனால் குடியேறியுள்ள தொழிலாளர்கள் இளைஞர்களுக்கு குறிப்பாக பெரும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி நாட்டின் நன்கறியப்பட்டுள்ள பெண்ணுரிமை ஆர்வலர் Fadela Amara வும் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார் என்பதாகும். அவர் நகரக் கொள்கை பற்றிய அரசுத்துறை செயலர் (Secrétaire d'Etat à la politique de la ville) பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். 43 வயதான அமரா, ஒரு அல்ஜீரிய தொழிலாள வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர், சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக Clermont-Ferrand நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். Ni Putes Ni Soumises (விலைமாதரும் அல்லர், தாழ்ந்திருப்பவரும் அல்லர்) என்ற அமைப்பை நிறுவியவர்; வருங்கால ஆண் நண்பரால் எரியூட்டப்பட்டுக் கொலையுண்ட ஒரு இளம் குடியேறிய பெண்ணான Sohane Benziane மரணத்தை ஒட்டி மக்கள் கொண்ட வெறுப்புணர்வு அலையில் 2003ல் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டிருந்தது. கருக்கலைப்பு கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் இகழ்வுற்றிருக்கும் வீடுகள் மற்றும் நகரத் திட்ட அமைச்சரான Christine Boutin னின் கீழ் பணியாற்ற அமரா உடன்பட்டிருப்பது தொழிலாள வர்க்க பெண்களின் உரிமைகளை காப்பவர் என்று அவரை கருதியிருக்கும் பலரையும் சீற்றத்திலும், திகைப்பிலும் ஆழ்த்தியுள்ளது. புட்டன், போப்பாண்டவர் இரண்டாம் ஜோன் போலால் மாவட்ட மத முதல்வரை சார்ந்த குடும்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் ஆவார். அமரா, சார்க்கோசி அரசாங்கத்தில் ஒரு பதவியை ஏற்றது AC Le Feu என்னும் தன்னார்வ சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பின் தலைவரான மகம்மது மெக்மாஷேயிடம் இருந்து விமர்சனத்திற்கு ஆளாகியது; அவர் கூறியதாவது: "அரசியல் கருவிகள் ஏதேனும் ஒன்றின் ஆதரவிற்கு உட்பட்ட இத்தகைய நபர்களை நாங்கள் நம்பமாட்டோம்... நாங்கள் முட்டாள்கள் அல்லர்." NPNS அமைப்பு "மக்களின் சில பிரிவுகளை இழிவு மற்றும் கேலிப்படுத்தி கூறும் கருத்துக்களை" வெளியிடுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்; இக்குறிப்பு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக திட்டமிடப்பட்ட அரசால் ஆதரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் வீடுகள் அபிவிருத்தித் திட்டங்களில் இருக்கும் இளைஞர்களை பற்றியது ஆகும். ஆபிரிக்கா 93 என்னும் தன்னார்வ அமைப்பின் செய்தித் தொடர்பாளரான Mimouna Hadjam, அமராவின் முடிவு "அரசியல் நம்பிக்கையை விடவும் கூடுதலாக பிழைப்புவாத விருப்புடன் தொடர்புடையது. புலம்பெயர்தலை ஒடுக்கும் அதிலும் குறிப்பாக குடும்பங்களின் மறு இணைவை கடுமையாக அடக்க இருக்கும் இந்த அரசாங்கத்தின் செயல்களுக்கு படேலா எவ்வாறு ஒப்புதல் கொடுக்க முடியும்?" "தங்கள் உடலை என்ன செய்வது என்று கடினமான போராட்டங்களுக்கு பின் கிடைத்த மகளிர் உரிமைக்கும்.. அனைத்து வகையான இஸ்லாமிய அடிப்படைவாதம், பழமைத்தனம்" ஆகியவற்றிற்கும் எதிராக தான் இருப்பதாக அமரா கூறியுள்ளார். வேலையை எடுத்துக் கொள்ளும் தன்னுடைய முடிவு பற்றிக் கூறுகையில், அவர் தெரிவித்தார்: "இடது சார்பு பெண்மணி என்பதால் நான் சற்று தயக்கம் காட்டினேன்; ஆனால் அதற்கு நானே பொறுப்பு. சரி என்று ஒப்புக் கொண்டேன், ஏனெனில் என்னுடைய போராட்டம் அரசியல் பிரிவுகளுக்கும் அப்பால் செல்லுகிறது; அவசரமாக செயல்படவேண்டியும் உள்ளது. புறநகர்ப்பகுதிகளில் வாழ்க்கையை மாற்றுவது பற்றி பொறுப்புக்களை நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்." Marche des Beurs (பிரான்ஸில் பிறந்த அரேபிய இளைஞர்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட நயமற்ற சொற்றொடர்) இல் 1983ம் ஆண்டு இவர் மார்சேயில் இருந்து பங்கு பெற்றார்; அது சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிற இடது கட்சிகள் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இனவாதம், நகரமன்ற தொகுதிகளின் சமூக நிலைமை மற்றும் போலீஸ் பாரபட்சம் மற்றும் அடக்கு முறை ஆகியவற்றிற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்த அது டிசம்பர் 3ம் தேதி பாரிஸில் 60,000 பேர் சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முடிவுற்றது.ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் இந்த அணியின் தலைவர்களை வரவேற்று, தேவைப்பட்டவர்களுக்கு 10 ஆண்டு கால பணி, மற்றும் இருப்பிட உரிமங்களை அளித்தார்; ஆனால் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புலம்பெயர்ந்த மக்களை கொண்ட பெரும்பாலான நகர மன்றத் தொகுதிகளை அதிக வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, வறுமை, பாரபட்சம் மற்றும் போலீஸ் அடக்குமுறை ஆகியவற்றிற்கு உட்படுத்திய கெடுபிடிக் கொள்கைகளை அவர் மாற்றவில்லை. இந்த நிலைமைகளை எதிர்த்து, மனிதத்தன்மை நிறைந்து, அனைவருக்கும் பொருந்தும் சமத்துவ கொள்கைகளுக்கு போராட விரும்பிய இளைஞர் தலைமுறையின் ஒரு பாகமாகத்தான் அமரா இருந்தார். சோசலிஸ்ட் கட்சியில் இவர் SOS Racisme என்ற அமைப்பின் மூலம் இணைந்தார். இடது தீவிரப்போக்கான LCR ன் முன்னாள் உறுப்பினரான Julien Dray, 1981ல் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்து, இவ்வாண்டு செகோலென் ரோயாலின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தித் தொடர்பாளராக இருந்தார், 1984ல் சோசலிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளர்யாளர்களுடன் தீவிரமாக இணைந்து அந்த அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த இயக்கம் சோசலிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது; இனவாதத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் சில சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுவதுடன் நின்றுவிட வேண்டும் என்று அது வலியுறுத்தியது. கட்சி மற்றும் அரசு ஆகியவை அதற்கு பெரிய அளவில் நிதிய உதவி அளித்தன. அமரா SOS Racisme ல் 1986ல் இணைந்து, NPNS அமைக்கும் வரை Julien Dray உடன் நெருக்கமாக பணியாற்றினார். இதன்பின் அவர் முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் பிரதம மந்திரி Laurent Fabius உடைய பிரிவின் செல்வாக்கிற்குட்பட்டார். மே 10, 1981ல் மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடிப்படையாக இருந்த சமூக சீர்திருத்த வேலைத்திட்டங்களை சோசலிஸ்ட் கட்சி கைவிட்டதற்கு எதிரான போராட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தை திசைதிருப்புவதற்கு ஒரு கருவியாக SOS Racisme ஐச் சூழ இளைஞர்களிடையே இருந்த உயர்சிந்தனையை சோசலிஸ்ட் கட்சி பயன்படுத்திக் கொண்டது. சமூக