World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE leader makes desperate appeal to "world powers"

புலிகளின் தலைவர் "உலக வல்லரசுகளுக்கு" அவநம்பிக்கையான வேண்டுகோள் விடுக்கின்றார்

By Nanda Wickremasinghe
12 December 2007

Use this version to print | Send this link by email | Email the author

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்த மாவீரர் தின உரை, புலிகள் இயக்கத்தின் அரசியல் வங்குரோத்தினதும் ஆழமடைந்துவரும் நெருக்கடியினதும் இன்னுமொரு அறிகுறியாகும். அதன் பிரதான உந்துதலாக இருப்பது, புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு ஆதரவளித்துவரும் அதே சர்வதேச சக்திகளுக்கு அவநம்பிக்கையான முறையில் வேண்டுகோள் விடுப்பதே.

வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தற்போதைய தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நவம்பர் 27ம் திகதி இந்த உரை நிகழ்த்தப்பட்டது. இதற்கு முதல் நாள், இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய ராஜபக்ஷ, கடந்த மாதம் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான சு.ப. தமிழ்செல்வனை விமானத் தாக்குதலின் மூலம் இலக்குவைத்து படுகொலை செய்தது போலவே பிரபாகரனையும் இராணுவம் கொலைசெய்யும் என ஆத்திரமூட்டும் விதத்தில் பிரகடனம் செய்தார்.

2005 நவம்பரில் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ குறுகிய வெற்றியைப் பெற்றதில் இருந்தே, இராணுவம் நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் கொலைகள் மற்றும் கடத்தல்கள் மூலம் தொடக்கிவைக்கப்பட்ட யுத்தம், பின்னர் 2006 ஜூலையில், 2002ல் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறி இராணுவத் தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவம் இப்போது கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறிக்கொள்கின்றது. இந்த நடவடிக்கையில் குறைந்தபட்சம் 5,000 பேர் உயிரிழந்துள்ளதோடு 200,000 மக்களுக்கும் மேல் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, "சமாதான முன்னெடுப்புகளை" மேற்பார்வை செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வேயும் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு விளைபயனுள்ளவகையில் ஆதரவளித்துள்ளன. பெரும் வல்லரசுகள் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குமாறு எப்போதாவது அழைப்புவிடுக்கும் அல்லது வெளிப்படையான துஷ்பிரயோகங்களுக்காக இலங்கை அதிகாரிகளை விமர்சிக்கும் அதேவேளை, இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பாக கண்களைக் குருடாக்கிக்கொண்டுள்ளன. குறிப்பாக அமெரிக்கா இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கிக்கொண்டிருக்கின்றது.

பிரபாகரன் தனது உரையின் போது, யுத்தத்தை புதுப்பித்ததற்காக ராஜபக்ஷ அரசாங்கத்தை கடிந்துரைத்தார். "யுத்தநிறுத்தமும் சமாதான முயற்சிகளும் கவிழ்ந்து போக வழிவகுத்த சர்வதேச சமூகத்தின் பக்கசார்பான மற்றும் நீதியற்ற நடத்தையை" பற்றி அவர் புலம்பினார். "அத்தோடு இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முன்னெடுப்புக்களும், சிங்கள இனவாத அரசை மேலும், மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கின்றன," என அவர் மேலும் தெரிவித்தார்.

"சர்வதேச சமூகம்" பற்றிய பிரபாகரனின் விமர்சனங்கள், கோபத்தை விட கவலையையே கொண்டிருந்தன. இலங்கை தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாத 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையை அமுல்படுத்த இந்தியா 100,000 இந்திய அமைதிப்படைகளை அனுப்பியது. இந்தியா அன்று இழைத்த "தவறை" இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது, என அவர் முறைப்பாடு செய்கின்றார். "சர்வதேச சமூகம்" கொழும்புக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தி, "தமிழ் தேசத்தின் சுயநிர்ணயத்திற்கும் இறைமைக்குமான உரிமையை ஏற்றுக்கொள்ளும்" என்ற "எதிர்பார்ப்பை" பிரபாகரன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் முதலாளித்துவ ஆட்சிப் பகுதி ஒன்றை ஸ்தாபிப்பதற்கான தமது திட்டத்திற்கு ஏதாவது ஒரு அல்லது பல சக்திகளின் ஆதரவை ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்திருப்பதை அடிப்படையாகக் கொண்ட புலிகளின் முன்நோக்கை பிரபாகரனின் உரை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. 1980களில் தனியான தமிழீழத்துக்காக இந்தியாவின் ஆதரவை புலிகள் எதிர்பார்த்திருந்தனர் என்ற உண்மையை பிரபாகரன் குறிப்பிடவில்லை. இந்தக் குழு இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு உடன்பட்டதோடு, புலிகள் எந்தவொரு குறிப்பிடத்தக்க அரசியல் பாத்திரத்தையும் இட்டுநிரப்ப அனுமதிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்பது தெளிவான போது மட்டுமே அது புது டில்லிக்கு எதிராகத் திரும்பியது.

2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்வு அமெரிக்காவில் செப்டம்பர் 11 நடந்த தாக்குதலை அடுத்தே இடம்பெற்றது. தாம் விரும்பிய நிபந்தனைகளின் கீழ் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு தள்ள புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" சுரண்டிக்கொள்ள முடியும் என கொழும்பு ஆளும் கும்பலின் ஒரு பகுதி முடிவெடுத்தது. 2002ல் தொடங்கிய சமாதானப் பேச்சுக்களில், தனிநாட்டுக்கான தமது நீண்டகால கோரிக்கையை புலிகள் கைவிட்டதோடு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்துடன் "புலிப் பொருளாதாரம்" ஒன்றை உருவாக்குவதில் ஒத்துழைப்பதாகவும் வாக்குறுதியளித்தனர். 2005 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) உட்பட எதிர்க் கட்சிகளின் கண்டனங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள் கவிழ்ந்து போயின.

"சர்வதேச ஆதரவுக்காக" கோழைத்தனமாக வேண்டுகோள் விடுப்பதே புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு பிரபாகரனின் பதிலாகும். "எமது பிராந்தியத்திலே உலக பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம்," என அவர் பிரகடனம் செய்கின்றார். "அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். இதற்கு இலங்கைத் தீவில் நெருக்கடி நிலை நீங்கி சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்," என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இந்தக் கருத்துக்கள், புலிகள் பெரும் வல்லரசுகளின், குறிப்பாக அமெரிக்காவின், நலன்களை புரிந்துகொண்டுள்ளதோடு அரசியல் அங்கீகாரத்திற்கு பிரதியுபகாரமாக மேலும் அவர்களுக்கு இணங்கிப் போக விரும்புகின்றனர் என்பதைப் பிரகடனம் செய்வதாகும். "ஸ்திரமும் நல்லாட்சியும்" தேவை என்பதை புலிகள் ஏற்றுக்கொள்வதானது, இலங்கையில் நடக்கும் யுத்தம், பிராந்தியத்தில் குறிப்பாக மலிவான செயற்திறம் கொண்ட உழைப்பின் தோற்றுவாயாக பெரும் வல்லரசுகள் பெருமளவில் தங்கியிருக்கும் இந்தியாவில், ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு காரணியாக விளங்கலாம் என்ற சர்வதேசத்தின் கவலையை அணுகுவதாகும்.

புலிகளின் சேவையாற்றுவதற்கான விருப்பத்தை வலியுறுத்துவதற்காக, பிரபாகரன் சர்வதேச சமூகத்தை பாராட்டும் துதிபாடலுடன் தொடர்கின்றார். "உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதார கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக் கொடுக்கத் தவறுவதில்லை," என அவர் பிகடனம் செய்கின்றார். "இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன. கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றது," என அவர் மேலும் பிரகடனம் செய்கின்றார்.

அமெரிக்க பூகோள-மூலோபாய நலன்களுக்காக, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் புஷ் நிர்வாகம் முன்னெடுத்த குற்றவியல் நவடிக்கைகள், அதேபோல் ஈரானுக்கு எதிரான அதன் யுத்தத் தயாரிப்புக்கள் தொடர்பாக மூடிமறைக்க பிரபாகரன் விரும்புவதானது, இலங்கையில், எவ்வாறெனினும் சிறிய, ஒரு பங்கைப் பெறுவதற்காக புலிகள் செய்யாத எதுவும் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலும் அமெரிக்காவிலும் அதன் பங்காளிகளுடனும் முழுமையாகத் தங்கியிருக்கும் மூன்று மிகச்சிறிய அடிமைநிலை அரசுகளான கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ மற்றும் கொசோவோ பற்றி குறிப்பிடுவது, இதே விடயத்தையே சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஒவ்வொரு நாட்டினதும் நிலைமைகளும் உழைக்கும் மக்களுக்கு பணையமாக வைக்கப்பட்டிருப்பது என்ன என்பதைத் தெளிவாக்குகின்றது. கிழக்குத்தீமோர் உலகின் மிக வறுமை நிறைந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி ஜனத்தொகையில் 40 வீதமானவர்கள் நீண்டகாலமாக போசாக்கின்றி இருப்பதோடு 10 வீதமானவர்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். சிறிய பால்கன் பகுதியான கொசொவோவும் மொன்ரீநீக்ரோவும் மேலைநாடுகளின் ஆதரவிலான வலதுசாரி அரசாங்கங்களின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. இங்கு வறுமையும் வேலையின்மையும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதோடு சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கு இந்த அரசாங்கங்களே பொறுப்பாகும்.

ஏகாதிபத்திய பாதுகாப்பின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் சுயாட்சி அல்லது சுதந்திர வடிவிலான ஆட்சியை ஸ்தாபிப்பதானது தமிழ் ஆளும் கும்பலின் ஒரு குறுகிய செல்வந்த தட்டுக்கு மட்டுமே இலாபகரமானதாக இருக்குமே அன்றி, சாதாரண உழைக்கும் மக்களின் உடனடித் தேவைகள் மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை அடைவதற்கு எதுவும் செய்யப்போவதில்லை.

"தமிழ் தேசம்" மற்றும் "சிங்கள தேசம்" என பிரபாகரன் அடிக்கடி குறிப்பிடுவதானது புலிகளின் வேலைத்திட்டத்தின் இனவாதப் பண்பை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அதன் தமிழ் பிரிவினைவாதம், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் சிங்களப் பேரினவாதத்தைப் போல், அதே இன்றியமையாத வர்க்கத் தேவைகளான, இன ரீதியில் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற ஏழைகளையும் பிளவுபடுத்துவதன் மூலம் தமிழ் அல்லது சிங்கள முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்கவே சேவகம் செய்யும்.

துல்லியமாக, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின் பரந்த தட்டினர், யுத்தத்தையும் வாழ்க்கைத் தரம் மீதான அதன் தாக்கத்தையும் எதிர்க்கும் காலகட்டத்திலேயே, புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்காக "சிங்கள இனத்தின்" மீது புலிகளும் பிரபாகரனும் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பளம் மற்றும் நிலைமைகள் தொடர்பாக வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுவது மேலும் மேலும் பொதுவானதாகி வருகின்றது. ஆயினும், புலிகள் யுத்தத்துக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்றவர்களாவர்.

பல இனங்களைச் சேர்ந்த நாட்டின் உழைக்கும் மக்கள், யுத்த நிறுத்தம் முறிந்துபோனமை, புதுப்பிக்கப்பட்ட யுத்த முயற்சிகள் மற்றும் "உலக வல்லரசுகளுக்கு" புலிகள் விடுக்கும் வங்குரோத்து வேண்டுகோள்கள் தொடர்பான படிப்பினைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். சகல விதமான தேசியவாதம், இனவாதம் மற்றும் பேரினவாதத்தையும் நிராகரித்து, தமது பொது வர்க்க நலன்களைப் பாதுகாக்க ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் தமது நலன்களை மேம்படுத்த முடியும்.

ஏகாதிபத்திய சக்திகளிலும் மற்றும் அவர்களின் "சமாதான முன்னெடுப்புகள்" என சொல்லப்படுவதிலும் நம்பிக்கை வைக்க முடியாது என வலியுறுத்தும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே. யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டவும் அனைவருக்கும் உண்மையான ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும், ஒரு அரசியல் எதிர்த்தாக்குதலை முன்னெடுப்பதன் பேரில் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் வழிமுறையாக, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்க வேண்டும் என நாம் கோருகின்றோம்.

ஒரு சில செல்வந்தர்களுக்கு அன்றி, பெரும்பான்மையானவர்களின் சமூகத் தேவைகளை நிறைவேற்றக் கூடியவாறு, சமுதாயத்தை அடி முதல் உச்சி வரை மறு ஒழுங்கு செய்யும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தைக் கட்டியெழுப்பவே சோ.ச.க. போராடுகிறது. நாம் ஆசியா மற்றும் அனைத்துலகம் முழுவதும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை ஸ்தாபிப்பதற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிசக் குடியரசை ஸ்தாபிக்க அழைப்பு விடுக்கின்றோம்.