World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா Global poll condemns Bush administration on Iraq war and global militarism உலகந்தழுவிய கருத்துக் கணிப்பு புஷ் நிர்வாகத்தின் ஈராக் மீதான போரையும் உலகளாவிய இராணுவவாதத்தையும் கண்டிக்கின்றது By Kate Randall புதனன்று ஒரு BBC உலக சேவை கருத்துக்கணிப்பு கொடுத்துள்ளபடி, உலக விவகாரங்களில் அமெரிக்காவின் பங்கு பற்றிய அனைத்துலக கண்ணோட்டம் வியப்புறும் வகையில் சீர்கேடடைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு, உலகின் முழுப் பகுதிகள் மீதுமான அதன் உறுதியற்ற தன்மை கொண்ட பாதிப்பிற்கு பெருகிய விரோதப் போக்கை குவித்துள்ளதுடன், பூமியின் சுற்றுச்சூழலுக்கு முன்வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றிய பெருகிய விழிப்புணர்வையும் இந்த ஆய்வு ஆவணங்கள் காட்டியுள்ளன. புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள், குறிப்பாக அது ஈராக் போரை நடத்தும் விதம் பற்றிய உலகக் கருத்துக் கணிப்பு ஒரு குற்றச் சாட்டாகத்தான் உள்ளது; அமெரிக்காவிற்குள்ளேயே அரசாங்கத்தின் அழிவு தரும் இராணுவக் கொள்கை பற்றி பெருகிய எதிர்ப்பையும் இது பிரதிபலித்துக் காட்டுகிறது. 21,000 கூடுதல் துருப்புக்களை அனுப்பத் தான் தயார் செய்து கொண்டிருப்பதாகக் கூறி, போரை முடுக்கிவிடப் போவதாக புஷ் அறிவித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வந்துள்ள இக்கருத்துக் கணிப்பு, அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க மக்களுடைய கருத்தை மீறி நடவடிக்கை மேற்கொள்கின்றதற்கு சான்றாக இருப்பது மட்டும் அல்லாமல் உலகக் கருத்தையும் கடுமையாக எதிர்த்து நிற்கும் தன்மையை காட்டியுள்ளது. நவம்பர் 3, 2006ல் இருந்து ஜனவரி 9, 2007 வரையிலான காலத்தில், (அமெரிக்கா உட்பட*) 25 நாடுகளில் இருக்கும் 26,000 மக்களுக்கும் மேலானவர்களை, BBC கருத்துக் கணிப்பு வினாவிற்கு உட்படுத்தியது. 25 நாடுகளிலும், இரண்டில் ஒருவர் இப்பொழுது அமெரிக்கா உலக அரங்கில் முக்கியமான எதிர்மறை பங்கை கொண்டுள்ளதாகத்தான் குறிப்பிட்டுள்ளார். நான்கில் மூன்று பங்கினர், கிட்டத்தட்ட 73 சதவிகிதத்தினர் ஈராக்குடனான அமெரிக்க நடவடிக்கையை ஏற்க மறுத்துள்ளனர். கருத்துக் கணிப்பில் கையாளப்பட்டுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் ஆறு பிரிவுகள் பற்றியும் உலகக் குடிமக்கள் இசைவின்மையை தெரிவித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் ஈராக் பற்றிய அமெரிக்க கொள்கை ஒப்புதல் இல்லா நிலையில், 25 நாடுகளில் பெரும்பாலனவர்கள் குவாண்டிநாமோ குடா சிறைக்கைதிகள், மற்ற கைதிகள் பற்றி அமெரிக்கா நடத்தும் விதத்தையும் கண்டித்துள்ளனர் (67 சதவிகிதம்); 2006ல் லெபனான் மீதான இஸ்ரேலிய போர் (56 சதவிகிதம்), புவி வெப்பமாதல் (56 சதவிகிதம்), ஈரான் அணுசக்தித் திட்டம் பற்றிய அமெரிக்க நடைமுறை (60 சதவிகிதம்), வட கொரியாவின் அணுசக்தி திட்டம் பற்றிய அமெரிக்க நடைமுறை (54 சதவிகிதம்) ஆகியவையும் கண்டிக்கப்பட்டுள்ளன. மேற்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடுகளில் மிக அதிகமான எதிர்ப்பு உணர்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன; ஆனால் ஏற்கவியலாது எனக் கூறும் உணர்வுகள் உலகெங்கிலும் பதிவாயின. வினா கேட்கப்பட்டவர்களுடைய பெரும்பான்மையான எதிர்ப்பு உணர்வு மட்டும் அதிக அளவில் வெளிப்பட்டுள்ளது அல்லாமல், கடந்த ஆண்டில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றிய சரிவின் விகிதமும் அவ்வாறுதான் உள்ளது. புள்ளிவிவரங்கள் பற்றிய எவ்வித பாரபட்சமற்ற பகுப்பாய்வும் அமெரிக்க காலனித்துவ ஆக்கிரமிப்பின் நேரடி விளைவாக ஈராக்கில் வளர்ந்துவரும் சீர்குலைவுக்கு ஒப்புதலளிப்பதில் இந்த சரிவினை கட்டாயம் பிணைக்கும். கடந்த காலத்தில் சாதகமான கருத்துக்கள் வெளிவந்த நாடுகளில் கூட ஏற்புநிலை விகிதம் தீவிரச் சரிவைக் காட்டுகின்றன. உதாரணமாக, போலந்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் செல்வாக்கு பற்றிய ஒப்புதல் மதிப்பீடு 24 புள்ளிகள் மொத்தத்தில் சரிந்தன; ஒராண்டிற்கு முன் 62 சதவிகிதத்தில் இருந்து இன்று 38 சதவிகிதம் என்று ஆகியுள்ளது. ஒப்புதல் விகிதம் இந்தோனேசியாவில் 19 புள்ளிகள் சரிவுற்று, கடந்த ஆண்டு இருந்த 40 சதவிகித ஏற்பிற்குப் பதிலாக இப்பொழுது 21 சதவிகித ஏற்புதான் உள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது பெரும் எதிர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. "இச்செயல் தடுப்பதை விடப் முரண்பாடுகளை தூண்டுவதாகத்தான் உள்ளது" என 25 நாடுகளில் 23 நாடுகளின் பொதுக் கருத்து உள்ளது. இக்கருத்து ஆர்ஜென்டினாவில் வாக்களித்தவர்களிடையே 86 சதவிகிதத்தினரிடையேயும், எகிப்தில் 85 சதவிகிதம், பிரான்சில் 80 சதவிகிதம், இந்தோனேசியாவில் 83 சதவிகிதம் என்று உள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இருப்பானது ஸ்திரப்படுத்தும் சக்தி என்று பெரும்பான்மையினர் உணர்ந்த ஒரே நாடு நைஜீரியா தான். கியூபாவில் உள்ள குவாண்டநாமோ குடாவில் அமெரிக்க அரசாங்கம் கைதிகளை நடத்தும் முறை பற்றியும் பரந்த வகையில் ஒப்புதல் இன்மை வந்துள்ளது; ஏற்காத்தன்மை புள்ளிகள் 25 நாடுகளில் 22ல் உள்ளன. ஆர்ஜென்டினா, சீனா, ஹங்கேரி, போலந்து, போர்த்துக்கல், ரஷ்யா மற்றும் துருக்கி என்னும் 7 நாடுகளில் ஒன்று அல்லது இரு சதவிகிதத்தினர்தாம் அமெரிக்காவில் சிறைக்கைதி முகாம் பற்றிய கொள்கைக்கு "வலுவான ஒப்புதல்" கொடுத்துள்ளனர்; ஆர்ஜென்டினா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, லெபனான், போர்த்துக்கல் துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் என்ற 9 நாடுகளில் 60 சதவிகிதத்தினருக்கும் அதிகமாக "வலுவாக ஒப்புதல் கொடுக்கவில்லை" என்றுதான் கூறியுள்ளனர். இதேபோல் உலக வெப்பமாதல் பிரச்சினைகள் பற்றிய அமெரிக்க அரசாங்கத்தின் நடைமுறைகள் பற்றியும் குறைமதிப்புக் கருத்துக்கள்தான் வந்துள்ளன; ஏற்கவியலாதது என்ற கருத்துக்கள் 19 நாடுகளில் வந்துள்ளன; இவை மாசுபடுத்துவதில் முன்னணியில் அமெரிக்கா இருக்கிறது, சர்வதேச சுற்றுச் சூழல் உடன்பாடுகளில் புஷ் நிர்வாகம் கையெழுத்திட மறுப்பதற்கு விரோதப்போக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. வாக்குப்பதிவான ஆர்ஜென்டினா, பிரேசில், சிலி, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, பெரிய பிரித்தானியா, ஹங்கேரி, இத்தாலி, மெக்சிகோ, போலந்து, போர்த்துக்கல், ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளில் ஐந்து சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக இத்துறையில் அமெரிக்கக் கொள்கைக்கு ஒப்புதல் உள்ளது. பல நாடுகளிலும் நிலவும் கருத்துக்கள் குறிப்பாக படிப்பினைகளை கொடுக்கின்றன. வாக்கெடுப்பு நடந்த 25 நாடுகளில், அமெரிக்கவின் உலகச் செல்வாக்கு பற்றி எதிர்முறை உணர்வு மிக அதிகமாக ஜேர்மனியில் காட்டப்பட்டது; 74 சதவிகித மக்கள் பெரும்பாலும் எதிர்ப்புக் கருத்தைத்தான் கொண்டுள்னர். ஜேர்மனிய அரசாங்கத் தலைவர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான வகையில் மிகப் பெரிய அளவிலான 88 சதவிகிதத்தினர் ஈராக்கில் அமெரிக்க அணுகுமுறையை மறுத்துள்ளனர், மத்திய கிழக்கு முழுவுதும் அமெரிக்காதான் உறுதிகுலைக்கும் சக்தி என்று 73 சதவிகிதத்தினர் கருதுகின்றனர். வாக்களித்த ஜேர்மனியர்களில் 84 சதவிகிதத்தினர் உலக வெப்பமாதல் பிரச்சினையில் அமெரிக்காவிற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை; இது பிரான்சிற்கு (86 சதவிகிதம்) இரண்டாவதாக மட்டுமே உள்ளது. இந்தோனேசியாவில் அபரிமிதமான பெரும்பான்மையினர் ஈராக் போரை வாஷிங்டன் நடத்தும் முறை உட்பட அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை (85 சதவிகிதத்தினர் இசைவு கொடுக்கவில்லை); 2006ல் லெபனான் போரை 81 சதவிகிதத்தினர் ஏற்கவில்லை; குவாண்டநாமோ இன்னும் பல அமெரிக்கச் சிறைமுகாம்களில் கைதிகள் நடத்தப்படும்விதத்தை (72 சதவிகிதத்தினர்) ஏற்கவில்லை. துருக்கியில், 69 சதவிகிதத்தினர் அமெரிக்காவின் உலக செல்வாக்கு பற்றி எதிர்மறைக் கருத்தைத்தான் கொண்டுள்ளனர்; இது கடந்த ஆண்டைவிட 20 சதவிகிதம் அதிகமாகும். 10 பேரில் ஒன்பது பேர் அமெரிக்கா ஈராக்கில் நடத்தும் போர் பற்றியும் இஸ்ரேல் கடந்த கோடையில் லெபனான் மீது நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளனர். நான்கில் மூன்று பேர் மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் நிற்பது உறுதிகுலைக்கும் சக்தி என்றுதான் பார்க்கின்றனர். ஆர்ஜென்டினாவில் நிலவும் கருத்துக்கள் அமெரிக்க உலகக் கொள்கைக்கு இலத்தீன் அமெரிக்கா முழுவதும் இருக்கும் எதிர்ப்பையும் விரோதப் போக்கையும் பிரதிபலிக்கின்றன. ஆர்ஜென்டினாவின் 1 சதவிகிதத்தினர்தான் ஈராக் போர் பற்றி புஷ் நிர்வாகத்தின் நடைமுறைக்கும் "வலுவான ஒப்புதல்" கொடுத்துள்ளனர்; 86 சதவிகிதத்தினர் "கடுமையான எதிர்ப்பை" காட்டியுள்ளனர். மிகப் பரந்த பகுதிகளில் அமெரிக்க கொள்கைக்கான ஆதரவுப் புள்ளிவீதம் மிகவும் சிறியது ஆகும்: இஸ்ரேலிய-லெபனான் மோதலில் அமெரிக்கா கையாண்ட முறை, குவாண்டநாமோ குடாவில் உள்ள சிறைக்கைதிகள் நடத்தப்படும் முறை, ஈரான், வட கொரியா அணுசக்தித்திட்டங்கள் பற்றிய அமெரிக்கா கையாளும் முறை ஆகியவற்றிற்கு 3 சதவிகித்தினர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர். உலக வெப்பம் பற்றி அமெரிக்கா கையாளும் முறை, வானிலை மாற்றத்திற்கான பொறுப்பு ஆகியவை பற்றி சாதகமான முறையில் 6 சதவிகிதத்தனர்தான் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணக்கு புள்ளிவிவரங்களும் மிகப் பிரந்த அளவில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. அமெரிக்கா, பொதுவாக உலகில் சாதகமான செல்வாக்கை கொண்டுள்ளது என்று பெரும்பாலானவர்கள் (57 சதவிகிதம்) கூறியுள்ளனர் என்றாலும் கடந்த ஆண்டு வந்த 63 சதவிகிதத்தைவிட இது குறைவாகும்; அதற்கும் முந்தைய ஆண்டு இது 71 சதவிகிதமாக இருந்தது. அதிகரித்த எண்ணிக்கையில் அமெரிக்கர்கள் தங்கள் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை உறுதிகுலைப்பதை, அழிவுத் தன்மை கொடுப்பதை கொண்டிருப்பதாக சர்வதேச அரங்கில் காண்கின்றனர். ஒரு உறுதியான பெரும்பான்மை 57 சதவிகிதம், அமெரிக்காவில் தங்கள் அரசாங்கம் ஈராக்கில் கொண்டுள்ள கொள்கை பற்றி ஏற்காத்தன்மையை இந்த வாக்கெடுப்பு காட்டியுள்ளது; 40 சதவிகிதத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தத் தீவிர ஒப்புதலின்மை ஜனவரி 10ம் தேதி போரை முடுக்கிவிடப் போவதாக புஷ் அறிவித்ததற்கு முன் எடுக்கப்பட்ட கருத்தில் வந்தது என்பது கணக்கில் கொள்ளப்பட வேண்டும். NBX மற்றும் வோல்ட் ஸ்ட்ரீட் ஜேர்னலின் சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, 65 சதவிகித அமெரிக்கர்கள் 2007க்குள் ஈராக்கில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, BBC யின் உலகப் பிரிவுக் கருத்துக் கணிப்பு உலகெங்கிலும் இருக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் புஷ் நிர்வாகத்தின் இராணுவ மற்றும் சுற்றுச் சூழல் கொள்கைகளுக்கு அதிகரித்த வகையில் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் என்பது மட்டும் அல்லாமல் முழு அமெரிக்க அரசியல் அமைப்புமுறை பற்றியும், ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்று இரண்டையும் சாடியுள்ளனர் எனத் தெரிகிறது. உலகின் பெரும்பாலான மக்களுடைய உயிர்கள், பாதுகாப்பு நலன்கள் ஆகியவை உலகத்தை இராணுவ வெற்றி மூலம் தன்னுடைய சொந்த செல்வக் கொழிப்பிற்காக சூறையாடும் ஒரு சிறிய செல்வக் கொழிப்புடைய உயரடுக்கிற்கு பணயம் வைக்கப்பட்டும், தியாகம் செய்யப்பட்டும் வருகின்றன. * ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, பெரிய பிரித்தானியா, ஹங்கேரி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, கென்யா, லெபனான், மெக்சிகோ, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரஷ்யா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் அமெரிக்கா உட்பட்ட நாடுகளில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது. |