நிலைமைகள் பற்றிய இதன் தாக்குதல் தீவிர வலது வளர்வதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்தாலும் (ஜூன் 1984ல் தேசிய முன்னணி ஐரோப்பிய தேர்தல்களில் வாய்ப்பை பெற்று மொத்த வாக்குகளில் 10 சதவிகிதத்தை பெற்றது), சோசலிஸ்ட் கட்சி தேசிய முன்னணிக்கும் இனவெறிக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி, அதன் முக்கியமான பணி முற்போக்கான அரசியலுக்காக இருக்கும் என்றும் கூறியது. சிறிது காலத்திற்கு, SOS Racisme மூலம் "வேறுபட்டு இருக்கும் உரிமைக்கு" (Droit à la diversité) குரல் கொடுத்தது. 2002ல் பன்முக இடது அரசாங்கங்களின் முதலாளித்துவ சார்புடைய, லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகாலத்திற்குப் பின்னர், தேசிய முன்னணித் தலைவர் Jean Marie Le Pen க்கு தன்னுடைய மிகப் பெரிய அரசியல் வெற்றியை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜனாதிபதித் தேர்தல் முதல் சுற்றில் அவர் ஜோஸ்பனைவிட கூடுதலான வாக்குகள் பெற்று இரண்டாம் சுற்றில் அப்பொழுது பதவியில் இருந்த ஜாக் சிராக்கிற்கு எதிராக போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். இதையொட்டி கோலிச பிற்போக்கு முகாமிற்கு தாராள இடதுகள் செல்ல வழிவகை ஏற்பட்டது. தேர்தலின்போது, -LCR உட்பட "இடது" சிராக்கிற்கு பிரச்சாரம் செய்து அவரை "குடியரசின் மதிப்புக்கள்" மற்றும் ஜனநாயக உரிமைகளின் காவலர் என்று துதிபாடியது. 2003ன் ஆரம்பத்தில் சிராக்கின் பிரதம மந்திரி Jean-Pierre Raffarin முஸ்லிம் பெண்கள் பள்ளிகளில் தலைமறைப்பை அணியும் வழக்கத்தை தடுக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு மிகவும் விளம்பரப்படுத்த பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கினார். "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் செயலை தொடர்ந்திருந்த, கவனமாக கொண்டுவரப்பட்ட இஸ்லாமியருக்கு எதிரான உணர்வு பின்னணியில், இந்த சட்டம் புலம்பெயர்ந்த மக்கள் கற்கும் பள்ளிகளில் கூடுதலாக அரசு தலையிடுவதற்கு உரிமையை கொடுத்து, வேலைநிலைமைகள், ஓய்வூதிய உரிமைகள், தேசிய கல்விப் பணி ஆகியவற்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான நீடித்த முறையில் வந்த ஏராளமான வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை திசை திருப்பியது. SOS Racisme உடைய பெண்ணுரிமை ஆர்வலர் பிரிவு, 2002 சோசலிஸ்ட் கட்சியின் இழி தோல்வியை அடுத்து, பழமைவாத இஸ்லாமிய கூறுபாடுகள் நகரமன்றத்தின் வறிய பகுதிகளில் இருக்கும் முஸ்லீம் பெண்கள்மீது அடக்குமுறை நடத்துவதற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தது. இது ரபாரன்னுடைய முகத்திரை பற்றிய சட்டத்திற்கு இணக்கமாக இருந்தது; அமரா ஆர்வத்துடன் இதற்கு ஆதரவு கொடுத்தார். சோசலிஸ்ட் கட்சி "வேறுபட்டிருக்கும் உரிமை" யின் காப்பாளர் என்று கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து தீவிர வலதிற்கு மாறியதை இது பிரதிபலித்தது. அமராவிற்கும் இது ஒரு திருப்புமுனை ஆகும்; ஏனெனில் அப்பொழுது முகத்திரை சட்டத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்திருந்த Fabius உடன் அவர் நெருக்கமாக ஒத்துழைத்திருந்தார்.