World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Join the International Students for Social Equality! Build an ISSE chapter at your college or high school!சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் இயக்கத்தில் சேர்! கல்லூரிகளில் அல்லது உயர் பாடசாலைகளில் ஐ.எஸ்.எஸ்.இ. யின் கிளையை கட்டியெழுப்பு!19 February 2007சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் இயக்கத்தால் (International Students for Social Equality -ISSE) அதன் அரசியல் முன்நோக்கை தெளிவுபடுத்தியும் மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. யில் இணைந்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதன் பகுதிகளைக் கட்டியெழுப்புமாறு மாணவர்களுக்கு அழைப்புவிடுத்தும் அமெரிக்காவில் அது வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கு பிரசுரித்துள்ளோம். இந்த அறிக்கையை இறக்கி விநியோகிப்பதற்கு ஏற்ற வகையில் பி.டி.எப். வடிவத்திலும் உள்ளது. ஐ.எஸ்.எஸ்.இ. யும் சோசலிச சமத்துவக் கட்சியும் கூட்டவுள்ள யுத்தத்திற்கு எதிரான அவசர மாநாட்டிற்கு வருகை தருமாறு ஐ.எஸ்.எஸ்.இ. மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. இந்த மாநாடு மார்ச் 31 மற்றும் ஏப்பிரல் 1ம் திகதிகளில் ஆன் ஆபர், மிச்சிகனில் நடைபெறவுள்ளது. மாநாட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும். மாநாட்டிற்கு பதிவு செய்துகொள்ள இங்கே அழுத்தவும். சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) இயக்கமானது இராணுவ வன்முறைகள், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான வளர்ச்சிகண்டுவரும் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை ஆரம்பிக்க உலகம் பூராவும் உள்ள மாணவ இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச ரீதீயிலும் கட்டுப்படுத்த முடியாத வகையில் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பின் மத்தியிலும், ஈராக்கில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதானது உலக முதலாளித்துவத்தால் உருவாக்கி விடப்பட்ட பேரழிவின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வெளிப்பாடு மட்டுமேயாகும். அமெரிக்க ஆளும் தட்டின் பூகோள மூலோபாய குறிக்கோள்களை முன்னேற்றுவதற்காக, பொய்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்ட, சட்டவிரோத படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் போது நூறாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். இப்போது, மேலும் உயிராபத்துக்களை விளைவிக்கும் யுத்தமொன்று ஈரானுக்கு எதிராக தயார்படுத்தப்பட்டு வருகின்றது. இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் காணப்படாத பூகோளம் முழுவதையும் பற்றி எரியச் செய்யும் ஆபத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பைத்தியக்காரத்தனம் நிறுத்தப்பட வேண்டும்! விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள உயர்ந்த முன்னேற்றங்கள், பொருளாதார வாழ்வின் முன்னெப்போதுமில்லாத பூகோள ஒருங்கிணைப்புடன் சேர்ந்து மனிதகுல அபிவிருத்தியின் புதிய யுகத்திற்கான சாத்தியத்தை உருவாக்கிவிட்டுள்ளது. இன்னமும் இளைஞர்கள் உலகம் முழுவதும் யுத்தம் மற்றும் இல்லாமை, பரந்த வறுமை மற்றும் நோய், முடிவற்ற இயற்கைப் பேரழிவுகள், கலாச்சார பின்தங்கிய நிலைமை மற்றும் மூட நம்பிக்கை மற்றும் மிகவும் அடிப்படையான ஜனநாயக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர். கூட்டுத்தாபன இலாபத்தை பெருக்கவும் மற்றும் ஜனத்தொகையில் ஒரு சிறிய தட்டினரின் சொந்த செல்வத்தை குவிப்பதற்காகவும் எல்லாவற்றையும் அடிபணியச் செய்யும் முதலாளித்துவத்தின் சமூக உறவுகளால் மனித முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்படுகிறது. நவீன யுகத்தின் ஆற்றலை இறுதியில் யாதார்த்தமாக்கி, வறுமைக்கும் யுத்தத்திற்கும் முடிவுகட்டி, உண்மையான சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் அடித்தளம் இடும் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணித்துக்கொண்டுள்ள, உலகம் பூராவும் உள்ள மாணவர்களின் இயக்கமே ஐ.எஸ்.எஸ்.இ. ஆகும். புதுப்பிக்கப்பட்ட அனைத்துலக சோசலிச இயக்கத்திற்கான போராட்டத்தில் இணை! ஐ.எஸ்.எஸ்.இ. யில் சேர்! யுத்தமும் காலனித்துவமும் வேண்டாம்! 20ம் நூற்றாண்டின் காட்டுமிராண்டித்தனமான துன்பங்களான காலனித்துவம், ஏகாதிபத்தியம், பாசிசம், உலக யுத்தம் ஆகியவை 21ம் நூற்றாண்டில் மேலும் கொடூரமான வடிவில் மறுபிறப்பெடுத்து வருகின்றன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பானது "21ம் நூற்றாண்டின் யுத்தங்கள்" என புஷ் கூறிக்கொண்டதன் முதற் கட்டங்களாகும். இத்தகைய யுத்தங்கள் ஒரு அடிப்படை குறிக்கோளுக்கு சேவை செய்கின்றன: அது இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலைமையை ஈடுசெய்வதன் மூலம் அமெரிக்க ஆளும் தட்டின் பூகோள நலன்களை தாங்கி நிற்பதாகும். அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் வாந்தியெடுப்பது ஏனைய ஒவ்வொரு அடிப்படைக் காரணங்களின் பொய்யேயாகும். லன்செட் என்ற பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கற்கையின் படி, ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவால் 655,000ற்கும் மேற்பட்ட ஈராக்கியர்கள் உயிரழந்துள்ளனர். 3,100 அமெரிக்க படையினரும் ஏனைய நாட்டுப் படையினரில் மேலும் 250 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் ஒரு முழு சமுதாயத்தையும் அழித்துள்ளதுடன் ஒரு கொடூரமான மதக்குழு மோதல்களையும் தூண்டிவிட்டுள்ளது. 2006 அமெரிக்கத் தேர்தல் ஜனத்தொகையில் மிகப் பெரும்பான்மையானவர்களின் யுத்த விரோத உணர்வுகளை பிரதிபலித்தது. உலகம் பூராவும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆயினும், மேலும் இளைஞர்களைக் கொல்லவும் மற்றும் கொல்லப்படுவதற்கும் இன்னும் கூடுதலான துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதே அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. பீரங்கிக்கு இரைகளாக செயற்பட இளைஞர்களை நெருக்குவதற்கான புதிய வழிகளை ஆளும் தட்டு தேடுகின்ற நிலையில், இராணுவத்திற்கான கட்டாய ஆள் சேர்ப்பை மீண்டும் அமுல்படுத்தும் நிலைமை மீண்டும் தலைநீட்டுகிறது. அமெரிக்கா அதன் ஏகாதிபத்திய குறிக்கோள்களில் தனிமையில் இல்லை. ஐரோப்பா அதே போல் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பெரும் வல்லரசுகளாலும் இதே போன்ற காலனித்துவ வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. உலக வளங்களை துண்டாடுவதற்கான முயற்சிகள், வேறுபட்ட பெரும் முதலாளித்துவ வல்லரசுகளை ஒன்றுக்கொன்று எதிரியாக இருத்துவதோடு, இன்னுமொரு பூகோள யுத்தத்திற்கு இரக்கமின்றி வழிவகுக்கின்றது. இராணுவவாதத்திற்கும் ஏகாதிபத்திய கொள்ளையடிப்புக்கும் எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் உலக மக்கள் ஒன்று சேர வேண்டும். கூட்டுத்தாபனங்களின் இலாப நோக்கங்களுக்காக கொலை செய்வதற்கு சகல நாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு எந்தவொரு ஆர்வமும் கிடையாது. சமூக சமத்துவத்திற்காக! யுத்தத்திற்கான எதிர்ப்பானது அதை உருவாக்கிவிடும் சமூக அமைப்பு மீதான எதிர்ப்பில் இருந்து பிரிக்கப்பட முடியாது. இன்று மாணவர்கள் மிகவும் கீழ்த்தரமான மட்டத்தில் உள்ள சமூக சமத்துவமின்மையால் பீடிக்கப்பட்ட மற்றும் மோசடியான ஒரு சமுதாயத்தை எதிர்கொள்கின்றனர். செல்வமானது சர்வதேச ரீதியில் ஒரு மிகச் சிறிய தட்டின் கைகளில் ஒன்று குவிகின்றது. உலக சனத்தொகையில் 1 வீதமான பெரும் செல்வந்தர்கள், கீழ் மட்டத்தில் உள்ள 57 வீதத்தினரின் வருமானத்திற்கு சமமான வருமானத்தைக் கொண்டுள்ளனர். பெரும் செல்வந்தர்களில் மூன்று பேர், உலக மக்களில் மிகவும் வறிய 10 வீதத்தினரின் சொத்துக்களை விட அதிகமான சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக உள்ளனர். உலகின் மிகவும் செல்வந்த நாடான அமெரிக்காவில், உயர்ந்த வருமானம் பெறும் இந்த ஒரு வீதமான (300,000 பேர்) உயர் மட்டத்தில் இருக்கும் செல்வந்தர்களில் பத்தில் ஒரு பங்கினர், மிகவும் வறிய 120 மில்லியன் அமெரிக்கர்களின் மொத்த வருமானத்தையும் விட உயர்ந்த வருமானத்தைப் பெறுகின்றனர். ஒவ்வொரு பிரதான நாட்டிலும் சமத்துவமின்மை அதிகரிக்கின்றது. உழைக்கும் மக்களின் ஊதியம் உயராமலும் மற்றும் பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு, தண்ணீர், வீடு, சுகாதாரம், கல்வி போன்ற மிகவும் அடிப்படையான தேவைகள் கிடைக்காத அதே வேளை, ஜனத்தொகையில் ஒரு சிறிய தட்டினர் பெருஞ்செல்வத்தைக் குவித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பல தசாப்தங்கள் பூராவும் உற்பத்தி சக்திகளின் பிரமாண்டமான விரிவாக்கத்தின் ஆதாயமானது ஒரு குறுகிய குழுவின் கைகளுக்கு மொத்தத்தில் தனித்தனியாக போய் சேர்கிறது. மலிவு உழைப்பையும் மூலப் பொருட்களையும் பூகோளம் முழுவதிலும் தேடித்திரியும் கூட்டுத்தாபனங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது இந்த சிறு குழுவேயாகும். செல்வமானது ஒரு சிறிய தட்டின் கைகளில் குவிக்கப்படுவதை பற்றி கவனம் செலுத்தாமல் எயிட்ஸ் தொற்று அல்லது ஏனைய நோய்கள், வளர்ச்சிகண்டுவரும் வறுமை, மில்லியன் கணக்கானவர்கள் புயல் அல்லது சுனாமி இயற்கை அழிவுகளில் பாதிக்கப்படும் நிலைமை போன்ற பூகோள சமூகப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்த முடியாது. மாணவர்கள் சமூக அநீதிகளைப் பிரதிபலிக்கும் குறித்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அமெரிக்காவில் கல்லூரி தனியார் வகுப்புகள் தொடர்ந்தும் உயர்ந்து செல்வதோடு பட்டப்படிப்பு படிக்கும் பல மாணவர்கள் பத்தாயிரக்கணக்கான டொலர்கள் கடன் சுமையைத் தாங்கத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக்கு கட்டணம் செலுத்துவதன் பேரில் தொழில் செய்கின்றனர். பலர் முழு நேரம் தொழில் செய்தவாறு கூட வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இளைஞர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்வதோடு, கல்லூரி பட்டதாரிகளின் சம்பளமானது ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் சம்பளத்துடன் சேர்ந்து வீழ்ச்சியடைகின்றது. அமெரிக்காவில் ஆரம்ப பொதுக் கல்வி தாக்குதலுக்குள்ளாகின்றது. அங்கு யுத்தத்திற்காக பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுவதுடன் செல்வந்தர்களுக்கு வரி குறைக்கப்பட்டாலும் கூட பல பிரதான நகரங்களில் பாடசாலை கதவுகளுக்கு மூடுவிழா நடத்த நேர்ந்துள்ளது. இளைஞர்கள், பொருளாதாரம் பாதுகாப்பின்மை, சமூக உட்கட்டமைப்பின் சீரழிவு, சமூக வேலைத் திட்டங்கள் மீதான தாக்குதல் போன்ற ஒட்டு மொத்தத் தொழிலாளர் வர்க்கமும் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளிலும் தலையீடு செய்தல் வேண்டும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் மற்றும் உலகம் பூராவும் காணப்படும் எரியும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வளங்களை பரந்தளவில் மீள் விநியோகம் செய்வதும், சமுதாயத்தின் உற்பத்தி கொள்திறன்களை பயன்படுத்தவும் விரிவுபடுத்தவும் நியாயமான ஜனநாயக ரீதியான ஒன்றிணைக்கப்பட்ட திட்டங்களை வகுப்பதும் அவசியமாகும். ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்று! அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் மையமாக சமூக சமத்துவமின்மை உள்ளது. உழைக்கும் மக்களின் தொழில் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான தமது தாக்குதலை தொடரும் அதே வேளை, வெளிநாட்டில் தமது ஏகாதிபத்திய குறிக்கோள்களை முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ள அமெரிக்க செலவந்த சிறுகுழுவின் நலன்களுக்கு ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் சேவை செய்வதால், அமெரிக்க மக்களின் அபிலாஷைகளுக்கு ஜனநாயக் கட்சிக்காரர்களும் குடியரசுக்கட்சிக்காரர்களும் செவிமடுக்கப் போவதில்லை. வெகுஜனங்களின் கோரிக்கைகளுடன் ஆளும் வர்க்கத்தின் நலன்கள் மேலும் மேலும் முரண்பாட்டிற்கு வரும்போது அரசியல் ஸ்தாபனம் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை உக்கிரமாக்கும். அமெரிக்க அரசாங்கம், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதோடு அமெரிக்க மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை வெளிப்படையாக மறுக்கின்ற நிலையிலும் கூட, அமெரிக்கா சர்வதேச ரீதியில் ஜனநாயகத்தை முன்னேற்ற முயற்சிக்கின்றது என்ற பொய்யை முன்நிலைப்படுத்துகிறது. ஈராக்கில் யுத்தத்திற்கு முடிவுகட்டவே கடந்த நவம்பரில் மக்கள் வாக்களித்தனர். ஆனால் ஈராக் யுத்தத்தை உக்கிரப்படுத்துவதும், ஆப்கானிஸ்தானுக்கு மேலும் துருப்புக்களை அனுப்புவதும் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான தயாரிப்புகளுமே பெறுபேறாகக் கிடைத்துள்ளன. குவன்டனமோ மற்றும் அபு கிரைப் சித்திரவதை மையங்களில் மொத்தமாக அம்பலத்திற்கு வந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெட்கக்கேடானதும் வெறுக்கத்தக்கதுமாகும். அமெரிக்க மக்களுக்காக பேசுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு அரசாங்கத்தால் உலக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான குற்றத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஆழமான கடமைப்பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு. உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் பொலிஸ் நடைமுறைகளை அமுல்படுத்தும் நிலையில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஒரு சர்வதேச நிகழ்வாகும். ஆட்கொணர்வு மணு உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரம், அந்தரங்க உரிமை, துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளில் இருந்து பாதுகாப்பு உட்பட, நேர்மையான விசாரணை மற்றும் சட்டப்பூர்வமான வழிமுறைகளைக் கோருதல் போன்ற ஜனநாயக உரிமைகளையும் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தின் பாகமாக மட்டுமே பாதுகாத்து விரிவுபடுத்த முடியும். சொத்துக் குவிப்பின் தீவிரமான மட்டத்துடன் ஜனநாயகம் என்பது அடிப்படையில் பொருத்தமற்றதாகும். உண்மையான ஜனநாயகம் பொருளாதார வாழ்வுக் கட்டமைப்பில் ஜனநாயகத்தைக் கோருகிறது. அனைத்துலக சோசலிசத்திற்காக! நெருக்கடிகள் நிறைந்த மற்றும் வரலாற்று ரீதியில் பொருத்தமற்ற முதலாளித்துவ கட்டமைப்பானது இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரதான சமூகப் பிரச்சினைக்கும் பொறுப்பாகும். முதலாளித்துவத்தின் கீழ், "சம வாய்ப்புகள்" மற்றும் "சட்டத்தின் கீழ் அனைவரும் சமம்" என சொல்லப்படுபவை மோசடியானதாகும். உண்மையான சமத்துவம் சமூக சமத்துவத்தைக் கோருகிறது. ஆனால், இலாபத்திற்காகவும் செல்வந்த தட்டின் நலன்களுக்காகவும் அனைத்து மனிதத் தேவைகளையும் அடிபணியச் செய்யும் ஒரு சமுதாயத்தில் சமூக சமத்துவம் சாத்தியமானதல்ல. ஒரு அனைத்துலக சோசலிச இயக்கத்தின் மறுபிறப்பிற்காக ஐ.எஸ்.எஸ்.இ. போராடுகிறது. இந்த சோசலிச இயக்கம், அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாளர் வர்க்க இயக்கங்களின் வரலாற்று அனுபவங்களின் அரசியல் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். "சோசலிசம் தோற்றுவிட்டது" என்ற மந்திரம் வஞ்சகம் மற்றும் அலட்சியத்தின் உற்பத்தியேயாகும். 20ம் நூற்றாண்டு, அமெரிக்காவில் நிகழ்ந்தவை உட்பட, சோசலிசத்திற்கான உயர்ந்த புரட்சிகர போராட்டங்களைக் கண்டிருந்த போதிலும், இவை ஸ்டாலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பழைய தொழிலாளர் இயக்கங்களின் நேர்மைகெட்ட அதிகாரத்துவத்தாலும் திட்டமிட்டு காட்டிக்கொடுக்கப்பட்டன. மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், லக்ஸம்பேர்க் மற்றும் ட்ரொட்ஸ்கி போன்றவர்களுடன் இணைந்த அனைத்துலகவாத சோசலிசத்தின் உயர்ந்த புத்திஜீவி மற்றும் அரசியல் மரபில் இருந்து ஐ.எஸ்.எஸ்.இ. உயிர்ப்பூட்டப்பட்டு, தனது அகத்தூண்டுதலைப் பெற்றுக்கொள்கிறது. நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் தேசிய மட்டத்தில் தீர்க்க முடியாது. நாம் ஒரு உலக சமுதாயத்தில், ஒரு உலகப் பொருளாதாரத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதோடு ஒவ்வொரு நாட்டிலும் மாணவ இளைஞர்கள் முகம் கொடுக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் அடிப்படையில் ஒரே மாதிரியானவையாகும். இந்தக் காரணத்திற்காகவே, நாங்கள் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்களாக இருக்கின்றோம். நாம் எல்லாவிதமான தேசியவாதம், பேரினவாதம், இனவாதம் மற்றும் குறுங்குழுவாதத்தையும் நிராகரிக்கின்றோம். நாம் ஒரு மாணவர் அமைப்பாக இருக்கும் அதே வேளை, எமது இலக்கு ஒரு கலப்படமற்ற மாணவர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அல்ல. உலக ஜனத்தொகையின் பரந்த பெரும்பான்மையினராக உள்ள ஒட்டு மொத்தத் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்றே அவசரத் தேவையாகும். பெரும்பாலான மாணவ இளைஞர்கள் இன்று தொழிலாளர் வர்க்கத்தின் பாகமாக இருக்கின்றார்கள் அல்லது இருப்பார்கள். இன்று மாணவர்களால் எதிர்கொள்ளப்படும் குறிப்பிட்ட பிரச்சினைகள், அனைத்துத் தொழிலாளர்களையும் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தியேயாகும். தீவிரவாத கண்டனங்கள், வெற்றுச் சுலோகங்கள், ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தல் போன்ற அரசியலை ஐ.எஸ்.எஸ்.இ. நிராகரிக்கின்றது. எமது தெளிவான குறிக்கோள், தொழிலாளர் வர்க்கத்தின் வெகுஜன அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதாகும். இந்த இயக்கமானது ஆட்சியைக் கைப்பற்றி சமுதாயத்தை ஜனநாயக, சரிநிகர், நியாயமான மற்றும் மனிதாபிமான அடிப்படியில் மறு ஒழுங்கு செய்யும் தெளிவானதும், விரிவானதுமான கோட்பாட்டு நோக்கையும் அரசியல் முன்நோக்கையும் அடிப்படையாகக் கொண்டதாகும். ஜனநாயகக் கட்சியின் ஊடாக அமெரிக்காவில் முன்னேற்றம் காண முடியும் என்ற எந்தவொரு நிலைப்பாட்டையும் நாம் நிராகரிக்கின்றோம். அமெரிக்க கூட்டுத்தாபன நிதி ஆதிக்கக்குழுவின் நலன்களைப் பாதுகாப்பதில் குடியரசுக் கட்சியைவிட ஜனநாயகக் கட்சி எந்தவிதத்திலும் வேறுபடவில்லை. ஈராக் மீதான குற்றவியல் ஆக்கிரமிப்பு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமத்துவமின்மையின் வளர்ச்சியில் ஜனநாயகக் கட்சி ஆழமாக சம்பந்தப்பட்டுள்ளது. சோசலிசம் என்பது உண்மையான சமத்துவமாகும். அது சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையைக் கொண்ட முதலாளித்துவ அமைப்பின் முடிவை அர்த்தப்படுத்துகிறது. அதாவது சமுதாயத்தின் பரந்தகன்ற உற்பத்திச் சாதனங்கள் மீதான ஜனநாயகக் கட்டுப்பாடாகும். ஆகவே தனியார் இலாபம் மற்றும் சொத்துடமையாளர்களின் நலன்களுக்கு பதிலாக இந்த சாதனங்களால் சமூகத் தேவைகளுக்காக சேவையாற்ற முடியும். சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணை! ஐ.எஸ்.எஸ்.இ. இல் சேர்! சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (நா.அ.அ.கு.) அரசியல் ஒருமைப்பாடு கொண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மாணவர் அமைப்பாகும். நா.அ.அ.கு, இணையத்தில் மிகவும் பரந்தளவில் வாசிக்கப்படும் சோசலிச வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடுகின்றது. பிரதான உலக நிகழ்வுகள் பற்றிய செய்திகள் ஆய்வுகள் மற்றும் அரசியல், கலாச்சார, வரலாற்று மற்றும் தத்துவார்த்த பிரச்சினைகள் பற்றிய கருத்துரைகளுக்காக உலக சோசலிச வலைத் தளத்தை வாசியுங்கள். ஐ.எஸ்.எஸ்.இ. பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் உங்களது பாடசாலையில் அதன் கிளையை கட்டியெழுப்ப உதவி செய்யவும் இந்த முகவரியில் உட்செல்லவும். http://www2.wsws.org/phpform/use/isse/form1.html |