World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military captures strategic eastern town from LTTE

இலங்கை இராணுவம் மூலோபாய கிழக்கு நகரை புலிகளிடமிருந்து கைப்பற்றியது

By Sarath Kumara
25 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை பாதுகாப்பு படைகள், மாதக்கணக்காக நீடித்த முற்றுகையை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிரதான கிழக்கு கரையோர நகரான வாகரையை இறுதியாக கைப்பற்றியது. இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும். அரசாங்கப் படைகள் கடந்த ஜூலையில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களை கைப்பற்றின. இதில் இறுதியாக கைப்பற்றப்பட்டது வாகரையாகும்.

பெருமளவு எதிர்த்தாக்குதல்கள் இன்றியே இராணுவம் நகருக்குள் நுழைந்தது. வட திசையிலும் தென் திசையிலும் அரசாங்கத் துருப்புக்களுக்கிடையில் சிக்கிக்கொள்ளும் நிகழ்வை உணர்ந்த புலிகள் அங்கிருந்து வெளியேறினர். ஞாயிற்றுக் கிழமை பாதுகாப்பு படைகள் வாகரையை சூழவுள்ள வெருகல் மற்றும் கதிரவெளி பிரதேசங்களிலும் தமது கட்டுப்பாட்டை விரிவுபடுத்திக் கொண்டன. புலிகளின் பேச்சாளர் ஒருவர் தமது போராளிகள் நிலைகளை "மறு ஒழுங்குபடுத்திக் கொண்டதாக" கூறி இந்த இழப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றுவருவதாகவே தோன்றுகின்றன. அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த 18 புலி போராளிகளை கொலை செய்ததாக ஞாயிறு அன்று இராணுவம் கூறிக்கொண்டது. கஜுவத்தை இராணுவ முகாமுக்கு அருகில் நான்கு சிப்பாய்கள் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதோடு வவுணதீவில் நடந்த மோதலொன்றில் மேலும் இரண்டு படையினர் உயிரிழந்தனர். பாதுகாப்பு அமைச்சின்படி, அக்டோபரில் இருந்து அரசாங்கப் படைகள் 35 சிப்பாய்களை இழந்துள்ளதோடு 331 புலி போராளிகளை கொலை செய்துள்ளன.

வாகரையை கைப்பற்றுவதற்கான நீண்டகால இராணுவத் தாக்குதல்கள், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுவதாக அரசாங்கம் கூறிக்கொள்வதை கேலிக்கூத்தாக்கியுள்ளது. இராணுவம் "தற்காப்பு" நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மீண்டும் மீண்டும் கூறிக்கொள்கின்றார். எவ்வாறெனினும், கடந்த ஜூலையில் இருந்து மாவிலாறு, சம்பூர் மற்றும் வாகரை போன்ற கிழக்குப் பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றிவந்துள்ளது. இந்த மாத முற்பகுதியில், சாக்குப்போக்குகளை கைவிட்ட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, புலிகளை கிழக்கில் இருந்து விரட்டுவதும், பின்னர் வடக்கின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்கான ஒரு தாக்குதலை முன்னெடுப்பதுமே தனது இலக்கு என்பதை மூடிமறைக்காமல் பிரகடனம் செய்தார்.

பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் வாகரையை கைப்பற்றிய புலிகள், வடக்கு கரையோர தளமான முல்லைத்தீவில் இருந்து போராளிகளையும், விநியோகங்களையும் தரைஇறக்குவதற்கான இறங்குதுறையாக அதைப் பயன்படுத்தினர். திருகோணமலை துறைமுகத்திற்கும் மட்டக்களப்பிற்கும் இடையில் தெற்குநோக்கி நீண்டுள்ள பிரதான பாதையில் வாகரை அமைந்துள்ளது. அதன் இழப்பு கிழக்கில் உள்ள புலிகளுடனான தொடர்பை கிட்டத்தட்ட துண்டித்துள்ளதுடன், அவர்களை இராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பலியாகும் நிலைக்குத் தள்ளியது.

"தற்காப்புநிலையில்" பிரதிபலிப்பதற்கு அப்பால், இலங்கை இராணுவமானது அமெரிக்க இராணுவத்தின் ஆலோசனைகளை பின்பற்றுகிறது. அமெரிக்க 2002ல் ஒரு மூலோபாய மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளத்தில் (PACOM) இருந்து ஒரு குழுவை அனுப்பியிருந்தது. திருகோணமலை துறைமுகம் இலங்கை கடற்படைக்கு மிக முக்கியமான தளம் என்பதில் "கேள்விக்கிடமில்லை" என விவரித்த இந்த குழு, துறைமுகத்தின் தெற்கில் அமைந்துள்ள சம்பூர் பிரதேசத்தில் உள்ள தளத்தில் இருக்கும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் அது இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் இக்பால் அத்தாஸ், கடந்த வாரம் தனது கட்டுரையில் அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளத்தின் அறிக்கையொன்றை மேற்கோள் காட்டியிருந்தார். "இப்போது வாகரை மற்றும் அதைச் சூழ உள்ள பிரதேசங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டமையானது, திருகோணமலை துறைமுகத்தை பாதுகாப்பதற்கான பாரிய முக்கியத்துவத்தை வழங்குகின்றது. மிகவும் முக்கியமாக, தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள அயல் பிரதேசங்களான கஜுவத்தை மற்றும் மாங்கேணி மீது ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை தொடுக்கும் வாய்ப்பை கெரில்லாக்களுக்கு அது இல்லாமல் ஆக்கியுள்ளது. வாகரையின் கட்டுப்பாட்டை இராணுவம் மீண்டும் பற்றிக்கொண்டமையானது அருகில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்லும் தரை மார்க்கத்தையும் கெரில்லாக்களுக்கு இல்லாமல் செய்துள்ளது," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாசாங்குத்தனமாக ஞாயிறன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட இராஜபக்ஷ, வாகரை கைப்பற்றப்பட்டதை "சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களுக்கும் ஒரு வெற்றியாகும்" என புகழ்ந்தார். "பாதுகாப்புப் படைகளால், கிழக்கில் 95 வீதத்தை புலிகளின் பிடியில் இருந்து துணிவுடனும் உறுதிப்பாட்டுடனும் விடுவித்துக்கொள்ள முடிந்துள்ளது," என அவர் மிகைப்படுத்தினார்.

வாகரையின் "விடுதலையானது" ஒரு பயங்கர மனித இழப்பின் விளைவாகும். இராணுவம் பிரதான பாதைகளின் நுழைவாயில்களை இறுக்கி அடைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு செல்வதை தடுத்ததோடு பத்திரிகையாளர்கள் அங்கு செல்வதையும் தடுத்தது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு கூட பிரதேசத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டது. பாதுகாப்பு படைகள் அடிப்படை பொருள்களின் விநியோகத்தை கடுமையாக கட்டுப்படுத்தின -நவம்பர் 29 அன்றே இறுதியாக அங்கு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த முற்றுகை கண்மூடித்தனமான விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களுடன் இரட்டிப்பாக்கப்பட்டிருந்ததோடு ஒரு தொகை மரணங்களையும் விளைவித்தது. கண்காணிப்பு குழு மற்றும் ஏனைய நிறுவனங்களின்படி குறைந்தபட்சம் 90 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். அரசாங்கமும் இராணுவமும், அகதி முகாம்கள் உட்பட்ட பொதுமக்கள் வாழும் பிரதேசங்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக, புலிகள் பொதுமக்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்துகின்றனர் எனக் கூறிக்கொண்டது. ஜனவரி 17 அன்று வாகரை ஆஸ்பத்திரி மீதான தாக்குதலில் 11 பேர் காயமடைந்ததோடு ஏழுபேர் கடும் காயமடைந்திருந்தனர்.

வாழ்வாதாரங்கள் எதுவுமற்ற நிலையில் கடந்த வாரம் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர். ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஒர்லா கிளின்டன் நிலைமை விவரித்ததாவது: "ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்... உணவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளன... இந்த மக்கள் பலவீனமும் பீதியும் அடைந்திருப்பது தெளிவு, அவர்களுடைய பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்." சனிக்கிழமையன்று, இராணுவம் நகரத்தை கைப்பற்றிய பின்னர் மேலும் 7,000 பேர் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

பிரதேசத்தை விட்டு வெளியேற அனுமதிப்பதற்காக இராணுவச் சோதனைச் சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. கடுமையாக ஆயுதம் தரித்திருந்த சிப்பாய்கள் புலி உறுப்பினர்களை தேடி பல இளைஞர்களை எதேச்சதிகாரமான முறையில் தடுத்துவைத்திருந்தனர். யூ.என்.சி.எச்.ஆர். குறிப்பிட்டுள்ளவாறு, புதிய சுற்று மோதல்கள் தொடங்கியதில் இருந்து சம்பூர் மற்றும் வாகரைக்கு இடையிலான கரையோரப் பிரதேசங்களில் இருந்து சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மொத்தமாக ஏப்பிரலில் இருந்து தீவு பூராவும் இருந்து 205,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வாகரை கைப்பற்றப்பட்டமையானது கொழும்பில் பேரினவாத மகிழ்ச்சியை உக்கிரமாக்கியுள்ளது. வலதுசாரி ஐலண்ட் பத்திரிகை, இப்போது யுத்தம் ஒரு "தீர்க்கமான நிலைக்கு" வந்துள்ளது எனக் கூறிக்கொண்டது. சிங்கள நாளிதழான லக்பிம, "சிங்கக் (தேசிய) கொடி (வாகரை) ஆஸ்பத்திரி வளாகத்தில் பறந்துகொண்டிருக்கின்றது," என பெருமையாக கூறிக்கொண்டது.

உண்மையில், "சமாதானம்" பற்றிய தனது எல்லா பேச்சுக்களிலும், இராஜபக்ஷ இராணுவத் தாக்குதல் தொடரும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். சனிக்கிழமை, இராணுவத் தளபதி பொன்சேகா, "புலிகளின் கட்டுப்பாட்டிலான தொப்பிகல மற்றும் கொக்கட்டிச்சோலை பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான" தனது திட்டங்களை வெளிப்படுத்தினார். அவர்கள் "விரைவில் கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டப்படுவார்கள்," என அவர் மிகைப்படுத்தினார்.

திங்களன்று, பாதுகாப்பு பேச்சாளர் கெஹலியே ரம்புக்வெல்ல பிரகடனம் செய்ததாவது: "தாம் மோதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளோம் என நாளைக்கே புலிகள் சொன்னால் நாங்கள் உடனடியாக நிறுத்துவோம். அவர்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், நாங்கள் கிழக்கில் உள்ள தமிழ் பொதுமக்களை விடுவித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுப்போம்." கடந்த ஜூலையில் இருந்து ஒவ்வொரு பிரதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் இராணுவமே தொடக்கிவைத்த நிலையில், இந்தக் கருத்து ஒரு சலுகையல்ல. மாறாக அது அரசாங்கத்தின் நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டும் என புலிகளுக்கு விடுக்கும் இறுதி நிபந்தனையாகும்.

கொழும்பில் உள்ள ஆளும் வட்டாரத்தின் வெற்றிச் செருக்கு மனப்பான்மையை உணரக்கூடியதாக உள்ளது. அதன் அண்மைய வெற்றிகளுக்கும் அப்பால், புலிகளை இராணுவரீதியில் தோற்கடிப்பது நேரகாலம் பற்றிய பிரச்சினை மட்டுமே என இராணுவம் தெளிவாகவே உணர்கின்றது --இது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அதனால் செய்யமுடியாமல் போன ஒன்றாகும். அமெரிக்காவினதும் ஏனைய பெரும் வல்லரசுகளதும் மெளன ஆதரவைக் கொண்டுள்ள அரசாங்கம், உள்நாட்டிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ அரசியல் எதிர்ப்பை தூண்டிவிடாமல் தனது இரக்கமற்ற ஆக்கிரமிப்பு யுத்தத்தை முன்னெடுக்க முடியும் என தெளிவாக கணக்கிடுகின்றது.

இராணுவ வட்டாரங்களுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள சண்டே டைம்ஸ் நிருபர் அத்தாஸ் கூட, ஒரு எச்சரிக்கை குறிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடந்தவாரக் கட்டுரையில், புலிகளின் படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், "வெளிப்படையான மகிழ்வுணர்வு அல்லது களிப்புகளுக்கு" எதிராக எச்சரிக்கை செய்திருந்தார். அத்தாஸ் 1995ல் யாழ்ப்பாணக் குடாநாட்டை இராணுவம் மீண்டும் கைப்பற்றியதையிட்டு அரசாங்கத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை நினைவூட்டியதோடு, ஏழு மாதங்களின் பின்னர், புலிகள் முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது ஒரு பெரும் தாக்குதலை முன்னெடுத்தபோது ஆயுதப் படைகள் முன்னெப்போதும் இல்லாதளவு மோசமான தோல்வியை அனுபவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2004ல் புலிகளில் இருந்து பிரிந்து சென்று கிழக்கை தளமாகக் கொண்டுள்ள ஆயுதக் குழுவான கருணா குழு என்றழைக்கப்படுவதன் ஆதரவில் இராணுவம் தங்கியிருப்பதையும் அத்தாஸ் சுட்டிக்காட்டினார். புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு பிரதியுபகாரமாக, கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன், தனது ஆயுதப் படைகளை கட்டியெழுப்பவும் மற்றும் தனது அரசியல் இயக்கமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செல்வாக்கை விரிவுபடுத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்தாஸின்படி, அரசாங்கம் "இன்னுமொரு பயங்கரமான உருவத்தை ஊக்குவிப்பதோடு கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றது" என்பதையிட்டு இராணு உயர்மட்டத்தினரில் ஒரு பகுதியினர் ''ஆழமான அக்கறை'' கொண்டுள்ளனர்.

அத்தாஸின் எச்சரிக்கைகள் அரசாங்கத்தின் பிற்போக்கு வழிமுறைகளை பின்தள்ளவிடத் தூண்டப்போவதில்லை. இராஜபக்ஷ, 2005 நவம்பரில் ஒரு குறுகிய வெற்றியை பெற்றதில் இருந்தே, உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் மற்றும் தீவில் ஆழமடைந்துவரும் சமூகப் பொருளாதார நெருக்கடியை அவர் தீர்க்கத் தவறியதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் ஒரு வழிமுறையாக இனவாத உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளார். எவ்வாறெனினும், அவ்வாறு செய்வதன் மூலம், அவர் சமூக அரசியல் கொந்தளிப்புக்கு அடித்தளம் அமைக்கின்றார். இந்த கொந்தளிப்பு வெகுதூர எதிர்காலத்தில் இல்லை.