:
இலங்கை
Sri Lankan police drag out their
inquiries into the murder of SEP supporter
சோ.ச.க. ஆதரவாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை
இலங்கை பொலிஸ் இழுத்தடிப்பு செய்கிறது
Statement by the Socialist Equality Party (Sri Lanka)
19 January 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ்
கிழக்கு இலங்கையின் முல்லிப்பொத்தானை நகரில் வைத்து படுகொலை செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த
பின்னரும், பொலிஸ் விசாரணைகள் கொலைகாரர்களை கண்டுபிடித்து, கைது செய்து, வழக்குத் தொடரத் தவறியுள்ளன.
பெரும்பாலும் குற்றவாளிகளாக இருக்கக் கூடியவர்கள் -நாட்டின் பாதுகாப்பு படையினர்- தொடர்பான
எந்தவொரு தக்க விசாரணையையும் முன்னெடுப்பதை விட வழக்குக்கான பொறுப்பைத் தவிர்த்துக்கொள்வதையே
பொலிஸ் முன்னிலைப்படுத்தியுள்ளது.
இந்த விசாரணைகள் இப்போது மூன்று வேறுபட்ட நகரங்களைச் சேர்ந்த குறைந்தபட்சம்
நான்கு பிரதான விசாரணையாளர்களுக்கு இடையில் கைமாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 11, மரியதாசின் மனைவி
ஸ்டெல்லா கிருஷாந்தியிடம் ஒரு புதிய வாக்குமூலத்தை திருகோணமலையில் உள்ள பொலிஸ் அலுவலர்கள் பதிவுசெய்த
போது இன்னுமொரு மாற்றம் அம்பலத்திற்கு வந்தது. இப்போது இந்த விசாரணைகள் திருகோணமலை விசேட குற்றப்
புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்படுவதாக சோ.ச.க. யிடம் பொலிசார் தெரிவித்தனர்.
மரியதாஸ் ஆகஸ்ட் 7 அன்று சுமார் இரவு 9.30 மணியளவில் முல்லிப்பொத்தானையில்
அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். கொலையாளி அவரை கதவுக்கு அருகில் அழைத்து கழுத்திலும் தலையிலும்
சுட்டான். துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஒருவனுடன் தப்பிச் சென்றான். இந்தக் கொலை
கைதேர்ந்த முறையில் செய்யப்பட்டிருப்பதும், கொலையாளிகள் அவரது பெயரைத் தெரிந்துவைத்திருந்ததும் மற்றும்
அவர்கள் ரோந்துகளுக்கு அகப்படாமல் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றமையும் இராணுவத்தின்
தலையீட்டையே சுட்டிக் காட்டுகின்றன.
அயல் பிரதேசங்களான மூதூர் மற்றும் மாவிலாறில் தமிழீழ விடுதைலப் புலிகளுக்கு
எதிராக கடுமையான மோதல்கள் இடம்பெற்ற நிலைமையின் மத்தியிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை வெளிப்படையாக மீறி எதிர்த்தாக்குதல்
நடத்தி மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டைக் கைப்பற்றுமாறு இராணுவத்திற்குக் கட்டளையிட்டிருந்தார். மரியதாஸ்
யுத்தத்தையும் இராணுவத்தின் அட்டூழியங்களையும் எதிர்ப்பதில் பிரசித்திபெற்றவாராவார். முல்லிப்பொத்தானையில்
ஒரு புகைப்பட நிலையத்தையும் தொலைத்தொடர்பு நிலையத்தையும் சிலகாலம் நடத்திவந்த அவர், சில
நாட்களுக்கு முன்னரே அங்கு குடியேறியிருந்தார்.
மரியதாஸ் கொலையாளிகளை கைதுசெய்து வழக்குத் தொடருமாறு கோரி
சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் ஒரு சர்வதேச பிரச்சாரத்தை செப்டெம்பரில்
முன்னெடுத்தன. ஆனால், பலவித சுற்று மாற்றுக்களும் அம்பலப்படுத்துவது போல், தக்க பொலிஸ் விசாரணைகள்
நடத்தப்பட்டிருக்கவில்லை.
* ஆரம்பத்தில் தம்பலகாமம் பொலிசார் விசாரணையைப் பொறுப்பேற்றனர்.
அவர்கள் மரியதாசின் மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தியிடம் ஒரு உத்தியோகபூர்வ வாக்குமூலத்தைப் பெற்றனர். அவர்
நீதவான் முன் நீதிமன்றத்திலும் சாட்சியமளித்திருந்தார். குறிப்பிட்ட காலத்திற்கு விசாரணைகளின் "முன்னேற்றத்தைப்"
பற்றி புதிய அறிக்கைகளை பதிவுசெய்வதற்காக தம்பலகாமம் அலுவலர்கள் நீதிமன்றத்தில் தோன்றினர்.
* சோ.ச.க. பிரச்சாரம் தொடங்கி ஒரு மாதத்தின் பின்னர், கந்தளாய்
பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலணாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரியான ரொட்ரிகோ, இந்த
விசாரணையை கொழும்பில் உள்ள அதிகாரிகள் தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக ஸ்டெல்லா கிருஷாந்தியிடம்
தெரிவித்தார்.
* அடுத்த மாதம், கந்தளாய்
குற்றப்புலணாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான கோட்டசியாராச்சியிடம் இந்த வழக்கின் பொறுப்பு
ஒப்படைக்கப்பட்டது.
* நவம்பர் 20, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டபோது, திருகோணமலை குற்றப் புலணாய்வுப் பிரிவினர் இந்த வழக்கு தம்மிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். கந்தளாய் பொலிஸ குழுவுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டிருக்கவில்லை
போல் தெரிகிறது. கந்தளாய் பொலிசார், மரியதாசின் தம்பியான ஜேசுதாஸ் சிவப்பிரகாசத்தை நவம்பர் 25
அன்று வாக்குமூலம் கொடுக்க வருமாறு அழைத்திருந்தனர்.
சோ.ச.க. திருகோணமலை பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டபோது,
கண்டனக் கடிதங்களும் மனுக்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த விசாரணைகளை பொறுப்பேற்குமாறு
திருகோணமலை குற்றப் புலணாய்வுப் பிரிவுக்கு இலங்கை பொலிஸ்மா அதிபர் கட்டளையிட்டுள்ளதாக திருகோணமலை
பொலிஸ் சர்ஜன்ட் பி.ஏ.என். பெரேரா தெரிவித்தார். மேலதிகாரியான எம்.ஜி. குடாகொடகே இந்த
வழக்கை விசாரிப்பதாக பெரேரா கூறிய போதிலும், அது ஒரு "இரகசிய விசாரணை" என்பதால் எந்தவொரு
விபரத்தையும் பகிரங்கப்படுத்த மறுத்துவிட்டார்.
ஸ்டெல்லா கிருஷாந்தி இப்போது பொலிசாருக்கு மூன்று வாக்குமூலங்களைக்
கொடுத்துள்ளார். ஆயினும், எந்தவொரு பொலிஸ் விசாரணையும் சாட்சியங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்ததற்கான
ஆதாரங்களோ அல்லது மரியதாஸின் குடும்ப அங்கத்தவர்களைத் தவிர்ந்த ஏனையவர்களிடம் வாக்குமூலம்
பெற்றதற்கான ஆதாரங்களோ கிடையாது. மரியதாசைக் கொலை செய்த துப்பாக்கித் தோட்டாக்கள் உட்பட
ஆரம்ப சட்ட ஆய்வுகள் கூட இன்னமும் முன்னெடுக்கப்பட்டிருக்க வில்லை. இந்த விசாரணைக்கு தலைமைவகிப்பவர்கள்
தொடர்ந்தும் மாற்றப்படுகின்றமை, பொறுப்பு சுற்றிச் சுற்றி கைமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவது
மட்டுமன்றி, மோசடிக்கும் ஆதாரங்களை தொலைப்பதற்கும் மற்றும் காலந்தாழ்த்துவதற்குமான வழிமுறையாகவும்
உள்ளது.
மரண அச்சுறுத்தல்
இந்தப் படுகொலையில் இராணுவம் சம்பந்தப்பட்டிருப்பதற்கான மேலதிக ஆதாரங்கள்
சோ.ச.க. வசம் உள்ளன. மரியதாஸ் கொலைசெய்யப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக அவருக்கு
மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததை உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதைக் கண்ணால் கண்ட சாட்சி ஒருவர் நடந்ததை விபரிக்க இப்போது முன்வந்துள்ளார்.
ஏப்பிரல் 11, முல்லிப்பொத்தானையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர்
தொலைவில், ஹபரண-திருகோணமலை வீதியில் நடந்த ஒரு கிளைமோர் குண்டுவெடிப்பில் 11 கடற்படையினர்
கொல்லப்பட்ட செய்தி பரவியதை அடுத்தே இந்த சம்பவம் நடந்தது. நண்பகல் மரியதாஸ் தனது புகைப்பட
நிலையத்திற்கு வந்து சில நேரத்தின் பின்னர், வெளியில் ஒரு இராணுவ வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர்
இறங்கினார். அவர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்தனர்.
இறங்கியவர் புகைப்பட நிலையத்திற்குள் நுழைந்து மரியதாஸை சிங்களத்தில்
திட்டினார். "நீ புலிகளுக்கு தகவல் கொடுக்கிறாய். நான் உன்னை உயிரோடு வைக்கப் போவதில்லை" எனத்
அச்சுறுத்தியதாகத் தெரிவித்த அந்த சாட்சி மேலும் தெரிவித்ததாவது: "நான் பயந்துபோனேன். அந்த
சந்தர்ப்பத்திலேயே மரியதாஸ் கொல்லப்படுவார் என நினைத்தேன். அவர் மரியதாஸின் முகத்தில் அறைந்தார்.
எனக்கு அந்த மனிதனை தனிப்பட்ட முறையில் தெரியாது. அவன் கருப்பு நிறம், ஆனால் அவ்வளவு உயரமானவன்
அல்ல. அவன் இராணுவத்தைப் போல் கட்டையாக முடிவைத்திருந்ததோடு டீசேர்ட்டும் காற்சட்டையும்
அணிந்திருந்தான்."
கண்கண்ட சாட்சியின்படி, மரியதாஸ் அமைதியாக நின்றதோடு அந்த மரண
அச்சுறுத்தலை பொருட்படுத்தவில்லை. தன்னை ஒரு ஊர்காவற்படையைச் சேர்ந்தவர் அச்சுறுத்தியதாகவும், அவரது
நிலையக் கட்டிடத்தின் உரிமையாளரான ஜயவீர அவனுடன் பேசியதாகவும் தனது உறவினர் ஒருவருக்கு அவர்
கூறியிருந்தார். "தொம்பா" என்றழைக்கப்படும் ஒரு ஊர்காவற்படையைச் சேர்ந்தவர் மரியதாசின்
தொலைத்தொடர்பு நிலையத்தை தரைமட்டமாக்குவதாக அச்சுறுத்தியதாக, ஓய்வுபெற்ற கிராமசேவகரான ஜயவீர
சோ.ச.க. யிடம் ஆரம்பத்தில் தெரிவித்தார். ஊர்காவற்படை பொலிஸின் துணைப்படையாக செயற்படுகிறது.
அவர் கொலைசெய்யப்பட்ட உடனேயே உள்ளூர் படையினர், பொலிஸ் மற்றும்
ஊர்காவற்படையினரும் சேர்ந்து மரியதாஸ் ஒரு புலி உறுப்பினர் என்ற வதந்தியைப் பரப்பிவிட்டனர். அவரது
மனைவியின்படி, அவர் தஞ்சமடைந்திருந்த அயல் வீடு ஒன்றுக்கு வந்த ஊர்காவற்படையினர், அவரை ஏசியதோடு
புலிகள் அவர்கள் அனைவரையும் கொன்று பழிதீர்க்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். மரியதாஸ் புலிகளை
ஆதரித்தார் என்றக் குற்றச்சாட்டு முழுப் பொய்யாகும். அவர் ஐந்து ஆண்டுகளாக சோ.ச.க. உடன் தொடர்பு
வைத்திருந்ததோடு எமது வலைத் தள நிருபர்களுக்கும் உதவியுள்ளார். அவர் சோ.ச.க. யின் அரசியல்
நடவடிக்கைகளில் வெளிப்படையாக பங்கெடுத்துக் கொள்ளாவிட்டாலும் அவர் புலிகளையும் அவர்களது தமிழ்
பிரிவினைவாத முன்நோக்கையும் எதிர்ப்பதில் பிரசித்தி பெற்றவராவார்.
மரியதாசின் கொலையானது, இராஜபக்ஷ அரசாங்கம் புலிகளுக்கு எதிரான
யுத்தத்தை கடந்த வருடம் உக்கிரமாக்கிய நிலையில் நடந்த நூற்றுக்கணக்கான கொலைகளில் ஒன்றாகும். தீவின் வடக்கு
மற்றும் கிழக்கிலும் அதே போல் கொழும்பிலும், இராணுவம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படும் துணைப்படைகள்
ஆகியவை சேர்ந்து கொலைப் படைகளை நடத்திவருவது வெளிப்படையான இரகசியமாகும். "புலி சந்தேகநபர்களை"
கடத்திச் செல்வதும் கொலை செய்வதும் தமிழ் வெகுஜனங்களை பீதிக்குள்ளாக்கும் ஒரு வழிமுறையாகும். இன்றுவரை
கொலையாளிகள் தண்டனையில் இருந்து விலக்கீடு பெற்று செயற்படுகின்றனர். மோசமான அட்டூழியங்களைப் பற்றி
பதிலளித்த ஜனாதிபதி இராஜபக்ஷ, விசாரணைகளை நடத்துவதாக வாக்குறுதியளிக்கத் தள்ளப்பட்ட போதிலும்,
இந்தக் கொலைகளுக்காக எந்தவொரு நபரும் கைதுசெய்யப்படவோ அல்லது வழக்குத் தொடுக்கப்படவோ
இல்லை.
மிக அண்மையில் நடந்த சம்பவங்களில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தரான
பேராசிரியர் சிவசுப்ரமனியம் ரவீந்திரநாத் டிசம்பர் 15 அன்று கொழும்பில் வைத்து கடத்தப்பட்டார். அவர்
அதிகளவில் ஆயுதம் தரித்த இராணுவச் சிப்பாய்கள் மற்றும் பொலிசாராலும் நெருக்கமாகப் பாதுகாக்கப்படும் தலைநகரின்
உயர் பாதுகாப்பு வலயமொன்றில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். அவர் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.
பொலிசாரைப் பொறுத்தளவில் அவரைக் கடத்தியது யார் என்பது தெரியாது.
மரியதாஸ் கொலையாளிகளை கைதுசெய்து வழக்குத் தொடுக்குமாறு கோரி இலங்கை
அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பிய உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் மற்றும் எமது
ஆதரவாளர்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம். எவ்வாறெனினும், இந்த பிரச்சாரத்தை உக்கிரப்படுத்த
வேண்டியுள்ளது. மரியதாசுக்கும் அவரது குடும்பத்திற்கும் நியாயம் வழங்கக் கோருவதன் மூலம், இத்தகைய
கொலைக் குழுக்களாலும் அவர்களது திட்டமிட்ட மூடி மறைப்புக்களாலும் முன்னெடுக்கப்படும் குற்றங்களுக்கு எதிரான
ஒரு தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இந்தப் பிரச்சாரமானது சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின்
அடிப்படை ஜனநாயக உரிமைகளை காப்பதற்கான பரந்த போராட்டத்தின் அத்தியாவசியமான அங்கமாகும்.
கண்டனக் கடிதங்கள் அனுப்பவேண்டிய முகவரிகள்:
Inspector General of Police,
Victor Perera,
Police Headquarters,
Colombo 1, Sri Lanka.
Fax: 0094 11 2446174
Email: igp@police.lk
Attorney General K.C. Kamalasabeyson,
Attorney General's Department,
Colombo 12, Sri Lanka.
Fax: 0094 11 2436 421
உங்களது கடிதங்களின் பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை)
உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பி வையுங்கள்
Socialist Equality Party,
P.O. Box 1270, Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk
உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவிற்கு கடிதங்கள் அனுப்ப தயவுசெய்து
இந்த ஒன்லைன்
online
form படிவத்தை பயன்படுத்தவும். |