World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

West Bengal: Left Front government rattled by popular outrage over Nandigram massacre

மேற்கு வங்கம்: நந்திக்கிராமம் படுகொலை பற்றிய மக்கள் சீற்றத்தால் இடது முன்னணி அரசாங்கம் நடுக்கம்

By Arun Kumar and Ganesh Dev
10 December 2007

Back to screen version

ஸ்ரானிலிசத் தலைமையிலான இடது முன்னணி, அதிலும் குறிப்பாக அதன் முக்கிய பங்காளி CPM எனப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்), மேற்கு வங்கத் தலைநகரமான கொல்கத்தாவிற்கு தென் மேற்கில் இருக்கும் கிராமங்களின் தொகுப்பான வறிய விவசாயிகள் இருக்கும் நந்திக்கிராமத்தில் CPM இன் அடியாட்கள் கடந்த மாதம் குருதி கொட்டிய தாக்குதல் நடத்தியதற்கு பொதுமக்கள் காட்டிய கண்டனத்தில் நடுங்கிப்போய் விட்டது.

கடந்த ஜனவரி மாதம் நீண்ட கால CPM ஆதரவாளர்கள் உட்பட நந்திகிராமத்தின் பெரும்பாலான மக்கள், மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் அவர்களுடைய நிலத்தை அபகரித்து இந்தோனேசிய தளத்தைக் கொண்ட சலீம் குழுமத்திற்கு ஒரு இரசாயன ஆலை அமைப்பதற்காகக் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்து எழுச்சியுற்றனர். பல நாட்கள் நடந்த வன்முறை மோதல்களில் அரசாங்க அதிகாரிகளும் CPM விசுவாசிகளும் நந்திகிராமத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

பல CPM தொண்டர்களின் இறப்புக்களுக்கு பழி தீர்க்கும் உறுதியில், மற்றும் இந்திய, வெளிநாட்டு மூலதனத்திற்காக சிறப்புப் பொருளாதாரம் அமைக்க விளைநிலங்களைப் பறிக்கும் அதன் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளை நசுக்குவதற்காக, மேற்கு வங்க மாநில அரசாங்கம் சிறப்பு அதிரடிப்படையினர் உள்பட நிறைய ஆயுதங்கள் ஏந்திய 4,000 போலீசாரை கடந்த மார்ச் மாதம் மீண்டும் நந்திக்கிராமத்தைக் கைப்பற்ற அனுப்பியது. அதையொட்டி ஒரு குருதிப் புனல் ஓடியது; குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர் என்றாலும், போலீசார் விரட்டியடிக்கப்பட்டனர்.

அக்டோபர் கடைசி, நவம்பர் தொடக்கத்தில் CPM தலைமை மீண்டும் நந்திக்கிராமத்தின்மீது ஒரு புதிய தாக்குதலை நடத்தத் தயாரிப்புக்களை மேற்கொண்டது; இம்முறை போலீசார் இல்லாமல் ஆயுதமேந்திய கட்சிக் குண்டர்களை பயன்படுத்தியது. ஏராளமான நேரில் பார்த்த சாட்சியங்கள் கூறியபடி, CPM அமைத்திருந்த படை பயங்கர நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைந்தது எட்டு பேரையாவது கொன்றதுடன், காயமுற்றவர்கள் மருத்துவ பாதுகாப்பை உடனே பெறுவதையும் தடுத்து ஆயிரக்கணக்கான கிராமவாசிகளை அவர்களுடைய வீடுகளில் இருந்து விரட்டியது. (See West Bengal's Stalinist government mounts terror campaign to quash peasant unrest)

ஒரு இராணுவ முன்னோக்கின்படி CPM தாக்குதல் ஒரு வெற்றி என்றாலும், பெருவணிகம் ஸ்ராலினிஸ்ட்டுகள் எந்த அளவிற்கு தங்கள் முதலீட்டாளர்-சார்பு உடைய "தொழில்மயமாக்குதல்" செயற்பட்டியலுக்கு எதிர்ப்பை நசுக்கத் தயாராக உள்ளனர் என்பதில் களிப்பு அடைந்த நிலையில், நந்திகிராமத்தில் நடந்த நிகழ்வுகள் இந்திய உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இயல்பு என்ற இடது முன்னணியின் பாசாங்குகளைச் சிதற அடித்துள்ளன.

ஒரு தன்னெழுச்சியான முறையில் நூறாயிரம் மக்கள் எழுச்சியுற்று, ஒரு சமூக நிலைப்பாட்டிலிருந்து நவம்பர் 14ம் தேதி ஒரு முற்றிலும் கலந்த மக்கள் தொகுப்பில் CPM இன் நந்திகிராமத்தை "மீண்டும்" கைப்பற்றுவதை எதிர்ப்பதற்குக் கூடினர். ஏராளமான கலைஞர்கள், அறிவுஜீவிகள், நீண்டகாலமாக CPM உடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் சோசலிசத்துடன் அடையாளம் காணப்பட்டிருந்த ஒரு கட்சி பெரு வணிகத்தின் கருவியாக நடந்து கொள்ளுவதுடன், மேற்கு வங்கத்தில் மட்டும் இல்லமல் இந்தியா முழுவதும் பெரும்பான்மையில் இருக்கும் விவசாயிகள் நிலைமை பற்றி முழு அசட்டை காட்டுவது பற்றியும் தங்கள் மனவேதனை, சீற்றம் ஆகியவற்றைப் வெளிப்படுத்தினர்.

CPM ன் இடது முன்னணி தோழமைக் கட்சிகள்கூட நந்திக்கிராமம் குருதி நிகழ்வுகளில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொள்ளது உகந்தது என்று கருதிவிட்டனர். CPI எனப்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிசக் கட்சி அனைத்தும் நந்திகிராமத்தை மீண்டும் கைப்பற்றுவது பற்றி கூட்டணிப் பங்காளிக் கட்சி தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறியதுடன், CPM தான் வன்முறைக்கு முற்றிலும் காரணம் என்றும் கூறிவிட்டன.

மேற்கு வங்க முதல் அமைச்சரும் CPM பொலிட்பீரோ உறுப்பினருமான புத்ததேப் பட்டாச்சாரி நந்திகிராமம் மீட்கப்பட்டதை அடுத்து CPM ன் எதிரிகள் "அவர்கள் வழிப்படியே பதிலடி கொடுக்கப்பட்டனர்" என்று களித்தது பற்றி தான் "வருந்துவதாக" அறிவித்தபின், டிசம்பர் 4ம் தேதி CPI ன் வங்கமாநிலச் செயலாளரான மஞ்சு குமார் மஜும்தார் "எந்த அளவிற்கு அவர் ஒப்புக் கொண்டதில் நேர்மை உள்ளது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அதை வரவேற்கிறோம்" என்றார்.

Kolkata Telegraph உடைய கருத்தின்படி, "தனிப்பட்ட முறையில் மூன்று CPM பங்காளிகளும் ...பட்டாச்சார்ஜியின் கருத்துக்கள் "கட்சியின் பொலிட்பீரோ தெரிவித்தபடி சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைதான்" என்று விளக்கினர்" என்று உள்ளது.

CPM உடைய நட்புக் கட்சிகள் நந்திக்கிராமம் நெருக்கடியை ஒட்டிய நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மேற்கு வங்க அரசாங்கம் மற்றும் இடது முன்னணியின் கொள்கையை உருவாக்குவதில் கூடுதலான பங்கைக் கொள்ள முற்பட்டுள்ளன. பார்வார்ட் பிளாக்கின் தலைவரான அசோக் கோஸ் அறிவித்தார்: "இன்று முதலமைச்சர் கூறியதைத்தான் நாங்கள் நீண்ட காலமாகக் கூறிக் கொண்டிருக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சிப் போக்கு CPM னால் மட்டும் முடிவெடுக்கப்பட முடியாதது. அரசியலில் பெரும் தவறுகளை ஒப்புக் கொள்ளுவது நன்மையே ஆகும்."

முன்கூட்டிக் கணிக்கக்கூடிய வகையில், CPM மற்றும் இடது முன்னணி ஆகியவை தாங்கள் பெருவணிகத்துடன் ஊடாடி நிற்றல் மற்றும் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை இரக்கமற்ற முறையில் செயல்படுத்துவது ஆகியவற்றிற்கு இன்னும் வலதுபுறம் சென்றுள்ள அளவில்தான் இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

நந்திக்கிராமம் மீண்டும் குருதியைக் கொட்டவைத்து கைப்பற்றப்பட்ட சில நாட்களில், இடது முன்னணி இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம் இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செயல்படுவதற்காக நடக்கும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண்பதற்குக் கொண்டிருந்த நீண்டகால எதிர்ப்பை கைவிட்டது; மேலும் சர்வதேச அணுசக்தி அமைப்புடன் இந்தியாவிற்கு உலக அணுசக்தி கட்டுப்பாட்டு ஆட்சியில் சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் அனுமதித்துள்ளது. (காங்கிரஸ் தலைமையிலான UPA ஒரு சிறுபான்மை அரசாகும்; அது பாராளுமன்றத்தில் நிலைத்திருக்க இடது முன்னணியின் ஆதரவைத்தான் நம்பியிருக்கிறது.)

CPM மற்றும் இடது முன்னணி அணுசக்தி உடன்பாட்டிற்கு எதிராக, அது இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயக் கட்டாய நடவடிக்கைகளுடன் கட்டிப்போட்டுவிடும் என்று வாதிட்டு எதிர்த்ததை தொடர்ந்தாலும், பெருநிறுவன இந்தியாவின் பெருமகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் அரசாங்கத்தை வாஷிங்டனுடன் கொள்ள இருக்கும் ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்குக் கொடுத்து வந்த தடையை நீக்கிக் கொண்டுவிட்டது. (See: Indian Stalinists reverse course, allow Indo-US nuclear deal go to IAEA)

இதற்கிடையில், மேற்கு வங்க முதல் மந்திரியான பட்டாச்சார்ஜி, இடது முன்னணி அரசாங்கத்தின் "தொழில்மயமாக்கும் கொள்கையில் இருந்து" பின்வாங்கும் பேச்சிற்கு இடமில்லை என்று சபதம் எடுத்துள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத்தில் வியாழனன்று நந்திக்கிராமத்தில் நடந்த வன்முறையைக் கண்டிக்கும் எதிர்க்கட்சித் தீர்மானம் ஒன்றில் பேசிய அவர் இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் மிக அதிகமான பெருநிறுவன முதலீடுகள் வந்துவிட்டதாக பீற்றிக் கொண்டதுடன், நந்திக்கிராமம் விவசாயிகளின் எதிர்ப்பு அரசாங்கத்தின் திட்டமான விளைநிலைத்தை சிறப்பு பொருளாதாரப் பகுதிகள் அமைப்பதற்காக பறித்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று அறிவித்தார்.

மேற்கு வங்க அரசாங்கமும் நஸ்ரீன்-எதிர்ப்பு கலகமும்

இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது கொல்கட்டாவில் நவம்பர் 22 அன்று பங்களா தேசத்தின் எழுத்தாளரான Taslima Nasreen இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரிய ஒரு வன்முறை எதிர்ப்பிற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் கொடுத்த விடையிறுப்பு ஆகும்; அவ்வன்முறை நந்திக்கிராம் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்பட்டது பற்றியும் கண்டித்தது.

முஸ்லிம் அடிப்படைவாத All-India Minority Forum (AIMF) துவக்கி, ஒரு காங்கிரஸ் கட்சி உறுப்பினரால் வழிநடத்தப்பட்ட கொல்கட்டா எதிர்ப்பு வெளிப்படையாக ஒரு வலதுசாரித் தூண்டுதல் தன்மையில் இருந்தது. நந்திகிராமத்தில் CPM செயல்பாடுகள் பற்றிய மக்கள் சீற்றத்தை ஒரு பிற்போக்குத்தன, வகுப்புவாத திசையில் திருப்பப்பட்ட விதத்தில் விரைவில் ஒரு கலகமாயிற்று.

ஆனால் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பதிலடி கொடுக்கும் விதத்தில் விடையிறுத்தனர். ஒரு சில ஆயிரம் பேரே கொண்ட எதிர்ப்பை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தைக் கூப்பிட்டது; பின்னர் முஸ்லிம் அடிப்படைவாத வலதிற்கு தாழ்ந்து மரியாதை செலுத்தும் வகையில் மகளிர் பால் மரபார்ந்த சமய அணுகுமுறைகளைக் கண்டித்திருந்த ஒரு முஸ்லிமான தஸ்லிமா நஸ்ரீனை மேற்கு வங்கத்தில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றியது.

இந்தியாவின் கிழக்குப் பெருநகரத் தெருக்களில் இராணுவத்தை நிறுத்திய இடது முன்னணி அரசாங்கத்தின் செயல் இரு நோக்கங்களைக் கொண்டிருந்தது. நந்திக்கிராமத்தில் CPM நடத்திய குற்றங்களில் இருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப அது உதவியது; மேலும் பெருவணிகத்திற்கு ஸ்ராலினிஸ்டுகள் எப்படியும் "சட்டம், ஒழுங்கை" காப்பர் என்பதை நிரூபணம் செய்யவும் உதவியது.

தன்னுடைய பங்கிற்குப் பெருவணிகம் மேற்கு வங்க அரசாங்கத்திடம் தனக்கு இருக்கும் நம்பிக்கையை விரைவில் வெளிப்படுத்திக் கூறியது. AIMF எதிர்ப்பிற்கு மறுநாள் பேட்டிகாணப்பட்ட போது, RPG குழுவின் துணைத் தலைவரும் முன்னாள் இந்தியத் தொழில் துறை கூட்டமைப்பின் தலைவருமான சஞ்சீவ் கோயங்கா The Hindu விடம் கூறினார்: "மாநிலம் இடது ஆட்சியின் கீழ் நன்கு நடைபெறுகிறது; மேற்கு வங்கத்தின் பொருளாதார வருங்காலம் பற்றி நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்."

எழுத்தாளர் நஸ்ரினை மேற்கு வங்கத்தில் இருந்து ஸ்ராலினிஸ்டுகள் வெளியேற்றியதும் மக்கள் எதிர்ப்பை எச்சரித்ததற்கு ஒரு இழப்பீடு கொடுக்கும் வகையில் முஸ்லிம் அடிப்படை வாத வலதுடன் சமரசம் செய்து கொண்ட முயற்சியே ஆகும். 25 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கும் மேற்கு வங்கம் இந்திய மாநிலங்களில் அதிக முஸ்லிம்களைக் கொண்டவற்றில் ஒன்று ஆகும்.

AIMF எதிர்ப்பு எந்த அளவிற்கு வலதுசாரி சக்திகள் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் பெருவணிகக் கொள்கைகள் பற்றிய மக்கள் சீற்றத்தைப் பயன்படுத்தி தங்களையும் இந்திய அரசியலையும் இன்னும் வலதிற்கு தள்ள முற்பட்டது என்பதற்கு அடையாளம் ஆகும்.

முதலும் முதன்மையாகவும் இந்த வலதுசாரி சக்திகளுள் அடங்கியவை பெருநிறுவன இந்தியாவும் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கமும் ஆகும்.

இந்திய செய்தி ஊடகம் நந்திகிராமம் நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு, ஸ்ராலினிஸ்டுகள் பெருவணிகத்தின் சிறப்புப் பொருளாதார பகுதிகளின் நலன்களுக்காக விவசாயிகள் இயக்கத்தை அடக்கியமுறை 1917 ரஷ்ய புரட்சி-எதிர்ப்பு, மற்றும் இழிந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டன.

ஸ்ராலினிஸ்டுகள் தாங்கள் கூறியபடி இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையில் தொடர்ந்து நடந்து கொள்ளாவிட்டால், இடது முன்னணியுடன் ஒரு முறிவுக்குத் தயாராக இருந்த காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் முக்கிய எதிர்க் கட்சியாக இருக்கும் மமதா பானர்ஜியின் திருணமூல் (Grassroots) காங்கிரசுடன் உடன்பாட்டை உறுதிபடுத்திக்கொள்ள நகர்ந்தது. பானர்ஜி ஒரு கடுமையா கம்யூனிச எதிர்ப்பாளர், நீண்டகாலமாக இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியின் நண்பரும் ஆவார். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக இவர் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இரக்கமற்ற முறையில் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை சுமத்துவதை எதிர்த்து, அதனைச் சுரண்டும் வகையில் நந்திக்கிராமம் இன்னும் பல இடங்களில் சிறப்பு பொருளாதார பகுதிகளைத் தோற்றுவிப்பதால் வாழ்வாதாரம் போகக்கூடிய நிலையில் இருக்கும் மற்றவர்களுடைய பாதுகாவலராக காட்டிக் கொண்டு வருகிறார்.

மேற்கு வங்கத்தில் உணவிற்காக கலவரங்கள்

நந்திகிராம் குருதி கொட்டிய பெரும் சோகத்திற்கு முன்பே, இடது முன்னணி அரசாங்கம் அதன் புதிய தாராண்மைக் கொள்கைக்குக்கும், மேற்கு வங்கத்தில் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை மூன்று தசாப்தங்களாக நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் கட்சியின் அடிமட்டத்திலும் வெளிப்படையாக ஊழல் பெருகியுள்ளதற்கு எதிர்ப்பு வந்துள்ள நிலையில் சதுப்புநிலச்சேற்றில் சிக்கிக்கொண்டுள்ளது.

அக்டோபர் முதல் வாரத்தில், கொல்கத்தாவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வறுமை நிறைந்த பர்துவான் மாவட்டத்தில் உணவுப் பற்றாக்குறையின் மீதாக கலகங்கள் வெடித்து எழுந்தன; ஏழைகள் அரசாங்கத்தின் உதவித் தொகையினால் குறைந்த விலையில் உணவு தானியங்களை விற்கும் ரேஷன் கடைகளைத் தாக்கினர்.

பர்துவான் எதிர்ப்பு ரேஷன் கடைகள் மீது கிராமப்புற எதிர்ப்புக்களின் அலைகளைத் தொடங்கி வைத்தது; ரேஷன் கடைக்காரர்கள் உதவித் தொகையில் கிடைக்கும் தானியங்களை பகிரங்கச் சந்தையில் விற்கும் வகையில் கொள்ளை இலாபம் பெறுவதாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

பெரும்பாலன ரேஷன் கடை வியாபாரிகள் CPM உறுப்பினர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் ஆவர்

ஊழல் செய்யும் வணிகர்களை தண்டிப்பதற்கு பதிலாக, ஸ்ராலினிச அரசாங்கம் ஆயுதமேந்திய போலீஸை "சட்டம் மற்றும் ஒழுங்கை" காப்பதற்கு அனுப்பி வைத்தது; மேலும் வறிய கிராமவாசிகளின் கோபத்தில் இருந்து ஊழல் வணிகர்களைக் காப்பதற்கும் போலீசார் அனுப்பிவைக்கப்பட்டனர். கொன்னல்ரண்டி என்ற இடத்தில் கிராமவாசிகள்மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; ஒரு கிராமவாசி இறந்து போனார், பத்து பேர் காயமுற்றனர். நந்திகிராமம் போலவே இங்கும் போலீசார் "தற்காப்பிற்காக" சுட்டதாகக் கூறினர்.

இப்படி அரசாங்கம் வன்முறையில் எதிர்கொண்டு வருவது புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரைக் கூட, "உள்ளூர் CPI-M பணத்தில் புரளும்போது, ஏழைகளின் நிலைமை மாறவில்லை" என்று குறிப்பிடத் தூண்டியது.

செய்தித்தாள்கள் தகவல்படி, 50 ரேஷன் கடை வியாபாரிகள் பர்துவான் கலகம் நடந்தபின் ஒருமாத காலத்திற்குள் தாக்கப்பட்டனர். இதேபோன்ற நிலை மாநிலத்தின் 20,000 ரேஷன் கடை வியாபாரிகளுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் அரசாங்கத்திடம் தங்கள் வணிக உரிமைத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய தேசிய மாதிரி அளவையின்படி (National Sample Survey), மேற்கு வங்கத்தில் ஆயிரம் குடும்பங்களில் 106 குடும்பங்கள் குறைந்த உணவை மட்டுமே உட்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்; இது இந்திய மாநிலங்களிலேயே மிக மோசமான எண்ணிக்கையாகும். மாநிலத்தின் தேயிலைத் தோட்டங்களில் பல ஆண்டுகளாக பட்டினிச் சாவு மற்றும் நீடித்த ஊட்டமில்லாத ஆகாரத்தால் ஏற்பட்ட மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

மேற்கு வங்கத்தில் இருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி விசாரிக்கும் இந்தியத் தலைமை நீதிமன்றத்தின் ஆலோசகராக இருக்கும் அனுராதா தல்வர் Reuters இடம் மேற்கு வங்கத்தில் 15,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வதற்கு போராடுகின்றனர் என்றும், எலிகள், காட்டுச் செடிகள் மற்றும் பூக்களை உணவாகக் கொள்ளுகின்றனர் என்றும் கூறினார்.

ரிஸ்வனூர் ரஹ்மானை போலீஸ் கொலை செய்தது

நந்திக்கிராமம் படுகொலை மற்றும் பரந்த அளவில் ரேஷன் பொருட்களை அபகரித்தல் ஆகியவற்றைப் போலவே இடது முன்னணி அரசாங்கம் போலீசாரின் கடுமையான நடவடிக்கைக்கு எதிராக செயல்படுவதில் அடைந்துள்ள தோல்வியும், ரிஸ்வனூர் ரஹ்மான் ஒருவேளை கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்பதும் உழைக்கும் மக்களுக்கு எதிராக செல்வந்தர்கள், சலுகை பெற்றவர்களுக்கு பாதுகாப்பாக அரசாங்கம் எப்படி இயங்குகிறது என்பதைக் காட்டுகிறது.

ஓர் இளம் கணினி வரைபட ஆசிரியரான ரிஸ்வனூர் ரஹ்மான் செப்டம்பர் 21ம் தேதி மிகவும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் கொலையுண்டு காணப்பட்டார்; இது அவர் தன் காதலி பிரியங்கா தோடியைத் திருமணம் செய்து கொண்ட ஒரு மாத காலத்திற்குள் நடைபெற்றது. மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட போலீசார் தோடியின் தந்தை அருண் குமார் தோடியின் தூண்டுதலில் ரஹ்மானை துன்புறுத்தி அச்சுறுத்தினர்; அருண் குமார் தோடி ஒரு செல்வந்தர், பெரிய இடத்துத் தொடர்பு கொண்ட ஒரு இந்து தொழில் அதிபர் ஆவார்; இவர் அத்திருமணத்தை முறிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ரஹ்மானின் எளிய இல்லத்தில் ஒன்றாக வாழத் தொடங்கிய பின் இத்தம்பதியர் பலமுறையும் போலீசாரைச் சந்திக்குமாறு அழைக்கப்பட்டனர்; பிரியங்கா தானே "மனமுவந்து" தன்னுடைய பெற்றோர்களிடம் ஒருவார காலத்திற்குள் திரும்பாவிட்டால் கைது செய்யப்படுவார் என்று ரஹ்மான் பலமுறையும் அச்சுறுத்தப்பட்டார். பிரியங்கா தன்னுடைய பெற்றோர்கள் வீட்டிற்குச் சென்ற 12 நாட்களுக்குப் பின்னர் ரிஸ்வனூரின் சடலம் ஒரு ரயில் பாதைக்கு அருகே கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி மிகப் பரந்த அளவில் சுதந்திரமான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வைத்தது; ஆனால் பல வாரங்களும் இடது முன்னணி அரசாங்கம் எந்தத் தீவிர நடவடிக்கையையும் ரஹ்மான் வழக்கில் தொடர்புடைய போலீசாருக்கு எதிராக எடுக்கவில்லை; இதையொட்டி போலீசார் கூறிய ரிஸ்வான் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு ஒரு நம்பகத்தன்மை கொடுக்கப்பட்டது. CBI (மத்திய புலனாய்வுக் கழகம்) ரஹ்மான் மரணத்தைப் பற்றி விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அக்டோபர் 11ம் தேதி முதல் மந்திரி பட்டாச்சார்ஜி மறுத்துவிட்டார்; அதே போல் கொல்கத்தா போலீஸ் ஆணையர் பிரசன் முகர்ஜி உட்பட ரஹ்மானைத் துன்புறுத்தியதில் தொடர்பு கொண்டவர்கள் என்று கூறப்படும் மூன்று உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளை அகற்றவும் மறுத்துவிட்டார்.

போலீசாரின் ஊழல் மற்றும் அருண் குமார் தோடி தன்னுடைய மகளின் திருமணத்திற்கு எதிர்ப்புக் காட்டிய விதத்தில் வெளிப்படுத்திய அப்பட்டமான வர்க்க மற்றும் வகுப்புவாதத்தன்மை பற்றியும் அரசாங்கத்தின் அசட்டைத்தனம் பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. "இந்த நிகழ்வு மக்களை கோபத்தீயில் தள்ளியது" என்று சமூக அறிவியல் வல்லுனர் பியூலா பத்ரா விளக்கினார்: "ஏனெனில் போலீசார் இரு ஒப்புதல் கொண்டுள்ள வயது வந்தவர்களின் திருமணத்திலும் குறுக்கிட முடியும் என்றால், நம்முடைய சிவில் உரிமைகள் பெரும் ஆபத்திற்கு உட்பட்டுவிட்டது என்று மக்கள் உணர்ந்துவிட்டனர்; அந்த ஆபத்து அவர்களைக் காக்க வேண்டியவர்களிடமிருந்தே வருகிறது என்றும் அறிந்தனர்."

கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரஹ்மான் மரணம் பற்றி ஒரு CBI விசாரணைக்கு உத்தரவிட்ட மறுநாள், மேற்கு வங்க அரசாங்கம் போலீஸ் ஆணையாளர் முகர்ஜி மற்றும் சில உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றியது.

பட்டாச்சார்ஜிக்கு முன்பு முதல் மந்திரியாக இருந்த CPM உடைய "மூத்த அரசியல்வாதி ஜோதி பாசு இடது முன்னணி அரசாங்கம் ரஹ்மான் வழக்கில் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டியதால் அரசியல் அளவில் சேதமுற்றது என்று ஒப்புக் கொண்டார். "ஆம், ரிஸ்வனூர் ரஹ்மானை பலவந்தப்படுத்தியதாகக் கூறப்படும் செயலில் ஈடுபட்ட போலீசாரை இடம் மாற்றாததால் மாநில அரசாங்கத்தின் கெளரவம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் அளவில் நஷ்டம்தான்." என்று அவர் கூறினார்.

"அரசாங்கம் இவ்வளவு தாமதப்படுத்தி செயல்பட்டது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இப்பிரச்சினை சிவில் சமூகத்தில் இருந்து பெரும் எதிர்ப்புக்களால் மிகப் பெரியதாக திடீரென ஆயிற்று; அரசாங்கம் போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது." என்று பாசு தொடர்ந்து கூறினார்.

பாசு குழம்பியிருப்பது போல் காட்டிக் கொள்ளுகையில், ஸ்ராலினிச தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கம் போலீஸ் ஊழலை விசாரிக்க மனமற்று உள்ளது; ஏனெனில் அது தன்னுடைய சமூகப் பிற்போக்கு, முதலீட்டாளர் சார்புக் கொள்கைகளை செயல்படுத்தும்போது வரும் எதிர்ப்பை அடக்குவதற்கு மாநிலத்தில் பாதுகாப்புப் படைகளைத்தான் பெருகிய முறையில் நம்பியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved