:
ஆசியா
:
இலங்கை
Abduction of journalist exposes
police-state tactics in Sri Lanka
பத்திரிகையாளர் கடத்தப்பட்டமை இலங்கையில் பொலிஸ் அரச வழிமுறைகளை
அம்பலப்படுத்துகிறது
By S. Jayanth
16 April 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இலங்கை பத்திரிகையாளர் முனுசாமி பரமேஸ்வரி நான்கு மாதங்களாக குற்றச்சாட்டுக்கள்
இன்றி பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் கடந்த மாதம் இறுதியாக விடுதலை செய்யப்பட்டார். ஊடகங்களை
அச்சுறுத்தவும் மற்றும் தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தம் தொடர்பான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காக
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அமுல்படுத்தியுள்ள பொலிஸ் அரச வழிமுறைகளுக்கு இந்த வழக்கு இன்னுமொரு உதாரணமாகும்.
நவம்பர் 23, பரமேஸ்வரியும் மற்றும் அவரது நண்பி சுசந்தி தம்பிராஜாவும் பொலிஸ்
விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள சவோய் திரையரங்கிற்கு
அருகில் அவர்களை வரவைப்பதற்காக சுசந்தியின் சகோதரர் கடத்தப்பட்டுள்ளதாக ஒரு கதையை பொலிசார் அவர்களுக்கு
கூறியிருந்தனர். பரமேஸ்வரியும் சுசந்தியும் குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்தவுடன் இருவரும் பலாத்காரமாக வாகனத்திற்குள்
தள்ளப்பட்டு கொண்டுசெல்லப்பட்டனர். பரமேஸ்வரி மெளபிம என்ற பத்திரிகையில் சேவையாற்றி
வந்தார்.
அதிரடிப்படை பொலிசார் பரமேஸ்வரியையும் சுசந்தியையும் கொழும்பில் இழிபுகழ்பெற்ற
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளித்தனர். அவர்களிடம் வாக்குமூலம் எடுத்தபின்னர் பரமேஸ்வரி விடுதலை
செய்யப்படுவார் எனக் கூறப்பட்ட போதிலும், இலங்கையிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள பத்திரிகையாளர்கள்
மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் இடைவிடாமல் முன்னெடுத்த பிரச்சாரத்தை அடுத்து மார்ச் 22ம் திகதியே அவர்
விடுதலை செய்யப்பட்டார். சுசந்தி தென்னிலங்கையில் பூஸா தடுப்பு முகாமில் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்துத் தெரிவித்த
பரமேஸ்வரி விளக்கியதாவது: "கடந்த ஆண்டு நவம்பர் 23 அன்று, என்னுடன் தங்குமிட அறையில் தங்கியிருந்த
சுசந்திக்கு சுமார் இரவு 8 மணியளவில் அவரது இளைய சகோதரர் கடத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வந்தது.
தன்னை சுசந்தியின் சகோதரனாக கூறிக்கொண்ட அழைப்பாளர், 'நான் சவோய் திரையரங்கு அருகில் வீதியில்
நிற்கின்றேன். என்னால் மோதரையில் (கொழும்பில் ஒரு பகுதி) உள்ள தங்குமிடத்திற்கு செல்லவோ அல்லது
உங்களது இடத்திற்கு வரவோ வழிதெரியவில்லை. உங்களது முகவரியை சரியாகச் சொல்லுங்கள்,' என்றார்.
அந்தக் குரல் சுசந்தியின் சகோதரரின் குரல் என்றே அவர் உணர்ந்தார்.
"ஆயினும், நான் சந்தேகம் கொண்டதோடு முகவரியை கொடுக்க வேண்டாம் என்றும்
வெளியில் சந்திக்கலாம் என்று கூறுமாறும் அறிவுரை கூறினேன். நானும் சுசந்தியுடன் சென்றேன். எனக்கு செய்தி சேகரிக்கும்
ஆர்வமும் கூடியது. நடப்பது என்ன என்பதை என்னால் பார்க்கக் கூடிய அதே சமயம் நான் இருப்பது அவருக்கு
உதவியாக இருக்கும் என்றும் நினைத்தேன்."
வெளியேறுவதற்கு முன்னதாக பரமேஸ்வரி பொலிஸ், மலையக மக்கள் முன்னணி
பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்னன், நவசமமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன மற்றும் ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) உட்பட பல தனி நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் தொலைபேசியில்
முன்னெச்சரிக்கையாக தொடர்புகொண்டு இதுபற்றி அறிவித்துள்ளார்.
"முச்சக்கர வண்டியில் இருந்து சவோய் திரையரங்கு அருகில் நான் இறங்கியவுடன் அங்கு
இலக்கத் தகடின்றி ஒரு வாகனம் நிற்பதைக் கண்டேன். நான் செயற்படுவதற்கு முன்னதாகவே, வாகனத்தில் இருந்து
இறங்கிய சில குண்டர்கள் ஏறத்தாள எங்களைத் தூக்கி உள்ளே போட்டார்கள். நாங்கள் சத்தமிட முயன்றபோது
அவர்கள் எங்களை அச்சுறுத்தினார்கள். அவர்கள் எங்களது தங்குமிடத்திற்கு கொண்டு சென்று எங்கள் மீது குற்றஞ்சாட்ட
எதையாவது தேடிப் பார்த்தார்கள். பின்னர் நேரடியாக எங்களை பயங்கரவாத புலணாய்வுப் பிரிவுக்கு கொண்டு
சென்றனர்.
"வாக்குமூலம் எடுத்த பின்னர் எனது வீட்டுக்கு செல்லலாம் என அவர்கள் போகின்ற
வழியில் கூறினர். ஆனால் என்னை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் ஒப்படைத்த பின்னர் அவர்கள் என்னை நான்கு
மாதங்கள் தடுத்து வைத்து குறுக்கு விசாரணை செய்தனர். எங்களை அங்கு கொண்டு சென்ற பின்னரே அவர்கள்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்."
தான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தடுத்து
வைக்கப்பட்டிருந்ததாக பரமேஸ்வரி தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை
உக்கிரப்படுத்திய நிலையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி இராஜபக்ஷவினால் இந்தக் கொடூரச் சட்டம் மீண்டும்
அமுல்படுத்தப்பட்டது. ஒருவரை விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்க இந்தச் சட்டம் அனுமதிக்கின்றது.
"என்னை விசாரித்த எவரும் தம்மை அடையாளம் காட்டவில்லை. அதன் மூலம் என்னை
விசாரித்தவர்கள் யார் மற்றும் எந்த அதிகாரி என்னை விசாரித்தார் எனத் தெரிந்துகொள்ளும் உரிமையை அவர்கள்
எனக்கு மறுத்துள்ளனர்," என பரமேஸ்வரி தெரிவித்தார். அவரது பெற்றோர்களுக்கு இரண்டு வாரங்களின் பின்னரே
டி.ஐ.டி அலுவலர்களின் முன்நிலையில் பரமேஸ்வரியைப் பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஒரு மாதத்தின்
பின்னரே சட்டத்தரணி ஒருவரை சந்திக்கும் வாய்ப்பும் பரமேஸ்வரிக்கு வழங்கப்பட்டிருந்தது.
பரமேஸ்வரி தொடர்ந்தும் தெரிவித்ததாவது: "நான் (புலிகளின் தலைவர்)
பிரபாகரனின் பத்திரிகையாளர் மாநாட்டிற்கு சென்றிருந்தேனா என அவர்கள் கேட்டனர். புலிகளின்
தலைமையகமான கிளிநொச்சியில் புலித்தேவன் மற்றும் இளந்திரையன் போன்ற புலிகளின் தலைவர்களுடன் நான்
ஏதாவது அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளேனா எனவும் அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினர். நான் அந்த
மாநாடுகளுக்கு செல்லவில்லை எனத் தெரிவித்தேன். எனக்கு புலிகள் இயக்க அரசியல்வாதிகளை ஊடகங்கள்
ஊடாகவே தெரியும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்லக் கடக்கவேண்டிய ஓமந்தை இராணுவ
சோதனைச் சாவடியில் உள்ள பட்டியலில் அவர்கள் தேடிப் பார்த்தனர். அது எனது மறுப்பை உறுதிப்படுத்தியது."
பரமேஸ்வரியை விசாரித்தவர்கள், மெளபிம பத்திரிகைக்கு எழுத
வேண்டாம் என்று அச்சுறுத்த முயற்சித்ததோடு அந்தப் பத்திரிகை புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஏற்றுக்கொள்ளுமாறும்
அச்சுறுத்தியுள்ளனர். பரமேஸ்வரி இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எழுதி வந்தார். அரசாங்கத்தை
விமர்சிக்கும் இந்த செய்தித்தாள் புலிகளுடன் தொடர்புடையதல்ல.
