World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Poll shows 82 percent of Germans feel politically disenfranchised

82 சதவிகித ஜேர்மன் மக்கள் அரசியல் ரீதியாக வாக்குரிமையிழந்து நிற்பதாக உணர்வதை கருத்துக் கணிப்பு காட்டுகிறது

By Dietmar Henning
16 January 2007

Back to screen version

உத்தியோகபூர்வ அரசியல் வாழ்விற்கும் ஜேர்மன் மக்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு, போருக்கு பிந்தைய காலத்தில் முன்னோடியில்லாத அளவிற்கு விகிதங்களை கொண்டுள்ளது. Stern இதழுக்காக நடத்தப்பட்ட Forsa கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, ஜேர்மனிய மக்களில் 82 சதவிகிதத்தினர் தாங்கள் அரசியல்ரீதியாக வாக்கிழந்து நிற்பதாக உணர்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இன்னும் கூடுதலான சதவிகிதத்தினர் தேர்தல்கள் மூலம் ஏதாவது மாற்றத்தை அடையலாம் என்ற நம்பிக்கையிலும் சந்தேகத்தை கொண்டிருக்கின்றனர்.

டிசம்பர் 2006 இறுதியில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு, "மக்களுடைய நலன்களுக்கு எவ்வித அக்றையும் காட்டப்படவில்லை" என்று மக்களில் 82 சதவிகிதம் கருதுவதாக அறிவித்துள்ளது. கிழக்கு ஜேர்மனியில் இந்த எண்ணிக்கை 90 சதவிகிதத்தை எட்டியுள்ளது. "தங்களால் ஏதாவது கருத்துக்களை கூறமுடியும்" என்ற கருத்தை 18 சதவிகிதத்தினர்தான் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பில் வந்துள்ள தகவல்கள் இன்னும் வெளிப்படையாக தேர்தல்களின் பங்கு பற்றிக் கூறியுள்ளது. கேள்வி கேட்கப்பட்டவர்களில் 5 சதவிகிதத்தினர்தான் தேர்தல்கள் மூலம் அரசியல் போக்குகளை "ஆழ்ந்த செல்வாக்கிற் உட்படுத்த முடியும்" என்று அறிவித்துள்ளனர். ஒரு தேர்தலில் பங்கு பெறுவதின் மூலம் ஒருவர் "ஓரளவு" செல்வாக்கை செலுத்த முடியும் என்று 48 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்; 47 சதவிகிதத்தினரோ தேர்தல்கள் மூலம் அரசியல் மாற்றத்தை கொண்டுவர இயலாது என்று உறுதியாகக் கூறுகின்றனர். கிழக்கு ஜேர்மனியில் இந்தப் பிந்ததைய சதவிகிதம் 56 ஆகப் பெருகியுள்ளது.

கருத்துக்கணிப்பை நடத்திய Forsa அமைப்பு ஜேர்மனியில் போருக்கு பிந்திய அரசியல் கட்டமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு முறைக்கு (Basic Law) அவர்கள் இயைந்து நடப்பது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டனர்; அவ்வரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "அனைத்து அரசாங்க அதிகாரமும் மக்களிடம் இருந்துதான் தொடங்குகிறது." ஆய்வின்படி, 36 சதவிகதத்தினர் அரசியலமைப்பு முறையால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பில் அதிருப்தி அடைந்துள்ளனர்; 61 சதவிகிதத்தினர், அவ்வமைப்புமுறை உண்மையில் செயல்படுத்தப்படுவது பற்றி அதிருப்தி அடைந்துள்ளனர். கிழக்கு ஜேர்மனியில் இதற்கு ஒத்த விகிதாசாரம் 51, 79 சதவிகிதம் ஆகும்.

மக்களுக்கும் உத்தியோகபூர்வ அரசியலுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு ஜேர்மனியின் இரு முக்கிய கட்சிகள், முன்பு "மக்கள் கட்சிகள்" என்று விவரிக்கப்பெற்றவற்றில், உறுப்பினர் எண்ணிக்கை இழப்பின் மூலமும் தெளிவாகியுள்ளது.

செப்டம்பர் 2006 முடிவில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (Christian Democratic Union- CDU) இல் 561,070 உறுப்பினர்கள் இருந்தனர். இது 1991ல் கட்சி பெற்றிருந்த உறுப்பினர் எண்ணிக்கையில் இருந்து கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இழப்பு ஆகும்; அப்பொழுது ஜேர்மனிய மறுஇணைப்பிற்கு பின்னர் CDU எண்ணிக்கை 750,000 ஐயும் விட அதிகமாக இருந்தது. சமூக ஜனநாயக கட்சி (Social Democratic Party-SPD), இன்னும் அதிகமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இழப்பை அடைந்துள்ளது. 1998ம் ஆண்டு, SPD-பசுமைக் கட்சி கூட்டணி SPD அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையில் தொடக்கப்பட்ட போது, கட்சியில் இன்னமும் 755,000 உறுப்பினர்கள் இருந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 561,000 ஆக குறைந்துவிட்டது. இரு கட்சிகளிலும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதை கடந்த ஆண்களை கொண்டிருக்கின்றன.

ஒரு புகழ்வாய்ந்த தொலைக்காட்சி நிறுவனம் இந்தக் கருத்தை அரசியல் பிரச்சனைகள் விவாதத்தின்போது எடுத்துக் கொண்டது; ஜனவரி 7ம் தேதி இதை நடத்திய Sabine Christiansen, "அரசியல் குடிமக்களை இன்னும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுகிறதா?" என்ற தலைப்பில் விவாதத்தை நடத்தினார்.

அழைக்கப்பட்ட பார்வையாளர்களில் இருந்து பேசியவருள் ஒருவர் Axel Theissen ஆவார்; இவர் ஷிலேஸ்விக்-ஹோல்ஸ்டைன் மாநிலத்தில் உள்ள Eddelak பகுதியில் இருக்கும் SPD யின் முன்னாள் உள்ளூர் தலைவர் ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இவர் மற்றும் 18 பேருடன் SPD ஐ விட்டு விலகியபோது, உள்ளூர் பிரிவும் கலைக்கப்பட்டது. இந்த இரசாயனத் தொழிற்சாலை தொழிலாளி பல ஆண்டுகள் தான் உறுப்பினராக இருந்த இக்கட்சியின் கொள்கை பற்றி தன்னுடைய இகழ்வுணர்வை வெளிப்படுத்தினார்: "சமூகப் பிரச்சினைகள் பொருட்படுத்தப்படுவது இல்லை; SPD சமூகச் செலவினக் குறைப்புக்களைத்தான் செய்து கொண்டிருக்கிறது. இது பசுமைக் கட்சியுடன் SPD கூட்டணியில் இருந்த காலத்தில் இருந்தது; இப்பொழுதும் SPD, CDU/ கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) இவற்றுடன் கொண்டுள்ள பெரும் கூட்டணிக் காலத்திலும் மாறுபட்டுவிடவில்லை'' என்றார்.

உண்மையில், 1998 முதல் 2005 வரையிலான காலத்தில் SPD-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் முன்னோடியில்லாத வகையில் செல்வ மறு பங்கீடு ஏற்பட்டுள்ளது. பெருவணிகமும் செல்வந்தர்களும் வரிக்குறைப்பு என்னும் வகையில் பில்லியன்கள் இலாபத்தை பெற்றனர்; அதே நேரத்தில் தொழிலாளர்கள், இன்னும் குறிப்பாக வேலையில்லாமல் வாடுபவர்கள் இடர்பாடுகள், சமூக, பொதுநலச் செலவினக் குறைப்புக்களினால் சந்திக்க நேரிட்டது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களுடைய எதிர்ப்பு பெருகியவுடன் SDP, CDU அதிகாரத்தை எடுத்துக்கொள்ள உதவும் வகையில் முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்துவிட்டது. அப்பொழுதில் இருந்து 2005 தேர்தல் காலத்தில் கொடுத்த உறுதிமொழிகள் அனைத்தும் ஒதுக்கப்பட்டு, புதிய நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; குறிப்பாக மதிப்புக் கூட்டப்பட்ட வரி (Value Added Tax) 3 சதவிகித உயர்வு, ஒய்வூதிய நலன்களை பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பவை கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில், வேலையில்லாதவர்களுக்கு கொடுத்து வந்த நலன்களில் கூடுதலான குறைப்புக்கள் கொண்டுவரப்பட்டதுடன், தொழில்துறைக்கு இன்னும் புதிய, பரந்த வகையில் வரிவெட்டுக்களும் வந்துள்ளன.

இச்சமீபத்திய Forsa கருத்துக் கணிப்பு வாக்காளர்கள் தேர்தல் நேரங்களில் கொடுக்கப்படும் மிகையான உறுதிமொழிகள், அடிப்பைக் கொள்கைகள் பற்றிய நயமான சொற்கள் நிறைந்த அறிக்கைகள், சமூகச் செலவின குறைப்பு பற்றிய இடைவிடாத வாதங்கள் பற்றி வெறுப்புற்றுள்ளனர் என்பதை தெளிவாக்கியுள்ளது. செய்தி ஊடகத்தாலும் அரசியல் வட்டங்களாலும் பரந்தளவில் குறைகூறப்படும் ''அரசியல், ஜனநாயகம் பற்றிய ஏமாற்ற உணர்வு" தற்போதுள்ள கட்சிகள் தொடர்பாக மக்களின் அந்நியப்படுதலினதும் மற்றும் அக்கட்சிகள் பற்றிய விரோதப் போக்கு ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும்; அக்கட்சிகளோ பெருவணிக, நிதிய நலன்களுக்கு கட்டுப்பட்டுள்ளன; அவை பெரும்பாலான மக்கள் தொகுப்பான தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுக்கு முற்றிலும் விரோதப் போக்கை கொண்டவை ஆகும்.

Stern இதழ் ஏராளமான வாசகர் கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் பெற்று அவற்றை வெளியிடவும் செய்துள்ளது. Horst Geib என்பவர் எழுதியதாவது: "எமது நாட்டையே பெருத் திகைப்பில் ஆழ்த்தியுள்ள செல்வாக்குச் செலுத்தும் (lobbyism) முழு முறையையும் தடுத்து நிறுத்துவது அவசரத் தேவையாகும்." Stern சேர்த்துக் கொள்ளுகிறது: "Horst Geib போலவே பல வாசகர்களும் பொருளாதார வட்டங்கள் அரசியல் முடிவுகளில் மிகுந்த செல்வாக்குக் கொண்டிருப்பதை குறைகூறியுள்ளனர்."

ஆனால் அரசியல் முடிவுகள் எடுப்பதில் ஓரளவு செல்வாக்கு செலுத்துவதில் பரந்த ஆர்வம் உள்ளது என்பதையும் Forsa ஆய்வு காட்டியுள்ளது. பெரும்பாலான கேள்விகேட்கப்பட்டவர்கள் (80 சதவிகிதத்தினர்), பொதுஜனவாக்கெடுப்பு மற்றும் பொதுஜன வாக்குகள் என்பது தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் வழிவகையாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஜனவரி 7ம் தேதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஜேர்மனியில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள இடது கட்சி-ஜனநாயக சோசலிசக் கட்சி (PDS) என்பதின் தலைவரான Gregor Gysi பொது அரசியல் அமைப்புமுறைக்கு பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பு இருப்பது பற்றி கவலையை தெரிவித்தார். SPD மற்றும் CDU வில் உள்ள தன்னுடைய கூட்டாளிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதத்தில், Gysi "மீண்டும் ஜனநாயகத்தை கவர்ச்சிகரமாக செய்யவேண்டியது" என்பதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு என்று கூறினார்.

நடைமுறையிலுள்ள கட்சிகளுக்கு எதிர்ப்பு என்பது முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிரான இயக்கமாக வளர்ந்துவிடக் கூடும் என்ற அச்சத்தையும் Gysi வெளிப்படுத்தனார். ஒரு சில போலியான மாற்றங்களின் மூலம் இவ் அமைப்பு முறையை நியாயமானதாக அமைத்துவிடலாம் என்ற போலித் தோற்றத்திற்கு அவர் ஊக்கம் கொடுத்தார்.

இவ்விதத்தில், அவர் சிறுநாடான ஸ்விட்சர்லாந்து எப்படி முன்மாதிரியாக உள்ளது என்பதை எடுத்துரைத்தார்; இது பல தசாப்தங்களாக வரி செலுத்துவோருக்கும் மில்லியனர்களுக்கும் பாதுகாப்பான உறைவிடமாக உள்ளது. "ஸ்விட்சர்லாந்தில், மில்லியனர்களுக்கு சட்ட பூர்வ ஓய்வுத் தொகை தேவையில்லை; ஆனால் ஓய்வூதியத் தொகை வழங்கும் திட்டத்திற்கு மில்லியனர்கள் தேவை" என்ற கொள்கை நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. நம்மிடத்தில் இக்கொள்கை இல்லை" என்றார் அவர்.

சமூகப் பிரச்சினைகள் பற்றி Gysi இன் தற்போதைய கருத்துக்களையிட்டு எவரும் ஏமாந்துவிடக் கூடாது. அன்றாட அரசியல் நடைமுறையில், Gysi இன் கட்சி தொடர்ச்சியாக "சூழ்நிலையில் அழுத்தங்களுக்கு", "விஷேடமான கடமைகளுக்கு" தலைவணங்கி நின்று, வங்கிகள், பெருவணிக ஆணைகளை செயல்படுத்தும் கொள்கைகளைத்தான் செய்து வருகிறது. இதனால் பாதிப்பிற்குட்பட்டவர்கள் மக்களின் பரந்த அடுக்குகள்தாம்; அவர்கள் பேர்லின் நகர மக்கள் போன்றவர்கள்; அவர்கள்தாம் ஜேர்மனிய தலைநகரில் SPD மற்றும் இடது கட்சியின் ஐந்தாண்டு காலக் கூட்டணியின் விளைவுகளை பெரும் வேதனையுடன் அனுபவித்து வருகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved