:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan tsunami victims speak out
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிறார்கள்
By our reporters
30 December 2006
Back to screen version
2004 ஆசிய சுனாமி பேரழிவின் இரண்டாவது ஆண்டு நிறைவின் போது, உலக சோசலிச
வலைத் தள நிருபர்கள் குழு சுனாமியில் இருந்து உயிர் தப்பியவர்களை சந்திக்க மாத்தறைக்கு சென்றிருந்தது.
கரையோர நகரான மாத்தறை மிகவும் மோசமாக பாதிக்கப்ட்ட பிரதேசங்களில் ஒன்றாகும். மாத்தறை நகர் இலங்கை
தலைநகர் கொழும்பில் இருந்து 160 கிலோமீட்டர்கள் தெற்காக அமைந்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில், 20,675 குடும்பங்களைச் சேர்ந்த 82,067 பேர் சுனாமியில்
பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி 1,321 உயிர்கள் பலியாகியுள்ளதோடு 6,652 பேர் காயமடைந்துள்ளனர்.
601 பேர் காணாமல் போயுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள 9,491 மக்களில் 3,086 மக்கள் 22 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள
அதேவேளை, 6,405 பேர் பிரதானமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்களுடன் வாழ்கின்றனர். மொத்தமாக
2,233 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதோடு 6,075 வீடுகள் பகுதி சேதமாகியுள்ளன.
மாத்தறை நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ரஸன்தனிய சுனாமி
வீட்டுத் திட்டம், பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும். தென்னை பயிர்செய்யப்பட்டிருந்த
சரிவான நிலத்தில் கட்டப்பட்டுள்ளு இந்த வீட்டுத் திட்டத்தில் 30 வீடுகள் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் மாத்தறை
கோட்டையில் உள்ள மீனவர் சமுதாயத்தில் இருந்து வந்தவை. எமது வலைத் தள நிருபர்கள் அங்கு சென்றபோது, மக்கள்
தமது அன்புக்குரியவர்களின் இறந்த தினத்தை நினைவுகூர தயாராகிக்கொண்டிருந்தனர்.
ஒரு மீனவரான சரத், பேரழிவை மீண்டும் நினைவுபடுத்தினார். "அன்றைய தினம்
நான் வீட்டில் எனது மனைவியுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு பெரும் சத்தம் கடல் பகுதியில் இருந்து எமக்குக்
கேட்டது. மக்கள் சத்தமிட்டவாறு நிலப்பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். ஒரு சில வினாடிகளுக்குள்
ஒரு பிரமாண்டமான அலை வந்து என்னை இழுத்துக்கொண்டு போனது. நான் சிறிது நேரம் சுய நினைவிழந்து இருந்தேன்.
பின்னர் நான் ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்தேன். எனது மனைவியும் பல உறவினர்களும் உயிரிழந்து பற்றி பின்னரே எனக்குத்
தெரியவந்தது. எவ்வாறெனினும் எனது பிள்ளைகள் உயிர்தப்பிவிட்டனர்.
"அப்போதிருந்தே நாங்கள் மோசமான நிலைமைகளுக்கூடாக சென்றுகொண்டிருக்கின்றோம்.
பல மீனவர்கள் தமது வள்ளங்களையும் ஏனைய உபகரணங்களையும் இழந்த காரணத்தால் தமது ஜீவனோபாயத்தை நீண்ட
காலத்திற்கு கைவிடத் தள்ளப்பட்டனர். ஒரு நிரந்தர வதிவிடமின்றி உங்களால் மீன் பிடிக்க முடியாது. சிலர் மீண்டும்
மீன்பிடிக்க உளவியல் ரீதியில் தயாராக முடியாத நிலையில் அதை கைவிட்டனர். மீன்பிடிக் கைத்தொழிலுடன் தொடர்புபட்ட
தொழில்களில் ஈடுபட்ட பலரும் தமது ஜீவனோபாயத்தை இழந்தனர்."
