World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lanka: Armed gang sets fire to newspaper printshop இலங்கை: பத்திரிகை அச்சகத்திற்கு ஆயுதக் கும்பல் தீ வைத்தது By W.A. Sunil நவம்பர் 21 விடியற் காலையில் கொழும்பு தெற்கில் உள்ள லீடர் வெளியீட்டாளர்களின் அச்சகத்திற்குள் நுழைந்த கும்பலொன்று அச்சகத்திற்குத் தீமூட்டியது. எந்தவொரு குழுவும் இதற்குப் பொறுப்பேற்காத அதே வெளை, சூழ்நிலையானது பாதுகாப்புப் படைகள் அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகள் மற்றும் குண்டர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை பலமான முறையில் சுட்டிக்காட்டுகின்றது. இந்த செய்தித்தாள் வெளியீட்டாளர்களுக்கு எதிரான இந்த பகிரங்கமான குண்டர் தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தம் உக்கிரமாக்கப்படுவதுடன் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஊடகங்கள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்களின் ஒரு பாகமாகும். சண்டே லீடர் மற்றும் மோர்னிங் லீடர் ஆகிய இரு ஆங்கிலப் பத்திரிகைகளையும் இருதின என்ற சிங்களப் பத்திரிகையையும் வெளியிடும் லீடர் வெளியீட்டாளர்கள், இராஜபக்ஷ அரசாங்கத்தை பெருமளவில் விமர்சிப்பவர்களாவர். அண்மைய மாதங்களில், லீடர் வெளியீடுகள் பொது நிறுவனங்களில் நடந்த ஊழல்கள், அரசாங்கத்தின் முறைகேடான அரசியல் மற்றும் பண கொடுக்கல் வாங்கல்கள், அரசாங்க சார்பு துணைப்படைகளின் நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. உள்நாட்டு யுத்தம் விரிவடைவதானது ஆழமடைந்துவரும் சமூக அமைதியின்மையையும் அரசியல் எதிர்ப்புக்களையும், அதே போல் இராணுவ அழிவையும் பொருளாதார நெருக்கடிகளையும் வெளிக்கொணரும் என்பதையிட்டு கவலையடைந்துள்ள ஆளும் கும்பலினதும் பெரும் வர்த்தகர்களினதும் பிரிவினரின் பார்வையை இந்த அம்பலப்படுத்தல்கள் பிரதிபலிக்கின்றன. சம்பவத்தை நேரில் கண்டவர்களின்படி, நவம்பர் 21ம் திகதி சுமார் விடியற் காலை 2 மணியளவில் தானியங்கி துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் குண்டாந்தடிகளுடன் பாய்ந்த தாக்குதல்காரர்கள், இயந்திரங்கள், விநியோகிப்பதற்குத் தயாராக இருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை கட்டுகள் மற்றும் காகித ரோல்களுக்கும் தீமூட்டினர். கூரையின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது. உலக சோசலிச வலைத் தளத்திற்கு விளக்கமளித்த பாதுகாப்பு உத்தியோகத்தரான ஆர். கருணாரட்ன: "முதலில் நான்குபேர் பலாத்காரமாக கேட்டுக்கு மேல் குதித்து வளாகத்திற்குள் நுழைந்தனர். பின்னர் இருவர் கேட்டுக்கு அருகில் கண்காணிப்பில் இருக்க மேலும் எட்டு அல்லது ஒன்பது பேர் நுழைந்தனர். அவர்கள் என்னை அச்சகத்திற்குள் இழுத்துச் சென்றதோடு என்னை கீழே மண்டியிடுமாறு துப்பாக்கி முனையில் கட்டளையிட்டனர். அவர்கள் ஒரு ஜீப்பிலும் ஒரு வானிலும் வந்தனர்," என்றார். இயந்திரத்தை இயக்குபவரான சந்தன தெரிவித்ததாவது: "அவர்களில் (தாக்குதல்காரர்கள்) இருவரைத் தவிர ஏனையவர்கள் கருப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டிருந்தனர். அவர்கள் எல்லா இடத்திலும் தேடியதோடு தொழிலாளர்களை முன்னுக்குக் கொண்டுவந்தனர். எங்களை மண்டியிடுமாறு துப்பாக்கி முனையில் கட்டளையிட்டனர். எங்களில் மூவர் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டனர். அவர்கள் ஆறு செல்லிடத் தொலைபேசிகளையும் மூன்று பணப்பைகளையும் தொழிலாளர்களின் சேப்புகளில் இருந்து அபகரித்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் இயந்திரங்கள், மோர்னிங் லீடர் பத்திரிகை கட்டுகள் மற்றும் கடதாசி ரோல்கள் மீது பெற்றோலை ஊற்றியதோடு குண்டு போன்ற ஒன்றையும் வெடிக்க வைத்தனர். அவர்கள் தமது வேலையை சுமார் 15 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டனர்." லீடர் அச்சகம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளது. ரத்மலானை விமானநிலையம், விமானப்படைத் தளம் மற்றும் குடியிருப்பு கட்டிடமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன. கொத்தலாவலை இராணுவக் கல்லூரி மற்றும் ஒரு இராணுவ முகாமும் அருகில் உள்ளன. இராணுவ சோதனை நிலையங்கள் பல உள்ளூர் சந்திகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு ஏற்கனவே உயர் பாதுகாப்பு தயார் நிலையில் உள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்களில் பிரதான கட்டிடங்கள் மற்றும் இராணுவ தளங்களைச் சூழ கட்டுப்பாடுகளும் சோதனைகளும் இன்னும் இறுக்கமானதாகும். பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பு அல்லது சம்பந்தம் இன்றி அத்தகைய ஒரு பிரதேசத்திற்குள் கனரக ஆயுதம் தரித்த கும்பல் ஒன்று நுழைவது, பெருமளவில் நடைமுறை சாத்தியமற்றதாகும். ஒவ்வொரு சூழ்நிலையும் -அமைவிடம், நேரம், ஆயுதங்கள் மற்றும் அந்தக் கும்பல் கையாண்ட கைதேர்ந்த வழிமுறை- பாதுகாப்புப் படைகள் மற்றும் அதனுடன் சேர்ந்த துணைப்படைகளின் தொடர்பை சுட்டிக்காட்டுகின்றன. சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசன்த விக்கிரமதுங்க இராஜபக்ஷ அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார். "பயங்கரவாத அமைப்பு போல் செயற்படும் ஒரு அரசாங்கத்தால் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலே இது," என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்தை குற்றம் சாட்டிய அளவில், இதில் அரசாங்கம் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவு. லீடர் வெளியீட்டகம் அதன் எதிர்க்கட்சி சார்பு நிலைப்பாட்டுக்காக மீண்டும் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஒரு பெண் பேச்சாளர் கூறியதாவது: "எமது நிறுவனம் இரண்டாவது தடவையாகத் தாக்கப்பட்டுள்ளது. முதலில் 2005 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலின் மத்தியில் தாக்கப்பட்டது. பொலிசார் சிலரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போதிலும், பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இப்போது இரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பொலிசார் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவரவில்லை. "இம்முறை (தாக்குதல்காரர்கள்) அவர்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். எமது பத்திரிகையை வெளியிடுவதை தடுப்பதே தாக்குதலுக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் என்பது தெளிவு. தற்போதைய சூழ்நிலையில் யார் இதை செய்தது என எங்களால் நிச்சயமாகக் கூற முடியாவிட்டாலும், இது தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் ஒரு பாகமேயாகும்." லீடர் செய்தித்தாள்களில் வெளிவரும் பலவித செய்திகள் தொடர்பாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் (சீ.ஐ.டி.) சேர்ந்த அதிகாரிகளால் அடிக்கடி விசாரணைகள் நடத்தப்படுவதையும் சில வாரங்களுக்கு முன்னர் கப்பம் கோரியதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் சுமத்திய போலி குற்றச்சாட்டின் பேரில் ஆதர் வாமனன் என்ற லீடர் நிருபர் ஒருவரை சீ.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்ததையும் அவர் நினைவூட்டினார். நவம்பர் 21 நடத்தப்பட்ட தாக்குதலை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கண்டனம் செய்தனர். இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் இதை "பெரும் அட்டூழியம்" என கண்டனம் செய்தது. நவம்பர் 23 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை செய்தனர். சர்வதேச பத்திரிகை நிறுவனம் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. அதன் இயக்குனர் ஜோன் பி. ஃபிரிட்ஸ் தெரிவித்ததாவது: "எந்தவொரு தீர்க்கமான செய்தியையும் அடக்கி வைப்பதற்காக அரசாங்கத்துடன் நெருக்கமான கும்பல்களால் உயர்ந்தளவில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதற்கான அனைத்து தரக்குறியீடுகளும் லீடர் வெளியீட்டகம் மீதான புதிய தாக்குதலில் உள்ளது." இந்த நிறுவனம் ஊடக சுதந்திரம் மீறப்படுவதை கண்காணிக்கும் பூகோள கண்காணிப்பு பட்டியலில் இலங்கையை மீண்டும் உள்ளடக்கியுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்துள்ளது. இப்போது நிலையான விலக்களிப்பாகி இருப்பது என்னவெனில், இந்தத் தாக்குதல் "அரசாங்கத்துக்கு இக்கட்டு நிலையை ஏற்படுத்தவும் ஜனாதிபதியின் நற் பண்புக்கு களங்கம் ஏற்படுத்தவும் எடுத்த முயற்சியாகும்" என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிக்கின்றார். "குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு" ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். எதிர்மாறாகவே விடயங்கள் நடைபெறும் என்பதை அரசாங்கத்தின் சாதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. 2005 நவம்பரில் ஜனாதிபதி இராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, மூன்று ஆண்டுகளுக்குள் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பல செய்திப் பத்திரிகை அலுவலகங்கள், யாழ்ப்பாணத்தில் உதயன் மற்றும் கொழும்பில் சுடர் ஒளி உட்பட குறிப்பாக தமிழ் மொழி பத்திரிகைகள் பல தடவைகள் தாக்கப்பட்டுள்ளன. நவம்பர் முற்பகுதியில், ஈதலய என்ற இணையத்தின் நிருபர் குமுது சம்பிக ஜெயவர்தனவை இரு அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகள் சுட்டதில் அவர் கடுங் காயங்களுக்கு உள்ளாகினார். இந்தக் குற்றங்களுக்காக எவரையும் அடையாளங் காணவோ அல்லது குற்றஞ்சாட்டவோ உத்தியோகபூர்வ விசாரணைகள் தவறிவிட்டன. அக்டோபரில், "பொய் மற்றும் பொறுப்பற்ற" செய்திகளை ஒலிபரப்பியதாகக் கூறி தனியாருக்கு சொந்தமான ஏ.பி.சி. வானொலி நிறுவனத்தின் அனுமதி இரத்து செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து தென்கிழக்கில் 260 கிலோமீட்டரில் உள்ள ரன்மினிதென்ன நகருக்குள் ஆயுததாரிகள் ஊடுருவியுள்ளதாக வெளியிட்ட செய்தி பற்றி உடனடியாக திருத்தம் வெளியிடப்பட்ட போதிலும் அதன் அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. அக்டோபர் 29 அன்று "தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் அரசாங்கம் கொடூரமான அவசரகால சட்டங்களை கொண்டுவந்தது. இதன் மூலம் இராணுவக் கொள்வனவுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் கடுமையாக தணிக்கைக்கு உள்ளாக்கப்படவிருந்தன. ஆயினும், வெகுஜன எதிர்ப்பின் காரணமாக இந்த விதிகளை விலக்கிக்கொள்ள நேரிட்டது. அரசாங்கமும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதக் கட்சிகளும் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. லீடர் வெளியீட்டகம் மீதான அண்மைய தாக்குதலானது, யுத்த வரவுசெலவுத் திட்டம் என்று மட்டுமே விவரிக்கக் கூடிய வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக வெறும் 16 வாக்குகள் பெற்று குறுகிய பெரும்பான்மையில் நிறைவேற்றிக்கொண்ட இரண்டு நாட்களின் பின்னரே நடந்தது. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் பங்காளிகளும், வரவுசெலவுத் திட்டத்தை எதிர்ப்பவர்களை புலி ஆதரவாளர்கள் என சித்தரித்து கிலியூட்டும் பிரச்சாரத்தை நாடின. வறுமை, வேலையின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் யுத்தம் சம்பந்தமாக உழைக்கும் மக்கள் மத்தியில் குவிந்துவரும் அதிருப்தியின் மத்தியில், எந்தொரு மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பையும் கூட இராஜபக்ஷ அரசாங்கத்தால் தாங்கிக்கொள்ள முடியாது. நவம்பர் 21ம் திகதி தாக்குதல், தனது எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் போது அது வன்முறையைக் கையாளத் தயங்காது என்பதற்கான அறிகுறியேயாகும். |