World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: மத்திய கிழக்குIs the Bush administration behind the bombings in Iran? ஈரான் குண்டுவீச்சுக்களின் பின்னணியில் புஷ் நிர்வாகம் உள்ளதா? By Peter Symonds தென்கிழக்கு ஈரானில் உள்ள ஜாகேடனில் இந்த வாரம் நடைபெற்ற இரண்டு குண்டுவீச்சுக்கள், நாட்டின் இனவழிச் சிறுபான்மையினர் மத்தியில் தளத்தை கொண்டுள்ள எதிர்ப்புக் குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ள தொடர் நிகழ்வுகளில் சமீபத்தியதாகும். இச்சமீபத்திய தாக்குதல்கள் புஷ்ஷின் நிர்வாகம் அதன் போருக்கான தயாரிப்புக்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ஈரானுக்குள் அமெரிக்க இராணுவம் மற்றும் CIA இன் நடவடிக்கைகள் பற்றி மீண்டும் வினாக்களை எழுப்பியுள்ளன. முதல் வெடிப்பு குறைந்தது ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்காவலர் படைப் பிரிவின் 11 உறுப்பினர்களையாவது, அவர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து ஒரு இராணுவ தளத்திற்கு பஸ் ஒன்றில் சென்றிருந்தபோது கொன்றது. பஸ்ஸை நிறுத்துமாறு வற்புறுத்தியபின், தாக்குதல்காரர்கள் காரில் நிரப்பப்பட்ட வெடிபொருட்களை வெடிக்கச் செய்தனர். இவ்வெடிப்பில் மற்றும் ஒரு 31 பேர் காயமுற்றனர். நேற்று மற்றும் ஒரு குண்டுவீச்சும், அதைத் தொடர்ந்து போலீசிற்கும் ஒரு ஆயுதமேந்திய குழுவிற்கும் இடையேயான தீவிர கைகலப்புக்களும் ஏற்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஈரானின் பலூச் சிறுபான்மை பிரிவினர் மத்தியில் தளத்தை கொண்டுள்ள ஒரு சுன்னி தீவிரவாத குழுவான ஜுண்டல்லா (Jundallah) புதன் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. ஈரானிய போலீசார் ஏற்கனவே இந்த அமைப்பை சேர்ந்ததாக கூறப்படும் 65 பேர்களை வெடிமருந்துகள், ஆயுதங்களுடன் பிடித்துள்ளனர். ஜாகேடன், சிஸ்டான்-பலூச்சிஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஆகும்; இது பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் எல்லைகளாக கொண்டிருக்கிறது மற்றும் அது ஈரான் நாட்டின் 1-2 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ள பலூச்சியர்களுடைய உறைவிடம் ஆகும். மாநில போலீஸ் தலைமை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் மகம்மத் கபாரியின்படி, "எதிர்ப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சி அவர்கள் எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சில நாடுகளின் உளவுத்துறைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறது." பெயரிடப்படாத ஈரானிய அதிகாரி ஒருவர் Islamic Republic News Agency இடம் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இத்தாக்குதல் ஈரானில் அமைதியின்மையை தூண்டுவதற்கான அமெரிக்க திட்டங்களின் ஒரு பகுதி என ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். "குண்டுவீச்சின் பின்னணியில் இருந்த இந்த நபர் தங்களுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் ஆங்கிலத்தில் பேசியதாக ஒப்புக் கொண்டார்" என்று அவர் கூறினார். அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் தொடர்பு ஜுண்டல்லாவுடன் இருந்தது பற்றிய உறுதியான நிரூபணத்தை ஈரானிய அதிகாரிகள் கொடுக்கவில்லை. வீடியோ காட்சியோ அல்லது மற்ற சான்றுகளோ வெளியிடப்படவில்லை. ஆனால் IRGC பஸ்ஸின் மீதான தாக்குதல் ஈராக்கில் அமெரிக்க-எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு IRGC Quds Force ஆயுதங்கள் கொடுப்பதாக புஷ் நிர்வாகம் குற்றம் சாட்டி நடத்தும் பிரச்சார பின்னணியில் நடைபெற்றுள்ளது. ஈரானிய வலைத் தளங்கள் எனக் கூறப்படுவனவற்றை நொருக்கிவிடப்போவதாக ஜனாதிபதி புஷ் உறுதி கொடுத்துள்ளதுடன் ஈரானிய முகவர்களை கொல்ல அல்லது கைப்பற்றவும் அமெரிக்க இராணுவத்திற்கு அதிகாரம் கொடுத்துள்ளார். ஈராக்கிற்குள் இருக்கும் ஈரானிய முகவர்களை அமெரிக்க படைகள் இலக்கு கொண்டுள்ளதாகவும் ஆனால் ஈரானில் இருப்பவர்களை அல்ல என்றும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஈரான் மீது தாக்கும் திட்டங்கள் இல்லை என்னும் அமெரிக்காவின் கூற்றுக்களுக்கு மதிப்பு இல்லாதது போல்தான் இத்தகைய மறுப்புக்களுக்கும் நம்பகத்தன்மை இல்லை. கடந்த ஓராண்டில், புஷ் நிர்வாகம் ஈரானில் "ஆட்சி மாற்றத்திற்காக" நிதி ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது; இதில் ஈரானிய எதிர்ப்புக் குழுக்களுக்கான ஆதரவும் அடங்கும். மேலும், வாஷிங்டன் பெருகிய முறையில் ஈரானின் கணக்கற்ற இனவழிச் சிறுபான்மையினரிடம் உள்ள அமைதியின்மையை பயன்படுத்திக் கொள்வதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதுடன், அது ஜுண்டல்லா போன்ற ஆயுதமேந்திய குழுக்களுக்கு இரகசியமாக உதவிபுரிந்திருக்கக்கூடும். Washington Quarterly யின் சமீபத்திய இதழில் "ஈரானின் இனவழி தீப்பற்றும் பெட்டி" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை கூறுவதாவது: "ஓர் இரகசிய அமெரிக்க ஆய்வுத் திட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் குடியபெர்ந்த ஈரானிய செயல்பாட்டாளர்கள் கூற்றின்படி, அமெரிக்க பாதுகாப்புத்துறை இப்பொழுது இஸ்லாமிய மதசார்புடைய ஆட்சிக்கு எதிரான இனவழி துன்பங்களின் இயல்பு மற்றும் ஆழ்ந்த தன்மை பற்றி பரிசீலித்து வருகிறது. ஈராக்கை இப்பொழுது பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் அதே வகை தவறான போக்குகளின் வழியிலேயே ஈரானும் வன்முறைச் சிதைவிற்கு ஆளாகமுடியுமா என்பது பற்றி பென்டகன் சிறப்பாக ஆர்வம் காட்டுவதாக அறிவிக்கப்படுகிறது, மற்றும் அதே வகை தவறான போக்குகள்தான் கம்யூனிச பொறிவுடன் சோவியத் ஒன்றியம் நொருங்குவதற்கு துணைநின்றது."அமெரிக்க உளவுத்துறை ஸ்தாபன அமைப்பில் பல தொடர்புகளை கொண்ட மூத்த அமெரிக்க செய்தியாளரான சேமுர் ஹெர்ஷ், கடந்த ஆண்டு New Yorker ல் பல கட்டுரைகளை வெளியிட்டார்; இவை ஈரானுக்குள் அமெரிக்க செயற்பாடுகளை சுட்டிக்காட்டின. கடந்த நவம்பர் மாதம் "அடுத்த நடவடிக்கை: ஒரு சேதமுற்றுள்ள நிர்வாகம் ஈரானை தாக்குவது குறையுமா அல்லது அதிகரிக்குமா?" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில் அவர் எழுதியதாவது: "கடந்த ஆறு மாதங்களில், இஸ்ரேலும் அமெரிக்காவும் குர்திஸ்தானில் உள்ள Party for Free Life என்னும் குர்திய எதிர்ப்புக் குழுவுடன் இணைந்து வேலைசெய்து வருகின்றன. இக்குழு திருட்டுத்தனமாக ஈரானுக்குள் எல்லை கடந்த செயல்களை செய்துவருகிறது என்று பென்டகன் சிவிலியத் தலைமையுடன் நெருக்கமான தொடர்புடைய அரசாங்க ஆலோசகர் ஒருவர் என்னிடம் கூறினார்; இது "ஈரான் மீது மாற்றீட்டு முறையில் அழுத்தம் கொடுப்பதற்கான வகைகளை கண்டறியும் முயற்சிகளில் ஒரு பகுதியாகும்". குர்திஷ், அஜேரி, பலூச்சி பழங்குடியினருடன் பென்டகன் இரகசிய உறவுகளை நிறுவி, வடக்கு, தென்கிழக்கு ஈரானில் அரசாங்கத்தின் அதிகாரத்தை கீழறுக்கும் முயற்சிகளை ஊக்குவித்துள்ளது." தெஹ்ரானுக்கு எதிர்ப்பு இப்பொழுதுள்ள மதசார்பு உடைய ஷியைட் ஆட்சி என்றில்லாமல் முன்பு அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த ஷா ரேஸா பஹ்லவியின் ஆட்சிக்காலத்திலும் எதிர்ப்பை அடக்குவதற்கு ஜனநாயக விரோத முறைகள் பயன்படுத்தப்பட்டது பற்றி ஈரானின் இனவழிச் சிறுபான்மையினர் முறையான புகார்களை கொண்டு பல எதிர்க்கட்சிகளும் அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. இத்தகைய குழுக்கள் மத, மொழி, இன பாகுபாடுகள் இருப்பதை காட்டுவது மட்டும் அல்லாமல் பொருளாதார பிரிவினை கடைபிடிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியுள்ளன. உதாரணமாக பெரும்பாலன பலூச்சியர்கள் சுன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவர்கள் --இது பெரும்பாலான ஷியைட்டுக்கள் ஆதிக்கம் பெற்றுள்ள ஈரானிய இடங்களில் சிறுபான்மை இனம் ஆகும். சிஸ்டன்-பலூச்சிஸ்டான் நாட்டின் பொருளாதாரப் பிற்போக்கு நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். பெரும்பாலான பகுதிகள் மலைகளாகவோ, பாலைவனங்களாகவோ உள்ளன; ஈரானிய பாதுகாப்புப் படைகள் கள்ளக் கடத்தல், போதைப் பொருட்கள் கொண்டுவரும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைகளில் நீண்டகாலமாக போர் புரிந்து வருகின்றனர். வேலையின்மை 30-50 சதவிகிதம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இது ஈரானிய கணக்கில்கூட உயர்ந்ததாகும்; மேலும் வறுமை பரந்த அளவில் பெருகியுள்ளது. ஜுண்டா 2003ல் நிறுவப்பட்டு ஒரு 23-வயதான அப்துல்மலக் ரிகி என்பவரால் இயக்கப்படும் இரகசிய அமைப்பாகும். இது அல் கொய்தாவுடன் தொடர்புடையது என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்; ஆனால் இதற்குச் சான்றுகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. இது உண்மையாக இருந்தாலும், அத்தகைய தொடர்பு அமெரிக்க உளவுத்துறையுடன் தொடர்பு கொள்ளுவதை ஒதுக்க முடியாது; ஏனெனில் அமெரிக்க உளவுத்துறைதான் 1980 களில் அல் கொய்தா நிறுவப்படுத்துவற்கு பொறுப்பாக இருந்தது; சோவியத் ஆதரவிற்குட்பட்ட ஆப்கானிஸ்தானத்திற்கு எதிராக புனிதப் போர் நடத்துவதற்காக அது தோன்றியது. பாக்கிஸ்தானில் ஆயுதமேந்திய பலுச் பிரிவினைவாதிகளுடன் ஜுண்டல்லாவிற்கு உறுதியான தொடர்புகள் உண்டு. கடந்த ஆண்டில், ஜுண்டல்லா ஈரானிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகள் மீது நடந்த தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்றிருந்தது. பிரிட்டிஷ் தளத்தைக் கொண்ட Telegraph இடம் ஜனவரி 2006ல் கொடுத்த பேட்டி ஒன்றில், இதன் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹமீத் ரீக்கி குழுவில் 1,000 பயிற்சி பெற்ற போராளிகள் இருப்பதாக பறைசாற்றினார். அமெரிக்கா அல்லது பாக்கிஸ்தான் அரசாங்கத்துடன் எத்தொடர்பும் இல்லை என்று கூறிய அவர் மேற்கில் இருந்து உதவி வேண்டும் என்று உறுதியுடன் கோரினார். ஈரானிய இராணுவத்தை தோற்கடிக்கும் ஆழ்ந்த ஊக்கம் ஜுண்டாப் போராளிகளிடம் இருப்பதாக அவர் கூறினார் -- குறிப்பாக மேற்கில் இருந்து சில உதவிகள் வருமானால் இது இயலும் என்றார். ஈரானில் உள்ள அஜேரி, குர்டிஷ், அரேபிய மற்றும் பிற சிறுபான்மையினரைப் போலவே ரீக்கியின் முறையீடும் பலூச் உயரடுக்கின் சில பிரிவுகளுடைய வெற்றுக் கணக்குகளைத்தான் பிரதிபலிக்கிறது; இவர்கள் ஈரானுடனான ஒரு இராணுவ மோதலில் வாஷிங்டனுன் இணைந்து கொள்வதால் ஏற்படக்கூடிய நலன்களின் திறனைப் பார்க்கின்றனர். அத்தகைய அடுக்குகளுக்கு அமெரிக்க ஆதரவு அண்மையில் இருக்கும் ஈராக்கில் ஏற்படுத்திய பேரழிவுகளைவிட கூடுதலான அழிவைக் கொடுக்கும் திறன்தான் உள்ளது; அங்கு அமெரிக்க தலைமையிலான படையெடுப்பு குறுகிய பிரிவுவாத உள்நாட்டு யுத்த வெடிப்பைத் தட்டிவிட்டது.. புதனன்று நடந்த குண்டுவீச்சு பற்றி தன்னுடைய கருத்தில் Stratfor "இந்தச் சமீபத்திய IRGC பிரிவிற்கு எதிரான தாக்குதல் ஆயுதமேந்திய பலூச் தேசியவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம்; அவர்கள் மேலை உளவுத்துறை பிரிவுகளிடம் இருந்து ஊக்கத்தைப் பெற்றுள்ளனர்" என்று உறுதியாக கருதுகிறது. இச் சிந்தனைக்குழு அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவ வட்டாரங்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டது, ஈரானிய ஆட்சியை உறுதிகுலைப்பதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடக்கியுள்ள இரகசியப் போர் விரிவாக்கத்தை சுட்டிக் காட்டுகிறது. "ஈராக் பற்றிய அமெரிக்க-ஈரானிய மோதல் மிக ஆழ்ந்த தீவிரத்தை கொண்டுவிட்டது. செய்தி ஊடகத்தின் கவனத்தை வனப்புரை சொற்களும் பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகளும் ஈர்த்துள்ள நேரத்தில், ஈரான் ஒரு புறம், அமெரிக்கா, இஸ்ரேல் மறுபுறம் என்ற வகையில் ஒரு இரகசிய போர் தொடங்கிவிட்டது; இது மேலும் தீவிரமாகும். இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் மூலம் ஈரானின் அணுவாயுதத் திட்டங்களை செயலற்றதாக ஆக்குவதின் மீது இஸ்ரேல் குவிப்புக் காட்டும் அதேவேளை, ஈராக் பற்றி பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு காண்பதில் அமெரிக்கா ஈரானிலுள்ள பலவித ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் ஆதரவை திரட்டி ஈரானிய ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறது" என்று Stratfor எழுதியது. இஸ்ரேலின் "இலக்குவைக்கப்பட்ட படுகொலைகள்" என்பது கடந்த மாதம் உயர்மட்ட ஈரானிய அணுசக்தி விஞ்ஞானி Ardeshir Hassanpour சந்தேகத்திற்குரிய முறையில் மரணம் அடைந்தது பற்றிய குறிப்பு ஆகும். "ஈரானில் இஸ்ரேலிய இரகசிய நடவடிக்கை" ("Israeli Covert Operations in Iran") என்ற தலைப்பில் வந்த கட்டுரை ஒன்றில், விஞ்ஞானியின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு பின்னர் வந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு Hassanpor கதிரியக்கத்திற்கு கூடுதலாக உட்பட்டிருந்ததால் இறந்துபோனார் என்று குறிப்பிட்டிருக்கையில், முழு விவரங்களும் குழப்பமாகத்தான் உள்ளன என்று Stratfor குறிப்பிட்டுள்ளது. "இஸ்ரேலிய உளவுத்துறைக்கு நெருக்கமான ஸ்ட்ராட்போர் ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, கட்டுரையானது "உண்மையில் Hassanpour ஒரு மோசாட் இலக்காகத்தான் இருந்தார்" என்று அறிவித்து, 1980களின் பொழுது உயர்மட்ட ஈராக்கிய விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதில் மோசாட் தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுக்களையும் சுட்டிக்காட்டியது. ஜாஹேடானில் சமீபத்திய குண்டுவீச்சில் அமெரிக்க உளவுத்துறை முகவாண்மைகளின் நேரடித் தொடர்பிற்கான ஆதாரம் ஏதும் வெளிப்படவில்லை என்றாலும், அமெரிக்கா ஈரானுக்குள் இனவழி, அரசியல் எதிர்ப்பை எரியூட்டுவதில் உறுதியாக ஈடுபட்டுள்ளது. இத்தகைய பொறுப்பற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தெஹ்ரானை அமெரிக்காவுடன் அதன் கோரிக்கைகள் பற்றி பேச்சு வார்த்தைகள் மூலம் உடன்பாடு காணவேண்டும் என்பதற்கான அழுத்தங்கள்தான் என்று சற்றே நயமான முறையில் Stratfor விளக்கம் காண்கிறது. அப்படியே இருந்தாலும், பாரசீக வளைகுடாவில் அமெரிக்க இராணுவக் குவிப்பு, ஈரானுக்கு எதிரான பொருளாதரத் தடைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்னும் அதன் கடினப் பிரச்சாரங்கள், நாட்டிற்குள்ளேயே நடத்தும் இரகசிய செயல்கள், அனைத்தும் விரைவிலேயே ஒரு பூசல் வெடித்தெழலாம் என்றும் அது கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்பதைத்தான் காட்டுகின்றன. |