மெளபிம பத்திரிகையின் உரிமையாளர் முன்னால் சிரேஷ்ட அமைச்சரான மங்கள
சமரவீரவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தவராவார். கடந்த பெப்பிரவரியில் இராஜபக்ஷவால் சமரவீர பதவி
விலக்கப்பட்டார். சமரவீரவின் வாயை அடக்குவதற்காக அரசாங்கம் அவருக்கு எதிரான மோசடி
குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. அத்தோடு மெளபிம பத்திரிகையும் இலக்குவைக்கப்பட்டதோடு
அதனது நிதி முகாமையாளர் கைதுசெய்யப்பட்டு நிதி அபகரிக்கப்பட்டதை அடுத்து பத்திரிகை மூடப்பட்டது.
பொலிசாரும் அரசாங்க அமைச்சர்களும் பரமேஸ்வரிக்கு எதிரான திட்டமிட்ட
தொந்தரவுகளை முன்னெடுத்தனர். அவர் புலி ஆதரவாளராக குற்றஞ்சாட்டப்பட்டார். சுசந்தியுடன் அறையைப்
பகிர்ந்துகொண்டதால் பரமேஸ்வரி ஒரு தற்கொலைக் குண்டுதாரியை பாதுகாத்து வைத்திருந்தார் என்ற
அப்பட்டமான பொய்யை பெரும்பாலான சிங்கள மற்றும் ஆங்கில நாளிதழ்களும் அதே போல் தமிழ் நாளிதலான
வீரகேசரியும் மீண்டும் மீண்டும் வெளியிட்டன. அவர்கள் கைது செய்யப்பட்ட மறுநாள், லங்காதீப, திவயின
மற்றும் அரசாங்கப் பத்திரிகையான FùIù போன்ற பத்திரிகைகள், இந்த இருவருக்கும்
சொந்தமான வெடிபொருட்கள் மற்றும் கிளேமோர் குண்டுகளையும் பொலிசார் மீட்டதாக பொய்யான செய்திகளை
முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தன.
எவ்வாறெனினும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (டி.ஐ.டி.) பரமேஸ்வரிக்கு
அல்லது சுசந்திக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தவறிவிட்டனர். இறுதியாக மார்ச் 21ம்
திகதி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டது. சுசந்தி இன்னமும்
தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பரமேஸ்வரி மற்றும் சுசந்தியின் கைதுகள் எந்தவொரு ஊடக விமர்சனத்திற்கும்
எதிராக அரசாங்கத்தால் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே இடம்பெற்றுள்ளது. ஊடக
விமர்சகர்கள் "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக" தொடர்ந்தும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.
இராஜபக்ஷ 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியதில்
இருந்து, ஒன்பது ஊடக சேவையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான சம்பவங்களில் இராணுவத்துடன்
செயற்படுபவர்கள் என நினைக்கக்கூடிய அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் இந்தக் கொலைகள்
நடைபெற்றுள்ளன.
பரமேஸ்வரியும், சுசந்தியும் இலங்கை பாதுகாப்புப் படையினராலும் அவர்களுடன்
சேர்ந்து இயங்கும் துணைப்படையினராலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களில்,
குறிப்பாக தமிழர்களில் இருவராவர். பல சம்பவங்களில், இருக்கும் இடம் அல்லது நிலைமையைப் பற்றியோ
எந்தவொரு தகவலும் இன்றி பலர் சாதாரணமாக காணாமல் போயுள்ளனர். யுத்தத்திற்கு விரோதமாக
விரிவடைந்துவரும் எதிர்ப்பை அடக்குவதற்கான ஒரே வழிமுறையாக இந்த நடைமுறைகளை இராஜபக்ஷவின்
அரசாங்கம் நாடியுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மார்ச் 22 மாலை வடக்கில்
யாழ்ப்பாணத் தீவுகளில் காணமல் போன கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்
சிவநாதன் மதிவதனன் ஆகியோர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக அவசர விசாரணையொன்றைக் கோரி தற்போது
பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவரை சோ.ச.க. சேகரித்துக்கொண்டுள்ள ஆதாரங்கள் ஊர்காவற்துறை தீவை
கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கடற்படை மற்றும் பொலிஸின் தலையீட்டை இதில் சுட்டிக்காட்டுகின்றன. பாதுகாப்பு
அமைச்சும் மற்றும் பொலிசும் இதுவரை இந்த இருவரையும் கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடத்துமாறு
சோ.ச.க. விடுத்துள்ள கோரிக்கையை தட்டிக்கழித்து வருகின்றன.
இவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணையைக் கோரி
கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
e-mail: secretary@defence.lk
N. G. Punchihewa
Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road,
Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924
பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) மற்றும் உலக சோசலிச
வலைத் தளத்திற்கும் அனுப்பிவையுங்கள்.
Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk
உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து
இந்த
online
படிவத்தை பயன்படுத்தவும். |