World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :தென் அமெரிக்காThe significance of Venezuela's and Ecuador's nationalizations வெனிசூலா மற்றும் ஈக்வடோரின் தேசியமயமாக்கல்களின் முக்கியத்துவம் By Bill Van Auken கடந்த வாரம் வெனிசுலா மற்றும் ஈக்வடோரில் ஜனாதிபதிகள் பதவியேற்பு, "சோசலிசம்" மற்றும் "புரட்சி" ஆகியவற்றிற்கான அழைப்புக்களால் குறிப்பிடத்தக்கதாய் அமைந்திருந்தன. காரகாசில் ஜனவரி 10ம் தேதி நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் மறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெனிசுலாவின் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் நாட்டின் தேசிய தொலைபேசி நிறுவனமான CANTV ஐ தேசியமயமாக்கும் திட்டங்களை அறிவித்தார்; இது 1991ல், மின்விசை தொழிற்துறையுடன் சேர்ந்து, தனியார் மயமாக்கப்பட்டது. நாட்டின் எண்ணெய் வயல்கள் மீது அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரிக்கும் திட்டங்களையும் அவர் அறிவித்தார். "தனியார்மயமாக்கப்பட்டது அனைத்தும், தேசியமயமாக்கப்படும்" என்று சாவேஸ் பிரகடனப்படுத்தினார். "நாம் சோசலிசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்; இதை எதுவும், எவரும் தடுத்து நிறுத்த முடியாது" என்று சேர்த்துக் கொண்ட அவர் உரையின்போது, "நான் [லியோன்] ட்ரொட்ஸ்கியின் வழிவகையான நிரந்தரப் புரட்சியின் பக்கம் பெரிதும் உள்ளேன்" என்று கூறினார். ஈக்வடோரில், ஜனவரி 15ம் தேதி அதிகாரத்தை மேற்கொண்ட ரபேல் கோரியா ஒரு நிகழ்ச்சியில் ஒரு "தீவிர புரட்சியை" தொடக்கும் திட்டங்கள் உள்ளன என்று அறிவித்து, "புதிய சோசலிசத்திற்கு" தன்னுடைய உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்; அப்பகுதி முழுவதும் அது பரவிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஈக்வடோரின் பெருஞ்சுமையளிக்கும் வெளிநாட்டுக் கடன் திருப்பித் தரும் தொகைகளை வரம்பிற்கு கொண்டுவருவதாக அச்சுறுத்திய அவர் வெளிநாட்டு எண்ணைய் ஒப்பந்தங்கள் பற்றி மறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்றும் கூறினார். மன்டாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ விமானத் தளம் மூடப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார். ஷாவேஸ், பிரேசில் ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva, நிக்கரகுவாவின் டானியல் ஓர்டேகா (இந்த சான்டிநிஸ்டா தலைவரே சில நாட்களுக்கு முன்புதான் பதவி ஏற்றார்), பொலிவியாவின் எவோ மோரல்ஸ் மற்றும் ஈரானின் மகம்மது அஹமதிநெஜாட் உட்பட 17 நாடுகளின் தலைவர்கள் இருந்த கூட்டத்தில் பேசிய கோரியா, "குடிமக்களின் புரட்சி இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது; எதுவும், எவரும் இதைத் தடுத்து நிறுத்த முடியாது" என்று அறிவித்தார். தீவிர, ஏன் "சோசலிச வகையிலான" என்று கூட கூறக்கூடிய சொல் அலங்காரங்களால் வாஷிங்டனை கண்டிப்பதால் தொடரப்பட்ட ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என நடைபெற்ற தொடக்க விழாக்கள், அப்பகுதியில் நட்பு நாடுகளைத்தேடும் ஈரானிய ஜனாதிபதியின் சுற்றுச்செலவுடன் சேர்ந்து, இலத்தீன் அமெரிக்காவின் "இடது புறத் திருப்பம்" பற்றி அமெரிக்காவில் பரபரப்பான செய்தி ஊடக தகவல் சேகரிப்பின் ஒரு புதிய அலையைத் தூண்டி விட்டது.. கோரியாவிற்கு முன்பு பதவியில் இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் ஈக்வடோரிய இராணுவ கேர்னல் லூசியோ கிடிரஸ் இத்திருப்பத்தில் ஒருவராக, கோரியாவின் அரங்கிற்கு ஒப்பான முறையில் அவர் 2002ல் ஜனாதிபதி பதவியை பெற்றபோது குறிப்பிடப்பட்டிருந்தார் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு சற்று அதிகமாகப் பதவியில் இருந்தபின்னர் அவர் ஜனாதிபதி அரண்மனையில் இருந்து மக்கள் எதிர்ப்புக்களினால் விரட்டியடிக்கப்பட்டார்; அதற்குக் காரணம் அவர் வலதுசாரிக் கொள்கைகளை ஏற்றது, வாஷிங்டனை தழுவி நின்றது மற்றும் அவருடைய ஆட்சியில் மலிந்திருந்த ஊழல்கள் போன்றவையாகும். "புதிய தேசியமயமாக்கல்கள்" என்னும் சாவேசின் அறிவிப்பு காரகஸ் பங்குச் சந்தையில் மிகப் பெரிய சரிவைத் தூண்டியது; அங்கு CANTV மிகப் பெரிய அளவில் வணிகத்திற்கு உட்பட்டுள்ள நிறுவனம் ஆகும்; இதைத் தவிர வோல் ஸ்ரீட்டில் விற்கப்படும் வெனிசூலிய தொடர்புடைய பங்குகளிலும் இதன் தொடர்பு உண்டு. கடந்த வார நிகழ்வுகள் ஐயத்திற்கு இடமின்றி இன்னும் கூடுதலான வகையில் இலத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன; இவை ஓரளவிற்கு "வாஷிங்டன் ஒருமித்த உணர்வு" என்றழைக்கப்படும் ஒட்டுமொத்த தனியார்மயமாக்கல் மாதிரியினால் ஏற்பட்ட மற்றும் தடையற்ற சந்தைக் கொள்கைகளினால் வெளிவந்த பொருளாதார, சமூகப் பேரழிவுகள் ஆகும். ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதன் போட்டியாளர்களை ஒப்பிட்டுக் காணும்போது அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சரிவினாலும் மேலும் தூண்டிவிடப்பட்டுள்ளன; மேலும் மத்திய கிழக்கில் வாஷிங்டன் மிகப் பெரிய அளவிற்கு இராணுவ சாகசங்களினாலும் தூண்டிவிடப்பட்டுள்ளன. இதன் விளைவு மரபார்ந்த வலதுசாரிக் கட்சிகளுக்கு ஒரு தோல்வியாகவும், தங்களை "இடது" என்று விவரித்துக் கொள்ளும் வேட்பாளர்கள் அல்லது வெனிசூலா, ஈக்வடோரில் மட்டும் அல்லாது பொலிவியா, சிலி, பெரு, உருகுவே, ஆர்ஜென்டினா மற்றும் நிகராகுவாவிலும் வரலாற்றளவில் "இடது" என்று அடையாளம் காணப்படும் வேட்பாளர்களுக்கு வெற்றியாகவும் அமைந்துள்ளது. இந்த அரசாங்கங்கள் பல்வேறு அரசியல் மூலங்களைக் கொண்டு கொள்கை அளவில் பரந்த உடன்பாடின்மையை கொண்டிருந்தாலும், இவை அனைத்தும் ஏதாவதொரு வடிவில் மக்களை திருப்திப்படுத்தக்கூடிய "புதிய-தாராளவாதத்தை" கண்டித்தல், அமெரிக்க கொள்கையை குறைகூறல் என்பனவற்றில் ஈடுபட்டுள்ளன. கண்டம் முழுவதிலும் படர்ந்துள்ள மிகப் பெரிய அளவில் உள்ள சமூக சமத்துவமின்மை பற்றி மக்களுடைய சீற்றத்திற்கு இவை முறையீடு செய்வதுடன், பல நேரங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சமூக உதவித் திட்டங்களை சமூகத்தின் மிக வறிய அடுக்குகளின் ஆதரவைப் பெறுவதற்காக துவக்கியும் உள்ளன. அதே நேரத்தில், சாவேஸ் மற்றும் கோரியா போன்றோரின் "21ம் நூற்றாண்டு சோசலிசத்தை" கொண்டுவரப் போவதாக வரும் அறிவிப்புக்கள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கங்கள் பொதுவில் முதலாளித்துவ தனியார் உடைமைக் கொள்கைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றன; மேலும் சர்வதேச நிதிய நிறுவனங்களின் பொது விதிகளின்படியும் நடந்து கொண்டு, தாங்கள் தலைமை வகிக்கும் நாடுகளின் மரபார்ந்த இராணுவ மற்றும் ஒடுக்குமுறை சக்திகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளன. பல விதங்களிலும் முன்னாள் பாரட்ரூப்பர் லெப்டினென்ட் கேர்னலும் ஆட்சி மாற்றக் குழுவின் தலைவருமான சாவேஸ் முன்வைக்கும் கருத்துக்கள் சோசலிசத்தின் எழுச்சிக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக ஆர்ஜென்டினாவின் ஜுவான் பெரோன், ஒரு பிந்தைய காலத்தில் பனாமாவில் தளபதி ஓமர் டோரிஜோஸ் மற்றும் பெருவின் தளபதி ஜுவான் வேலஸ்க்வெஸ் ஆல்வரடோ போன்றவர்கள் கூறிவந்த பொருளாதார தேசியவாதம் மற்றும் இராணுவ ஜனரஞ்சகவாதம் போன்றவற்றின் எதிரொலி போல்தான் உள்ளன. வெனிசூலாவின் "தேசியமயமாக்கல்களை" பொறுத்தவரையில், தோற்றத்தையும் விடக் குறைவாகத்தான் உண்மை இருக்கும் போல் தெரிகிறது. வெனிசூலா "மூலோபாயத் துறைகளில் மீண்டும் உடைமை கொள்ளுதல்" என்ற வகையில் சாவேஸ் தன்னுடைய திட்டங்களை அளித்தார் என்றாலும், அரசாங்கம் எடுத்துக் கொள்ள இருக்கும் உண்மை இலக்குகள் ஒப்புமையில் அதிக முக்கியத்துவத்தை கொண்டவை அல்ல. CANTV ஒன்றும் ஒரு ஏகபோக உரிமை பெற்ற தொலைபேசி அமைப்பு அல்ல. அதன் நிலவழித் தொடர்புகள் மக்களில் 11சதவிகிதத்தை மட்டும்தான் அடைந்துள்ளது; அதன் செல்லிடத் தொலைபேசி பிரிவான Movilnet இன்னும் பரந்த அளவில், இலாபம் நிறைந்த சந்தைப் பிரிவில் 35 சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளது.CANTV பங்குகளில் மிக அதிகம் வைத்திருப்பது அமெரிக்க தளத்தைக் கொண்டுள்ள Verizon Communictions Inc. இது 28.5 சதவிகித பங்கை கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் Verizon தன்னுடைய பங்கை மெக்சிகன் நாட்டு பில்லியனர் ஆன கார்லோஸ் ஸ்லிம், என்னும் Telemex சொந்தக்காரருக்கு விற்க இருக்கும் உடன்பாட்டை தொடக்கியுள்ளது; ஸ்லிம் இலத்தீன் அமெரிக்க தொலைத் தொடர்பு சந்தையில் கணிசமாக பங்குகளை குவித்துள்ளார்.டெலிமெக்ஸ் ஸ்பெயினின் டெலிபோனிகாவில் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது; டெலிபோனிகா CANTV யில் சிறுபான்மை பங்குகளை கொண்டுள்ளது; ஆனால் வெனிசூலாவில் சொந்த செல் போன் நிறுவனத்தின்மீது கட்டுப்பாட்டை உடையது. அது சந்தையில் 48 சதவிகிதத்தை கட்டுப்படுத்துகிறது. தேசியமயமாக்கல் என்பது ஓரளவிற்கு ஸ்லிம் உடனான உடன்பாட்டை குலைக்கும் முயற்சியாகவும், ஸ்பெயின் நிறுவனத்தை அதன் முக்கிய போட்டியாளரிடம் இருந்து காக்கும் வகையில் டெலிபோனிகாவிற்கு ஆதரவு கொடுப்பதாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. CANTV யை எடுத்துக் கொள்ளுவதில் மற்றொரு காரணம் நாட்டின் மிகப் பெரிய பொது உடைமை நிறுவனத்தை சந்தையில் இருந்து அகற்றுவது ஆகும். நிறுவனத்தின் பங்குகள் காரகாசிலும், வோல் ஸ்ரீட்டிலும் (பொலிவர்கள், டாலர்களுக்கு முறையே) வணிகத்திற்கு உட்படுகின்றன; இவை வெனிசூலிய நிதியத்தினருக்கும் நாட்டை விட்டு மூலதனத்தை எடுத்துச் செல்லும் வழியாக உள்ளது; தங்கள் சொத்துக்களை வெளிநாடுகளில் இருக்கும் டாலர் இருப்புக்களாக மாற்றுவதற்கும் பயன்படுகிறது. இது நாட்டின் மூலதனத்தில் பெரும் குறைவு மட்டும் இல்லாமல் நாட்டின் மிக அதிக 18 சதவிகித பணவீக்கத்திற்கும் காரணமாக உள்ளது.மின்விசைத் துறையை எடுத்துக் கொள்வதை பொறுத்த வரையில், அதன் பெரும்பகுதி ஏற்கனவே அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளன. அதிகம் பாதிக்கப்பட இருக்கும் முக்கிய தனியார் நிறுவனமான Electricidad de Caracs என்பது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட AES Corp. யினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பங்குதாரர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகை CANTV , மற்றும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மின்விசை நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு அரசாங்க அதிகாரிகள் வெனிசூலாவின் எண்ணெய் வருமானத்தில் இருந்து சேமிக்கப்பட்டுள்ள நிதியத்தில் இருந்து முழு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். "தங்களுடைய பங்குகளின் மதிப்பிற்கு நியாயமான விலையை பங்குதாரர்கள் பெறுவர்" என்று நிதி மந்திரி Rodrigo Cabezas வெனிசூலிய நாளேடான El Universal இடம் தெரிவித்தார்.வெனிசூலிய பொருளாதாரத்தின் உண்மையான மூலோபாயப் பிரிவு என்று வரும்போது --எண்ணெய், இயற்கை எரிவாயு-- சாவேஸ் அரசாங்கம் சிந்தித்துக் கொண்டிருப்பது "தேசியமயமாக்கல்" என்பது அல்ல என்பது தெளிவு; எப்படியும் ஆர்ஜென்டினாவில் பெரன் அல்லது மெக்சிகோவில் Cardeas என்று முந்தைய காலகட்டத்தில் முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்கள் செயல்படுத்திய முறையில்கூட இல்லை என்று கூறலாம். உலகில் ஐந்தாம் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக வெனிசுலா உள்ளது; 78 பில்லியன் பீப்பாய்கள் இருப்பு உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் 1.2 டிரில்லியன் பீப்பாய்கள் என்ற உயர் அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ள ஓரினோக்கோ எண்ணெய் இருப்புக்கள் திறனையும் அது கொண்டுள்ளது. அமெரிக்கா வெனிசூலிய உற்பத்தியில் 60 சதவிகிதத்தை விழுங்கிக் கொள்ளுகிறது. சாவேஸ் எண்ணெய் வயல்களுக்கு படைகளை அனுப்புவது போன்ற பரபரப்பூட்டும் விளைவு முன்செல்வதுபோல் காணப்பட்டாலும், எண்ணெய்த் துறையில் சாவேஸின் ஆரம்ப முயற்சி பொலிவியாவின் இயற்கை எரிவாயு இருப்புக்கள் பற்றி அதன் ஜனாதிபதி Evo Morales அறிவித்த "தேசியமயமாக்குதலுடன்" பலவிதத்திலும் ஒன்றாக உள்ளது. சுருங்கக் கூறின், ஓரினோக்கோ எண்ணைய் பகுதியில் செயல்பட்டுவரும் சர்வதேச நிறுவனங்களான ExxonMobil, Conoco, Chevron, பிரெஞ்சு நிறுவனம் Total ஆகியவற்றுடன் பேரம் பேசும் முயற்சியாகும்; இவை அனைத்தும் அரசாங்கத்திற்கு உடைமையான PDVSA வுடன் முக்கிய பொறுப்பைக் கொண்டிருப்பதுடன் தங்கள் கூட்டு முயற்சிகளில் கிடைக்கும் இலாபங்களிலும் அதிக பங்கை கொண்டவை ஆகும். சற்று தளர்ந்தாலும் கூட, தங்கள் பிடியை பெரும் இலாபங்களுக்கு ஆதாரமாக இருக்கும் வெனிசூலாவின் எண்ணெய் இருப்புக்கள்மீது தக்க வைத்துக் கொள்ளும்பொருட்டு, அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட சக்தித்துறையின் பிரம்மாண்டமான நிறுவனங்கள் அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படுவன என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்களன்று நாட்டின் எண்ணெய்த்துறை மந்திரியான Rafael Ramirez, 1999ல் சாவேசின் சொந்த அரசாங்கம் அந்தத்துறையை தனியார் முதலீட்டிற்கும் சுரண்டலுக்கும் திறந்துவிட்டபொழுது அதனால் கையெழுத்திடப்பட்டு தற்போது நிலவும் இயற்கை எரிவாயு ஒப்பந்தங்களில் மாறுதலைக் கொண்டுவரும் விருப்பம் தன்னுடைய அரசாங்கத்திற்கு கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். முக்கிய வோல் ஸ்ரீட் நிதிய நிறுவனங்கள் சாவேசின் "21ம் நூற்றாண்டு சோசலிசம்", "நிரந்தரப் புரட்சி" போன்ற அறிவிப்புக்களை சற்று கூடுதலான கவனத்துடனேயே கருத்திற்கொண்டன. "தனியார் துறையை முற்றிலும் அகற்றும் விருப்பத்தை வெனிசூலாவில் ஷாவேஸ் கொண்டிருக்கவில்லை என்றுதான் நாங்கள் இன்னமும் உணர்கிறோம்; CANTV, மற்றும் சில முன்னாள் பொது நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டது வெறும் அடையாளத்தை காட்டத்தான்" என்பது JP Morgan உடைய கருத்து. இதற்கு இணங்கிய முறையில் Merrill Lynch கூறியது: "அப்படியே தனியார் சொத்துரிமை அகற்றப்பட்டுவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை." இரண்டாவதாக கூறப்பட்டது குறைவான மதிப்பீட்டையே வெளியிட்டுள்ளது, கடந்த ஆண்டு, வெனிசூலாவின் தனியார்துறை 10.3 சதவிகித வளர்ச்சியை கண்டது; இது பொதுத்துறை வளர்ச்சியை விட இரு மடங்குக்கும் மேலாகும். இதே காலத்தில், நாட்டின் உற்பத்தித்துறையில் வளர்ச்சி மிக மிகக் குறைவாக உள்ளது; அதிகாரபூர்வ வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தில் உள்ளது. முக்கியமான வளர்ச்சி வெனிசூலாவின் நிதியப் பிரிவில் இருந்தது; உலகில் எங்கும் காணப்படாத அளவிற்கு இலாபச் சூழலை இது கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சற்றே ஏளனம் செய்யும் வகையில் Financial Times குறிப்பிட்டது: "பொதுவாகப் புரட்சிக்காலத்தில் வங்கியாளர்கள் துப்பாக்கிச் சூட்டைத்தான் எதிர்கொள்ளுவர். ஆனால் வெனிசூலாவிலோ அவர்கள் விருந்து பெறுகின்றனர்." கட்டுரை தொடர்ந்து குறிப்பிட்டதாவது: "வங்கிகளை தேசியமயமாக்குவதற்கு பதிலாக, எண்ணெய்ப் பணம் செல்வம் படைத்த நபர்களுக்கு 'புரட்சிகரமாக' விநியோகிக்கப்படுகிறது; இதையொட்டி அவர்கள் அதிகரித்தளவில் ஸ்விஸ், மற்ற சர்வதேச வங்கியாளர்களை ஈர்க்கும் காந்தமாக காரக்காசை ஆக்கிவருகின்றனர். இப்புரட்சியை சார்ந்திருப்பது தனியார் வங்கியாளர்கள் மட்டுமல்ல. 2005ம் ஆண்டு வெனிசூலாவில் இருந்த வங்கிகளின் சொத்துக்கள், 29.3 பில்லியன் டாலர்களில் இருந்து 39.9 பில்லியன் டாலர்கள் என மூன்றில் ஒரு பங்கு கூடுதலாக அதிகரித்தன என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், பெருகிவரும் எண்ணெய் வருமானங்களின் மூலம், சாவேஸ் சமூகநலத் திட்டங்களுக்கு செலவழித்தாலும்கூட, வெனிசூலிய பொருளாதாரத்தின் மிக உயர் நிலை சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதிய மூலதனத்தின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உறுதியாக உள்ளது. அரசாங்கத்தின் பெருகிய பொனபார்ட்டிச தன்மை -- இவர் ஆணைகள் மூலம் 18 மாதங்கள் ஆட்சி புரிய சட்டத்தை வகுக்க வேண்டும் என்று கூறியுள்ள இவரது முன்மொழிவுகள் உள்ப்பட-- வெனிசூலிய சமுதாயத்தை இன்னும் ஆதிக்கம் செய்யும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள மகத்தான சமூகப் பிளவைத்தான் பிரதிபலிக்கிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவைக் கொண்டிருந்தபோதிலும், சாவேஸின் சமூக நடவடிக்கைகளும் அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆடம்பர பேச்சுக்களும் வாஷிங்டனில் கூடுதலான எரிச்சலைத்தான் தூண்டியுள்ளன. "உலக அச்சுறுத்தல்கள்" பற்றி தேசிய சட்டமன்றத்திற்கு கடந்த வாரம் சாட்சியம் அளித்த தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜோன் நெக்ரோபோன்டே, சாவேஸ் அரசாங்கத்தை "ஜனநாயகத்திற்கு" ஓர் அச்சுறுத்தல் என்று விவரித்துள்ளார். 2002ம் ஆண்டு, இந்த "அச்சுறுத்தலுக்கு" விடையிறுக்கும் வகையில் வாஷிங்டன் ஒரு வலதுசாரி இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்றது; ஆனால் வெனிசூலாவின் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மிகப் பெரிய எதிர்ப்பை ஒட்டி அது கைவிடப்பட்டது. சாவேஸ் அரசாங்கத்தை தூக்கியெறியும் இன்னொரு முயற்சிக்காக CIA திட்டங்களை தீட்டிவருகிறது என்பதை உறுதியாகக் கூறலாம். ஒரு புத்தக அட்டையில் நிரந்தரப் புரட்சி என்று அச்சிட்டிருப்பதை பார்த்ததை தவிர ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் பற்றி ஹ்யூகோ ஷாவேஸ் அறிவாரா என்பது பற்றி தெரியாது. எப்படி இருந்தாலும், அதன் மைய முன்னோக்கு வெனிசூலா மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதற்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் இருந்து இந்நாடுகள் தங்களை விடுவித்துக் கொள்ளுதல் என்பது முதலாளித்துவத்தின் ஒரு பிரிவு அல்லது அதன் பிரதிநிதிகள் வழிநடத்தி -- முற்போக்கு இராணுவ அதிகாரிகள் என்றாலும்கூட-- அடையப்படமுடியும் என்பது இயலாத காரியமாகும். அந்தப்பணி முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவதற்காக ஒரு சர்வதேச புரட்சிகர வர்க்கத்தின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் அணிதிரளச்செய்தல் வழிவகையில்தான் அடையப்படமுடியும். |