World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Scientists report rampant political interference in climate research

சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் கட்டுப்பாடற்ற அரசியல் குறுக்கீடு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

By Naomi Spencer
5 February 2007

Back to screen version

ஐக்கிய நாடுகள் சபையின் அரசாங்கங்களுக்கு இடையேயான வெப்பதட்ப மாறுதல் குழு தன்னுடைய அவசர மதிப்பீட்டை வெள்ளியன்று வெளியிட்டு, உலக வெப்பமாகுதல் அதிகளவில் உயர்ச்சியடைந்துள்ளது என்ற எச்சரிக்கை கொடுக்கும் தகவலை அளித்தபோது, வாஷிங்டன் இதில் அமெரிக்கப் பங்குமிக குறைவு என்று காட்டும் வகையில் உடனடியாக நடந்து கொண்டுள்ளது.

அமெரிக்க எரிசக்தி அமைச்சரான Sam Bodman பெப்ருவரி 2ம் தேதி புஷ் நிர்வாகம் இக்கண்டுபிடிப்புக்களை "ஏற்றுக்கொள்ளுவதாக" நிருபர்களிடம் கூறினார். "எமது பூமியின் வெப்பதட்ப மாறுதல்களுக்கு, மனித நடவடிக்கை, பங்களித்துக் கொண்டுள்ளது; பிரச்சினையில் விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை." இருந்தபோதிலும், உலக மக்கட்தொகையில் 5 சதவிகிதத்தை கொண்டு உலக வெப்பமாதலுக்கும் காரணமான புகைவெளியேற்றங்களில் 25 சதவிகிதத்தை உருவாக்கும் அமெரிக்கா, "உலகின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது, சிறிய அளவில்தான் இதில் பங்கு கொண்டுள்ளது" என்று அவர் வலியுறுத்தினார்.

வெப்பதட்ப மாறுதல் பற்றிய விஞ்ஞான சான்றுகளை ஏற்றுக் கொள்ளுதல் என்பதற்கு பதிலாக புஷ் நிர்வாகம் அக்கறை காட்டுவது போல் தோற்றத்தைக் கொடுப்பது பொதுமக்களிடையே பெருகிவரும் கவலையை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகும்; உண்மையில் எரிபொருள் வெளியேற்றங்கள், தொழில்துறை மாசு இவற்றை அர்த்தமுள்ள வகையில் கட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுக்காமல் பேசப்படும் சொற்களாகும்.

உண்மையில், புஷ் நிர்வாகம், எண்ணெய் பெருநிறுவனங்களுக்கு உட்பட்டு முறையான வகையில் வெப்பதட்ப மாறுதல் பிரச்சினையில் கூட்டாட்சி விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியில் தலையிட்டுள்ளது என்று ஜனவரி 30ம் தேதி Union of Concerned Scientists and the Government Accountability Project என்னும் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.

"சூழல் அழுத்தம்" என்னும் அறிக்கை, ஏழு கூட்டாட்சி அமைப்புக்களில் பணிபுரியும் 1,600 வெப்பதட்ப விஞ்ஞானிகளிடம் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டை அடிப்படையாக கொண்டதாகும்; மேலும் தகவல் சுதந்திர சட்டத்தின் (Freedom of Information Act) வேண்டுகோளுக்கிணங்க பெறப்பட்ட ஆவணங்கள் பரிசீலனை, பேட்டிகள் ஆகியவற்றையும் இது அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த அளவீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பரந்த அளவில் அரசியல் குறுக்கீடு இருந்ததாகவும், விடையறுத்தவர்களில் 58 சதவிகிதத்தினர் தாங்கள் குறைந்தது ஒரு தடவையேனும் அரசியல் குறுக்கீட்டு நிகழ்வை சொந்தத்தில் அனுபவித்ததாக கூறியுள்ளதையும் தெரிவிக்கிறது.

விடையறுத்தவர்களில் கிட்டத்தட்ட பாதிபேர் "சுற்றுச் சூழல் மாற்றம்", "உலகம் வெப்பமாதல்" அல்லது அதேபோன்ற சொற்றொடர்களை தங்கள் எழுத்துக்களில் இருந்து அகற்றுவதற்கான அழுத்தத்திற்கு உள்ளாகியதாக அறிவித்துள்ளனர். ஐந்தில் இருபங்கு (43 சதவிகிதம்) விடையறுத்த விஞ்ஞானிகள் தங்களுடைய படைப்பில் பரிசீலனை முறையில் பதிப்பு செய்தபோது அவர்களுடைய கண்டுபிடிப்புக்களின் பொருளை மாற்றும் வகையில் கணிசமான மாறுதல்கள் செய்யப்பட்டன என்று தெரிவித்துள்ளனர். அதிகாரிகள், தங்களுடைய அமைப்புக்களுள், விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை தவறாக விளக்கிக் கூறியதை நேரில் அறிந்ததாக அல்லது உணர்ந்ததாக 37 சதவிகிதத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதே விகிதத்தினர் "வலைத் தளங்கள், அறிக்கைகள் அல்லது மற்ற அறிவியல் சார்ந்த சூழல் தொடர்புடையவை காணமற் போய்விடுதல் அல்லது அசாதாரண தாமதத்திற்கு உட்படுவதையும்" அனுபவித்ததாக கூறுகின்றனர்.

ஆவணங்கள் மற்றும் பேட்டிகளில் இருந்து அறியப்பட்ட கண்டுபிடிப்பு இதுதான்: தேசிய கடல் மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனத்தில் (NOAA-National Oceanic and Atmospheric Administration) இருந்த ஒரு வெப்பதட்ப மாதிரி தயாரிக்கும் வல்லுனர், உலகம் வெப்பமாதலுக்கும், புயல் செயற்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பில் ஆராய்ச்சியில் முக்கிய கவனத்தை காட்டி வந்தார்; கத்தரீனா புயலுக்கு பின்னர் செய்தி ஊடகத்துடன் இவர் பேசுவதற்கு நிர்வாகத்தால் தடைக்கு உட்படுத்தப்பட்டார். 2005ம் ஆண்டிலேயே, நியமிக்கப்பட்ட பொது விவகார அலுவலர்கள் NASA வின் Goddard Institutte of Space Studies இயக்குனர் James Hansen உலகம் வெப்பமாதல் பற்றிய கண்டுபிடிப்புக்களை பற்றி பேசுவதில் இருந்து தடுக்கப்பட்டார்; அவருடைய பொது அறிக்கைகள் வடிகட்டப்பட்டன; அவருடைய பத்திரிகை பேட்டிகள் திருத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இன்னும் பல நேரங்களில், விஞ்ஞானிகளுடனான பேட்டிகள் நிர்வாக அதிகாரிகளின் இயக்கத்தின்கீழ்தான் அனுமதிக்கப்பட்டன; செய்தியாளர் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டன; செய்தி ஏடுகளுக்கு கொடுக்கப்படும் விஞ்ஞானிகளின் தகவல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு புஷ் நிர்வாக அதிகாரிகளால் மாற்றி எழுதப்பட்டுவிட்டன.

பல விஞ்ஞானிகளும், வாதிடும் குழுக்களும் ஜனவரி 30ம் தேதி சட்டமன்ற மேற்பார்வை குழு முன் சாட்சியம் அளித்தனர். அமெரிக்க சூழல் மாறுதல் அறிவியல் திட்டத்தில் முன்னாள் இணையாளராக இருந்த Rick Piltz விசாரணையின்போது "கடைசி நேரத்தில், மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் கையொப்பம் வைத்துவிட்டு சென்று 12 மணி நேரத்திற்கு பின்னர்" பல விஞ்ஞானப் படைப்புக்களை சரிபார்த்து பதிப்பிக்கும் வேலைகள், புஷ் நிர்வாகத்தின் "பொது விவகார" அதிகாரிகளால் செய்யப்பட்டன என்று கூறினார்.

எண்ணெய் தொழிற்துறையின் செல்வாக்கு பற்றி விஞ்ஞானிகள் அதிகமாக சாட்சியம் கொடுத்தனர்; அப்பிரிவின் செல்வாக்காளர்களும் ஊழியர்களும் கூட்டாட்சி சுற்றுச் சூழல் கொள்கை, வானிலை தகவல் மேற்பார்வை ஆகிய குழுக்களில் பதவிகள் கொடுக்கப்பட்டிருந்தனர். வெள்ளை மாளிகையால் நியமிக்கப்பட்டவர் ஒருவர், அமெரிக்க பெட்ரோலியம் இன்ஸ்டிட்டியூட்டின் முன்னாள் செல்வாக்காளரான Phil Cooney சுற்றுச் சூழல் அறிக்கையின் பொருளுரையில் 200 மாறுதல்களை செய்தார்; அதையொட்டி அவர் அறிக்கையின் உட்குறிப்புக்கள் மற்றும் முடிவுகளில் தவறான, உறுதியற்ற, கணிசமான வகையில் குறைமதிப்புத்தரும் பல கருத்துக்களை நுழைத்திருந்தார்.

சுற்றுச் சூழல் தரக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (Environmental Protection Agency) அறிக்கையில் வெப்ப மாறுதல்கள் பற்றிய ஆபத்துக்களை கூறியிருந்த ஒரு பிரிவை Cooney தானே நீக்கினார்; அதை அவர் "ஊக முறையில் சிந்திக்கப்பட்டுள்ளது" என்று கூறிவிட்டார். இவருடைய குறுக்கீடு பகிரங்கமாக்கப்பட்டவுடன், இவர் அரசாங்க வேலையை விட்டு Exxon Mobil நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தார்.

வெப்ப மாறுதல் ஆராய்ச்சி மற்றும் உலகில் உள்ள உயிரினங்களுக்கு அதன் பாரிய தாக்கங்களானது இலாபக் குவிப்புக்கும், தனியார் சொத்துக் குவிப்புக்கும் தடையாக இருப்பதாக ஆளும் உயரடுக்கு காண்பதை இத்தகைய சான்றுகள் தெளிவாக்குகிறது. வெள்ளை மாளிகைக்குள்ளேயும் வெளியேயும் இருக்கும் எண்ணெய் தொழில்துறை நபர்கள் இந்த அறிவியலை தங்களுடைய எந்த செயற்பட்டியலை தொடரவும் தேவையானபடி மாற்றி, அடக்கி, நீர்த்துவிடும் வகையில் செய்துவிடுவர் என்பதும் கூட தெளிவாகிறது.

எண்ணெய் தொழிற்துறை நீண்டகாலமாகவே பொது மக்களை குழப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வெப்பதட்ப மாறுதல்களுக்கான காரணங்கள் பற்றி, வெளிப்படையான அவர்களுடைய நலன்களுக்கு ஏற்ப விவாதங்களையும் தயாரிக்கிறது. உதாரணமாக Union of Concerned Scientists கடந்த மாதம் கொடுத்த தகவல்படி 1998ல் இருந்து 2005க்குள்ளாக ExxonMobil --உலகிலேயே அதிக பங்குகளை கொண்டுள்ள நிறுவனம்-- கிட்டத்தட்ட $16 மில்லியன் பணத்தை செல்வாக்கிற்கு உட்படுத்துவதற்கும், போலியான அறிவியல் அமைப்புக்களை ஏற்படுத்துவதற்கும் செலவிட்டதாக தெரிகிறது. Stanford பல்கலைக்கழகத்தின் Global Climate and Energy Project உலக வெப்பம் தொடர்புடைய "அறிவியல் உணர்தலை மேம்படுத்தவும்" "கொள்கை மாற்றீடுகளை மதிப்பீடு செய்வதற்கும்" ஆகும் $100 மில்லியன் செலவை ஏற்பதாகவும் உறுதிமொழி கொடுத்துள்ளது.

UCS விசாரணையில் இந்த அமைப்புக்கள் "ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அறிவியல் ஆலோசகர்கள் என்று பல வேலைகளையும் செய்யும் தனிநபர்களின் தொகுப்பாக உள்ளது என்றும் பொதுக்கருத்துக்கு மாறான வெப்ப மாறுதல் பற்றிய ஒரு சிறு குழுவின் படைப்புக்களை மறு வெளியீடு செய்வதாகவும்'' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அமைப்புக்களின் முழு நோக்கம் இயற்கை (நிலத்தடியிலான) எரிபொருட்கள் எரிக்கப்படுவதற்கும் (இது கார்பன் டையாக்சைடை-Co2-பெரிதும் வெளியிடுகிறது) சுற்றுச்சூழலில் கார்பன் டையாக்சைடு நிறைவதற்கும் தொடர்பு இருப்பதை மறுக்கும் வகையில் உள்ளது; அப்படி கார்பன் டையாக்சைடு நிறையும்போது அது வெப்பத்தை தேக்கி பூமியின் உஷ்ணத்தை அதிகரிக்கிறது. சுற்றுச் சூழலில் உள்ள கார்பன் டையாக்சைடு தொழிற்புரட்சி காலத்தில் இருந்தே கணிசமாக உயர்ந்துவிட்டது; அதையொட்டி வெப்பத்தில் உயர்வு, பனிக்கட்டிகள் உருகுதல், வெள்ளங்கள் பெருகுதல், வரட்சி இன்னும் பல வெப்பதட்ப மாற்றங்கள் விளைந்துள்ளன.

ExxonMobil மீது Intergovernmental Panel on Climate Change அறிக்கையை குறைக்கும் முயற்சி செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் வந்துள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் குடியரசுக் கட்சியுடன் நெருக்கமான பிணைப்புக்களை உடைய American Enterprise Institute (AEI) என்னும் அமெரிக்க சிந்தனைக் குழு அறிக்கையின் கண்டுபிடிப்புக்கள், வழிவகை ஆகியவற்றை வினாவிற்கு உட்படுத்தும் கட்டுரைகளுக்கு தலா $10,000 கொடுக்க முன்வந்துள்ளது.

AEI, ExxonMoibil இடம் இருந்து $1.6 மில்லியனுக்கும் மேல் பெற்றுள்ளது; முன்னாள் Exxon தலைவரான Lee Raymond தற்பொழுது சிந்தனைக்குழுவின் அறக்காவலர் குழுவில் துணைத் தலைவராக உள்ளார்.

"சிந்தனையுடன் சுற்றுச் சூழல் மாதிரி அமைப்புக்கள், அரசாங்கத்தின் சுற்றுச் சூழல் கொள்கையை பொறுத்தவரையில் அவற்றின் வரம்புகளை ஆராயும்" கட்டுரைகளுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் கூறுகின்றன. "FAR இன் (IPCC உடைய நான்காம் மதிப்பீட்டு அறிக்கை) சுயாதீன ஆய்வறிக்கை, வருங்கால வெப்ப மாற்றத்தின் திறன் எந்த அளவிற்கு இருக்கும் என்பது பற்றிய பொது கருத்துக்களையும் மற்றும் பல கொள்கை மூலோபாயங்களுக்கான அடித்தளங்களை தெளிவாக்குவதையும் முன்னேற்றுவிக்கும்."

113 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளால் எழுதப்பட்ட இக்கடிதம், ஐ.நா. குழுவை, "தனது பணியாளர்களை சுயமாக தேர்ந்தெடுப்பதில் ஒருதலைப்பட்சமாக முனைப்புடன் உள்ளது, நியாயமான குறைகூறலுக்கு, மாற்றுக் கருத்துக்களுக்கு எதிர்ப்பு கூறுகிறது மற்றும் முழு செயற்குழு அறிக்கைகளின் பகுப்பாய்வு பணிகளுக்கு அதிக ஆதராம் இல்லை என்றும், சுருக்கமான முடிவுரைகள் முரண்பாடுள்ளதாகவும், பிழையானதாகவும் உள்ளதாக குறிப்பிடுவதாக" பண்பாக்கம் செய்துள்ளது.

பெருநிறுவன ஆதரவு மற்றும் AEI இன் அரசியல் செயற்பட்டியல் இவற்றை பார்க்கும்போது, நிதிய ஊக்கத் தொகையின் காரணம் வெளிப்படையாகிறது. வெப்பதட்ப ஆராய்ச்சியாளர் David Viner, British Guardian இடம் பெப்ருவரி 2ம் தேதி கூறியுள்ளபடி, "தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக அறிவியலை சிதைக்க விரும்பும் ஓர் அமைப்பின் திகைப்பான முயற்சிதான் இது... IPCC வழிவகை மிகவும் எத்துறைக் கண்ணோட்டதிலும் சிறப்பாகவும் வெளிப்படையாக பரிசீலனை செய்யக் கூடிய வகையிலும் உள்ளது."

American Enterprise Institute இன் ஆராய்ச்சியாளர்கள் இதன்பின் செய்தி ஊடகங்களில், மனிதனால் ஏற்படுத்தப்படும் வெளியேறல்கள்தான் உலக வெப்பத்திற்கு பெரும் ஆதாரம் என்று கூறுவதற்கு வெப்ப இயல் விஞ்ஞானிகளுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். AEI ஆராய்ச்சியாளரான David Frum தீவிர வலது National Review வின் பெப்ருவரி 4ம் தேதி இதழில், தங்களுடைய பணிக்கு விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளவே முடியாது என்று எழுதியுள்ளார். "ஆனால் நாம் ஒருவேளை எப்பொழுதாவது கண்டுபிடித்தால், அத்தொகை தலா ஒருவருக்கு $10,000 இன் பலமடங்குகளாக இருக்கும் என்று முன்கூட்டிக் கூறுவேன்." உண்மையில் 2,500 விஞ்ஞானிகளில் ஒருவர்கூட ஐ.நா.வினால் வெப்பதட்ப அறிக்கை பற்றிய அவர்களுடைய ஆய்வு பங்களிப்புகளுக்கு பணம் கொடுக்கப்படவில்லை.

"சுற்றுச் சூழலின் அழுத்தம்" (Atmosphere of Pressure) என்பது Government Accountability Project வலைத் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்படலாம். Oversight and Government Reform Committee விசாரணையில் இருந்து ஆவணங்களும் சான்றுகளும் உத்தியோகபூர்வ வலைத் தளத்தில் பார்க்கப்படலாம். The Union of Concerned Scientists என்று ExxonMobil நிதிகொடுக்கும் அமைப்புக்கள் பற்றிய விசாரணையும் UCS செய்திக் குறிப்புக்கள் மூலம் எடுத்துக் கொள்ளப்படலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved