World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆபிரிக்காThe new Sarkozy government hosts conference on Darfur புதிய சார்கோசி அரசாங்கம் டார்பூர் பற்றிய மாநாட்டை நடத்துகிறது By Alex Lantier அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் பிரதிநிதிகள் பாரிஸில் ஜூன் 25 அன்று போரினால் சிதைந்திருக்கும் சூடான் மாநிலமான டார்பூரில் சாத்தியமுள்ள சமாதான நடவடிக்கைகள் பற்றிய விவாதங்களை நடத்தினர். நிக்கோலா சார்கோசியும் அவருடைய வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெரும் சார்கோசிக்கு முன் பதவியில் இருந்த ஜாக் சிராக்கை விட வாஷிங்டனுக்கு கூடுதலான வகையில் ஒத்துழைப்பு தருவதை விளக்கி காட்டுதற்கு ஒரு வாய்ப்பாக செய்தி ஊடகம் அதைப் பரந்த வகையில் அறிமுகப்படுத்தியது. டார்பூரில் ஐ.நா-ஆபிரிக்க ஒன்றியத்தின் 20,000 துருப்புக்கள் கொண்ட அமைதி காக்கும் படையை அனுப்புதல், அண்மையில் இருக்கும் சாட்டில் (Chad) உள்ள பிரெஞ்சு படையை டார்பூருக்கு செல்வதற்கு "மனிதாபிமான வழிகள்" திறக்க பயன்படுத்துதல் ஆகியன மாநாட்டின் முன்மொழிவுகளுள் இருந்தன. டார்பூரில் தற்போது இருக்கும் 7,000 துருப்புகள் கொண்ட ஆபிரிக்க ஒன்றியத்தின் படைக்கு பிரான்ஸ் 10 மில்லியன் யூரோக்கள் நன்கொடை வழங்கும் என்று சார்க்கோசி அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் நிவாரண உதவிகளுக்கு 42 மில்லியன் யூரோக்கள் அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். அங்கு இருக்கும் டார்பூர் அகதிகளுக்கு வெளிவேடத்திற்கு கூடுதலான மனிதாபிமான உதவி வழங்குவதற்கு பிரான்ஸ், சாட் (Chad) இல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இம்மாநாடு முற்றிலும் ஒரு அடையாளத் தன்மையைத்தான் கொண்டிருந்தது. மாநாடு தொடங்குவதற்கு முன் பிரெஞ்சு நாளேடான Le Monde சுட்டிக் காட்டியபடி, "பிரதிநிதிகளுக்கு விவாதத்திற்கு மூன்று மணி நேரம்தான் உள்ளது; இறுதி செய்தி அறிக்கைகூட திட்டமிடப்படவில்லை. அமைதிப் படைகளுக்கான வருங்காலத்திற்கு நிதி உதவிக்கு உறுதிமொழிகள் எதிர்பார்க்கப்படுகின்றன." ஆனால், சிறிய அளவில் பிரெஞ்சு, ஐரோப்பிய ஒன்றிய நன்கொடைகளை தவிர வேறு உறுதிமொழிகள் ஏதும் வரவில்லை. எதிர்காலத்தில் அமைதிப்படைகளுக்கு இன்னமும் கூடுதலான துருப்புக்களை கொடுக்கும் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் (African Union -AU) மாநாட்டில் கலந்து கொள்ளக்கூட அழைக்கப்படவில்லை! திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டாலும், அவை டார்பூர் மோதலில் துன்பியலான விளைவுகளை தீர்ப்பதற்கு முற்றிலும் இயலாத வகையில் இருக்கும். மாறாக அப்பகுதியில் வெளி சக்திகளின் தலையீடு, இன்னும் பரந்த அளவில் சூடானிய துன்பியலை பயன்படுத்தி மேற்குலகின் புவி-அரசியல் இலக்குகளை முன்னேற்றுவிக்க நடக்கும் சுரண்டலின் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். சூடானில் இருக்கும் அடக்குமுறையும், வறுமையும் குறையாமல் தொடரும். டார்பூரில் கார்ட்டூமால் ஆயுதம் கொடுக்கப்படும் ஜன்ஜாவீட் (Janjaweed) குடிப்படைகள் பற்றி அமெரிக்க, ஐரோப்பிய செய்தி ஊடகங்கள் வாடிக்கையாக வெளியிடும் கண்டனங்கள் அப்பகுதியில் பரவும் வன்முறை மற்றும் இராணுவமயமாக்கலால் விளைந்துள்ள சிக்கல் வாய்ந்த நிலையை இன்னமும் குழப்பியுள்ளது. டார்பூரில் நடைபெறும் படுகொலைகளுக்கு ஜன்ஜாவீட்டுக்களால் மேற்கொள்ளப்படும் கொடுமைகள் ஒரே காரணியாக இருக்கிறது என்பதிலிருந்து மிகவும் மாறுபாடாயுள்ளது. கார்ட்டூமை எதிர்க்கும் டார்பூரில் உள்ள இராணுவ சக்திகள் --முதலில் மின்னி மினாவி யின் சூடான் விடுதலை இயக்கம்/இராணுவம் (Sudan Liberation Movement/Army -SLM/A) மற்றும் கலீல் இப்ராஹிமின் தலைமையிலான நீதி மற்றும் சமத்துவத்திற்கான இயக்கம் (Justice and Equality Movement (JEM) -- ஆகியன தங்களுக்குள்ளேயே சண்டையிடத் தொடங்கிவிட்டன; குறிப்பாக மே 2006ல் அபுஜா சமாதான உடன்பாட்டை மதிப்பதா கூடாதா என்ற பிரச்சினையில் பிளவுற்றுள்ளன. ஒரு கூட்டு SLM-JEM பிரிவு வடக்கு டார்பூரின் தலைநகரான el-Fasher விமான நிலையத்தை ஏப்ரல் 2003ல் தாக்குதல் நடத்தியதில் இருந்து மோதல்கள் கிட்டத்தட்ட தடையின்றி அங்கு நடைபெற்று வருகின்றன. அதன்பின் கார்ட்டூம் உள்ளூர் பழங்குடி மக்களுக்கு ஆதரவைக் கொடுத்தது; அவர்கள் பெரும்பாலும் அரேபிய நாடோடி மந்தை மேய்ப்போர் ஆவர்; அவர்கள் SLM மற்றும் JEM க்கு ஆதரவு இருந்த பகுதிகள் என்று கருதப்பட்ட இடங்களை தாக்குவதற்கு தங்களை ஜன்ஜாவீட் குழுக்களாக அமைத்துக் கொண்டன. SLM, JEM சாட்டில் இருக்கும் அகதி முகாம்களில் இருந்து சூடானிய அகிதிகளை கட்டாயப்படுத்தி படைகளுக்கு ஆள் சேர்ப்பதாக கூறப்படுகிறது; இதைத்தவிர நெடுஞ்சாலை கொள்ளையர்களும் பழங்குடி குண்டர்களும் பலரை கொன்றுள்ளனர். ஐ.நா. புள்ளிவிவரங்களின்படி, SLM போராளிகள் மற்றும் பழங்குடியினர்களுக்கு இடையே மோதல் ஆகியவை முறையே 2007 தொடக்கத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கையில் தலா 20, 36 சதவிகிதத்தை கொண்டுள்ளதற்கு பொறுப்பாகும். மோதல்கள், அண்மையில் இருக்கும் சாட் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு (CAR) ஆகியவற்றிலும் ஏற்பட்டுவிட்டன. இவ்விரு நாடுகளும் பெரும் வறுமையில் வாடுவதுடன் மிக அதிக கடனாளி நாடுகளும் ஆகும்; எனவே அவை IMF ஐத்தான் பெரிதும் நம்பியுள்ளன. அரசாங்க கடன்கள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று IMF வலியுறுத்தியது, இருநாடுகளிலும் அரசாங்கம் ஊதியம் கொடுக்க மறுத்து விட்டது என்று இராணுவத்தின் சில பகுதிகளால் கலகம் செய்வதற்கு வழிவகுத்தது. பிரான்சும் இரு நாடுகளிலும் துருப்புக்களையும் விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள நிலைமை குழப்பத்தில் வீழ்ந்து விட்டது; François Bozizé தலைமையில் இருக்கும் மத்திய அரசாங்கம் தலைநகரான Bangui க்கு வெளியே சிறு பகுதியைத்தான் மேலோட்டமாக கட்டுப்படுத்தியது. ஒரு சமீபத்திய அறிக்கையில் Amnesty International, "மத்திய ஆபிரிக்க குடியரசின் வடக்கு பகுதிகள் அனைவருக்கும் சுதந்திரமான இடமாக மாறிவிட்டது -- இப்பகுதியில் பல ஆயுதமேந்திய எதிர்ப்புக் குழுக்கள், அரசாங்க துருப்புக்கள், ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் குழுக்கள் ஆகியவை மோதுகின்ற தளமாக ஆகியுள்ளது" என்று அறிவித்துள்ளது. சாட்டில் இருக்கும் நிலைமையும் பெரிதும் உறுதியற்று உள்ளது. ஏப்ரல் 2006ல் கார்ட்டூம் ஆதரவுடன் வந்த ஆட்சி மாற்றத்தை முறியடிக்க பிரான்ஸ் தலையிட்டது. நிலம் மீதான அதிகரித்துவரும் மூர்க்கத்தனமான போராட்டத்தாலும் டார்பூர் மோதல் எரியூட்டப்படுகிறது. உயர்ந்த வெப்பநிலை, குறைந்த மழை ஆகியவை நிலத்தின் உற்பத்தி திறனைக் குறைத்துள்ளன; இதையொட்டி விவசாயிகள், மந்தை மேய்ப்போர் ஆகியோரின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது; இவர்கள்தான் மக்கள் தொகையில் அதிகமாக இருப்பவர்கள். Jeune Afrique இன் கருத்தின் படி கார்ட்டூம், ஜன்ஜாவீட் போராளிகளை அவர்கள் வெற்றி பெறும் இடங்களை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என்று ஊக்கமளித்து தேர்ந்து எடுக்கிறது. தட்பவெப்ப மாறுதல்கள் சகாராவை பகுதியின் தெற்கிற்கு கொண்டு வருவதால் நிலம் பாலைவனமாதலும் (அப்பகுதிகளில் நிலத்தின் தன்மை சீர்கேடடைவதால் ஏற்படுவது) டார்பூரை அச்சுறுத்துகிறது. உண்மையில் கடந்த திங்களன்று பாரிஸில் நடந்த மாநாடு டார்பூர் நெருக்கடியை தீர்ப்பதில் சீரிய முயற்சி கொண்டதாக இல்லை. இத்துன்பியலின் அடித்தளத்தில் இருக்கும் சமூகப் பிரச்சினைகள் எதுவும் --விவசாயத்துறை நெருக்கடி, பொதுநிதியை IMF மேற்பார்வையில் அழிப்பது, தொழிற்துறை, சுகாதாரத்துறை உள்கட்டுமானம் இல்லாதது, நிரந்தரமான உள்நாட்டுப் போர்நிலை ஆகியவை--இன்னும் சில ஆயிரக்கணக்கான துருப்புக்களை பல ஆயிரக்கணக்கான சதுர மைல்கள் படர்ந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்துவதால் தீரப்போவதில்லை. பாரிஸ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடைய நோக்கமும் அதுவல்ல. ஆபிரிக்காவின் வளங்கள் மீது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் காட்டும் அக்கறை வாஷிங்டனுக்கு மதிப்பிற்குரிய இளைய பங்காளியாக அதைக் காட்டும் என்பதுதான் சார்கோசியின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கன்சர்வேடிவ் பிரெஞ்சு நாளேடான Le Figaro குறிப்பிட்டுள்ளபடி, "லெபனானுக்கு பின்னர், ஈரானிய அணுசக்தி திட்டத்திற்கு பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர், அமெரிக்கா முத்திரையிட்டுள்ள 'இனக் கொலைக்கு', பிரான்ஸ் கூறும் 'மனிதாபிமான பேரழிவு' க்கு முடிவுகாணும் நம் முயற்சிகளை ஒன்றிணைக்கும் சாத்தியம் இருக்கிறது." திருப்தியுடன் Le Monde குறிப்பிடுகிறது: "அப்பகுதியில் (சாட், மத்திய ஆபிரிக்க குடியரசு) பாரிசிற்கு நெம்புகோல்கள் இருப்பதால் வாஷிங்டன் டார்பூரின் ஒரு பிரெஞ்சு பங்கு பயனுடையதாக இருக்கும் என நினைக்கிறது." ஆனால் எப்படி பிரான்சின் "நெம்புகோல்கள்" உதவும் என்பதை இது தெளிவாக்கவில்லை. ஆனால் JEM க்கு ஆதரவு கொடுக்கும் சாட், SLM க்கு ஆதரவு கொடுக்கும் எரித்திரியா, மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவை அனைத்து முக்கிய தளங்களையும், டார்பூருடன் போட்டியிடும் கார்டூம் எதிர்ப்பு படையின் உள்ளூர் ஆதரவாளர்களையும் கொண்டுள்ளன. டார்பூரின் எதிர்ப்புக் குழுக்களை ஒரு நெறியான தொகுப்பாக பிரான்ஸ் அமைக்கலாம் என்ற கருத்துதான் Le Monde இன் பார்வையின் உட்குறிப்பு ஆகும். சூடானில் இருக்கும் மதிப்புமிக்க வளங்கள், குறிப்பாக அதன் கணிசமான எண்ணெய் இருப்புக்கள் ஆபத்திற்கு உட்பட்டுள்ளன; தற்பொழுது அவை 2 பில்லியன் டாலர் வருமானத்தை கொடுக்கின்றன; பல முதலீடுகள் இந்த வளங்களுடன் தொடர்புடையதாக உள்ளன. சூடானிய எண்ணெயின் பெரும்பகுதி தற்பொழுது சீனாவால் வாங்கப்படுகிறது; அது தனது எண்ணெயில் சுமார் 8 சதவிகிதத்தை கிழக்கு ஆபிரிக்க நாட்டில் இருந்து பெறுகிறது; தோராயமாக 6 பில்லியன் டாலர்களை அங்கு முதலீடு செய்துள்ளது. முக்கிய அமெரிக்க செய்தித்தாட்கள், குறிப்பாக நியூ யோர்க் டைம்ஸ், அதன் கட்டுரையாளர் நிக்கோலஸ் கிறிஸ்டோப் போன்றோர் டார்பூர் நெருக்கடிக் காலத்தில் சூடானில் தன்னுடைய நிலைப்பாட்டை சீனா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கிய அமெரிக்க ஜனநாயகக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் ரொம் லான்ரோஸ், மே 9 அன்று, சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிய பொழுது இக் கோரிக்கை முறையான கொள்கை சான்றின் ஒரு பகுதியாக ஆனது. அக்கடிதத்தில் அவர் சூடானில் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத் தொகைகளை நிறுத்துவது என்ற சீன அரசாங்கத்தின் முடிவை பாராட்டியுள்ளார்; ஆனால் கார்ட்டூமிற்கு ஆயுதங்கள் விற்பது மற்றும் கடன்கள் கொடுப்பதை தாக்கியுள்ளார். அமெரிக்க செயற்பாடுகள் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டை "இனக் கொலை ஒலிம்பிக்ஸ்" என முத்திரையிடும் முயற்சியில் வெற்றி அடையலாம் என்று அச்சுறுத்திய பின்னர், "சமாதானத்திற்கு சிறந்த, மிக நியாயமான வழியை சூடான் ஏற்பதற்கு சீனா உரியதைச் செய்யாவிட்டால், வரலாறு உங்கள் அரசாங்கத்தை இனக் கொலைக்கு பணம் கொடுத்த அரசாங்கம் என்று தீர்மானித்துவிடும்" என்று முடிவுரையாக கூறியுள்ளார். கார்ட்டூம் ஆதரவுடைய ஜன்ஜாவீடை "இனக்கொலையில்" ஈடுபடும் குழு என்று வாஷிங்டன் வலியுறுத்தி விளக்குவது ஐ.நா.இராணுவத் தலையீட்டை கொண்டு வருவதற்கான முயற்சியாகும்; இனக்கொலை பற்றிய 1948 ஐ.நா. மரபின்படி அது கட்டாயமாகிவிடும்; அதாவது ஒரு இடத்தில் இனக் கொலை ஏற்படுகிறது என்பது எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டால், ஐ.நா. தலையிட்டே தீர வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு சூடானில் உதவுவதற்கு பிரான்ஸ் தயாராக இருப்பது, சூடானில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைக்கு தெளிவான ஆதரவு என்ற பொருளை கொடுக்காது. Le Figaro குறிப்பிட்டுள்ளது போல், டார்பூர் "ஒரு மனிதாபிமான வகையில் பேரழிவு" என்று பிரெஞ்சு அரசாங்கம் முத்திரையிட்டுள்ளதே அன்றி, இனப்படுகொலை என்று அல்ல. டார்பூர் எதிர்ப்பு குழுக்கள் ஆதரவாளரும் ஒரு பிரெஞ்சு உயர்கல்வியாளரும், சூடானில் இராணுவத் தலையீட்டிற்கான திட்டங்களை குறைகூறுபவருமான Rony Brauman ஐ நீண்ட பேட்டி ஒன்றில் France 24 பொதுத் தொலைக்காட்சி பங்கு பெற அனுமதித்துள்ளது, பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கை நடைமுறைக்குள் இருக்கும் பிளவுகள் மற்றும் கவலைகள் ஆகியவற்றை காட்டுகிறது இத்தகைய பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலுள்ள தற்காலிக கூட்டு நீடிக்கும் என்பதற்கில்லை. உண்மையில் ஆபிரிக்காவில் அவர்களுடைய பொது வரலாறு நேரடி எதிர்ப்பில்தான் முடிந்துள்ளது; குறிப்பாக 1994ல் Rwandan இனப் படுகொலையின் போதும், காங்கோ/சையிர் உள்நாட்டுப் போரிலும் அப்படித்தான் இருந்தது. பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெரின் பங்கு கல்வியூட்டக் கூடியது. 1960 களில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக அரசியல் வாழ்வை தொடங்கி, 1968 மாணவர் எதிர்ப்புக்கள், பொது வேலைநிறுத்தம் ஆகியவற்றிற்கு பின் அவர் வலதிற்கு மாறினார். 1967-1970ல் நைஜீரிய உள்நாட்டுப் போரின்போது Biafra MTM International Red Cross ல் டாக்டராக பணியாற்றிய அனுபவத்தில் அதன் அதிகாரத்துவத்தால் ஏமாற்றம் அடைந்த நிலையில், அவர் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்பான MSF என்னும் எல்லைகளற்ற டாக்டர்கள் என்ற அமைப்பை நிறுவினார். எல்லைகளற்ற டாக்டர்கள் என்ற அமைப்பின் தலைவர் என்ற முறையில் அவர் பிரான்ஸ் மற்றும் சர்வதேச ஊடகத்தில் இருந்து கணிசமான சாதக ஆதரவை பெற்றிருந்தார். சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக மீண்டும் பிரெஞ்சு அரசியலில் நுழைந்து 1980களில் பல நிர்வாகப் பொறுப்புக்களை கொண்டிருந்தார். அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பிற்கு விரைவில் தன்னை மாற்றிக் கொண்டு, "மனிதாபிமான தலையீடுகள்", என்றைக்குமான "மனிதாபிமானத்தை ஒட்டிய தவிர்க்க முடியாத தாக்குதல்கள்" போன்ற கருத்தாய்வுகளையும் வளர்த்துள்ளார். இப்பொழுது வெளியுறவு மந்திரி என்ற முறையில் இவருடைய முதல் பெரிய செயல்பாட்டில், முன்னாள் இடதுசாரியும் பெரிதும் வரவேற்கப்பட்ட மனிதாபிமானியுமான அவர், பாசாங்குத்தனமான நிலைப்பாடுகளை அகற்றிவிட்டு பார்த்தால், "ஆபிரிக்காவை பகிர்ந்து கொள்ளுவதற்கான புதிய காலனி முறைப் போட்டியை" வசதிப்படுத்தும் அடிப்படை நோக்கத்தை கொண்ட கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாக உள்ளது. |