:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan Independence Day: a celebration
of war and militarism
இலங்கை சுதந்திர தினம்: யுத்தம் மற்றும் இராணுவவாதத்தின்
கொண்டாட்டம்
By K. Ratnayake
9 February 2007
Back to screen version
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தனது அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
எதிரான முற்றிலும் மதிப்பிழந்த உள்நாட்டு யுத்தத்தை உக்கிரப்படுத்த எண்ணுகிறது என்பதை தெளிவுபடுத்துவதற்காக, பெப்பிரவரி
4 அன்று நாட்டின் சுதந்திரத் தினத்தைக் குறிக்கும் வருடாந்த கொண்டாட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் "சமாதானத்தின்"
தேவைக்கு வாயளவில் சேவையாற்றும் அதே வேளை, "தமிழர்களின் விடுதலையை" முன்னெடுக்கும் தனது எண்ணத்தை
பிரகடனம் செய்தார் --வேறு வார்த்தைகளில் சொன்னால் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சகல பிராந்தியங்களையும்
கைப்பற்றுவதாகும்.
தீவிரப் பதட்ட நிலையைக் கொண்டிருந்த சுதந்திர தின நிகழ்வுகளின் சூழ்நிலை, நாடு பூராவும்
உள்ள நிலைமையை பிரதிபலித்தது. கொழும்பில் பிரதான இராணுவ தலைமையகத்திற்கு வெளியில் காலிமுகத் திடலிலேயே
இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. பாதைகளை இறுக்கி அடைக்க நூற்றுக்கணக்கான மேலதிக இராணுவ சிப்பாய்கள் கொட்டப்பட்டு
பாதுகாப்பு ஒழுங்குகள் பலப்படுத்தப்பட்டமை, ஒரு பீதி மனநிலையையும் சாத்தியமான புலிகளின் தாக்குதல்கள் சம்பந்தமான
பயத்தையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலங்கைத் தலைநகரம் ஏற்கனவே துருப்புக்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித்
தடைகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு கோட்டையின் தோற்றத்தில் உள்ளது.
பெப்பிரவரி 4ம் திகதிக்கு சற்று முன்னதாக, கொழும்பு நகரிலும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களிலும்
தொடர்ச்சியான இரவு தேடுதல்களில் ஈடுபட்ட பாதுகாப்புப் படைகள் நூற்றுக்கணக்கான தமிழர்களை சுற்றிவளைத்தன.
தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமல் போன அல்லது கொழும்பில் இருப்பதற்கான காரணத்தை ஸ்தாபிக்க
முடியாமல் போன அனைவரும் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் கூடுகளில் அடைக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் இப்போது
தென் மாவட்டமான காலியில் உள்ள பூஸ்ஸ தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இங்கு அவர்களை நாட்டின் கொடூரமான
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் காலவரையறையின்றி தடுத்துவைத்திருக்க முடியும்.
இந்த சுதந்திரத் தின நிகழ்வுகள், இராணுவம் மற்றும் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய
போருக்குரிய தொணியால் செல்வாக்கு செலுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான படையினரை உள்ளடக்கிய நீண்ட அணிவகுப்பில்,
கவச வாகனங்கள், பல்குழல் ஏவுகனைகள் மற்றும் ஆட்டிலறி ஏவிகளும் ஒரு பாகமாக இருந்தன. கடற்படை யுத்தக் கப்பல்கள்
கடற்கரைக்கு அருகில் படைத்துறை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பரந்த
குண்டுத் தாக்குதல்களை நடத்தி பல பொதுமக்களை கொன்றொழித்த ஜெட் விமானங்கள் தலைக்குமேல் பறந்துகொண்டிருந்தன.
இராஜபக்ஷவின் மக்கள்வாத பாசாங்குகள் இருந்த போதிலும், அங்கு பெருந்தொகையான
மக்கள் திரளோ மற்றும் மக்களின் ஆர்வமோ காணப்படவில்லை. மிகத் தீவிரமான பாதுகாப்பு சோதனையின் பின்னர் ஒரு
சிலரே இந்த கொட்டாட்டங்களை காண அனுமதிக்கப்பட்டனர். வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள
யாழ்ப்பாண நகரில், யுத்தத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல கட்டிடங்களில் ஏற்றப்பட்டிருந்த கறுப்புக்
கொடிகளை படையினர் கீழிறக்கிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றதில்
இருந்து இது இராஜபக்ஷவின் இரண்டாவது சுதந்திர தினமாகும். தேர்தல் பிரச்சாரத்தின் போது "சமாதான"
வாக்குறுதியளித்த அவர், விரைவில் நாட்டை உள்நாட்டு யுத்தத்திற்குள் மீண்டும் திருப்பியுள்ளார். பல மாதங்களாக
கொலை மற்றும் ஆத்திரமூட்டல் போன்ற மூடிமறைக்கப்பட்ட இழிந்த யுத்தத்தை முன்னெடுக்க இராணுவத்தையும் அதோடு
சேர்ந்து இயங்கும் துணைப்படைகளையும் அனுமதித்த பின்னர், இராஜபக்ஷ, சிங்கள விவசாயிகளுக்கு தண்ணீர் விநியோகிக்க
மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டைக் கைப்பற்றும் சாக்குப் போக்கில் கடந்த ஜூலை மாதம் வெளிப்படையான இராணுவத்
தாக்குதல்களுக்கு கட்டளையிட்டார்.
இராஜபக்ஷ இந்த கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, புலிகளிடமிருந்து அண்மையில்
கைப்பற்றப்பட்ட சம்பூர் மற்றும் வாகரை பிரதேசங்களுக்கு உயர்மட்ட தளபதிகளின் பரிவாரங்களுடன் பயணம் செய்தார்.
அவர் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறி தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கும் படையினரின் வெற்றிகளைப் பாராட்டினார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், புலிகள்
கொழும்பு அரசாங்கத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவிட்டால், "நாம் அவர்களை அடக்க வேண்டும்," என
வெளிப்படையாக எச்சரித்தார்.
இராஜபக்ஷவின் சுதந்திரத் தின உரை ஆக்கிரமிப்பு பண்பைக் கொண்டிருந்தது. "நாங்கள்
புலிகளின் இரத்த தாகம் கொண்ட கோரிக்கைகளை கொடுக்கத் தயாரில்லை" என பிரகடனம் செய்த அவர்:
"தீர்க்கமாக பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதன் மூலம் இந்த புனித பூமியையின் கெளரவத்தையும் செழிப்பையும்
உறுதிப்படுத்த எனது முழு அர்ப்பணிப்பை உங்கள் முன் அழுத்தமாகக் கூறிக்கொள்கிறேன்," என மேலும் தெரிவித்தார்.
தனது யுத்தத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு நொண்டி முயற்சியில், "50,000ற்கும்
மேற்பட்ட மக்களின் அடிப்படை உரிமையை மீறி மாவிலாறு மதகை மூடும் வரை" புலிகளின் ஆத்திரமூட்டல்களைப்
பொறுத்துக்கொண்டதாக ஜனாதிபதி பிரகடனம் செய்தார். உண்மையில், இராஜபக்ஷ ஒரு பகிரங்க யுத்தத்திற்கு ஒரு
சாக்குப் போக்கை எதிர்பார்த்திருந்ததோடு தன்னை ஒரு மனிதநேயம் மிக்கவராக காட்டிக்கொள்ள மதகு மூடப்பட்ட
சம்பவத்தைப் பற்றிக்கொண்டார். விவகாரத்தை தீர்ப்பதற்காக புலிகளும் சர்வதேச இலங்கை கண்காணிப்புக் குழுவும்
முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவர் தாக்குதலுக்கு கட்டளையிட்டார்.
அரசியல் இரட்டைப் பேச்சின் ஒரு அசாதாரணமான காட்சிப்படுத்தலில், கிழக்கில்
தொடரும் இராணுவத் தாக்குதல்கள் "சமாதானத்திற்கும்... அப்பாவி மக்களை விடுதலை செய்வதற்குமான...
மாபெரும் அர்ப்பணிப்பு," என இராஜபக்ஷ கூறிக்கொள்கின்றார். யதார்த்தத்தில், உக்கிரமடைந்துவரும் இராணுவ
நடவடிக்கைகள் துன்பத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டுவரவில்லை. கடந்த ஆண்டு பூராவும் நூற்றுக்கணக்கான
பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பத்தாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகியுள்ளனர். பாதுகாப்புப் படைகளின்
ஒப்புதலுடன் இயங்கும் கொலைப் படைகளால் பெருந்தொகையானவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது
கொல்லப்பட்டுள்ளனர். இராணுவ செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ஜனத்தொகையும் ரொக்கட்
வேகத்தில் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் வீழ்ச்சிகண்டுவரும் வாழ்க்கைத் தரத்தினதும் சுமைகளைத் தாங்க வேண்டும்.
அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதில் புலிகள் பேர்போனவர்களாக உள்ள அதே
வேளை, "தமிழர்களை விடுதலை செய்வதற்கான" இராஜபக்ஷவின் அழைப்பானது 1980களின் முற்பகுதியில் யுத்தத்தை
தூண்டிய திட்டமிட்ட தமிழர் விரோத பாரபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சேவைசெய்யப் போவதில்லை.
சம்பூர் மற்றும் வாகரை போன்ற கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தை பேராவலுடனும்
மகிழ்ச்சியுடனும் மக்கள் வரவேற்கவில்லை. மாறாக, துயறுற்ற அகதிகள் உணவு தேடுவதற்காகவும் யுத்தத்தில் இருந்து
தப்புவதற்காகவும் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர். இராஜபக்ஷவின் "விடுதலை" என்பது, புலிகளை இராணுவ
ரீதியில் நசுக்கி முழு தீவிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான இரத்தக்களரி யுத்தத்திற்கும்
அப்பால் வேறெதையும் அர்த்தப்படுத்தவில்லை.
இராஜபக்ஷ தனது பார்வையாளர்களை, "ஆகக் குறைந்தது திரு. ஆனந்தசங்கரி அல்லது
கெளரவ. டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஒத்துக்கொள்ளக்கூடிய வகையில் நாம் அவர்களுக்கு நேர்மையாக இருக்க
வேண்டும்," என கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி முன்னெடுக்கும் யுத்தத்தின் தமிழ் ஆதரவாளர்களான இந்த இருவரும்,
புலிகளை கடுமையாக எதிர்ப்பவர்களும் அதே போல் சந்தர்ப்பவாதத்தில் பேர்போனவர்களுமாவர். அமைச்சரவை
அமைச்சரான தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவராவார். ஈ.பி.டி.பி, வடக்கில்
அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தி அடக்குவதில் பாதுகாப்புப் படைகளுக்கு துணை ஆயுதக்குழுவாக இயங்குகிறது.
இராஜபக்ஷ பலமான நிலையில் இருந்து அன்றி ஆழமான அரசியல் பலவீனத்தில் இருந்தே
யுத்தத்தை நாடுகின்றார். சுதந்திரத் தின கொண்டாட்டங்களுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் வரை, அவர் புலிகளுக்கு
எதிரான ஒட்டுமொத்த யுத்த்திற்கு பகிரங்கமாக வக்காலத்து வாங்கும் இரு சிங்களத் தீவிரவாத கட்சிகளான மக்கள்
விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பாரளுமன்ற ஆதரவில் ஒரு சிறுபான்மை
அரசாங்கத்திற்குத் தலைமை வகித்துவந்தார்.
பல வாரங்கள் தொடர்ந்த சூழ்ச்சித்திட்டங்களின் பின்னர், இராஜபக்ஷ ஒரு பாராளுமன்ற
பெரும்பான்மையை ஸ்தாபித்துக்கொள்வதற்காக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.)
மாற்றுக்குழுவில் இருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் (ஸ்ரீ.ல.சு.க.) இருந்தும் போதுமானளவு உறுப்பினர்களை
கவர்ந்துகொண்டார். ஜாதிக ஹெல உறுமயவும் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டது. இந்தக்
கூட்டணியை தக்கவைத்துக்கொள்வதற்காக அவர் ஏறத்தாழ அனைவருக்கும் அமைச்சர் பதிவி வழங்கி, தனது
அமைச்சரவையை 108 உறுப்பினர்கள் கொண்ட உலகின் பிரமாண்டமான அமைச்சரவையாக்கத் தள்ளப்பட்டார்.
அரசாங்கம் முரண்பாடுகள் மற்றும் மோதல்களால் பிளவுபட்டுள்ளது. உள்நுழைந்துள்ள ஐ.தே.க.
உறுப்பினர்கள், சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்பட்டதை ஆதரித்ததில் நன்கு பிரசித்தி பெற்றவர்களாவர். இந்த
சமாதான முன்னெடுப்பை ஜாதிக ஹெல உறுமய கசப்புடன் எதிர்த்து வருகின்றது. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களான மங்கள சமரவீரவும் அணுர பண்டாரநாயக்கவும் புதிய அமைச்சுப் பதவிகளில் திருப்திப்படாத
காரணத்தால் சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களில் கூட பங்குபற்ற மறுத்துவிட்டனர். இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள்
தாம் உலகின் பிரமாண்டமான அமைச்சரவையில் பங்கெடுத்துக் கொள்வதையிட்டு "வெட்கப்படுவதாக" வெளிப்படையாக தெரிவித்தனர்.
இதன் பிரதிபலிப்பாக, அரசாங்கத்தை ஆதரிக்காத எவரும் "கட்சியை விட்டு வெளியேறலாம்" என இராஜபக்ஷ எச்சரித்தார்.
இந்த அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னால், நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியுள்ள
முழு மோசடி அரசியல் ஸ்தாபனம் தொடர்பாக பரந்த வெகுஜன அதிருப்தி காணப்படுகிறது. இராஜபக்ஷ இந்த அதிருப்திக்கு
பிரதிபலிக்கும் வகையில் மேலும் இனவாத உணர்வுகளை கிளறுவதோடு எந்தவொரு அரசியல் எதிர்ப்பின் மீதும் பாய்ந்து விழத்
தயாராகின்றார்.
அவரது உரையின் போது, "தாய் நாட்டைப் பாதுகாப்பதைச் சூழ" அணிதிரளுமாறு அனைவருக்கும்
ஜனாதிபதி அழைப்புவிடுத்தார். அவர் தன்னை எதிர்ப்பவர்களை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும்"
தனது பொருளாதார அபிவிருத்தி திட்டங்களையும் மற்றும் "கலாச்சார விழுமியங்களை" காப்பதையும் கீழறுக்கும் சந்தர்ப்பவாதிகளாக
கண்டனம் செய்கின்றார்.
அச்சுறுத்தும் விதத்தில் இராஜபக்ஷ பிரகடனம் செய்ததாவது: "நாட்டின் ஸ்திரநிலைமைக்கு
சாவல் செய்யக்கூடிய எந்தவிதத்திலான நடவடிக்கையையும் நாட வேண்டாம் என நான் உயர்ந்த பொறுப்புடன் உங்கள்
அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சாகும் தறுவாயில் உள்ள பயங்கரவாதத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ பிராணவாயுவை
வழங்க வேண்டாம் என குறிப்பாக உழைக்கும் மக்களிடம் கேட்டுக்கொள்வதற்கு இது மிகப் பொருத்தமான இடம் என
நான் நம்புகிறேன். இது தொடர்பாக பொறுப்புடன் செயற்படுமாறு நான் ஊடகங்களுக்கும் அழைப்புவிடுக்கின்றேன்."
அரசாங்கம் ஏற்கனவே வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீது பாய்ந்து விழ
பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துவதை நாடியுள்ளதோடு நடைமுறையில் யுத்தம் தொடர்பான தணிக்கையை அமுல்படுத்துவதற்கு
சமமான வழிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. அண்மையில் புதிதாக பலப்படுத்தப்பட்டு மீண்டும் அமுல் செய்யப்பட்ட
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், இராணுவத்தாலும் பொலிசாலும் எந்தவொரு நபரையும் "பயங்கரவாதத்திற்கு
ஆதரவளித்ததாக" கூறி குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்க முடியும். இராஜபக்ஷவின் கருத்துக்கள், எந்தவொரு
அரசியல் எதிர்ப்பையும், குறிப்பாக உழைக்கும் மக்களிடமிருந்து எழும் எதிர்ப்பை நசுக்குவதற்காக இந்த ஜனநாயக
விரோத சட்டவிதிகளைப் பயன்படுத்த முனைகின்றார் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
|