World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military conducts massive anti-Tamil sweep through Colombo

இலங்கை இராணுவம் கொழும்பு பூராவும் பிரமாண்டமான தமிழர் விரோத சுத்திகரிப்பை முன்னெடுக்கிறது

By K. Ratnayake
5 December 2007

Back to screen version

இலங்கை அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் முன்னெப்போதுமில்லதளவு பிரமாண்டமான சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை கட்டவிழ்த்து விட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு நாடு பூராவும் இனவாத பதட்ட நிலைமைகள் உக்கிரமாக்கப்பட்டது. கொழும்பிலும் அதை அண்டிய நுகேகொடை நகரிலும் கடந்த வாரம் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பாளிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை "துடைத்துக் கட்டுவதே" இந்த தேடுதல் நடவடிக்கைக்கான உடனடி சாக்குப்போக்காகக் கூறப்பட்டது.

இதற்கு, மேல் மாகாண கட்டளைத் தலைமையகம் பெயரளவில் பொறுப்பாக இருந்த அதே வேளை, பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவின் கட்டளையின் கீழ் செயற்படும் இராணுவ உயர் மட்டத்தினர், பிரமாண்டமான சுத்திகரிப்பை திட்டமிடுவதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்புச் செயலாளர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடிப்பதில் நெருக்கமான தலையீடு உள்ளவராவார்.

ஒரு மதிப்பீட்டின்படி கடும் ஆயுதம் தரித்த 18,000 துருப்புக்களும், பொலிசாரும் இந்த தேடுதலுக்கு அணிதிரட்டப்பட்டிருந்ததோடு கொட்டஹேன, வெள்ளவத்தை, பம்பலபிட்டி, கிருலப்பனை, நாரஹேன்பிட்டி மற்றும் புறக்கோட்டை போன்ற கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் உட்பட, அதேபோல் தெஹிவலை, கல்கிசை, ரத்மலானை, வெல்லம்பிட்டிய மற்றும் நுகேகொட போன்ற புறநகர் பகுதிகளிலும் இந்தத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தால் வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் அல்லது தொழில் தேடி மத்திய மலையக பிரதேசங்களில் இருந்து வந்த தோட்டத் தொழிலாளர்களே. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தேடுதல் வேட்டைகள் இடம்பெற்றன.

கொழும்புக்கான அனைத்து பிரதான அதிவேகப் பாதைகளிலும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாகனங்களும் அதில் பயணித்தவர்களும் சோதனையிடப்பட்டனர். அனைத்து தமிழரும் சந்தேக நபராக கருதப்பட்டனர். பஸ்களில் பயணித்த பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். "நாங்கள் சந்தித்த எந்தவொரு தமிழரையும் கைதுசெய்கின்றோம்" என பொலிசார் கூறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

எல்லாமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 2,000ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டதோடு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். குற்றஞ்சாட்டுவதற்கான எந்தவொரு ஆதரமும் இல்லாத போதிலும் கைது செய்யப்பட்டவர்களில் 41 பெண்கள் உட்பட 419 பேர் பூஸா தடுப்பு முகாமுக்கு கொண்டுசெல்லப்ப்டடுள்ளனர் என எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகள் சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சேனாதிராஜா, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமானளவு குடி நீர், தேவையானளவு மலசலகூட வசதியோ அல்லது தூங்குவதற்கு அறைகளோ பூஸா முகாமில் இல்லை எனத் தெரிவித்தார். இந்த முகாமில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கைதிகள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டவர்களில் ஏனையவர்கள் இன்னமும் கொழும்பு பொலிஸ் நிலைய சிறைகளில் கூட்டமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சிறுபான்மையினர் திட்டமிட்ட உத்தியோகபூர்வ பாகுபாடுகளை அனுபவிக்கின்றனர். தலைநகருக்கு வரும் தமிழர்கள் தாம் தங்கியிருக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ்நிலையங்களில் தம்மைப் பதிவுசெய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஆயினும், இவ்வாறு பதிவு செய்துகொண்டவர்கள் கூட ஞாயிற்றுக்கிழமை விட்டுவைக்கப்படவில்லை.

கடந்த இரு ஆண்டுகளாக, ராஜபக்ஷ அரசாங்கம் அவசரகால ஆட்சியை பேணிவருவதோடு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களையும் மீண்டும் அமுல்படுத்தியுள்ளதுடன் அவற்றை மேலும் பலப்படுத்தியும் உள்ளது. கொழும்பில் வாழும் தமிழர்கள், பாதுகாப்புப் படையுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படை குழுக்கள் மேற்கொள்ளும் கப்பம் பெறுதல், கடத்தல் மற்றும் கொலைகளுக்கும் ஆளாகின்றனர்.

இராணுவம் தலைநகரில் தமிழ் பிரதேசங்களில் முற்றுகையை தொடர்கின்றது. குடியிருப்பு வீதிகளில் இரு முனைகளிலும் படையினர் நிறுத்தப்பட்டிருப்பதோடு, சில குடியிருப்புப் பிரதேசங்களின் நுழைவாயில்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இரவு 9 மணிக்குப் பிறகு சட்டரீதியற்ற நடைமுறையில் உள்ள ஒரு ஊரடங்கு சட்டத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது நிருபர்களிடம் சிலர் தெரிவித்தனர். சில பாடசாலைகளுக்கு வெளியிலும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை பரந்தளவில் ஆத்திரத்தை தூண்டிவிட்டுள்ளது. யுத்தத்திற்கு மெளனமாக ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த திங்களன்று அரசாங்கத்தின் "எதேச்சதிகார" நடவடிக்கைகளுக்காக அதை விமர்சித்தது. சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி கூட, இத்தகைய கைதுகள் "நியாயமற்றவை" என பிரகடனம் செய்த போதிலும், அதே சமயம் புலிகளின் நடவடிக்கைகளை எதிர்க்கத் தவறியதாக தமிழ் கூட்டமைப்பையும் விமர்சித்தது.

கண்டனங்களை தணிக்கும் முயற்சியில், தடுத்துவைக்கப்பட்டிருந்த 2,000ற்கும் மேற்பட்டவர்களில் சுமார் 1,600 பேரை விடுதலை செய்துள்ளதாக பிரதான அரசாங்க கொறடாவான ஜெயராஜ் பெர்னாடோபுள்ளே அறிவித்த போதிலும், எதிர்காலத்திலும் இதேபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். அப்பாவி மக்களை "பயங்கரவாதிகளிடம்" இருந்து வேறுபடுத்தும் நடவடிக்கைக்கு உதவுமாறு அவர் எதிர்க் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தார்.

அரசாங்கம் இந்த இனவாத பாய்ச்சலை நியாயப்படுத்துவதற்காக நவம்பர் 28 நடந்த இரு குண்டுவெடிப்புக்களை தமக்கு சாதகமாக்கிக்கொண்டது. முதலாவது குண்டு சமூக சேவைகள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் வெடித்தது. இந்தக் கட்சி ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருப்தோடு அதன் துணைப்படைப் பிரிவு இராணுவத்துடன் சேர்ந்து இயங்குகிறது.

தேவானந்தாவின் அலுவலகத்தில் குண்டை வெடிக்கவைத்த ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரி, அவரது செயலாளரை கொன்றதோடு மேலும் பலரை காயங்களுக்குள்ளாக்கினார். புலிகள் இதற்குப் பொறுப்பேற்காத போதிலும், இந்த குண்டுத் தாக்குதல் புலிகளின் தற்கொலைப் படை நடவடிக்கையின் அனைத்துக் அடையாளங்களையும் கொண்டுள்ளது. தேவானந்தாவை கொலை செய்வதற்கு பல தடவைகள் முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது குண்டு சுமார் மாலை 6.05 மணிக்கு கொழும்பின் புறநகரான நுகேகொடையில் பெரிய புடைவைக் கடையில் வெடித்தது. நேரடியாகக் கண்டவர்களின்படி, அங்கு பொதிகள் வைக்கும் இடத்தில் பொதி ஒன்றை வைத்த நபர், உடனடியாக அங்கிருந்து மறைந்துவிட்டார். முகாமையாளர் அவசர சேவை இலக்கத்துக்கு தொடர்புகொண்ட போதும், 30 நிமிடங்களாக பொலிஸார் அங்கு வரவில்லை. அருகில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அலுவலர் ஒருவர் அனுபவமற்ற நிலையில் அந்த பொதியை பரிசோதித்த போது குண்டு வெடித்தது. 16 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதோடு மேலும் ஐவர் காயங்களால் உயிரிழந்தனர்.

இரண்டாவது குண்டுத் தாக்குதலுக்கு புலிகளே பொறுப்பாளிகள் எனக் கூறுவதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆயினும், இந்த இரு குண்டுத் தாக்குதல்களும் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வருடாந்த மாவீரர் தின உரை நிகழ்த்தப்பட்ட மறுநாளே நடைபெற்றுள்ளன. இந்த உரையில் அவர், அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கும் மற்றும் 2002 யுத்த நிறுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டதற்கும் "சிங்கள தேசத்தை" குற்றஞ்சாட்டினார்.

தமிழர்களுக்கு எதிரான இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சாதாரண சிங்களவர்களையே இதற்கு முன்னர் புலிகள் இலக்குவைத்துள்ளனர். புலிகளின் இத்தகைய தாக்குதல்கள் பிற்போக்கானவை. அவை உழைக்கும் மக்களுக்கிடையில் இனவாத பிளவுகளுக்கு எண்ணெய் வார்ப்பதோடு பொலிஸ் அரசாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கத்திற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் நடந்த இராணுவ நடவடிக்கை, அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் மற்றும் அது வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பாக எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவரும் நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தேடுதல் நடவடிக்கை தமிழர்களுக்கு எதிராக குறிவைக்கப்பட்டுள்ள அதே வேளை, அரசாங்கம் மேலும் மேலும் ஊடகங்கள், எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் எவருக்கும் எதிராக ஒடுக்குமுறை நடவடிக்கைகளை பயன்படுத்துகிறது.

அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும், தலைநகரில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு ஒப்பனை ஒத்திகையாக இந்த பாய்ச்சலை பயன்படுத்தியுள்ளன என்பதை நிராகரிக்க முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved