World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi government on brink of collapse following cabinet walkouts

மந்திரிசபையில் இருந்து வெளியேற்றத்தினால் ஈராக்கிய அரசாங்கம் சரிவின் விளிம்பில் உள்ளது

By James Cogan
11 August 2007

Back to screen version

ஈராக்கின் சுன்னி அரேபிய மக்களிடம் இருந்து தங்கள் ஆதரவின் பெரும் பகுதியை பெற்றுள்ள இரு அரசியல் முகாம்கள் அவருடைய மந்திரிசபையில் இருந்து விலகிக் கொண்டதால் பிரதம மந்திரி நூரி அல்-மாலிகி அரசியலில் தப்பிப் பிழைப்பது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. பல தரப்பட்ட குறுங்குழுவாத மற்றும் இனப் பற்றுக் குழுக்கள் செப்டம்பரில் ஈராக்கிய பாராளுமன்றம் கூட்டும்போது பாக்தாத்தில் மாலிகியை அகற்றி புதிய அரசாங்கத்தை அமைப்பது பற்றி புஷ் நிர்வாகத்துடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Iraqi Accordance Front (IAF) ல் இருந்து ஐந்து மந்திரிகள் கடந்த புதனன்று தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்தனர். ஜூலை 25ம் தேதி புதிய ஈராக்கிய இராணுவம் போலீசில் இருந்து ஷியைட் போராளி உறுப்பினர்கள் அகற்றப்படுதல், சுன்னிப் பகுதிகளுக்கு கூடுதலான அரசாங்க சேவைகளுக்கான நிதியங்களை அளித்தல் மற்றும் அமெரிக்க மற்றும் அரசாங்க சிறைகளிலும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எழுச்சியை ஒட்டி கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பவை பற்றி ஒரு வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என்று IAF மாலிக்கிடம் கோரியிருந்தது. தங்களுடைய இராஜிநாமா அறிக்கையில் சுன்னி மந்திரிகள் மாலிகி "திமிர் பிடித்தவர்" என்று குற்றம் சாட்டியுள்ளதுடன், "தற்கால வரலாற்றில் காணப்படாத அளவிற்கு ஈராக்கை இழிநிலையில் தள்ளியிருப்பதாவும்" கூறியுள்ளனர்.

AMS எனப்படும் சக்திவாய்ந்த முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் அரசியல் பிரிவாக IAF செயலாற்றுகிறது; இந்த அமைப்பில் பல ஆயிரக்கணக்கான மதகுருக்கள் உள்ளனர்; அவர்கள் மிகக் கசப்பான முறையில் சதாம் ஹுசைனின் சுன்னி தளத்தை பெரும்பாலும் கொண்டிருந்த பாத்திஸ்ட் ஆட்சியை அமெரிக்கா அகற்றியதை அடுத்து, சுன்னிக்கள் செல்வாக்கு இழந்துள்ளதை காண்கின்றனர். 2003ல் இருந்து பாத்திஸ்ட் கட்சி ஆட்சிக்கு எதிரான ஷியைட் அடிப்படை வாதிகள் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க கைப்பாவை அரசாங்கங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். சுன்னி விரோதிகளை கொலை செய்வதற்காக பாதுகாப்புப் படைகளில் ஷியைட் போராளிகள் ஏராளமாக ஊடுருவ விட்டுள்ளதாக AMS ஷியைட் அரசாங்கத்தின்மீது பல முறையும் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கம் வேண்டுமேன்றே சுன்னிப் பகுதிகளில் சேவைகளையும் மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறுகிறது.

சுன்னி மந்திரிகள் வெளியேறியுள்ளதற்கு ஒரு முக்கிய நோக்கம் உண்டு: அது அனைத்து ஈராக்கிய குறுங்குழு வாதிகள் மற்றும் இனவழிக் குழுக்களையும் பிரதிபலிக்கும் "தேசிய ஐக்கியம்" கொண்ட அரசாங்கத்திற்கு தான் தலைமை தாங்குவதாக கூறும் மாலிகியின் திறனுக்கு --தங்கள் சிறப்புச் சாதனைகளில் இதுவும் ஒன்று என அமெரிக்க நிர்வாகம் கூறுகிறது-- முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதேயாகும். திங்களன்று அவர்கள் அயத் அல்லாவியின் ஈராக்கிய தேசிய பட்டியலில் இருந்து மூன்று மந்திரிகளால் இணையப்பெற்றனர்; பிந்தையவர்கள் மாலிகி தன்னுடைய சுன்னிகளை "ஒதுக்கிவைத்தல்" என்பதை நிறுத்தும் வரை அனைத்து மந்திரிசபை கூட்டங்களையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

அவருடைய மந்திரிசபையில் இருந்து மொத்தம் 17 மந்திரிகள் நீங்கிவிட்டனர் அல்லது அதைப் புறக்கணிக்கின்றனர். அல்லாவியின் பட்டியல் உறுப்பினர்களுள் ஒருவர் இவ்வாண்டு தொடக்கத்தில் சதரிய ஷியைட் இயக்கத்தை சேர்ந்த ஆறு மந்திரிகள் ஏப்ரல் மாதம் வெளியேறியபோது, அவரும் வெளியேறிவிட்டார். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் சதரிஸ்ட்டுக்கள் அவர்களுடைய தலைவரான மதகுரு மோக்தாதா அல்-சதர் அனைத்து வெளிநாட்டு துருப்புக்களும் வெளியேற வேண்டும் என்பதற்கு குறிப்பிட்ட கால அட்டவணை வேண்டும் என்று கூறியதை மாலிகி நிராகரித்த பின்னர், பதவியை இராஜிநாமா செய்தனர். சமீபத்திய வெளியேற்றங்கள் மந்திரிசபையை குறைந்த செயல்திறனை கொண்ட ஒரு எஞ்சிய தொகுப்பாக செய்துவிட்டது.

புஷ் நிர்வாகம் மாலிகியின் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியின் பின்னணியில் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அயத் அல்லவி ஒரு அமெரிக்க கைக்கூலி என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. போருக்கு முந்தைய காலத்தில் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன, ஈராக்கிய மக்கள் அமெரிக்க படையெடுப்பை வரவேற்பர் என்று இட்டுக்கட்டிய கதைகளில் அவருக்கும் பங்கு உண்டு. நாட்டின் தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால பிரதம மந்திரி என்று ஆக்கிரமிப்பு சக்தி அவருக்கு 2004ல் வெகுமதி அளித்தது. அந்த நிலையை மீண்டும் பெறுவதற்கு அவர் அவா கொண்டுள்ளார் என்பதில் ஐயமில்லை; மந்திரிசபையை புறக்கணிப்பது பற்றிய தன்னுடைய பட்டியலை அறிவிக்கும் முன்னர் வாஷிங்டனின் ஆசியையும் கோரியிருப்பார்.

ஜோர்டானில் தன்னுடைய நேரத்தின் பெரும்பகுதியை செலவழிக்கும் ஒரு ஆடம்பர இல்லத்தில் இருந்து அல்லாவி, மாலிகியிடம் அமெரிக்கா கொண்டிருக்கும் அணுகுமுறையைச் சுருக்கிக் கூறும் வகையில் நியூ யோர்க் டைம்ஸிடம் இவ்வாரம் கூறினார்: "தேசிய ஐக்கிய அரசாங்கம் என்பது ஒரு கற்பனை; உண்மையல்ல. அரசியல் வழிவகை எங்கேயும் அழைத்துச் செல்லவில்லை."

மாலிகியிடம் அமெரிக்கா கொண்டுள்ள பெரும் ஏமாற்றத் திகைப்பு மே 2006ல் அவர் பிரதம மந்திரி பதவிக்கான வேட்பாளர் என்று UIA (United Iraqi Alliance) அறிவித்ததில் இருந்தே தொடங்கி பெருகியுள்ளது. சக்தி வாய்ந்த சதரிச போராளிக் குழுவான மெஹ்தி இராணுவத்தை அழிக்கும் அமெரிக்க இராணுவத்தின் முயற்சிகளை அவர் தகர்ப்பதாக பலமுறையும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மந்திரிசபையில் இல்லாத நிலையில், சதரிஸ்ட்டுக்கள் UIA ஷியைட்டுக்குள் மாலிகிக்கான ஆதரவிற்கு இன்னமும் முக்கிய தளத்தைக் கொடுத்து வந்துள்ளனர்; அத்துடன் அவருடைய கட்சியான Da'wa உம் உள்ளது. கூட்டணியின் மற்றொரு முக்கிய கட்சியான Supreme Islamic Iraqi Council (SIIC) அதன் தலைவர்களுள் ஒருவரும் தற்போதைய துணை ஜனாதிபதியுமான அடெல் அப்துல் மகடி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறது.

இந்த ஆண்டு, மற்றைய பிரிவுகள் ஒருபுறம் இருக்க, தன்னுடைய கூட்டணியில் இருந்தே தேவையான ஆதரவை வாஷிங்டன் விரும்பும் "முக்கிய செயற்பாடுகளுக்கு" பெறுவற்கு மாலிகியால் முடியவில்லை. வாஷிங்டனின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஈராக்கிய எண்ணெய் தொழிலை வெளிநாட்டு மூலதனத்திற்கு திறக்கும் வகையில் சட்டம் இயற்றுவதும், அரசாங்கம் அல்லது இராணுவப் பதவியை வகிப்பதில் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய முன்னாள் ஹுசைன் கட்சி உறுப்பினர்களை தடை செய்யும் "பாத்திச அகற்றுதலை" நிறுத்துவதும் ஆகும். முன்னாள் பாத்திஸ்ட்டுக்களை ஒதுக்கி வைத்தல்தான் ஈராக்கில் எழுச்சிக்கு ஒரு காரணம் என்று அமெரிக்க வட்டங்களில் கருதப்படுகிறது.

மாலிகியிடம் மட்டும் அல்லாமல் அனைத்து ஈராக்கிலுள்ள ஷியைட் பிரிவுகளிடமும் அமெரிக்கா குரோதத்தை எரியூட்டும் வகையில் செயல்படுவது ஈரானுடன் அவர்கள் கொண்டுள்ள அரசியல் மற்றும் மத உறவுகளால் ஆகும். வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே அழுத்தங்கள் பெருகியுள்ள நிலையில், பல ஷியைட் அரசியல்வாதிகள் இன்னமும் ஈரானை ஷியைட் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள ஈராக்கின் இயல்பான நட்பு நாடு என்றுதான் கருதுகின்றனர். புதனன்று ஈரானிய தலைவர்களை சந்தித்து ஈராக்கை "உறுதிப்படுத்துவதில்" ஈரான் "ஆக்கபூர்வமான பங்கை" கொண்டுள்ளது என்று கூறிய வகையில் மாலிகி மீண்டும் வாஷிங்டனில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க பிரச்சாரத்தின் முக்கிய கூறுபாடு ஈரானிய சிறப்பு சக்திகள் போக்கிரித்தனமான சதரிய போராளிகளுக்கு அமெரிக்க துருப்புக்களை தாக்குவதற்கான வெடிமருந்துகளை கொடுக்கின்றன என்ற குற்றச் சாட்டு ஆகும்.

இந்த ஆண்டு முழுவதும் அமெரிக்க இராணுவம் பாக்தாத்தில் உள்ள ஒரு ஷியைட் தலைமையிலான அரசாங்கத்திடம் இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. சுன்னி பகுதிகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான ஒரு மாற்றுத் தளத்தை அது வளர்க்க முற்பட்டுள்ளது. சுன்னி பழங்குடி மக்கள் மற்றும் பாக்தாத் முழுவதிலும், மேற்கு, மத்திய ஈராக்கில் இருக்கும் எழுச்சிக் குழுக்களின் நல்லுறவுகளை பெறுவதற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் கை மாறியுள்ளன. முக்கியமாக இந்த புதிய சுன்னி நண்பர்கள் மாலிகியின் அரசாங்கத்திற்கு முற்றிலும் விரோதமானவர்கள் ஆவர்; இதை அவர்கள் வாஷிங்டனின் கைப்பாவை என்பதை விட ஈரானின் கைப்பாவை என்றுதான் கண்டிக்கின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25,000 சுன்னி குடிப்படையினர் மாலிகியினால் அரசாங்கத்தில் ஷியைட் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் என்று கருதப்படுகின்றனர். ஆனால் அவருடைய எதிர்ப்புக்கள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தளபதி டேவிட் பெட்ரீயசால் அசட்டை செய்யப்படுகின்றன, புஷ் நிர்வாகத்தால் உதறித் தள்ளப்படுகின்றன.

மாலிகியின் அரசாங்கம் சுன்னி IAF மற்றும் அல்லாவியின் பட்டியலால் கைவிடப்பட்டுள்ளது இந்த அழுத்தங்களை ஒரு மோதலுக்கு கொண்டு வருகிறது. முதலில் இருந்த 38 உறுப்பினர்களுக்கு பதிலாக 21 மந்திரிகள்தான் இன்னமும் பிரதம மந்திரிக்கு விசுவாசமாக உள்ளனர் என்ற நிலையில், ஷியைட் UIA க்குள், அதிகாரத்தில் இருந்து முற்றிலும் ஒதுக்கி வைக்கப்படுவதற்கு பதிலாக, மற்றொரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

மிக ஆழ்ந்த தந்திர உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு சிறிய சுன்னி ஈராக்கிய National Dialogue Front ன் தலைவரான சலே அல்-முட்லாக் நியூ யோர்க் டைம்சிடம் இந்த வராம் அவர் IAF, அல்லவி குழு மற்றும் UIA எதிர்ப்பு ஷியைட் பட்ஹிலா கட்சி ஆகியவற்றுடன் ஒரு போட்டிக் கூட்டணியை அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கு முயன்று வருவதாகக் கூறியுள்ளார். அப்படி ஒரு குழு 55 பேர் அடங்கிய குர்திஸ்தான் கூட்டணியின் (KA) ஆதரவை பெறுமேயானால் அதற்கு உறுதியாக பெரும்பான்மை கிடைக்கும் என்பதுடன் ஷியைட் அடிப்படைவாத கட்சி எவற்றின் உதவியும் இல்லாமல் நாட்டை ஆளமுடியும். பிரதம மந்திரி பதவிக்கு அல்லாவி அநேகமாக தேர்ந்தெடுக்கப்படக்கூடும்.

எகிப்தை தளமாகக் கொண்டுள்ள அல்-அஹ்ரம் கருத்தின்படி, புஷ் நிர்வாகம் மற்றொரு விருப்ப வகையிலும் செயல்படக்கூடும். கடந்த இரண்டு வாரங்களாக பலமுறை SIIC இன் முக்கிய பிரதம மந்திரிக்கான வேட்பாளரான அடெல் அப்துல் மஹ்தி மற்றும் கட்சியின் தலைவரான மதகுரு அப்துல் அஜிஸ் அல்-ஹகிமுடன் புஷ் தொலைபேசி தொடர்புகள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குர்திஷ் ஜனாதிபதி ஜலால் தாலாபானி மற்றும் சுன்னி துணைத் தலைவர் டாரிக் ஹஷேமியுடனும் அவர் பேசியிருப்பதாக தெரிகிறது.

SIIC, மாலிகியை கைவிடத் தயாராக இருக்கும் டாவாவின் பிரிவுகள், அல்லாவியின் பட்டியல், ஈராக்கிய ஐக்கிய முன்னணியின் ஹஷேமிப் பிரிவு மற்றும் குர்திஷ் கட்சிகளை அமெரிக்கா புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்கு ஆதரவு கொடுக்கும் என்பது வெளிப்படை. அல்லாவியோ அல்லது மஹ்தியோ அத்தகைய அரசாங்கத்திற்கு தலைமை தாங்கக்கூடும். அதில் இருந்து மாலிகியும் சதரிஸ்ட்டுக்களும் விலக்கப்படுவர்; அதேபோல் படிலா மற்றும் ஈராக்கிய எண்ணெய் விற்கப்பட வேண்டும் என்று கோரும் அமெரிக்காவின்மீது விரோதப் போக்கை காட்டும் சுன்னி குழுக்களும் ஒதுக்கி வைக்கப்படக்கூடும்.

இதற்காக குர்திஷ் கட்சிகள் கோரும் விலையும் தெளிவாகத்தான் உள்ளது. வடக்கே இருக்கும் கிர்குர்க் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள எண்ணெய் வயல்கள் மீது குர்திஷ் கட்டுப்பாடு இருப்பதைத்தான் அவை விரும்புகின்றன. தாங்கள் குறிப்பிட்ட விலைக்கு வாங்கப்படலாம் என்பதை சுட்டிக்காட்டிய தாலாபானி கடந்த வாரம் மாலிகி பற்றிய சுன்னி குறைகூறல்கள் "மிகவும் நியாயமானவைதான்" என்று குறிப்பாக தெரிவித்தார் ஒரு குர்திஷ் சட்ட மன்ற உறுப்பினரான மஹ்முத் ஒத்மன் அல்-அஹ்ரம் வார ஏட்டிடம் கடந்த வாரம் குர்டிஷ் கட்சிகள் தங்கள் "சமரசத்தை விரிவுபடுத்தும் வகையில் அல்லாவியையும் அரசியல் வழிவகையில் சேர்க்க விரும்புகின்றனர்" என்று தெரிவித்தார்.

மாலிகிக்கு எதிரான SIIC இன் ஒத்துழைப்பிற்கும் இதேபோன்ற விலைதான் உள்ளது. அதன் தெற்கு ஈராக்கிய பிடிப்பில் இருக்கும் பகுதிகளில் ஒரு தன்னாட்சியை நிறுவி, நாட்டின் தெற்கு எண்ணெய் வயல்கள்மீது கட்டுப்பாடு கொள்ள அது மிகவும் முயல்கிறது. SIIC இன் பிராந்திய பற்று கடுமையாக எதிர்க்கப்படுவதுடன் பாக்தாத்தை மையமாகக் கொண்டுள்ள சதரிஸ்ட் இயக்கத்தால் தடுக்கவும்படும். SIIC மற்றும் குர்திஷ் கட்சிகள் நினைக்கும் வகையில் செயல்கள் நிகழ்ந்து விட்டால், ஈராக் இன மற்றும் குறுகிய பற்று வகைகளில் திறமையுடன் பிரிவினைக்கு உட்படும்; இந்த நடவடிக்கை மிகப் பெரிய அளவில் இனக் கொலைகள், குறுங்குழுவாத வன்முறைகள், உறுதித்தன்மையற்ற நிலை ஆகியவற்றை ஈராக்கில் மட்டும் இல்லாமல் பிராந்தியம் முழுவதும் விரைவுபடுத்திவிடும்.

மாலிகியை அகற்றுவதற்கான அதிகம் மறைப்பில்லாத புஷ் நிர்வாகத்தின் முயற்சிகள் ஒரு முழு இறைமை பெற்ற ஜனநாயக அரசாங்கத்தை பாக்தாத்தில் தோற்றுவித்துள்ளாக கூறப்படும் அதன் கூற்றுக்களை கேலிக்கூத்தாக்குகின்றன. இதன் அரசியல் சூழ்ச்சிக்கையாளல்களில் இறுதி விளைவு எப்படி இருந்தாலும், வெள்ளை மாளிகை அமெரிக்கக் கோரிக்கைகளை திறமையுடன் செயல்படுத்தக்கூடிய ஒரு புதிய ஆட்சியை நிறுவ முயல்கிறது; குறிப்பாக ஈராக்கின் எண்ணெய் வயல்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு அளிக்கப்படுதல், ஆக்கிரமிப்பிற்கு நடந்து வரும் எதிர்ப்பை இரக்கமின்றி ஒடுக்குதல் ஆகும். மேலும் பாக்தாத் அரசாங்கத்தில் ஷியைட் செல்வாக்கை அகற்றிவிட்டால், அல்லது குறைந்த பட்சம் குறைத்துவிட்டால், அமெரிக்கா ஈரானுடனான தன்னுடைய தீவிர மோதலுக்கு வழிவகுத்துக் கொண்டுவிடும்; அதில் இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதும் அடங்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved