World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
David North addresses public meeting in Sydney on political implications of Iraq war ஈராக் போரின் அரசியல் தாக்கங்கள் குறித்து சிட்னியில் டேவிட் நோர்த் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் By our reporters ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர் தீவிரப்படுத்தலுக்கும், வாஷிங்டனால் இலக்கு கொள்ளப்படும் ஈரான் இன்னும் பிற நாடுகளுக்கு எதிராக புதிய சட்டவிரோத ஆக்கிரமிப்பு போர்களின் தயாரிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் புதன் கிழமையன்று உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) ஒருதொகை மக்கள் குழுமியிருந்த பொதுக் கூட்டத்தை நடத்தின முக்கிய பேச்சாளர் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் ஆவார். இக்கூட்டமானது அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் அடித்தளத்தில் இருக்கும் தன்மையைப் பற்றி ஆராய்ந்ததுடன், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக இளைஞர்களையும் தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்தும் ஒரு சோசலிச முன்னோக்கை எடுத்துக்காட்டியது. பார்வையாளர்களில் சமூக சமத்துவத்திற்கான மாணவர் (Students for Social Equality) அமைப்பின் உறுப்பினர்கள், சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்திற்கு முதல் தடவையாக வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையான WSWS வாசகர்கள் ஆகியோர் இருந்தனர்; இவர்களில் சிலர் வேறு மாநிலங்களில் இருந்தும் நோர்த்தின் உரையை கேட்பதற்காக கூடினர். WSWS சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினரும், ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான நிக் பீம்ஸ் கூட்டத்திற்கு தலைமையேற்று பேசுகையில், "ஈராக்கில் ஆழமடைந்து வரும் பேரழிவு பற்றிய மேலதிக செய்திகளை ஒவ்வொரு நாளும் கொண்டுவருகிறது, மற்றும் அச்சுறுத்தும் வகையில், மேலும் அமெரிக்க ஈராக்கிற்கு எதிராக மிகவும் தள்ளிப்போகாத எதிர்காலத்தில் (விரைவில்) தாக்குதலுக்கான திட்டங்களை தயாரித்துள்ளது என்பதற்கான மேலதிக குறிப்புக்களும் வருகின்றன" என கூறினார்.ஈராக் போர்த்தயாரிப்பில் முனைப்புடன் இருந்தவர்களில் ஒருவரான அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி, இந்த மாதம் இரண்டு நாட்கள் ஹோவார்ட் அரசாங்கத்தின் அமைச்சரவை தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு வருகிறார் என்ற செய்தி இன்னும் பரந்த முறையில் அமெரிக்க தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பிற்கான தயாரிப்பு நடக்கின்றது என்பதற்கான கெடுதலான அடையாளம் ஆகும். மார்ச் 24 அன்று நடைபெற இருக்கும் தெற்கு வேல்ஸ் தேர்தலிலும், ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் கூட்டாட்சி தேர்தல்களிலும் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என்று பீம்ஸ் அறிவித்தார். கட்சியின் பிரச்சார மையத்தில் இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சுயாதீனமான சோசலிசக் கொள்கையை அபிவிருத்திசெய்தல் என்பது இருக்கும். WSWS குழு எழுத்தாளரான ஜேம்ஸ் கோகன் ஆரம்ப உரை ஆற்றுகையில், வரவிருக்கும் வாரங்களும் மாதங்களும் போரின் மிக இரத்தம் சிந்தும் காலமாக இருக்கக்கூடும் என்று எச்சரித்தார். "பாக்தாத் பாதுகாப்புத் திட்டம்" (Baghdad security plan) என்று அழைக்கப்படும் புஷ்ஷின் திட்டத்தின் கீழ், ஈராக்கின் தலைநகரின் மீது ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டை நிறுவுவதற்காக 85,000 அமெரிக்க, ஈராக்கிய அரசாங்க துருப்புக்கள் அடங்கிய பாரிய இராணுவ நடவடிக்கை ஏற்கனவே நடைபெற்று வருகின்றது."நாட்டில் அமெரிக்கர் இருப்பதற்கு எதிரான எதிர்ப்பாளர்களின் அணிகளை தகர்ப்பதற்காக ஆக்கிரமிப்பு படைகள் கடுமையான நகர்ப்புற சண்டைகளுக்கு அனுப்பப்படவுள்ளன. குறிப்பாக, மிகப் பெரிய ஷியைட் மஹ்தி இராணுவப் போராளிகளுக்கு எதிராக இது இலக்கு கொண்டுள்து; அந்த அமைப்பு பாக்தாத்தின் வடகிழக்கில் இருக்கும் அடர்த்தியான தொழிலாள வர்க்க மக்கட் திரட்டின் மத்தியில் ஆழமான ஆதரவை கொண்டுள்ளது." "21,500 கூடுதலான படைகளை அணிதிரட்டல் ''ஒரு பிரச்சனைக்குட்பட்ட பகுதியில் சுதந்திரத்தை முன்னெடுத்து'', ''செயல்படும் ஜனநாயகத்தை'' தோற்றுவிப்பதற்கு முயலும் என்ற புஷ்ஷின் கூற்றுக்களுக்கு செய்தி ஊடகம் வெட்கமின்றி நம்பகத்தன்மையை கொடுத்துள்ளது" என்று கோகன் கூறினார். உண்மையை எளிமையாகவும் அப்பட்டமாகவும் கூறுவது இன்றியமையாததாகும்: "ஈராக்கின்மீது அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு என்பது வரலாற்றுப் பரிமாணங்கள் உடைய போர்க்குற்றம் ஆகும்; இது அமெரிக்க முதலாளித்துவ உயரடுக்கினராலும் அதன் சர்வதேச நட்பு சக்திகளாலும் உலகின் இரண்டாம் பெரிய எண்ணெய் இருப்புக்கள் மீது கட்டுப்பாட்டை கொள்ளுவதற்காக, மேற்கொள்ளப்பட்டுள்ளது." அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கிய சமுதாயத்தை "ஒரு வாழும் நரகமாக" ஆழ்த்திவிட்டது; அதன் பொருளாதாரமும் உள்கட்டுமானமும் தகர்க்கப்பட்டுவிட்டன. பரந்த வேலையின்மை, கட்டுப்படுத்தமுடியாத உணவுத் தட்டுப்பாடுகள், செயலற்ற பொது சுகாதார முறை ஆகியவை இருப்பதுடன் மில்லியன் கணக்கான குழந்தைகள் பள்ளிகளுக்கும் செல்வதில்லை." ஈராக் மக்களில் நாற்பதில் ஒருவர் என்ற அளவில் 655,000 பேர் இறந்துவிட்டனர்; இது நேரடியாக அமெரிக்க தோட்டாக்கள், குண்டுவீச்சுக்கள் ஆகியவற்றின் விளைவு என்று கூறலாம் அல்லது அரசாளும் தன்மை மற்றும் குடிமக்கள் சமுதாயம் என்ற எந்தவித அடையாளமும் சீரழிந்துள்ள தன்மை மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பினால் தூண்டிவிடப்பட்டுள்ள குறுகிய பிரிவுவாத கொலைத்தன்மை வாய்ந்த மோதல்களும் கொண்ட நாட்டின் பொருளாதார அழிவின் விளைவாக என்றும் கூறலாம். John Hopkins University இனால் நடத்தப்பட்டு மற்றும் மதிப்பிற்குரிய Lancet medical journal இனால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் வழிமுறை, கடந்த நான்கு ஆண்டுகளில் சூடானின் Darfur பகுதியில் உள்நாட்டுப் போரின் போக்கின்போது 400,000 மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது பட்டினியால் இறந்து போயினர் என்பதை கணிப்பிடுவதற்கு பயன்படுத்திய வழிமுறையைப் போன்றதுதான் என கோகன் கூறினார். அமெரிக்க அரசுத்தறை செயலர் கொண்டலீசா ரைஸ் பிந்தைய புள்ளிவிவரத்தைத்தான் சூடானில் "இனப்படுகொலை" நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவிப்பதற்கு மேற்கோளிட்டு கூறியிருந்தார்.அமெரிக்க இராணுவத்தினர் அதிகமாக இறப்பதை மேற்கோளிட்டபின், கோகன் கூறினார்: "இந்தக் கொடூரங்களின் இடையே ஒரு மறுக்க முடியாத உண்மை வெளிப்பட்டு நிற்கிறது: ஈராக்கிய மக்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்து வருவதுடன் நாட்டில் இருந்து ஈராக்கிய மக்களை அமெரிக்க இராணுவம் அடக்குவதற்கு துணைபுரியும் 800 ஆஸ்திரேலிய துருப்புக்கள் உள்பட வெளிச்சக்திகளை அகற்றுவதற்கும் தொடர்ந்து போரிடுகின்றனர். "எனவேதான் இன்னும் கூடுதலான அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பப்பட உள்ளன. இது "ஜனநாயகத்தை" ஒரு சிறுபான்மை எதிர்ப்பாளர்களிடம் இருந்து காப்பதற்காக அல்ல, பெரும்பான்மையை அடக்குவதை தீவிரப்படுத்துவதற்காவாகும். ஈராக்கில் அமெரிக்கர்களுடைய திட்டம், பெரும்பான்மையான மக்கள் நாட்டின் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் அல்லது அதன் எண்ணெய் வளம் எப்படி பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்கும் ஒரு சமுதாயத்திற்கானதல்ல, மாறாக ஒரு அமெரிக்க ஆளுமைக்குட்பட்ட அரசாக இருந்து அமெரிக்க எரிபொருள் நிறுவனங்களுக்கு கொழுத்த இலாபங்களை எப்படிக் கொடுக்கலாம், அடுத்த இலக்காக இருக்கக்கூடிய ஈரான் மீதான தாக்குதலுட்பட அப்பகுதியில் இன்னும் கூடுதலான ஆக்கிரமிப்பிற்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்தல் என்பதற்கானதாகும்." அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கும் வகுப்புவாத சுன்னி, ஷியைட், குர்திஸ் தலைமைகளுக்கும் எதிராக ஈராக்கிய உழைக்கும் மக்கள் ஐக்கியப்பட்டு போரிடுவதற்கு ஒரு அடித்தளம் உள்ளது என்று கோகன் கூறினார். மக்களின் அனைத்து பிரிவுகளும் பெரும் அடக்குமுறை, கொடூரமான சமூக நிலைகள் மற்றும் அவர்களுடைய மதசார்பற்ற ஜனநாயக உரிமைகளின் தகர்ப்பு என்பதை எதிர்கொண்டுள்ளன. "ஈராக்கிய மக்களுடைய ஐக்கியப்பட்ட போராட்டம் என்பதற்கான மிகப்பெரிய உந்துதல் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த மற்றும் அரசியல்ரீதியாய் சுயாதீனமான போர் எதிர்ப்பு இயக்கம் மீண்டும் எழுச்சியுறுவதானால் வழங்கப்படும். அத்தகைய இயக்கத்திற்கான அடிப்படையும் இப்பொழுது உள்ளது. ஈராக்கில் போர் விரிவடைதல் என்பது அமெரிக்க மக்களுடைய விருப்பத்திற்கு முற்றிலும் மாறாகவும், போருக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு இருப்பதையும் மீறி நடக்க உள்ளது." "ஜனவரி 22 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் ஆஸ்திரேலிய பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாளர்ள் மற்றும் இளைஞர்களுக்கு, அமெரிக்கா தலைமையிலான ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையில் நடத்தப்படும் போர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச வெகுஜன தொழிலாளர் இயக்கத்தை கட்டியமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தன. இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள சவாலை ஏற்குமாறு உங்கள் அனைவரையும் ஊக்கப்படுத்துவதுடன் 2007ம் ஆண்டை இராணுவவாதம், அடக்குமுறை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக சர்வதேச ரீதியாக உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் அர்ப்பணிக்குமாறும் கேட்டுக்கொள்ளுகிறேன்." அமெரிக்க ஜனநாயகத்தின் வெடிப்புத் தன்மை உடைய நெருக்கடி முக்கிய பேச்சாளரான டேவிட் நோர்த், தன்னுடைய கருத்துகளின் கவனத்தை கடந்த நவம்பர் மாத அமெரிக்க சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு எதிராக, அவற்றை மீறிய வகையில் மத்திய கிழக்கில் தன்னுடைய போர் ஆக்கிரோஷத்தை விரிவாக்கும் புஷ் நிர்வாகத்தின் முடிவினால் தோற்றுவிக்கப்பட்ட ஆழ்ந்த அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியின்மீது குவிமையப்படுத்தினார். அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள், நவம்பர் வாக்குகளை சில உணர்வோடு, போர் பற்றிய ஒரு சக்திமிக்க நிராகரிப்பு என்ற வகையில் வரவேற்றிருந்தனர். "அதாவது கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இறுதியில் உறுதியாக எழுந்து நின்று தங்கள் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதுபோல்... இது ஒரு அரசியல் நிலஅதிர்வு போல் இருந்தது; இந்த அரசாங்கம் ஈராக்கில் மேற்கொண்ட செயற்பாட்டின் அனைத்து அரசியல் மற்றும் தார்மீக சட்டபூர்வதன்மையை நிராகரித்ததற்கு ஒப்பாகும்." ஆனால், இந்த தேர்தல் முடிவையொட்டி கொள்கையில் ஒரு மாற்றம் இருக்கும் என்ற மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் விரைவில் தவறாயின. துணை ஜனாதிபதி செனி நாடும் முழுவதும் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெள்ளை மாளிகையின் கொள்கை மக்கள் கருத்தால் நிர்ணயிக்கப்படாது என்று அறிவித்தார். இத்தகைய அறிவிப்பின் நயமற்ற தன்மையினால் அதிர்ச்சி அடைந்த பேட்டியாளர் இது ஒன்றும் கருத்துக் கணிப்பு அல்ல என்றும் ஒரு தேர்தல் என்றும் சுட்டிக் காட்டினார்; செனி அந்த எதிர்ப்பை கவனத்திற்கு எடுக்கவில்லை. அமெரிக்க வரலாற்றுப் பின்னணியில் இத்தகைய விடையிறுப்பு பரந்த உட்குறிப்புக்களை கொண்டுள்ளது என்று நோர்த் கூறினார். அரசாங்கத்தின் செயல்களுக்கும் மக்களுடைய விருப்பத்திற்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும் என்ற கருத்தையே இது நிராகரித்த வகையில் இருந்தது. நோர்த் அமெரிக்க குடியரசின் நிறுவன ஆவணமான (Declaration of Indpendence) சுதந்திரப் பிரகடனத்தை மேற்கோளிட்டு காட்டினார்; அதில் அரசாங்கங்கள் தங்களுடைய சக்தியை "ஆளப்படுபவர்களின் ஒப்புதலில் இருந்துதான்" அடைகின்றனர் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பிரகடனம் அரசாங்கமானது "வாழ்வுரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியைத் தொடர்தல்" என்ற "மாற்றிக்கொடுக்கவியலாத உரிமைகளை" காக்கத் தவறினால், அதனை "மாற்ற அல்லது அகற்றுவதற்கான" மக்களின் உரிமையை போற்றிப் பேணுகிறது. புஷ் நிர்வாகம் தேர்தல் முடிவுகளை மீறியமை, ஜனாதிபதி கிளின்டன் காலத்தில், அவரது 1996ம் ஆண்டு தேர்தலை தலைகீழாய் புரட்டுவதற்கான முயற்சியாக இருந்த, பதவிவிலக்கும் முயற்சியின் காலத்திற்கு சென்றுள்ள நிகழ்ச்சிப்போக்கின், அமெரிக்க உச்ச நீதிமன்றம் 2000ம் ஆண்டு தேர்தல்கள் திருடப்பட்டதற்கும் ஒப்புதல் கொடுக்கப்பட்டதன்; இதுவரை இன்னும் உத்தியோகபூர்வ விசாரணைக்கு உட்படாத செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகள், மற்றிறும் முற்றிலும் பொய்களை அடிப்படையாக கொண்டு போர் தொடுத்தமை ஆகிய நிகழ்ச்சிப்போக்கின் உச்சகட்டம் என்று நோர்த் குறிப்பிட்டார். அமெரிக்காவின் முழு அரசியல், அரசியலமைப்பு அஸ்திவாரங்கள் மீதும் தாக்குதல் என்பது ஜோர்ஜ் புஷ் மற்றும் அவருடைய கூட்டத்தின் தனிப்பட்ட செயற்பாடுகளில் இருந்து விளைகின்றன என்று விளக்கிவிட முடியாது. இம்மாறுதல்கள் இன்னும் ஆழ்ந்த, வரலாற்று ரீதியாக வேர்கொண்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் நிகழ்வுப்போக்குகளில் அடையாளம் காணப்படவேண்டும். இந்த