World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்For an international mobilization of workers and youth against the war in Iraq ஈராக்கில் யுத்தத்திற்கு எதிராக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அனைத்துலக ரீதியில் அணிதிரட்டு Statement of the World Socialist Web Site and the
International Committee of the Fourth International உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கத் தலைமையில் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு எதிராக, பரந்த சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கமொன்றை அபிவிருத்தி செய்வதன் பேரில் 2007ம் ஆண்டை அர்ப்பணிக்குமாறு உலகம் பூராவும் உள்ள சமூக நனவுகொண்ட அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்புவிடுக்கின்றன. புஷ் நிர்வாகமானது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு விரோதமான எதிர்ப்பை நசுக்குவதற்காக ஈராக்கிற்கு மேலும் 21,500 துருப்புக்களை அனுப்பக் கட்டளையிட்டுள்ளது. இது, ஏற்கனவே நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்களின் உயிர்களை பலிகொண்ட மற்றும் மூன்றாயிரத்திற்கும் மேலான அமெரிக்க துருப்புக்களும் பிரித்தானியா, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், உக்ரெயின் மற்றும் ஏனைய "கூட்டணி" நாடுகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான துருப்புக்களும் கொல்லப்பட்டுள்ள யுத்தத்தை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கு சமிக்ஞை காட்டியுள்ளது. பாக்தாத்திற்கு அருகாமையில் மக்கள் தொகை நிறைந்து வரும் பகுதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் அன்பார் மாகாணத்தின் ஜனநெருக்கடி மிக்க மையங்கள் ஆகியவற்றிற்கு எதிராக, புஷ் அமெரிக்காவின் ஆயுத பலத்தை திருப்பத் திட்டமிட்டுள்ளார் என்பது மட்டுமன்றி, பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை தளத்தை கட்டியெழுப்புவதன் மூலமும், சிரியாவுக்கும் ஈரானுக்கும் எதிராக மத்திய கிழக்கில் உள்ள பங்காளிகளை அணிசேர்க்கும் வாஷிங்டனின் இராஜதந்திர தாக்குதல்களின் மூலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது போல், புதிய ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும் அவர் தயாராகிக்கொண்டிருக்கின்றார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். ஈராக்கில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் "கிளர்ச்சிக்காரர்களின் மற்றும் பயங்கரவாதிகளின்" ஆதரவு வலையமைப்புக்களை "தேடிக் கண்டுபிடித்து அழிக்க'' புஷ் கட்டளையிட்டிருப்பதானது, இந்த இரு நாடுகளுக்குள்ளும் அதிகளவிலான ஆத்திரமூட்டல் மற்றும் இராணுவ படையெடுப்புகளுக்கும் களம் அமைக்கும். ஈரானுக்கும் சிரியாவிற்கும் எதிரான நகர்வுகளின் முதல் நடவடிக்கையாக, கடந்த ஜூலையில் ஹிஸ்புல்லாவை ஒழிக்க லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்த யுத்தத்தை அமெரிக்கா ஆதரித்தது. இஸ்ரேலின் பின்னடைவானது பரந்த யுத்த ஆபத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக அதை உக்கிரமடைய செய்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலும் அமெரிக்க இராணுவமும் தீட்டியுள்ள முன்கூட்டிய திட்டங்களின் விபரங்களை ஊடக செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த திட்டங்கள் 1945 ன் பின்னர் முதல்தடவையாக அணுவாயுதங்களை பயன்படுத்துவதையும் உள்ளடக்கும். ஷியைட் ஈரானுக்கு எதிராக ஆதரவு திரட்ட சவுதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற சுன்னிகள் பெரும்பான்மையாக உள்ள அரசுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை தொடக்கியுள்ளது. இது ஈராக்கில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை முழு பிராந்தியத்தையும் விழுங்கக்கூடிய குறுகிய பிரிவுவாத மோதல்களாக திருப்ப அச்சுறுத்துகின்றது. இந்த நடவடிக்கைகள், உலக ஜனத்தொகையில் பரந்த பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கு நேரடி எதிராக முன்னெடுக்கப்படுகின்றன. கருத்துக் கணிப்புகள் ஒவ்வொரு நாட்டிலும் யுத்தம் தொடர்பாக பெருக்கெடுக்கும் எதிர்ப்பை மீண்டும் மீண்டும் பதிவுசெய்துள்ளன. கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் யுத்தத்திற்கு எதிராக வாக்களித்ததோடு, அமெரிக்கக் காங்கிரசின் இரு சபைகளிலும் குடியரசுக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டிய அமெரிக்க மக்களால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்தை வெள்ளை மாளிகை புறக்கணித்துள்ளது. ஈராக்கினுள்ளேயும் கூட, பெரும்பாலான மக்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்ட விரும்புவது மட்டுமன்றி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஆயுதத் தாக்குதல்களையும் ஆதரிக்கின்றனர். ஈராக்கின் பிரமாண்டமான எண்ணெய் வளங்கள் முழுவதன் மீதும் தனது கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதன் பேரிலும், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா பூராவும் தனது பரந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை உருவாக்கவும் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்து இலத்தீன் அமெரிக்கா மற்றும் தென் பசுபிக் வரை, பூகோளத்தின் ஒவ்வொரு பாகத்திலும் வளங்கள், மலிவு உழைப்பு மற்றும் சந்தைகளை கைப்பற்றுவதற்காக பெரும் வல்லரசுகளுக்கிடையில் நடைபெறும் போட்டி உக்கிரமடைந்து கொண்டிருக்கின்றது. ஆபிரிக்காவை கைப்பற்றிக்கொள்வதற்கான ஒரு புதிய போட்டி கருவுற்றுள்ளது. சோமாலியாவில் ஆபிரிக்க மக்களை படுகொலை செய்வதை தொடங்கி வைத்துள்ள அமெரிக்க இராணுவ இயந்திரம், தனது யுத்த விமானங்களையும் விசேட நடவடிக்கை கொலைக் குழுக்களையும் அனுப்பிவைத்துள்ள அதேவேளை, ஒரு பிராந்திய யுத்தத்தை தூண்டிவிட்டுள்ளது. எதிர்காலத் தலையீடுகளுக்கு தயாராவதற்காக அமெரிக்க இராணுவ மற்றும் கடற்படையினரின் தொகையை நிரந்தரமாக அதிகரிப்பதற்கான திட்டங்களை வாஷிங்டன் வெளியிட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பாக, இந்தியா மற்றும் சீனா போன்ற புதிதாகத் தோன்றிவரும் பெரும் வல்லரசுகள் உட்பட அனைத்து வல்லரசுகளும், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக தமது இராணுவத் திறனை உயர்த்துவதுடன் யுத்தத்திற்காகவும் தம்மை வலுப்படுத்தி வருகின்றன. முழு மனித குலத்தையும் அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவவாதத்தின் வன்முறை வெடிப்பானது முழு உலகமும் பற்றியெரியும் ஆபத்தை எழுப்பியுள்ளது. பூகோள ரீதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வகிக்கின்ற பாத்திரமானது, அதன் அராஜகம், செல்வம் திரட்டுவதில் பேராசை மற்றும் அலட்சியத்தில், 1939ல் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு சற்று முந்திய காலகட்டத்தில் ஜேர்மன் மற்றும் ஜப்பான் ஏகாதிபத்தியங்களுடன் மேலும் மேலும் ஒத்ததாகின்றது. 1930களில் போலவே, உலக அரசியலின் திசையானது பித்துப் பிடித்தவர்களால் தீர்மானிக்கப்படுவதாகவே அதிகரித்தளவில் தோன்றுகிறது. எவ்வாறெனினும், பித்துப்பிடித்ததுபோல தோன்றுவது உண்மையில் உலக முதலாளித்துவத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் அதன் ஆளும் வர்க்கத்தின் சட நலன்களின் உற்பத்தியேயாகும். ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் வெடிப்பிற்கான அடிப்படைத் தூண்டுகோலை உலக முதலாளித்துவ முரண்பாடுகளில் காணவேண்டும். அதாவது பூகோள ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய அரச அமைப்பிற்கும் இடையிலும், மற்றும் பரந்த சமுதாயத்தின் சமூக உற்பத்தி நிகழ்வுப் போக்குகளுக்கும் தனியார் சொத்துடமையை அடிப்படையாக கொண்ட சந்தைப் பொருளாதாரத்தின் அராஜக பண்புக்கு இடையிலும் காணவேண்டும். பூகோளப் பொருளாதாரத்தின் மேலும் மேலும் நெருக்கமான ஒருங்கிணைப்பின் பெறுபேறாக, இத்தகைய முரண்பாடுகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக மிகப்பரந்தளவில் உக்கிரமடைந்துள்ளன. அவை, அவற்றின் மிகவும் ஒருமுனைப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்திலேயே கண்டுள்ளன, அது ஒரு பொருளாதார சக்தி என்ற நிலையில் இருந்து நீண்டகாலமாக பின்னிறங்கி வருவதை ஈடுசெய்வதற்காக, தனது இராணுவ மேல்நிலையை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடு மற்றும் ஒரே "சிறந்த வல்லரசு" என்ற தனது தடுமாற்றமான நிலையை பேணிக்காக்க முயற்சிக்கிறது. இந்தக் காலனித்துவக் கொள்கையானது வெளிநாடுகளில் இராணுவ வன்முறைகளை துரிதப்படுத்துவதையும் மற்றும் உள்நாட்டில் பொதுஜனங்களின் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்களை அதிகரிப்பதையும் கோருகிறது. அமெரிக்க யுத்தமானது கொலை மற்றும் அழிவு போன்ற பீதிக்குள் ஈராக்கை திருப்பிவிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்படுவதுடன் இலட்சக்கணக்கானவர்கள் "இனச் சுத்திகரிப்புக்கு" பலியாகின்றனர், மற்றும் பத்துலட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டுள்ளனர். இது அனைத்துலக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொடூரமான தாக்குதல்களின் பாகமாகும். அமெரிக்காவில் மட்டுமன்றி, ஐரோப்பா, ஜப்பான், முந்திய காலனித்துவ நாடுகள் மற்றும் உலகம் பூராவும், தொழில்-நிதி பெருநிறுவன மேல்த்தட்டுகளின் மற்றும் அவர்களின் நலன்களுக்காக சேவையாற்றும் அரசாங்கங்களும் சாதாரண உழைக்கும் மக்களின் தொழில், வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கின்றன. உலக பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடுகடந்த பெருநிறுவனங்கள், சாத்தியமானளவு மலிவு உழைப்புக்காக பூகோளம் முழுவதும் தேடி அலைகின்றன. முன்னைய தலைமுறைகளின் போராட்டத்தில் வெற்றிகொள்ளப்பட்ட சமூக வெற்றிகள் திட்டமிட்டு நிர்மூலமாக்கப்படுகின்றன. யுத்தவிரோத இயக்கங்களுக்கு புத்துயிரளித்தல் உலகம் பூராவும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அமெரிக்க இராணுவவாதத்தை எதிர்க்கின்றனர். ஆனால், யுத்தவிரோத இயக்கங்களின் முன்னோக்கானது இருக்கும் வல்லரசுகளுக்கு எதிரான வலிமையற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பால் செல்ல முடியாத காரணத்தால், இதுவரை அவை மேற்கொண்ட முயற்சிகள் ஒன்றும் இல்லாதவையாக மாறியுள்ளன. தேவைப்படுவது என்னவெனில், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட போராட்டத்தை வழிநடத்த ஒரு புதிய புரட்சிகர அரசியல் முன்நோக்காகும். 2003 பெப்பிரவரியில், ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னதாக இடம்பெற்ற, இதற்கு முன்னர் உலகம் கண்டிராத பிரமாண்டமான யுத்தவிரோத ஆர்ப்பாட்டங்களில் இத்தகைய சர்வதேச போராட்டத்திற்கான ஆற்றல் வெளிப்பட்டது. ஒவ்வொரு கண்டத்திலும் ஏக காலத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பத்து மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வீதிகளுக்கு பெருக்கெடுத்தனர். இத்தகைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் கட்டுண்டிருந்த அரசியல் கருத்துப் போக்குகள்- வெகுஜனக் கருத்துக்களின் பலத்தின் ஊடாக வாஷிங்டனின் மனோதிடத்தை குலைப்பதன் மூலம் அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரம்பு மீறலை தடுப்பதற்கு ஐரோப்பிய சக்திகளையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அணிதிரட்டுவதன் மூலம் யுத்தத்தை தடுக்க முடியும் - என்பவை தவறானவை என்பது சம்வங்களின் செல்திசைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, 2003 மார்ச்சில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத படையெடுப்பின் ஆறு மாதங்களுக்குள், ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஒப்புதலளித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. சமாதானத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஒரு நடுநிலையான சபையாக இருப்பதற்கு பதிலாக, ஐ.நா. சபையானது நவ-காலனித்துவ யுத்தங்களை தயார் செய்யும் திருடர்களின் குகை என்பது அம்பலத்திற்கு வந்தது. புஷ் ஈராக்கில் யுத்தத்தை உக்கிரப்படுத்துவதற்கான அறிவிப்பை அண்மையில் விடுத்ததில் இருந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபை சோமாலியாவில் அமெரிக்க ஆதரவிலான தலையீட்டுக்கு முத்திரை குத்திய போதிலும் கூட, ஈராக் விடயத்தில் அமைதி காத்தது. பெரிய அல்லது சிறிய வல்லரசுகள் அனைத்தும் ஈராக் யுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ளன. பிரிட்டன், ஆவுஸ்திரேலியா மற்றும் போலந்தும் அவப்பெயர்பெற்ற "விருப்பமானவர்களின் கூட்டணியின்" ஸ்தாபக உறுப்பினர்களாக இருப்பதோடு அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பில் பங்களிப்பு செய்வதற்காக துருப்புக்களையும் அனுப்பிவைத்தன. அதே போல் இத்தாலி, போர்த்துக்கல், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நோர்வேயும் துருப்புக்களை அனுப்பியுள்ள அதே சமயம், தென் கொரியா இன்னமும் ஈராக்கில் 2,300 துருப்புக்களை வைத்திருப்பதோடு டென்மார்க்கும் சில துருப்புக்களை அனுப்பி வைத்திருக்கின்றது. ஜேர்மன் அரசாங்கம் தாக்குதலை தொடுப்பற்காக அதன் பிராந்தியத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததோடு பென்டகனுக்கு இராணுவ புலனாய்வை வழங்குவதன் மூலமும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. 2003ல் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பின் எதிரிகளாக காட்டிக்கொண்ட ஜேர்மனியும் பிரான்சும், ஆப்கான் மக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக போராடும் நேட்டோ படைகளுடன் ஆப்கானிஸ்தானில் இணைந்துகொண்டதன் மூலம், அங்கிருந்த அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்கு செல்ல வழியமைத்தன. ரஷ்யாவும் சீனாவும் வாஷிங்டனின் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் மீண்டும் மீண்டும் கீழ்ப்படிந்தன. இவை அமெரிக்கப் படையெடுப்பின் ஆரம்பத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஐ.நா ஒப்புதல் சான்று வழங்குவதற்கு ஐரோப்பிய யுத்த "எதிர்ப்பாளர்களுடன்" இணைந்துகொண்டன. இந்த இரு நாடுகளும், ஈரான் மற்றும் வட கொரியாவை கண்டனம் செய்யும் ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்தன. இந்தக் கண்டனத் தீர்மானத்தை எதிர்காலத் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்கா சுரண்டிக்கொள்ளும். அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு, வரலாற்று ரீதியில் ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஆளும் தட்டுக்கள் அவற்றை தமது சொந்த பிராந்திய அபிலாசைகளை முன்னிலைப்படுத்த பயன்படுத்த முயற்சிப்பதன் மூலம் அதற்குப் பதிலளித்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்பிற்கு துணைபுரிந்ததில் நேரடியாக ஒத்துழைத்த ஈரானிய அரசாங்கம், அப்போதிருந்தே இந்த இரு நாடுகளிலும் ஈரானின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்கத் தலையீடுகளால் எதிர்கொண்டுள்ள நெருக்கடியைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது. லத்தீன் அமெரிக்காவில் தனது சொந்தத் திட்டங்களை கொண்டுள்ள, தொழிலாளர் கட்சியின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவின் பிரேசில் அரசாங்கம், 2003ல் அமெரிக்கப் படையெடுப்பை எதிர்ப்பதில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக்கொண்டது. பின்னர் அது அமெரிக்கக் கடற்படையினரின் --ஈராக்கில் சீர்கேடான தேவைக்கு-- பளுவைத் தணிப்பதற்காக ஹயிட்டிக்கு துருப்புக்களை அனுப்பியது. ஹயிட்டியின் தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதி ஜோன் பேர்டன்ட் அரிஸ்டீட்டை அமெரிக்கா திட்டமிட்டு வெளியேற்றியதை அடுத்து, அந்த வறிய தீவை அமெரிக்க கடற்படை ஆக்கிரமித்துக்கொண்டது. தனது ஆக்கிரமிப்பு யுத்தங்களை நியாயப்படுத்துவதற்கான சாக்குப் போக்காக, நாட்டுக்கு நாடு வாஷிங்டனால் தொடங்கிவைக்கப்பட்ட "பயங்கரவாதத்தின் மீதான பூகோள யுத்தம்" என சொல்லப்படுவது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத குற்றங்களின் பேரில், குற்றம் நடந்த இடத்தில் அன்றி வேறோர் இடத்தில் இருப்பதாக சான்றுகளை காட்டும் அரசியல் வாதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் போலி யுத்தமானது சீர்திருத்தவாத மற்றும் தேசியவாத இயக்கங்கள் உட்பட, ஏகாதிபத்திய- மேலாதிக்கமுள்ள நிலவும் நிலைக்கு விரோதமான ஒவ்வொரு எதிர்ப்பையும் ஒட்டுமொத்தமாக அடக்குவதற்கான மூடுதிரையாக சேவை செய்கின்றது. உதாரணமாக இலங்கையில், கொழும்பில் உள்ள அரசாங்கமானது தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான தனது இராணுவ ஆக்கிரமிப்பை இந்த "யுத்தத்தின்" பாகமாக பிரகடனம் செய்துகொள்வதோடு அது மேற்கொள்ளும் அட்டூழியங்களுக்காக வாஷிங்டனின் நேரடியான அரசியல் மற்றும் இராணுவ ஆதரவைப் பெற்றுள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய இடங்களிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் ஓரளவுக்கு வாயளவிலேனும் யுத்தத்தை எதிர்த்தாலும், வாஷிங்டனுடனான அவர்களின் வேறுபாடுகள் தூய தந்திரோபாய பண்பைக் கொண்டுள்ளன. இவை, பிராந்தியத்தில் அவர்களது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் என்ற பீதியில் இருந்தே ஊற்றெடுக்கின்றன. இறுதி ஆய்வுகளில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அவர்கள் அனைவருமே முதலாளித்துவ ஸ்திரநிலைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் புரட்சிக்கு எதிரான பாதுகாப்பு அரணாகவும் நம்பி அதில் தங்கியிருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளும் தீர்க்கமான அரசியல் படிப்பினைகளை வழங்கியுள்ளன. அமெரிக்காவில் அல்லது உலகின் வேறெங்கிலும் உள்ள உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புகளுக்கு அழைப்புவிடுப்பதன் ஊடாக ஈராக் யுத்ததையோ அல்லது எதிர்கால ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்களையோ நிறுத்த முடியாது. முதலாம் உலக யுத்தத்திலும் இரண்டாம் உலக யுத்தத்திலும் போலவே, இன்றும் யுத்தத்திற்கு எதிரான போராட்டம் ஒரு அனைத்துலக வர்க்கப் பிரச்சினையாகியுள்ளது. ஏகாதிபத்திய கொள்ளையடிப்புக்களில் அக்கறையில்லாத உழைக்கும் மக்களின் சுதந்திரமான அரசியல் அணிதிரள்வை நோக்கிய பாதையில் சமாதானத்திற்கான அழைப்புக்கள் திருப்பப்படாத வரை அவற்றினால் எதையும் சாதிக்க முடியாது. யுத்தத்திற்கு எதிரான போராட்டம் அனைத்துலக சோசலிச மூலோபாயத்தின் அடிப்படையில் தொடுக்கப்பட வேண்டும். அமெரிக்க இராணுவவாதமும் அமெரிக்க ஜனநாயகத்தின் நிலைமுறிவும் ஈராக் மீதான யுத்தம் ஜனநாயகத்திற்காக முன்னெடுக்கப்படுவதாக புஷ் நிர்வாகம் கூறிக்கொள்ளும் அதே வேளை, யுத்தத்தை மேலும் உக்கிரப்படுத்தும் நடவடிக்கையானது அமெரிக்காவின் உள்ளேயே ஜனநாயக நடைமுறைகளின் வீழ்ச்சியை அம்பலப்படுத்த சேவையாற்றுகிறது. கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் யுத்தத்திற்கான வெகுஜன எதிர்ப்பு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டதோடு, இந்த எதிர்ப்பை உலகம் பூராவும் உள்ள மில்லியன்கணக்கான மக்கள் ஆதரித்த போதிலும், அது அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திலோ அல்லது அதன் இரு பிரதான கட்சிகளிலோ உண்மையான வெளிப்பாட்டைக் காணவில்லை. "இன்றைய காங்கிரஸ் மற்றும் ஆளுநர் தேர்தல்களின் முடிவுகள் என்னவாக இருந்தாலும், நவம்பர் 7ன் பின்னர், ஈராக்கில் ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்களுக்கும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு அரசியல் நிர்வாகத்தையே அமெரிக்க உழைக்கும் மக்கள் எதிர்கொள்வர்," என உலக சோசலிச வலைத் தளம் தேர்தல் தினத்தன்றே எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கை முழுமையாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. புஷ்ஷுக்கும், அரசியல் ஸ்தாபனத்தினுள் அவரை விமர்சிப்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், தந்திரங்கள் மற்றும் வழிமுறைகளுமே அன்றி கொள்கைகளோ நோக்கங்களோ அல்ல. யுத்தத்தை முன்னெடுப்பது தொடர்பான முறையீடுகள் என்னவாக இருந்தாலும், ஈராக்கில் உள்ள துருப்புக்களை உடனடியாக திருப்பியழைப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதில் அனைவரும் உடன்பாடுகொண்டிருப்பதோடு, தீர்க்கமான அமெரிக்க நிதி மற்றும் பூகோள மூலோபாய நலன்கள் பணயமாக வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் வெற்றிக்காக பரந்த யுத்த விரோத உணர்வுகளுக்கு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கடமைப்பட்டிருந்த போதிலும், புஷ்ஷின் யுத்தத்தை உக்கிரப்படுத்தும் திட்டத்திற்கு அதன் தலைவர்கள் குறுக்கே நிற்கமாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளதோடு, யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான தமது திட்டத்தின் ஒரே வழிமுறையாக இருந்த, ஜனாதிபதி மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்துவது அல்லது இராணுவத்திற்கான நிதியை வெட்ட வாக்களிப்பது போன்றவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுள்ளனர். மூத்த புஷ்ஷின் நிர்வாகத்தில் பிரதான தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரும் ஈராக் ஆய்வுக் குழுவால் வரையப்பட்ட திட்டத்தின் அடிப்படை சிற்பியுமான பிரென்ட் ஸ்கொவ்க்ரொஃட், இந்த கொடூரமான கொள்கைகளின் அடிப்படைகளை வெளிப்படுத்தினார். ஸ்கொவ்க்ரொஃட் ஜனவரி 4 அன்று நியூ யோர்க் டைம்சுக்கு எழுதிய கட்டுரையில், ஈராக் ஆய்வுக் குழு ஈராக்கில் "மிகவும் ஆழமான மற்றும் சீரழிந்த" நிலைமையை ஒப்புக்கொண்டுள்ள போதிலும், அமெரிக்க வெற்றியின்றி அமெரிக்கத் துருப்புக்களை வெளியேற்றுவதானது "பிராந்தியத்திலும் மற்றும் அதற்கு அப்பாலும் சாத்தியமான அழிவுகரமான விளைவுகளுடன், அமெரிக்க நலன்களுக்கு ஒரு மூலோபாயத் தோல்வியாக இருக்கும்," என வலியுறுத்துகிறார். "இந்த தாக்கங்கள் ஈராக் மற்றும் மத்திய கிழக்கிற்கு மட்டும் வரையறுக்கப்படாது. பூகோள பொருளாதாரத்திற்கு இன்றியமையாத எரிசக்தி வளங்கள் மற்றும் அவை விநியோகிக்கப்படும் இடைத்தங்கல் நிலையங்கள் பெருமளவில் அதிகரித்த ஆபத்துக்குள்ளாகும். எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் உற்சாகமடைவர். மற்றும், உலகம் பூராவும் ஏற்படும் உணர்வுகள், அமெரிக்க பேருருவம் ஆட்டங்கண்டுள்ளதாகவும் பொருத்தமான பங்காளியாக அல்லது நண்பனாக அல்லது இந்தத் தீர்க்கமான பிராந்தியத்தில் சமாதானத்திற்கும் ஸ்திரநிலைக்கும் உத்தரவாதமளிப்பவராக இதற்கு மேலும் கருதப்பட முடியாததாகவும் இருக்கும்" என ஸ்கொவ்க்ரொஃட் தொடர்கிறார். இங்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்தக் குறிக்கோள்கள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவை ஆளும் நிதித் தட்டு, தனது சொந்த பூகோள மேலாதிக்கத்தை நிறுவவும் மற்றும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள அதன் அடிப்படை முதலாளித்துவ போட்டியாளர்களுக்கு நிபந்தனைகளை விதிக்கும் நிலையில் தன்னை இருத்திக்கொள்ளவும், "பூகோள பொருளாதாரத்திற்கு இன்றியமையாத எரிசக்தி வளங்கள் மற்றும் அவை விநியோகிக்கப்படும் இடைத்தங்கல் நிலையங்கள்'' மீதான கட்டுப்பாட்டை அபகரித்துக்கொள்ளவும் தீர்மானித்துள்ளது. ஈராக்கில் தோல்வியை ஒப்புக்கொள்வதானது, உலகம் பூராவும் உள்ள மற்றும் அமெரிக்காவினுள்ளேயும் கூட மில்லியன் கணக்கான மக்களை "அமெரிக்க பேருருவம் ஆட்டங்கண்டுள்ளது" என்ற முடிவுக்கு வரச்செய்வதோடு, அதன் மூலம் சர்வதேச ரீதியில் ஒரு புரட்சிகர கொந்தளிப்புக்கான நிலைமைகளை உருவாக்கும் என்பதையிட்டு அது பீதியடைந்துள்ளது. உலக ஜனத்தொகையின் பெரும்பான்மையானவர்கள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ள அமெரிக்க மற்றும் "கூட்டணி" துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்க விரும்பும் அதேவேளை, இந்த சாதாரணமான மனிதத்தன்மையுள்ள கோரிக்கையை தொழில் பெரு நிறுவன மற்றும் நிதி மேல்த்தட்டுக்களினால் கட்டுப்படுத்தப்படும் அரசியல் அமைப்புகளின் ஊடாக வெற்றிகொள்ள முடியாது. இவர்களது பூகோள நலன்கள் வன்முறைகளின் ஊடாக மட்டுமே அடையப்பட முடியும். அதனாலேயே யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்கத் தேர்தலின் அரசியல் படிப்பினைகள் அமெரிக்காவில் நவம்பரில் நடந்த தேர்தல், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இன்றியமையாத அரசியல் பிரச்சினைகளை எழுப்புகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்க வெகுஜனங்கள் கடந்து சென்ற அரசியல் அனுபவங்கள், இரு கட்சி அமைப்புக்குள் செயற்படுவதை அடிப்படையாகக் கொண்ட மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு நோக்குநிலையின் இறுதி முடிவை வெளிப்படுத்தியுள்ளன. 2002 காங்கிரஸ் தேர்தலின் போது, நெருங்கிக்கொண்டிருந்த ஈராக் மீது படையெடுக்கும் பிரச்சினையை எழுப்ப மறுத்த ஜனநாயகக் கட்சியின் தலைமை, ஜனநாயக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மத்தியில் இருந்த பரந்த யுத்த விரோத உணர்வை ஒதுக்கித் தள்ளியதோடு, நாட்டை பொய்களை அடிப்படையாகக் கொண்ட யுத்தத்திற்குள் இழுத்துச் செல்லும் அரசாங்கத்தின் சூழ்ச்சியை முன்னெடுக்க அதற்கு வாய்ப்பளித்தது. ஜனநாயகக் கட்சிக்காரர்களின் முதுகெலும்பற்ற மெளன உடன்பாடு, இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ஒரு வெற்றுக் காசோலையை வெள்ளை மாளிகைக்கு வழங்கிய 2002 அக்டோபரில் நடந்த காங்கிரஸ் வாக்கெடுப்பில் உச்சகட்டத்தை அடைந்தது. 2004 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, யுத்தத்திற்கான வெகுஜன எதிர்ப்பு உக்கிரமடைந்தது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தில், முதன்மை வேட்பாளராக "யுத்த விரோத" வேட்பாளர் ஹவார்ட் டீனை நியமித்ததில் இந்த வளர்ச்சியடைந்துகொண்டிருந்த வெகுஜன எதிர்ப்பை பிரதிபலித்தது. பின்னர் இந்தத் தேர்தல், யுத்தம் பற்றிய கருத்துக்கணிப்பாக உருவெடுப்பதை தடுக்கத் தீர்மானித்த கட்சியின் தலைமை, டீனின் பிரச்சாரத்தை ஓரங்கட்டியது. வேட்புமனுவை ஜோன் கெர்ரி வென்ற போது, டீனும் மற்றும் யுத்த விரோத ஜனநாயகக் கட்சிக்காரர்களாக கருதப்பட்ட ஏனையவர்களும் கெர்ரியின் யுத்தச் சார்பு பிரச்சாரத்தின் பின்னால் அணிதிரண்டனர். புஷ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதோடு யுத்தம் தொடர்ந்தது. ஜனநாயகக் கட்சிக்காரர்கள் 2006 இடைத் தேர்தல் முடிவுகளை ஊக்கப்படுத்தவோ அல்லது அதை வரவேற்கவோ இல்லை. நவம்பர் 7 தேர்தலுக்கு முன்னதாக, ஈராக்கில் தோல்வி கண்டுவரும் அமெரிக்க நடவடிக்கைகளைக் காப்பாற்றிக்கொள்ளவும் வளர்ச்சிகண்டுவரும் யுத்தவிரோத உணர்வுகளை திசை திருப்பவும் மேற்கொண்ட முயற்சியில், முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்களும் குடியரசுக் கட்சிகாரர்களும், ஈராக்கில் "வெற்றிக்கான" ஒரு புதிய மூலோபாயத்துடன் வரவுள்ள இருகட்சி சாரந்த ஈராக் ஆய்வுக் குழுவை நோக்குமாறு மக்களைத் தூண்டினர். இராணுவ வெற்றிக்கான புஷ்ஷின் மூலோபாயம் தோல்வியடைந்துள்ளதாக பிரகடனப் படுத்திய அதே சமயம், அமெரிக்கத் துருப்புக்களை முன்கூட்டியே திருப்பியழைப்பதை நிராகரித்த இந்தக் குழுவின் அறிக்கை வெளிவந்து சில மணித்தியாலங்களுக்குள், அதன் பிரேரணைகளை வெள்ளை மாளிகை நிராகரித்ததோடு ஈராக் ஆய்வுக் குழு துரிதமாக ஒரு வெற்றுக் கடதாசியாகியது. அமெரிக்க மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர் ஆனால் அவர்களுக்கு உக்கிரமாக்கப்பட்ட யுத்தமே கிடைக்கின்றது. வெகுஜன ஊடகங்கள் ஈராக்கில் நிர்வாகத்தின் இராணுவ தீவிரமாக்கத்துடனும் ஈரானுக்கு எதிரான அதன் போர்முழக்க அச்சுறுத்தல்களுடனும் அணிதிரண்டுகொண்டன. தனது சொந்த நாட்டினுள் நிலவும் வெகுஜன யுத்த விரோத உணர்வுகள் தொடர்பாக அமெரிக்க ஆளும் மேல்தட்டு எடுத்த நிலைப்பாடு தான் உலகம் பூராவும் மீண்டும் எடுக்கப்பட்டது. பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவின் முழு அரசியல் ஸ்தாபனமும் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாய் இருப்பதனால் மட்டுமே, பிரித்தானியாவின் தொழிற்கட்சி பிரதமர் டோனி பிளேயராலும் ஆஸ்திரேலியாவின் பழமைவாத பிரதமர் ஜோன் ஹவார்ட்டாலும் பெரும்பான்மையான எதிர்ப்பை புறக்கணித்து ஈராக் யுத்தத்தில் தமது பங்களிப்பைத் தொடர முடிந்துள்ளது. எல்லா இடங்களிலும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வாக்குரிமையற்றவர்கள் போன்றநிலைக்கு நடைமுறையில் ஆக்கப்பட்டுள்ளனர். அரசாங்கங்களுக்கும் ஆளும்நிறுவன கட்சிகளுக்கும் எதிராக, சுதந்திரமான ஒரு புதிய அனைத்துலக சோசலிச அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பது மட்டுமே ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள உழைக்கும் மக்களுக்கான ஒரே தீர்வாகும். அறிவூட்டும் பிரச்சாரங்கள், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், தொழில்துறை நடவடிக்கைகள், தேர்தல் நடவடிக்கைகள் போன்ற, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு எதிரான எல்லாவிதமான வெகுஜன அணிதிரள்வுகளும், இந்த சுதந்திரமான அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையில் கருக்கொள்ளப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். யுத்தமும் சமூக சமத்துவமின்மையும் ஈராக் யுத்தம் தொடர்பாக உலகில் உள்ள அரசாங்கங்களுக்கும் வெகுஜனங்களில் பெரும்பான்மையானவர்களுக்கும் இடையிலான பிரமாண்டமான வேறுபாடானது உலக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த சமூக மற்றும் பொருளாதார யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றது. கடந்த கால் நூற்றாண்டு, முன்னெப்போதும் இல்லாதளவு சமூக சமத்துவமின்மைக்கு சான்று பகர்கின்றது. கடந்த ஆண்டின் முடிவில், ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புபட்ட ஒரு ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கை, உலக மக்களின் மிகப் பெரும்பான்மையானவர்களின் செலவில் நிதி சலுகைமிக்க பிரிவால் சேகரிக்கப்பட்ட சொத்துக்களை திகைப்பூட்டும் விதத்தில் ஆவணப்படுத்தியுள்ளது. அபிவிருத்தி பொருளாதார ஆய்வுக்கான உலக நிறுவனத்தின் படி, உலகின் வயது வந்த ஜனத்தொகையில் (சுமார் 37 மில்லியன் மக்கள்) உயர் மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினர், உலகின் செல்வங்களில் 40 சதவீதத்திற்கு உரிமையாளர்களாக உள்ளனர். உயர் மட்டத்தில் உள்ள 2 சதவீதத்தினர் அரைவாசிக்கு மேலும் மற்றும் உயர் மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினர் 85 சதவீதத்திற்கும் உரிமையாளர்களாக உள்ளனர். இதற்கு மாறான விதத்தில், கீழ் நிலையில் உள்ள உலகின் வயது வந்த ஜனத்தொகையினர் -சுமார் 1.85 பில்லியன் மக்கள்- ஒட்டு மொத்தமாக உலகின் சொத்துக்களில் ஒரு சதவீதத்திற்கே உரிமையாளர்களாக உள்ளனர். பெருந்தொகையான மக்கள் வாழ வழியின்றி கொடூரமான வறுமை, பட்டினி மற்றும் நோயால் வாடுகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா பூராவும் பிரமாண்டமான சமூக மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொரு அரசியல் சாயத்துடனுள்ள அரசாங்கங்களும், சமுதாயத்தின் உச்சத்தில் சொத்து மயக்கத்தில் உள்ள மேல் தட்டுக்காக, உழைக்கும் வெகுஜனங்களிடம் இருந்து எப்பொழுதும் சமூக செல்வத்தின் பெரும் பங்கை அபகரிப்பதை நோக்கி திரும்புவதன் விளைவேயாகும். இந்தப் பெறுபேறுகள் எல்லா இடங்களிலும் தவிர்க்க முடியாதவாறு ஒன்றாகவே உள்ளன; நிதியாதிக்க குறுங்குழு (financial oligarchy) பலப்படுத்தப்படல் அது ஜனத்தொகையில் பரந்த பெரும்பான்மையினரான தொழிலாளர் வர்க்கம், அதன் தேவைகள், நோக்கங்கள் மற்றும் நலன்களை உணர்வதற்கான வாய்ப்புக்களை மறுக்கின்றது. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் முடிவில், செல்வந்தர்களின் மற்றும் அதீத செல்வந்தர்களின் நலன்களுக்கான கொள்கைகளை மரபுரீதியான ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக நேரடியாக முன்னெடுக்க முடியாது. ஜனநாயக உரிமைகள் மீதான முன்னெப்போதுமில்லாத தாக்குதலுக்கான உண்மையான காரணம், வெளிப்புறத்தில் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அன்றி, வெகுஜன எதிர்ப்பின் எழுச்சிக்கு எதிராக ஒடுக்குமுறையான அரச அதிகாரங்களை விரிவுபடுத்துவதேயாகும். அமெரிக்காவில், ஜனாநாயக் கட்சியினதும் வெகுஜன ஊடகங்களதும் ஆதரவில் புஷ் நிர்வாகம் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இது ஒட்டு மொத்தத்தில் சட்டப்பூர்வ மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு பொலிஸ் அரசுக்கான வரைவை உருவாக்கிவிட்டுள்ளது. பொது மக்களை அரசாங்கம் உளவு பார்ப்பதானது தனிப்பட்ட விடயங்களைக் காக்கும் உரிமையை வெற்றுக் கடதாசியாக்கியுள்ளது. விசாரணை உரிமை மற்றும் சட்ட அறிவுரை பெறும் உரிமை மற்றும் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆட்கொணர்வு கொள்கைகளும் கீழறுக்கப்பட்டு வருகின்றன. இரு கட்சிகளின் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களால் இரகசிய சிறைச்சாலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கும் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளன. ஜெனீவா உடன்படிக்கையில் உள்ள விதிகளுக்கும் மற்றும் ஏனைய சர்வதேச சட்டங்களுக்கும் மேன் முறையீடு செய்வது அமெரிக்க நீதிமன்றங்களால் அகற்றப்பட்டுள்ளன. இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலகம் பூராவும் பின்பற்றப்படுகின்றன. பிரித்தானியாவில் 2005ல் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்தது. இது அப்பாவியென நிரூபிக்கும் மூலக் கோட்பாட்டுக் கொள்கைகளைத் தூக்கியெறிவதோடு விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைப்பதை அமுல்படுத்த அரசாங்கத்திற்கு அனுமதியளிக்கின்றது. ஆஸ்திரேலியாவில், 2001 செப்டெம்பர் 11 தாக்குதலில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளிலும் ஹவார்ட் அரசாங்கம் 40க்கும் மேற்பட்ட தனித் தனியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை அமுல்செய்துள்ளது. உலக மக்களின் உரிமைகள் இன்றுபோல் என்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கவில்லை. பிற்போக்கு மற்றும் யுத்தவாதக் கட்சிகளுடன் முறித்துக்கொள்! யுத்தத்திற்கு எதிராக ஒரு சுதந்திரமான அனைத்துலக வெகுஜன இயக்கத்துக்கு! முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் மற்றும் அது சேவையாற்றும் நிதியாதிக்க குழுவுக்கும் எதிரான உழைக்கும் மக்களதும் இளைஞர்களதும் சுதந்திரமான சமூக மற்றும் அரசியல் தலையீடே ஈராக்கில் யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான சாவியாகும். பெரும் தொழில் நிறுவனங்கள் இலாபம் திரட்டுவதற்கும் ஒரு சிறிய மேல்தட்டு தனிப்பட்ட செல்வத்தை பெருக்குவதற்கும் அனைத்து சமூகத் தேவைகளையும் கீழ்ப்படுத்தும் ஒரு சமுதாயத்தின் தவிர்க்கமுடியாத உற்பத்தியே யுத்தமாகும். வளர்ச்சியடைந்துவரும் இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்திய யுத்தங்களை நடத்துவதிலிருந்து, யார் நன்மையும் இலாபமும் அடைகின்றார்கள் என்ற பிரச்சினையை பிரிக்க முடியாது. யுத்தத்திற்கு எதிரான இயக்கமானது இராணுவவாதத்திற்கும் யுத்தத்திற்கும் எதிரான போராட்டத்தையும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தையும் இணைக்கும் ஒரு வேலைத்திட்டத்திற்கு கீழ்ப்படுத்தப்படல் வேண்டும். அது சோசலிச அத்திவாரத்தின் மீது, சமூகத் தேவைகள் மற்றும் பொது நலன்களின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை சர்வதேச ரீதியில் மறு ஒழுங்கு செய்யும் போராட்டத்தில் தற்போதைய முதலாளித்துவ கட்டமைப்பை நேரடியாக சவால் செய்ய வேண்டும். உலக சோசலிச வலைத் தளம், பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் யுத்தத்திற்கு எதிரான வெகுஜனப் பிரச்சாரத்தைக் கட்டியெழுப்ப தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது: * ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஏனைய "கூட்டணித்" துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றப்படல் வேண்டும். அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் இருக்கும் வரை அந்த நாட்டில் இரத்தக்களரிக்கு முடிவேற்பாடது. ஈராக் மக்களை தொடர்ந்தும் பற்றிக்கொண்டுள்ள பேரழிவானது அவர்களது நாடு, கடந்த கால் நூற்றாண்டு பூராவும் அமெரிக்காவுடன் எதிர்த்து நின்றதன் துன்பகரமாக விளைவேயாகும்: 1980களில் ஈரான் மீதான ஈராக்கின் படையெடுப்புக்கு ஊக்குவிப்பு வழங்கிய அமெரிக்கா, 1991ல் ஈராக் மீதே படையெடுத்ததோடு பன்னிரண்டு ஆண்டுகால பொருளாதார தடையையும் விதித்ததுடன், இறுதியாக 2003ல் ஆக்கிரமித்துக்கொண்டது. ஈராக் சமுதாயம் ஏறத்தாழ சிதறுண்டுபோக வழிவகுத்த சம்பவங்கள் இவையேயாகும். இந்த வரலாற்றில் இருந்து, நாட்டை விழுங்கிக்கொண்டிருக்கும் வன்முறைகளை நிறுத்துவதற்கான முழுமையான முன்நிபந்தனையாக ஈராக்கில் இருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். * யுத்தத்தை முன்னெடுத்தவர்கள் சட்டத்தின் முன் பொறுப்பாளிகளாக்கப்படல் வேண்டும்.ஈராக்கிற்கு எதிரான சட்டவிரோதமான மற்றும் திடீர் ஆக்கிரமிப்புக்கு சதித்திட்டம் தீட்டி அதை செயற்படுத்தியவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டியது தீர்க்கமானதாகும். இதில் புஷ், சென்னி, ரம்ஸ்பீல்ட், ரைஸ் மற்றும் ஏனைய உயர்மட்ட சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள், அதேபோல் அவர்களது குற்றவியல் உடந்தையாளர்களான பிரித்தானியாவில் பிளேயரும் ஆஸ்திரேலியாவில் ஹவார்ட்டும் அடங்குவர்.பனாமாவின் நொரீகா, சேர்பியாவின் மிலோசவிக் மற்றும் ஈராக்கில் சதாம் ஹுசைன் போன்றோர்களை யுத்தக் குற்றவாளிகளாக முத்திரை குத்தி சிறைவைத்ததன் மூலம் அமெரிக்கா ஒரு விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேல் குறிப்பிட்டவர்களின் குற்றங்களை பெருமளவில் விஞ்சும் வாஷிங்டனில் உள்ள யுத்தக் குற்றவாளிகளுக்கும் இதே தரம் பிரயோகிக்கப்படவேண்டும். இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளை போலவே புஷ்ஷின் வெள்ளை மாளிகையும் தனது பூகோள குறிக்கோள்களை அடைவதற்கான ஒரு கொள்கையாக "தடுப்பு யுத்தம்" என சொல்லப்படுவதை, உதாரணமாக, ஆக்கிரமிப்பு யுத்தத்தை கையாண்டது --யுத்தக் குற்றவாளிகள் விசாரிக்கப்பட்ட நூரெம்பேர்க் நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு யுத்தம் பிரதான குற்றமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. புஷ் மற்றும் ஏனைய உயர்மட்ட அலுவலர்கள் மீது சட்டரீதியில் பொறுப்புச் சுமத்துவது பழிவாங்கும் விடயம் அன்றி, முழு ஜனத்தொகைக்கும் அரசியல் கல்வியூட்டலாகும். ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து வருடங்களிலும் அமெரிக்க இராணுவம் மேற்கொள்ளும் பிரதான தலையீடுகளை நியாயப்படுத்துவதன் பேரில் அமெரிக்க ஆளும் தட்டாலும் மற்றும் ஊடகங்களில் உள்ள அதன் சேவகர்களாலும் அறுவடை செய்யப்பட்ட யுத்த ஆரவாரக் கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டியது அவசியமானதாகும். குற்றவியல் சதியின் வழிமுறைகளின் மூலம் இத்தகைய இரத்தக்களரி குற்றங்கள் அமுல்படுத்தப்பட்டது எவ்வாறு என்பதை அம்பலப்படுத்துவது அவசியமாகும். * அனைத்துவிதமான இனவாதம், தேசியவாதம் மற்றும் குறுகிய பிரிவுவாதங்களையும் எதிர்! அனைத்துவிதத்திலுமான இனவாதம், தேசியவாதம் மற்றும் வகுப்புவாதங்களையும் நிராகரிப்பது, யுத்தத்திற்கு எதிரான ஐக்கியப்படுத்தப்பட்ட அனைத்துலக இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசியமான முன்நிபந்தனையாகும். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் நவ காலனித்துவ ஆட்சியையும் நியாயப்படுத்துவற்காக இனவாதத்தைக் கிளறுவதுடன் ஈராக் மீதான யுத்தம் பிணைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலும் ஏனைய நாடுகளிலும் முஸ்லிம்கள் இனவாத மதவெறிக்கும் துஷ்பிரயோகத்திற்கும் இலக்காகின்றனர். ஆளும் தட்டுக்கள் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் எதிர்கால யுத்தங்களுக்கு ஆதரவு திரட்டவும் நாட்டுக்கு நாடு "தேசிய மதிப்புகளை" முன்னிலைப்படுத்துகின்றன. மத்திய கிழக்கில் உள்ள உழைக்கும் மக்கள், ஏற்கனவே ஈராக்கில் ஒரு குறுகிய பிரிவு வாத இரத்தக்களரியை தூண்டிவிட்டுள்ள மற்றும் முழுப் பிராந்தியத்தையும் மோதல்களுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தும் இன, மத வேறுபாடுகளை நிராகரிக்க வேண்டும். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் முஸ்லிம் விரோத இனவாதத்திற்குமான பதில், ஆளும் மேல்தட்டின் இந்த அல்லது அந்த பிரிவின் நலன்களுக்கு நிலையாக சேவைசெய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தினுள் பின்வாங்குவதல்ல. மாறாக, மத்திய கிழக்கு பூராவும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் உலகம் பூராவும் உள்ள அதன் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதேயாகும். * மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நீக்குவதோடு அரசாங்க உளவுப் பிரிவின் வலையமைப்பையும் அரசியல் ஒடுக்குமுறைகளையும் களைந்தெறி. குடிவரவுத் தொழிலாளர்கள் தொந்தரவு, சிறைவாசம் அல்லது நாடுகடத்தல் போன்ற பீதிகள் இன்றி முழு பிரஜா உரிமையுடன் அவர்கள் விரும்பும் நாட்டில் வாழவும் தொழில் செய்யவும் உள்ள உரிமையைக் காப்பாற்று. * ஏகாதிபத்திய யுத்தத்திற்காக கட்டாய இராணுவப் பணிக்கு சேர்ப்பதை எதிர்த்து நிராகரிக்க வேண்டும். * செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவுகட்டி, சமூக சமத்துவத்தை முன்னிலைப்படுத்தி மக்களின் தேவைகளை இட்டுநிரப்புவதற்காக பொருளாதாரத்தை சோசலிச வழியில் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். தொழில்துறை மற்றும் நிதிய சக்திகள் அனைத்தும் தனியாரின் உடமையாகவும் தனியாரால் கட்டுப்படுத்தப்படும் தற்போதைய முதலாளித்துவ கட்டமைப்பை, பொது உடமையை அமுல்படுத்தும் மற்றும் பொருளாதாரத்தை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தும் சோசலிச அமைப்பால் பதிலீடு செய்ய வேண்டும். ஒரு பொருளாதார அமைப்பை மேம்படுத்துவதற்காக சர்வதேச மட்டத்தில் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றத்தைப் பயன்படுத்தி பகுத்தறிவுபூர்வ திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் முதலாளித்துவ சந்தையின் அராஜக நடவடிக்கைகளை ஒதுக்கித்தள்ள வேண்டும். இதன் அடிப்படை நோக்கம் இலாபத்தை உருவாக்குவதோ தனிநபர் சொத்தைக் குவிப்பதோ அன்றி மனிதத் தேவைகளை பூர்த்திசெய்வதாகும். * ஏகாதிபத்திய இராணுவவாதக் கொள்கைக்கு எதிராக, சோசலிச அனைத்துலகவாதக் கொள்கைக்காகப் போராட வேண்டும். இது அனைத்து உழைக்கும் மக்களது அனைத்துலக ஒற்றுமைக்காகவும் மற்றும் வறுமை, நோய் மற்றும் அறிவின்மை அவலங்களை போக்குவதற்காக உலக வளங்களை அபிவிருத்தி செய்வதையும் முழு மனிதகுலத்தினதும் வாழ்க்கைத் தரம் மற்றும் கலாச்சார மட்டத்தையும் முன்னேற்றுவதையும் அடிப்டையாகக் கொண்டதாகும். சர்வதேசவாதமானது இராணுவவாதம், தேசியவாதம், குறுகிய பிரிவுவாதம் மற்றும் இனவாதத்திற்கு எதிரான ஒரே ஒரு முற்போக்கான மாற்றீடாகும் --இது சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை அனைத்துலக ரீதியில் அணிதிரட்டும் போராட்டமாகும். யுத்தம், ஒடுக்குமுறை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக அனைத்துலக உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி ஒருங்கிணைப்பதானது, உலக சோசலிச இயக்கத்தின் தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (நா.அ.அ.கு) பொறுப்பேற்றுக்கொண்டுள்ள வரலாற்றுப் பணியாகும். நா.அ.அ.கு. வின் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகள் இருக்கும் நாட்டில் அதை கட்டியெழுப்பி விரிவுபடுத்துவதன் ஊடாகவும் மற்றும் கட்சி இல்லா நாடுகளில் அத்தகைய கட்சிகளை ஸ்தாபிப்பதன் ஊடாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும். யுத்தத்திற்கு எதிராகவும் மற்றும் சர்வதேச வங்கிகள் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் பொருளாதார கொடுங்கோன்மைக்கு எதிராக சோசலிசத்திற்காகவும் முன்னெடுக்கப்படும் உலக ரீதியான போராட்டத்தில், சர்வதேச ரீதியில் தொழிலாளர்களை அணிதிரட்ட ஒவ்வொரு நாட்டிலும் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது. இந்த முன்நோக்கிற்காகப் போராடுவதற்காக, முதலாவதாக யுத்தத்தின் மோசமான விளைவுகளை தாங்கும் இளைஞர்களுக்கு நாம் விசேடமாக அழைப்பு விடுக்கின்றோம். யுத்தத்திற்கும் மற்றும் அதை உருவாக்கும் இலாப அமைப்பிற்கும் முடிவுகட்டும் திறனை கொண்ட ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் நோக்கி இளைஞர்களை திருப்புவதன் பேரில், ஒவ்வொரு நாட்டிலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இளநிலைக் கல்லூரிகளிலும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம். |