ஒரு இளம் குடும்பத் தலைவியான லசின்த ருவணி தெரிவித்ததாவது: "ஒரு மீனவக்
குடும்பம் என்ற வகையில் நாங்கள் கடலுக்கு மிக நெருக்கமாக வாழ்கின்றோம். எங்களது எதிர்ப்பிற்கு மத்தியிலும்
அதிகாரிகள் எமது மீன்பிடித் துறையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் எங்களுக்கு வீடு வழங்கியுள்ளனர். எனது
கணவர் விடியற்காலை 4 மணிக்கு முன்னதாக வேலைக்கு செல்லவேண்டும். பற்றாக்குறையான போக்குவரத்து சேவையால்
அவர் சைக்கிளில் செல்ல வேண்டும். எந்தப் பாதுகாப்பும் இன்றி கடற்கரையில் எமது படகுகளை விட்டுவைக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் எமது படகுகள் காணாமல் போகக் கூடிய ஆபத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம்."
ஒரு தபால் ஊழியரான பியதாஸ, வீட்டுத்திட்டத்தின் உட்கட்டமைப்பை
பார்வையிடுமாறு எங்களை கேட்டுக்கொண்டார். "நுழைவாயிலையும் உள் வீதிகளையும் பாருங்கள். தார் மற்றும்
வடிகால்கள் போடப்படாத வெறும் சரளைக் கற்கள் நிறைந்த பாதை. கடும் மழை காரணமாக எல்லா பாதைகளும்
கழுவிச் சென்றுள்ளதோடு பாதைகளில் குழிகளையும் நீங்கள் காணலாம். அவசர நோயாளிகளை எங்களால்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாது, ஏனெனில் இந்த பாதைகளில் வாகனம் ஓட்டுவதற்கு சாரதிகள்
மறுக்கின்றனர்."
ஒன்றாகக் கூடி ஆத்திரத்துடன் தமது கவலையை வெளிப்படுத்திய குடும்பத் தலைவிகளின்
குழு. "உள்ளே வாருங்கள், வந்து நாங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை பாருங்கள். தரமின்றி அல்லது தொழில்
வல்லுநர்களின் மேற்பார்வையின்றி சரிவான நிலத்தில் மண்ணை நிரப்பி வீடுகள் கட்டப்பட்டுள்ள காரணத்தால் சுவர்களில்
வெடிப்புகள் தோன்றியுள்ளன. இரண்டு மாதங்களுள் கதவுகள் மற்றும் யன்னல்களும் உருமாறியுள்ளன. இப்போது அவற்றை
திறக்கவும் முடியாது மூடவும் முடியாது," என்று ஒருவர் கூறினார்.
மழையால் மண் கழுவிச் சென்றுள்ளதோடு ஒரு வீடு உடைந்து விழும் நிலையில் உள்ளது.
"சுனாமியைப் போன்று இன்னுமொரு அழிவை" தவிர்ப்பதற்காக சிலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஒரு குடும்பத்
தலைவி கூறினார். இரவு 9.30 மணியின் பின்னரே அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கின்றது. கூரையின் மேல் தண்ணீர் சேகரிப்பு
டாங்குகள் கிடையாது. அங்குள்ளவர்கள் அடுத்த நாள் தேவைக்காக தண்ணீர் சேகரிக்க போராடத் தள்ளப்பட்டுள்ளனர்.
"(அரசாங்க அமைச்சர்) மங்கள சமரவீர எமது வீட்டுத் திட்டத்தை பார்க்க வருவதாக
சில நாட்களுக்கு முன்னர் எங்களுக்கு அறிவித்தார்கள். அவரை நாடி இந்த கட்டுமானம் தொடர்பான பிரச்சினைகளை
தீர்க்குமாறு நாங்கள் கேட்க காத்திருந்தோம். நாங்கள் ஆத்திரமடைந்திருப்பதை கேள்விப்பட்டு அவர் தனது விஜயத்தை
இரத்து செய்துகொண்டதாகவே நாங்கள் நினைக்கிறோம். எமது பிரச்சினைகளுக்கு அமைச்சர்களின் பிரதிபலிப்பு
இதுதான்."
கித்துலேவெல பெளத்த கோவிலில் உள்ள இன்னுமொரு முகாமில் பல குடும்பங்கள் இன்னமும்
தற்காலிக குடியிருப்புகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளின் சுவர்கள் பலகையிலும் கூரை தகரத்திலும்
அமைக்கப்ட்டுள்ளன.
ஒரு இளைஞனான எம்.டி.எஸ். தரிந்து தமது அனுபவங்களை விளக்கினார்.
"ஆரம்பத்தில் இந்த முகாமில் 60 குடும்பங்கள் இருந்தன. நாங்கள் இரண்டு குடும்பங்களுடன் இந்த கூடாரங்களில் வாழத்
தள்ளப்பட்டோம். இவை ஒவ்வொன்றும் 20 க்கு 20க்கு அடி அளவு கொண்டவை. இங்கு பல தொண்டர் அமைப்புகளும்
சமூக குழுக்களும் இருந்தன. ஆனால் அவர்கள் சில மாதங்களுக்குள் காணாமல் போய்விட்டனர். நாங்கள் சமுதாயத்தில்
இருந்து புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.
"வாழ்க்கை கடினமாக இருந்ததோடு நாங்கள் அனைவரும் துன்புற்றோம். சில காலத்தின்
பின்னர் இந்த தற்காலிக குடியிருப்புக்களை அதிகாரிகள் வழங்கினர். சில மாதங்களுக்கு முன்னர் பல நிதி வழங்கும்
அமைப்புக்களால் வழங்கப்பட்ட வீடுகளுக்கு 29 குடும்பங்கள் சென்றன. மேலும் 10 குடும்பங்களுக்கு வீடுகள் கிடைப்பதாக
உள்ள போதிலும் எப்போது என்று யாருக்கும் தெரியாது. இந்த தற்காலிக குடியிருப்புக்கள் எங்களுக்கு நிரந்தரமாகி
வருகின்றன."
மேலும் 21 குடும்பங்கள் வீடுகள் வழங்கப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
அவர்களுக்கு வீடுகள் கிடைக்கப்போவதில்லை. "நாங்கள் கேள்விப்பட்ட விதத்தில், டிசம்பர் 31க்கு முன்னதாக இந்த
முகாம்களை அதிகாரிகள் அகற்றப்போகின்றார்கள். நாங்கள் அனைவரும் வீதிக்குச் செல்லத் தள்ளப்படுவோம்," என
அவர் தெரிவித்தார்.
50 வயதான மீனவர் எல்.எச். நோர்டன் தெரிவித்தாவது: "நாங்கள் இந்த
நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் வெறுக்கின்றோம். அவர்கள் எங்களை மோசமாக
புறக்கணித்துவிட்டார்கள். அமைச்சர் சந்திரிசிரி கஜதீர (கம்யூனிஸ்ட் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்),
நாங்கள் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டிவிட்டார். என்ன அவரது
கம்யூனிஸம்? நன்கொடைப் பெறுபவர்களை தேர்வுசெய்யும் போது அவர் தனது சொந்த ஜாதிக்காரர்களுக்கு முன்னுரிமை
வழங்கிவிட்டார்.
"இந்த கவலைக்குறிய நிலையில் சில பெளத்த பிக்குகளின் உண்மையான பண்பையும் நாம்
புரிந்துகொண்டோம். அதை உங்களுக்கு சொல்வதே வெட்கம். பன்புரானையில் 'வலுகரமாயா' வில் உள்ள முன்னணோ
பிக்கு ஒருவர், நாங்கள் வேற்று ஜாதி மக்கள் என்ற காரணத்தால் அந்த பெளத்த கோயில் கட்டிடத்திற்கு அருகாமையில்
உள்ள நிலத்தில் வீட்டுத் திட்டத்தை அமைக்க கடுமையாக எதிர்த்தார்."
இந்த முகாமின் நலன்புரி செயலாளரான எல்.எச். மதுஷானி ஹஸந்தி, தமிழீழ
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆத்திரத்துடன் கண்டனம் செய்தார். "இப்போது ஜனாதிபதி மஹிந்தி இராஜபக்ஷ
யுத்தத்தை உக்கிரப்படுத்தியுள்ளார். இந்த யுத்தத்தில் இழக்கப்படுவது யார்? எங்களைப் போன்ற ஏழைகளே. பிள்ளைகள்
தமது தந்தையர்களை இழக்கின்றனர். மனைவிமார் தமது கனவர்களை இழக்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை இழக்கின்றனர்.
நாங்கள் எங்களது சகோதரர்களை இழக்கின்றோம். அவர்கள் இராணுவத்தில் சேர்வது ஏன்? வேலையில்லாததன் காரணமாகவே.
அவர்களுக்கு வேறு மாற்றீடு கிடையாது."
"நாங்கள் இன்னமும் இந்த தற்காலிக கூடாரங்களில் வசிக்கின்றோம். எங்களுக்கு வீடுகள்
வழங்க அவர்களிடம் காசு இல்லை. ஆனால் யுத்தத்திற்காக பில்லியன் கணக்கில் செலவிடுகின்றனர். வாழ்க்கைச் செலவை
பாருங்கள். இப்போது ஒரு கிலோ சீனி 55 ரூபா, ஒரு கிலோ அரிசி 30 ரூபா, ஒரு தேங்காய் 25 ரூபா. எங்களால்
எப்படி செலவிட முடியும்? இந்த முகாமில் உள்ள எவருக்கும் நிரந்தரத் தொழில் கிடையாது. இங்குள்ளவர்கள் அன்றாடம்
கூலி வேலை செய்கின்றனர். மழைக்காலத்தில் அவர்களுக்கு தொழில் கிடைக்காதபோது குடும்பங்கள் பட்டினி கிடக்க
வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் இந்த யுத்தம் ஏன்?
சீருடை அணிந்திருந்த ஒரு இராணுவ சிப்பாய் அங்கு வந்து பேசத் தொடங்கினார்.
"நானும் ஒரு சுனாமியால் பாதிக்கப்பட்டவன் தான். நான் எனது வீட்டை இழந்து மேலும் 30 குடும்பங்களுடன் இன்னமும்
முகாமொன்றில் வசிக்கின்றேன். அந்த முகாம் பாதிப்பட்ட பாதுகாப்புப் படைகளின் மற்றும் பொலிஸ் அலுவலர்களின்
குடும்பங்களுக்காக அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளா எவருக்கும் வீடு கிடைக்கவில்லை. ஜனாதிபதியும் ஏனைய
அரசியல்வாதிகளும் நாட்டை காப்பவர்கள் நாங்களே எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்களே எங்களை இவ்வாறு நடத்துகின்றனர்."
பொது நிர்வாக அமைச்சில் சேவையாற்றும் டபிள்யூ. நிமலசிரி, பம்புராணையில்
லூரியன் சிட்டி வீட்டுத் திட்டத்தில் உள்ள 27 வீடுகளும் அரசாங்க ஊழியர்களுக்காக கட்டப்பட்டு அக்டோபரில் அவர்களிடம்
கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதியும் இன்னமும் வழங்கப்படாத நிலையில்
ஒரே குடும்பம் மட்டுமே அங்கு குடியேறியுள்ளது. அங்கு நடைபாதைகளோ, வாய்க்கால்களோ அல்லது வடிகால்களோ
கிடையாது. மலசல கூட குழிகள் ஒரு மீட்டருக்கும் குறைவாக உள்ளன.
"இந்த கட்டுமானம் தரம் குன்றியதாக உள்ளதோடு கதவுகளும் யன்னல்களும் மலிவான பலகைகளால்
செய்யப்பட்டுள்ளன. ஒரு சில மாதங்களுக்குள் அவை உடைந்து விடும். அஸ்பஸ்டோஸ் சீட்டுகளால் அமைக்கப்பட்டுள்ள கூரைகளில்
கொக்கிகள் சரியாக போடப்படவில்லை. ஒரு சிறிய காற்றுக்கும் கூட சீட்டுகள் விழுந்துவிடும். சூறாவளி அல்லது புயல்
காற்று வீசினால் என்ன நடக்கும்? நான் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தொடர்பாக பல தடவைகள் அரசியல்வாதிகளையும்
அதிகாரிகளையும் சந்தித்த போதிலும், ஒவ்வொரு தடவையும் அவர்களது பதில் 'ஒதுக்கீடு இல்லை' என்பதாகவே உள்ளது.
"நாங்கள் 3,500 ரூபா கொடுத்து ஒரு வாடகை வீட்டில் வாழ்கிறோம். என்னால்
மேலும் இதை தாங்க முடியாது. அதனால் தான் நான் அவசரப்படுகிறேன். நான் சுனாமியில் எனது மகனை இழந்துவிட்டேன்.
புதிய வீட்டில் அவரது இறப்பை நினைவுகூர விரும்பினால் அது கனவாகவே உள்ளது. எனது அன்புக்குறிய மகனின்
நினைவுக்காக தானம் செய்ய ஒரு வங்கிக் கடனுக்கு நான் வின்னப்பித்தேன். ஆனால் நான் ஒரு சிறிய சம்பளம் பெறும்
அரசாங்க ஊழியர் என்ற காரணத்தால் வங்கி எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது." |