World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Unanswered questions about the Karbala raid

கார்பலா சோதனை பற்றி விடை கூறப்படாத வினாக்கள்

By Bill Van Auken
6 February 2007

Back to screen version

ஈரானுக்கு எதிராக ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை தயாரிப்பதற்கான முயற்சியில், புஷ் நிர்வாகம், ஈராக்கிய நகரமான கார்பலாவில் பாதுகாப்பான அமெரிக்க செயல்திறம் என்று கூறப்படுவதில் ஜனவரி 20ம் தேதி நடத்தப்பட்ட திடீர் சோதனைக்கு ஈரானிய முகவர்கள்தான் பொறுப்பு என்று ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது. அத் திடீர் சோதனையின்போது ஐந்து அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையில் செய்தி ஊடகத்திடம் பேசிய அமெரிக்க அதிகாரிகள், இத்தகைய குற்றச்சாட்டிற்கு காரணத்தை கூறும்போது, அமெரிக்கச் சீருடையில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட அந்த செயற்பாடு ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு உள்ள எதிர்ப்பாளர்களால் அவர்களுடைய சொந்த திறனால் தயாரிக்க முடியாத அளவிற்கு அதி "உயர்நுட்பம்" வாய்ந்ததாக இருந்தது என்று கூறினர்.

ஈரான் எதற்காக அத்தகைய தாக்குதலை நடத்த ஆர்வம் காட்டவேண்டும், அதிலும் குறிப்பாக இந்த தாக்குதல் சரியான முறையில் விளக்கப்படவில்லை. ஐந்து அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டனர்; ஒருவர் ஸ்தலத்திலேயே இறந்து போனார், நான்கு பேர்கள் கடத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டனர்; இவர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் யாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பேச்சுக்களை நடத்த வந்தவர்கள்; பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஈரானியர்கள். கார்பலாவில் நடக்கும் அஷுரா என்னும் ஷியா மத விழாவிற்கு வருபவர்கள் ஆவர்.

மேலும், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு ஆய்வுகள் பற்றிய பேராசிரியரான Juan Cole தன்னுடைய வலைத் தளமான "Incofmed Comment" ல் சுட்டிக்காட்டியுள்ளபடி, எவர் இந்த தாக்குதலை நடத்தினரோ அவர்கள் கைப்பற்றப்பட்ட அமெரிக்கர்களின் உடல்கள், சோதனையின்போது பயன்படுத்தப்பட்ட கார்கள் அனைத்தையும் முக்கியமான சுன்னிப் பகுதியான மஹாவில் நகரத்தில் தூக்கியெறிந்துவிட்டனர்; ஈரானியரின் ஆதரவிற்கு உட்பட்ட ஷியைட் போராளி உறுப்பினர்களால் இந்த இடம் தேர்ந்து எடுக்கப்படக்கூடியது அல்ல.

கொல்லப்பட்ட அமெரிக்கத் துருப்புக்களின் நினைவுச் சடங்குகள், இறுதிச் சடங்குகளை தவிர சோதனைக்கு பின்னர் என்ன நடந்தது என்பது பற்றிய புதிய தகவல்கள் ஏதும் இல்லை. இதை எவர் செய்தனர், அவர்களுடைய நோக்கம் என்ன என்பது ஒரு புதிராகத்தான் உள்ளது.

ஆயினும்கூட ஈரானுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு பரந்த அளவில் கூறப்பட்டுவருகிறது. ஜனவரி 31ம் தேதி "அமெரிக்காவும், ஈராக்கியர்களும், ஐந்து அமெரிக்க துருப்புக்களை கொன்ற தாக்குதல்காரர்களுக்கு ஒருவேளை ஈரான் பயிற்சி அளித்திருக்கக் கூடும் என்கின்றன" என்ற பெரிய எழுத்துத் தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு, டைம்ஸ் தெரிவித்ததாவது: "தாக்குதலில் இருந்த தொழில்நுட்ப நயம் விசாரணை செய்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது; ஈராக்கியர்கள் தாங்களாகவே இதைச் செய்திருக்க முடியாது என்றுதான் அவர்கள் ஐயப்படுகின்றனர்; எனவேதான் ஈரான் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதற்கான காரணம் ஆய்வு செய்யப்படுகிறது. உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் எச்சரித்ததுடன், தொடர்பு பற்றி நேரடிச் சான்றுகள் எதனையும் வெளிப்படுத்தவில்லை."

"சமீபத்தில் நடத்தப்பட்ட மூன்று அமெரிக்கச் சோதனைகளில் அமெரிக்க மற்றும் ஈராக்கிய படைகள்மீது, தாக்குதல் நடத்தியவர்கள் எனச்சந்தேகப்பட்டவர்கள் காவலில் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு பதிலடி என்னும் முறையில்" இந்த தாக்குதல்கள் காணப்படலாம் என்று அதிகாரிகளில் ஒருவர் கூறினார். வேறுவிதமாகக் கூறினால், ஈராக்கில் உள்ள ஈரானிய தூதரக அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் நடத்திய திடீர்ச்சோதனைகளில் இருந்தே ஈரானியருடைய தவறு ஊகிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட பரபரப்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தவிர, டைம்ஸ் கட்டுரை கீழ்க்கண்ட கவனத்தை ஈர்க்கும் கருத்துக்களையும் கூறியுள்ளது.

"ஈரானை இந்த பயங்கரத்தாக்குதலுடன் தொடர்புபடுத்துவது புஷ் நிர்வாகத்திற்கு உதவியாக இருக்கும்; ஈரானுடன் தற்பொழுது வார்த்தைகளின் யுத்தத்தை தீவிரப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது."

இதைத்தவிர, டைம்ஸ் முடிவுரையாக கூறுவதாவது: "தாக்குதலின் அசாதாரண தன்மை ஈராக்கிய அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இதை ஒரு பெரும் விவாதத்திற்கு உரிய விஷயமாக ஆக்கியுள்ளது. பல வினோதமான கருத்துக்களையும் இது அளித்துள்ளது; ஏதேனும் ஒருவிதத்தில் ஒரு மேற்கத்தைய கூலிப்படை இதில் தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என்பதே அது."

இத்தகைய "வினோதமான கருத்திற்கு" ஆதாரம் என்ன? சோதனையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் பார்க்கும்போது, கூட்டப் பகுதியை சூழ்ந்திருந்த சோதனைச் சாவடிகளில் தாக்குதலை நடத்திய டஜன் நபர்களும் அனுமதியுடன்தான் நுழைந்திருந்தனர்; ஏனெனில் அவர்கள் ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் SUV வாகனம் ஒன்றில் பயணம் செய்திருந்தனர், அமெரிக்கச் சீருடைகளை அணிந்திருந்ததோடு, அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் அடையாள அட்டைகளையும் வைத்திருந்தனர். மேலும் அவர்கள் ஆங்கிலம் பேசினர்.

Associated Press கூறியது: தாக்குதல் படையின் தலைவர் இளம் பொன்னிற மேனியர் என்று ஒரு ஈராக்கிய அதிகாரி கூறினார்."

இக்கட்டத்தில், தாக்குதலுக்கு நம்பகமான விளக்கத்தை எவரும் கொடுக்கவில்லை; அதேபோல் எவர் செய்தது என்று அடையாளமும் கொடுக்கவில்லை. ஆனால் நியூ யோர்க் டைம்ஸில் கொடுக்கப்பட்டுள்ள ஈராக்கிய ஊகக்கருத்து என்பது ஈரான்தான் பொறுப்பு என்ற கூற்றைவிட ஒன்றும் "வினாதமானது" அல்ல.

சுருங்கக்கூறின், தாக்குதல் நடத்தியவர்கள் அமெரிக்கர்களை போல் உடையுடுத்தி, நடந்து கொண்டு, தோற்றமும் அளித்து ஆங்கிலமும் பேசினர் என்றால், அவர்கள் உண்மையிலேயே அமெரிக்கர்களாகத்தான் இருந்திருக்கலாம் என்பதற்கும் வாய்ப்பு அதிகம்.

ஈராக்கில் உண்மையில் ஏராளமான "மேற்கு நாட்டு கூலிப்படைக்காரர்கள்" உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பென்டகன் புலப்படுத்தியபடி, நாட்டில் கிட்டத்தட்ட 100,000 தனியார் அரசாங்க ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டுள்ள --இவர்களில் பலரும் முன்னாள் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள்-- Blackwater USA, DynCop போன்ற நிறுவனங்கள் -ஈராக்கில் இவர்கள் இப்பொழுது ஆயுதத்துடன் இருப்பவர்கள். பல நிகழ்ச்சிகளிலும் அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரர்கள் அபு கிறைப் கைதிகள் சித்திரவதையில் இருந்து, சாதாரண மக்களை கொல்வது, பணச்சுருட்டல், ஊழல் ஆகிய குற்றங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். குறைந்தது சமீபத்திய காலம் வரையிலாவது அவர்கள் தாங்கள்தான் சட்டம் என்பது போல் நடந்துவந்துள்ளனர்; இவர்கள் ஈராக்கிய நீதிவரம்பிற்கு அல்லது அமெரிக்க இராணுவ வரம்பிற்கோ கட்டுப்படுவதில்லை. (See: "Civilian contractors in Iraq placed under US military").

செயல்நோக்கத்தை பொறுத்தவரையில், பல சாத்தியங்கள் உள்ளன. சீருடை அணிந்த துருப்புக்களுக்கும் தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையேயான கடுமையான பூசல்கள் பற்றிய தகவல்கள் ஈராக்கில் இருந்து வந்துள்ளன; சில நேரம் அவை ஆயுதமேந்திய வன்முறையாகவும் வெடித்துள்ளன. (See: "Detention of US security contractors highlights ‘culture of impunity' in Iraq")

ஹில்லா நகரத்தில் முன்னாள் அமெரிக்க மறுசீரமைப்பு ஒப்பந்தங்களின் முன்னாள் தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்ட, எதுவும் அல்லது எவரேனும் அவர்களை அம்பலப்படுத்தினாலோ அல்லது இடையூறுவிளைவித்தாலோ நிச்சயமாக கொலைகார வன்முறை நடவடிக்கைகளை தோற்றுவிக்க கூடியது போன்ற பல மில்லியன் டொலர்கள் குற்றம் நிறைந்த ஊழல் நடவடிக்கைகள் நிலவுகின்றன. (See: "Iraq fraud arrests expose criminality of US occupation")

தாக்குதலில் கொல்லப்பட்ட அதிகாரியான Capt. Brian Freeman, இராணுவ வட்டாரங்களில் போரை எதிர்த்துப் பேசுபவர் என்பது நன்கு அறியப்பட்டிருந்தது. இவர் அமெரிக்க இராணுவத்தில் இருந்து 2004ல் நீங்கினார்; ஆனால் பழையபடி Individual Ready Reserve உறுப்பினர் என்ற முறையில் அழைக்கப்பட்டு ஈராக்கிற்கு ஒரு சிவில் விவகார அதிகாரியாக அனுப்பப்பட்டார்; ஏனெனில் பதவியில் இருத்தப்படக்கூடிய நபர்களுக்கு அதிக அளவில் தேவை ஏற்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாதம், இவர் கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, இவர் ஜனநாயக செனட்டர்களான Connecticut ஐச் சேர்ந்த Chris Dodd மற்றும் Massachusetts ஐச்சேர்ந்த John Kerry இருவரையும் பாக்தாத் ஹெலிகாப்டர் இறங்கும் பகுதியில் தனியே இழுத்துச் சென்று அமெரிக்க ஆக்கிரமிப்பினால் எத்தகைய பேரழிவு ஏற்பட்டுவிட்டது என்பதைக் கூறினார்.

ஆனால் மிக முக்கியமாக இருக்கக் கூடும் உள்ளார்ந்த செயல்நோக்கம், அமெரிக்கத் துருப்புக்களை கொல்வதற்கான பொறுப்பு ஈரானுடையது என்று ஈரானை குற்றம்சாட்டுவதற்கு தாக்குதல் பயன்படுத்தும் விதத்தால் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விதத்தில், கடந்தவாரம் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski அதிர்ச்சி தரக்கூடிய வகையில் கொடுத்த சாட்சியத்தில் ஈரானுக்கு எதிராக அதிகரித்த வகையில் போர் ஆபத்து வரக்கூடும் என்பது பற்றிப் பேசுகையில், அத்தகைய இராணுவ நடவடிக்கையை வாஷிங்டன் எடுப்பதற்கு, "நடக்கக்கூடும் என்ற விதத்தில் சிலவற்றை தோற்றுவிப்பதும் அடங்கும்" என்று கூறியிருந்தார்.

"குறிப்பிட்டவற்றை ஈராக் செய்யத் தவறிவிட்டது, இதன் பின்னர் அத்தகைய தவறிவிட்டதற்கு ஈரான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்கள், பின்னர் ஈராக்கிலோ அல்லது அமெரிக்காவிலோ ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் ஈரான்மீது குற்றம் சாட்டுவது, பின்னர் "தற்காப்பிற்காக" அமெரிக்கா ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதில் முடிவது என்பதை... " அடுத்து அத்தகைய போர் தொடக்கப்பெறலாம் என்று Brzezinksi எச்சரித்திருந்தார்.

கார்பலாவில் நிகழ்ந்த சோதனை என்பது பிரேஜிஜின்ஸ்கி எச்சரிக்கை விடுத்த வகையிலான "ஆத்திரமூட்டல்" வகையை சேர்ந்ததாக இருக்குமோ?

இத்தகைய ஒத்திகைசெய்யப்பட்ட இராணுவத் தாக்குதல்களை போர் நடத்துவதற்கு ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தும் ஒரு வரலாற்று முன்னோடியும் உள்ளது. செப்டம்பர் 1, 1939ம் ஆண்டு ஜேர்மனியின் நாஜி ஆட்சி, போலந்து சீருடை அணிவித்த SS துருப்புக்களை மேல் சைலீசியா (Upper Silesia) எல்லைக்கு அருகே ஒரு ஜேர்மனிய வானொலி நிலையத்தை "தாக்குவதற்கு" ஏற்பாடு செய்தது. இன்னும் கூடுதலான முறையில் இந்த சுயதாக்குதலுக்கு சான்று இருப்பதாக காட்டவும், சம்பவ இடத்தில் தேவையான உடல்களை காட்டுவதற்கும், கடூழியச்சிறை முகாமில் இருந்த கைதிகள் கொலை செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டனர். இவ் ஆத்திரமூட்டல் போலந்து மீதான ஜேர்மனிய இராணுவ "தற்காப்பு" படையெடுப்புக்கு வழிவகுத்தது மற்றும் இரண்டாம் உலகப் போர் மூளவும் வழிவகுத்தது.

இக்காலக்கட்டத்தில் கார்பலா தாக்குதலில் ஒரு அமெரிக்க ஆதாரம் இருந்தது என்பதை நிரூபிக்க எப்படி ஸ்தூலமான சான்று இல்லையோ, அதேபோல் ஈரானிய தொடர்பு இருந்தது என்பதற்கும் ஸ்தூலமான சான்று ஏதும் இல்லை. ஆனால் புஷ் நிர்வாகத்தின் நிலைச்சான்றை எடுத்துக் கொண்டால், ஹிட்லரின் மூன்றாம் ரைகிற்கு பின்னர் "தடுப்புப் போர்" கொள்கையை ஒரு சர்வதேச கொள்கையாகப் பிரகடனப்படுத்திய முதல் பிரதான அரசாங்கம் என்னும் வகையில், அத்தகைய காட்சிகளும் எளிதில் புறக்கணித்துவிட முடியாதது ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved