World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்குIranian diplomat kidnapped in Baghdad: another US provocation? பாக்தாத்தில் ஈரானிய தூதர் கடத்தப்பட்டார்: மற்றொரு அமெரிக்க ஆத்திரமூட்டலா? By Peter Symonds ஞாயிறு மாலை பாக்தாத்தில் ஈரானிய தூதர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளமை, பாரசீக வளைகுடாவில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவத் தயாரிப்புக்கள் தொடர்ந்து நடைபெறும் பின்னணியில், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பதட்டங்களை இன்னும் கூடுதலாக உயர்த்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இந்தக் கடத்தலில் தங்களுடைய பங்கு ஏதும் இல்லை என்று மறுத்துள்ளனர்; ஆனால் நிகழ்வோ புஷ்ஷின் நிர்வாகத்தின் நோக்கத்திற்கு உதவும் வகையில் ஈரானிய தூதரக நடவடிக்கையை கீழறுக்கச்செய்வதுடன் ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையே உறவுகளை கசப்படையச் செய்துள்ளது. மேலும் கடத்தலை எவர் செய்தது என்பது பற்றித் தெளிவு இல்லாத அதேவேளை, நிகழ்வின் பல கூறுபாடுகளும் அமெரிக்க தொடர்பு இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஈரானிய தூதரகத்தில் இரண்டாம் செயலாளராக உள்ள ஜலால் ஷராபி, துப்பாக்கி ஏந்திய ஈராக்கிய கமாண்டோக்கள் போல் உடையணிந்தவர்களால் பாக்தாத்தின் மத்திய பகுதியில் ஷியைட் ஆதிக்கம் அதிகம் உள்ள கராடா மாவட்டத்தில் கடத்தப்பட்டார். அவருடைய காரை இரண்டு வாகனங்கள் வழிமறித்து, ஷராபி ஒரு வண்டியில் திணிக்கப்பட்டார்; பின் அந்த வண்டி வெகு வேகமாகச் சென்றுவிட்டது. போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒரு வாகனத்தை மேலே செல்லமுடியாமல் செய்த பின்னர், குறைந்தது நான்கு துப்பாக்கிக்காரர்களை கைது செய்தனர். ஈராக்கிய அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் இம்மனிதர்கள் 36வது ஈராக்கிய கமாண்டோ பட்டாலியன் சீருடைய அணிந்திருந்தனர் என்று கூறினர் -- அது அமெரிக்க இராணுவத்துடன் வெகு நெருக்கமாக செயலாற்றி வரும் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு ஆகும். பிடிக்கப்பட்ட துப்பாக்கிதாரிகள் அனைவரும் உத்தியோகபூர்வ ஈராக்கிய இரரணுவ அடையாள அட்டைகளை வைத்திருந்தனர்; நியூ யோர்க் டைம்ஸிடம் பேசிய அமெரிக்க, ஈராக்கிய அதிகாரிகள் அது உண்மையானது எனத் தோன்றியதாக தெரிவித்தனர். ஆனால் பிடிபட்ட துப்பாக்கிதாரிகள் போலீஸ் பாதுகாப்பில் அதிக நேரம் இருக்கவில்லை. அரசாங்க அடையாளங்களுடன் வந்த அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர்; அவர்கள் தீவிர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும் என்றனர். இவ்விதத்தில் காவலில் வைக்கப்பட்டவர்கள் மறைந்தே போயினர். உள்துறை, பாதுகாப்பு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர்கள் இச்சந்தேகத்திற்கு உரியவர்கள் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை என்று கூறினர். நேற்று ஈராக்கிய வெளியுறவு மந்திரி Hoshyar Zebari நான்கு ஈராக்கிய இராணுவ அதிகாரிகள் கடத்தல் தொடர்பாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்றும் ஆனால் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். கடத்தலுக்கு எவரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை; ஷராபியை கடத்தியவர்கள் எந்தக் கோரிக்கையையும் எழுப்பவும் இல்லை. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் மகம்மத் அலி-ஹொசீனி இந்த கடத்தலை கண்டித்ததுடன், ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே உள்ள உறவுகளை இது கெடுதலுக்கு உட்படுத்தும் என்றும் எச்சரித்தார். "ஈரானிய தூதரின் உயிர், பாதுகாப்பிற்கு" அமெரிக்க இராணுவம்தான் பொறுப்பு என்று அவர் கூறினார். இக்கடத்தலில் ஒருவேளை அமெரிக்க தொடர்பு இருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறியதாவது: "கிடைத்துள்ள நம்பகத்தகுந்த தகவலின்படி, பயங்கரவாத செயலுக்கு பின் உள்ள சில முகவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்க மேற்பார்வையில் இதைச் செய்துள்ளனர்." பாக்தாத் மற்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் இந்நிகழ்வில் தங்களுக்கு பங்கு உண்டு என்பதை மறுத்துள்ளனர். இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேர்னல் கிறிஸ்தோபர் கார்வர் ஈராக் பன்னாட்டுப் படையின் (MNF-I ) எப்பிரிவும் இதில் தொடர்பு கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி ஸ்நோ செய்தி ஊடகத்திடம் தெரிவித்ததாவது: "இத்தருணத்தில் எங்களுக்கே பலவற்றையும் பற்றித் தெரியவில்லை." சுன்னி கிளர்ச்சியாளர்கள், இராணுவத்தில் கட்டுப்பாடற்ற கூறுபாடுகள் அல்லது குற்றம் செய்யும் குழுக்கள்கூட பொறுப்பாக இருக்கக்கூடும் என்றாலும், அமெரிக்கத் துருப்புக்கள் கடத்தலுக்கு ஏற்பாடு செய்தன என்பதை உறுதியாக மறுப்பதற்கு இல்லை. ஈராக்கில் அமெரிக்கப் போர் தீவிரமாகும் என்று ஜனவரி 10ம் தேதி உரையில் அறிவித்த ஜனாதிபதி புஷ், சிரியாவும் ஈரானும் ஈராக்கில் உள்ள அமெரிக்க-எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு ஆதரவு தருவதாக குற்றம் சாட்டி அமெரிக்க இராணுவம் இந்த இணையங்களை "தேடிப்பிடித்து அழிக்கும்" என்றும் அறிவித்தார். இரண்டு உயர் அந்தஸ்து பெற்ற தூதர்கள் உட்பட, குறைந்தது 10 ஈரானிய அதிகாரிகளாவது, அமெரிக்க இராணுவத்தால் இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் பிடிக்கப்பட்டுள்ளனர்; ஒரு நிகழ்வு டிசம்பர் 20 அன்று பாக்தாத்திலும் மற்றொன்று ஜனவரி 11 அன்று வடக்கு நகரமான இர்பில்லிலும் நடந்தது. கடந்த மாத சோதனையில் காவலில் வைக்கப்பட்ட ஐந்து பேர்களும், ஈரான் மற்றும் ஈராக்கிய அரசாங்க அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்த பின்னரும்கூட, இன்னமும் அமெரிக்க காவலில்தான் உள்ளனர். காவலில் வைக்கப்பட்டுள்ள ஈரானிய அதிகாரிகளில் எவரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்பு உடையவர் என்றோ அல்லது பரந்த அளவில் ஈரானிய ஆட்சி ஷியைட் குடிப்படைகளுக்கு உதவுகிறது என்பதற்கோ இதுவரை அமெரிக்கா எந்தச் சான்றையும் கொடுக்கவில்லை. தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க குற்றச் சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் ஒரு "கோப்புத் தொகுப்பு" ஜனவரி 31 அன்று பகிரங்கமாக வெளியிடப்படுவதாக இருந்தது; ஆனால் அது இரத்து செய்யப்பட்டு வேறு ஒரு தேதி குறிப்பிடப்படவும் இல்லை. புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Stephen Hadley, பெப்ருவரி 3ம் தேதி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முன்னர் வெளிவந்த கருத்துக்கள் "மிகையாகக் கூறப்பட்டவை" என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். பெப்ருவரி 6ம் தேதி வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் பாதுகாப்பு, உளவுத் துறை பிரிவுகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட, அமெரிக்க தளத்தைக் கொண்ட சிந்தனைக் குழு Stratfor, ஷராபியின் கடத்திலில் அமெரிக்கத் தொடர்பு இருக்கக்கூடும் என்று கருத்துத் தெரிவித்து சில காரணங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது: "தூதரகத்தில் ஷராபியின் நிலை உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு மறைப்பு என்ற வகையில் இருக்கும் தூதரக அலுவலக நியமம் ஆகும் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். எனவே ஈரானிய உளவுத்துறை, பாதுகாப்பு அமைச்சரகத்தில் ஒரு முக்கியமான நபராக அவர் இருந்தால், பாக்தாத்தில் அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் நடக்கும்போது, அவரை கடத்துவது ஈரானிய நடவடிக்கைகளை சீர்குலைக்கும்." என்று கட்டுரை கருத்துத் தெரிவித்துள்ளது. "இரண்டாவதாக, தெஹ்ரானுக்கு எதிராக அழுத்தம் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஈரானிய இரகசிய நடவடிக்கைகள் பற்றி இன்னும் கூடுதலான ஆக்கிரோஷத்தை காட்ட இருப்பதாக அமெரிக்க வெளிப்படையாகவே கூறியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை, ஈரான் பற்றிய தகவல் தொகுப்பை கணிசமாகக் கொண்டுள்ளது --இந்த நடவடிக்கை ஈரானை உண்மையில் தாக்கும் இலக்கிற்கு உதவுமா, பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு உதவுமா அல்லது தெஹ்ரானின் நோக்கத்தை அறிவதற்கு உதவுமா என்பது அறியப்பட வேண்டும். ஒரு இரண்டாம் செயலளாரை கைப்பற்றுவது இம்முயற்சியில் பொருத்தமாக இருக்கும்." தகவலை அறிதல் நோக்கம் என்றால், அமெரிக்க இராணுவம் வெளிப்படையாக சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறாமல் ஒரு ஈரானிய தூதரை வெளிப்படையாக பிடித்து காவலில் வைக்க முடியாது. ஆயினும் கூட Stratfor கட்டுரை விளக்கியுள்ளபடி, "அவரை வினாவிற்கு உட்படுத்தும் வாய்ப்பு அமெரிக்காவிற்கு உண்மையில் சில ஆதாயங்களை கொடுக்கும். செய்யவில்லை என்று மறுத்துக்கூற முற்படுவது ஒரு திறவுகோல் ஆகும். ஆனால் ஷராபி கடத்தப்படுதலை மூன்றாம் நபர்கள் மூலம் செய்தல் என்பது அமெரிக்காவினால் தேவைப்படும் உளவுத் தகவலை அறிவதற்கு நல்ல வழிவகையாகும். எனவே இது ஒரு அமெரிக்க இசைவிற்கு உட்பட்ட நடவடிக்கை, வாஷிங்டனின் சுன்னி நண்பர்களால் செய்யப்பட்டது எனக் கூறுவதற்கும் இடமுண்டு." எவர் இதைச் செய்திருந்தாலும், கடத்தலில் இருந்து அமெரிக்காவிற்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு; ஏனெனில் இது ஈரானிய, ஈராக்கிய அரசாங்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளை நேரடியாகப் பாதிக்கும். ஈரானுடன் இராணுவ மோதலுக்கு தயார் செய்துவருவதால், புஷ் நிர்வாகம் தெஹ்ரானுடன் நீடித்து வந்துள்ள அணுவாயுத திட்டங்கள் என்று கூறப்படுவது மற்றும் அமெரிக்க-எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு பற்றிய நிலுவையிலுள்ள பூசல்கள் பற்றிய நேரடிப் பேச்சு வார்த்தைகளை நடத்த பிடிவாதமாக மறுத்துள்ளது. ஆனால் ஈராக்கிய அரசாங்கமோ, நீண்ட காலமாக தெஹ்ரானுடன் தொடர்புகள் உடைய ஷியைட் கட்சிக் கூட்டணியை அடித்தளமாக கொண்டுள்ள நிலையில், வாஷிங்டனுடன் பெருகிய முறையில் ஒத்துப்போகா நிலையில் அதனை வைத்துள்ளது. CNN இடம் கடந்த வாரம் ஈராக்கிய பிரதமர் நூரி அல்-மாலிகி அமெரிக்காவும், ஈரானும் ஈராக்கை தங்களுடைய பூசல்களை தீர்த்துக் கொள்ள மாற்றுப் போர்க்களமாக செய்துவிடக்கூடாது என்று கூறினார். "ஈரானியர்களிடமும் அமெரிக்கர்களிடமும் நாங்கள் கூறியுள்ளோம்: 'உங்களுக்கு இடையே பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்; ஆனால் ஈராக்கிற்கு வெளியே உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். ஈரான் அமெரிக்கப் படைகளை தாக்குவதற்கு ஈராக்கை பயன்படுத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம். அமெரிக்கப் படைகள் ஈரானை அல்லது சிரியாவை தாக்குவதற்கு ஈராக்கை தளமாகக் கொள்ளுவதையும் நாங்கள் விரும்பவில்லை."அமெரிக்கா ஈரானுடன் பேசக்கூட மறுக்கையில், உயர்மட்ட ஈராக்கிய அதிகாரிகள் தெஹ்ரானுக்கு பயணம் செல்லுகின்றனர். கடந்த வாரம் ஈராக்கிய அரசாங்கம் ஈரானையும் சிரியாவையும் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு பாக்தாத்திற்கு மார்ச் மாதம் ஒரு தூதுக்குழுவை அனுப்புமாறு அழைத்தது; இதில் இப்பகுதியில் உள்ள மாற்ற நாடுகளும் சேர்க்கப்படலாம். இதில் கலந்துகொள்ள அழைக்கப்படாத அமெரிக்கா பொதுவாக இக்கூட்டத்தை வரவேற்றாலும், ஈரானிய மற்றும் சிரியா சம்பந்தப்படுதல் பற்றி நேரடியாக ஏதும் குறிப்பிடவில்லை. திங்கட்கிழமையன்று, Supreme Council of Islamic Revolution in Iraq (SCIRI) இன் தலைவரான அப்துல் அஜிஸ் ஹகிம், ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்துமாறு அமெரிக்காவிற்கு பகிரங்க அழைப்பை விடுத்தார். "அனைத்து ஈராக்கிய மூத்த அரசியல் வாதிகளும் [அமெரிக்க-ஈரான்] பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்; பேச்சுவார்த்தைகள் பல விளைவுகளை கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அவர் கூறினார். மாலிகி அரசாங்கத்தின் பெரும் ஷியைட் பிரிவுகளில் ஒன்றான SCIRI ஈரானிய ஆட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறது. ஈரானிய பெருந்தலைவர் அயோதொல்லா அலி காமெனீயைச் சந்திக்க ஹகிம் தெஹ்ரானுக்கு சென்றிருந்தார். ஹகிமின் கருத்துக்களை அசட்டை செய்த புஷ் நிர்வாகம் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் விருப்பத்தையே கொண்டிருக்கவில்லை. ஈரானுடன் பூசல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்று விழைவதற்கு பதிலாக, அமெரிக்கா ஈரானிய ஆட்சி மீது அழுத்தம் கொண்டுவருவதற்கு போலிக் காரணங்களை கொடுத்துவருவதுடன் ஒரு இராணுவ தாக்குதலுக்கும் தயார் செய்து வருகிறது. ஈரானுடன் போர் ஏற்பட்டால், வாஷிங்டனின் தற்போதைய ஷியைட் ஆதிக்கத்திற்குட்பட்ட கைப்பாவை அரசாங்கம் விரைவில் ஒரு சுமையாகி விடும். |