World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: Congress uses lethal violence against Andhra Pradesh land agitation இந்தியா: ஆந்திரப் பிரதேச நிலக் கிளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் மரணம் விளைவிக்கும் வன்முறையைப் பயன்படுத்துகிறது By Arun Kumar மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்மம் மாவட்டத்திலுள்ள முடிகொண்டாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஜூலை 28ம் தேதி போலீசார் தாக்குதலை நடத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசம் அரசியல் கொந்தளிப்பில் உள்ளது. முடிகொண்டாவில் ஸ்ராலினிச கட்சிகளான CPI (M), CPI ஆகியவற்றால் நடத்தப்பட்ட ஒரு நிலப் போராட்டத்தில் பங்கேற்றோருள் குறைந்தது ஏழு பேரை போலீசார் தானியங்கித் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர். இரண்டு நாட்களுக்கு முன் நில விநியோகத்திற்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் நடைபெற்ற நடவடிக்கை தினத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது, மற்றும் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் ஜூலை 28 ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முடிகொண்டா எதிர்ப்பாளர்கள் தங்களை கற்களால் தாக்கினர் என்று கூறி அவர்கள் மீது மரணம் விளைக்கும் வன்முறையை பயன்படுத்தியதை போலீசார் நியாயப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற வலதுசாரி செய்தி ஏடுகள் கூட போலீசார் கொல்வதற்காகவே சுட்டனர் என்றும், தரைமட்டத்தில் சுடாமல் எதிர்ப்பாளர்கள் தலைகள், உடல்களைக் குறிவைத்துச் சுட்டனர் என்றும் ஒப்புக் கொண்டுள்ளன. காங்கிரஸ் அரசாங்கம் முடிகொண்டாவில் இறக்கிய போலீஸ் பிரிவுகளில் மாவோயிச கெரில்லா இயக்கமான நக்சலைட்டுக்களுடன் போரிடும் சிறப்புப் படைப்பிரிவுகளும் இருந்தன என்ற தகவல் வெளிவந்துள்ளது. "விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று, மற்ற நேரங்களை போலவே, இதிலும் போலீசார் முடிவெடுத்திருந்தனர்" என்று ஜூலை 31ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் எழுதியது. "அவர்கள் நேரடியாக கூட்டத்தின் மீது சுட்டனர். எச்சரிக்கை ஏதும் இல்லாமல், மற்ற விருப்பத் தேர்வுகளான நீர்பீச்சியடித்தல், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளாமல் இவ்வாறு அவர்கள் செயல்பட்டனர். இத்தகைய அரக்கத்தனமான போலீஸ் நடவடிக்கை முதன் மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியாராலும் காங்கிரசாலும் நியாயப்படுத்த முற்பட்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது என்றுதான் குறைந்தபட்சம் கூறப்பட வேண்டும்." மாநிலத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான தெலுகு தேசக் கட்சி (TDP) மற்றும் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) இரண்டும் போலீஸ் படுகொலையை கண்டிக்க CPI (M), CPI உடன் சேர்ந்துள்ளன; பெரும்பாலான எதிர்க் கட்சியினர் முதலமைச்சர் பதவியில் இருந்து ரெட்டி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். CPI(M) இன் அரசியற்குழு, தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு மனைகள் மற்றும் நிலங்கள் இவற்றுக்கான மக்களுடைய "உண்மையான கோரிக்கைகள்" இத்தகைய "மிருகத்தனமான சக்தியைக் காட்டுவதின் மூலம்" அடக்கப்பட்டுவிட முடியாது என்று கூறுகிறது.பாராளுமன்றத்தில் CPI(M), மற்றும் அதன் இடது முன்னணிக் கூட்டணிகளின் வாக்குகளை நம்பியிருக்கும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் முடிகொண்டா படுகொலையில் இருந்து ஏற்பட்ட அரசியல் சலசலப்பை குறைக்கும் வகையில் CPM தலைவர்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். ஆனால் போலீஸார் நிகழ்த்திய படுகொலைகளை கண்டிக்க அவர் மறுத்துவிட்டார்; இத்தகைய ஒருதலைப்பட்ச மோதலை "துரதிருஷ்ட நிகழ்வு" என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைமை, ரெட்டி இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நிராகரித்ததில் வியப்பு ஏதும் இல்லை; தன் தலைமை பற்றி காங்கிரசுக்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஆணையிட முடியாது என்று அது கூறியது. "இடது கட்சியின் விருப்பத்திற்கு இணங்க நாங்கள் முதல் மந்திரிகளை நியமிக்கவோ, நீக்கவோ இயலாது" என்று அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் நிருபர்களிடம் தெரிவித்தார். சமீபத்திய மாதங்களில், ஸ்ராலினிசக் கட்சிகள் கிராமப்புற நிலமற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் நகரங்களில் தங்குமிடம் இல்லாதவர்களுக்கு வீட்டுமனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலும் அரசாங்க நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. போராட்டம் ஆறு வார காலம் ஆகியிருந்தபோது, ஜூன் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட CPI(M) அறிக்கை, எதிர்ப்புக்கள் 90 சிறு நகரங்களிலும் 712 கிராமங்களிலும் பெருகிவிட்டன என்று கூறியது. முடிகொண்டா படுகொலை பற்றிய தன்னுடைய தலையங்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ், "ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் மக்கள் பங்கு பெறுதல் அதிகரித்துள்ளது. நிலமற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டு மனைகள் என்ற இரட்டைக் கோரிக்கை... பல தசாப்தங்களாக நூறாயிரக்கணக்கான மக்கள் பெரும் துடிப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், இது வியப்பை அளிக்கவில்லை" என்றது. இரட்டை ஸ்ராலினிச கட்சிகளுடைய ஆதரவு மற்றும் பல மக்களை திருப்திப்படுத்தும் உறுதி மொழிகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி ஆந்திரப் பிரதேசத்தில் 2004 மாநிலத் தேர்தல்களில் அதிகாரத்தை கைப்பற்றியது. எதிர்பார்க்கக்கூடிய வகையில் அவ் உறுதிமொழிகளில் பலவும், ஏழைகளுக்கு நிலமளித்தல் என்ற உறுதியும், நிறைவேற்றப்படாமல் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கம் போலவே, ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் ரெட்டி அரசாங்கமும் புதிய தாராளச் சீர்திருத்தத்தை துடிப்புடன் செயல்படுத்தி வருகிறது. மக்கள் சீற்றத்திற்கு எரியூட்டும் மற்றொரு காரணி செல்வம் கொழிப்பவர்கள், பெரும் தொடர்பு உடையவர்கள், அதாவது அரசியல் வாதிகள் அவர்களுடைய குடும்பங்கள் ஆகியவை முந்தைய நிலச் சீர்திருத்தங்களை திருத்திய வகையில், மிகவும் விலைமதிப்புடைய நிலங்களை, குறிப்பாக பெரும் ஹைதராபாத் மற்றும் அதற்கு அருகில் அபகரித்துக் கொண்டு விட்டனர். ஸ்ராலினிச நிலப் போராட்டத்திற்கு விடையிறுக்கும் வகையில் மாநில காங்கிரஸ் அரசாங்கம் விவசாயிகளுடைய நிலங்களை எடுத்துக் கொண்டு அவற்றை இந்திய, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு பொருளாதாரப் பகுதிகள் என்ற பெயரில் கொடுக்கும் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தின் செயற்பாட்டை சுட்டிக் காட்டியது. மார்ச் மாதம் மேற்கு வங்க CPI(M) தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் போலீசாரையும் கட்சிக் குண்டர்களையும் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி எதிர்ப்புப் போராட்டக்காரர்களை அகற்றுவதற்காக உத்தரவிட்டபோது குறைந்தது 14 விவசாயிகளாவது கொல்லப்பட்டனர். CPI(M) மற்றும் CPI ஆகியவை ஆந்திரப் பிரதேச நில உரிமைப் போராட்டத்தை தொடக்கியுள்ளது தங்களுடைய நைந்து போன, குருதிக் கறை படிந்த "இடது" நற்சான்றுகளை மீண்டும் பெறுவதற்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாங்களே உதவி அதிகாரத்தில் இருத்தியுள்ள வலதுசாரி காங்கிரஸ் அரசாங்கத்திடம் இருந்து தங்களை தொலைவில் இருத்திக் கொள்ளுவதற்கும்தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.நிலப் போராட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி மக்களிடையே வலுவான ஆதரவைப் பெற்றிருக்கையில், ஸ்ராலினிஸ்டுகள் அதை TDP உடன் தங்கள் உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுவதற்கு ஒரு வழிவகையாக பயன்படுத்துகின்றனர்; 1998ல் இருந்து மே 2004 வரை வட்டாரக் கட்சியான தெலுகு தேசக் கட்சி இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இயங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து உறுதியளித்ததில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. புதிய தாராளப் பொருளாதார கொள்கையை தொடர்ந்ததற்காக உலக வங்கியின் செல்லப்பிள்ளையாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் கீழ் ஆட்சியில் இருந்த ஆந்திரப் பிரதேச அரசாங்கமும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு NDA உடன் ஒரே நேரத்தில் அதிகாரத்தை இழந்தது. முடிகொண்டாவில் படுகொலைகள் மன்னிக்கப்பட வேண்டும் என்று செயல்படும் காங்கிரசின் முயற்சிகளுக்கு பதில் கூறும் வகையில் CPI(M)ன் மூத்த தலைவரான ஜோதிபாசு மீண்டும் நந்திகிராமத்தில் போலீசார் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்திப் பேசினார். "இரண்டு நிகழ்வுகளும் முற்றிலும் வேறுபட்ட தன்மை உடையவை." என்று பாசு கூறினார். முடிகொண்டாவில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டை "தேவையற்றது" என்று இகழ்ந்த பாசு, நந்திகிராமத்தில் இருந்த போலீசார் "சுட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்" என்றார். உண்மை என்ன என்றால், இரண்டிலுமே மாநில அரசாங்கம் கொலைகாரத்தனமான வன்முறையில், மக்கள் போராட்டத்தை குருதியில் மூழ்கடித்துவிடலாம் என்று செயல்பட்டன. முடிகொண்டா படுகொலை பற்றி ஒரு நீதி விசாரணை வேண்டும் என்று கோரி TDP போட்ட பொதுநல வழக்கு ஒன்றில் செவ்வாயன்று தீர்ப்பு அளித்த ஆந்திரப் பிரதேச உயர்நீதி மன்றம், ஜூலை 28ம் தேதி எதிர்ப்பில் ஆயுதமற்ற எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் கொலை நடத்தியதற்கு கூட்டத்தை நடத்திய கட்சிகள்தான் காரணம் என்றும் போலீசாரோ அவர்களை பயன்படுத்திய மாநில அரசாங்கமோ காரணம் இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் கூறியது: "எதிர்க்கட்சியில் இருக்குமாறு மக்களால் வாக்களிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியும் வேலைநிறுத்தங்கள் மற்றும் முழு அடைப்புக்களுக்கும் ஏற்பாடு செய்து வன்முறையை தூண்டுகின்றன; சில நேரங்களில் இது நிரபராதியான குடிமக்களின் இறப்பில் முடிவடைகிறது." இதற்கு முன்னதாக முதல் மந்திரி ரெட்டி ஜூலை 28 போலீசாரால் கொல்லப்பட்ட மற்றும் காயமுற்ற குடும்பங்களுக்கு இழப்பீட்டு நிதியுதவியை அறிவித்தார். கொல்லப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு 500,000 ரூபாய்கள் (கிட்டத்தட்ட 10,000 அமெரிக்க டாலர்கள்), கொடுக்கப்படும். வேலைகளும் இரு ஏக்கர் நிலங்களும் தரப்படுமென உறுதிமொழியாக கூறப்பட்டுள்ளன. படுகாயமுற்றவர்கள் 50,000 ரூபாய்கள் ($1,000) பெறுவர்; குறைந்த காயமுற்றவர்கள் 10,000 ரூபாய்கள் ($200) பெறுவர். இரு போலீஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |