World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan journalists protest against attacks on media

ஊடகங்கள் மீதான தாக்குதலை எதிர்த்து இலங்கை ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

By W.A. Sunil
7 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஊடகத்துறைக்கு எதிரான கொலைகள், கடத்தல்கள், கொலை அச்சுறுத்தல்கள் உட்பட அதிகரித்துவரும் இடையூறுகளை கண்டனம் செய்து 300 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கடந்த மாதம் மத்திய கொழும்பிலுள்ள கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜனாதிபதி இராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரப்படுத்தியுள்ள நிலையில், அவரது அரசாங்கமும் இராணுவமும் தணிக்கையை நடைமுறையில் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்திற்கு சமமான ஆட்சியை அமுல்படுத்தியுள்ளன.

சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் (SWJA), ஊடகத் தொழிலாளர்கள் தொழிற் சங்க கூட்டமைப்பு (FMETU), இலங்கை முஸ்லிம் ஊடக பேரவை (SMMF), தமிழ் ஊடகவியலாளர் சங்கம் (TJA) மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களின் தேசிய கூட்டமைப்பு (FMETU) உட்பட பல அமைப்புக்கள் ஜனவரி 23 ம் திகதி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தன.

"மவ்பிம பத்திரிகையாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்''; ''மவ்பிம மற்றும் சன்டே ஸ்டான்டர்ட் பத்திரிகைகளுக்கு எதிரான இடையூறுகளை நிறுத்து''; ''சம்பத் லக்மல்லின் கொலையாளிகளை கைது செய்''; மற்றும் ''ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டனம் செய்'' போன்றவை உட்பட பல சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்சிப்படுத்தினர். மவ்பிம (தாயகம்) மற்றும் சன்டே ஸ்டான்டர்ட் ஆகியவை அரசாங்கத்தை விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிட்ட வாரந்த செய்தித்தாழ்களாகும்.

இந்த ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கையில், பிரதித் தொழில் அமைச்சரான மேர்வின் சில்வா ஒரு குண்டர் கும்பலுடன் அங்கு வந்து ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவர்கள் தேசபக்தி கோசங்களை எழுப்பியதோடு விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கு நகரான வாகரையை கைப்பற்றியதற்காக இராணுவத்தைப் பாராட்டிய போதிலும், ஆர்ப்பாட்டத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்ததை அடுத்து அங்கிருந்து வெளியேறினர். ஜனவரி மாத ஆரம்பத்தில், சில்வாவும் அவரது ஆதரவாளர்களும் யுத்த எதிர்ப்பு கூட்டமொன்றை குழப்பியடித்து, ஊடகவியலாளர்கள் மீது உடல் ரீதியான தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.

சுதந்திர ஊடக இயக்கத் தலைவர் சுனந்த தேசப்பிரிய கண்டனக் கூட்டத்தில் வைத்து நிருபர்களிடம் தெரிவித்ததாவது: ''நாட்டின் சில பகுதிகளில் செய்திப் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டுள்ளன. உண்மைகளை வெளிப்படுத்தும் செய்தியாளர்கள் ஒன்றில் கடத்தப்படுகின்றனர் அல்லது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். இலங்கை ஊடகங்கள் ஒரு குரோதமான சூழ்நிலையில் உண்மையான மற்றும் சரியான செய்திகளை மக்களுக்கு வழங்க முயற்சிக்கும் போது, அவை ஒரு கொடூரமான எதிர்காலத்திற்கு முகம்கொடுக்கின்றன.''

உலக சோசலிச வலைத் தளத்திற்கு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்கபேலி தெரிவிக்கையில், ''யுத்தம் பலவகையான பிற்போக்கு சமூக சக்திகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கடத்தல்கள், கொலைகள் மற்றும் என்னவெல்லாமோ நடந்து கொண்டிருக்கின்றன. யுத்தத்தை முன்னிலைப்படுத்துவதையும் மற்றும் ஊக்குவிப்பதையும் நாம் எதிர்க்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க சமாதானம் இருக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டார்.

பிரான்சை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (Reporters Sans Frontiers -RSF) இலங்கை தொடர்பான அதன் 2006 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில், ''பாதுகாப்பு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நடைமுறைப்படுத்தப்படாத யுத்தமானது ஊடகவியலாளர்களுக்கு, குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கேடான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது,'' எனக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை ஊடகங்களுக்கு எதிரான அதிகரித்துவரும் வன்முறைகளை இதர சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்புக்களும் கண்டனம் செய்துள்ளன.

டிசம்பரில், இராஜபக்ஷ இழிபுகழ்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியதோடு அதை விரிவுபடுத்தினார். இந்த சட்டம் ஒருவரை ''பயங்கரவாதி' என்ற பேரில் நீண்ட காலத்திற்கு வழக்கு விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்க அனுமதியளிக்கின்றது. விரிவாக்கப்பட்ட புதிய சட்ட விதிகளின் கீழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் உட்பட எவர் மீதும் பயங்கரவாதத்திற்கு ''உதவியளித்தார்'' என்ற தெளிவற்ற குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடர முடியும்.

ஜனாதிபதி இராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்ஷ மற்றும் லெப்டின்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும், பாதுகாப்பு படைகளின் உளவலிமையையும் மற்றும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் என்ற அடிப்படையில் யுத்தத்தை விமர்சிப்பதற்கு எதிராக ஊடகவியலாளர்களை எச்சரிப்பதன் பேரில், ஊடகப் பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு பல தடவைகள் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மீதான பல தாக்குதல்கள், பாதுகாப்பு படைகளால் அல்லது அதனுடன் கூட்டாக உள்ள பேரினவாத குண்டர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு சந்தேகம் கிடையாது. எடுத்துக் காட்டாக சில சம்பவங்கள்:

* கடந்த வருடம் ஜனவரி மாதம் சுடர் ஒளி பத்திரிகையின் திருகோணமலை நிருபரான சுப்ரமணியம் சுகீதராஜன் கொல்லப்பட்டார். கிழக்கு மாவட்டத்தில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைகளின் தாக்குதல்களைப்பற்றிய ஒரு கட்டுரையை எழுதிய மறு நாளே அவர் கொல்லப்பட்டார்.

* மே 2 ம் திகதி மாலை, யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை காரியாலயத்திற்குள் T-56 ரக துப்பாக்கிகளுடன் திடீரெனப் புகுந்த ஒரு குண்டர் கூட்டம், விநியோக முகாமையாளரான பஸ்தியான் ஜோர்ஜ் சகாயதாஸ் மற்றும் விநியோக மேலாளரான எஸ்.ரஞ்சித் ஆகியோரை சுட்டுக் கொலை செய்தது. இத் தாக்குதலில் மேலும் இரு ஊழியர்கள் காயமடைந்தனர். சில வாரங்களின் பின்பு, உதயன் பத்திரிகையின் விநியோகிஸ்தர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* சட்டன பத்திரிகை நிருபரான சம்பத் லக்மல், யூன் 30 ம் திகதி கொழும்பு புறநகர் பகுதியான பொரலஸ்கமுவையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சென்று கொண்டிருக்கையில் கடத்தப்பட்டார். அவரது சடலம் தெகிவளையில் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தலையில் சுடப்பட்டிருந்தார். பொலிசார் இக்கொலை தொடர்பாக ஒரு இராணுவ புலணாய்வு அதிகாரியையும் மற்றும் இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரையும் விசாரித்தபோதிலும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

* சூரியன் FM வானொலியின் ஒரு சிரேஷ்ட செய்தி முகாமையாளரான நடராஜா குருபரன், கடத்தப்பட்டு 24 மணித்தியாளங்களின் பின்பு விடுவிக்கப்பட்டார். நாட்டிலுள்ள தமிழ் சிறுபான்மை மக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சியை நிறுத்தும்படி கடத்தல்காரர்களால் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்.

* ஆகஸ்ட் 21 அன்று, நமது ஈழநாடு தமிழ் பத்திரிகையின் ஆசிரியரும் நிர்வாக முகாமையாளருமான சின்னத்தம்பி சிவமகாராஜா, யாழ்ப்பாணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் தெல்லிப்பளையில் உள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

* நவம்பர் 23 அன்று, நவ்பிம பத்திரிகையின் செய்தியாளரான முனுசாமி பரமேஸ்வரி கைது செய்யப்பட்டார். இன்னமும் அவர் எந்தவொரு குற்றச்சாட்டு இல்லாமல் குற்றப் புலணாய்வுத் திணைக்களத்தால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சுதந்திர ஊடக இயக்கத்தின்படி, செய்தியாளர்கள் அவரை சென்று சந்திப்பதற்கு CID அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவர் ஜனவரி மாதம் 23 ம் திகதி நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும், அவரது தடுப்புக்காவல் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர், விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் தான் மிரட்டப்பட்டதாகவும் மற்றும் பத்திரிகைத் துறையை கைவிடும்படி அவர்கள் கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பரமேஸ்வரி தற்போது தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக அடிப்படை உரிமை கோரி வழக்குப் பதிவு செய்துள்ளார்.

* கடந்த மாதம், தினக்குரல் பத்திரிகையின் எழுத்துப் பிழை திருத்துபவரான குமாரவேல் கஜன் கொழும்பில் கைது செய்யப்பட்டார். இவர் தற்போதும் தென் மாவட்டமான காலியிலுள்ள பூஸ்ஸ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இப்பத்திரிகை நிர்வாகம் அவரது விடுதலைக்கு முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

* ஜனவரி 9 ம் திகதியன்று, யாழ்ப்பாணத்திலிருக்கும் தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் காரியாலயங்களுக்குள் திடீரெனப் புகுந்த இராணுவக் குழுவொன்று, யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய அறிக்கைகளை பிரசுரிக்கக் கூடாது என்று அங்கிருந்த அலுவலர்களை எச்சரிக்கை செய்தது. இளைஞர்கள் கடத்தப்படுவதை எதிர்த்து யாழ்ப்பாண மாணவர்கள் மீண்டும் மீண்டும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

* தெரன தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான கே.சி. சாரங்க ஜனவரி 15 ம் திகதி அன்று, கொழும்பு புறநகர் பகுதியான தெகிவளையில் வைத்து ஒரு குண்டர் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலின் போது, கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப் படையினரின் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு வீடியோ விவரணம் அபகரிக்கப்பட்டது.

* கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதன் காரணமாக மூன்று செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். ராய்ட்டர் படப்பிடிப்பாளரும் செய்தியாளருமான அநுருத்த லொகுஹப்புராச்சி, சுதந்திர செய்தியாளரான ரேகித பாசன அபேவர்த்தன, லண்டனை தளமாகக் கொண்டியங்கும் தீபம் தொலைக்காட்சியின் கொழும்பு செய்தி முகாமையாளரும் இலங்கை தமிழ் ஊடக கூட்டமைப்பின் தலைவருமான எஸ்.ராஜ்குமார் ஆகியோரே நாட்டை விட்டு வெளியேறியவர்களாகவர்.

* 2004 ல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கருணா என்றழைக்கப்படும் V.முரளிதரனின் தலைமையிலான ஆயுதக் குழு, கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகையை விற்பனை செய்வதை கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் தடை செய்துள்ளது. கருணா குழு இலங்கை இராணுவத்துடன் நெருங்கிய கூட்டைக் கொண்டிருக்கிறது.

இந்த சம்பவங்கள், பத்திரிகை சுதந்திரம் பற்றிய ஜனாதிபதி இராஜபக்ஷவின் கூற்றுக்களின் பாசாங்குத்தனத்தை கோடிட்டுக் காட்டுகின்றன. அவர், ஜனவரி 5ம் திகதி நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், தனது அரசாங்கத்தை விமர்சிக்க ஊடகங்களுக்கு உள்ள உரிமையை பாதுகாப்பதாக தெரிவித்தார். ''விமர்சிப்பதற்கு ஏதாவது இருக்குமானால் அதை விமர்சிக்குமாறு கூட நான் அரசாங்கப் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிக்கும் அறிவுறை கூறியுள்ளேன்," என அவர் பிரகடனம் செய்தார். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் பொலீஸ் விசாரணைகளை நடத்தவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். பாதுகாப்பு படைகள் மற்றும் அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள குண்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களைபற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற அவரது இதர உறுதிமொழிகளைப் போன்ற வெற்று வாக்குறுதிகளே இவை.

மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் இலங்கை ஊடக ஸ்தாபனம், பெருமளவில் அரசாங்கத்தினுடைய இனவாத பிரச்சாரத்தின் ஊதுகுழலுக்கு வேறுபட்டவையல்ல. யுத்தம் பற்றிய ஏந்தவொரு விமர்சன ரீதியான செய்திகளும், அதிகாரிகளின் மட்டுமீறிய இலஞ்ச ஊழல்கள், மோசமான வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக, இராணுவத்தின் பிரிவுகள் உட்பட பொதுமக்களின் அமைதியின்மையை கொழுந்துவிட்டு எரியச் செய்யும் என்பதில் இராஜபக்ஷ தெளிவான எச்சரிக்கையுடன் உள்ளார். ஊடகங்கள் மீதான தீவிரமான கடும் நடவடிக்கைகளுக்கான காரணங்கள் இவையேயாகும்.