பெப்ருவரி 2003ல் அமராவும் அவருடைய SOS Racisme நண்பர்களும், சோசலிஸ்ட் கட்சியுடன் Ni Putes Ni Soumises, மற்றும் "சேரிகளுக்கு எதிராகவும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் மகளிர் அணி" என்பதை தொடங்கினர். சோசலிஸ்ட் கட்சியில் இவர்கள் நிலை பெற்றிருந்தாலும், அமராவும் அவருடைய Ni Putes Ni Soumises ஆகியவை அரசியலில் அனுபவமற்றவர்கள், Sohane Benzaine மரணத்தால் பகுதிகளில் நிறைந்திருந்த ஆண் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான தன்னெழுச்சியாய் வெளிப்பட்டவர்கள் என்றுதான் கருதப்பட்டனர். அவர்கள் செய்தி ஊடகத்தாலும், அரசியல் நடைமுறையினாலும் பெரும் மதிப்பிற்கு உயர்த்தப்பட்டனர். கோலிச பிரதம மந்திரி Jean-Pierre Raffarin இவர்களை மூன்று முறை அழைத்துப் பேசினார். ஜூன் 2003ல், பாராளுமன்ற UMP குழுத் தலைவரான Jean-Louis Debré "Today's Mariannes" (பிரெஞ்சு குடியரசின் அடையாளம் Marianne) என்று பிரெஞ்சுக் குடியரசின் Phrygian தொப்பிகள் அணிந்த நிலையில் 14 NPNS பெண்களின் பெரிய படங்களை Palais-Bourbon சட்டமன்ற சுவர்களில் மாட்டினார். Lutte Ouvrièr (LO) என்னும் ட்ரொட்ஸ்கிச தீவிரப்போக்கு அமைப்பு என்று கூறிக் கொள்ளும் அமைப்பை சேர்ந்த Arlette Laguiller அமராவிற்கு நம்பகத்தன்மை கொடுத்து, தன்னுடைய ஆதரவாளர்களையும் அமராவின் கூட்டங்களுக்கு அழைத்து வந்தார். 2004, 2005 ஆண்டுகளில், அமராவின் NPNS உடன் மகளிர் தின எதிர்ப்புக்களில் Laguiller ம் கலந்து கொண்டார். 2004ல் ரபாரனுடைய நீதித்துறை மந்திரி Nicole Guedj உடன் கைகளை இணைத்த நிலையில் அமரா இருந்ததும் காணப்படலாம்.அமராவின் வர்க்கரீதியான அரசியல் ஒத்துழைப்பு நிலைப்பாடு அப்பட்டமாக இருந்தது. "அவர்கள் அரசியல் சார்பு எப்படி இருந்தாலும், மகளிர் ஆர்வத்துடன் பங்கு கொள்ளுவதை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார் அவர். "முகத்திரை பற்றி தெளிவான கருத்தைக் கொடுப்பது" அமராவின் அமைப்புத்தான் என்று Laguiller கூறி, பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அகற்ற கட்டாயப்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பவர்களையும் குறைகூறினார். இப்படி வலது, "இடது", "தீவிர இடது" ஆகியவற்றின் பொது முன்னணி 2002ல் சிராக் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்தவை இப்பொழுது மீண்டும் வெளிவந்துள்ளது. SOS Racisme இன் முன்னாள் தலைவரும், தற்போது சோசலிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுவின் உறுப்பினரும், குடியேற்றம் பற்றி மிகக் கடுமையான கொள்கை ஆவணத்திற்கு பொறுப்பு உடையவருமான Malek Boutih, சார்க்கோசி அரசாங்கத்தில் அமரா எடுத்துக் கொள்ளப்பட்டது பற்றி சாதகமாக கூறியுள்ளார். "புறநகரங்களில் இருக்கும் பகுதிகளுக்கு இது உண்மையான நம்பிக்கையை கொடுக்கும்; அமராவின் வலிமையை, அவருடைய சுதந்திரத்தை, அவருடைய உறுதிப்பாட்டை அவர்கள் இன்னும் நம்பிக்கையுடன் கொள்ள முடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.கட்சியின் வலதுபுறத்தே Boutih உள்ளார்; செகோலென் ரோயாலின் நெருக்கமான ஆதரவாளர் ஆவார். அமராவிற்கு வாழ்த்து தெரிவித்த அவர் "அரசியல் பிளவுகளுக்கு அப்பாலும் போராடக்கூடிய விஷயங்கள் உள்ளன; இனவாதம், இஸ்லாமிய அடிப்படை வாதம், வகுப்புவாதம் போன்றவற்றிற்கு எதிரானவை அவை" என்று அமராவின் சொற்றொடர்களையே மீண்டும் வலியுறுத்தினார். இனவழிச் சிறுபான்மையினரில் இருந்து மக்களை உயர்பதவிக்கு தேர்ந்தெடுக்கும் சார்க்கோசியின் திறமையை Boutih வியந்துள்ளார்; சோசலிஸ்ட் கட்சி அவரைப் போல் செய்ய முடியாமல் இருப்பதற்காக அதை குறையும் கூறியுள்ளார். Le Monde க்கு ஜூன் 25 கொடுத்த பேட்டி ஒன்றில், அவர் அறிவித்தார்: "தன்னுடைய முகாமில் இருக்கும் பழமைவாதத்தை நிக்கோலா சார்க்கோசி ஏற்கமாட்டார்; வளர்ச்சி அடையச் செய்வார். சோசலிஸ்ட் கட்சி அதற்கு முற்றிலும் எதிராக உள்ளது." தற்பொழுது SOS Racisme ன் தலைவராக இருக்கும் Dominique Sopo, அமராவின் புதிய நட்பு பற்றிக் கூறினார்: "இது நல்லதே. இந்த அரசாங்கத்தில் நாம் (இன) பன்முகத்தன்மைக்கான பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளோம்; நாட்டில் இது இப்பொழுதுதான் முதல்தடவையாக நடந்துள்ளது." தன்னுடைய UMP கட்சியில் இருந்து ஒரு இளைய செனகல் பெண்ணான Rama Yade ஐயும் சார்க்கோசி மனித உரிமைகள் செயலராக நியமித்துள்ளார்; இதைத் தவிர சார்க்கோசிக்கு 2003ல் இருந்து ஆலோசகராக இருந்தவரும், 2006ல் இருந்து UMP உறுப்பினருமான, வழக்கறிஞர் Rachida Dati, ஐயும் நீதித்துறை மந்திரியாக்கியுள்ளார். நகர்ப்புற இளைஞர்களை அடக்குவதற்கான கடுமையான சட்டம், ஒழுங்கு மசோதாக்களை இயற்றும் பணி Dati க்கு வந்துள்ளது. இருவருக்குமே ஜனநாயக உரிமைகள் பற்றிய எந்த போராட்டங்களுடனும் தொடர்பு இருந்ததில்லை. Fadela Amara விற்கு Arletter Laguiller மற்றும் Lutte Ouvrière கொடுத்துள்ள விமர்சனமற்ற ஆதரவு அரசியல் படிப்பறியாத தொழிலாள வர்க்க மகளிர் போராட்டத்துடன் ஒற்றுமையை காட்டும் செயல் அல்ல; மாறாக சோசலிஸ்ட் கட்சியுடன் அரசியல் உடன்பாடு என்று பொருளாகும். இஸ்லாமிய முகத் திரையை அணியும் பெண்களுடன் கடுமையாக செயல்படாத ஆசிரியர்களும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று LO கூறியிருந்தது.Lutte Ouvrière உடைய வலைத்தளம் ஜூன் 22 அன்று சார்க்கோசி அரசாங்கத்தில் அமரா சேர்க்கப்பட்டது பற்றித் தெரிவித்ததாவது: "இத்தகைய நிலைமை அசாதாரணமானது அல்ல. இடதில் இருந்து வலதிற்கு மாறுபவர்கள், எளிதாக ஒரு நாளில் இருந்து மறுநாளுக்கு மாறுவது போல், இதற்கு முன்னரும் இருந்திருக்கின்றனர்; எதிர்த்திசையில் சென்றுவிட்ட சில அரசியல் வாதிகளை போல்தான் இதுவும்."தன்னுடைய பங்கிற்கு Ligue Communiste Révolutionnaire (LCR) அமராவின் NPNS அமைப்பு சமூகச் சீர்திருத்தத்திற்கு மற்றும் ஒரு அழுத்தக் குழுவாக இருக்கும் என்று ஆதரவு கொடுத்தது தோல்வியில் முடிந்துள்ளது என்று முணுமுணுப்புடன் ஒப்புக் கொண்டுள்ளது. "இந்த முயற்சி [NPNS ஐ நிறுவியது] மக்களிடைய பெண்ணுரிமை ஆர்வத்தை புதுப்பித்தது என்று பலரும் நினைத்து, நம்முடைய கீழ்மட்ட அணிகளிடையேயும் அத்தகைய உணர்வை ஏற்படுத்தியிருந்தது, நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது. ஆயினும், (நகரச் சேரிகளில்) இளம் ஆடவருக்கும் பெண்டிருக்கும் இடையே வன்முறை உறவுகளை கண்டித்தது, சமூகத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்கு எதிரான வன்முறையை போதுமான வகையில் தொடர்புபடுத்தாதது, குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தி விட்டது." (Rouge June 29) அப்பொழுது அது குற்றம் பற்றிய கொள்கை மீதான அரசின் கடுமையான தன்மையின் ஒரு பகுதியாக ஆகி இருந்த, சோசலிஸ்ட் கட்சியின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த இயக்கத்தை கட்டியமைக்க எவ்வாறு தான் ஊக்கம் கொடுத்தது என்பது பற்றி LCR விளக்கவில்லை. |