World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The pathetic end of the French "anti-capitalist left"

பிரெஞ்சு "முதலாளித்துவ - எதிர்ப்பு இடதின்" பரிதாபகரமான முடிவு

By Peter Schwarz
9 January 2007

Back to screen version

சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக இந்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் செகோலென் ரோயால் நியமனம் பெற்றுள்ளதை அடுத்து, ஒரு "தாராள-எதிர்ப்பு" ("தாராள" என்றால் "தடையற்ற சந்தை" என்ற பொருளில்) அல்லது "முதலாளித்துவ-எதிர்ப்பு இடது" வேட்பாளரை நிறுத்துவதற்கான திட்டம் பரிதாபகரமாக உள்ளுக்குள்ளேயே பொறிந்து போனது.

பாரிசிற்கு வடக்கில் Ile Saint-Denis ல், டிசம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்ற "கூட்டுக்கள்" என்று அழைக்கப்பட்டவர்களுடைய தேசியக் கூட்டம் 2007 ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு பொது வேட்பாளர் பற்றி உடன்பாடு காணமுடியாமற் போயிற்று; இதற்குக் காரணம் கூட்டில் இருக்கும் பல அரசியல் பிரிவுகள் ஒற்றுமை காணமுடியாத அளவிற்கு பிளவுகளைக் கொண்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக் (LCR), பல தொழிற்சங்கங்கள், சமூக எதிர்ப்பு இயக்கங்கள், பூகோளமயமாக்கலை எதிர்ப்பவர்கள், சோசலிஸ்ட் கட்சியின் சில தனிப்பட்ட பிரதிநிதிகள் (PS) மற்றும் பசுமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று இக்கூட்டை உருவாக்கியிருந்தனர்.

எல்லாவற்றிகும் மேலாக, போலி-ட்ரொட்ஸ்கிச LCR, ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு பற்றிய மே 2005 வாக்கெடுப்பின்போது "வேண்டாம்" வாக்கிற்கு வாதிட்டிருந்த அனைத்து இடது அமைப்புக்களையும் விடாப்பிடியாக ஒரு பரந்த அரசியல் இயக்கம் அல்லது கட்சியாக சேர்த்துக் கொண்டுவர முயன்றிருந்தது.

LCR இன் கருத்தின்படி, அவ்வமைப்பு கட்சியின் ஜனவரி 2006, 16ம் தேதி மாநாட்டில் வைத்தவாறு, பொதுவாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வெற்றிபெற்ற வாக்கு "இடதிற்கு ஒரு புதிய நிலைமை" இப்பொழுது எழுந்துள்ளதை அர்த்தப்படுத்தியது. இந்த "வேண்டாம்" வாக்கு என்பது "அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு பொது இயக்கத்தை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்டமாக இருக்கும்" என்றும் இதனால் "ஒரு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு சக்தியை நிறுவுதல்" இயலும் என்றும் கூறப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பின் அனைத்து இடது எதிர்ப்புக்களையும், "100 சதவிகித இடதுசாரியாக இருக்கும் ஒரு இடதுக்கு ஆதரவில் உண்மையான சமபலநிலையை அரசியல் ரீதியாக வெளிப்படுத்த இயலக்கூடிய" ஒரு புது உருவாக்கத்தில் ஐக்கியப்படுத்துவதற்கு LCR தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மீது LCR பெரும் நம்பிக்கைகளை கொண்டுள்ளது; அதன் மாநாட்டுத் தீர்மானத்தின்படி "முக்கியமான முட்டுச்சந்தில் நிற்பதாக" இது கூறியுள்ளது; "ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பை வேண்டாம் பிரச்சாரத்தின் தர்க்கரீதியான தொடர்ச்சியாக ஏற்று அனைத்து இடது அமைப்புக்களும் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்ற உடன்பாடாக இருக்க வேண்டுமா அல்லது வேண்டும் முகாம் என்று அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்னோக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ற தவிர்க்க முடியாத மாற்று விருப்பங்களை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ளுவதாக LCR கூறுகின்றது. "வேண்டும்" வாக்கு முகாமில் உள்ள இடது அமைப்புக்கள் சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரிப் பெரும்பான்மையை குறிக்கின்றன என்றும் அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பை ஏற்பதை மும்முரமாய் ஆதரிக்கின்றன என்றும் கொள்ளப்பட்டது.