மாற்றத்தின் மிக முக்கியமான கூறுபாடுகளை சுருக்கமாக கூற தான் முயல்வதாக நோர்த் கூறினார். முதலாவதாக, இதன் ஆதாரம், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக அந்தஸ்தில் ஏற்பட்டுள்ள நீண்டகால வீழ்ச்சியில் அமைந்துள்ளது. அமெரிக்க உலக மேலாதிக்கத்தின் இழப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை நோர்த் வலியுறுத்தி, இதையொட்டி அதற்கு ஈடு செய்யும் வகையில் இராணுவ வழிமுறை எடுக்கப்பட்டுள்ளது என்றார். "இருபதாம் நூற்றாண்டில் உலக முதலாளித்துவத்தின் தலைவிதியில் மிக முக்கியமான காரணி, உலகப் பொருளாதார முக்கியத்துவம் மிக்க நிலைக்கு அமெரிக்கா எழுச்சியுற்றது என்று கொண்டால், இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிக முக்கியமான மற்றும் வெடிப்புத் தன்மை உடைய காரணி அந்த மேலாதிக்க நிலைமை நிலைமுறிவுற்றது என்று கூறலாம். "இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிகப் பரந்த இயற்கை, தொழில்துறை, நிதிய ஆதாரங்கள் உதவி இல்லாமல் ஐரோாப்பிய முதலாளித்துவம் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் என்ற இரத்தம்தோய்ந்த பேரழிவுகளில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டிருக்க முடியாது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக முதலாளித்துவம் மீண்டும் கட்டமைக்கப்பட்டது பெரும்பாலும் அமெரிக்காவின் முயற்சியினாலாகும். ஆனால் அதன் வளங்கள் அனைத்தையும் பொறுத்தமட்டில், அமெரிக்கா புதிய உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பு தோற்றுவித்த புதிய முரண்பாடுகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கொடுக்க முடியாமல் போயிற்று." 1960களின் இறுதி, மற்றும் 1970களின் தொடக்கத்தில் இருந்து, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய முதலாளித்துவங்களின் மறு எழுச்சி பற்றியும், அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்தின் உடைவு பற்றியும் நோர்த் சுருக்கமாக குறிப்பிட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு கூட சோவியத் ஒன்றியத்தின் மறைவு அமெரிக்க ஆளும் உயரடுக்கின் கணிசமான பகுதியினரால், அதன் அதிகரித்துவரும் மோசமான பொருளாதார பலவீனத்தின் விளைவுகளை எதிர்கொள்ளுவதற்கும் சரியீடு செய்வதற்கும் இராணுவ சக்தியை பயன்படுத்தும் ஒரு வாய்ப்பு என்று விளக்கப்பட்டு வந்திருந்ததையும் அவர் குறிப்பிட்டார். 1990-91 முதல் வளைகுடாப்போர் சோவியத் ஒன்றியம் இருப்பதால் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக அமெரிக்கா உணரவில்லை என்பதை மட்டுமல்லாமல், தன்னுடைய இராணுவ சக்தியை தடையின்றி பயன்படுத்தல் மீது கட்டுப்பாடுகளை வைப்பதற்கு குறிப்பிடத்தக்க இராணுவ எதிர்ப்பாளர்களை பெற்றிருக்கவில்லை எனவும் அடையாளம் காட்டியது. சில அமெரிக்க பகுப்பாய்வாளர்கள் இதனை "ஒற்றை முனைத்தன்மை" (unipolar) கணம் என அழைப்பதற்கு முன்வந்தனர். அப்பொழுது முதல், அதிகரித்தளவில் பொறுப்பற்ற மற்றும் தன்னை உயர்த்திக் கொள்ளும் கொள்கைகளின் பாணி இருந்துவருகிறது. 1992 ம் ஆண்டிலேயே, தேசியப் பாதுகாப்புக் கொள்கை வேறு எந்த நாடு அல்லது நாடுகளின் கூட்டும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் கூடும் வகையில் வெளிவருவதைத் தடுப்பதற்கான மூலோபாயத்தை அறிவித்தது. அந்த மூலோபாயத்தினுள், மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவிற்கு மிகச் சிறப்பான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; மத்திய ஆசியாவில் சோவியத் ஒன்றியத்தின் உடைவு முன்னாள் சோவியத்தின் மத்திய ஆசிய குடியரசுகளையும் அவற்றின் மிகப் பெரிய எண்ணெய், எரிவாயு இருப்புக்களையும் ஏகாதிபத்திய சுரண்டலுக்காக திறந்துவிட்டிருந்தது. செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு நெடுநாட்கள் முன்னரே, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புக்கள், இப்பகுதியின் முற்றுமுழுதான, தீர்மானகரமான மற்றும் பாரிய மூலவளங்கள் மீது சவால்விடமுடியாத அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவவும், மற்றும் சீனா உட்பட, அதன் ஐரோப்பிய, ஆசியப் போட்டியாளர்கள் எழுச்சியுறுவதை தடை செய்வதற்குமான இராணுவ மூலோபாயத்தின் முதலாவது முக்கிய படியாகக் கருதப்பட்டிருந்தது. ஆனால் ஈராக்கிய போர் நிச்சயமாக திட்டத்தின்படி செல்லவில்லை. இதன் விளைவாக, வாஷிங்டன் ஒரு தோல்வியை எதிர்கொண்டு வியட்நாம் போரைவிட "கணக்கிலடங்காத் தீவிரம் கொண்ட" ஒரு அரசியல் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் சிந்தனை முதலாவது புஷ்ஷின் முன்னாள் ஆலோசகரான Brent Scowcroft இன் அறிக்கையில் தெளிவான வெளிப்பாட்டை கொண்டுள்ளது. ஈராக்கிய படையெடுப்பை Scowcroft ஆரம்பத்தில் அது ஒரு தவறு என்று எதிர்த்திருந்தார்; ஆனால் இப்பொழுது அமெரிக்க பின்வாங்கல் என்பது, "இப்பகுதியிலும் இதற்கு அப்பாலும் பேரழிவுகரமான விளைவுகளை கொண்டுள்ளதுடன் அமெரிக்க நலன்களுக்கு மூலோபாய தோல்வியாகிவிடும்" என்றும் கூறியுள்ளார். ஈராக்கில் "பார்த்தால் தீர்வு காணமுடியாத பிரச்சினைகள் இருந்தபோதிலும்", "ஈராக்கிலும் மத்திய கிழக்கிலும் ஆபத்திற்குட்பட்டது அப்பகுதியின் உறுதித்தன்மை மட்டும் அல்லாமல், ஆழ்ந்த பிரச்சனைக்குட்பட்ட உலகில் அமெரிக்க அரசாங்கத்தின் நம்பகத் தன்மை என்று கருதப்படுவதும் கேள்விக்கு உட்பட்டுவிடும். அந்தச் சோதனையில் நாம் தோற்றுவிட வாய்ப்பளித்துவிடக்கூடாது" என அவர் மேலும் எச்சரித்தார். இக்கருத்துக்கள்தாம் புஷ் தேர்தல் முடிவுகளை மீறுவதற்கு அடிப்படையாகவும், போரை விரிவாக்குவதற்கான திட்டங்களை கொள்ளுவதற்கும் அடிப்படையாகும். "ஈராக்கில் பேரழிவிற்கும் பின்னர், ஈரானுக்கு எதிரான போருக்கான திட்டங்களை காணும்போது, இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றும். உலக அரசியலின் பொறுப்பை பைத்தியக்காரர்கள் எடுத்துக் கொண்டுவிட்டது போல் தோன்றும். ஆனால் பைத்தியக்கராத்தனமே புறநிலை நிகழ்வுப்போக்கின் ஒரு பிரதிபலிப்புத்தான்.... " இந்தப் பைத்தியக்காரத்தனம், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக மேலாதிக்க நிலையின் சரிவில் இருந்து பெறப்பட்டுள்ளது; இது தேசிய அரசு முறை என்ற வடிவமைப்பிற்குள் சமாதான முறையில் தீர்க்கப்பட்டுவிடமுடியாது; அவ்வமைப்புமுறைக்கு ஒவ்வொரு நாடும் தன்னுடைய நலன்களை பாதுகாத்துக்கொள்ள போராடும் ஒரு விரோதப்போக்கான, நாய் நாயை உண்ணும், அரசுக்கு எதிரான உலக அரசு தேவை. "அமெரிக்க இராணுவவாத வெடிப்பின் இரண்டாம் ஆதாரம், அமெரிக்க சமுதாயத்தின் இன்னும் கூடுதலான வகையில் இருக்கும் சமூக சமத்துவமின்மையில் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் Wall Street இயங்குமுறையூடாக, உற்பத்தியின் வளர்ச்சிக்கு எந்தப் பங்கையும் கொடுக்காத, மகத்தான செல்வக் கொழிப்பைக் குவித்துள்ள ஒரு புதிய மேற்தட்டுப் பிரிவு எழுச்சி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள மக்களை பொறுத்தவரையில் சமுதாயம் என்பது, உலகளவில் தொழிலாள வர்க்கத்தினை சுரண்டுவதன் மீது இருந்த தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றதுடன், மேலும் மேலும் வறியதாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி சலுகை பெற்ற அடுக்குகள் மாபெரும் செல்வக்கொழிப்பு உடையதாக வளர்ந்துள்ளது ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் மற்றும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுதல் ஆகியவற்றிற்கு ஒரு சமூக தளத்தை தோற்றுவித்துள்ளது. அரசாங்கத்தின் நிர்வாகத்துறையானது "குடிமக்களுடைய உயிர்களை காத்தல்" எனக் கூறிக்கொண்டு அமெரிக்க அரசியல் அமைப்பில் பொதிந்துள்ள "மாற்றப்படமுடியாத உரிமைகளை", அகற்றுவதை நியாயப்படுத்துவதற்கு விழையும் நன்கு அறியப்பட்டுள்ள அரசியல் மற்றும் சட்ட வர்ணனையாளர்களிடமிருந்து பல பகுதிகளை நோர்த் மேற்கோளிட்டு விவரித்தார். இவற்றுள் ஒன்று கூட்டரசின் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Richard Posner உடையது ஆகும்; இவர் அமெரிக்க அரசியல் அரசியலமைப்பை பற்றி, ஒரு புத்தகத்தில் "ஒரு பழைய ஆவணம்" என்று குறிப்பிட்டதுடன், "விசாரணை முறையில் பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணையின் வழமைக்குமாறான முறை" என்று சித்திரவதையை நியாயப்படுத்தும் வகையில் குறிப்பிடுகிறார். நீதிபதிகள் உயர்த்திப் பிடிப்பதாய் உறுதியேற்கும் அரசியலமைப்புதான் அமெரிக்க தேசத்தின் அடிப்படையை அமைக்கிறது என்று நோர்த் சுட்டிக் காட்டினார். அரசியலமைப்பை Posner பழைய ஆவணம் என உதறித்தள்ளியதை, தெற்கு மாநிலங்களின் எழுச்சியை எதிர்கொண்ட நிலையிலும், தெற்கில் அடிமை முறையை அகற்றுவதற்கு அரசியலமைப்பு அஸ்திவாரங்களை பயன்படுத்துவதில் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனுடைய வலியுறுத்தலுடன் வேறுபடுத்தி நோர்த் காட்டினார். "ஒரு முழு சமூக அடுக்கின் மற்றும் அமெரிக்கவின் உலக அந்தஸ்தில் மற்றும் அதன் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த மாறுதல்களில் ஆழமான வேர்களை கொண்டுள்ள ஒன்றின் அரசியல் மற்றும் அறநெறிச் சிதைவின் வெளிப்பாட்டை இங்கு இப்பொழுது நாம் காண்கிறோம். "அரசாங்கத்தின் நடவடிக்கைகள், கவனத்துடனும் தர்க்கரீதியாவும் சிந்திக்கப்பட்டால், அமெரிக்க அரசின் முழு அஸ்திவாரத்தையும் மறுதலிப்பதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவை வெடிப்புத்தன்மை உடைய நிகழ்வுகளை செயலாற்ற முற்படும். வெகுஜன மக்களுக்கும் சமூக வர்க்கங்களுக்கும் இடையே உள்ள உறவுகளின் வெளிப்பாடுகள்தான் மிகப்பெரிய சட்ட, அரசியலமைப்பு பிரச்சினைகள் ஆகும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் தான் அமர்ந்திருக்கும் கிளைகளின் தொடக்கத்தையே வெட்டிக்கொண்டு வருகிறது. தன்னுடைய வரலாற்று, அரசியல், அறநெறிமுறைத் தன்மையின் அஸ்திவாரங்களையே அது தகர்த்து வருகிறது." ஆளும் உயரடுக்கு ஒரு புரட்சிகர நெருக்கடியை இயங்க வைத்துள்ளது. "அமெரிக்க மற்றும் உலக வரலாற்றில் புரட்சிக்கு முன்பு இருந்த காலம்தான்" இப்பொழுது உருவாகியுள்ளது. இது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் முன்னே வரலாற்று சந்தர்ப்பங்களையும் மற்றும் பொறுப்புக்களையும் முன்வைத்துள்ளது. |