World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Desperate manoeuvres give Sri Lankan government a thin majority

அவநம்பிக்கையான சூழ்ச்சித் திறன்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு மெல்லிய பெரும்பான்மையை வழங்குகின்றன

By K Ratnayake
1 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் இரண்டு டசின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டனர். மேலெழுந்தவாரியாக, அரசாங்கத்தின் கைகளைப் பலப்படுத்தியுள்ள இந்த நகர்வு, முதல் முறையாக அதற்கு சற்றே ஒரு பெரும்பான்மையை வழங்கியுள்ளது. யதார்த்தத்தில், இராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இழிபுகழ்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை உக்கிரமாக்குகின்ற நிலையில், அளவுகடந்த கூட்டணிகளும் பிரமாண்டமான அமைச்சரவையும் ஆழமான அரசியல் நெருக்கடியின் அறிகுறிகளாகும்.

திரைக்குப் பின்னால் வாரக்கணக்காக நடந்த பேரம்பேசல்களின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க) இருந்து 18 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து (ஸ்ரீ.ல.மு.கா) 6 உறுப்பினர்களும் கட்சி மாறினர். ஐ.தே.க. வின் 18 உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் அமைச்சரவை அமைச்சர்களாகவும் ஏனையவர்கள் அமைச்சரவை சாராத அமைச்சர்களாகவும் மற்றும் பிரதி அமைச்சர்களாகவும் உள்ளனர். ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவுஃப் ஹக்கீமுக்கு அமைச்சரைவை பதவி ஒன்றும் ஏனைய ஸ்ரீ.ல.மு.கா. உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டணி அரசாங்கம் இப்போது 225 ஆசனங்கள் கொண்ட நாட்டின் பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பெரும்பான்மையாக ஒரே ஒரு உறுப்பினரே உள்ளார். பதவியில் இருப்பவர்களுக்கு மேலதிக வருமானங்களும் சிறப்புரிமைகளும் இந்தக் கூட்டணியை ஒன்று சேர்த்து வைத்திருக்கும் இன்றியமையாத பசையாக உள்ளன. ஞாயிரன்று அமைச்சரவை மாற்றங்களை மேற்கொண்ட பின்னர், ஆசியாவிலேயே பிரமாண்டமான அமைச்சரவைக்கு இராஜபக்ஷ தலைமை வகித்தார் --104 அரசாங்க உறுப்பினர்களும் பதவிகளைக் கொண்டுள்ளனர். இவர்களில் 52 பேர் அமைச்சரவை அமைச்சர்களும், 33 பேர் அமைச்சரவை சாராத அமைச்சர்களும் மற்றும் 19 பேர் பிரதி அமைச்சர்களுமாவர்.

2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷ ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றபோது, அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) 58 ஆசனங்களைக் கொண்டிருந்தது. ஸ்ரீ.ல.சு.க. யின் "பொதுஜன ஐக்கிய முன்னணி", ஏனைய ஐந்து கட்சிகளுடன் சேர்ந்து, பெரும்பான்மைக்கு முற்றிலும் போதாத நிலையில் மொத்தமாக 88 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. பாராளுமன்றத்தில் தோல்வியைத் தவிர்ப்பதன் பேரில், இராஜபக்ஷ தான் தேர்தல் உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டுக் கொண்ட இரு சிங்களத் தீவிரவாதக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணியினதும் (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினதும் ஆதரவில் தங்கியிருந்தார்.

ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான இராஜபக்ஷவின் உடன்படிக்கையின் கீழ், அரசாங்கம் புலிகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. பல மாதங்களாக, இராணுவம் தமிழ் மக்களை அச்சுறுத்துவதையும் புலிகளை ஆத்திரமூட்டுவதையும் இலக்காகக் கொண்டு துணைப் படைக் குழுக்களுடன் சேர்ந்து ஒரு இழிந்த படுகொலை யுத்தத்தை முன்னெடுத்தது. ஜூலையில், இராஜபக்ஷ 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறி தாக்குதலை நடத்துமாறு இராணுவத்திற்கு கட்டளையிட்டார். இராணுவம் கிழக்கில் மாவிலாறு, சம்பூர் மற்றும் மிகவும் அண்மையில் வாகரை பிரதேசங்களையும் கைப்பற்றிக்கொண்டது.

அதே சமயம், யுத்தத்திற்கும் மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிந்து வருவதற்கும் எதிராக வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன விரோதத்திற்கும் முகங்கொடுக்கும் இராஜபக்ஷ, அரசாங்கத்தின் பாராளுமன்ற நிலையை பெருக்கச் செய்வதில் மூர்க்கமாக முயற்சித்து வருகின்றார். கடந்த ஆகஸ்ட்டில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் (இ.தொ.கா.) மலையக மக்கள் முன்னணியையும் (ம.ம.மு.) இராஜபக்ஷ அரசாங்கத்திற்குள் இழுத்துக்கொண்டார். தொழிற்சங்கங்களான இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. வும் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவுடன் அரசியல் கட்சிகளாகவும் இயங்குகின்றன.

இந்த புதிய "கட்சி தாவல்" அரசாங்கத்திற்கு ஒரு மெல்லிய பெரும்பான்மையை கொடுத்திருந்த போதும், மூன்று மாதங்களுக்கு முன்னர் அக்டோபர் 23ம் திகதி ஸ்ரீ.ல.சு.க. வுக்கும் ஐ.தே.க. வுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை விளைபயனுள்ள வகையில் நீர்த்துப்போயுள்ளது. உத்தியோகபூர்வ அரசியல் கூட்டணியாக இல்லாத அதே வேளை, நீண்டகால எதிரிகளான நாட்டின் இரு பிரதான முதலாளித்துவக் கட்சிகளும் முதல் தடவையாக யுத்தம் உட்பட ஒரு தொகை விவகாரங்களில் கூட்டாக செயற்பட உடன்பட்டிருந்தன. ஐ.தே.க இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வாக்குறுதியளித்த அதே வேளை, பிரதான பிரச்சினைகளில் ஐ.தே.க. தலைவர்களின் ஆலோசனைகளையும் பெறுவதாக இராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார்.

ஐ.தே.க-ஸ்ரீ.ல.சு.க. உடன்படிக்கையை, சமாதானப் பேச்சுக்களை புதுப்பிக்க வழியமைக்கும் ஒரு பிரதான தடையகற்றும் நடவடிக்கையாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட வெளிநாட்டு சக்திகளும் ஊடகங்களும் மற்றும் வர்த்தகத் தலைவர்களும் பாராட்டினர். ஒரு பொதுக் கூட்டணியை அமைப்பதன் மூலம், ஒட்டு மொத்த யுத்தத்தை கோரும் ஜே.வி.பி. யை ஓரங்கட்டி, நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்ட புலிகளுடன் ஒரு உடன்பாட்டை அடைய அரசாங்கத்தால் முடியும், என அந்த விவாதங்கள் தெரிவித்தன. இந்த இரு கட்சிகளுக்கிடையாலான கொடுக்கல் வாங்கலே யுத்தத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருப்பதற்கான அடையாளமாக உள்ளது.

உண்மையில், யுத்தம் தொடர்ந்தும் உக்கிரமடைந்து கொண்டிருக்கின்றது. விலை உயர்வு மற்றும் பரந்து விரிவடைந்துள்ள வறுமை தொடர்பாக ஆழமடைந்துவரும் சமூக அமைதியின்மைக்கு இராஜபக்ஷ, இனவாத பிளவுகளை கிளறுவதன் மூலமும் யுத்த மனநிலையை தூண்டுவதன் மூலமுமே பதிலளிக்கின்றார். அவரது அரசாங்கம், விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைக்க அனுமதியளிக்கும் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் பலப்படுத்தப்பட்ட புதிய விதிகள் உட்பட ஒரு தொகை ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளது. ஸ்ரீ.ல.சு.க. வைப் போலவே தமிழர் விரோத பேரினவாதத்தில் மூழ்கிப்போயுள்ள ஐ.தே.க, அரசாங்கத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக அதன் கொள்கைகளுக்கு மெளனமாக ஆதரவளித்து வருகின்றது.

"கட்சி தாவல்கள்" மூலம் தனது அரசாங்கத்தை "ஸ்திரப்படுத்திக்கொண்டுள்ள" இராஜபக்ஷ, யுத்தத்தை மேலும் உக்கிரப்படுத்துவார். ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்ஷ, வெள்ளியன்று ராய்ட்டருக்குத் தெரிவித்ததாவது: "வடக்கில், கிழக்கில் அல்லது தெற்கில், எங்கிருந்தாலும் சரி அவர்களது (புலிகளது) சொத்துக்களை நிச்சயமாக நாம் அழிக்க வேண்டும்... அவர்கள் கடற்புலி தளங்களை நீண்டகாலம் கொண்டிருப்பதாலும், அவர்கள் நீண்ட காலமாக ஆட்டிலறி தளங்களைக் கொண்டிருப்பதாலும்... பயங்கரவாதிகள் எப்பொழுதும் சாத்தியமான இடங்களை சேதமாக்கவே சிந்தித்துக் கொண்டிருப்பதாலும் எல்லா இடங்களிலும் அவர்களது சொத்துக்களை அழிக்க வேண்டும்."

இதே போன்ற ஒரு உரையை திங்களன்று இலங்கைக்கு நிதி வழங்கும் மாநாட்டில் ஆற்றிய ஜனாதிபதி இராஜபக்ஷ, "பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் எமது இலக்கானது பயங்கரவாதத்திற்கு இரையாகியுள்ள மக்களை விடுதலை செய்வதேயாகும்," என்றார். புலிகளை "பயங்கரவாதிகள்" என மீண்டும் மீண்டும் கண்டனம் செய்வதானது, ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரபட்சங்களில் தங்கியுள்ள யுத்தத்தின் மூலாதாரங்களை இருட்டடிப்புச் செய்வதாகும். சமாதானத்திற்காக ஊக்கமளித்த அதே வேளை, மாநாட்டில் இருந்த எவரும் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை தெளிவாக மீறியதையிட்டு இராஜபக்ஷவையோ அல்லது அவரது அரசாங்கத்தையோ சவால் செய்யவில்லை.

உண்மையில், இலங்கை அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புக்கு அமெரிக்க தனது ஆதரவை சுட்டிக்காட்டியுள்ளது. "சமாதானத்தின்" தேவையைப் பற்றி வாயளவில் சேவை செய்யும் அமெரிக்கத் தூதர் ரொபர்ட் பிளேக்: "நாம் புலிகளுக்கு நிதியளிப்பதையும் ஆயுதம் வழங்குவதையும் தடுக்க உதவுவதன் மூலமும், சட்ட அமுலாக்கள் உதவிகளை வழங்குவதன் மூலமும், மற்றும் தன்னைக் காத்துக்கொள்ள இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்குவதன் மூலமும் பயங்கரவாதத்துடன் மோதுவதற்கு இலங்கைக்கு உதவுவதில் நாம் பலமான ஆதரவாளர்களாக இருக்கிறோம்," என பிரகடனம் செய்தார்.

இந்தக் "கட்சி தாவல்கள்" ஐ.தே.க. வை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஐ.தே.க. உறுப்பினர்களை கவர்ந்துகொள்வதற்கு எதிராக ஸ்ரீ.ல.சு.க. யை இதற்கு முன்னர் எச்சரித்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அது இரு கட்சிகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை ஆபத்திற்குள்ளாக்கும் என்றார். ஞாயிரன்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து இந்த உடன்படிக்கையின் பிரதியொன்றை கட்சியின் தலைவர் ருக்மன் சேனநாயக்க கிழித்தெறிந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இராஜபக்ஷ இழந்துவிட்டதாக புலம்பியதோடு, சாத்தியமாயின் ஜே.வி.பி. யுடன் சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை ஐ.தே.க. முன்னெடுக்கவுள்ளதாகவும் குறித்துக்காட்டினார்.

ஐ.தே.க. உறுப்பினர்களை அமைச்சரவை மட்டத்தில் ஏற்றுக்கொண்டமைக்காக இராஜபக்ஷவை விமர்சித்த ஜே.வி.பி.யும், அரசாங்கத்திற்கு அது வழங்கும் ஆதரவும் ஆபத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியது. புலிகளுடன் 2002ல் யுத்த நிறுத்தத்தை கைச்சாத்திட்டதன் மூலம் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக மீண்டும் மீண்டும் ஐ.தே.க. வை குற்றஞ்சாட்டும் ஜே.வி.பி., அதை கசப்புடன் எதிர்க்கின்றது. "கட்சி தாவியவர்களில்" சாமாதானப் பேச்சுக்களுக்கு ஆதரவளித்த ஜி.எல். பீரிஸ், மிலிந்த மொரகொட, ராஜித சேனாரட்ன ஆகிய மூவரும் "நாட்டின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டதாக" ஜே.வி.பி. யின் தலைவர்களில் ஒருவரான அனுரா குமார திஸாநாயக்க குறிப்பாக கண்டனம் செய்தார்.

ஐ.தே.க. வுடன் உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக, இராஜபக்ஷ ஜே.வி.பி. யுடன் ஒரு உத்தியோகபூர்வ கூட்டணியை அமைத்துக்கொள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். ஆயினும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பிரகடனம் செய்வதற்கு சமமான 20 அம்சக் கோரிக்கைகளை ஜே.வி.பி. முன்வைத்ததை அடுத்து எந்தவொரு உடன்பாட்டையும் காண முடியாமல் போனது. இராஜபக்ஷ, சமாதானத்திற்கான மனிதனாக காட்டிக்கொண்டு புலிகளை வலியத் தாக்குபவர்களாக சித்தரிப்பதன் மூலம் வெகுஜன ஆதரவையும் சர்வதேச ஆதரைவையும் பெறுவதன் பேரில் சூழ்ச்சித் திறன்களை பேணிக்காக்க விரும்பினார். திங்களன்று ஜே.வி.பி. வெளியிட்ட அரசியல் குழு அறிக்கை ஒன்றில், அது "மக்கள் ஆணையை --அதாவது இராஜபக்ஷவின் 2005 தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடங்கியுள்ள யுத்த வேலைத்திட்டம்-- கரைத்துவிடும் முயற்சிகளை தோற்கடிக்க" ஒரு பேரினவாத பிரச்சாரத்தை முன்குறித்துக் காட்டியது.

ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்கான அரசாங்கத்தின் அண்மைய சூழ்ச்சித்திறன்கள், பிரதான கட்சிகளின் சீரழியும் பண்பைக் கோடிட்டுக் காட்டுகிறது. வெகுஜனங்களின் ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடிகளைத் தீர்க்க முற்றிலும் இலாயக்கற்றுள்ள இவர்கள் அனைவரும், உழைக்கும் மக்களை இன ரீதியில் பிளவுபடுத்துவதற்காக பேரினவாதத்தை கிளறுவதையே நாடுகின்றனர். இதனால் நாட்டின் காட்டுமிராண்டித்தனமான உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வு கிடையாது. முழு அரசியல் ஸ்தாபனமும் பரந்தளவில் தனிமைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஸ்ரீ.ல.சு.க. அல்லது ஐ.தே.க. எந்தவொரு குறிப்பிடத்தக்க ஆதரவிலும் செல்வாக்கு செலுத்தவில்லை. இரு கட்சிகளும் உட்பூசல் மோதல்களில் பிளவுபட்டிருப்பதோடு, ஏதாவது கிடைக்கும் வழிமுறையில் ஆட்சியைப் பெற்றுக்கொள்ளவதிலும் அதில் தொங்கிக்கொண்டிருப்பதிலும் தம்மை மறந்த நிலையில் உள்ளன.

தனது பிற்போக்கு கொள்கைகளுக்கு வெகுஜன ஆதரவை வெற்றிகொள்ள முடியாத இராஜபக்ஷ, இப்போது ஒரே ஒரு ஆசனத்தில் பெரும்பான்மையைப் பெற்று, பாராளுமன்ற பெரும்பான்மையை ஸ்தாபிப்பதற்காக குறிப்பிடத்தக்களவு உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து மயங்க வைப்பதில் சமாளித்துக் கொண்டுள்ளார். மோதிக்கொள்ளும் மற்றும் முரண்பாடான நலன்களால் பிளவுண்டுள்ள முழு அரசியல் மாளிகையும், தாமதமின்றி விரைவில், இயல்பாகவே ஸ்திரமற்று தவிர்க்கமுடியாமல் நொருங்கிப் போகும். எவ்வாறெனினும், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, ஒரு முற்போக்கான மாற்றீட்டைக் கட்டியெழுப்புவதாகும். ஆளும் தட்டின் அனைத்துக் கட்சிகளிலும் இருந்து முழுமையாக உடைத்துக்கொண்டு, யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டும் சோசலிச அனைத்துலகவாத அடிப்படையிலான ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே தற்போதைய தேவையாகும்.