World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence secretary menaces newspaper editor

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் பத்திரிகை ஆசிரியரை பயமுறுத்துகிறார்

By Nanda Wickremesinghe
24 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜனநாயக உரிமைகள் மீதான மேலுமொரு தாக்குதலில், ஏப்பிரல் 16 மற்றும் 17 ல் ஆங்கில மொழி டெய்லி மிரர் பத்திரிகையில் வெளிவந்த இரு கட்டுரைகள் தொடர்பாக கடந்த வாரம் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய இராஜபக்ஷ பத்திரிகையின் ஆசிரியரை அச்சுறுத்தியுள்ளார். இந்தக் கட்டுரைகளில் முதலாவது கட்டுரை கருணா குழு என்று சொல்லப்படும் அரசாங்க சார்பு துணைப்படையின் நடவடிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்டுள்ளதோடு இரண்டாவது கட்டுரை கிழக்கில் தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் பயங்கரமான நிலைமைகள் பற்றி தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் யுத்தம் தொடர்பாக, இராணுவத்தைப் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் நசுக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் புதியதே இந்த அச்சுறுத்தலாகும். பாதுகாப்புச் செயலாளர், 2005 நவம்பரில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தம்பியாவார்.

கட்டுரைகள் வெளியானவுடன் சீற்றமடைந்த கோதபாய இராஜபக்ஷ, பத்திரிகையின் ஆசிரியர் சம்பிகா லியனாராச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டதோடு, "கருணா குழு உங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். அப்படி நடந்தால் உங்களைப் பாதுகாக்க அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்பை எதிர்பார்க்க வேண்டாம்," எனக் கூறியுள்ளார்.

ஆசிரியர் இராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிய இராஜபக்ஷ, இல்லாவிடில் பத்திரிகைக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையை தவிர்த்துக்கொள்வதன் அடிப்படையில் அவரை பதவிநீக்கம் செய்யுமாறு நிர்வாகத்தை நெருக்குவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தக் கட்டுரைகளில் ஒன்றை எழுதிய உடிதா ஜயசிங்கவைப் பற்றி குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், "நான் அவளை அடியோடொழிப்பேன்" என லியனாராச்சியிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இலங்கையைப் பொறுத்தளவில், இத்தகைய கருத்துக்களை பயனற்ற அச்சுறுத்தல்களாக கருத முடியாது. கடந்த ஆண்டு பூராவும், ஒன்பது ஊடகத் தொழிலாளர்கள், பெரும்பாலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தின் தலையீட்டை அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கும் கருணா குழு போன்ற துணைப்படைகளின் தலையீட்டை பலமான முறையில் சுட்டிக்காட்டும் ஒரு சூழ்நிலையிலேயே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இராஜபக்ஷ மறுப்பதானது பத்திரிகை மீதும் மற்றும் ஆசிரியர் மீதும் சரீர ரீதியான தாக்குதலைத் தொடுக்க அழைப்புவிடுப்பதற்கு சமமானதாகும்.

"ஆயுதம் தரித்த கருணா குழு பொத்துவிலில் ஆட்சி செய்கின்றது" என்ற தலைப்பில் ஏப்பிரல் 16ல் வெளிவந்த கட்டுரை, பாதுகாப்புப் படையினர் கருணா குழுவுடன் செயற்படவில்லை என்ற அரசாங்கத்தின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது. கிழக்கு நகரான பொத்துவிலில் உள்ள முஸ்லிம்கள், கருணாவின் ஆயுதக் குண்டர்கள் சுதந்திரமாக நடமாடி மக்களை அச்சுறுத்துவதோடு பலவந்தமாக பணத்தை பறிக்கின்றனர் என டெயிலி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களுக்கான சமாதான செயலகம் (மு.ச.செ) என்ற ஒரு அமைப்பு, அரசாங்கத்தையும் மற்றும் சமாதான முன்னெடுப்புகளுக்கான சர்வதேச இணைத் தலைமை நாடுகளையும் பயனற்றவை என கண்டனம் செய்துள்ளன.

"சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது பொலிசாரின் வேலையாகும். சில விசேட சம்பவங்களின் போது இராணுவத்தினருக்கு கடமைகள் உண்டு. ஆனால் பொத்துவிலில், கருணா குழு நகரம் பூராவும் கட்டளை பிறப்பித்துத் திரியும் வேளை, விசேட அதிரடிப்படை பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட பொலிசும் பார்வையாளர்களாக உள்ளனர்," என மு.ச.செ. பேச்சாளர் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

இராஜபக்ஷவின் அரசாங்கம், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கோரப்பட்டுள்ளது போல் கருணா குழு போன்ற துணைப்படைகளை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகின்றது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அவை இயங்குவதில்லை என அரசாங்கம் கூறிக்கொள்கிறது. அச்சுறுத்தல் விடுக்கவும் மற்றும் பணம் பறிக்கவும் கருணா குழுவையும் மற்றும் ஏனைய துணைப்படைகளையும் பாதுகாப்புப் படைகள் அனுமதித்துள்ளதை டெயிலி மிரர் உறுதிப்படுத்தியுள்ளது. திரைக்குப் பின்னால், சந்தேகத்திற்கிடமின்றி கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் உட்பட மோசமான பெரும் குற்றங்களை மேற்கொள்வதில் இராணுவப் பிரிவினருடன் சேர்ந்து அவர்கள் செயற்படுகின்றனர்.

ஏப்பிரல் 17 உடித் ஜயசிங்கவால் எழுதப்பட்ட இரண்டாவது கட்டுரை, "மூதூர் இடம் பெயர்ந்த அகதிகள்: யுத்தத்தின் பெயரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சுனாமியுடன் போராடுகிறார்கள்," என தலைப்பிடப்பட்டிருந்தது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இராணுவத் தாக்குதல்களின் விளைவாக அகதிகள் எதிர்கொண்டுள்ள பயங்கரமான நிலைமைகளை அந்தக் கட்டுரை விளக்கியிருந்தது. அதில் உள்ளடங்கியுள்ள பேட்டிகளும் கருத்துக்களும், புலிகளின் பிராந்தியத்தில் "சிக்குண்டுள்ள" மக்களுக்கு உதவுவதற்காக "மனிதாபிமான நடவடிக்கைகள்" முன்னெடுக்கப்படுகின்றன என்ற அரசாங்கத்தின் கூற்றை அம்பலப்படுத்துகின்றன.

யதார்த்தம் என்னவெனில், கடந்த ஜூலையில் இருந்து இராணுவம் 2002 யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக மீறி புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களை கைப்பற்ற ஒரு தொகை உக்கிரமான மோதல்களை முன்னெடுத்து வருகிறது. உள்ளூர் மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் வேண்டுமென்றே மக்கள் வசிக்கும் பிரதேசங்கள் மீது செல் மற்றும் குண்டுத் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியதோடு இலட்சக்கனக்கான மக்களை வீடுகளை விட்டு வெளியேறத் தள்ளியது. இப்போது இந்த அகதிகள் போதுமான உணவு, தங்குமிடம் மற்றும் மருந்துகள் இன்றி வெறும் கையுடன் கிழக்கு பூராவும் உள்ள முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மூதூரில் இருந்து வெளியேறிய மக்களும் கடந்த ஆகஸ்ட்டில் இருந்து இத்தகைய நிலைமைகளை அனுபவித்த வன்னம் இதே முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தனது கருத்துக்களை டெயிலி மிரர் அம்பலப்படுத்தியதை அடுத்து, பத்திரிகையின் ஆசிரியரை அச்சுறுத்தியதை நொண்டிச்சாக்கில் மறுத்த பாதுகாப்புச் செயலாளர், "ஒளிவுமறைவற்ற கருத்துப் பரிமாற்றமே" இடம்பெற்றதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் இணையத்திற்கு எழுதிய இராஜபக்ஷ, அந்தக் கட்டுரைகள் இரண்டும் "தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை" என தான் லியனாராச்சியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டுரை "இனவெறியைத்" தூண்டும் அதேவேளை "மற்றைய கட்டுரை பாதுகாப்புப் படைகளின் நற்பண்பை சேதம் செய்ய முயற்சிக்கின்றது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜபக்ஷவின் கருத்துக்களில் தெளிவாகுவது என்னவெனில், "தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் அரசாங்கமும் இராணுவமும் யுத்தம் தொடர்பான அனைத்து மற்றும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைக்கூட நிறுத்துமாறு கோருகின்றன. டெயிலி மிரர் பத்திரிகைக்கு எதிரான அச்சுறுத்தலானது, பயன்படுத்தப்படும் வழிமுறைகள் தொடர்பான இன்னுமொரு எச்சரிக்கையாகும். தற்போதையை அவசரகால விதிகளின் கீழ் ஊடகங்களை நசுக்குவதற்கு ஜனாதிபதி இராஜபக்ஷவிடம் விரிவான அதிகாரங்கள் உள்ள போதிலும், மேலும் அரசியல் எதிர்ப்புக்கள் தூண்டப்படுவதை தவிர்த்துக்கொள்வதற்காக அவற்றைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுள்ளார்.

இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் பிரகடனம் செய்ததாவது: "நாம் இதை ஊடக சுதந்திரத்திற்கும் மற்றும் ஆசிரியர் சுதந்திரத்திற்கும் எதிரான கடுமையான எச்சரிக்கையாக கருதுகிறோம்... ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரியின் இத்தகைய நடவடிக்கையை இந்த சங்கம் முழுமையாக கண்டனம் செய்கின்றது." இராஜபக்ஷவின் கருத்துக்களை விமர்சித்த சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்ததாவது: "நாட்டில் உள்ள ஸ்திரமற்ற நிலைமையின் கீழ், இலங்கையில் உள்ள ஊடக சமூகத்திற்கு இந்த அச்சுறுத்தல் மூலம் நடுங்கச் செய்யும் செய்தியை அனுப்புவதையிட்டு சுதந்திர ஊடக இயக்கமும் அஞ்சுகிறது," எனத் தெரிவித்துள்ளது.

இந்த அரசியல் மதிப்பிழப்பை திருத்த ஜனாதிபதி இராஜபக்ஷவும் முயற்சித்தார். பத்திரிகையின்படி, லியனாராச்சியை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், இந்த அச்சுறுத்தல் தொடர்பாக "விசாரணை நடத்துவதாக வாக்குறுதியளித்தார்." இந்த நடவடிக்கையைப் பாராட்டியும் மற்றும் அவரது சகோதரர் மற்றும் ஏனைய அதிகாரிகளைப் போல் அன்றி, ஜனாதிபதி சமாதானத்தில் கடுமையான ஆர்வம் கொண்டவர் என்ற மாயையை முன்நிலைப்படுத்துவதன் மூலம் டெயிலி மிரர் இதனை பிரதிபலித்திருந்தது.

"மிகவும் ஆசைப்பட்ட சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக நாட்டை ஐக்கியப்படுத்தும் கடினமான பணியில் ஜனாதிபதி இராஜபக்ஷ ஈடுபட்டுள்ள சமயத்தில், அவரது நம்பிக்கைக்குரிய அதிகாரியின் பக்கத்தில் இருந்து வரும் இத்தகைய செயல், அவரது காலை வாரிவிடுவதற்கான முயற்சியாக கண்டனம் செய்யப்பட வேண்டும்" என அதன் ஆசிரியர் தலையங்கம் கூறுகின்றது. லியனாராச்சியை எதுவும் செய்ய மாட்டோம் என கருணா குழு அறிவித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

"சமாதானத்தை விரும்பும் மனிதன்" என்ற இராஜபக்ஷவின் கூற்றைப் போலவே, ஊடக உரிமைகளைக் காக்கும் வீரனாக தம்மைக் காட்டிக்கொள்ளும் அவரது முயற்சிகளும் வெறுமனே ஒரு ஜன்னல் அலங்காரமாகும். அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் டெயிலி மிரருக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது: "பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான அண்மைய குற்றச்சாட்டுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிக்கோள்களைத் திருப்திபடுத்துவதற்காக அவரை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பரந்த திட்டத்தின் ஒரு பாகமாகவே அரசாங்கம் நம்புகிறது," என அது ஆத்திரமூட்டும் வகையில் பிரகடனம் செய்துள்ளது.

உண்மையில் ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. லியனாராச்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதற்கு முதல் நாள்தான், நிலம் சஞ்சிகையின் ஆசிரியரும் மற்றும் ஏனைய தமிழ் செய்தி ஊடகங்களுக்கு பங்களிப்பு செய்தவருமான சுபாஷ் சந்திரபோஸ் வடக்கில் எல்லைப் பிரதேசமான வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டார்.

முன்னணி சிங்களப் பத்திரிகைகளில் ஒன்றான மெளபிம மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த சண்டே ஸ்டன்டர்ட் போன்ற பத்திரிகைகளை வெளியிட்ட ஸ்டன்டர்ட் செய்தி நிறுவனத்தின் சொத்துக்களை அரசாங்கம் மார்ச் 29ல் முடக்கியதால், அது தனது வெளியீட்டு நடவடிக்கைகளை நிறுத்தத் தள்ளப்பட்டது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, இந்த நிறுவனத்தின் பேச்சாளரும் நிதி கட்டுப்பாட்டாளருமான துஷ்யந்த பஸ்நாயக்கவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததுடன் பெப்பிரவரி 27 வரை குற்றச்சாட்டுக்கள் இன்றி அவரை தடுத்து வைத்திருந்தது.

கடந்த ஆண்டு பூராவும் மெளபிம பத்திரிகை அரசாங்கத்தின் மோசடி மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தது. இராணுவத்திற்கும் மற்றும் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்து கொண்டிருந்த நிலையில் பெருந்தொகையான கடத்தல்கள் மற்றும் "காணாமல் போகும்" சம்பவங்கள் தொடர்பாக அதன் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தின் பாத்திரத்தைப் பற்றி கேள்வி எழுப்பினர். இந்த ஊடக நிறுவனம் முன்நாள் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான மங்கள சமரவீரவின் நண்பருக்கு சொந்தமானதாகும். ஜனாதிபதி இராஜபக்ஷவுடன் முரண்பட்டதை அடுத்து பெப்பிரவரியில் சமரவீர பதவி விலக்கப்பட்டார். ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும், மெளபிம பத்திரிகையானது புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் மற்றும் "தேசிய பாதுகாப்பை" கீழறுப்பதாகவும் குற்றஞ்சாட்டி வந்தனர்.

ஊடகங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் என்பன சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்களின் பாகமாகும். இராஜபக்ஷ அரசாங்கம், வாழ்க்கைத் தரம் மீதான தாக்குதலுடன் சேர்த்து யுத்தத்தை உக்கிரப்படுத்துகின்ற நிலையில், எந்தவொரு விமர்சனத்தையும் அல்லது தனது பொய்கள் அம்பலப்படுத்தப்படுவதையும் அது தாங்கிக்கொள்ளப் போவதில்லை.