கூட்டில் LCR பங்கு பெறத் தயாராக இருந்ததை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது; தன்னுடைய இடது சாரித் தோற்றம் பளபளப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதியது; பல தசாப்தங்கள் சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைத்ததாலும், கணக்கிலடங்கா சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் பங்கு பெற்றதாலும் அது தீவிரமாக சமரசம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு சோசலிஸ்ட் கட்சியுடன் தன்னுடைய உறவுகளை முறித்துக் கொள்ளும் எண்ணம் சிறிதும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடையாது என்பது தெளிவாயிற்று. பிரெஞ்சு அரசியலைப் புரிந்து கொள்ளுபவர்களுக்கு இது உண்மையான வியப்பாக இருக்கப்போவதில்லை. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பாதுகாப்பாளராகவும் 1930 களில் மக்கள் முன்னணி அரசாங்கங்களில் இருந்து பங்கு பெற்று வந்ததில் இருந்தும், போருக்குப் பிந்தைய சார்ல்ஸ் டு கோலின் அரசாங்கத்தில் பங்கு பெற்றதில் இருந்தும் பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு ஒரு நம்பிக்கைக்குரிய தூணாகவும் இருந்தது. 1968ல் பொது வேலை நிறுத்தத்தை அடக்குவதில் இது ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தது. 1971ம் ஆண்டு இது சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா மித்திரோன் உடன் கூட்டு சேர்ந்திருந்தது; 1981 முதல் 2002 வரை பல அரசாங்கங்களிலும் மந்திரிப் பதவிகளை வகித்து வந்தது.

சோசலிஸ்ட் கட்சியுடன் PCF அரசியல்ரீதியாக மட்டும் நெருக்கமாக பிணைந்திருக்கவில்லை; அமைப்பு ரீதியாகவும் அது சோசலிஸ்ட் கட்சியையே நம்பியுள்ளது. பிரெஞ்சு வாக்களிப்பு முறையின் தனித்தன்மைகள் சோசலிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடுகளை கொள்ளாவிட்டால், பிரெஞ்சு ஸ்ராலினிச கட்சிக்கு பாராளுமன்றத்தில் இடங்கள் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் கடினமாகும்; அது போல் வட்டார, உள்ளூர் பதவிகளைப் பெறுவதும் முடியாது; கட்சியின் எந்திரம் முழுவதும் அப்படிப்பட்ட தளத்தைத்தான் கொண்டுள்ளது.

இவ்வாறு இருந்த போதிலும்கூட, ஒரு "புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு சக்தியின்" முக்கிய கூறுபாடாக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வரக்கூடும் என்ற போலித் தோற்றத்தை LCR வளர்க்கிறது. ஜனவரி மாத மாநாட்டின் தீர்மானங்களில், LCR, "கடந்த சில ஆண்டுகளில் பின்னடைவு இருந்தபோதிலும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் ஒரு போர்க்குண நோக்கையும் 'கம்யூனிசக் கருத்துடைய மக்களிடத்தில்' செல்வாக்கையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றும் இதையொட்டி வாக்கெடுப்புப் பிரச்சாரத்தில் அது ஒரு மத்திய பங்கை ஆற்ற முடிந்தது" என்றும் அறிவித்தது.

கடந்த இலையுதிர்காலத்தில் தன்னுடைய சொந்தத் திட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்று LCR இறுதியில் உணர்ந்தது. இன்னும் கூடுதலான வகையில் அரசாங்கக் கூட்டை சோசலிஸ்ட் கட்சியுடன் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கோர முற்பட்டது என்பது இனி மறுப்பதற்கில்லை. சோசலிஸ்ட் கட்சி, ரோயாலை --கட்சியின் வலதுசாரிப் பிரதிநிதியை-- ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளது என்ற போதிலும் இதன் நிலைமை இப்படித்தான். தன்னுடைய கோலிச எதிர்ப்பாளர், இழிவான நிக்கோலா சார்க்கோசியின் அரசியலில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் எந்த வேறுபாட்டையும் கொண்டிராத அரசியலை கொண்ட நேர்மையற்ற பிழைப்புவாதிதான் ரோயால் ஆவார். இவ்வம்மையார் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயரைப் பெரிதும் பாராட்டிப் புகழ்பவர் ஆவார்; உள்நாட்டு பாதுகாப்பு, குடியேற்ற கொள்கை ஆகியவற்றில் சார்க்கோசிக்கு எதிராக வலதில் இருந்து போட்டியிட விரும்புகிறார்.

LCR ல் உள்ள பெரும்பான்மை, அலன் கிறீவின், ஒலிவியே பெசன்ஸனோ உடைய தலமையின்கீழ், கூட்டுக்களிடம் இருந்து தங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டனர். LCR ல் மூன்றில் ஒரு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும், கிறிஸ்ரியான் பிக்கேயின் கீழ் ஒரு சிறுபான்மை, தங்களின் "பன்முக இடது" என்று அழைக்கப்பட்டதின் புதிய பெயரமைப்பில் பங்கு கொள்வதற்கான அதன் தயார்நிலையை தொடர்ந்தது மற்றும் சமிக்கை செய்தது; இது சோசலிஸ்ட் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் முதலாளித்துவ தீவிரப்போக்கினரின் கூட்டணியாகும்; இதைத் தளமாகக் கொண்டுதான் முன்னாள் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் செயல்பட்டிருந்தார்.

LCR வாபஸ் பெற்றபின்னர், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டுக்களை ஒரு தேர்தல் அமைப்பாக தன்னுடைய கட்சித் தலைவர் Marie-Georges Buffet யின் கீழ் மறு சீரமைக்க முயன்றது. ஆனால் இந்த நடவடிக்கை ஏனைய தொடர்புடைய அரசியல் கூறுபாடுகளின் எதிர்ப்பைக் கண்டது. டிசம்பர் 9-10 l'Ile Saint-Denis ல் கூடிய தேசிய கூட்டம் Buffet க்கு பெரும்பான்மை கொடுப்பதில் தோல்வி அடைந்தது; அவர் இப்பொழுது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் நிற்கவுள்ளார்.

டிசம்பர் நடுப்பகுதியில், LCR 2007 தேர்தல்களில் "ஒன்றுபட்ட வேட்பாளர்களை" அமைக்கும் தன்னுடைய முயற்சிகள் பற்றி, ஒரு இடைக்கால ஐந்தொகையை வெளியிட்டது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு வருங்கால பாராளுமன்ற அல்லது அரசாங்க முறைக் கூட்டை சோசலிஸ்ட் கட்சியை தவிர்த்து அமைப்பதற்கு தயாராக இல்லை என்றும் "சோசலிஸ்ட் கட்சியுடன் உடன்பாட்டை காணும் விருப்பத்தை கொண்டுள்ளது" என்பதும் நிரூபணம் ஆகியுள்ளன என்று LCR எழுதியது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்துக் கொண்டால்தான் "இடது சக்திகளின் ஒற்றுமையான வேடபாளர்கள் என்பது பொருள் உடையதாக இருக்கும் என்பதால்", LCR மீண்டும் தன்னுடைய சொந்த வேட்பாளராக ஒலிவியே பெசன்ஸனோவை நிறுத்தும்.

இது ஒரு மோசடித்தனமான வாதம் ஆகும். ஆரம்பத்தில் இருந்தே ஒரு இடது ஒற்றுமை உள்ள வேட்பாளருக்கான முழுப்பிரச்சாரமும் பண்பாடற்ற சூழ்ச்சித்திட்ட முறையில் நடத்தப்பட்டு ஒரே ஒரு விஷயத்தைத்தான் இலக்காகக் கொண்டிருந்தது: அதாவது, சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாளித்துவ ஆதரவு பாத்திரத்தின் படிப்பினைகளை தொழிலாளர்கள் அறிந்துகொள்ளுவதிலிருந்தும், மற்றும் தொழிலாளர்கள் இந்த பயனற்ற அமைப்புக்கள் மற்றும் குட்டிமுதலாளித்துவ "இடது" சந்தர்ப்பவாதிகள் மத்தியிலுள்ள அவற்றின் பின்பற்றாளர்களிலிருந்து சுயாதீனமான முறையில் புரட்சிகர சோசலிச மாற்றீட்டை வளர்ப்பதையும் தடுப்பதாகும்.

இப்பணி தற்காலிகமாக என்றாலும், "முதலாளித்துவ-எதிர்ப்பு இடது" என்ற பெயரிலான பிரச்சாரத்தால் சாதிக்கப்பட்டுவிட்டது. செகோலென் ரோயால், ஜனாதிபதித் தேர்தல்களை இடதில் இருந்து ஒரு தீவிரப் போட்டி உடைய எதிர்ப்பாளர் இல்லாமல் சந்திப்பார். ஒலிவியே பெசன்ஸனோ, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் Marie-Georges Buffet மற்றும் சில "இடது" வேட்பாளர்கள் ஏப்ரல் 22 அன்று ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் சுற்றில் பங்கு பெறுவர்; அதன்பின்னர், ரோயால் இரண்டாம் சுற்றுக்கு வந்தால், அதில் "குறைந்த தீமை" என்றும் பெயரில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கப்படும்.

சமீப காலத்தில் வேலைநிறுத்தங்கள், பல வாரங்கள் நடந்த எதிர்ப்பு இயக்கங்கள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களிடம் இதுகாறும் உள்ள மிகப் பெரிய சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பானது தேர்தலில் வெளிப்பாட்டைக் காணாது.

பெசன்ஸனோ ஏற்கனவே ஒவ்வொரு வாய்ப்பின்போதும் அடுத்த அரசாங்கத்தை எவர் அமைப்பது என்ற பிரச்சினையை தீவிரமாக ஆராய்வதாக வலியுறுத்தி வருகிறார் -அதாவது சார்க்கோசியா, ரோயாலா என்பது பற்றி. கடந்த ஜனாதிபதித் தேரத்ல்களில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெசன்ஸனோவும் LCR உம் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உடன் சேர்ந்துகொண்டு, இரண்டாம் சுற்றில் புதிய பாசிச வேட்பாளர் ஜோன் மரி லூ பென்னுக்கு எதிராக கோலிச ஜாக் சிராக்கிற்கு வாக்கு அளித்தனர்.

LCR இன் சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சித்திட்டங்களுக்கு பின்னால் அரசியல் அறியாமை அல்லது குழப்பம் உள்ளது என்று கருதுவது தவறாகிவிடும். பல தசாப்தங்களாக LCR மற்றும் அது சார்ந்துள்ள சர்வதேச போக்கான பப்லோவாத ஐக்கிய செயலகமும் பல ஸ்ராாலினிச, சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு பின்னும் முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கு பின்னும் அவற்றை வழிநடத்துவதன் மூலம் புரட்சிகர அபிவிருத்திகளை தோற்கடிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளன.

இந்த இலக்கை கருத்திற்கொண்டு, தன்னுடைய பெயரை இப்போக்கிற்கு கொடுத்த மிசேல் பப்லோ, ஐக்கிய செயலகத்தின் முன்னாள் நீண்டகால தலைவர் ஏர்னஸ்ட் மண்டேல், அவருடைய பிரெஞ்சு உதவியாளர் அலன் கிறீவின் ஆகியோர் தொடர்ந்து ஸ்ராலினிச, சீர்திருத்தவாத அல்லது தேசிய இயக்கங்களையும் அவற்றின் தலைவர்களையும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான புரட்சிகர கட்சியை கட்டி எழுப்புவதற்கான அவசியத்தை பதிலீடு செய்துவிட்டனர் அல்லது தேவையற்றதாக்கிவிட்டனர் என்று கூறி, போற்றிப்புகழ்ந்து வந்துள்ளனர்.

அல்ஜீரிய FLN, பிடல் காஸ்ட்ரோவின் இயக்கம் மற்றும் நிக்கரகுவாவின் சன்டனிஸ்டா அனைத்தும் ஐக்கிய செய்யகத்தின் முன் மாதிரிகள் ஆகும்; அதேபோல் மிகையீல் கோர்பச்சேவ் மற்றும் போரிஸ் யெல்ட்சின், சமீபத்திய காலத்தில் வெனிசூலிய ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ், பொலிவயாவின் ஜனாதிபதி எவோ மோரேல்ஸ் ஆகியோரும் இவர்களுக்கு முன்மாதிரிகள் ஆவர்.

இதன் விளைவுகள் இப்படியேதான் இருந்துள்ளன: பப்லோவாதிகளால் புகழ்ந்நேத்தப்பட்டுள்ள இயக்கங்கள் வலதிற்கு தீவிரமாக திரும்பியுள்ளன அல்லது வலதுசாரி சக்திகளுக்கு தங்கள் கதவுகளை திறந்து வைத்துள்ளன. இந்த தலைவர்களும் இயக்கங்களும் அதிகாரத்திற்கு வருவதற்கு உதவிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிலாசைகள் பின்னர் அடக்கப்பட்டு அவை காட்டிக் கொடுக்கப்பட்டன. பலமுறையும் தொழிலாளர்கள் இதற்கு மிகப் பெரிய அளவில் குருதி சிந்தி விலைகொடுத்துள்ளனர்.

இன்னும் சமீபகாலத்தில், ஐக்கிய செயலகத்தின் உறுப்பினர்கள் முதலாளித்துவ அரசாங்கங்களில் மந்திரிப் பதவிகளையும் எடுத்துக் கொண்டுள்ளனர். பிரேசிலில் பப்லோவாதிகள், ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தொழிலாளர்கள் கட்சியில் சேர்ந்து, அவருடைய அரசாங்கத்திலும் பங்கு பெற்றுள்ளனர். இத்தாலியில் இவர்கள் Rifondazione Comunista வின் தலைமையில் தீவிரப் பங்கை கொண்டுள்ளனர்; அது ரோமனோ பிரோடியின் கூட்டரசாங்கத்தின் முக்கிய கூறுபாடாக உள்ளது.

சோசலிஸ்ட் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி அரசாங்கத்திலே தான் சேராது என்ற LCR-ன் வலியுறுத்தல்களால் ஒருவர் ஏமாற்றப்படக் கூடாது. அதன் அரசியலின் முழு தர்க்கமும் ஒரு முடிவை சுட்டிக்காட்டுகின்றன: சமூக நெருக்கடி உக்கிரமானால் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதன் தொடர்ச்சியான ஆட்சியை உறுதிப்படுத்த "இடது" அரசாங்கம் என்னும் ஒரு பாதுகாப்பு வால்வு தேவைப்பட்டால் அது மந்திரி பதவிகளை ஏற்றுக் கொள்ளும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved