World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The coronation of Nicolas Sarkozy

French interior minister named Gaullist presidential candidate

நிக்கோலா சார்க்கோசிக்கு முடிசூட்டுவிழா

ஜனாதிபதி வேட்பாளராக பிரெஞ்சு உள்துறை மந்திரி அறிவிக்கப்படுகிறார்

By Peter Schwarz
20 January 2007

Back to screen version

ஜனவரி 14ம் தேதி, ஆளும் கோலிச கட்சி, UMP இன் (Union for a Popular Movement) ஜனாதிபதி வேட்பாளராக இந்த ஆண்டு தேர்தல்களுக்கு, பிரெஞ்சு உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி நியமனம் செய்யப்பட்டுள்ளது ஒரு திகிலூட்டும் காட்சியாகும்.

அரசியலில் மேம்போக்கான ஒப்புமைகளை தவிர்ப்பது முக்கியமாகும். சார்க்கோசி ஒரு பாசிஸ்ட்டும் அல்ல, கோலிச UMP ஒரு பாசிச அமைப்பும் அல்ல -- குறைந்த பட்சம் இக்கட்டத்திலேனும். ஆயினும்கூட சார்க்கோசி செயல்படும் முறை பலவிதங்களிலும் ஐரோப்பிய வரலாற்றின் மிகக் கொடூரமான காலங்களின் அமைதியற்ற நினைவுகளைத்தான் வெளிக்கொணர்கிறது.

"இயக்கம்" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அவருடைய கட்சியின் ஆரவாரமுடைய உறுப்பினர்கள் 80,000 பேரின் பெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. இவருடைய வேட்புமனுவிற்கு ஆதரவாக UMP பேராளர்களின் வாக்கெடுப்பில் 98 சதவிகித ஆதரவு கொடுக்கப்பட்டது. கெளரவம், நாடு, நாட்டுப்பற்று என்ற கருத்துக்கள் இடைவிடாமல் முழங்கப் பெற்றன.

ஒரு முடிமன்னருக்கு கொடுக்கப்படும் ஆடம்பர அலங்கார நிகழ்வுகளுக்கு பொருந்தும் வகையில் இருந்த நிகழ்ச்சியில் UMP மாநாட்டில் தன்னுடைய ஏற்புரையை சார்க்கோசி வர்க்கப் போராட்டத்தை கண்டிப்பதற்கும் இடது, வலது ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் வேறுபாடுகள் களையப்படுவதற்கும் அழைப்பு விடுக்கவும் பயன்படுத்திக் கொண்டார். "எனது பிரான்ஸ்", ("Ma France") அடிப்படையில் வலதா, இடதா அல்லது மையத்தில் இருக்கிறோமா எனத் தெரியாத அனைத்து பிரெஞ்சு மக்களுக்கும் உரியது; ஏனெனில் அவர்கள் அனைவரும் எல்லாவற்றிற்கும் மேலாக நல்லெண்ணம் கொண்டவர்கள்" என்று அவர் அறிவித்தார்.

சமரசத்திற்கு இடமில்லாததை அவர் சமரசப்படுத்த முயன்றார். "பழைய ஆட்சிக்கும் புரட்சிக்கும், குட்டி நாட்டிற்கும் குடியரசு நாட்டிற்கும் இடையே கூட்டிணைப்பை செயல்படுத்திய நாடுதான் எனது பிரான்ஸ்." என்று அவர் கூறினார். போருக்கான சோசலிச எதிர்ப்பாளர், முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் கொலைசெய்யப்பட்ட, ஜோன் ஜோரேஸ் மற்றும் 1918ல் பிரதமராக இருந்து போரை கடைசிக் கசப்பு முடிவு வரை தொடர்வோம் என்று அறிவித்த ஜோர்ஜ் கிளெமென்சோ ஆகியோர் பற்றி அவர் நினைவு கூர்ந்தார். ஒரே வாக்கியத்தில் புரட்சியாளர் டான்ரோன், காலனித்துவவாதி ஜூல் பெர்ரி மற்றும் போருக்குப் பிந்தைய பிரெஞ்சு தலைவர் சார்ல்ஸ் டு கோல் ஆகியோர் பற்றிய தோற்றங்களையும் கொடுத்தார்.

புனித மரபுகளுக்கு அழைப்புவிடுத்த வகையில், "இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவம், அதன் விலைமதிப்பற்ற ஆன்மிக மதிப்புக்கள் ஆகியவற்றை நாம் மரபியமாக கொண்டுள்ளோம்" என்று கூறிய அவர் தன்னுடைய சொந்தக் "கனவான" ஜனாதிபதி ஆதல், "பிரான்சிற்கு பயனுள்ளதாய் இருத்தல்" என்பதை "பிரான்சிற்கு வெற்றி" என்று அடையாளம் காட்டினார். தன்னடக்கம் என்பது சார்க்கோசியின் வாழ்வில் வலுவாக இருந்ததில்லை.

ஒரு வருங்கால பொனபார்ட்டிச ஆட்சியாளர்

கட்சிகளோ, வர்க்கங்களோ சார்க்கோசிக்கு தெரியாது; அவருக்கு நல்ல, தீய என இனம் காணப்படும் பிரெஞ்சு மக்களைத்தான் தெரியும். அவருடைய வலுவான வனப்புரை, அரசியல், சமூக மற்ற வேறுபாடுகளை பிரெஞ்சுக்காரர்கள் களைந்துவிட வேண்டும் என்ற முறையீடு, தேர்தல் உத்திகள், மரபார்ந்த கோலிச தொகுப்பிற்கும் அப்பால் தேர்தல் வளத்தை விரிவாக்கும் முயற்சி என்று பலமுறையும் உதறித் தள்ளப்பட்டுள்ளன. ஆயினும், இதையும் விடக் கூடுதலானதுதான் உண்மையில் உள்ளது.

பிரெஞ்சு முதலாளித்துவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு ஒரு புதிய வழிவகையை வளர்க்கும் முயற்சியில் சார்க்கோசி ஈடுபட்டுள்ளார். இவருடைய நோக்கம் சக்திவாய்ந்த சர்வாதிகார கூறுபாடுகளைக் கொண்ட ஒரு பொனபார்ட்டிச வகை அரசாங்கத்தை நிறுவுதல் ஆகும்; அது ஒருபுறம் அரச எந்திரத்தை தளமாகக் கொண்டிருக்கும்; மறுபுறம் மத்திய தர அடுக்குகள் பலவற்றையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நோக்குநிலை தவறிய அடுக்குகளையும் கொண்டிருக்கும். இந்த நோக்கம் அவருடைய மக்களை ஈர்க்கும் சமூக இலக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அது ஒரு முசோலினி, ஒரு கோயெபெல்ஸ் மற்றும் அத்தகைய சர்வாதிகார ஆட்சிகளின் பிரதிநிதிகளைத்தான் நினைவிற்குக் கொண்டு வருகிறது.

"சட்டம், ஒழுங்கு" இவற்றிற்காக கடுமையாக வாதிடுபவர், ஒரு வலதுசாரி ஆத்திரமூட்டலாளர் மற்றும் போலீசின் நண்பனும் கூட்டாளியாயும் இருப்பவர் என்ற வகையில் உள்துறை மந்திரிப் பதவியில் தனக்கென ஒரு பெயரை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். செய்தி ஊடகத் தகவல்களின்படி குறைந்த பட்சம் 26,000 போலீஸ்காரர்களுடனாவது இவர் கைகுலுக்கியுள்ளார்.

"ஒழுங்கு, பணிபுரிதல், உழைப்பு, பொறுப்பு என்னும் மதிப்புக்களை" தளமாகக் கொண்ட ஒரு குடியரசின் பிரதிநிதியாக ஜனாதிபதி வேட்பாளர் என்று தன்னை இவர் காட்டிக் கொள்ளுகிறார்.

தன்னுடைய உரையின் பெரும்பகுதியை அத்தகைய குடியரசு பற்றிய தன்னுடைய பார்வையை கோடிட்டுக் காட்டும் வகையில் சார்க்கோசி அர்ப்பணித்தார். இக்குடியரசில் சமத்துவம் என்பது சமூக சமத்துவம் என்ற பொருளைக் கொண்டிராமல் "முன்னேறுவதற்கான சம வாய்ப்புக்களாக இருக்கும்." "சமூக ஏற்றத்திற்கான அடிப்படையை வடிவமைக்கும்", "நோக்குநிலை பற்றியோ, தேர்வுகொள்ளுதல் பற்றியோ, குடியரசு உயரடுக்குச் சிந்தனை பற்றியோ அச்சப்படாத ஒரு குடியரசாக இருக்கும் இது, என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு உரிமைக்கும் உட்குறிப்பாக கடமைகள் உண்டு: "உரிமைகளின் ஒத்த பகுதிகள்தான் கடமைகள்". பங்களிப்பு ஏதும் இல்லாமல் ஒருவரும் எதையும் பெறமுடியாது: "சமூகத்திற்கு பயனுடைய செயல் என்ற வடிவில் பிரதிபலன் இல்லாமல் எந்த குறைந்தபட்ச சமூக உதவியும் அளிக்கப்படக்கூடாது என்று நான் கூறுவேன்."

கட்டுப்பாடும் ஒழுங்கும் சார்க்கோசியின் முன்னுரிமைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. "அதிகாரம், மரியாதை இவற்றின் அடிப்படையில் பள்ளிகள் இருக்க வேண்டும்; இங்கு ஆசிரியர் நுழையும்போது மாணவர்கள் எழுந்திருக்க வேண்டும், மாணவிகள் பர்தா அணியக் கூடாது, மாணவர்கள் அனைவரும் தங்கள் தலைத் தொப்பிகளை மரியாதை நிமித்தம் அகற்றி, பின் அணியவேண்டும்." என்பது என்னுடைய விருப்பம் என்று அவர் கூறினார்.

சார்க்கோசியின் எதிர்காலக் கணிப்புக்களை பற்றிய கருத்துரை, முன்னய பாசிச சிந்தனைகளுடன் தொடர்புடையது, மிகத் தெளிவாக அவருடைய பணி பற்றிய கருத்தாய்வை பெருமைப்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளது.

"வேலை என்பதுதான் சொத்துரிமைக்கு ஆதாரம், வேலையின் உருவகமாகத்தான் சொத்து அமையும்" என்பதை ஒப்புக்கொள்ளுவதுதான் குடியரசின் இலக்காக இருக்கும் என்றார் அவர். "எமது குடியரசு மாதிரியில் ஒழுக்கநெறிமுறை நெருக்கடி" இருப்பதற்கு காரணம் "வேலை குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது" என்ற அவர், மேலும் கூறியதாவது: "வேலை குறைமதிப்பில் உள்ளது; உழைக்கும் பிரான்ஸ் உள்ள உரம் குலைந்து இருக்கிறது."

இன்னும் சற்று கூடுதலாகவே கோலிச வேட்பாளர் சென்று உத்தியோகபூர்வ பிரெஞ்சு இடதுகள், தொழிலாளரை காட்டிக்கொடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்: "நீண்ட காலமாகவே, வலது தொழிலாளரை புறக்கணித்துள்ளது; ஒருகாலத்தில் தொழிலாளரோடு தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட இடதும், இறுதியில் அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டது. சமுதாயத்தின் மையத்திற்கு தொழிலாளியை மீட்கும் வகையில், நான் பிரான்சின் ஜனாதிபதியாக இருக்க விரும்புகிறேன்.

இந்த பிரெஞ்சு பெருவணிகத்தின் உறுதியான நண்பர் ஊதிய உயர்வுகளுக்கு ஆதரவாகக் கூட பேசத் தயாராக இருந்தார். "வேலைக்கு போதுமான ஊதியம், மதிப்பீடு, மதிப்பு ஆகியவை இல்லை. எனவே வாங்கும் திறன் வலுவிழந்துள்ளது, ஊதியங்கள் மிகக் குறைவாக உள்ளன, ஊதியத்தில் கழிப்புக்கள் மிக அதிகமாக உள்ளன." என்றார் அவர்.

இப்படி தொழிலை சமுதாயத்தின் ஒழுக்கநெறி அடிப்படை என்று புகழ்தல் மற்றும் முதலாளித்துவ சொத்துரிமையையும் பெருமைப்படுத்துதல் என்ற இரட்டை முகப் பேச்சு, பாசிச பெருநிறுவனச் சிந்தனைப் போக்கின் கூறுபாடு ஆகும்; இது இயல்பாகவே தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு --குறிப்பாக வேலைநிறுத்த உரிமை, தங்களை ஒன்றாக அமைத்துக் கொள்ளுதல் என்பவற்றிற்கு-- எதிரானது ஆகும். பெருநிறுவனவாதியின் கருத்தின்படி வேலை என்பது, பொதுநலத்திற்கு, சமூகம் முழுமைக்கும் மற்றும் தனியார் சொத்துரிமைக்கும் தாழ்ந்து நிற்க வேண்டும். தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் அத்தகைய கடமை சார்ந்த பணி நெறிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; தன்முனைப்புள்ள, தனிப்பட்ட நலன்களைத்தான் பிரதிபலிக்கும்.

எனவே சார்க்கோசி, வேலை பற்றிய தன்னுடைய துதிபாடல்களை பொதுப் பணிகளில் வேலைநிறுத்த தடைகளுடன் பிணைக்கிறார். அத்தகைய வேலைநிறுத்தங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாட்டை பலமுறை வாடிக்கையாக உலுக்கியுள்ளன. தன்னுடைய உரையில் சார்க்கோசி பொதுப் பணித்துறையின் வாடிக்கையாளர்களை, "பிணையாளர்களாக" வேலைநிறுத்தத்தின்போது செய்வதற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்களை கண்டனம் தெரிவித்தார். இந்தக் கோடைகாலத்தில் பொதுப்பணித்துறை இன்றியமையாத நெருக்கடி சேவைகளாக தொடரவும் அனைத்து வேலைநிறுத்தங்கள் பற்றிய முடிவுகளிலும் இரகசிய வாக்கெடுப்பை சுமத்த இருக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவரத் தீவிரமாக உள்ளார்.

இந்த பிற்போக்குத்தன பின்னணியில், அவர் அனைத்து இளைஞர்களும் கட்டாயமாக ஆறுமாத கால பொது ஆட்சிப் பணியில் ஈடுபடவேண்டும் என்ற அழைப்பை கொடுத்துள்ளார் -- இது ஒருவித கட்டாயத் தொழில் திட்டம் ஆகும்.

உழைப்பிற்கு தன்னுடைய புகழாரத்தை சார்க்கோசி கீழ் கண்ட சொற்றொடரில் ஆரம்பித்தார்: "வேலைதான் சுதந்திரம்" -- இந்தக் கருத்து, எதிர்பாராத வகையில், அவுஸ்விட்சில் நாஜிக்களின் கொடுஞ்சிறை முகாம்களில் நுழைவாயில்களுக்கு மேலே பெரிதாக எழுதிவைக்கப்பட்ட "Arbiet Macht Frei" (வேலை மனிதனை விடுதலை செய்யும்) ஐத்தான் நினைவுபடுத்துகிறது.

ஒர் அரசியல் திருப்புமுனை

UMP இன் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அளவிற்கு சார்க்கோசியின் ஏற்றம் கோலிச பழைய பாதுகாவலர்களின் எதிர்ப்பையும் மீறி வந்துள்ளதாகும். குறிப்பாக ஜனாதிபதி ஜாக் சிராக்கும் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்களும் இந்த வெளியாளை எதிர்த்திருந்தனர்.

சார்க்கோசி, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சில் குடியேறிய ஒரு ஹங்கேரிய பிரபுவின் மகனாவார்; அவர் ஐந்து ஆண்டுகள் பிரெஞ்சு வெளிநாட்டு படையணிப் பிரிவில் பணியாற்றியிருந்தார். இவருடைய தாயார் கிரேக்க-யூதப் பின்னணியை கொண்டவராவர். அவருடைய தந்தையார் குடும்பத்தை பரிதவிக்கவிட்டுச் சென்றபின், இவருடைய தாயார் ஒரு வேலை செய்து கொண்டே தன்னுடைய மூன்று குழந்தைகளையும் வளர்ப்பதற்கான கட்டாயத்தில் இருந்தார்.

சார்க்கோசி, தன்னுடைய குழந்தைக்கால மரபியத்தில் இருந்து அயராப் பேரவாவையும், எப்படிப்பட்ட கஷ்டங்களை எதிர்கொண்டாலும், தான் உயர்மட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதலையும் கொண்டார். பிரான்சின் அரசியல் உயரடுக்கில் இருக்கும் ஏனைய உறுப்பினர்களை போல் அல்லாமல், École Nationale d'Administration என்னும் உயரடுக்கினரின் பள்ளியினூடாக சார்க்கோசி பயின்றுவரவில்லை.

ஜனாதிபதி வேட்பாளராக இவர் முன்மொழியப்பட்டுள்ளமை ஓர் அரசியல் திருப்புமுனையை குறிக்கிறது என்பதை, தற்போது பிரான்ஸ் எதிர்கொள்ளும் சர்வதேச நிலைமை மற்றும் அதன் கூர்மையான உள்நாட்டுப் பதட்டங்கள் இவற்றின் பின்னணியில்தான் புரிந்து கொள்ளப்பட முடியும்.

பல ஆண்டுகளாக பிரெஞ்சு வணிகமும் அரசியல் ஸ்தாபனமும் பூகோளமயம், மற்றும் உலகச் சந்தையில் நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்காக போருக்குப் பிந்தைய காலத்தில் அடையப்பட்ட சமூக நலன்களை உடைத்தெறிதல் என்பவற்றால் ஏற்படும் அறைகூவல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது; அதற்காக பரந்த முறையில் தனியார்மயமாக்குதல்களையும் செயல்படுத்தி வருகிறது. பல முறையும், இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளில் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.

1995ல் இருந்து நாடு பலமுறையும் வெகுஜன சமூக இயக்கங்களினால் அதிர்விற்கு உட்பட்டுள்ளது; இவை பலமுறையும் வாரக்கணக்கில் நீடித்து, தொழிற்சங்கங்கள், உத்தியோகப்பூர்வ இடது கட்சிகள், மத்தியதர தீவிரக் குழுக்களின் உதவியினால்தான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. இந்த அமைப்புக்கள் இப்போராட்டங்களின் போது அதிகரித்த வகையில் செல்வாக்கிழக்க ஆரம்பித்தன, அதேவேளை மரபுவழி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் சிறிதளவே தொடர்புள்ள புதிய சமூக அடுக்குகளும் இளைய தலைமுறையும் எதிர்ப்பு இயக்கங்களில் சேர்ந்தன.

2002ம் ஆண்டில், பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளரான லியோனல் ஜோஸ்பன் தேர்தலில் முதல் சுற்றில் வலதுசாரித் தீவிரவாதியான ஜோன் மரி லூபென்னிடம் தோல்வியுற்றபோது பெரும் நெருக்கடியை சந்தித்தது. அப்பொழுதில் இருந்து சோசலிஸ்ட் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் LCR, Lutt Ouvriere போன்ற தீவிரப் போக்குடைய குழுக்களில் உள்ள அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து வலதுபுறம் தீவிரமாக நகர்ந்தது. எவ்வித தாராள சமூக சீர்திருத்த வேலைத்திட்டங்களையும் நிராகரித்து, சார்க்கோசியின் வேலைத்திட்டத்தின் மையத்தில் உள்ள நலன்புரி எதிர்ப்பு அரசினை, "தடையற்ற சந்தை" அரசியல், குடியேறுபவர்களை தாக்குதல், சட்டம் ஒழுங்கு எனத் திருப்திப்படுத்தும் தன்னலப் பேச்சு போன்றவற்றைத் தழுவியுள்ள Segolène Royal சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோலிஸ்டுகள் அல்லது சோசலிஸ்ட் கட்சியினர் என்று எப்படி இருந்தாலும், அவர்களுடைய கடந்த கால அரசாங்கங்கள் பிரெஞ்சுப் பெருநிறுவன உயரடுக்கினரின் கோரிக்கைகளான தனியார்மயம், தொழிலாளர் "வளைந்துகொடுக்க வேண்டும் எனக் கூறுதல்", பொதுநல அரசுக் கூறுபாடுகளை தகர்த்தல், வணிகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், பெருநிறுவனம், செல்வந்தர் ஆகியோருக்கு வரி வெட்டுக்கள் ஆகிய தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்துவதில் கொண்ட தோல்வியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, இப்பொழுது பிரெஞ்சு ஆளும் வட்டங்கள் புதிய, இன்னும் நேரடியான வழிவகைகள் மூலம் தங்கள் விருப்பங்களை சுமத்தும் முறைகளை ஆய்ந்து கொண்டுள்ளனர்.

அவர்கள், கடந்த ஆண்டு "முதல் வேலை ஒப்பந்தத்திட்டத்தின்படி" CPE ஐ, அரசாங்கம் திரும்பப்பெற்ற விடயத்தில் போன்று, தொழிலாளர்கள் மீது தங்கள் தாக்குதல்களை மிதமானதாக்கும்படி நிர்பந்தித்த சமூக முட்டுக்கட்டைநிலையில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். எனவேதான் சார்க்கோசிக்கு ஆதரவாக ஆளும் உயரடுக்கின் ஆதரவு பெருகியுள்ளது.

கடந்த சில வாரங்களில், முக்கியமான UMP புள்ளிகள், முன்னாள் பிரதம மந்திரி அலன் யூப்பே, சிராக்கின் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு மந்திரி Michele Alliot-Marie, மற்றும் பலரும் சார்க்கோசிக்கு பின்னே அணிவகுத்துள்ளனர். பிரெஞ்சு வணிக வட்டங்களிடம் இருந்தும் இவர் பெருகிய முறையில் ஆதரவைக் கொண்டுள்ளார். இவருக்கு பக்கபலமாக இருப்பவர்கள், நிதிய ஆதரவாளர்கள் என்ற பட்டியலில் ஆயுதங்கள் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான Arnaud Lagardere, கட்டுமானத்துறை மற்றும் தொலைக்காட்சி செல்வந்தர் Martin Bouygues மற்றும் ஆடம்பரப் பிரிவுக் குழுவான LVMH இன் தலைவரான Bernard Arnault ஆகியோர் உள்ளனர்.

பிரான்சில் நீண்டகால மரபாகவே பொனபார்ட்டிச வகை ஆட்சிகள் இருந்துள்ளன; முதலாம் மற்றும் மூன்றாம் நெப்போலியன்கள் காலத்தில் இருந்து, 1959ல் சக்திவாய்ந்த சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருந்த, சார்க்கோசியின் முன்மாதிரியான, தளபதி சார்ல்ஸ் டு கோல் வரை இதில் அடங்குவர்.

எப்படியிருந்தபோதும் 1950களில் பிரான்ஸ் எதிர்கொண்டிருந்த நிலமைக்கும் தற்போதைய நிலமைக்கும் இடையே அடிப்படை வேறுபாடுகள் பல உள்ளன. பிரான்சில் உள்நாட்டுப் போர் என்னும் சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தை கொடுத்த அல்ஜீரிய போரின் உச்சக்கட்டத்தில் டு கோல் பதவிக்கு வந்தார். அதையடுத்த ஆண்டுகளில் நிகழ்ந்த பொருளாதார ஏற்றம், மக்களின் பரந்த அடுக்குகளுக்கு விரைவான தொழில்மயத்தை கொண்டுவந்தது; மக்களை கிராமப்புறங்களில் இருந்து நகர் புறங்களுக்கு கொண்டுவந்தது; இறுதியில் அவருடைய ஆட்சியையும் கீழறுத்தது. 1968ம் ஆண்டு பொது வேலைநிறுத்தம் நடந்த ஓராண்டிற்கு பின்னர் டு கோல் இராஜிநாமா செய்யும் கட்டாயம் ஏற்பட்டது.

சார்க்கோசியின் தலைமையிலான ஒரு பொனபார்ட்டிச அரசாங்கம் சமூகச் சலுகைகளையும் கொடுக்காது, வாழ்க்கத்தர உயர்வையும் அளிக்காது. அதன் பணி தொழிலாளர்கள் இளைஞர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்களை மிருகத்தனமான முறையில் அடக்குவதாகத்தான் இருக்கும். இவருடைய ஆட்சியில் சர்வாதிகார மற்றும் பாசிச பாணியிலான தன்மைகள் என்றுமில்லாதவாறு அதிகமாய் தெளிவாக வெளிப்படும்.

சார்க்கோசியும் அவருடைய ஆதரவாளர்களும் அத்தகைய ஆட்சிக்கு ஒரு சமூகத் தளத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற முயற்சிகள் இருந்தபோதிலும்கூட, விளைவு உண்மை என்றில்லாமல் தோற்றமாகத்தான் உள்ளது. UMP கட்சி 3.5 மில்லியன் யூரோக்கள் பணத்தை ஜனவரி 14ல் நடந்த அணிவகுப்பை அமைப்பதற்கு செலவழித்து, ஒரு வெகுஜன இயக்கம் என்ற தோற்றத்தை உருவாக்க முற்பட்டது.

தன்னுடைய உறுப்பினர்கள் எண்ணிக்கையை சமீபத்தில் மூன்று மடங்காக உயர்த்துவதில் UMP வெற்றிபெற்றாலும்கூட, மக்களில் பெரும்பாலானவர்கள், மத்தியதர வர்க்கங்களின் பரந்த அடுக்குகள் உட்பட, உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புமுறைக்கு விரோதப் போக்கில்தான் உள்ளனர். இது பலமுறையும் அரசாங்க எதிர்ப்பு சமூக இயக்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரால் நடத்தப்பட்டபோது பரந்த முறையில் மக்களின் ஆதரவை பெற்ற வகையில் நிரூபணம் ஆயிற்று.

ஆயினும்கூட, சார்க்கோசி முக்கியத்துவம் பெற்றவராய் எழுச்சி பெற்றுள்ளதில் பொதிந்துள்ள ஆபத்தை குறைத்துமதிப்பிடல் தவறாகப்போய்விடும். அவரது உண்மையான பலமானது, இந்த சமூக இயக்கங்களை திரும்பத்திரும்ப முட்டுச்சந்திற்குக் கொண்டுவந்துள்ள, "இடது" என்று அழைக்கப்படுவதின் --தீவிர இடது உள்பட தொழிற்சங்கங்கள், இடது கட்சிகள்-- ஆகியவற்றின் பாத்திரத்தில் இருந்து எழுகிறது. சார்க்கோசியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஆபத்தை தோற்கடிப்பதற்கான திறவுகோல் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு சுயாதீனமான புரட்சிகரக் கட்சியை கட்டியமைப்பதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved