World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

A new race for the North Pole

Russia plants flag, Canada sends troops

வடதுருவத்திற்கான ஒரு புதிய போட்டி

ரஷ்யா கொடி நாட்டுகிறது, கனடா படைகளை அனுப்புகிறது

By Niall Green
20 August 2007

Back to screen version

துருவப்பகுதி ஆய்வு என்பது இருபதாம் நூற்றாண்டு முடிவில் உச்சக்கட்டத்தை எட்டி இருந்த நிலையில், இக்கிரகத்தின் ஆய்வு செய்யப்படாத எல்லைகளை நெருங்க பல நாடுகளின் குழுக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தன. நோர்வே, இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆய்வாளர்கள் ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததுடன், 1926 இல் வடக்கு துருவத்தின் மேலே பயணித்ததால், நோர்வே நாட்டின் ரோல்டு அமன்ட்சென், வட துருவத்தை கடந்த முதல் மனிதராக பொதுவாக அறியப்படுகிறார். அதற்கு இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அலெக்சாண்டர் குஜ்னிட்சோவின் சோவியத் ஆராய்ச்சி குழுதான் அதில் முதன் முதலாக தனது காலடியை பதித்தது.

அந்நாட்களில் தேச கெளரவம் தான் ஆர்டிக் ஆராய்ச்சிகளின் முக்கிய தூண்டுகோலாக இருந்தது எனலாம். அதுமட்டுமின்றி மனித ஆற்றலின் மற்றும் தொழில்நுட்பங்களின் வரையறைகளை தாண்டி காட்ட வேண்டும் என்ற ஆர்வமும் இருந்து வந்தது. ஆனால் வடதுருவத்தில் நடக்கும் பல சமீபத்திய திடீர் செயல்பாடுகளுக்கு தூண்டுதலாக இருப்பது எது?

தேசிய பகட்டாரவாரக் கொள்கைகள் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகித்து வருவதால், இன்று அங்கு துளையிட்டு எடுக்கப்படாத கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த அதிக அளவிலான மூலவளங்களும் முக்கிய விஷயங்களாக மாறி இருக்கின்றன.

ஆகஸ்டில் மட்டும், ஆர்டிக் பகுதிக்காக மூன்று நாடுகள் உயர்நிலை ''திட்டங்களை'' ஆரம்பித்திருக்கின்றன.

மேலும் ஒரு சாதனை நிகழ்வாக, இரண்டு சிறிய ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள், வடதுருவ மட்டத்தில் இருந்து 4,300 மீட்டர் ஆழத்தில் கடல்படுகையின் மீது, ஒரு மீட்டர் உயர டைட்டானிய ரஷ்ய கொடியை நிலை நிறுத்தி இருக்கின்றன. ஆகஸ்டில் நடந்த இந்த இரண்டு கொடி நாட்டுதலுக்கும் மேலாக, ஆர்ட்டிக் பெருங்கடலில் கீழ் உள்ள ஒரு முகடு சைபீரியாவில் இருந்து விரிந்து செல்லும் தமது கண்டத்தின் ஒரு பகுதியே என நிரூபிக்க இந்த கடற்படுகையில் இருந்து இக்கப்பல்கள் நீரையும் மற்றும் படிம மாதிரிகளையும் சேகரித்திருக்கின்றன.

இந்த ஆய்வின் தலைவரான மூத்த துருவப்பகுதி ஆராய்ச்சியாளர் ஆர்தர் சிலிங்காரொவ் செய்தியாளர்களிடம் கூறும் போது, "ஆர்டிக் பகுதி ரஷ்யர்களுடையது... ரஷ்ய கடல் பகுதியின் விரிவாக்கம் தான் வட துருவம் என்பதை நிரூபிப்பதே எங்களின் நோக்கமாகும்." என்று தெரிவித்தார்.

ரஷ்ய ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பயிலக செய்தி தொடர்பாளர் செர்ஜி பால்யாஸ்னிகொவ் இத்திட்டம் குறித்து கூறுகையில், "ஆர்டிக் பகுதியில் தன் உள்ளிருப்பை வெளிப்படுத்திக் காட்டுவது ரஷ்யாவிற்கு மிக முக்கியமாகும். இது நிலவில் கொடி ஏற்றுவது போன்றதாகும்." என்று தெரிவித்தார்.

ஆகஸ்டு 9ம் தேதி, போட்டி நிறைந்த ஆர்டிக் பகுதியில் தமது இறையாண்மையை பாதுகாக்க இரண்டு இராணுவ தளங்களை ஆர்டிக் பகுதியில் அமைக்க இருப்பதாக ஒரு அறிவிப்பில் கனடா அரசு தெரிவித்திருந்தது. ஆர்டிக் பகுதியில் இருந்து தெற்கே 500 கிலோமீட்டர் (311 மைல்கள்) தூரத்தில் உள்ள யெல்லோவ்நைஃப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆர்டிக் பகுதியில் ரஷ்ய உரிமை எடுப்பது தொடர்பாக பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்பர் பேசும் போது, "ரஷ்யர்களின் சமீபத்திய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது, இப்பகுதியில் சர்வதேச நாடுகளின் ஆர்வம் வளர்ந்து வருவதற்கான ஒரு அறிகுறி தெரிகிறது" என்று தெரிவித்தார்.

இதற்கு ஒரு சில நாட்களுக்கு பின்னர், வட துருவ கடல்படுகையின் குறுக்கே ஓடும் கடலடி நீர் லொமொனொசொவ் ரிட்ஜ், புவியியல் அடிப்படையில் டென்மார்க் பிராந்தியத்தில் உள்ள க்ரீன்லாந்துடன் இணைந்திருக்கிறது; ரஷ்யாவுடன் அல்ல என்று நிரூபிக்க டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள்.

டென்மார்க்கின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஹெல்ஜ் சாண்டெர் கூறுகையில், "நீங்கள் எத்தனை கொடியை வேண்டுமானாலும் ஏற்றுங்கள் அல்லது நீங்கள் விரும்பும் அளவிற்கு எத்தனை மந்திரிகளை வேண்டுமானாலும் அனுப்பி வையுங்கள். இறுதியில், சிறந்த தகவல்களை கொண்டிருக்க வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். 2004 முதல் 2010 வரை இந்த வட துருவ திட்டங்களில் செலவிட நாங்கள் 230 மில்லியன் டெனிஷ் க்ரோனர் (42 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கி இருக்கிறோம்." என்று கூறி இருக்கிறார்.

சர்ச்சைக்குரிய ஆட்சிப்பகுதி

தற்போது வடதுருவம் மற்றும் அதன் கடற்படுகை எந்த நாட்டின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவும் அங்கீகரிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் கடல் கொள்கைகள்படி, நாடுகளின் கடல் எல்லையில் இருந்து 200 கடல்மைல்கள் (370 கிமீ) விரிவாக்கத்திற்குள் இருக்கும் அனைத்து இயற்கை வளங்கள் மீதும் அந்தந்த நாடுகளுக்கு முழு அதிகாரம் உண்டு எனத் தெரிவிக்கிறது. நாடுகள் தங்கள் கடற்கரையில் இருந்து கண்டம் விரிந்திருப்பதை நிரூபிக்கும்பட்சத்தில், அந்நாடுகள் கடல்படுகையில் மேலும் கூடுதலாக 150 கடல்மைல்களின் உரிமையை ஏற்று கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் 2001ம் ஆண்டு ரஷ்யா ஒரு அதிகாரபூர்வ கோரிக்கையை அமெரிக்காவின் முன்வைத்தது. இதை கண்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு சர்வதேச குழு அக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இருப்பினும், மேலும் பல தகுந்த சான்றுகளுடன் அந்த கோரிக்கையை மீண்டும் முன்வைக்கும்படி மாஸ்கோ கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆர்ட்டிக்கில் தனது கொள்கைகள், பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் இராணுவ தேவைகளை பாதுகாக்க வேண்டிய உடனடி அவசியம் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் கூறி இருக்கிறார்.

ரஷ்யாவின் கொடி நடும் செயலுக்கு, கனடாவின் வெளியுறவுத் துறை மந்திரி பீட்டர் மக்கேய் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, "இந்த நாட்களில் நீங்கள் உலகைச் சுற்றி போகும் போது எங்கேயாவது கொடியை நட்டு வைத்து செல்ல முடியாது. இது 14-வது அல்லது 15 -வது நூற்றாண்டு அல்ல. அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றி கொண்டு வருகிறார்கள்." என்று கூறி இருக்கிறார்.

எப்படி இருப்பினும், அடிப்படையில் இந்த தண்ணீர் கனடாவைச் சேர்ந்தது என்பதில் எந்த கேள்வியும் கிடையாது என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

கனடாவில் இந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், மெக்சிகன் அதிபர் ஃபிலிப் கால்டிரோன் மற்றும் கனடா பிரதம மந்திரி கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தின் போது ஆர்டிக் பகுதி சார்ந்த கனடாவின் கோரிக்கையை ஸ்டீபன் ஹார்பெர் உறுதிப்படுத்த முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் பற்றி பத்திரிகையாளர் கூட்டத்தில் கனடா அதிகாரிகளால் விவரிக்கப்பட்டபோது, புஷ்ஷுடனான தனிப்பட்ட சந்திப்பின்போது ஹார்பெர் இவ்விவகாரத்தை பற்றி பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்டு மாத தொடக்கத்தில் ஆர்டிக் பகுதியில் அவரின் மூன்று நாட்கள் சுற்று பயணத்தின் போது ஹார்பெர், "கனடா தனது இறையாண்மையை மிகவும் எளிமையாக, ஆனால் நீண்ட காலத்திற்கு எடுத்து கொண்டிருக்கிறது. இந்த அரசு இவ்விசயத்தை வலுவூட்ட சிறந்த ஊக்கத்தை வழங்கி இருப்பதுடன், ஆர்டிக் பகுதியில் நமது இறையாண்மையைப் பலப்படுத்தி இருக்கிறது." என தெரிவித்தார்.

கனடாவின் வடக்கு பகுதியை ஹார்பெர் பார்வையிடும் போது, ரிசொலுயுட் வளைகுடாவில் ஒரு குளிர்கால இராணுவ பயிற்சித்தளம் அமைக்கப்படும் என்று கூறிய ஹாப்பெர், நானிஸ்விக்கில் இருக்கும் தற்போதைய துறைமுகத்தின் (முன்பு இது சுரங்கமாக இருந்தது) மறுசீரமைப்புக்கு உதவ 21.5 பில்லியன் கனேடியன் டாலர் திட்டத்திற்காக, இந்த பழைமைவாத கனடா அரசு எட்டு புதிய துருவ கிளாஸ் 5 ஆர்டிக் ஆஃப்சோர் கடற்படை கப்பல்களை வாங்க இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

"ஆர்டிக் இறையாண்மையின் முதல் கொள்கை என்னவென்றால் அதை இழப்பது அல்லது பயன்படுத்துவது என்பதை கனடாவின் புதிய அரசு புரிந்து வைத்திருக்கிறது" என்று தெரிவித்த ஹார்பெர், இத்துருவத்தின் தெற்கு பகுதியில் சுமார் 600 கிலோமீட்டர் (372 மைல்கள்) தூரத்தில் ஒரு சிறு பாதுகாப்பு படையை நிறுவ வேண்டும். அது 100 கனடா இராணுவப்படையினர்களை கொண்ட ஒரு பயிற்சித்தளமாக மேம்படுத்தப்பட வேண்டும்." என்றும் கேட்டு கொண்டார். ''இன்றைய அறிவிப்பு, ஆர்ட்டிக்கில் கனடாவிற்கு உண்மையான, அதிகரித்த மற்றும் நீண்டகால பிரசன்னத்தை வைத்திருக்கின்றது என்பதை உலகிற்கு தெரிவிக்கின்றது.''

கனடா மற்றும் டென்மார்க் நாடுகள் தற்சமயம் தங்களுக்குள் ஒரு சட்ட வரையறையின் அடிப்படையில் ஆர்டிக் ஆட்சிப்பகுதி ஒத்துழைத்து வருகின்றன. அதாவது இவை ஏற்படுத்தி இருக்கும் ''மத்திய கோடு முறை", இரு நாடுகளுக்கும் இடையே அவற்றின் அருகில் உள்ள கடல் எல்லையின், நீளத்தின் அடிப்படையில் ஆர்டிக் கடல் பகுதியை பிரித்து அளிக்கிறது. க்ரீன்லாந்து துருவத்தின் மிக அருகில் இருப்பதால், இந்த வரைமுறையானது, டென்மார்க்கிற்கு துருவப் பகுதியையே அளிக்கும். இதற்கு பதிலாக கனடா குறிப்பிடத்தக்க கடல்பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் பெறும். இருப்பினும், க்ரீன்லாந்து மற்றும் கனடாவின் எல்லஸ்மீர் தீவிற்கு இடையில் இருக்கும் ஒரு சிறிய தீவுக்காக இவ்விரு நாடுகளும் பல ஆண்டுகளாக ஆத்திரமூட்டும் சர்ச்சைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த கூட்டணியை மிகவும் தற்காலிகமானதாக தான் கருத முடிகிறது. இந்த சிறிய தீவை, ஆர்டிக் பனிகட்டி தொடர்ந்தும் உருகும் பட்சத்தில் ஒரு முக்கிய கப்பல் பாதையாக மேம்படுத்த முடியும் என்பதால் போட்டி நிலவி வருகிறது.

இந்த துருவத்தில் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வந்திருப்பது தொடர்பாக ஒரு பெயரிட விரும்பாத அமெரிக்க அதிகாரி கூறுகையில், மாஸ்கோ தன் உரிமைக்காக கோரும் கோரிக்கைகளுக்கு இணைவாக வாஷிங்டன் அதன் பக்கம் ஒத்துழைக்காது. இருப்பினும், கடற்பகுதி விரிவாக்கம் தொடர்பாக அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் மீது ஏற்படுத்தப்படும் எந்தவொரு சர்வதேச கட்டுப்பாடுகளையும் தவிர்க்க, 1982-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்கள் எதையும் உறுதி செய்யாத நிலையில் அமெரிக்கா இவ்விசயத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் நடைபெறும் தற்போதைய விவாதங்களில் வாஷிங்டன் தலையிடுவதை தவிர்த்து வருகிறது. அதிபர் புஷ்ஷும், குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் (குடியரசின் பேரவைத் தலைவர்) ரிச்சார்ட் லூகரும் இந்த ஆண்டின் மே மாதம் அமெரிக்க உடன்படிக்கையை உறுதி செய்வது தொடர்பாக பேசி இருக்கிறார்கள்.

வாஷிங்டனின் பிரச்சனை என்னவென்றால், இந்த கடலை சார்ந்த சட்டத்தின் செல்லத்தக்க பொது இணக்க ஒப்பந்தமானது, அலாஸ்கா கடல் வழி தொடர்பு சார்ந்த அமெரிக்காவின் கோரிக்கையில் கனடாவுடன் சிக்கலை உருவாக்கி அமெரிக்காவை மேலும் பிரச்சனையில் எடுத்து செல்லக்கூடும் என்பது தான். தற்போது ஆர்டிக் பகுதியில், அமெரிக்க கடற்படையின் ஒரு பனிக்கட்டி உடைக்கும் கப்பல் மட்டும் வடக்கு அலாஸ்காவின் கடல் மேற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு

வடதுருவத்தின் இன்று நடைபெறும் ஆய்வுப்பயணங்கள் கூட தேசபக்தியுடன் கொடி அசைக்கும் பலமான கூறுகளை இன்னும் கொண்டிருக்கின்றன. கனடா அரசு ஆர்டிக் பகுதிக்கான தனது கோரிக்கையை வலியுறுத்த ஒரு வலியத் தாக்கும் வெளிநாட்டு கொள்கையையும், மிக உறுதியான தேசியவாதத்தையும் ஊக்குவிக்க விரும்புகிறது. ஆனால் ரஷ்ய ஆய்வுப்பயணங்கள் அனைத்தும், உலக அரங்கில் அந்நாட்டின் மீண்டெழும் வருகையை தெரிவிக்கும் ஓர் உற்சாகச் செய்தியாக உள்நாட்டில் வாழ்த்தப்படுகிறது. எப்படி இருப்பினும், இந்த பெருங்கடலின் அடியில், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் நிறைய இருப்பதால் தான் ஆர்டிக் பகுதியில் இந்த போட்டி நிறைந்த உரிமைகோரல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கனடா, ரஷ்யா, டென்மார்க், நோர்வே மற்றும் அமெரிக்கா என அனைவரும் இந்த ஆதாரவளங்களுக்கான போட்டியில் இறங்கி இருக்கிறார்கள். உலகின் ஒரு கால்பகுதி அளவிலான கண்டுபிடிக்கப்படாத ஹைட்ரோகார்பன்கள் (நீரகம் கரியகம் நிறைந்த இரசாயனப் பொருட்கள்) இப்பகுதியில் இருக்கலாம் என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு கணித்திருக்கிறது. ரஷ்யா அதன் உரிமைகோரலை வெற்றிகரமாக நிலைநாட்டும்பட்சத்தில், அது சுமார் 10 பில்லியன் தொன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கும் உரிமையை பெறும்.

ஆர்டிக் பகுதியில் இருக்கும் பனிக்கட்டிகளை உருகச் செய்து வரும் பூகோள வெப்பமயமாக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் குடைந்தெடுக்க தேவையான ஆய்வுகளை சுலபமாக்கி இருக்கிறது. இது போன்ற ஒரு கடுமையான சுற்றுசூழலில் வடித்தெடுத்தல் அதிக செலவினங்களைக் கொண்டிருந்தாலும், முக்கிய ஹைட்ரோகார்பன் ஏற்றுமதி பிராந்தியங்களான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் வளர்ந்து வரும் ஸ்திரமற்ற தன்மையும் எண்ணெய் விலை உயர்வும், ஆர்டிக் பகுதி வளங்களின் மீது ஈர்ப்பை உருவாக்கி இருக்கிறது.

கோலா பெனின்சுலாவில் இருக்கும் முர்மான்ஸ்க் என்ற ரஷ்ய நகரின் வடக்கே பெரியளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இது சைபீரியன் மற்றும் ஆர்டிக் படுகைகளுக்கான ஒரு மிக பெரிய எரிபொருள் ஏற்றுமதி மையமாக உருவாக்கப்பட இருக்கிறது. மேலும் கடலினுள் உள்ள உலகிலேயே மிகப்பெரிய எரிவாயு கிடங்கான ஸ்டோக்மேன் ஃபீல்டு மற்றும் பிரார்ஜ்லோம்நொய் எண்ணெய் வயல் ஆகியவை உட்பட ரஷ்யாவின் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் பல்வேறு அகழ்வு திட்டங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

2004 -ல் ஒரு சர்வதேச ஆராய்ச்சி குழு தயாரித்த ஆர்டிக் தட்பவெப்ப பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு ஒன்றில், இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பூகோள வெப்பமாகல் காரணமாக கோடைகாலங்களில் ஆர்டிக் பனிப்பாறைகள் முழுவதுமாக உருகத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுக்க அனுமதிக்கும் போது, பனிக்கட்டிகள் அப்புறப்படுத்தப்படுவதால், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பகுதிகளை இணைக்கும் வடமேற்கு பாதை உட்பட கப்பல் போக்குவரத்திற்கான பல புதிய பாதைகள் உருவாகலாம். இந்த இன்றியமையாத மூலோபாய பாதையானது, உலகின் பெரிய உற்பத்தி பகுதியான வடகிழக்கு ஆசியாவிற்கும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முக்கிய சந்தைகளுக்கும் இடையே கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய நேரடி பாதையாக அமையும். இப்பாதை தொடர்பான விவகாரம், ஏற்கனவே அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையே சிக்கலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

லொமொனொசொவ் முகடு தொடர்பான அவர்களின் உரிமை கோரலுக்கு உதவும், ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் திட்டம் நிலநடுக்கம் பற்றிய சார்ந்த தகவல்களை சேகரிக்க பயன்படும் ஒரு நியாயமான செயற்திட்டமாகும் என்று கூறிய பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டங்கள் பிரிவு பேராசிரியர் மைக்கேல் பேயெர்ஸ், தொடர்ந்து கூறுகையில், "ஒரு தெளிவான விஞ்ஞானபூர்வமான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் முன் வைப்பதில் ரஷ்யர்கள் அரசியல் மற்றும் விஞ்ஞான அளவில் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவர்கள். இதைச் செய்வதற்கு அவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதுடன், அடிப்படையில் அவர்கள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறார்கள் என்பதற்காக நாம் அவர்களை பாராட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஆர்டிக் பிரதேசத்தின் இறையாண்மைக்காக போராடும் போது ரஷ்யா அல்லது கனடா அரசியல்வாதிகள் ஒருபோதும் உள்நாட்டில் இழப்பை ஏற்க முன் வரமாட்டார்கள். ஆனால் அனைத்து ஆர்டிக் நாடுகளும் ஒர் சட்ட வரையறைக்கு உட்பட்டே செயலாற்றி வருகின்றன என்பது தான் அனைத்து கோரிக்கைகளின் பின்னால் இருக்கும் மிக முக்கியமான உண்மையாகும்." என்று கூறினார்.

இருப்பினும், இந்த வடக்கு சக்திகளின் இதுபோன்ற உறுதிமொழிகள், வாயடிப்புகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்வாதங்கள் அனைத்தும், ஆர்டிக் பெருங்கடல் மற்றும் அதன் பெரிய ஹைட்ரோகார்பன் படுகைகளின் மீது இருக்கும் சிக்கல்களை தீர்க்க உதவும் பன்முக கட்டமைப்புகளை விரைவில் முறிக்கும் என்பதை எடுத்துக்காட்டுவனவாகவே உள்ளன. ஏகாதிபத்திய யுத்தங்களாலும் மற்றும் அபாயகரமான இராஜதந்திர அரசியலாலும், நாளுக்கு நாள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலும், ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையேயும் புதிய அபாயகரமான மோதல்கள் தான் உலகளவில் மேலோங்கி வருகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved