World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation workers angry at unions and government

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் தொடர்பாக சீற்றமடைந்துள்ளனர்
By our correspondents
23 December 2006

Back to screen version

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் கடந்த வாரத்தில் மொத்தமாக எல்லா தொழிற்சங்கத் தலைமைத்துவங்களாலும் நாசவேலைக்கு உள்ளாக்கப்பட்டு இறுதியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் பல பிரதேசங்களிலும் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் உரையாடினர். தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் இட்டு நிரப்பிய பாத்திரத்தையும் மற்றும் ஜனாதிபதி மஹிந் இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தமது கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தவறியதையும் பற்றி ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

ஆரம்பத்தில் இருந்தே வேலைநிறுத்தத்தை எதிர்த்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசும் மற்றும் அதன் பங்காளி தொழிற்சங்கங்களும் செவ்வாய் கிழமை முதலாளிமாருடன் ஒரு உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டனர். அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள உயர்வு தொழிலாளர்கள் கோரியதை விட மிகக் குறைந்ததாகும். வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்த போதிலும், இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இழுபட்டுவரும் முரண்பாடுகளையிட்டு மேலும் மேலும் அக்கறைகொண்ட மலையக மக்கள் முன்னணியின் அமைதியான ஆதரவு இ.தொ.கா. வுக்கு கிடைத்ததாலேயே அதன் தலைவர்களால் இந்தப் போராட்டத்தை காட்டிக்கொடுக்க முடிந்தது.

இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ம.ம.மு தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் இருவரும் அமைச்சரவை அமைச்சர்களாவர். டிசம்பர் 15 நடந்த ஒரு விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த வேலை நிறுத்தம் பொருளாதாரத்தை சேதமாக்குவதால் அதற்கு முடிவுகட்டுமாறு ம.ம.மு. விடம் இராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். கடந்த ஞாயிரன்று ஹட்டனில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கூட்டமொன்றை சந்திரசேகரன் கூட்டிய போதிலும், அங்கு வந்த பிரதி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா முதலாளிமார் கொடுப்பதை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து தொழிலாளர்கள் மத்தியில் இருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.

அடுத்த நாள், முதலாளிமாருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க, "ஒரு புதிய பெறுமதியான அணுகுமுறையை" மேற்கொள்ளுமாறு இ.தொ.கா. தலைமைத்துவத்தை உற்சாகப்படுத்த சந்திரசேகரன் கடிதமொன்றை எழுதினார். தொழிலாளர்கள் கோரிய 300 ரூபா (3 அமெ. டொலர்கள்) நாள் சம்பளத்தையும் விட மிகக் குறைந்த சம்பள ஒப்பந்தத்தை சந்திரசேகரன் ஒரு "வெற்றி" என பாராட்டினார். இ.தொ.கா. கைச்சாத்திட்ட இந்த இரண்டு வருடகாலத்திற்கான சம்பள உடன்படிக்கை வெறும் 170 ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்குவதோடு 90 ரூபா மேலதிக கொடுப்பனவு ஒன்றையும் வழங்குகிறது. ஆனால் இந்த மேலதிகக் கொடுப்பனவானது தொழிலாளர்களின் வருகை மற்றும் தேயிலை விலையுடன் இணைக்கப்பட்டதாகும். பெரும்பாலான தொழிலாளர்களால் இந்த முழு கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்களும் அதே வழியைப் பின்பற்றின. திங்கட் கிழமை, தோட்டத் தொழிலாளர்களுக்கு 300 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் தனது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் சேர்த்துக்கொண்டு பொது வேலை நிறுத்தமொன்றுக்கு அழைப்புவிடுக்கப் போவதாக ஜே.வி.பி. பிரகடனம் செய்துகொண்டது. புதன் கிழமையளவில், அதன் தலைமைத்துவம் வேலைக்குத் திரும்ப வேண்டுகோள் விடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என அறிவித்தது. பொது வேலை நிறுத்தம் பற்றி வாய் திறக்கவேயில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், தோட்டத் தொழிலாளர் படையில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் பேசும் தொழிலாளர்களும் மற்றும் குறிப்பிடத்தக்களவு சிங்களத் தொழிலாளர்களுமாக அரை மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளுவதை நியாயப்படுத்துவதற்காக தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறுகின்ற நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் காட்டும் பிரதிபலிப்பு மிகவும் முக்கியத்துவமானதாகும்.

தமது பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் தொழிலாளர்கள் கொண்டிருந்த மனவுறுதியானது, அரசாங்கத்தையும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களையும் ஆதரிக்கும் தொழிற்சங்கத் தலைமைத்துவத்தின் சந்தர்ப்பவாத சதித்திட்டங்களுக்கு நேர் எதிரானதாக இருந்தது. தொழிலாளர்களின் உரிமைகளை காப்பதற்குப் பதிலாக, யுத்தத்தின் சுமைகளை தொழிலாளர் வர்க்கம் தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற இராஜபக்ஷவின் கோரிக்கையை அமுல்படுத்தும் இயந்திரமாக தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன.

செவ்வாய் கிழமை கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை தொடர்பாக தொழிலார் மத்தியில் நிலவிய வெறுப்பு மற்றும் ஆத்திரத்தின் காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப மறுத்தனர். இந்த எதிர்ப்பின் முழு அளவும் பரந்தளவில் செய்தியாக்கப்பட வில்லை. அரசாங்கத்திற்கு சொந்தமான சுயாதீனத் தொலைக்காட்சி சேவை, புதன் கிழமை ஒளிபரப்பிய செய்தியில், தொழிலாளர்களில் அரைவாசிப்பேர் புதன் கிழமை வேலைக்குத் திரும்பிவிட்டதாகவும், வியாழக்கிழமை 80 வீதமானவர்கள் திரும்பிவிட்டதாகவும் அறிவித்தது. பொகவந்தலாவ போன்ற பிரதேசங்களில் பிற்படுத்தப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வியாழக்கிழமை வேலைக்குத் திரும்பவில்லை என்ற செய்தியே உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கிடைத்தது.

தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் எமது வலைத் தளத்திற்கு தெரிவித்த கருத்துக்களை இங்கு பிரசுரிக்கின்றோம்.

வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக டிசம்பர 14 அன்று பேராதனைப் பல்கலகைக்கழகத்தின் நூற்றக்கணக்கான மாணவர்கள் இரண்டு மணித்தியால மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். "300 ரூபா சம்பளம் கொடு", "தொழிற்சங்கங்கள் செத்துவிட்டன", "தொழிலாளர்களின் போராட்டத்தை காட்டிக்கொடுக்காதே", "தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல," போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள்.

மலையக மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆர். சந்திரமோகன் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்ததாவது: "சமீப காலங்களில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் முதலாவது பிரச்சாரம் இதுவாகும். எங்களுக்கு தொழிற்சங்கங்களில் நம்பிக்கை இல்லை. இ.தொ.கா. சம்பளப் போராட்டத்தை கவிழ்க்க ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவர்கள் தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறு வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்கின்றனர். நாங்கள் எல்லா மாணவர்களையும் போராட்டத்திற்குள் இறக்குவது எப்படி என்பதைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.

கேகாலையைச் சேர்ந்த சிங்களத் தொழிலாளியான சுனில் தென்னகோன், கடந்த ஞாயிற்றுக் கிழமை மலைய மக்கள் முன்னணியால் பிரதி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கானவர்களில் ஒருவராக அங்கு வந்திருந்தார்.

"பிரதி தொழில் அமைச்சர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க நான் எங்களது பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இங்கு வந்தேன். எங்களது சம்பளக் கோரிக்கையைப் பற்றி அவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை அமைச்சர்களோ அல்லது தொழிற்சங்கத் தலைவர்களோ எங்களுக்கு உறுதியாக சொல்கிறார்கள் இல்லை. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவே நாங்கள் சம்பள உயர்வு கேட்கிறோம். ஆனால் மேலும் சம்பாதிப்பதற்காக எங்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதைப் பற்றி பிரதி அமைச்சர் பேசுகிறார். இது கையில்லாதவனுக்கு தேன் கூட்டைக் காட்டுவது போன்றதாகும். வெளி வருவதற்கு சற்று முன்னதாக எமது கோரிக்கையையும் விட குறைந்த எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என சக தொழிலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

"நாங்கள் இன மத பேதமின்றி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் சில குண்டர்களும் அமைச்சர்களின் பாதுகாவலர்களும் தமிழ் பேசும் தொழிலாளர்களைத் தாக்குவதன் மூலமும் எங்களது சாதாரண போராட்டத்திற்கு சதி செய்வதன் மூலமும் இனவாத பிளவுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். (எட்டியாந்தொட்டையின் லவன்ட் தோட்டத்தில் அமைச்சர் ஒருவரின் ஊழியர்கள் சிலர் தொழிலாளர்களைத் தாக்கியதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.)

"கடந்த 20 ஆண்டுகளாக, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் எங்களது சக பிரஜைகளான தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதோடு யாருக்கும் இலாபமில்லாத வகையில் யுத்தத்திற்காக பெருந்தொகையான பணத்தையும் செலவிடுகின்றனர். இந்தப் பணத்தை எல்லா மக்களதும் நலன்புரி சேவையை முன்னேற்றுவதற்குப் பயன்படுத்த முடியும். இந்த அமைப்பை மாற்றியமைப்பதற்கு இந்த நாட்டிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்ற உங்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன்."

வெலி ஓயா தோட்டத்தைச் சேர்ந்த தேவதாசும் ஹட்டன் கூட்டத்தில் பங்குபற்றினார். "கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக முறைப்பாடு செய்வதை நான் கேள்விப்பட்டேன். அது உண்மையானால் நாம் கம்பனிகளை தோட்டங்களை விட்டு வெளியேறச் சொல்ல வேண்டும். எங்களால் அவற்றை நடத்த முடியும்.

"நாங்கள் எங்களது உரிமைகளுக்காகப் போராடினால் எங்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்துகின்றனர். நான் இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்தேன். இப்பொழுதும் கூட நாம் எங்களது பிரதேசத்தில் வேலைநிறுத்தத்திற்கு தலைமை வகிப்பதால் அவர்கள் என்னைக் கைதுசெய்ய முயற்சிக்கலாம். அதுதான் நிலைமை.

"சிங்களவர்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ இலாபம் தராத யுத்தத்தை முன்னெடுக்க கோடிக்கணக்கான ரூபாய்களை அரசாங்கத்தால் செலவழிக்க முடியுமானால், ஏன் எங்களது துன்பத்தைப் பற்றி சிந்தித்து மக்களின் நலன்களுக்காக பணம் செலவழிக்க முடியாது?

"யுத்தத்தை சாக்குப் போக்காகப் பயன்படுத்திக்கொண்டு, தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அண்மையில் அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு ஜே.வி.பி. ஆதரவாக உள்ளது. இதே சட்டம்தான் அவர்களுக்கு எதிராகவும் (1987-1990களில்) பயன்படுத்தப்பட்டது என்பதை அந்தக் கட்சி மறந்துவிட்டது போலும்."

