World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The 2006 elections and the US two-party system

Bush, Democrats disenfranchise antiwar voters

2006 தேர்தலும் அமெரிக்க இருகட்சி அமைப்பும்

புஷ்ஷும் ஜனநாயகக் கட்சியினரும் யுத்த விரோத வாக்காளர்களை வாக்குரிமை அற்றவர்களாக்குகின்றனர்

By the editorial board
4 December 2006

Back to screen version

நவம்பர் 7 அன்று அமெரிக்க காங்கிரஸ் தேர்தல்கள் நடந்து முடிந்து நான்கு வாரங்களின் பின்னர், அமெரிக்க ஆளும் தட்டின் அனைத்துப் பிரிவினரும் மிகப் பெரும்பான்மையான யுத்த விரோத வாக்குகளுக்கு புறமுதுகு காட்டியுள்ளனர். இந்த யுத்த விரோத வாக்காளர்கள், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை நிராகரித்து பிரதிநிதிகள் சபை, செனட் ஆகிய இரு சபைகளிலும் குடியரசுக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டியதோடு காங்கிரஸில் ஜனநாயகக் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

தேர்தலை அடுத்து வந்த நாட்களில், பெறுபேறுகளை தீர்மானிப்பதில் யுத்த விரோத உணர்வுகளின் தீர்க்கமான பாத்திரத்தை வாக்களிப்பின் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் ஆவணப்படுத்தின. வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், புஷ் நிர்வாகம் ஈராக்கில் முன்னெடுக்கும் யுத்தத்தை எதிர்த்திருந்ததோடு, இவர்களில் 80 வீதமானவர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்திருந்தனர். எதிர்த்து வாக்களித்தவர்களின் மனதில் பெருமளவில் யுத்தம் மிகப் பிரதானமான பிரச்சினையாக இருந்தது.

ஊடக பண்டிதர்கள் மற்றும் இரு பிரதான கட்சிகளின் அலுவலர்கள், தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கள், தேர்தல் யுத்தம் சம்பந்தமான ஒரு உண்மையான கருத்துக் கணிப்பாகியது என்பதையும் அமெரிக்க மக்கள் "இல்லை" என எதிரொலித்துள்ளனர் என்பதையும் ஒப்புக்கொண்டனர்். ஈராக்கில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை உடனடியாகவும் துரிதமாகவும் மற்றும் முற்றாகவும் வெளியேற்றுவதே யுத்த விரோத பெரும்பான்மையின் மத்தியில் மிகவும் சிறந்த கொள்கைத் தெரிவாக இருந்துள்ளதை வாக்களிப்பின் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டியுள்ளன.

கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் புஷ் நிர்வாகம், காங்கிரஸில் ஆட்சிக்கு வந்துள்ள ஜனநாயகக் கட்சி தலைமைத்துவம் மற்றும் ஊடக ஆய்வாளர்களும், ஈராக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது பற்றிய எந்தவொரு கலந்துரையாடலுக்கும் வாய்ப்புக் கிடையாது என்பதில் உடன்பட்டுள்ளனர். மாறாக, ஈராக் கொள்கை சம்பந்தமான உத்தியோகபூர்வ விவாதமானது, அங்கு பத்தாயிரக்கணக்கான மேலதிக துருப்புக்களை அனுப்பி வைப்பது முதல், ஆண்டுக் கணக்காக இல்லாவிட்டால் தசாப்தங்களாக அங்கு தங்கியிருப்பதற்காக, முன்னணி நிலைகளில் உள்ள அமெரிக்கத் துருப்புக்களின் ஒரு பகுதியை ஈராக்கில் அல்லது ஈராக்கிற்கு அருகில் உள்ள அரை டசின் தளங்களுக்கு திருப்பி அழைத்துக் கொள்வது வரை இறுக்கமாக எல்லைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இரு பிரதான அமெரிக்க நாளாந்த செய்தித்தாள்களும், ஈராக்கில் இருந்து வெளியேறுவது தொடர்பான விடயம் உத்தியோகபூர்வ வட்டாரத்தில் எந்தவொரு அக்கறையுமின்றி துரிதமாக அலட்சியம் செய்யப்படுவது பற்றி அண்மைய தினங்களில் குறிப்புகளை வெளியிட்டிருந்தன. டிசம்பர் 1, நியூ யோர்க் டைம்ஸ் "ஈராக்கில் இருந்து துரிதமாக வெளியேறும் கருத்து மங்கிப் போவது போல் தெரிகிறது," என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அது சிறந்த தொடர்புகள் வைத்திருக்கும் அரசியல் செய்தியாளர் டேவிட் சன்கெரால் எழுதப்பட்டிருந்தது.

சன்கெர் எழுதுவதாவது, "ஈராக்குடன் கொடுக்கல் வாங்கல் செய்வது எப்படி என்பது பற்றிய திட்டங்களை வெற்றிகொள்வதன் வெறுப்பொலியில் இப்போது ஒரு யதார்த்தம் தோன்றியிருப்பது தெளிவு: இந்த மாதம் யுத்தம் பற்றிய கருத்துக்கணிப்பாக கருதப்பட்ட ஒரு தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெற்றிருந்த போதிலும், அமெரிக்கத் துருப்புக்களை துரிதமாக வெளியேற்றும் கருத்தானது பயனளிக்கவல்ல தேர்வு என்பதில் இருந்து வேகமாக பின்நோக்கிச் செல்கிறது." அவர் இந்த விவகாரத்தில் புஷ், கூட்டுத் தளபதிகள், இரு கட்சிகள் சார்ந்த ஈராக் கற்கை குழு, காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் முன்நாள் ஜனாதிபதி பில் கிளின்டனதும் ஒருமுகப் போக்கை குறிப்பிட்டிருந்தார்.

இதையே பின்பற்றி வாஷிங்டன் போஸ்ட் அடுத்தநாள் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. "அதிகாரிகள் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை, நடுவர் குழு என்ன ஆலோசனை தெரிவித்தாலும் முக்கியத்துவம் கிடையாது," என தலைப்பிடப்பட்டிருந்த அந்தக் கட்டுரை, ஈராக் கற்கைக் குழுவின் பரிந்துரைகள் அல்லது பென்டகன் மற்றும் தேசிய பாதுகாப்புச் சபையால் முன்னெடுக்கப்பட்ட ஈராக் கொள்கை சம்பந்தமான நிர்வாக ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் "ஈராக் கொள்கை சம்பந்தமான குறித்த நோக்குகளில் புஷ் நிர்வாகம் நகராது என அது பங்காளிகளுக்கு முன்னறிவித்துள்ளதாக" செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரசால் ஸ்தாபிக்கப்பட்ட இருகட்சி சார்ந்த ஆணைக்குழுவான ஈராக் கற்கைக் குழு, டிசம்பர் 6, புதன் கிழமை தனது ஆய்வுகளை முன்வைக்கவிருந்தாலும், ஏற்கனவே ஊடகங்களுக்கு கசிந்த செய்திகள் அது அக்கறை செலுத்தும் தேர்வுகளில் ஒன்றாக ஈராக்கில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுவது இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஐந்து குடியரசுக் கட்சிக்காரர்கள் மற்றும் ஐந்து ஜனநாயகக் கட்சிக்காரர்கள் உள்ளடங்கிய இந்தக் குழுவில் உள்ள பெயர் குறிப்பிடாத உறுப்பினர்களை மேற்கோள் காட்டிய ஊடக கணிப்பீடுகள், ஈராக்கிற்குள் துருப்புக்களை மீண்டும் நிலைப்படுத்துவது மற்றும் சிரியா அல்லது ஈரானுடனான கடமைகள் உட்பட்ட இராஜதந்திர முயற்சிகளை அதிகரிப்பது ஆகியவற்றுக்குள் இந்த பரிந்துரைகள் வரையறுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளன.

புஷ் வழமை போல் துருப்புக்களை வெளியேற்றுவதற்கு பண்பற்ற முறையிலும் மிகவும் இறுமாப்புடனும் ஒருமுகப்படுத்தப்பட்ட எதிர்ப்பை வெளியிட்டார். கடந்த வாரம் லட்வியாவிற்கும் பின்னர் ஜோர்தானுக்கும் பயணித்த போது பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் உணர்ச்சிவசப்பட்ட அவர், "ஒழுங்குமுறையாக வெளியேறுவது பற்றிய இந்த பிரச்சினை என்னவாக இருந்தாலும் வெறுமனே யதார்த்தமற்றது," என்றார். மனிதப் பேரழிவு ஆயுதங்கள் தொடக்கம் செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈராக்கின் தொடர்பு மற்றும் ஈராக்கை "ஜனநாயகமயப்படுத்தல்" என்பது வரையும் ஈராக் பற்றிய புஷ்ஷின் சொந்தக் கூற்றுக்களின் "யதார்த்தத்தைப்" பற்றி கேட்பது பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் அங்கு வந்திருந்த ஊடகப் பட்டாளங்களில் எவரும் இதைக் கேட்கவில்லை.

இதற்குப் பதிலாக அமெரிக்கத் தேர்தலின் தெளிவான தீர்ப்பை புஷ் வெட்கங்கெட்ட முறையில் நிராகரித்ததை வாஷிங்டன் போஸ்ட் பாராட்டியுள்ளது. டிசம்பர் 3 அன்று வெளியிட்ட ஆசிரியர் தலைப்பில், "யாதார்த்தத்துடன் தொடர்பற்றவராக பொதுவில் குற்றஞ்சாட்டப்படும் திரு. புஷ், கடந்த வாரம் ஒரு கவர்ச்சியான விவேகத்தை நமக்கு ஏற்படுத்தும் விதத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்: "ஒழுங்குமுறையாக வெளியேறுவது பற்றிய இந்தப் பிரச்சினை என்னவாக இருந்தாலும் வெறுமனே யதார்த்தமற்றது," என ஜனாதிபதி தெரிவித்தார், எனக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கத் துருப்புக்களை வெளியேற்றும் விவகாரம் மேசையில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள அதே வேளை, ஈராக் பேரிடரில் இருந்தும், மற்றும் பேரழிவு மூலோபாயத்தின் தோல்வியின் பொறுப்பை ஏற்றுக்கொள்வது யார் என்பதில் அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளும் மற்றும் புஷ் நிர்வாகத்திற்குள்ளேயும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளில் இருந்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக எதையாவது தற்காத்துக்கொள்வதன் பேரில் என்ன வழிமுறையை கையாள வேண்டும் என்பது தொடர்பான விவாதத்தில் உத்தியோகபூர்வ வாஷிங்டன் மேலும் மேலும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியுள்ளது.

இது, அமெரிக்க மற்றும் ஈராக்கியர்களின் பிரமாண்டமான உயிரிழப்புக்கும் மற்றும் ஒரு முழு நாட்டினதும் சமூகக் கட்டுமானத்தை அழித்த குற்றத்திற்கும் நேர்மையாக பொறுப்பேற்பதற்கு முடிவு செய்யும் விடயம் அல்ல. அதற்கும் மேலாக, இது 2008 ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசியல் இலாபத்தை பெருக்குவதிலும் மற்றும் பரந்த இராணுவ புலணாய்வு அதிகாரத்துவத்தினுள் வளர்ந்துவரும் கசப்பான போராட்டத்தை முன்னெடுப்பதிலும், இரு உத்தியோகபூர்வ கட்சிகளில் ஒன்று அல்லது இன்னொரு பிரிவு தனிப்பட்ட கொள்கை வகுப்பாளர்களை (ரம்ஸ்பீட்ல் போல்) நீக்குவதன் மூலம் ஆளும் தட்டுக்குள் புள்ளிகளை சேகரிக்கும் விவகாரமாக இருக்கிறது.

இந்த மோதல்களின் கடைசி அளவீடானது பெண்டகனில் உள்ள அதிகாரிகள், வெள்ளை மாளிகை, சீ.ஐ.ஏ. உள்ளேயும் தகவல் கசியவிடும் யுத்தமொன்றை பெறுபேறாக்கியுள்ளதோடு இராஜாங்கத் திணைக்களம் வகைப்படுத்தப்பட்ட அந்தரங்க மதிப்பீடுகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த வாரத்தில் மட்டும், டைம்ஸ் மற்றும் போஸ்ட் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட இரகசிய ஆவணங்களில் பின்வருவன அடங்குகின்றன: அமெரிக்கா நியமித்த மலிகி அரசாங்கத்தைப் பற்றி மிகப் பெருமளவு விமர்சித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹட்லி எழுதிய மதிப்பீடு; ஈராக்கில் அமெரிக்க இராணுவ வெற்றிக்கான சாத்தியம் இல்லை என முடிவுசெய்துள்ள ஆன்பார் மாகாண கடற்படையின் ஆய்வு; ஜனநாயகப் பாசாங்கு மற்றும் இரு தரப்புக்கும் இடையில் மத்தியஸ்தம் போன்றவற்றைக் கைவிட்டு, ஈராக்கின் உள்நாட்டு யுத்தத்தில் ஷியைட்டுக்களுக்கு ஆதரவளிக்க இராஜாங்கத் திணைக்களம் முன்வைத்துள்ள பிரேரணை; மற்றும் மிகவும் அண்மையில், அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசாங்கத்திற்கு சாத்தியமான வகையில் கையாள மாற்றீட்டு திட்டத்தை பிரேரித்து, தேர்தலுக்கு முதல் நாள், நவம்பர் 6 திகதியிடப்பட்டு பென்டகன் தலைவரான ரம்ஸ்பீல்ட் புஷ்ஷுக்கு அனுப்பிய குறிப்பு.

இரண்டு விடயங்களுக்கு ரம்ஸ்பீல்டின் குறிப்பு குறிப்பிடத்தக்கதாகும்: ஈராக்கில் தற்போதைய அமெரிக்க கொள்கையின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதோடு அந்தத் தோல்விக்காக எந்தவொரு விளக்கமும் தரப்பட்டிருக்கவில்லை. இது அமெரிக்க ஆக்கிரமிப்பின் அழிவுகரமான நெருக்கடியையும், அதே போல் இந்த சட்ட விரோத யுத்தத்தின் கொள்கைப் படைப்பாளிகளின் அரசியல் மற்றும் அறிவாற்றலின் வங்குரோத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஞாயிறு காலையில் தேசியத் தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சிகளில் தோன்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹட்லி, ரம்ஸ்பீல்டின் குறிப்பின் முக்கியத்துவத்தை குறைத்து விளக்க முயற்சித்தார். ஈராக்கில் திடமான முன்னேற்றம் மற்றும் "வெற்றி" பற்றிய போலித் தேர்தல் பிரச்சாரம் பூராவும் புஷ் நிர்வாகத்தின் கொள்கைப் பரப்புடன் இந்தக் குறிப்பு உறுதியாக முரண்படுகிறது என்ற தெளிவான உண்மையை அவர் மறுத்தார்.

பேட்டி நிகழ்ச்சிகளில் ஹட்லியைப் பின்தொடர்ந்த செனட் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்களும், ஈராக்கில் அமெரிக்காவின் தோல்வியானது மிகப்பெரிய சர்வதேச பின்விளைவுகளுடன் கூடிய பேரழிவாக இருக்கும், என்ற மிகவும் அடிப்படையான பிரச்சினையில் வெள்ளை மாளிகையுடன் பொது உடன்பாட்டைக் கொண்டிருந்தனர். அந்த வரம்புத் திட்டத்திற்குள், புஷ் நிர்வாகத்தின் தோல்வியில் இருந்து சாத்தியமானளவு விரைவில் முன்னேற்பாடு செய்யப்பட்ட தோல்வி அல்லது ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு பலவிதமான சிபாரிசுகளை அவர்கள் வழங்கினர்.

பல நிகழ்ச்சிகளில், எந்த செனட்டர் எந்தக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றார் என்பதை அவர்களது கருத்துக்களில் இருந்து முடிவு செய்வது கடினமாகவே இருந்திருக்கும். "மக்களுக்கு முகங் கொடுத்தல்" என்ற சீ.பி.எஸ். நிகழ்ச்சியில் தோன்றிய கனெக்டிகட்டின் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோசப் லிபர்மான், புஷ் நிர்வாகத்தின் கொள்கை தோல்வியடைந்துவிட்டது என வெளிப்படையாக பிரகடனம் செய்த தனது சமதரப்பினரான குடியரசுக் கட்சியின் நெப்ரஸ்கா செனட்டரான சுக் ஹகலை விட வெகு தூரம் சென்றுவிட்டார்.

"பொக்ஸ் நியூஸ் சண்டே" நிகழ்ச்சியில் பங்குபற்றிய செனட்டர் ஜோன் மக்கெயினின் நெருங்கிய பங்காளியான தென் கரோலினாவின் குடியரசுக் கட்சி செனட்டர் லின்ட்சி க்ரஹம், ஆயிரக்கணக்கான மேலதிகத் துருப்புக்களுடன் ஈராக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை உக்கிரப்படுத்த அழைப்பு விடுத்ததோடு, ஈராக்கிலான தோல்வியானது இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்குப் பூராவும் பேரழிவுகொண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

ஈரக்கில் யுத்தத்தை எதிர்ப்பவர்களுடன் பொது உடன்பாட்டை புஷ் தேட வேண்டும் என்ற புதுக் கருத்தை நிராகரித்த அவர், "நாம் ஈராக்கில் வெல்லவேண்டும். மற்றும் நாட்டை ஐக்கியப்படுத்தி நாம் தோல்வியடையும் எந்தவொரு மூலோபாயத்தையும் நான் எதிர்க்கிறேன். ஐக்கியப்பட்டு தோல்வியடைவதை விட, ஒரு இனமாக பிளவுபட்டு வெற்றுபெறுவதை நான் விரும்புகிறேன்" என பிரகடனம் செய்தார்.

க்ரஹம் உடன் நிகழ்ச்சியில் தோன்றிய ஜனநாயக் கட்சியின் டெலாவார் செனட்டரான ஜோசப் பைடென், எல்லோரையும் விட யுத்தத்திற்கு எதிரானவர்களை அல் கெய்தா பயங்கரவாதிகளின் தரத்தில் வைக்கும் இந்த திடீர் கோபத்திற்கு சாந்தப்படுத்தும் கருத்துடன் பதிலளித்தார். "நல்லது, லின்ட்சே நிறைய நல்ல கருத்துக்களை சொன்ன போதிலும், இங்குள்ள அடிநிலைப் போக்கானது ஈராக்கினுள் ஒரு அரசியல் தீர்வு இல்லையெனில் அழிவுகரமானதாக இருக்கப் போகிறது," என்றார்.

பைடன், தான் ஈராக்கிற்கு 100,000 மேலதிக துருப்புக்களை அனுப்புமாறு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேட்டுக்கொண்டதாகவும், அது புஷ் நிர்வாகத்தால் தேவையற்றது மற்றும் நடைமுறையற்றது என நிராகரிக்கப்பட்டதாகவும் பெருப்பித்துக் காட்ட முயற்சித்தார். அவர் ஈராக்கை ஷியைட், சுனி மற்றும் குர்திஷ் என மூன்று அரசுகளாகப் பிரிக்கும் தனது வேண்டுகோளை வலியுறுத்தினார்.

யுத்தத்திற்கான இருகட்சி சதி

ஞாயிற்றுக் கிழமை என்.பீ.சீ. யின் "மீட் த பிரஸ்" நிகழ்ச்சியில் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் வர்னர் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கால் லெவினுடனும் நடந்த பேட்டி நிகழ்ச்சி, அரசியல் ரீதியில் மிகவும் வெளிப்படையானதாக இருந்தது. வார்னர், செனட் ஆயுத சேவை குழுவின் தலைவராவார் மற்றும் கார்ல் லெவின் அதன் உயர்மட்ட உறுப்பினராவார். இவர்கள் ஜனவரியில் காங்கிரஸின் அதிகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் பெறும் போது பதவியைக் கைமாற்றவுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னணி காங்கிரஸ் நபரும் மற்றும் குறிப்பாக இராணுவ உயர்மட்டத்தைச் சேர்ந்தவருமான வார்னர், --இவர் முன்நாள் கடற்படைச் செயலாளராவார்-- காங்கிரஸில் ஆட்சிக்கு வரவுள்ள ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடன் யுத்தம் சம்பந்தமாக ஒரு உடன்படிக்கையை புஷ் நிர்வாகம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.

"எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் தேர்தலில் மக்கள் மிக சத்தமாகப் பேசியுள்ளனர், மற்றும் புதிய தலைமைத்துவமானது இந்த நாடு முழுவதுமான மக்களின் குரலாகும்," என அவர் தெரிவித்தார். எமது அரசியலமைப்பு நிர்வாக அமைப்பாக காங்கிரஸை அமைத்துள்ள போதிலும், இந்த நாட்டில் மக்களே அதிகாரம் படைத்தவர்கள், அவர்கள் பேசுகிறார்கள்," என அவர் மேலும் தெரிவித்தார். மீண்டும் குறிப்பிட்ட விடயத்திற்குத் திரும்பிய வார்னர், "இந்தத் தேர்தலில் பேசிய இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாம் அவர்கள் செல்வதைக் கவனிப்பது மிக சிறப்பானதாக இருக்கும்."

வேறு சூழ்நிலைகளில் இத்தகைய கருத்துக்கள் குறிப்பிடத்தக்கதாக அன்றி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உண்மைகளை வெறுமனே மீண்டும் உச்சரிப்பதாக இருக்கும். ஆனால் ஈராக்கிலும் வாஷிங்டனிலும் நிலவும் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில், குடியரசுக் கட்சி செனட்டர், காங்கிரஸிலும் செனட்டிலும் தமது யுத்த முயற்சிகளில் ஜனநாயகக் கட்சியை சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றார். ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்ததன் மூலம் வாக்காளர்கள் யுத்த விரோத உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள காரணத்தினால், யுத்தத்தைத் தொடர அல்லது விரிவுபடுத்துவதில் ஜனநாயகக் கட்சியுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டிய தேவை புஷ்ஷுக்கு உள்ளது, என்ற கருத்துக்கு சமனானதாக விவாதம் உள்ளது.

ஜனநாயகக் கட்சி அத்தகைய கொடுக்கல் வாங்கலுக்குத் தயாராக உள்ளது என்பது லெவினால் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் வார்னரின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து பலம்வாய்ந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். பாதுகாப்புச் செயாலாளராக புஷ் நியமித்துள்ள முன்நாள் சீ.ஐ.ஏ. இயக்குனர் ரொபட் கேட்ஸ், விரைவில் ஒப்புதலைப் பெற்றுக்கொள்வார் என்பதையும் லெவின் சுட்டிக்காட்டினார். யுத்தத்திற்கான நிதியைக் குறைக்கவோ அல்லது யுத்தத்தைத் தொடர்வதற்காக உத்தியோகபூர்வமாக உறுதியளிக்கப்பட்டுள்ள நியமனங்களைத் தடுக்கவோ ஜனநாயகக் கட்சிக்காரர்கள் காங்கிரஸிலான தமது பலத்தை பயன்படுத்தமாட்டார்கள்.

ஈராக் கற்கைக் குழுவானது ஈராக்கில் யுத்தத்தை தொடர்வதற்கான இரு கட்சி சூழ்ச்சி மட்டுமல்ல. அதன் நடவடிக்கைகள் மிகப் பெரும் முன்னெடுப்புகளின் ஒரு குறிப்பிட்ட செயல்முறை மட்டுமேயாகும். அமெரிக்க மக்களை வாக்குரிமை அற்றவர்களாக்கவும் மற்றும் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கொள்ளையடிக்கும் இரத்தக்களரி யுத்தத்தை மேலும் அல்லது காலவரையறை இன்றி தொடர்வதற்கும் இரு பெரும் முதலாளித்துவக் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளன.

நவம்பர் 7 தேர்தல் நடந்ததில் இருந்து இந்த மாதம் ஒரு அனுபவம் நிறைந்த மாதமாகும். இதில் இன்றியமையாத அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த இரு கட்சி அமைப்பு வரம்புக்குள் ஈராக் யுத்தத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமற்றதாகும். புஷ் நிர்வாகத்தின் பிற்போக்கு யுத்த வேலைத் திட்டத்திற்கு எதிராக போராடக் கூடிய ஒரே வழி, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியில் இருந்து பிரிந்து, கூட்டுத்தாபன ஆளும் கும்பலுக்கும் மற்றும் ஒட்டு மொத்த இலாப அமைப்பிற்கும் எதிராக, தொழிலாளர் வர்க்கத்தின் புதிய அரசியல் கட்சியை கட்டியெழுப்புவதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved