World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

Bangladeshi regime arrests former prime minister

பங்களாதேஷ் அரசாங்கம் முன்நாள் பிரதமரை கைதுசெய்தது

By Wimal Perera
13 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

பங்களாதேஷின் இராணுவ ஆதரவிலான "இடைக்கால" அரசாங்கம், ஜூலை 16 அன்று முன்நாள் பிரதமரும் அவாமி லீக்கின் தலைவருமான ஷேக் ஹசினா வஜிட்டை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது தனது அரசியல் எதிரிகள் மீதான இன்னுமொரு தாக்குதலாகும். பணம் பறித்தல், படுகொலைகளில் தொடர்பு ஆகியவையே ஹசினா எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.

இவரைக் கைது செய்ய பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையையும் சேர்ந்த சீருடையணிந்த மற்றும் சீருடையணியாத 1000த்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இறக்கப்பட்டமை ஒரு பிரமாண்டமான நடவடிக்கையாகும். அவரது வீட்டை சுற்றியுள்ள பிரதேசத்தை சுமார் காலை 4.45 மணிக்கு பாதுகாப்புப் படைகள் சுற்றி வளைத்த போதும், மூன்று மணித்தியாலங்களின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவரப்பட்டார். அவருக்கு அங்கு பிணை மறுக்கப்பட்டது. ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் அவரது நிதி மற்றும் சொத்துக்கள் பற்றிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜூலை 19 அவருக்கு ஒரு அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தது.

அரசியல் ரீதியில் திட்டமிட்ட கைது தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், முன்நாள் மத்திய வங்கி ஆளுனர் ஃபக்ருதின் அஹ்மட் தலைமையிலான இடைக் கால அரசாங்கம் தலைநகர் டாக்காவில் 15,000 துருப்புக்களுக்கும் அதிகமாக நிறுத்தியிருந்தது. நாடு பூராவும் மேலதிகப் படைகளும் அணிதிரட்டப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவசரகால விதிகளை மீறியதோடு டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குண்டாந்தடி தாக்குதலும் துப்பாக்கிப் பிரயோகமும் செய்த பொலிசாரோடு அவர்கள் மோதிக்கொண்டனர்.

அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர் மொய்னுள் ஹொசீன் குறிப்பிட்டவாறு, ஹசினாவுக்கு எதிராக 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஜூன் 13 அன்று ஒரு "பொது பிரஜையான" ஈஸ்ட் கோஸ்ட் வரையறுக்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனத்தின் நிர்வாக முகாமையாளர் அஸம் ஜே செளதுரியால் பதியப்பட்ட வழக்கை அடிப்படையாகக் கொண்டே இவர் கைது செய்யப்பட்டார். ஒரு மின் நிலையத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக ஹசினா 29.6 மில்லியன் டகாவை (441,000 அமெரிக்க டொலர்) கப்பமாகப் பெற்றதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

பங்களாதேஷ், அரசாங்கத்தின் எல்லா மட்டத்திலும் இழிவான ஊழல்களுக்கு பேர் போன நாடாகும். எவ்வாறெனினும், ஹசினா மீதான பணம் பறிக்கும் குற்றச்சாட்டுக்கும் அவரது கைதுக்கும் தொடர்பு கிடையாது. அதிகளவில் இராணுவ ஆதரவுடன் இயங்கும் நிர்வாகமான இடைக்கால அரசாங்கம், ஹசினா அல்லது அவரது போட்டியாளரும் பங்களாதேஷ் தேசியக் கட்சியின் (பீ.என்.பி.) தலைவருமான காலிடா ஸியா ஆகியோரிடமிருந்து எழக்கூடிய சாத்தியமான அரசியல் சவால்களை நசுக்கத் தீர்மானித்துள்ளது. ஸியா கடந்த அக்டோபரில் புதிய தேசியத் தேர்தல்களுக்கான தயாரிப்பில் இருந்து விலகிக் கொண்டது வரை அவர் பிரதமராக இருந்து வந்துள்ளார்.

அவாமி லீக்கின் பரந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஜனவரி 22 நடக்கவிருந்த தேர்தலை ஒத்தி வைத்த பங்களாதேஷ் ஜனாதிபதி ஐயஜுதின் அஹமட், ஃபக்ஹுர்தின் அஹமட் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நியமித்ததோடு அவசரகால நிலைமையையும் பிரகடனம் செய்தார். ஏப்பிரலில், அரசாங்கம் தேர்தல்களை அடுத்த ஆண்டு வரை ஒத்தி வைத்ததோடு நீண்ட விளைவுகளைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கே முன்னுரிமை வழங்குவதாகக் கூறிக்கொண்டது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மொயீன் யு அஹமட், எந்தவொரு தேர்தலுக்கும் முன்னதாக "நாட்டை துப்புரவு செய்ய வேண்டும்" என்ற நிர்வாகத்தின் கூற்றை ஆர்ப்பரிப்புடன் ஆதரிக்கின்றார்.

ஊழலை இல்லாமாக்கும் சாக்குப் போக்கில், இந்த இடைக்கால அரசாங்கம் அரசியல் தலைவர்களையும், சிரேஷ்ட அதிகாரிகளையும் மற்றும் வர்த்தகர்களையும் கைதுசெய்துள்ளது. ஜூலை 19 அன்று, காலிடா ஸியாவின் சொத்துக்கள் பற்றிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அவருக்கு ஊழல் தடுப்பு ஆணைக்குழு கட்டளை அனுப்பியிருந்தது. அவாமி லீக்கை சேர்ந்த ஏழு தலைவர்கள், பீ.என்.பி. யைச் சேர்ந்த எட்டு தலைவர்கள் மற்றும் ஜமாட் இ இஸ்லாமியின் இருவர் உட்பட ஏனையவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

ஏப்பிரலில், ஃபக்ஹுர்தினின் நிர்வாகம் ஹசினாவையும் ஸியாவையும் நாடு கடத்த முயற்சித்த போதிலும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் விமர்சனங்களை அடுத்து அதைக் கைவிடத் தள்ளப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வந்த ஹசினா இறுதியாக நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். நாட்டை விட்டு வெளியேறக் கட்டளையிடப்பட்ட ஸியா அங்கேயே இருக்க அனுமதிக்கப்பட்டார். இப்போது இந்த அரசாங்கம் ஒரு சுற்று உயர் மட்டக் கைதுகளை மேற்கொள்வதன் மூலம் எந்தவொரு எதிர்ப்பையும் மெளனமாக்க முயற்சிக்கின்றது.

அதே சமயம், இராணுவமும் அதன் அரசியல் அதிகாரத்தை பெரிதாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றது. ஜூலை முற்பகுதியில், தேசிய பாதுகாப்பு சபை ஒன்றை ஸ்தாபிக்கும் பிரேரணையைப் பற்றி பேசுவதற்காக இராணுவத் தளபதி, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத் தலைவரும் சந்தித்தனர். இந்தத் திட்டம் அரசியலில் இராணுவத்தின் தலையீட்டை அர்த்தப்படுத்தவில்லை என ஒரு சட்ட ஆலோசகர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எவ்வாறெனினும், அதே மூச்சில் அவர் பிரகடனம் செய்ததாவது: "ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் நாட்டின் மீது அன்பும் பொறுப்பும் கொண்டிருக்கின்றார்கள். எனவே அரசியல் தலைவர்கள் தமது எண்ணத்திற்கு எதையும் செய்ய அவர்கள் அனுமதிக்கவில்லை."

ஹசினா கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக, ஜெனரல் மொயின் யு அஹமட், புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் "அரசியலமைப்பை திருத்துவதற்கான" தேவை ஒன்று உள்ளது எனத் தெரிவித்தார். பங்களாதேஷ் பத்திரிகைகளின் படி, துருக்கிய முறைப்படி அரசியலமைப்பை மாற்றுவது பற்றி இராணுவம் அக்கறை கொண்டுள்ளது --அது அரசாங்கத்தையும் மற்றும் பாராளுமன்றத்தையும் மேற்பார்வை செய்யும் அதிகாரத்தை ஆயுதப் படைகளுக்கு வழங்குகிறது.

ஹசினாவின் கைது தொடர்பாக சர்வதேச கண்டனங்கள் எழும்பவில்லை. அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஜேர்மனியும் தக்க சட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சாதாரணமாக வேண்டுகோள் விடுத்தன. இந்தக் கைது தொடர்பான மெளன ஆதரவானது பெரும் வல்லரசுகள் பங்களாதேஷ் அரசாங்கத்துடனும், அரசியல் எதிர்ப்புக்களை நசுக்கும் அதன் நடவடிக்கையுடனும் மற்றும் சந்தை சீர்திருத்தங்களை அது அமுல்படுத்துவது தொடர்பாகவும் மன நிறைவடைந்துள்ளதற்கான இன்னுமொரு அறிகுறியாகும்.

இந்த "இடைக்கால" அரசாங்கம், அது வகிக்கும் பாத்திரத்துடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அதன் மூன்று ஆண்டு கால பொருளாதாரத் திட்டம் 6,000 தொழில் இழப்புக்களுடன் அரசுக்கு சொந்தமான நான்கு சணல் நார் ஆலைகளை மூடுவதையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் கடைசியில், தனியார்மயமாக்கப்படவுள்ள சில அரசுக்கு சொந்தமான ஆலைகளில் 18 ஆலைகளில் இருந்து மேலும் 8,000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மேலதிக உழைப்புச் செலவைக் குறைக்கும் நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரசாங்கம் உரம், சமையல் எரிவாயு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்திருந்த போதிலும் பரந்த வெகுஜன எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கிக் கொண்டது. யூரியா உரத்தின் விலை 50 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்படலாம். போதுமானளவு உரத்தை வழங்கத் தவறியதால் ஆத்திரமடைந்த நெல் விவசாயிகள் ஜூலை 4 அன்று சபைநவப்கன்ஞ்சின் நகோலில் உள்ள பல அரசாங்க அலுவலகங்களை தாக்கியதோடு அலுவலர்களையும் அடித்தனர்.

ஆட்சியில் இருந்து வந்த பீ.என்.பி மற்றும் அவாமி லீக் கட்சியின் அரசாங்கங்களும் சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் பொருளாதார மறுசீரமைப்பு கோரிக்கைகளை அமுல்படுத்தியுள்ளன. அவர்களது கசப்பான எதிர்ப்புக்கு காரணம் அடிப்டையான அரசியல் வேறுபாடுகள் அல்ல. மாறாக, அவை அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட சமூகத் தாக்கங்கள் சம்பந்தமாக நிலவும் பரந்தளவிலான வெகுஜன அதிருப்தியை திசை திருப்புவதாகும். தற்போதைய அரசாங்கம் நேரடியான அடக்குமுறையை நாடுகின்றது.

எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு அப்பால், அவாமி லீக்கும் பீ.என்.பி. யும் புதிய அரசாங்கத்தை அனைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றன. ஜூலை 21 அன்று, அவாமி லீக்கின் மேலதிகத் தலைவராக இருக்கும் ஸிலுர் ரஹமான், ஹசினா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த அதே வேளை, அவரது தந்தை ஷெய்க் முஜிபுர் ரஹமானை "தேசத்தின் தந்தையாக" மீண்டும் இருத்தியதற்காக ஜெனரல் மொயின் அஹ்மட்டுக்கு நன்றி தெரிவித்தார். "ஹசினாவின் விடுதலைக்காக வீதி ஆர்ப்பாட்டங்களை அன்றி சட்ட வழிமுறைகளையே" அவாமி லீக் பின்பற்றும் என ரஹ்மான் ஊடகங்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மரபு ரீதியான ஆளும் கட்சிகளுக்கு ஆதரவுக் களம் கடந்த இரு தசாப்தங்களாக குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி கண்டுவருகின்றது. வெகுஜன அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டால் அது தமது கட்டுப்பாட்டை இழந்துவிடும் என்ற பீதியில், அவாமி லீக்கும் சரி அல்லது பீ.என்.பி. யும் சரி அதைச் செய்வதில்லை. ஆளும் கும்பல்களுக்கு மத்தியில் எந்த வகையிலான பிளவுகள் இருந்தாலும், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் மற்றும் உழைக்கும் மக்களின் எந்தவொரு எதிர்ப்பும் நசுக்கப்பட வேண்டும் என்பதில் அவர்களுக்கு இடையில் ஒருமைப்பாடு காணப்படுகின்றது.