பொகவந்தலாவையைச் சேர்ந்த தொழிலாளர்கள் புதன் கிழமையும் வியாழக்கிழமையும் வேலைக்குச் சென்றிருக்கவில்லை. டின்ட்சின் தோட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உடன்படிக்கைக்கு எதிராக நகரத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்த போதிலும் பொலிசாரால் தடுக்கப்பட்டனர். வியாழனன்று எமது வலைத் தளத்துடன் உரையாடிய தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை ஆழமாக வெறுத்ததோடு இனிமேல் தொழிற்சங்கங்களுக்கு சந்தா கொடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

டின்ட்சின் தோட்டத்தைச் சேர்ந்த சதாசிவம் தெரிவித்ததாவது: "தொழிற்சங்கங்கள் எங்களை ஏமாற்றிவிட்டன. நாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றோம். ஆனால் எங்களுக்கு ஆதரவு கிடையாது. எங்களது வீடுகளையோ அல்லது வீதிகளையோ யாரும் திருத்துவது கிடையாது. அப்படி அவர்கள் ஏதாவது திருத்தங்களை செய்தாலும் அந்த செலவுகளை எங்களது சம்பளத்தில் வெட்டிக்கொள்வார்கள். அடிப்படைப் பொருட்களின் விலைகள் தாங்கமுடியாத மட்டத்தை எட்டிவிட்டன.

"அவர்கள் (தொழிற்சங்கங்கள்) எங்களது சம்பளத்தைப் பற்றி எங்களிடம் கேட்கவில்லை. அவர்கள் ஏதோவொன்றை கம்பனிகளுடன் சேர்ந்து தீர்மானித்துவிட்டு அதை எங்கள் தலையில் கட்டுகின்றனர். இந்தத் தொழிற்சங்கங்களில் அங்கத்தவனாக இருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? கடந்த காலத்தைப் போல் தொழிலாளர்கள் தலைசாய்ப்பார்கள் என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போது நிலைமை மாறிவிட்டது. மீண்டும் அவர்கள் எங்களை ஏமாற்ற அனுமதிக்கமாட்டோம்."

டின்ட்சின் தோட்டத்தைச் சேர்ந்த இன்னுமொரு தொழிலாளி குறிப்பிட்டதாவது: "எங்களுக்கு வெறும் 35 ரூபா சம்பள உயர்வாகக் கிடைத்துள்ளது. ஒரு கிலோ சீனி 62 ரூபா. நான் நீண்ட காலமாக இ.தொ.கா. உறுப்பினராக இருந்து வருகிறேன். நாங்கள் ஒவ்வொரு மாதமும் 45 ரூபா சந்தா கட்டுகிறோம். ஆனால் அவர்கள் எங்களுக்காக போராடவில்லை.

"அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளனர். இன்று ஒரு கிலோ அரிசி 42 ரூபா. இரண்டு வருடங்களில் அதன் விலை எவ்வளவாக இருக்கும்? எமது மக்கள் மிக சிரமமான நிலைமையின் கீழேயே இந்த வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துக்கொண்டனர். தற்காலிக வருமானத்திற்காக அவர்கள் ஒரு சில போத்தல் பசும்பாலையும் மற்றும் மாட்டு சாணத்தையும் விற்றனர். அல்லது கிடைத்த சில கூலி வேலைகளையும் செய்தனர். ஆனால் இந்த அரசியல்வாதிகள் அதைப்பற்றி சிந்திப்பது கிடையாது. அவர்கள் தமது இலாபத்தையும் சொத்துக்களையும் பற்றியே அக்கறையாக உள்ளனர்.

டன்பார் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் குழுவினர் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பால் கடுமையாக சீற்றமடைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் விளக்கியதாவது: "அவர்கள் எங்களது சம்பளத்தை வெறும் 35 ரூபாவால் மட்டுமே அதிகரித்துள்ளனர். அது ஒரு கிலோ அரசி அல்லது இரண்டு தேங்காய்களை வாங்கப் போதாது. அதற்கும் மேலாக, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம் தொழிற்சங்கங்கள் எங்களை இரண்டு வருடங்களுக்கு அடகு வைத்துவிட்டன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வாழ்க்கைச் செலவு எவ்வளவாக இருக்கும் என உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? (ம.ம.மு. தலைவர்) சந்திரசேகரன் சொல்கிறார் இது தொழிலாளர்களுக்கு வெற்றி என்று. அது பொய். ஜனாதிபதியுடன் பேசி எங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஜனாதிபதி எங்களை அன்றி கம்பனிகளுக்கே சார்பாக நடந்துகொண்டுள்ளார்.

"நாங்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் மற்றும் சத்தியாகிரக போரட்டத்திலும் ஈடுபட்டோம். ஆனால் எங்களது கோரிக்கை கிடைக்கவில்லை. இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டுக்கொண்டது போல் நாங்கள் (எதிர்க்கட்சி) ஐ.தே.க. க்கும் (இராஜபக்ஷவின்) ஸ்ரீ.ல.சு.க. க்கும் வாக்களித்தோம். இனிமேல் நாங்கள் எந்தக் கட்சிக்கும் வாக்கு போடமாட்டோம். நீங்கள் குறிப்பிட்டது போல் இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் யுத்தத்தை தொடங்கியுள்ளதுடன் அதன் சுமையை நாங்களே தாங்க வேண்டும். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற உங்களது கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

தலவாக்கலை கூம்வுட் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுரத்தலி விளக்கியதாவது: "நான் 15 வயதில் இருந்து இங்கு 13 வருடங்களாக வேலைசெய்கிறேன். எனது தாய் இங்கு 35 வருடங்களாக வேலை செய்கின்றார். ஆனால் எங்களுக்கு சிறந்த வாழக்கைக்கான வாய்ப்பே கிடையாது. நான் பல தடவைகள் நிர்வாகத்திடம் கேட்டபோதும் எனக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை. நான் தற்போது எனது அம்மாவின் வீட்டுடன் சேர்த்து மண்ணில் கட்டப்பட்ட ஒரு சிறிய கூடாரத்தில் வாழ்கிறேன். கூரை சேதமாகியுள்ளது. மழைக்காலத்தில், கூரை ஓட்டையில் தண்ணீர் ஒழுகும்போது நாங்கள் அம்மாவின் வீட்டுக்குள் நுழைந்துகொள்வோம்.

"நான் இ.தொ.கா. தொழிற்சங்கத்திடம் முறைப்பாடு செய்த போதும், அவர்கள் நிர்வாகியுடன் பேசுமாறு கூறிவிட்டனர். அவர்கள் எங்களது வாழ்க்கையப் பற்றி அக்கறையெடுப்பதில்லை. அவர்களுக்கு சந்தாப்பணம் மட்டுமே தேவை. எனது ஒன்பது வயது மகளால் வீட்டுப் பாடங்களை படிக்க முடியாது. அதற்கு எங்கள் வீட்டில் வசதி கிடையாது. அடுத்த வருடம் நான் எனது ஐந்து வயது மகளை பாடசாலையில் சேர்க்கப் போகிறேன். அவளை பாலர் பாடசாலைக்கு அனுப்ப என்னிடம் 2,000 ரூபா இல்லை.

"எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் வாழ முடியாது. எனது பிள்ளைக்கு குறைந்பட்சம் நான்கு பக்கட் பால்மா வேண்டும். ஒரு பக்கட் 210 ரூபா. எங்களால் எப்பொழுதும் ஒழுங்காக சாப்பிட முடியாது. பகல் சாப்பாட்டிற்கு நாங்கள் ஒரு கிலோ மாவில் ரொட்டி செய்துகொள்வோம். அவற்றை பிள்ளைகளுக்கு கொடுத்த பின் நான் சில சந்தர்ப்பங்களில் சாப்பாடு இன்றி வேலைக்கு சென்றுள்ளேன். எனது கணவர் கொழும்பில் செய்யும் தற்காலிக தொழிலில் இருந்து ஒரு சிறு தொகையை அனுப்பிவைப்பார்."

பண்டாரவளைக்கு அருகில் உள்ள தோட்டத்தின் சிங்களத் தொழிலாளியான பண்டா, தோட்டக் காவலாளியாவார். வழமையாக காவலாளிகள் வேலைநிறுத்தம் செய்வதில்லை. ஆனால் தனது தோட்டத்தைச் சேர்ந்த 100 சிங்களத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டதாக பண்டா தெரிவித்தார்.

"எங்களுக்கு கொடுக்கப்படும் நாள் சம்பளம் மிகவும் சிறியது. எங்களுக்கு இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை கிடையாது. எனது மூன்று படித்த மகன்களுக்கும் தொழில் கிடையாது. எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ரொக்கட் வேகத்தில் அதிகரிக்கின்றன. இந்த யுத்தம் ஒரு குற்றவியல் நடவடிக்கையாகும். இரு தரப்பிலும் மக்கள் கொல்லப்படுகிறார்கள். யுத்தத்திற்கு பிரச்சாரம் செய்யும் ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களும் மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்தினர்," என அவர் தெரிவித்தார்.

பண்டாரவளைக்கு அருகில் தம்பதென்ன தோட்டத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் என்ற தொழிலாளி, தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக புதன்கிழமை வேலைக்குச் சென்றிருக்கவில்லை. மஹிந்த சிந்தனையின் (2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷவின் விஞ்ஞாபனம்) கீழ் நன்றாக வாழ முடியும் என தான் நினைத்ததாக தெரிவித்த அவர், ஆனால், 450 கிராம் பாண் இப்போது 20 ரூபாவை விட அதிகம் என்றார். ஏனைய அடிப்படைப் பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் மீதோ அல்லது தொழிற்சங்கத் தலைவர்கள் மீதோ நம்பிக்கைக் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டாரவளைக்கு அருகில் நாயபத்த தோட்டத்தைச் சேர்ந்த பாலா தெரிவித்ததாவது: "நாங்கள் விருப்பமின்றியே வேலைக்குத் திரும்புகிறோம். தொழிற்சங்கத் தலைவர்களை இங்கு வர விடமாட்டோம். நாங்கள் எங்களது அவலங்களை விளக்கி, தொழிற்சங்கங்களில் இருந்து விலகுவதாக அறிவிக்க ஒரு தொலைக்காட்சி சேவையை அழைத்துவர திட்டமிடுகின்றோம். அவர்கள் எங்களிடமிருந்து 60 ரூபா மாதாமாதம் சேர்க்கிறார்கள்.

"லயன் காம்பராக்களின் கூரைகளுக்குப் போடப்பட்டுள்ள தகரங்கள் இத்துப்போயுள்ளன. எங்களுக்கு ஒழுங்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் கிடையாது. சில லயன்களுக்கு மின்சாரமே கிடையாது. அவற்றுக்கு ஒழுங்கான படிக்கட்டுகளோ பாதைகளோ இல்லை. அரசாங்கமும் ஒன்றும் செய்வதில்லை தோட்டக் கம்பனிகளும் ஒன்றும் செய்வதில்லை.

"மோசமான காலநிலையின் போது, பிற்பகல் 2 மணியளவில் நாங்கள் வேலையை முடித்துவிட முனைந்தாலும், அவர்கள் கொழுந்துகளை பொறுப்பேற்கும் வரை ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும்.

"எமது பிள்ளைகள் போஷாக்கின்மையால் வாடுகின்றனர். எங்களுக்கு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வசதி கிடையாது. இங்குள்ள பாடசாலையில் 13 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் 8 பேர் தொண்டர் ஆசிரியர்கள். தொண்டர் ஆசிரியர்கள் ஒரு பிள்ளையிடமிருந்து மாதம் 30 ரூபா படி கிடைக்கும் பணத்தில் இருந்து ஒரு கொடுப்பனவை மட்டுமே பெறுகின்றனர்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved