World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

WSWS interviews: Sri Lankan soldiers oppose return to war

மீண்டும் யுத்தத்திற்கு திரும்புவதை எதிர்க்கும் இலங்கை படையினரை உ.சோ.வ.த. பேட்டி கண்டது

By our correspondents
20 October 2006

Back to screen version

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில், இராணுவம் மிகப்பெரும் ஆள் சேர்ப்பு பிரச்சாரத்தை பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் வெளிப்படையான இனவாத அழைப்பை விடுக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக "சிங்களத் தாய் நாட்டை" காப்பது வீரர்களின் கடமை என அது பிரகடனம் செய்கிறது.

ஆள் சேர்க்கும் இலக்கு நிறைவேறவில்லை. இராணுவத்திற்குள்ளேயே திருப்தியின்மை மற்றும் யுத்தக் களைப்பு காணப்படுவதாக செய்திகள் கசிந்துள்ளன. கடந்த நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, முழு யுத்த நடவடிக்கையாக விரிவடைந்து வரும் மோதல்களில் நூற்றுக்கணக்கான படையினரும் இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

மிகப் பெரும்பான்மையான படை சிப்பாய்கள் கிராமப்புற பிரதேசங்களில் உள்ள வறிய சிங்களக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாவர். பெரும்பாலானவர்களுக்கு தம்மையும் தமது குடும்பத்தையும் கொண்டு நடத்த இராணுவத்தில் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை. சுருக்கமாக கூறின், அவர்கள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களால் இனவாத யுத்தத்தின் பீரங்கிகளுக்கு இரையாகி வருவதோடு, பொருளாதாரத்திற்காக படையில் சேர்ந்தவர்களாவர்.

அரசாங்கத்தின் இடைவிடாத இனவாத ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும், யுத்தத்திற்கு பரந்த எதிர்ப்புக் காணப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு தசாப்தங்களாக நீடித்த யுத்தம் 65,000 உயிர்களைப் பலிகொண்டுள்ளது. குறிப்பிடத் தக்கவகையில், பலர் அரசாங்கத்தை மட்டுமன்றி, பகிரங்கமாக யுத்தத்திற்கு வக்காலத்து வாங்கி தனது கிராமப்புற ஆதரவாளர்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ள சிங்களத் தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியையும் (ஜே.வி.பி.) குற்றஞ்சாட்டுகின்றனர்.

இராணுவக் கன்னைகளுக்குள் அதிருப்தியையிட்டு விழிப்பாக இருக்கும் அரசாங்கமும் பாதுகாப்பு அதிகாரிகளும் தணிக்கைகளை இறுக்கியுள்ளதோடு உளவலிமையை கீழறுக்க வேண்டாம் என திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளன. அரசாங்கப் பிரச்சாரத்தில் புகழப்படும் "வீரர்கள்" பத்திரிகைகளுடன் வெளிப்படையாக பேச அனுமதிக்கப்படவில்லை. கடந்த இரண்டு தசாப்த கால யுத்தத்தில் 40,000 படையினர் இராணுவத்தை விட்டு ஓடியுள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளம் (உ.சோ.வ.த.) அண்மையில் இரண்டு படை சிப்பாய்களுடன் பேசியது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடமையில் இருக்கும் இவர்கள் விடுமுறைக்காக வீடு வந்திருந்தனர். அவர்களது தனிப்பட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.

***

முதலாவது சிப்பாய் புதைச் சேற்று நிலத்திற்கு அருகில் ஒரு குடிசை வீட்டில் வாழ்கின்றார். அவரது வீடு 24 சதுர மீட்டர்கள் மட்டுமே. வீட்டுக்குப் பின்னால் சமயலறையாக ஒரு கூடாரம் பயன்படுத்தப்படுகிறது. நிலம் செங்கற்களால் அமைக்கப்பட்டிருந்தாலும் சீமந்து பூசப்படாததால் ஈரமாக இருந்தது. கட்டி முடிக்கப்படாத வீடு ஒன்றும் அருகில் இருந்தது. அவரது அப்பாவுக்கு சொந்தமான இந்த புதைச்சேற்று நிலம் சுமார் 650 சதுர மீட்டர்கள் இருக்கும்.

இந்த சிப்பாய் மூன்று சகோதரர்களில் மூத்தவராவார். அவரது இரண்டாவது சகோதரர் உயர் மட்ட பாடசாலையில் உயர் தரக் கல்வியை முடித்திருந்தாலும், அவருக்கு நிரந்தரத் தொழில் கிடையாது. அவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து தனது குடும்பத்திற்கு உதவுகின்றார். கடைசி சகோதரர் இன்னமும் பாடசாலை செல்கின்றார்.

அந்த சிப்பாய் விளக்கியதாவது: "நான் எனது பாடசாலை காலத்தில் இருந்து ஒரு உள்ளூர் இசைக் குழுவில் பாடகனாக இருந்தேன். நான் இசையை விரும்பிய போதிலும் அதைக் கைவிட்டு இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்டேன்.

"எங்களுது குடும்பத்திற்கு வாழ்வதற்கு பொருத்தமான இடம் கிடையாது. எனவே நான் ஒரு புதிய வீட்டைக் கட்டத் தொடங்கினேன். நான் எனது அடுத்த விடுமுறை காலத்தில் கூரை போடும் வேலையை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன். நாங்கள் யுத்த நடவடிக்கை கடமையில் இருக்கும் போது எங்களுக்கு 2,000 ரூபாவும் (20 அமெரிக்க டொலர்கள்) சில கொடுப்பனவுகளும் மேலதிகமாக கிடைக்கும்."

தனது யுத்தக் கள அனுபவங்களைப் பற்றி பேசிய அவர்: "நாங்கள் ஒரு இராணுவ நடவடிக்கையின் போது ஒரு கமாண்டோ குழுவை பின் தொடர்வோம். எனது குழுவில் இருந்த எட்டு பேரில் ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் இருக்கும் கமாண்டோ குழுவில் ஏழு பேர் மட்டுமே உயிர் தப்பினர். நானும் சிறிதளவு காயமடைந்துள்ளேன்.

"நாங்கள் முன்னரங்க காவலிலும் இருப்போம். ஒரு பங்கரில் மூன்று அல்லது நான்கு பேர் இருப்போம். பங்கருக்கு உணவு அனுப்பப்படும். நாங்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கு கடமையில் இருப்போம். ஆனால் தொடர்ச்சியான பதற்ற நிலைமையின் காரணமாக எங்களால் பங்கரில் ஓய்வு எடுக்க முடியாது. இதனால் நாங்கள் எமது கிராமங்களுக்குத் திரும்புவதில் நிச்சயமில்லாத நிலை பற்றி சிந்திக்கத் தள்ளப்படுவோம்".

"இந்த யுத்தம் பயனற்றது. இது தேவையற்றது. இந்த யுத்தத்தால் எமக்கு கிடைப்பது சாவும் ஊனமும்தான். ஆனால் இப்போது எங்களால் இதில் இருந்து தப்ப முடியாது. நான் பங்கரில் கடமையில் இருக்கும் போது என்னால் பனை மரங்களையும் செடிகளையும் மட்டுமே காண முடியும். இந்த வெற்று நிலங்களைக் கைப்பற்றுவதற்காக ஏன் இத்தகைய கடுமையான யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என நான் வியப்படைவேன். பின்னர் நான் மாயையில் இருந்து விடுபட்டேன்" என்றார்

தனது சக சிப்பாய்கள் பற்றி பேசும் போது அவர் தெரிவித்ததாவது: "என்னைப் போல் சிலர் யுத்தத்தால் குழப்பமடைந்துள்ளனர். சிலர் சொல்வார்கள் இந்த யுத்தத்தில் போராட வேண்டும் என்று. பெரும்பாலான சிப்பாய்கள் தமது சிந்தனைகளை மனத்துக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். மிகப் பெரும்பாலானவர்கள் என்னைப் போன்ற ஏழைகள். பெரும்பான்மையானவர்கள் அனுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற வறுமை பிடிகொண்ட விவசாய கிராமங்களில் இருந்து வந்தவர்கள்.

நாள் கூலி வேலையில் மட்டும் பிழைக்கும் அவரது அப்பா கூறியதாவது: "பாருங்கள் மீண்டும் யுத்தம் வெடித்துள்ளது. எனது மகன் யுத்தத்தில் சண்டை பிடிக்கிறார். நான் பீதியில் வாடுகிறேன். என்னால் என்ன செய்ய முடியும்? எனது மகன் காயமடைந்துவிட்டதாக பொலிசார் செய்தி தெரிவித்த போது நான் அவரைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன்.

"இது எமது யுத்தம் இல்லை. இந்த யுத்தம் அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. பருவகாலம் அல்லாத காலத்தில் நாங்கள் மீன் பிடிப்பதற்காக வடக்குக்கு அல்லது கிழக்குக்கு செல்வது வழக்கம். அந்த நாட்களில் நாங்கள் தமிழ் மீனவர்களுடன் சகோதரர்கள் போல் நெருக்கமாக இருந்தோம்." அவரது மகன் அதை உறுதிப்படுத்தும் வகையில் தலையசைத்தார்.

"இந்த அழிவுக்கான பொறுப்பாளிகள் பிரதான கட்சிகளின் அரசியல்வாதிகள் மட்டுமன்றி ஜே.வி.பி. யினரும் தான். 1989ல் எனது சகோதரர் மாகாண சபை தேர்தல்களில் வாக்களித்த காரணத்திற்காக, ஜே.வி.பி.காரர்கள் அவரது கழுத்தில் ஒரு அடையாளத்தை மாட்டி கிராமத்து கடைத் தெருவில் நிற்கவைத்தனர். ஜே.வி.பி.யின் கட்டளைகளை மீறினால் கொல்லப்படுவதாக அவர் அச்சுறுத்தப்பட்டார்" என்று அவர் தெரிவித்தார்.

***

இரண்டாவது சிப்பாய் உ.சோ.வ.த. வுக்கு கூறியதாவது: "எனக்கு உண்மையில் இராணுவத்தைப் பற்றிய அறிவு இருக்கவில்லை. எனக்குத் தெரிந்திருந்தால் நான் அதில் இணைந்திருக்க மாட்டேன். பாடசாலையைவிட்டு விலகிய பின்னர் நான் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுவந்தேன். ஆரம்பத்தில் சில நாட்களுக்கு கடலில் எல்லோருக்கும் வாந்தி வரும். ஆனால் எனக்கு அது தொடர்ந்தது. ஆகவே வேறு வேலையில்லாத பட்சத்தில் நான் இராணுவத்தில் சேர்ந்தேன்.

"சந்திரிகா (குமாரதுங்க) ஆட்சியில் இருந்த போதே யுத்தம் தீவிரமடைந்தது. நாங்கள் சிப்பாய்களின் அடையாளந்தெரியாத உடல்களையும் உடற் பாகங்களையும் புதைக்க கட்டளையிடப்பட்டோம். அந்த சம்பவத்தின் பின்னர் நான் ஒரு முறை விடுமுறை பெற்றபின் திரும்பி கடமைக்குச் செல்லவில்லை. நான் இராணுவத்தை விட்டோடி மூன்று வருடங்களின் பின்னர் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றேன்.

"ஆனால் யுத்தம் மீண்டும் தொடங்கியவுடன் தப்பியோடியதற்காக கைதுசெய்யப்படக் கூடும் என நான் பயந்தேன். தூக்கத்தில் பயந்து எழும்பியுள்ளேன். ஒரு முறை இரவில் ஒரு வாகனம் செல்லும் சத்தத்தைக் கேட்டு நான் வீட்டுக்கு வெளியில் சென்று ஓடிவிட்டேன். இந்த உளவியல் சித்திரவதையை தவிர்ப்பதற்காக ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் மீண்டும் சேர்ந்துகொண்டேன். படை சிப்பாய்களால் (சட்டப்பூர்வமாக) சில நிபந்தனைகளின் கீழ் (இராணுவச் செலவுகளை திருப்பிக் கொடுப்பதன் மூலம்) இராணுவத்தை விட்டு விலக முடியும். ஆனால் நாங்கள் வறியவர்கள் என்பதால் எங்களிடம் அந்தளவு பெருந்தொகையான பணம் கிடையாது."

தனது சக சிப்பாய்கள் பற்றி அவர் தெரிவித்ததாவது: "அவர்களில் பெரும்பாலானவர்கள் வறிய விவசாயிகளின் பிள்ளைகள். அவர்களது பிரதேசங்களில் தொழில் இல்லாமையினாலேயே அவர்கள் இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். அவர்கள் மணம் முடித்த மற்றும் மணம் முடிக்காத இளைஞர்கள். அவர்கள் கடுமையான பொருளாதாரப் பிரச்சினையின் காணமாக வீட்டைக் கட்டுவதற்கு அல்லது அன்றாட செலவுக்காக குடும்பத்திற்கு உதவும் எதிர்பார்ப்பில் உள்ளவர்கள்.

"நானும் அவர்களில் ஒருவர் தான். எனது பழைய வீடு இடிந்து விழுந்துவிட்டது. எனக்கு இரு மகள்கள் உள்ளனர். எனது விடுமுறைக் காலத்தின் போது ஒரு புதிய வீட்டைக் கட்டத் தொடங்கினேன். ஆனால் என்னால் தென்னை ஓலைகள் மூலம் கூரையை மட்டுமே போட முடிந்தது. எனது அடுத்த விடுமுறையின்போது சுவர்களைக் கட்டி முடிக்க எதிர்பார்க்கின்றேன்.

இராணுவ வாழ்க்கையை தெளிவுபடுத்திய அவர் தெரிவித்ததாவது: "எமது உட்பிரிவின் வேலை ஒரு பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றிய பின் அதைப் பேணுவதாகும். நாங்கள் இரண்டு மணித்தியாளங்களுக்கு ரோந்து செல்வோம், ஏனைய பணிகளை நான்கு மணித்தியாலங்களாக செய்வோம், பின்னர் இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்கு ரோந்து செல்வோம். விடுமுறை பெற்ற பின் சில சிப்பாய்கள் மீண்டும் கடமைக்கு வரமாட்டார்கள். இதன் காரணமாக எங்களுக்கு வேலை சுமை கூடியது. நாங்கள் அவர்களது வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டும். இந்த முறை நான் நான்கரை மாதங்களாக தூரத்தில் இருந்தேன்.

"எங்களைப் போன்ற சாதாரண சிப்பாய்களுக்கு வழங்கப்படும் உணவு வறியதாகும். எங்களது அதிகாரிகளுக்கு நல்ல உணவு கிடைக்கும். அவர்களால் விடுதியில் குடிவகைகள் வாங்க முடியும். ஆனால் எங்களுக்கு ஒன்றும் கிடையாது. உயர்மட்ட அதிகாரி தனக்கு அடுத்து உள்ளவரை தன்னதிகாரத்திற்கு உட்படுத்துவார். இந்த தன்னதிகாரத்திற்கு உட்படுத்தும் செயல் படிப்படியாக சாதாரண சிப்பாய்வரையும் உள்ளது. சிப்பாய்களுக்கு மத்தியிலும் சிரேஷ்ட படை சிப்பாய்கள் கனிஷ்ட படை சிப்பாய்களை தன்னதிகாரத்திற்கு உட்படுத்துவார்கள். இராணுவத்தில் உள்ள முறை இதுவே. ஒரு அதிகாரியுடனான எந்தவொரு வாக்குவாதமும் தண்டனைக்குரிய குற்றமாகும்."

அண்மைய தாக்குதல் ஒன்றைப் பற்றி பேசிய அவர் குறிப்பிட்டதாவது: "இந்த முறை அதிகளவிலானவர்கள் உயிரிழந்தனர். புலிகள் கண்ணி வெடிகளை கிரனேட்டுகளுடன் இணைத்து புதைத்து வைத்திருந்தனர். ஆகவே ஒரே முறையில் 100 கண்ணி வெடிகள் வெடிக்கும். இராணுவத்தின் பல்குழல் ரொக்கட்டுகளும் கடுமையான ஆட்டிலறித் தாக்குதல்களும் மக்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கும்.

"நாங்கள் (இராணுவத்தால்) எந்தவொரு தமிழ் நபரையும் புலியாகப் பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். சாதாரண தமிழ் மக்கள் எங்களைப் போன்றவர்கள் அல்ல. நான் யுத்தம் வேண்டாம் என்கிறேன். யுத்தம் சாதாரண மக்களுக்கும் சிப்பாய்களுக்கும் சாவையும் நிரந்தர முடத்தையும் மட்டுமே கொண்டுவரும். இந்த யுத்தம் தேவையற்றது'' என்று அவர் குறிப்பிட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved