:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan military carries out another
atrocity against civilians
இலங்கை இராணுவம் பொதுமக்களுக்கு எதிராக இன்னுமொரு அட்டூழியத்தை மேற்கொண்டுள்ளது
By Sarath Kumara
5 January 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரப்படுத்தும்
நிலையில் இன்னுமொரு அட்டூழியத்துடன் புதிய வருடத்தை தொடங்கியுள்ளது.
செவ்வாய் கிழமை, வடமேல் மாவட்டமான மன்னாரில் இலுப்பைக்கடவைக்கு அருகில்
படகுத்துறையில் உள்ள தமிழ் அகதிகள் குடியிருப்பு மீது விமானப்படை குண்டுவீசியுள்ளது. புலிகளின் பேச்சாளரின்படி,
விமானத் தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு
மேலும் 35பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தொகையான தங்குமிடங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாகியுள்ளன.
இராணுவம் பொதுமக்கள் மீது குண்டுவீசியதை உடனடியாக நிராகரித்தது. விமானப்படை
பேச்சாளரும் குழு தளபதியுமான அஜந்த சில்வா, மன்னாரிலும் மற்றும் கிழக்கில் வாகரையிலும் இரு புலிகளின் இலக்குகள்
தாக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். மன்னாரில் இலக்குவைக்கப்பட்டது புலிகளின்
தளமே என "நிரூபிக்க" விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட தெளிவற்ற படங்கள் பின்னர் வெளியிடப்பட்டன.
பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால், புலிகள் அவர்களை அங்கு பலாத்காரமாக வைத்திருந்திருப்பார்கள் என
பாதுகாப்புப் பேச்சாளர் கெஹேலியே ரம்புக்வெல்ல பிரகடனம் செய்தார்.
அந்தப் பிரதேசத்தை பார்வையிட்ட மன்னார் கத்தோலிக்க ஆயர் இராயப்பு ஜோசப்,
இந்தப் படுகொலைகளை கண்டித்தார். அவர் பி.பி.சீ. க்குத் தெரிவித்ததாவது: "அந்தப் பிரதேசத்தில் நான்
எந்தவொரு தமிழ் புலிகளின் தளத்தையும் காணவில்லை. அவர்கள் ஒரு சிறிய மீனவ சமூகத்தவர்கள். கொல்லப்பட்டவர்களும்
காயமடைந்தவர்களும் பொது மக்கள்." இந்தத் தாக்குதல் சம்பந்தமாக ஒரு முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு
அவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிற்கு எழுத்துமூலம் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிழமை கொலைகள் சம்பந்தமாக கவலை தெரிவித்து ஒரு அறிக்கையை
வெளியிட்ட மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் மார்கரேடா வல்ஸ்ட்ரோம்,
பொதுமக்களை காக்குமாறு இரு தரப்புக்கும் வேண்டுகோள் விடுத்தார். விமானத் தாக்குதல் நடந்த இடத்திற்கு
அருகில் உள்ள இலுப்பைக்கடவை கிராமத்தில், "2006 முற்பகுதியில் இருந்து மோதல்களால் இடம்பெயர்ந்த
4,000 ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இங்கு தஞ்சமடைந்திருந்ததாக" அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2006ல் யுத்தம் மீண்டும் வெடித்ததன் மூலம் சுமார் 213,000 மக்கள்
இடம்பெயர்ந்துள்ளனர். ஒரு மதிப்பீட்டின்படி 2004 டிசம்பர் சுனாமி பேரழிவில் வீடுவாசல்களை இழந்த
120,000 முதல் 140,000 வரையானவர்களும் இதில் அடங்குவர். இது இதற்கு முன்னர் இரு தசாப்தகால
உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெயர்ந்துள்ள 315,000 மக்களுக்கு மேலதிகமானதாகும்.
ஐ.நா., "மோதல்களை தவிர்க்குமாறும்" சர்வதேச சமாதான முன்னெடுப்பு என
சொல்லப்படுவதை மீண்டும் தொடங்குமாறும் அழைப்புவிடுத்துள்ளது. எவ்வாறெனினும், இராஜபக்ஷ அரசாங்கத்தை
பொறுத்தளவில், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையின் விதிகளுக்கு கட்டுப்படுவதாக கூறும் அதன் வாக்குறுதிகளுக்கு
மத்தியிலும், அதற்கு பகைமைக்கு முடிவுகட்டும் எண்ணம் இல்லை. 2005 நவம்பரில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து,
இராஜபக்ஷ புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உறுதியாக துரிதப்படுத்தினார். இது முதலில் இரகசிய
படுகொலைகளாகவும் மற்றும் பின்னர் கடந்த ஜூலையில் இருந்து "மனிதாபிமான" மற்றும் "தற்காப்பு"
நடவடிக்கைகள் என்ற பெயரில் ஒரு தொடர்ச்சியான பகிரங்கமான இராணுவத் தாக்குதல்கள் மூலமும்
அரங்கேறியது.
செவ்வாய் கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட்
ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ நடவடிக்கைகளின் உண்மையான குறிக்கோள்களை அம்பலப்படுத்தினார்.
பெளத்த பிக்குகளை சந்திக்க கண்டிக்கு சென்றபோது அவர் பிரகடனப்படுத்தியதாவது: "கிழக்கில் இருந்து புலிகளை
விரட்டியடித்த பின்பு, வடக்கை கைப்பற்றுவதற்காக இராணுவத்தின் முழுப் பலமும் பயன்படுத்தப்படும்." ஒருசில
நாட்களுக்கு முன்னர், இராணுவம் ஒரு மாதத்திற்குள் கிழக்குப் பிரதேசத்தில் வாகரை மற்றும் கதிரவெளியை
கைப்பற்றும் என அவர் முன்னறிவித்திருந்தார்.
படகுத்துறை சம்பவமானது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள பொது
மக்களை அச்சுறுத்துவதை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான அட்டூழியங்களின் புதியது மட்டுமே. ஒவ்வொரு
சம்பவங்களின் போதும், பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல் தொடுப்பதை துணிவுடன் நிராகரித்துவரும்
இலங்கை இராணுவம், பின்னர் ஆதாரங்கள் குவியும் போது புலிகள் பொது மக்களை "மனிதக் கேடயங்களாகப்"
பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியது. ஜனாதிபதி இராஜபக்ஷ ஒரு தொகை விசாரணைகளை முன்னெடுப்பதாக
வாக்குறுதியளித்தபோதும், எந்தவொரு இராணுவத் தளபதி மீதும் பொறுப்புச் சுமத்தப்படவில்லை.
இராணுவத்தின் நடவடிக்கைகள் தீவின் கிழக்கிலேயே குவிமையப்படுத்தப்பட்டுள்ளன. பல
வாரங்களாக, அது மட்டக்களப்பில் வாகரைப் பிரதேசத்தின் மீது ஆட்டிலறிகளையும் விமானங்களையும் பயன்படுத்தி
குண்டுமாரி பொழிந்துகொண்டிருக்கின்றது. படகுத்துறை மீது குண்டுத் தாக்குதல் தொடுக்கப்பட்ட அதேதினம்,
வாகரையில் புலிகளின் பெரிய ஆட்டிலறித் தளம் ஒன்றை அழித்ததாக விமானப்படை கூறிக்கொண்டது. புதன் கிழமை,
அதே பிரதேசத்தில் வெருகலுக்கு அருகில் புலிகளின் பெரிய ஆயுதக் கிடங்கு போல் தெரிந்ததன் மீது இன்னுமொரு
விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஜூலையில் இருந்து கிழக்கில் இரு பிரதான பிரதேசங்களை ஆயுதப்படைகள்
கைப்பற்றிக்கொண்டுள்ளன. மாவிலாறு மற்றும் பிரதான திருகோணமலை கடற்படை தளத்திற்கு தெற்காக
அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர் பிராந்தியமும் இதில் அடங்கும். கிழக்கில் புலிகளின்
பிரதான தரையிறங்கு வலயமான வாகரை மற்றும் வெருகல் பிரதேசத்தை இராணுவத்தால் கைப்பற்றிக்கொள்ள
முடியுமானால், அது புலிகளின் பிரதான கோட்டையான வடக்கில் வன்னி பிராந்தியத்தில் இருந்து கிழக்கில் உள்ள
புலிகளை துண்டிக்க முடியும். கிழக்கில் உள்ள புலிகளும் பிரிக்கப்படக் கூடும்.
சம்பூரை கைப்பற்ற அது பயன்படுத்திய அதே சூழ்ச்சியையே இராணுவம்
பயன்படுத்துகிறது. அதாவது அதிகபட்ச குழப்பத்தையும் பீதியையும் உருவாக்குவதற்காக கண்மூடித்தனமான விமானத்
தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலறி குண்டுமாரிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதாகும். கடந்த இரு மாதங்களில்
இத்தகைய தாக்குதல்களில் பெருந்தொகையான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 40,000 மக்கள்
பிரதேசத்தை விட்டு வெளியேறி மட்டக்களப்பில் உள்ள தற்காலிக முகாம்களில் பயங்கரமான நிலைமைகளின்
வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இராணுவம் வீதிகளை மூடியுள்ள நிலையில் மேலும் 15,000 மக்கள் இடம்பெயர
முடியாமல் சிக்கியுள்ளனர்.
ஜனாதிபதி இராஜபக்ஷ, டிசம்பர் 27 முதல் தடவையாக கிழக்கில் பாதுகாப்பு
நிலைமைகளை ஆராய்வதற்காக திருகோணமலை கடற்படைத் தளத்தில் தேசியப் பாதுகாப்பு சபை கூட்டத்தை
நடத்தினார். உயர்மட்ட பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் முப்படைத் தளபதிகளையும் உள்ளடக்கிய இந்தக் கூட்டம்,
தாக்குதல்களை தொடர்வதற்கான ஆசீர்வாதத்தை தெளிவாக வழங்கியது. இராணுவத் தளபதி பொன்சேகாவின்
வார்த்தைகளில் சொல்வதென்றால், "புலிகளை கிழக்கில் இருந்து ஒழித்துக்கட்டுவது."
இராணுவம் தளபாடங்கள், வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் உள்ளடங்களாக புதிய
தளபாடங்களை வாங்க ஏற்பாடுசெய்துள்ளது. ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி என்ற ஊடகத்தில் செய்தி
வெளியாகியிருந்தவாறு, அடுத்த 18 மாதங்களில் டாங்கிகள், பலவிதமான குண்டுகள், ஆளில்லா விமானங்கள் மற்றும்
கவச வாகனங்களை கொள்வனவு செய்ய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன. இராஜபக்ஷ
அரசாங்கம் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவீனத்தை 45 வீதத்தால்
உயர்த்தியுள்ளது.
புலிகள் பெருமளவில் தற்காப்புடன் பிரதிபலிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்
அதன் நிலைகள் மீதான அழுத்தத்தை விலக்கும் முயற்சியாக அது வடக்கில் தாக்குதல்களை தொடுக்கத்
தொடங்கியுள்ளது. திங்களன்று அது வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரதேசத்தில் மூன்று
தாக்குதல்களை முன்னெடுத்தது. இராணுவம் கிழக்கில் தாக்குதல்களை தொடருமானால் புலிகள் "எதிர்காலத்தில்
முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க" நேரிடும் என புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன்
தெரிவித்தார்.
அரசாங்கமும் இராணுவமும் புலிகளுக்கு எதிரான தமது தாக்குதல்களுடன் யுத்தத்தை
எதிர்ப்பவர்கள் மீதும் பாய்ந்து விழுகின்றன. ஊடகவியலாளர்களுடன் "முரண்பட்ட" இராணுவத் தளபதி பொன்சேகா,
"ஊடகங்கள் இராணுவத்தின் குறிப்பிட்ட சில சிறுதவறுகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தேசியப் பாதுகாப்புக்கு
பங்கம் விளைவிப்பதாக குற்றஞ்சாடினார்," என ஐலண்ட் பத்திரிகை செய்திவெளியிட்டிருந்தது. "பிழையாக
செய்தி வெளியிடுவதாகவும் மற்றும் சில விடயங்களில் இராணுவம் போர்க்களத்தில் அனுபவித்த தோல்விகளை பெரிதுபடுத்துவதாகவும்"
அவர்கள் மீது குற்றஞ்சாட்டிய பொன்சேகா, "பாதுகாப்புப் படையினர் புலிகளுடன் மோதும் போது ஊடகங்கள் தேசப்பற்றுள்ளவையாக
இருக்கவேண்டும்" என வலியுறுத்தினார்.
கடந்த சனிக்கிழமை இந்த எச்சரிக்கைகளை ஜனாதிபதி இராஜபக்ஷவும் மீண்டும் வலியுறுத்தினார்.
ஊடகங்கள் நாட்டைக் "காட்டிக்கொடுக்கக்" கூடாது, "தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு பங்கம்விளைவிக்கக்" கூடாது
என அவர் பிரகடனம் செய்தார். நவம்பரில் அரசாங்கம் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் பலப்படுத்தப்பட்ட
பிரதியை மீண்டும் அமுல் செய்தது. இந்த சட்டம், பெரும் குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணையின்றி நீண்டகாலம்
விசாரணையின்றி தடுத்துவைக்க அனுமதிக்கின்றது. தீவு ஏற்கனவே அவசரகால நிலைமையின் கீழ் உள்ளதுடன் பத்திரிகை
தணிக்கைகளை திணிப்பதற்காக ஜனாதிபதியால் இது பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.
"புலிகளை ஒழித்துக்கட்டும்" யுத்தம் இராஜபக்ஷவின் புத்தாண்டு வாழ்த்துக்களை கேலிக்கூத்தாக்கியுள்ளது.
இராணுவம் கிழக்கில் தனது நடவடிக்கைகளை உக்கிரமாக்கியுள்ள நிலையில், "புதுவருடமானது நாம் நீண்டகாலம்
காத்திருக்கும் நேர்மையான நிலையான சமாதானத்தை கொண்டுவரும் என நாம் எதிர்பார்க்கிறோம்," என அவர்
பிரகடனம் செய்தார். அவரது முன்னோடியான சந்திரிகா குமாரதுங்க 1990களில் முன்னெடுத்த "சமாதானத்திற்கான
யுத்தத்தைப்" போல், இந்தப் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் செலவுகளை சாதாரண உழைக்கும் மக்களே தவிர்க்கமுடியாமல்
சுமக்கத் தள்ளப்படுவர். |