World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Military offensive used to clear eastern Special Economic Zone

இலங்கை: கிழக்கில் விசேட பொருளாதார வலயத்தை உருவாக்க இராணுவத் தாக்குதல் பயன்படுத்தப்படுகிறது

By S. Ajanthan
9 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை ஒன்றின் ஊடாக, கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் சம்பூர் மற்றும் மூதூர் பிரதேசத்தில் ஒரு புதிய விசேட பொருளாதார வலயத்தைச் சூழ உயர் பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரதேசம். 2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி கடந்த செப்டெம்பரில் இராணுவத்தால் கைப்பற்றப்படுவதற்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த புதிய தீர்மானம், இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்தக் கூறிவந்த அனைத்து பொய்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. இராணுவத்தின் தர்க்கம் என்னவாக இருந்த போதிலும், இந்த நடவடிக்கையின் இலக்கு, நிலத்தை கைப்பற்றி அதை மலிவு உழைப்பை சுரண்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பேரில் பாதுகாப்பான பிரதேசமாக மாற்றுவதேயாகும். சம்பூர் பிரதேசம், திருகோணமலை ஆழ்கடல் துறைமுகத்திற்கு தெற்காக அமைந்துள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவது தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தாமணி அறிவித்தல் மே மாதம் 30ம் திகதியிடப்பட்டிருந்த போதிலும், ஜூன் மாத நடுப்பகுதியிலேயே அது பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்தப் பிரதேசத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரியாக கிழக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நியமித்தார். இந்த வலயம் பிரதானமாக தமிழர்கள் வாழும் 14 கிராமங்களையும் அதே போல் அதைச் சூழவுள்ள நீர்நிலைகளையும் உள்ளடக்கிக்கொண்டுள்ளது.

கடந்த ஜூலையில் இராணுவத் தாக்குதலுக்கு ஜனாதிபதி இராஜபக்ஷ கட்டளையிட்டதை அடுத்து முதலில் இலக்கு வைக்கப்பட்ட பிரதேசங்கள் மூதூரும் சம்பூருமாகும். 2002 யுத்த நிறுத்தத்தின் கீழ் கூட தாக்குதல்கள் நடக்காத நிலையிலும், சம்பூரில் உள்ள புலிகளின் நிலைகளில் இருந்து திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு புலிகளின் ஆட்டிலறித் தாக்குதல் வரக்கூடும் என இராணுவ உயர் மட்டத்தினரும் கொழும்பு ஊடகங்களில் சிலவும் அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வந்தன.

குறிப்பிடத்தக்க வகையில், புலிகளிடம் இருந்து பிரதேசத்தை "விடுவித்திருக்காத" போதிலும், 2006 பெப்பிரவரியிலேயே உயர் பொருளாதார வலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கம் 675 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. முதலீட்டுச் சபைக்குப் பொறுப்பான அமைச்சர், திருகோணமலையில் சீனன் குடாவில் முதலீடுகளுக்கு வசதி செய்வதற்காக அலுவலகம் ஒன்றையும் ஸ்தாபித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பரில் இருந்து இராணுவத் தாக்குதல்களில் புலிகளிடம் இருந்து மட்டுமல்ல பெருந்தொகையான மக்களிடமிருந்தும் இந்தப் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது. கடுமையான மோதல்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலையில் உள்ள அகதி முகாம்களில் உள்ள ஏனைய நூறாயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து வாழத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் தமது சொந்த இடங்களுக்கும் நிலங்களுக்கும் திரும்பிச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலய விதிகளின் படி, தகுதியான அதிகாரியின் அல்லது அவரது பிரதிநிதியாக உள்ள அலுவலர்களின் எழுத்து மூலமான அனுமதியின்றி தனிநபரோ, படகோ அல்லது கப்பல்களோ இப்பிரதேசத்திற்குள் நுழைய முடியாது. இராணுவத்தின் கட்டளைக்கு அடிபணியாத எந்தவொரு தனிநபரோ, படகோ அல்லது கப்பல்களோ சூட்டுக்கு இலக்காகலாம் மற்றும் கைது செய்யப்படலாம். உயிரிழப்பு, காயம் அல்லது சேதம் ஏற்படின் நஷ்ட ஈடோ அல்லது காப்புறுதியோ வழங்கப்பட மாட்டாது. விதிகளை மீறியதாக குற்றங்காணப்படும் எவரும் மூன்று மாதம் முதல் ஐந்து மாதம் வரையான சிறைத் தண்டனையை, அதே போல் 500,000 ரூபாய்களுக்கு (4,490 அமெரிக்க டொலர்கள்) குறையாத அபராதத்தையும் மற்றும் சொத்துக்களை இழக்கும் நிலையையும் எதிர்கொள்வர்.

1983ல் உள்நாட்டு யுத்தம் வெடித்ததில் இருந்தே, இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் நூறாயிரக்கணக்கான தமிழர்களை தமது வீடுகள் மற்றும் நிலங்களில் இருந்து வெளியேற்றி தமது நிலைகளைச் சூழ மிகப் பரந்த உயர் பாதுகாப்பு வலயங்களை ஸ்தாபித்து வந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாத்திரம், 180 சதுரக் கிலோமீட்டர்களை உள்ளடக்கி 15 உயர் பாதுகாப்பு வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. கிழக்கில், இராணுவக் கட்டிடங்கள் மற்றும் முகாம்களை சூழ பல உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் வர்த்தக நலன்களைக் காப்பதற்காக உயர் பாதுகாப்பு வலயம் ஸ்தாபிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

தமிழ் அமைப்புக்கள் இந்த முடிவை இனச் சுத்தீகரிப்பு நடவடிக்கை என கண்டனம் செய்தன. தமிழர்களை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றுவது என்பது புறத்தூண்டுதல்களுக்குரிய விடயமாகும். ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், கடந்த காலங்களில் குறிப்பாக கிழக்கில், வறிய சிங்கள விவசாயிகளின் குடியேற்றத்திற்கு வழியேற்படுத்துவதற்காக பல பிரதேசங்களிலும் இருந்து தமிழர்களை வெளியேற்றி வந்துள்ளன. இத்தகைய பாரபட்சமான கொள்கை முதலில் யுத்தத்திற்கு வழிவகுத்த பதட்ட நிலைமைகளின் தோற்றுவாய்களில் ஒன்றாகும்.

புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கை தமிழர்களின் "பிறப்புரிமையை" அகற்றுவதற்கு சமமானதாகும் என பிரகடனம் செய்தார். மாவட்டத்தில் விஞ்ஞான ரீதியிலான மக்கட்தொகை அமைப்பை மேலும் மாற்றியமைக்கும் முயற்சி என அவர் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியதோடு இந்தத் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் கோரினார்.

இடம்பெயர்ந்த அகதியாகியுள்ள ஒருவர் கடந்த மாதம் பி.பி.சி. க்குத் தெரிவித்ததாவது: "இந்தப் பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் தாங்கிகளும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களும் இருந்தன. இருபதுக்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன. எங்களது கிராமங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறுவதை நினைத்துப் பார்ப்பது கூட கடினம். எங்களது நிலங்களைத் திருப்பிக் கொடுக்குமாறும் மற்றும் எங்கள் அனைவரையும் மீளக் குடியேற்றுமாறும் நாம் அரசாங்கத்திடம் கெஞ்சிக் கேட்கின்றோம். இல்லையெனில், எங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் நாங்கள் எதையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளோம்."

இடம்பெயர்ந்தவர்கள் தமது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவையில்லை என இன்னுமொரு கிராமத்தவர் பி.பி.சி. க்குத் தெரிவித்தார். "கடவுள் புண்ணியத்துக்காவது எங்களை எமது கிராமங்களில் குடியேற அனுமதியுங்கள்," என அவர் தெரிவித்தார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பொது மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டதோடு, இது "அவர்களின் சொந்த பாதுகாப்புக்காகவும் மற்றும் அங்கு வரவுள்ள இன்றியமையாத ஸ்தாபனங்களின் பாதுகாப்புக்காகவும்" என சிடுமூஞ்சித்தனமாக தெரிவித்தார்.

அரசாங்கம் விசேட பொருளாதார வலயத்திற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது என்பதையும் ரம்புக்வெல்ல ஏற்றுக்கொண்டதோடு, "பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் சில சமயங்களில் மக்களின் மீள் குடியேற்றத்தை அவசியமாக்கலாம். முன்னரும், இலங்கையின் தெற்கில் உள்ள மஹாவலி நீர்த்தேக்கத் திட்டம் ஆயிரக்கணக்கானவர்களை இடம்பெயரச் செய்த போதிலும், எவரும் அதை எதிர்க்கவில்லை!" எனக் கூறி இந்த நகர்வை நியாயப்படுத்தினார்.

ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டாமல் இருந்தது என்னவெனில், துப்பாக்கி முனையில் மக்களை வெளியேற்றி, பொருளாதார அபிவிருத்திக்காக பிரதேசத்தை விடுவிப்பதற்காக இராணுவத்தைப் பயன்படுத்துமளவிற்கு முன்னோடி சம்பவம் எதுவும் இருக்கவில்லை என்பதையாகும். 1970களின் பின்னரும் 1980களுக்கு முன்னரும் பத்தாயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த மஹாவலி நீர்த்தேக்கத் திட்ட விவகாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பரந்த எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்ததோடு நிலமும் நஷ்ட ஈடும் வழங்கத் தள்ளப்பட்டது.

சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கில் விசேட பொருளாதார வலயத்தை ஸ்தாபிப்பதானது அரசாங்கத்தின் பரந்த திட்டங்களின் ஒரு பாகமாகும். கடந்த 2006 நவம்பரில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதி இராஜபக்ஷ பிரகடனம் செய்ததாவது: "திருகோணமலையை முதலீடு மற்றும் உல்லாசப் பிரயான வலயமாக முன்னிலைப்படுத்துவன் பேரில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாவட்டங்களில் பல பிரதான வீதிகளையும் பாலங்களையும் மற்றும் வடக்கு அதிவேக சாலையையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

"நகர அபிவிருத்தி அதிகார சபையும் முதலீட்டு சபையும் ஏற்கனவே திருகோணமலையை ஒரு முதலீட்டு மற்றும் உல்லாசத்துறை வலயமாக்குவதற்கான உற்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டமொன்றை நிறைவுசெய்துள்ளதோடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துணிந்து செயலாற்றுவதற்கான உத்தரவாதம், வரிவிலக்களிப்பு, வெளிநாட்டு நாணயமாற்று மற்றும் ஏனைய செயலூக்கங்களையும் வழங்கும். கொழும்பு துறைமுகத்தின் அழுத்தங்களை குறைப்பதற்காக உள்ளூர் வர்த்தக சரக்கு ஏற்ற இறக்கத்தில் கூட்டாக செயற்படுவதற்கு திருகோணமலை துறைமுகம் பயன்படுத்தப்படும்."

திரும்பவும் கைப்பற்றப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தை 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஸ்தாபிப்பதற்காக இந்தியாவின் மின் மற்றும் எரிசக்தி அமைச்சருடன் இலங்கை மின்சார சபை கடந்த டிசம்பரில் உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டது. இந்த அறிவிப்பு பரந்த எதிர்ப்பைக் கிளறிவிட்டதால் இந்த தளம் சம்பந்தமான இறுதி முடிவை ஒத்தி வைக்க இந்திய அரசாங்கம் தள்ளப்பட்டது. இந்த புதிய மின் நிலையமானது திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய கைத்தொழில்களையும் ஸ்தாபிப்பதற்கான திட்டங்களின் மைய ஆக்கக்கூறு என்பது தெளிவு.

இந்த புதிய அறிவிப்பு, இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக வழங்கப் போவது எதுவும் இல்லை, மாறாக தீவின் ஆளும் கும்பலின் நிகழ்ச்சி நிரலை முன்னேற்றவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.