:
ஆசியா
:
இலங்கை
SEP holds public meeting in Colombo to
oppose the war in Sri Lanka
இலங்கையில் யுத்தத்தை எதிர்த்து சோ.ச.க. கொழும்பில் பகிரங்கக் கூட்டம்
By our correspondents
24 November 2007
Back to screen version
நவம்பர் 13, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான
அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) இயக்கமும் கொழும்பில் நடத்திய பகிரங்கக் கூட்டத்திற்கு, நாட்டின் புதுப்பிக்கப்பட்ட
யுத்தத்தை எதிர்ப்பதற்கான ஒரு சோசலிச வேலைத் திட்டத்தைக் கலந்துரையாடுவதன் பேரில், சுமார் 100
தொழிலாளர்களும் இளைஞர்களும் வருகை தந்திருந்தனர். கடந்த இரு வருடங்களாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின்
அரசாங்கம், தீவை மீண்டும் இனவாத மோதல்களுக்குள் தள்ளியுள்ளதோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான
தாக்குதல் நடவடிக்கைகளையும் உக்கிரமாக்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் பிரதான உரையை
ஆற்றினார். இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.இ. வழிநடத்துக் குழுவின் தலைவர் கபில பெர்னான்டோ மற்றும் சோ.ச.க. மத்திய
குழு உறுப்பினரும் மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (ம.வ.ஊ.ச.) தலைவருமான கே.பி. மாவிகும்புர உட்பட
ஏனையோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
அவர் இலங்கையிலும் அனைத்துலகிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கடுமையான அரசியல் மாற்றங்களை சுட்டிக் காட்டி
கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அவர் 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சோ.ச.க. வெளியிட்ட
விஞ்ஞாபனத்தில் இருந்து மேற்கோள் காட்டினார். இராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் நாட்டை மீண்டும்
உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளுவார் என அந்த மேற்கோள் முன்னறிவித்திருந்தது.
இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, புதுப்பிக்கப்பட்ட யுத்தம் 5,000 உயிர்களைக்
காவுகொண்டுள்ளதாகவும், இராணுவச் செலவு 267 வீதத்தை எட்டியுள்ளதாகவும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும்
ரட்னாயக்க விளக்கினார். தமது உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாத்துக்கொள்ள தொழிலாளர் வர்க்கம்
போராட்டத்தில் குதித்துள்ள போதிலும், அதை நிறைவேற்றுவதன் பேரில் தொழிலாளர் வர்க்கத்துக்கு அரசாங்கத்தையும்
அதன் யுத்தத்தையும் எதிர்ப்பதற்கான சோசலிச வேலைத் திட்டமொன்று அவசியம் என அவர் தெரிவித்தார்.
இந்த அபிவிருத்திகளை அவற்றின் சர்வதேச சூழ்நிலையில் இருத்திய அவர், ஆப்கானிஸ்தான்
மற்றும் ஈராக் மீதான அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பை அடுத்து, புஷ் நிர்வாகம் ஈரானுக்கு எதிரான
யுத்தத்துக்கு தயார் செய்வதானது பரந்த மோதல்களுக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என எச்சரித்தார்.
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரான விலானி பீரிஸ், பாகிஸ்தானில் அரசியல்
நெருக்கடியையும் ஜெனரல் பேர்வஸ் முஷராஃப்பின் சர்வாதிகாரத்திற்கு வாஷிங்டன் ஆதரவளிப்பதைப் பற்றியும் விரிவாக
ஆராய்ந்தார். இராணுவ ஆட்சியின் எதிரியாகக் காட்டிக்கொள்ளும் அதே வேளை, அமெரிக்க அனுசரணையில்
முஷராஃப்புடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்
பெனாசிர் பூட்டோவின் வஞ்சகப் பாத்திரத்தை பீரிஸ் சுட்டிக் காட்டினார். பாகிஸ்தான் இராணுவ அரசாங்கத்திற்கு
கொழும்பு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்களின் பகுதிகள் காட்டும் ஆதரவு, இலங்கையில்
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது என்ன என்பதற்கான சகுனத்தின் அறிகுறி என பீரிஸ் எச்சரிக்கை செய்தார்.
உழைக்கும் மக்கள் தாங்கமுடியாத நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என கே.பி.
மாவிகும்புர விளக்கினார். "இந்தக் கூட்டத்திற்காக நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போது, தனது
பிள்ளைகளுக்கு உணவும் கல்வியும் வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலைமை அதிகரித்து வருவதாக மூன்று
பிள்ளைகளின் தாய் தெரிவித்தார். இது பொதுவானது. சாதாரண மக்களின் வாழ்க்கை துயர் மிகுந்தது. அரசாங்கம்
யுத்தத்திற்காக நிதியை திருப்பிவிட்டுக்கொண்டிருக்கின்றது. தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்கும் போது, அவர்களது
சட்டப்பூர்வமான போராட்டங்களை நசுக்குவதன் பேரில், அவர்கள் புலி ஆதரவாளர்களாக முத்திரை குத்தப்படுகின்றனர்.
"நாம் யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்காக சோசலிச கொள்கைகளின் அடிப்படையில்
தொழிலாளர்களை ஐக்கியப்படுமாறு அழைப்புவிடுத்து ம.வ.ஊ.ச. த்தில் ஒரு பிரேரணையை முன்வைத்தோம். ஏறத்தாழ
இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை திருப்பி அழைப்பதற்கான எமது பிரச்சாரம்
தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான நிலைமைகளை சிருஷ்டிப்பதற்கு அத்தியாவசியமானது என்பதை நாம் சுட்டிக்
காட்டினோம். சிங்களத் தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த தொழிற்சங்கம் ஒன்று
உடனடியாக எங்களை 'சிங்களப் புலிகள்' என முத்திரை குத்தியது. இனவாத மொழியில், இது அழித்தொழிக்கப்பட
வேண்டிய துரோகிகள் என்பதையே அர்த்தப்படுத்தும். போராட்டம் செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்தவும் எதிரிகளை
அடக்கவும் இந்த முத்திரையை அரசாங்கமும் இனவாத கும்பல்களும் பயன்படுத்தி வருகின்றன.
"அண்மையில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு
செய்வதற்கான தொழிற்சங்க கூட்டமொன்றுக்கு நான் சமூகமளித்திருந்தேன். யுத்தத்திற்கு செலவிட வேண்டியிருப்பதால்
ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது என அரசாங்கம் கூறியது. அது ஆசிரியர்களை அச்சுறுத்துவதற்காக உயர்
நீதிமன்றத்தில் ஒரு இடைக்காலத் தடையைப் பெற்றுக்கொண்டது. அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டம்
ஒன்றை தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டும் என நான் விளக்கினேன். யுத்தத்தை எதிர்ப்பதே மையப்
பிரச்சினையாகும். ஆனால், தொழிற்சங்கத் தலைவர்கள் அதை நிராகரிக்கின்றனர். அவர்கள் அதற்குப் பதிலாக,
தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதில் பேர் போன எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன்
(யூ.என்.பி.) கூட்டணி அமைக்க வேண்டும் என தொழிலாளர்களுக்கு கூறுகின்றார்கள். தொழிலாளர்கள் சோசலிச
முன்நோக்கின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகும்.
யுத்தம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
என்பதை கபில பெர்னான்டோ விளக்கினார். "பல்கலைக்கழகத்திற்கு செல்லத் தகுதி பெற்ற மாணவர்களில்
15 வீதத்தினரால் மட்டுமே ஒவ்வொரு வருடமும் பல்கலைக் கழக அனுமதியைப் பெற முடியும். 15 முதல் 19
வயதுவரையான இளைஞர்களில் சுமார் 19 வீதமானவர்கள் வேலையற்றவர்கள். ஒரு ஆண்டுக்கு முன்னர் 2007ம்
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த போது, பட்டதாரிகளுக்கு 10,000 தொழில்கள் தருவதாக
ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், விரல்விட்டு எண்ணக்கூடிய தொழில்களே வழங்கப்பட்டன. இப்போது இன்னும் 5,000
வேலையற்ற பட்டதாரிகள் வரிசையில் சேர்ந்துகொண்டுள்ள அதே வேளை, 15,000 தொழில்களைத் தருவதாக
ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். அண்மையில் மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பொலிசார்
கொடூரமான தாக்குதலை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிப்
புத்தகங்களை அச்சிட பணம் இல்லை என்பதை கல்வி அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்."
சப்பரகமுவ பல்கலைக்கழகத்தில் தற்போது சிறந்த வசதிகளைக் கோரி இடம்பெறும்
மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைப் பற்றி கபில சுட்டிக்காட்டினார். "நிதிப் பிரச்சினையின் காரணமாக இந்த
ஆண்டுக்கான உயர் கல்விக்கான வரவு செலவு ஒதுக்கீட்டில் 20 வீதத்தை திறைசேரி வெட்டியுள்ளதாக கல்வி அமைச்சர்
ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், ஜே.வி.பி. சார்ந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்கள்,
இலவசக் கல்வியை வெட்டித் தள்ளுவதற்கும் பிரமாண்டமான யுத்த செலவுகளுக்கும் இடையில் தொடர்புகள் கிடையாது என
வலியுறுத்துகின்றனர். 25 ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்கள் உட்பட இளைஞர்களே. அவர்களில்
பெரும்பாலானவர்கள் மாற்றீடுகள் எதுவும் இன்றி இராணுவத்தில் இணையத் தள்ளப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் பிரதான உரையை ஆற்றிய விஜே டயஸ், "உலக முதலாளித்துவமானது முதலாவது
உலக யுத்தத்திற்கு சற்று முன்னதாக இருந்த நிலைமைக்கு சமாந்தரமான ஒரு முட்டுச்சந்துவை அடைந்துள்ளது. சர்வதேச
முதலாளித்துவ ஆளும் வர்க்கம், உலகை மீண்டும் காலனித்துவ அடிமைக்கு உட்படுத்தும் அழிவுகரமான யுத்தத்தைத் தவிர
பில்லியன் கணக்கான மக்களுக்கு வேறு எதையும் கொடுக்கவில்லை," என பிரகடனம் செய்து உரையை ஆரம்பித்தார். பல
நாடுகள் உள்நாட்டு இராணுவ அடக்குமுறை நோக்கித் திரும்புவதும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின், எல்லாவற்றிக்கும்
மேலாக புஷ் நிர்வாகத்தின், முன்கூட்டிய இராணுவப் படையெடுப்புகளும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்ட டயஸ், உழைக்கும் மக்களுக்கு
ஆளும் வர்க்கம் இரு போலி பதிலீடுகளைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். முதலாவது புலிகளை அழிப்பதற்கான
முடிவே இல்லாத யுத்தம். இது புஷ் நிர்வாகத்தின் போலி "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தத்தில்" இருந்து
வேறுபட்டதல்ல. "ஜனாதிபதி இராஜபக்ஷ எடுத்துள்ள பாதை இதுவே. தாய்நாட்டைக் காப்பதற்கான அவரது
வேலைத்திட்டம் எந்தவொரு சவாலுக்கும் அடிபணியாது என கூறிக்கொண்டு, இந்த மாதம் வரவு செலவுத் திட்டத்தை
முன்வைத்ததன் மூலம் அவர் அதை வலியிறுத்தியுள்ளார். தமது நியாயப்பூர்வமான சமூக உரிமைகளுக்காகப்
போராடிக்கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் இது ஒரு நேரடி அச்சுறுத்தலாகும்," என டயஸ்
தெரிவித்தார்.
நவம்பர் 7ம் திகதி தமது வரவு செலவுத் திட்ட உரையுடன் சேர்த்து "இராணுவ வெற்றி"
ஒன்றையும் சிருஷ்டிக்க இராஜபக்ஷ முயற்சித்தது தொடர்பான ஊடக செய்திகளை டயஸ் சுட்டிக்காட்டினார். ஆனால்,
முகமாலையில் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்கள் தோல்வியில் முடிவடைந்தன. பெருந்தொகையான சிப்பாய்கள்
பலியானதோடு கிட்டத்தட்ட 150 பேர்வரை காயமடைந்துள்ளனர். "இந்த அரசாங்கத்திற்கும் மற்றும் உழைக்கும்
மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உணவு, தொழில், கல்வி, சுகாதார சேவை மற்றும்
விவசாய மானியங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்க முழுமையாகத் தவறியுள்ள முழு உலக முதாலளித்துவ
ஆட்சிக்கும் யுத்தம் ஒரு உயிர்பிழைப்பு விவகாரம் என்பதை உறுதிப்படுத்த இந்த ஒரு சம்பவம் போதுமானது," என அவர்
தெரிவித்தார்.
உள்நாட்டு யுத்தத்திற்கான மாற்றீடாக அரசியல் ஸ்தாபனத்தின் தட்டினராலும் மற்றும்
அவர்களின் "இடது" கைக்கூலிகளாலும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற, சர்வதேச அனுசரணையிலான "சமாதான
முன்னெடுப்புகள்" என்ற இரண்டாவது தேர்வைப் பற்றிய விடயத்திற்கு டயஸ் திரும்பினார். இலங்கை சமாதான
முன்னெடுப்புகளுக்கு அனுசரணை வழங்கும் அதே ஏகாதிபத்தியச் சக்திகள், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான
யுத்தங்களுக்கு ஆதரவளிப்பதோடு, கடந்த இரு வருடங்களாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத்
தாக்குதல்களை அவை எதிர்க்கவில்லை. இராஜபக்ஷ கொடூரமான யுத்தத்தை முன்னெடுத்தும் கூட, தான் பேச்சுவார்த்தை
மூலமான தீர்வையே விரும்புவதாக கேலிக்கூத்தான முறையில் தொடர்ந்தும் அறிவித்து வருகின்றார்.
"இந்த சமாதான முன்னெடுப்புகளில் எந்தவொரு நம்பிக்கையையும் வைப்பது பிழையானது
மட்டுமன்றி ஆபத்தானதும் கூட," என டயஸ் எச்சரிக்கை செய்தார். யுத்தத்தை நிறுத்துவதற்கான தொழிலாளர்
வர்க்கத்தின் எந்தொரு சுயாதீனமான அரசியல் தலையீட்டையும் தடுப்பதே அதன் நோக்கமாகும். "சமாதான
முன்னெடுப்புகள்" இட்டுநிரப்பும் பாத்திரம் சம்பந்தமாக தொழிலாளர்களின் கண்களைக் கட்டுவதில் பெரும் பாத்திரம்
வகிப்பது நவசமசமாஜக் கட்சி போன்ற பலவித மத்தியதர வர்க்க தீவிரவாதக் கும்பல்களும் கட்சிகளுமே என அவர்
விளக்கினார்.
புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வன் இராணுவத்தால் அண்மையில் கொலை செய்யப்பட்டமை
தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் பிரதிபலிப்பை டயஸ் குறிப்பிட்டார். நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு
கருணாரட்ன விடுத்த அறிக்கையில், மிகுந்த ஆர்வத்துடன் பிரகடனம் செய்ததாவது: "(புலிகள் சார்பு) தமிழ் கூட்டமைப்பு
மட்டுமன்றி, சிறந்த கவிஞரான தமிழ்நாட்டு முதலமைச்சரும் கூட தமிழ்ச்செல்வனின் மரணம் அனைத்து தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு
என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது மரணம் தமிழ் விடுதலைப் போராட்டம் பரந்த வட்டாரத்துக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதையே
இது காட்டுகிறது."
தென்னிந்தியாவில் தமிழ் முதலாளித்துவ தட்டின் ஆதரவை எப்போதும் எதிர்பார்த்திருக்கும் புலிகளின்
பிரிவினைவாத வேலைத்திட்டத்தால் தமிழர்கள் மரணப்பொறிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என டயஸ் விளக்கினார்.
கருணாரட்ன பாராட்டிய "சிறந்த கவிஞர்" முத்துவேல் கருணாநிதியே அன்றி வேறு யாருமல்ல. அவரது திராவிட முன்னேற்றக்
கழகம் (தி.மு.க.), இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின்
இராணுவத் தாக்குதல்கள் தொடர்பாக முணுமுணுப்தைக் கூட தவிர்த்துக்கொண்டுள்ள இந்திய அரசாங்கத்தின் பங்காளியாகும்.
தமது ஜனநாயக மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் தொழிலாளர் வர்க்கத்
தீர்வை நோக்கித் திரும்புவதை நவசமசமாஜக் கட்சி எதிர்க்கின்றது என டயஸ் தெரிவித்தார். அதற்குப் பதிலாக, தமிழ்
தொழிலாளர்களும் ஏழைகளும் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தமிழ் முதலாளித்துவத் தட்டினரின் பின்னால் அணிதிரள
வேண்டும் என்ற ஆபத்தான மாயையை அந்தக் கட்சி ஊக்குவிக்கின்றது. இந்த அடிப்படையில், கொழும்பு அரசாங்கத்துக்கும்
புலிகளுக்கும் இடையில் ஒரு இனவாத தீர்வை நவசமசமாஜக் கட்சி ஊக்குவிக்கின்றது.
தெற்கில் சிங்களத் தொழிலாளர்கள் முதலாளித்துவ சிங்களக் கட்சிகளுடன் சேர வேண்டும்
என்ற நோக்கை நவசமசமாஜக் கட்சி முன்நிலைப்படுத்துகிறது. இராஜபக்ஷ அரசாங்கம் முன்வைத்த யுத்த வரவுசெலவுத்
திட்டத்திற்கு வாக்களிப்பதை "மாபெரும் குற்றமாக" நவசமசமாஜக் கட்சி கண்டனம் செய்கின்றது. ஆனால், அதன்
பின்னர் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்காக பரந்த முன்னணி ஒன்றை அமைக்குமாறு அனைத்து
தொழிற்சங்கங்களுக்கும் அழைப்புவிடுக்கின்றது. இது 1983ல் யுத்தத்தை தொடக்கிவைத்த வலதுசாரி ஐக்கிய தேசியக்
கட்சியின் பின்னால் அணிதிரள்வதற்கான அழைப்பாகும், என டயஸ் தெளிவுபடுத்தினார்.
"இராஜபக்ஷ ஜனாதிபதியாக குறுகிய வெற்றியைப் பெற்ற அதே தினம் நாம் கூறியதையே
மீண்டும் வலியுறுத்துகிறோம். முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்ட
ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் யுத்தத்தை எதிர்க்காமல், சீரழிக்கப்பட்டுவரும் மக்களின்
ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்க முடியாது."
யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கு அவசியமான முதற்படி, வடக்குக் கிழக்கில் இருந்து
இராணுவத்தை திருப்பி அழைக்கக் கோருவதே என டயஸ் தெரிவித்தார். இந்தக் கோரிக்கை, தெற்கில் உள்ள
தொழிலாளர் வர்க்கத்தால் எழுப்பப்படும் போதுதான், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்கான
போராட்டத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள உழைக்கும் மக்களுடனான ஐக்கியத்திற்கு அடித்தளம் உருவாகும்.
தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசக் குடியரசுகளைக் கட்டியெழுப்புவதன் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம்
சோசலிசக் குடியரசை ஸ்தாபிக்க சோ.ச.க. அழைப்பு விடுப்பதன் அர்த்தம் இதுவே.
|